Wednesday, September 30, 2009

வசன கவிதை - 9

அவன்

கங்கா தேவி சலசலத்துக்கொண்டு ஓடுகிறாள். கீழே தரையும் கூழாங்கற்களும் வழுக்குப் பாசியும் பளீரிட- தெளிவான, கண்ணாடி போன்ற, அலட்டல் இல்லாத நீரோட்டம்; இடையிடையே மீன்கூட்டம்.
கீழ்வானில் முழுவட்டத்துக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சந்திரன். அதன் பொற்கிரணங்கள் பட்டு தங்கமாய் ஒளிரும் பஞ்சு மேகங்கள்-
நிலா நகர்ந்து கொண்டிருக்கிறது.
சுவர்க்கோழிகளின் ரீங்காரம். மற்றபடி மென்மையான நிசப்தம்; அவ்வப்போது ஒலிக்கும் மயிலின் அகவல்.
தென்னங்கீற்றுகள் 'ஸ்ஸோ'வென உகைய, அதைத் தாலாட்டும் தென்றல் மேனியை மெதுவாக வருடிப் போகிறது. ஒரு இதமான வெப்பம்; மிதமான குளிர்ச்சி.
அந்த மங்கிய வேளையில், ஒரு சாம்பல் குடிசை- பழங்காலப் பர்ணசாலை போன்ற வடிவிலான கீற்றுக் கோபுரம். சுற்றிலும் பத்துப் பதினைந்து தென்னம்பிள்ளைகள்; ஒரு வாழைக்கன்று, மாமரம், இத்யாதி.
குடிசையின் ஓரம், நதி நடந்து செல்லும் வாய்க்கால்; அதன் இரு புறமும் வண்ண வண்ணப் பூக்கள் செறிந்த மலர்ச்செடிகள். அவற்றில், நாளை மலரத் துடிக்கும் மொட்டுகளின் இளமைத் துடிப்புகள்; மலர்ந்து வாடி, மடிந்து போயும் மணம் பரப்பும் இதழ்கள்.
வாழ்வின் நிலையாமையைப் போதிக்க வந்த காட்சிகளாய்- நிலத்தின் செழுமையால் வனப்பைச் சொரியும் செடிகள், கொடிகள், மரங்கள். காற்றினிலே மிதந்து வரும் வாசனையில் இலவச இணைப்பாய் மூலிகைகளின் தோய்தல். மரங்களில் கொத்துக் கொத்தாய்ப் பழங்கள்.
மேலே முகில்கள் நிலவுடன் ஊடலும் கூடலுமாய் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. லேசான பனித் துகள்கள் படர ஆரம்பிக்க, இந்தச் சூழலில்-
அவன் உட்கார்ந்திருக்கிறான்; பத்மாசனம்; இரு கால்களையும் பின்னி, முதுகு நிமிர்த்தி, நெஞ்சு விறைக்க, கைகள் முழங்காலில் அழுந்த, கண்கள் நாசி நுனியில் நிலைத்திருக்க-
அந்த கீற்றுக் குடிசையின் வாயிலின் அருகே உள்ள ஒரு கருங்கல்லில் அவன் யோக நிலையில் அமர்ந்திருக்கிறான். கீழே அருகம்புல் மெத்தை. உதடுகளில் தன்னிச்சையான மந்திர உச்சாடனம்.
'சலசல'வெனும் சத்தம்,
மிளிரும் திங்களின் நிலை,
வருடும் தென்றல்,
பரவும் நறுமணம்,
கனிகளின் தீஞ்சுவை-
இவற்றையெல்லாம் கடந்து, தன்னைச் சுற்றியுள்ள வட்டத்தை மறந்து,
சுகமாக, ஒரு சவமாக இருக்கிறான்.
ஓஒ இது தான் தியானம்!
சுற்றத்தால் பாதிக்கப் படாமல், தன் சுயமூலத்தின் ஆணிவேரை தேடிய நெடும்பயணம்.
தன்னையே அர்ப்பணித்து, அவனுக்குள் அவனே முழுதாக நுழைந்து, எதையோ நாடுகிற கடும் பயணம்.
ஓஒ இது தான் தவம்!
''பருவங்கள் பட்டுப் பட்டுப் போகும். ஆனால், பற்றை விட்டவனுக்கு முன் விதியே விட்டுப் போகும்''
என்னுள்ளும் ஏதோ ஒரு மூலையில் அசரீரி அறைய,
நானும் தேட ஆரம்பிக்கிறேன்; என்னை இயற்கைக்குக் கொடுத்து ஊடுகிறேன்.
கங்கை ஓடிக் கொண்டே இருக்கிறாள்.
நன்றி: ஓம் சக்தி
(ஆகஸ்ட்1999 )

Tuesday, September 29, 2009

மொழிமாற்றக் கவிதை - 3



இறைவனை வழிபடு!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!
மறைபல மனனம் செய்வதனாலுன்
மாரகம் தவிர்ந்து போய்விடுமா?

பொருள் மிக விரும்பும் மூடா, மூடா!
பொதியெநும் ஆசை அகற்றிவிடு!
தருமமுரைக்கும் கடமையினைச் செய்
தடைந்திடும் பொருளில் மகிழ்வுறுக!

மங்கையர் தனமும் நாபியும் கண்டு
மதியினை இழந்து பதறாதே!
அங்கம் முழுதும் மாமிச வடிவம்
என்பதை மனதில் எண்ணிடுக!

தாமரை இலைமேல் தண்ணீர் போல
சஞ்சலமின்றி வாழ்ந்திடுக!
பூமியை ஆளும் துயரும் நோயும்
புன்மையும் முழுதும் உணர்ந்திடுக!

செல்வம் சேர்கையில் அண்டும் சுற்றம்,
சேவகனாகப் பணியாற்றும்!
வல்லமை குன்றி மூப்படைந்தாலோ
வார்த்தை கூறவும் ஆளில்லை!

பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிரியம் இருக்கும் உன் மீது!
பிரேதமாக நீ சாய்ந்து விட்டாலோ
பிரிய மனைவியும் தள்ளி நிற்பாள்!

அன்புறு மகனை பகையாய் மாற்றும்
அம்சம் பொருளின் இயல்பன்றோ?
பொன்னும் பொருளும் என்றும் துன்பம்,
இன்பம் மெய்யாய் ஒன்றுமில்லை!

பாலகன் ஆசை விளையாட்டின் மேல்,
பதினென் வயதில் கன்னியர் மேல்!
காலம் கடந்த கிழவனின் ஆசை
கவலையில்; கடவுளைப் பிடித்தவர் யார்?

யாருன் மனைவி? யாருன் பிள்ளை?
யாரிடமிருந்து நீ வந்தாய்?
சாரும் மானிட வாழ்க்கை விந்தை
தத்துவ மிதனை எண்ணிப் பார்!

நல்லவர் நட்பால் நலியும் பற்று,
பற்றற்றவர்க்கு மயக்கமில்லை!
வல்லவர் அவர்க்கே வாய்மை விளங்கும்,
வழியது ஒன்றே முக்திக்கு!

செல்வம் இன்றேல் சுற்றம் இல்லை,
தண்ணீர் இன்றேல் குளமில்லை!
பொல்லாக் காமம் முதியோர்க்கில்லை,
தத்துவ மறிந்தால் வினையில்லை!

செல்வம், பந்தம், இளமைச் செழிப்பால்
செருக்கினை அடைந்து ஆடாதே!
எல்லாம் காலன் முன்னால் சாம்பல்,
எனவே இறையை எண்ணிடுக!

பகலும் இரவும் தினமும் மாறும்,
பருவம் பலமுறை மாறிவரும்!
அகலும் ஆயுள்; இகழும் காலம்;
ஆசைப் பிணைப்பு போவதில்லை!

இன்னருள் சங்கர பகவத்பாதர்
இருளில் உழன்ற பண்டிதனை
நன்னிலை அடைய பன்னிரு பாவால்
பண்ணிய மாலையை அருளினரே!

இறைவனை வழிபடு, இறைவனை வழிபடு,
இறைவனை வழிபடு அறிவிலியே!

குறிப்பு:
ஆதிங்கரர் இயற்றிய "பஜகோவிந்தம்"- த்வாதச மஞ்சரிகா ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் இது.
நன்றி: விஜயபாரதம், வேதமுரசு.

புதுக் கவிதை - 18



கிராமக் கோயில் பூசாரி

பட்டை துலங்கும் நெற்றி
ஒட்டி உலர்ந்த வயிறு
காவி ஏறிய வேட்டி, துண்டு
கரத்தில் ஒரு குடம்
தொழில் ஒரு கூடை
சவரம் செய்யாத முகம்.
காற்றில் அல்லாடும்
கோயில் தீபம் போலவே
வாழ்வில் அல்லாடும்
பூசாரியின் உலகம்.
நன்றி: விஜயபாரதம்.
(19.11.1999)

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


''ஆன்மா தெய்வீகமானது, ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக்கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை - நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை...''

-சுவாமி விவேகானந்தர்
(சிகாகோ சொற்பொழிவில் இருந்து)
ஆதாரம்: ஞானதீபம் (பக்.43)

Monday, September 28, 2009

இன்றைய சிந்தனை






கருவூலம்


''யத்ர யோகேச்வர: க்ருஷ்ணோ யத்ர பார்த்தோ தனுர்தர:
தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்த்ருவா நீதிர்மதிர்மம"


பொருள்: யோகேசுவரனான கண்ணனும் வில்லேந்திய வீரன் பார்த்தனும் எங்கு உள்ளார்களோ, அங்கு செல்வமும் வெற்றியும் நிலைத்த நீதியும் உள்ளது என்பதே என் கொள்கை.
-ஸ்ரீமத் பகவத்கீதை
(18-78).

உருவக கவிதை - 5



வெற்றி நிச்சயம்

பாரதம் வழிகாட்டுகிறது -
தர்மத்தின் வாழ்வுதனை
சூது கௌவும்
தர்மம் மறுபடி வெல்லும்.

அதிகாரப் பசியும்
ஆணவ அரசியலும்
தர்மத்தின் முன்பு
தவிடு பொடியாகும்.

மெல்லிய குழலிசை
மட்டுமல்ல,
போர்ப்பரணி கொட்டும்
சங்கொலியும்
கண்ணன் கைவசம்.

அநீதி ஆர்ப்பரித்த
அனர்த்த வினாடியில்
ஆயுதம் ஏந்த மறுத்த
அதே கரங்களில்
தேர்ச் சக்கரம்.

கண்ணன் இருக்குமிடம்
தர்மத்தின் இருப்பிடம் -
அங்கு
வெற்றி நிச்சயம்.
நன்றி: இந்துவின் சங்கொலி

மரபுக் கவிதை - 23


அம்பிகை துதி

காஷ்மீர வைஷ்ணவியின் கழல்களினைப் பற்றிடுவோம்!
கடலாடும் பகவதியைக் கரம் கூப்பி வணங்கிடுவோம்!
காசினிக்கு உணவளிக்கும் பூரணியைப் போற்றிடுவோம்!
காஞ்சியிலே வீற்றிருக்கும் காமாட்சி அருள் பொலிக!

பவானி தெய்வத்தின் பதங்களினைப் பற்றிடுவோம்!
கன்னடத்துச்சாமுண்டி ஈஸ்வரியை நினைந்திடுவோம்!
உஜ்ஜைனிக் காளியினை உளத்தினிலே பதித்திடுவோம்!
உமையம்மை மீனாட்சி உறுதுணையாய் விளங்கிடுக!

வங்கத்துத் துர்க்கையினை வாயாரத் துதித்திடுவோம்!
வரம் நல்கும் அபிராமி வதனத்தில் களித்திடுவோம்!
ஒரியாவின் புவனாளும் ஈஸ்வரியைப் பாடிடுவோம்!
காசிநகர் விசாலாட்சி கனிவுடனே நலம் தருக!

நன்றி: விஜயபாரதம்
(10.10.1997)


Sunday, September 27, 2009

மரபுக் கவிதை - 22




சக்தி!

சிங்க மீதமர்ந்து - சூலம்
கையினில் ஏந்தி - கால
சங்கடம் நீக்கி - மாலன்
தங்கையாய் அவதரித்து,
சங்கரன் உடலில் - பாதி
சமமெனப் பெற்ற - ஆதி
மங்கையின் புகழில் - மீதி
சொல்லவும் கூடுமாமோ?

இன்றைய சிந்தனை


கருவூலம்

கல்வி கரையில கற்பவர் நாள்சில
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர்ஒழிய
பாலுன் குருகின் தெரிந்து.
-நாலடியார்.

மரபுக் கவிதை - 21


என் தமிழ்

தென்றலினும் இனிய மொழி எந்தன் மொழி;
தெவிட்டாத கனியமுது எந்தன் கவி!
கன்றினுடன் பசு நுகரும் அன்பு- இந்தக்
கவியுடனே நடனமிடு சங்கத் தமிழ்!

Saturday, September 26, 2009

இன்றைய சிந்தனை







குறள்அமுதம்



அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்பிலார்

என்பும் உரியர் பிறர்க்கு

- திருவள்ளுவர்.

(அன்புடைமை - 72)

மரபுக் கவிதை - 20



கொட்டடா முரசு!

திக்கெட்டும் கொட்டடா முரசு - எங்கள்
தேசமே உலகுக்கு குருவென்று கொட்டு!

தத்துவ போதனை வேண்டின் -எங்கள்
தாயான பாரத நாட்டிடம் வேண்டு!
சத்திய தேவனைக் காண -எங்கள்
சாத்விகப் போர்முறை கண்டு வணங்கு!

அன்பதே உயிரென்று சொன்ன -எங்கள்
அச்சுத புத்தனைப் பார்த்திடும் உலகம்
வன்மையால் உலகினை வெல்லும் - எண்ணம்
கொண்டவர் நாணிட கொல்லெனச் சிரிக்கும்!

விண்ணியல், கணிதத்தில் தெளிவு - வேண்டின்
வித்தகர், ஞானியர் பலரிருக்கின்றார்!
கண்இமை காப்பது போலே - மக்கள்
நல்வழி வாழ்ந்திட உதவிடும் வேதம்!

உடலினைச் செம்மையாய் பகுத்து - அதன்
உள்ளுள நோய்களைப் பலவாறு வகுத்து,
திடமிகு மருந்துகள் கொண்டு - ஆயுர்
வேதமே நோய்களைப் பொடிப் பொடியாக்கும்!

கவிமழை பொழிந்திடு மொழிகள் - நல்ல
காவியம் படித்திட விரும்பிடின் வருக!
புவியகம் முழுதிலும் புகழும் - ராம,
பாரத சரித்திரம் பண்புறப் பருக!

வேறென்ன வேண்டுமோ உமக்கு? வெற்றி
கீதம் இசைத்திடும் சமயமும் எமதே!
நீறன்ன உலகினில் சுடரும் - ஆத்ம
நித்திய ஜோதியைப் பெற்றிடு உலகே!

மரபுக் கவிதை - 19



அருந்தமிழ் வாழி!

அகத்திய முனிவன் நாவில் தவழ்ந்து
எட்டுத்தொகையாய், பத்துப்பாட்டாய்
பதினெண்கீழாய், அகமாய், புறமாய்
தொல்காப்பியரின் இலக்கணமாகி,
அவ்வை வழியாய் அறம்பல கூறி,
அரசனுமாகி, புலவனுமாகி,
அருணகிரியாய், ஆறுமுகமாய்,
ஆழ்வார் பக்திப்பாடல் மிளிர,
நாயன்மார்கள், ஆழ்வாரெனவே
தேகம்கொண்டு தேசம் பரவி,
மக்கள் மூச்சாய், மாதவ வடிவாய்,
என்றும் இளமை குன்றாதவள்எம்
அன்னைத் தமிழே, அருந்தமிழ் வாழி!
கம்பன், இளங்கோ, பாரதி மற்றும்
கண்ணனின் தாசர், கடவுளின் தாசர்,
பற்பல பெரியோர், அற்புதப் புலவர்
எனப்பல உருவம் தாங்கியவளாம்எம்
அன்னை வாழி, அருந்தமிழ் வாழி!
நன்றி: விஜயபாரதம்
(20.11.1998)

Friday, September 25, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்

நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடி வரும்;
சற்றும் இதற்கோர் ஐயம் உண்டோ?

நெஞ்சிற் கருணை நிறைந்தவர்க்கு
நேயம் கொண்ட நெறியோர்க்கு
விஞ்சும் பொறுமை உடையவர்க்கு
வெல்லும் படைகள் வேறுளவோ?...

கால நதியின் கதியதனில்
கடவுள் ஆணை காண்பீரேல்,
ஞாலம் மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!


-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

(மலரும் மாலையும்)

மரபுக் கவிதை - 18

உட்பகை

சொல்லுக நற்சொல் சொல்லிய பின்னர்
எண்ணுக அதனை என்றும் நண்ணுக!
அல்லவைசொல்லின் அப்புறம் துன்பம்
அன்புறு பதத்தை அள்ளிக் கொள்ளுக!
தள்ளுக வன்சொல் தள்ளிடு முன்னர்
எண்ணுக இனிதை என்றும் மன்னுக!
உள்ளவை சொல்லின் உற்றது இன்பம்
உள்ளக மதத்தை உட்பகை என்க

புதுக்கவிதை - 17



பரந்த மனப்பான்மை

உன்னுடைய ரொட்டித் துண்டா
நாய் கவ்விக்கொண்டு ஓடியது?
விட்டுவிடு.
ஒருவாரம் பட்டினி கிடப்பதால்
உயிர்
போய்விடாது.
நன்றி: விஜயபாரதம்
(29.04.1994)

Thursday, September 24, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

எந்த தேசத்தின் இளைஞர்கள் மனதில்
கடந்தகாலம் குறித்த பெருமிதம்,
நிகழ்காலம் குறித்த வேதனை,
எதிகாலம் குறித்த பொற்கனவுகள்
நிறைந்துள்ளதோ,
அந்த தேசம் தான்
முன்னேற்றம் அடையும்.
-மகரிஷி அரவிந்தர்.

புதுக்கவிதை - 16



காலம் வரும்

சொட்டைத் தலை,
வழுக்கைத் தலை,
நரைத்த தலை
என்று
யாரையும்
யாருக்கேனும்
அடையாளம் சொல்லாதீர்.

யாரும் ஒரு காலத்தில்
முன் நெற்றி மறைக்கும்
கருகரு சுருள்முடி
கொண்டிலங்கியவர் தான்.

குள்ளன், கூனன்,
நெடுமாறன்,
குண்டன், கருப்பன்
என்றும் சுட்டாதீர்-
யாரும்
யாரையும்
அளவிட முடியாது.

அடையாளம் கூறுபவர்களும்
அடையாளமாகும்
காலம் வரும்-
நானும் கூட
ஒரு காலத்தில்...

Wednesday, September 23, 2009

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்


எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.

-திருவள்ளுவர்
(மக்கட்பேறு -62)

உருவக கவிதை - 4



உள்ளது உள்ளபடி...

தமிழக முதல்வர்/ தானைத் தலைவர்/இரண்டாம் ராவணர்/டாக்டர் பொரிஞர்/
ஆட்சிக் கட்டில் ஏறிய/அறுபதாம் ஆண்டு விழா.
தமிழகம் எங்கும்/ அரசியல் பெரு விழா.

'பொரி விற்று தலைவரான /பொரிஞர் வாழ்க' என/தெருவெங்கும் பதாகைகள்.

'வாழ்த்த வயதில்லை என்பதால்/ வணங்குவதாக'/நகரமெங்கும்/
தாலியை விற்று/தொண்டர்கள் ஒட்டிய/ பலவண்ண சுவரொட்டிகள்.

மக்கள் பிரதிநிதிகள்/மத்திய, மாநில அமைச்சர்களின்/பத்திரிகை விளம்பர கல்வெட்டுகள்.

ஆலயங்களில்/ சமபந்தி போஜனங்கள்/சிறைச்சாலைகளில்/ கைதிகளின் விடுதலைகள்.
பல அரசுத் துறைகளில்/துவங்கிய/'மக்கள்நலத்' திட்டங்கள்/
அரசு ஊழியர்களின்/ நன்றி அறிவிப்புகள்.

தலைவர் பொறிஞர்/ரகசியமாகக் கட்டிய/ வள்ளி- தெய்வானை சமேத/குமரன் கோட்டத்திலும்/
பாமா- ருக்மணி சமேத/ கண்ணன் தோட்டத்திலும்/லட்சார்ச்சனைத் திருவிழா.
குடும்ப உடன்பிறப்புக்களின்/ சிறப்பு வழிபாட்டுக்காக/நள்ளிரவில் நடை திறப்பு.

ஊர் முழுக்க வசூலித்து/ஆங்காங்கே கொடியேற்றி/கழகப் பொதுக்கூட்டங்கள்.
அருகிலிருக்கும்/மதுக்கடைகளில்/காலியான பாட்டில்கள்.
சில இடங்களில்/எதிர்க் கட்சியினருடன்/தகராறுகள்/வெட்டப்பட்ட கொடிக்கம்பங்கள்.

தொலைக்காட்சிகளில்/சிறப்பு பட்டிமன்றங்கள்/திரையுலக கவிஞர்களின்/
சீட்டுக்கவி நகைச்சுவைகள்.
கூட்டணித் தலைவர்களின்/குதூகல சொல்லாடல்கள்.

குடும்பத் தொலைக்காட்சியில்/மட்டும்/பிரத்யேக நேர்முகம்.
ஆறாம் வகுப்பில்/கணக்கு வாத்தியாரை/கல்லால் அடித்த/சாகசங்கள்.
பதினாறு வயதில்/பக்கத்து வீட்டுப் பெண்/கண் அடித்ததாக/தோரணங்கள்.

பேரணி செல்லும்/சாலைகள் எங்கும்/மின்விளக்கு அலங்காரங்கள்.
எந்தச் சுவரிலும்/கள்ளமின்றிச் சிரிக்கும்/தலைவரின் முகங்கள்.

ராகு காலம் தாண்டிய/இனிய மாலைப் பொழுதில்/வானிலிருந்து ஹெலிகாப்டர்கள்/
பூமழை பொழிய/குடும்பம் மறந்த தொண்டர்கள்/சீருடையில் அணிவகுக்க/
கறுப்புப் பூனைகளும்/கேரள யானைகளும் சூழ/
வெள்ளைக் குதிரை பூட்டிய/சாரட்டு வண்டியில்/
பூபால புரத்திலிருந்து/கோட்டை நோக்கி/பொரிஞரின் பேரணி.

சாரட்டின் இருக்கையில்/கழுத்து சாய்ந்தாலும்/கம்பீரமாகச் சாய்ந்தபடி/
கையை அசைக்கிறார் பொரிஞர் !

கையைத் தாங்கலாக / பிடித்தபடி அருகிலேயே/
வருங்காலத் தளபதி செங்கிஸ்கான்.
இடதுபுறம் துடைத்தபடி/ மத்தியில் அரசோச்சும் பேரன்.

சாலையின் இருபுறமும் / தொண்டர்கள் கரகோஷம்.
சாரட்டில் இருபுறமும் /ஒருவரை ஒருவர்/ முறைத்தபடி.

குறிப்பு:
இந்தக் கவிதை எழுதிய நாள்: 10.09.2006.
இதில் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்திருந்தால், அதற்கு நான் பொறுப்பில்லை;
நான் குடுகுடுப்பைக்காரன் அல்ல.

Tuesday, September 22, 2009

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்



மோகத்தைக் கொன்றுவிடு- அல்லால்என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்துவிடு- அல்லால்அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத்திருத்திவிடு- அல்லால்என்றன்
ஊனைச் சிதைத்துவிடு.
ஏகத்திருந்துலகம் - இங்குள்ள
யாவையும் செய்பவளே!
-மகாகவி பாரதி
(மஹாசக்திக்கு விண்ணப்பம்)

மொழிமாற்றக் கவிதை - 2



காகித ஓடங்கள்

நாள் தவறாமல் தினமும் காகித ஓடம்
நன்றாகச் செய்ததனில் பெயரெழுதி
மாளாது நான் ஆற்றில் விட்டிடுகின்றேன்
மனிதர் அரிதாகவாழ் ஓரிடத்தில்
யாரேனும் ஒருவரதைக் கண்டெடுத்து
யாருடைய படகென்று அறிவாரென்றே
சோராத எதிர்பார்ப்பு எந்தன் கண்ணில்.
தோட்டத்தில் பறித்திட்ட லில்லிப்பூவை
இன்றையநாள் உதயத்தின் உருவமாக
இதமாகப் படகதனில் ஏற்றிவிட்டால்
கன்றாமல், கவனத்தால் படகு சேர்க்கும்-
காரிருளில், இரவதனில், நம்புகின்றேன்.
-இக்கவிதை குருதேவர் ரவீதிரநாத் தாகூர் எழுதிய 'கீதாஞ்சலி' நூலில் உள்ள 'PAPER BOATS' கவிதையின் மொழிபெயர்ப்பு.

உருவக கவிதை - 3



காலநதி

நெளிந்து சுழிந்தோடும்
நதியின் ஆரவார இரைச்சலில்
சென்ற வருட வறட்சி மறந்துபோகிறது.

வேருடன் பெயர்ந்து
உலா வரும் மரங்களினூடே
பூக்களும் குப்பைகளும்
சமத்துவ பவனி.

நதியின் சில்லிப்புக்கு அஞ்சி
படித்துறையில் காத்திருக்கும்
மனிதர்களை எள்ளுகின்றன
வளைந்தோடும் மீன்கள்.

இதுபோல் எத்தனை படித்துறையோ?
எத்தனை மனிதர்களோ?
எத்தனை மரங்களோ?
வண்ண மீன்களோ?
வழிந்தோடுகிறது
காலநதி.
நன்றி: விஜயபாரதம்
(01.12.2000)

மரபுக் கவிதை - 17



ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்

நம்மை நாமே நமக்காய் ஆளஅமைத்தது தான் சட்டம்- நாம்
தம்மைத் தாமே கட்டுப்படுத்த உருவாக்கிய வட்டம்.
விதிமுறை கூறி வழிப்ப்டுத்துவதே சட்டத்தின் கடமை- அந்த
விதிகளை மீற மனிதர்கள் முனைவது விபரீத மடமை.

சட்டம் என்பது புத்தக அளவில் இருட்டறை என்பார்கள்- அதில்
பட்டம் பயின்ற வல்லுநர் வாதம் ஒளியேற்றும் விளக்கு.
சட்டம் கூறும் விதிகளை மக்கள் கடைப்பிடித்திட வேண்டும்- இதை
கட்டாயமென நடைமுறைப்படுத்த காவலர்கள் வேண்டும்.

சட்டம் சொல்லும் விதிமுறை கற்ற வக்கீல் ஒருபக்கம்- அந்த
சட்டம் காக்க கடுமையைக் காட்டும் காவலர் மறுபக்கம்.
ஒரு நாணயத்தின் இரு புறம் போல வக்கீல், காவலர்கள்- இணையாய்
இருந்திட வேண்டும் என்பது நமது முன்னோரின் திட்டம்.

குற்றம் தடுத்து குடிகளைக் காக்க இருவரும் அவசியமே- இதை
சற்றும் மறவா தகைமை வளர்ந்தால் சங்கடம் நிகழாதே!
சமுதாயத்தின் நிலை பிறழாது காப்பது சமநீதி- இதை
சமைத்துத் தருவோர் சண்டைகளிட்டால் சாய்ந்திடும் அறநீதி.

சென்னை நீதி மன்ற நிகழ்வுகள் சொல்லும் சேதி இது- தான்
என்னும் அகந்தை அழிந்தால் எங்கும் நிலைக்கும் நீதியது.
நன்றி: விஜயபாரதம்
(16.03.2009)

புதுக்கவிதை - 15



ரீங்காரம்

'அப்படி என்னய்யா தூக்கம்?'
பொருமினாலும்
வெடிக்க மனம் வரவில்லை.
மீண்டும் மீண்டும் சரிந்த உடலை
மீண்டும் மீண்டும் நிமிர்த்துகிறது
பரிதாப உணர்வு.

ராத்தூக்கம் இல்லையோ?
பசி மயக்கமோ?
வேலை அதிகமோ?
பயணக் களைப்போ?
அலைச்சல் அதிகமோ?
யார் தூங்கவில்லை பேருந்தில்?

இருந்தாலும் மனித மனம்
ஒரேமாதிரி இருப்பதில்லை.
திடீரெனக் கொப்புளித்த
கோபத்தில் விலக,
சட்டெனச் சாய்ந்து அவன் திடுக்கிட,
மீண்டும் எழுகிறது பரிதாப உணர்வு.

காரணம் இல்லாமலில்லை.
நேற்றைய பேருந்துப் பயணத்தில்
அருகில் அமர்ந்தவர் கேட்டது
இன்னும் காதுகளில்
ரீங்கரிக்கிறது:
'அப்படி என்னய்யா தூக்கம்?'

மரபுக் கவிதை - 16



அருள் புரிவாய் கணநாதா!


கணநாதா கணநாதா! ஓம் கணநாதா கணநாதா!
கணநாதா கணநாதா! ஸ்ரீ கணநாதா கணநாதா!

அம்பிகை பாலா கணநாதா,
அபயமளிப்பாய் கணநாதா!
தும்பிக்கையை உடையவனே,
துயரம் போக்கிட அருள் புரிவாய்!

சரவணன் அண்ணா கணநாதா,
சரணம் அடைந்தோம் கணநாதா!
பரமனின் கணங்களின் அதிபதியே,
பகைவரை வென்றிட அருள் புரிவாய்!

தேவியின் மைந்தா கணநாதா,
தெம்பினை அளிப்பாய் கணநாதா!
தேவர்கள் போற்றும் தூயவனே,
தேசம் காத்திட அருள் புரிவாய்!
நன்றி: தினமலர் (ஈரோடு)
(22.01.2001)

Monday, September 21, 2009

ஏதேதோ எண்ணங்கள்



Thanks Kamal!

Dear friends,
Namaste.
I saw the film, UNNAIP POL ORUVAN and verymuch impressed. This film advocates the Danger of terrorism and give a bold remedy. 'Coumtering terrorism through the same terrorism' is the clear message of this film. It may have the impact of Mallagaon blost incidents. Welldone director Mr. CHAKRI TOLETTI.
The film producer cum actor Kamalhasan, actor Mohanlal and others participating in this film are also done a memoriable job. May god give them extra power to ensure their career.
Please see this film as early, and convey this message to your close friends.

regds

va.mu.murali

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்

''என் தாய் நாடே,
உன் திருவடிகளில் என் மனதை அர்ப்பணம் செய்துவிட்டேன். என்னுடைய நாவன்மை, எழுத்து வன்மை, என்னுடைய புதுக்கவிதை மணாட்டி யாவற்றையும் உன் திருவடிகளில் காணிக்கையாகச் செலுத்திவிட்டேன். நான் எழுதுவதற்கும் உன்னைத் தவிர வேறு பொருள் இல்லை; உனக்கு நிவேதனமாக எனது அருமை நண்பர் குழாமை அளித்துவிட்டேன். என் இளமை, உடல், போகம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். உன்னுடய வேலை நீதி நிறைந்ததாகவும் எல்லா தேவதைகளுக்கும் ப்ரியமானதாகவும் இருப்பதால், உனக்குச் செய்யும் சேவை, ரகுவீரனுக்குச் செய்யும் சேவையாகவே எனக்குத் தோன்றுகிறது...

- வீர சாவர்க்கர்.
(பிரிட்டன் அரசால் 1910இல் லண்டனில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டபோது, தனது அண்ணிக்கு எழுதிய 'மரண ஓலை' என்ற கடிதத்தில் உள்ள வைர வரிகள்).

வசன கவிதை - 8



லட்சியப்பொறி

இளைஞனே,
துரத்தும் சவால்களை அஞ்சி
துயரம் கொள்ளவா நீ பிறந்தாய்?

விடியலுக்காக காத்திருப்பதைவிட
நீயே ஏன்
சுடர்விளக்கினை ஏற்றக் கூடாது?

சோர்ந்து கிடக்கும் தோள்களை உலுக்கு.
உன் விழிகளில் வழியும் லட்சியப் பொறியில்
நம்பிக்கை தீபங்கள் உதயமாகட்டும்.

துரத்தும் சவால்களை துரத்தும்போது தான்
வெற்றிப் படிகளில் விரைவாக ஏறலாம்.

இந்த விவேகம் இருந்தால்
வெற்றி நிச்சயம்.
இது விவேகானந்தர் காட்டும்
வாழ்க்கை சத்தியம்.
நன்றி: மாணவ சக்தி
(ஜனவரி 2001 )

Sunday, September 20, 2009

மரபுக் கவிதை - 15



ஏற்றம் காண்போம்!




அஞ்சனை பெற்ற மைந்தன் அனுமனின் பாதம் பற்றி,
வஞ்சனை செய்யும் தீயோர் வன்மையை வெல்லுவோம் நாம்!
லஞ்சமும், நியாயமற்ற லாபமும் வாழ்க்கையென்று
நஞ்சிடும் நேர்மையற்ற நரிகளை வெல்லுவோம் நாம்!

'வித்தக அரக்கன் வைத்த வினையெனும் தீயைக்கொண்டு
மொத்தமாய் எதிரி நாட்டை முற்றிலும் நாசம் செய்த
சித்தனே' என்று பாடி, சிந்தையை ஒருமையாக்கி,
நித்தமும் நாட்டைக் காக்கும் நிலைகளாய் வாழுவோம் நாம்!

அண்ணலை இதயம் ஏத்தி, அடிமையாய் சேவை ஆற்றி,
நண்ணிய ராமதூதன் நாமத்தை நாளும் சொல்லி,
விண்ணியல் வாயு மைந்தன் விரைவினை நாமும் பெற்று,
எண்ணிய செயலில் எல்லாம் ஏற்றமே என்றும் காண்போம்!
நன்றி: விஜயபாரதம்
(22.12.2000 )

இன்றைய சிந்தனை




சான்றோர் பொன்மொழி


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நேர்!
தமிழுக்கு மணமென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்- இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்!...
- பாரதிதாசன்
(இன்பத்தமிழ்)

Saturday, September 19, 2009

புதுக்கவிதை - 14



நேசம்

உன் நலம் எனது
என்ற என் கொள்கைக்கும்
என் நலம் உனது
என்ற உன் கொள்கைக்கும்
நடைபெறும்
போராட்டம்.
நன்றி: விஜயபாரதம்
(09.02.2001).

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி


''ஆண்டவன் சாட்சியாக பிரதிக்ஞை செய்கிறேன். பாரத நாட்டை விடுவிப்பதற்காக இறுதிமூச்சு உள்ளவரை ஒரு போர்வீரன் போல போராடுவேன். என்றைக்கும் பாரதத்தின் ஊழியனாக இருப்பேன்; பாரதத்தின் நலனே என் வாழ்க்கையின் குறிகோளாக இருக்கும். சுதந்திரம் கிடைத்த பிறகும் கூட, சுதந்திரத்தை காத்துக்கொள்வதற்காக என் பணி தேவைப்பட்டால், என் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் அன்னையின் காலடியில் அர்ப்பணம் செய்வேன்''.

-நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.

(1943, அக்டோபர், 23 இல் சிங்கபூரில் அமைத்த ஆஜாதி ஹிந்த் அரசாங்கத்தின் பதவியேற்பு விழாவில் எடுத்துக்கொண்ட பிரதிக்ஞை).

Friday, September 18, 2009

இன்றைய சிந்தனை





சான்றோர் பொன்மொழி


கனிபோல் சிரிப்பதில் பிள்ளை- அவள்

பனிபோல் அணைப்பதில் கன்னி.

கண்போல் வளர்ப்பதில் அன்னை- அவள்

கவிஞனாக்கினாள் என்னை!
- கவிஞர் கண்ணதாசன்
(காலங்களில் அவள் வசந்தம்... பாடலில்).

வசன கவிதை - 7



இன்றைய சமுதாயத்தில் காதலின் நிலை

இலக்கியத்தில் காதல் தெய்வ வடிவம்;
இடைப்பட்ட காதல் அன்பு வடிவம்;
இன்றைய காதல் என்ன வடிவம்?

ஏ சமூகமே,
காதல் என்ற பெயரில் மோகம் கொண்டு
ஏன் முகத்தை மூடிக் கொள்கிறாய்?
இருட்டிலே நடக்க வேண்டியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாய்.
இப்போது வெட்க நாளங்கள் விம்மிப் புடைக்கும்போது
முகத்தை திரையிட்டு மூடிக் கொள்கிறாய்.

ஏ சமூகமே,
காதலின் விளைவான காமத்தை
நீ தான் அடிப்படை ஆக்கினாய்.
நாளாக ஆக காதலை போர்வை ஆக்கினாய்.
இப்போது குளிரும் அடிக்கிறது; போர்வையும் கனக்கிறது...

ஆணும் பெண்ணும் கூடுவது காதல் என்று
கண்ணை இறுக மூடிக் கொள்கிறாய்.
ஆனால், விரலிடுக்கு வழியே வெட்டவெளியை தரிசிக்கிறாய்.
ஏ சமூகமே,
கூடுவதென்றால் கூடு; ஊடுவதென்றால் ஊடு.
இதில் ஓரம் கட்டி நின்று ஒப்பாரி வைக்க என்ன இருக்கிறது?

கயல்விழிகளும் கனிமொழிகளும் உருவகப்பட்ட இடத்தில்
'அனாட்டமி'களும் அங்க அளவுகளும் நுழைந்தது எப்படி?
பட்டிமன்றம் நடத்தும் சமூகமே,
உன் பகுத்தறிவை சிறிது பகுத்து அறி.

பிருதிவிராஜர்கள் ஆகத் துடிக்கும் ஜெயச்சந்திரர்கள்
தம் வீட்டில் சம்யுக்தைகள் தோன்றுவதை மட்டும்
தடுக்க முயல்வது ஏன்?

ஏ சமூகமே,
இந்தத் தவறுகளின் ஆணிவேரைத் தேடி
அலைந்தது போதும்.
தவறு காதலில் அல்ல- உன் பார்வையில்.

இதற்கு மேல் எழுத என் பேனா மறுக்கிறது.
இனிமேலும் நடித்துக்கொண்டிருந்தால்,
ஏ சமூகமே, இயற்கை நம்மை மன்னிக்காது.
குறிப்பு: பரிசு பெற்ற கவிதை.
கோவை- போத்தனூரில் 'நண்பர்கள் மனமகிழ் மன்றம்' நடத்திய கவிதைப் போட்டியில்
முதல் பரிசு பெற்ற கவிதை (நாள்: 19.07.1992 )

மரபுக் கவிதை - 14



திருப் பாதை

வித்தாக என் தந்தை
விளைநிலமாய் என் அன்னை
முத்தாக நான் மலர
முறுவலுடன் பெற்றோர்கள்!

வித்தைக்கு என் ஆசான்
விழைவுக்கு என் நண்பர்
சித்தாக நான் சுடர
சிந்தனைகள் பல உதயம்!

சொத்தாக நற்கல்வி
சொந்தமென குலக்கீர்த்தி
பத்தினியாய் என் மனைவி
பக்கத்தில் நான் பெற்றோர்!

பித்தாக என் அன்பர்
பின்னாலே உறவோர்கள்
இத்தனையும் போதாது
இறைவனவன் என்னோடு!

Thursday, September 17, 2009

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்


பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்?

- திருவள்ளுவர்
(வாழ்க்கைத் துணைநலம் -54)

வசன கவிதை - 6



இது தான் விதி

விளையும் நெல்மணி ஒவ்வொன்றிலும்
அதை உண்ணுபவர் பெயர்
எழுதப்பட்டிருக்கிறது.

ஒருவரை ஒருவர் சந்திப்பது கூட
நிர்ணயிக்கப்பட்டதாகவே நிகழ்கிறது.

தாயும் சேயும்
கணவனும் மனைவியும்
குருவும் சிஷ்யனும் -
எல்லா உறவுகளும்
ஜனனத்தின்போதே தீர்மானிக்கப்படுகின்றன.

வேடர்களுக்கு கொக்குகளும்
கொக்குகளுக்கு மீன்களும்
மீன்களுக்கு புழுக்களும்
காத்திருக்கின்றன.

கதிரவன் உதித்து மறைவதும்
நிலவு தேய்ந்து வளர்வதும்
அலைகள் சீறி அடங்குவதும்
பூக்கள் மலர்ந்து துவள்வதும்
நதிகள் வழி கண்டடைவதும் -
இயற்கையின் பெரும் விதி;
இன்றும் அன்றும் என்றும் தொடர்வது.

ஒவ்வோர் உயிரின் பிறப்பும் இறப்பும்
விதி விளைத்தபடி
தொடர்ந்து விளைகிறது.

அவ்வளவு ஏன்?
இந்தக் கவிதையே
என்னால் எழுதப்படவும்
உங்களால் படிக்கப்படவும்
விதிக்கப்பட்டிருக்கிறது.
நன்றி: விஜயபாரதம்
(12 ஜனவரி 2007).

புதுக்கவிதை -13



புதுக்கவிதை

மடக்கி, மடக்கி
எழுதுவது
புதுக்கவிதை
என்றால்
நானும்
எழுதுவேன்
அதை.

மரபுக் கவிதை - 13



இன்சொல் வெண்பா

கல்லால் அடித்தாலும் அம்பெடுத்துக் குறி பார்த்து
வில்லால் அடித்தாலும் விழுப்புண்ணே ஆகும்-தீச்
சொல்லால் அடிக்காதீர்; சுட்டபின்பு பூமனதை
நல்ல படிமாற்றல் அரிது.
நன்றி: விஜயபாரதம்

Wednesday, September 16, 2009

இன்றைய சிந்தனை






சான்றோர் பொன்மொழி

தேசத்தை நம்பு; தெய்வத்தை நம்பு; உலகம் உன்னைப் புகழும்.
'இது நம்மால் முடியும்' என்று எண்ணு; முடிந்து விடும்.
மனோதிடமும் வைராக்கியமும் இந்த நம்பிக்கையின் குழந்தைகளே...
நம்பிக்கை உடையவன் வேதாந்தி ஆனான், விஞ்ஞானி ஆனான்.
நம்பிக்கை இல்லாதவனுக்கு சுகமும் அற்பம்; ஆயுளும் அற்பம்.
- கவிஞர் கண்ணதாசன்
(கடைசிப் பக்கம் - நூலிலிருந்து).

புதுக்கவிதை -12



ஒடுக்கம்

ஒடுக்கப்பட்டவர்கள்
எல்லாரும்
ஒன்று சேர்ந்தார்கள்-
மற்றவர்களை
ஒடுக்க.

மொழி மாற்றக் கவிதை - 1



சாவுப்பறை

குலப்புகழ், பெருமை நிலை எல்லாமே
நிழல் தான் - நிலையல்ல!
வலிவிதி முன்னால் படையும் சரியும்,
யமன் அரசருகினிலே
செங்கோல் வீழும்
மகுடமும் தாழும்.
துரும்பாய், தூளாய் மறைந்து போகும்
இரும்பாய் இற்று இழிந்து போகும்!

படைவாளுடனே சிற்சில பேர்கள்
ஆத்தியை அறுத்திடுவர்!
கடைசியில் உணர்ந்து கைவிட்டிடுவர்,
இறைவன் சிரித்திடுவன்:
தொலைவோ, அருகோ
விதிமுன் சருகே.
முணுக்கும் சுவாசம் முற்றுப் போகும்,
பிணக்கும் இணக்கும் அற்றுப் போகும்!

உனக்கணிவித்த மாலை உலரும்
பின் ஏன் வீண்பெருமை?
தனக்கே வெற்றி, தோற்றவர் அடிமை
என்பதும் இழப்புத் தான்:
தலைமாட்டினிலே சவக் குழி
தப்பிட இல்லை ஒருவழி.
சிலதின் விளைவால் திளைத்திடுகின்றாய்,
வலிவிதி அதனால் விளைத்திடுகின்றாய்!

- இக்கவிதை, ஆங்கிலத்தில் ஜேம்ஸ் சேர்லே எழுதிய DIRGE என்ற கவிதையின் தழுவல்.
ஆதாரம்: Learning through pleassure / Macmillan publication- 1986 / page: 69-70.

Tuesday, September 15, 2009

இன்றைய சிந்தனை







விவேக அமுதம்

பிறருக்கு உதவுவது என்பது நம்மை நாமே பண்படுத்திக் கொள்வதற்காக நமக்குத் தரப்படுகிற வாய்ப்பு. வாழ்வில் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய மிகப் பெரிய பாடம் இது. இதை நாம் முழுமையாக அறிந்து கொண்டால் நாம் துயருறவே மாட்டோம்; சமுதாயத்தில் எவரோடும் சேர்ந்து வாழலாம்...

-சுவாமி விவேகானந்தர்
(ஞான தீபம் -1)

மரபுக் கவிதை - 12








கவி பூஜை


ஜப மாலை உருள்கிறது
ஜக மாயை புரிகிறது

சுப வேளை வருகிறது
சுவடேடு தெரிகிறது

தவ சோபை மிளிர்கிறது
தர வீணை அதிர்கிறது

கவி பூஜை நிகழ்கிறது
கலை வாணி அருள் கனிக!

புதுக் கவிதை - 11



மீன் தூண்டில்

நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டு
உதட்டில் லிப்ஸ்டிக்
கண்களில் கரு மை
தூக்கி கட்டிய பிரா
கன்னத்தில்
மட்டமான பவுடர் பூச்சு
வழிசலான புன்னகை
வா வா என்றழைக்கும்
ஒரு முழ மல்லிகையின்
சுகந்தம்.

பார்ப்பவர்களுக்கு
அது 'ஒரு மாதிரி' தான்.
பார்ப்பவர்களுக்கு கண்ணில் பசி;
அவளுக்கு வயிற்றுப் பசி.
அவள் அப்படித் தான்.

ஊர் ஆயிரம் சொல்லும்.
மீனுக்கு அவள் தூண்டில்
ஆனால்
தூண்டிலில் மாட்டித்
தத்தளிக்கும் வாழ்க்கை
அவளது நிஜம்.

சேலை வாங்குவதற்காக
சேலை களைபவள்
உண்ணும் உணவுக்காக
உடலை விற்பவள்
பெற்றதைப் பேணிட
பெண்மையைத் தருபவள்
விவரம் புரியாமல்
விலைமாதாய் ஆனவள்.
அவளை ஏன்
நிந்திக்கிறீர்கள்?

மரபுக் கவிதை - 11



தூயவரின் செய்தி


நல்லவரைத் தேடு- நீ
நல்லவரைத் தேடு!
உலகில் யாரும் தீயவர் இல்லை!
நல்லவரைத் தேடு!


நேரம் தவறாதே- நீ
நியமம் மறவாதே!
பிராணன் உடலில் உள்ள வரைக்கும்
பிறருக்குதவிடுக!


சிறு பணி யேனும் செய்- நீ
சிறிதளவேனும் செய்!
உன்னால் முடிந்த எப்பணி யேனும்
உடனே செய்திடுக!


வாழும் பொழுதெல்லாம் - உன்
சேவை உதவிடனும்!
வாழ்ந்து மறைந்த பின்னரும் கூட
தேகம் பயன்படணும்!

பல மொழி கற்றிடணும் -நீ
பண்டிதன் ஆயிடணும்!
உலகில் எவரும் எதிர்த்த போதிலும்
உயர்ந்து நின்றிடனும்!


லட்சிய உறுதியிலே - நீ
மலையென உயர்ந்திடணும்!
அன்னை பூமியின் அவலம் நீக்கிட
அயராதுழைத் திடணும்!

தர்மம் பேணிடணும் - தாய்
நாட்டைக் காத்திடணும்!
கர்வம் இன்றிக் களப் பணி புரிந்து
காரிருள் அகற்றிடணும்!

இதுவே நற்செய்தி - சிவ
ராம்ஜியின் செய்தி!
சொல்லும் செயலும் ஒன்றென வாழ்ந்த
தூயவரின் செய்தி!
நன்றி: விஜயபாரதம்
(1999, July 09)

Monday, September 14, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி

பெண் மகளாகத் தோன்றினாள்; மனைவியாக வாழ்ந்தாள்; தாயாகத் தொண்டு செய்தாள்; இப்பொழுது தெய்வமாகக் காட்சி அளிக்கிறாள்; உலகீர்! அக்காட்சி காண்மின்; தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்? நூற்களை ஏன் ஆராய்கிறீர்? இதோ தெய்வம் ; பெண் தெய்வம்; காணுங்கள்; கண்டு வழிபடுங்கள்!
- திரு.வி.க.
(பெண்ணின் பெருமையில்)

புதுக் கவிதை - 10



சகிப்புத்தன்மை

அவன்
உன் கன்னத்தில்
அடித்துவிட்டால்
மறு கன்னத்தையும்
காட்டி விடாதே.
நீயே
அடித்துக்கொள்
அதை.

நன்றி: விஜயபாரதம்
2004 ஏப்ரல் 29

மரபுக்கவிதை - 10



பற்றும் வெறியும்

தமிழ்ப் பற்று என்றென்றும் வேண்டும் வேண்டும் - ஆனால்
வெறியாக அது மாறக் கூடாதென்றும்!
தமிழ்ப்பற்று என்றபடி வேடம் போடும் - தீயோர்
தனியாக உட்கார்ந்து சிந்திக்கட்டும்!

மொழிப் பற்று இல்லாதான் மூடன், மூடன்- ஆனால்
தனிநாடு கேட்பதுவும் நல்லதல்ல!
செழிப்புற்ற ஒற்றுமையின் வயல் சிதைத்து - மாயை
இருளினிலே உழன்றதுவே போதும் போதும்!

Sunday, September 13, 2009

இன்றைய சிந்தனை









பாரதி அமுதம்


எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
பண்ணிய பாவம் எல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின்முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.
-மகாகவி பாரதி
(மகாசக்திக்கு விண்ணப்பம்)

மரபுக் கவிதை - 9



கண்தானம்

உயிர் பிரிந்து போனாலும்
உலகுக்கு வழி காட்ட
உனது விழி உதவ வேண்டும்!

உடல் எரிந்த பின்னாலும்
உன் விழிகள் அழியாது
உலகத்தில் ஒளிர வேண்டும்!

கண்ணில்லாப் பேதையர்கள்
கண்ணீரை நிறுத்திவிட
கண்தானம் செய்ய வேண்டும்!

மண்ணுலகில் வாழ்ந்தோமே
மானிடராய் என்பதற்கு
கண்தானம் நல்ல சாட்சி!

வசன கவிதை - 5



இயலுவது எப்போது?

பற்றிப் படர்ந்து பரவுவதற்கு
யார்
கற்றுக் கொடுத்தது கொடிக்கு?

விழுதாய்க் கிழைத்து
அடிமரம் தாங்க
அறிவுறுத்தியது யார்
ஆல மரத்துக்கு?

வெயிலில் பொசுங்கி புதைந்து போனாலும்
ஈரம் பட்டவுடன் இருப்பைக் காட்டும்
அருகம் புல்லுக்கு நம்பிக்கை
கொடுத்தது யார்?

இரையைக் கண்டதும் பதுங்கிப் பாய்ந்து
கவ்வும் பல்லியின் லாவகம்
கற்றது யாரிடம்?

இயற்கையின் அதிசயம்
எத்தனை? எத்தனை?
இத்தனை கண்டும் இயலா மனிதர்கள்
இருப்பது ஏன்?
இயலுவது எப்போது?
நன்றி: மாணவர் சக்தி
(1997)

புதுக்கவிதை - 9



கைரேகை

கைரேகையை பார்த்துப் பார்த்து,
சோதிடப்பக்கம் புரட்டிப் புரட்டி,
அலையாய் அலைந்து நாடியும் பார்த்து,
எண்ணுக்குத் தக்க பெயரையும் மாற்றி,
ஜாதக தோஷத்துக்கு பரிகாரம் செய்து,
ஒரு பலனும் இல்லை-
தன்னம்பிக்கை
வளரவே மாட்டேன் என்கிறது.

Saturday, September 12, 2009

இன்றைய சிந்தனை











குறள்அமுதம்

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
- திருவள்ளுவர்
(இல்வாழ்க்கை - 41)

மரபுக் கவிதை - 8



மரத்தினை வெட்டாதீர்

இயற்கை என்பது இறைவன் ஆலயம்
அழித்திடல் நன்றாமோ?
செயற்கை உலகிலே வாழும் மனிதரே
சிந்தனை செய்திடுவீர்!

மரங்கள் உதவியால் மழைகள் பொழியுது
மறந்திடல் நன்றாமோ?
சிரத்தை அறுத்த பின் வாழ்ந்திட முடியும்
என்றெவர் கூறிடுவார்?

அறிவு ஆறினைப் பெற்ற மனிதனே
அரண்அது மரமதுவே!
உரித்த உடலினில் உயிர் தங்கிடுமோ?
உணர்ந்திடு இயற்கையினை!

கண்ணுக்கினியன காணுதல் நன்று
கண்டிடு மரங்களினை!
கண்ணைப் பேணிடும் இமைகளைப் போல
காத்திடு மரங்களினை!

மரத்தை வெட்டிடும் கோடரி உடனே
மண்ணுக்குள் புதையட்டும்!
வரத்தை அருளிடும் வருண தெய்வமே
வந்திடுவார் உடனே!
நன்றி: கோகுலம் - குழந்தைகள் மாத இதழ்
(1989, டிசம்பர் )

புதுக்கவிதை - 8


வலி

புன்னகை தவழும்
புகைப்படத்தை
கடிதத்துடன் ஒட்டி
அனுப்ப வேண்டியவருக்கு
அனுப்பியாகிவிட்டது.
மனதின் வலி
அவருக்கெங்கு
தெரியப் போகிறது?

நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்
(1999, SEP 15 இல் பிரசுரமானது)

உருவக கவிதை - 2



புள்ளி ராஜாக்களின் பரமபதம்

மேடு பள்ளமானது மட்டுமல்ல-
வாழ்க்கையே பரமபதம்.

உருட்டும் தாயக்கட்டை கொடுக்கும் புள்ளிகள்
ஏணியில் ஏற்றலாம்;
பாம்பையும் தீண்டலாம்.
புள்ளிகளின் முடிவுக்காக ஆர்வத்துடன் உருட்டுபவன்
பார்வையாளனே தவிர வேறல்லன்.

ஆட்டத் துவக்கத்தில் ஒற்றைத்தாயம்
இழுவையாவது சகஜம்.
பாம்புக்கு ஒற்றைக்கட்டம் முன்னிருக்கையில்
வேண்டாமலே விழும் ஒற்றைத் தாயம்.

பலமுறை ஏணி ஏறி, பாம்புக்கடி பட்டு
இலக்கை எட்டுகையில், இடறுகிறது தாயக்கட்டை
இடறுவதே தாயக்கட்டை.

தாயக்கட்டையுடன் மாயம் பேசும் சகுனிகளாலும்
பரமபதத்தை அடைய முடியாது.
எல்லா நேரங்களிலும் எல்லாருக்கும்
சகுனம் வைக்காது.

தாயம் பிறழ்ந்ததால் மகுடம் இழந்த
தர்மன் எக்களிக்கலாம்.
தாயக்கட்டை உருளும் ஒலி
தர்மனின் சிரிப்பா?
சகுனியின் பிதற்றலா?

சகுனிகளும் தர்மர்களும் எத்தனை நாட்களுக்கு
மவுன பாஷையில் கெக்கலி கொட்டுவது?
புள்ளி ராஜாக்களின் புலம்பலுக்கு
புள்ளி எப்போது?

துவாதசியும் வந்தாயிற்று
பாம்புக்கடி சுகமாகி விட்டது
சறுக்குமரமாகிவிட்ட ஏணியைக் காண
நடுக்கம் மிகுகிறது.

வைகுண்ட வாசலில் சங்குகள் முழக்கம்.
அடுத்த முறை
இதே இடத்தில்... இதே நேரத்தில்... இதே போல...
பரமபதம் தொடரும்.

மேடுபள்ள வாழ்வில் அதுவரை
பயணிக்க வேண்டியது தான்.

Friday, September 11, 2009

மரபுக் கவிதை - 7









நிவேதனம்

வீரவிழிப் பார்வையுடன்,
வெற்றியுறும் வேட்கையுடன்,
தீரமிகு மீசையுடன்,
ிடமான சிந்தையுடன்,
சாரமிகு கவிதைகளை
ளைக்காமல் எழுதிய
பாரதியே! எம் கவிதை
முதுமக்கு ஆகுதியே!
நன்றி: இந்துவின் சங்கொலி.

இன்றைய சிந்தனை


சான்றோர் பொன்மொழி

பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின், மிகத் தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட ஆசைப்படுகிறவர் யாரும், வாழ்க்கையின் எந்தத் துறையிலிருந்தும் விலகிவிட முடியாது. அதனாலேயே, சத்தியத்தினிடம் நான் கொண்டிருக்கும் பக்தி, என்னை ராஜீயத் துறையில் இழுத்துவிட்டிருக்கிறது.
சமயத் துறைக்கும் ராஜீயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறுவோர், சமயம் என்பதையே அறியாதவர்கள் ஆவர். இதைக் கொஞ்சமேனும் தயக்கமின்றி, ஆயினும் முழுப் பணிவுடன் கூறுவேன்.

-மகாத்மா காந்தி
(சத்திய சோதனை'யில்).

புதுக்கவிதை - 7


வேலிகளுக்குஅப்பால்...

விழிகளில் விரக்தி
உடலினில் சோர்வு
முகத்தினில் முள் முள்ளாய்
சவரம் செய்யப்படாத மயிர்
அந்த ஈழத்து இளைஞனின்
நெஞ்சில் மட்டும் தமிழ்.

வசன கவிதை - 4



வர வேண்டாம் பாரதி...

(இன்று பாரதி நினைவு நாள்)

பாரதி, நீ இன்று வரத் தக்க சமயமில்லை.
பரிதவிக்கும் சோகத்தில் பதைபதைக்கும் மக்களுக்கு
உன் வரவுக்கு முகமன் கூறும் வலுவில்லை-
இது தக்க சமயமில்லை.

சோற்றுக்குத் தாளமிடும் இந்தியனின்
ஓட்டுக்கு ஓலமிடும் அரசியல்வாதிகள்;
பஞ்சடைத்த கண்களுடன் கை தட்டும் உருவங்கள்;
பகடையாய் உருளும் கொள்கைகள்.
பாரதி, இது தக்க சமயமில்லை.

திரையில் தெரியும் நாயகனுக்கு
தீபம் ஏற்றும் ரசிகர் கூட்டம்;
மேடையில் முழங்கும் ஜாதித் தலைவனின்
காலில் மிதிபடும் கண்ணீர்த் துளிகள்.
இது தக்க சமயமில்லை.

திண்ணை வேதாந்தம்,
திராவிடத் தெருக்கூத்து,
ஜனநாயக வியாபாரம்,
விரிசல் விழுந்த மனங்கள்.
இன்னும் எப்படி இந்தியாவை வர்ணிப்பது?
வேண்டாம் பாரதி, இது தக்க சமயமில்லை.

ஒளிமயமான பாரதத்தைக் கண்ட கனாக் கவிஞனே!
விதிகளைக் கவியாக்கிய வித்தகனே!
இந்த விரக்தியின் விளிம்புகளை தரிசித்து
ஏன் உன் கண்களை சிவக்கச் செய்ய வேண்டும்?
பொறு பாரதி, பொறு.

இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள்
இந்த சேற்றுச்சகதிக் கும்பலுக்கும்
தன்னம்பிக்கை வரும்.
திண்ணை வேதாந்தத்துக்கும் திருட்டு வியாபாரத்துக்கும்
என்ன வித்தியாசம்?
அவசரப்படாதே பாரதி, அதுவரை பொறு.

எங்களது இப்போதைய தேவை
தன்னம்பிக்கை தான்.
பிறகே உன் நன்னம்பிக்கை.

Thursday, September 10, 2009

இன்றைய சிந்தனை




விவேக அமுதம்



செயல் புரிய மட்டுமே நமக்கு உரிமையுண்டு, அதன் பலன்களில் அல்ல. பலன்களை அவற்றின் போக்கில் விட்டு விடுங்கள். விளைவு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவனுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அவன் உங்களிடம் எப்படி நடந்தது கொள்வான் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் மகத்தான செயலைச் செய்ய விரும்பினால், அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்
(கர்ம யோகம்)

வசன கவிதை - 3



நிழற் பின்னல்

நிழல் விழாத ஜடமில்லை.
ஆர்ப்பரிக்கும் அருவியின் சாரலிலும்
நிழல் தெறிக்கிறது.
சுழன்றாடும் தீயின் புகையிலும்
நிழல் நெளிகிறது.
யார் நடந்தாலும் கூட வரும் நிழல்
காரிருளில் காணாமல் போகிறது.

நிழலாவது யாது?
ஒளியின் பிம்பமா?
சுடரும் பல வண்ணங்களும்
நிழலுருவில் கருமையாய்
சமத்துவம் போதிக்கின்றன.
நிழல் மாயத் தோற்றமா?

காற்றுக் குமிழி வாழ்வில்
நிழலின் இருப்பிடம் எது?
ஒளியுள்ள இடமெங்கும்
நீக்கமற நிறைந்திருக்கும்
இருளின் பிள்ளையா நிழல்?

எழுத, எழுத... எழுதுகோலின் கீழ்
நிழல் எழுதுகோலும்
எழுதியபடி வருகிறது.
நிஜ எழுதுகோலும் நிழல் எழுதுகோலும்
நிகழ்த்தும் பின்னலே கவிதையா?

மனித வாழ்வும் கவிதை போலத் தானா?
நிழல் தொடர்கிறது...
நிஜம் தவிக்கிறது.

இன்றைய சிந்தனை



சான்றோர் பொன்மொழி


''உடம்பிலே தெம்பும் உள்ளத்திலே உற்சாகமும் இருக்கும்போது,
எழுத எழுத 'எழுத்து' வளரும்''.
- கவிஞர் கண்ணதாசன்.
(வனவாசத்தில்)

Wednesday, September 9, 2009

புதுக்கவிதை - 5



சுதந்திரம் வாழ்வின் ஏணி

சுதந்திரம் என்பது சுவாசக் காற்று
அடைத்திட முயன்றால் அயர்வே கிட்டும்!

சுதந்திரம் என்பது சுகமான ராகம்
இடறிட நினைத்தால் இடிகளும் முழங்கும்!

சுதந்திரம் என்பது பூக்களின் சுவாசம்
சிதைத்திடத் துணிந்தால் புரட்சி வெடிக்கும்!

சுதந்திரம் என்பது அமைதிப் பூங்கா
அழித்திட முயன்றால்அதிரடி உண்டு!

சுதந்திரம் என்பது வாழ்வின் ஏணி
பறித்திட முயன்றால் பதிலடி கிடைக்கும்!

சுதந்திரம் என்பதன் பொருள் மிக சுலபம்
சுதந்திரம் தானே சுகங்களின் உச்சம்!


நன்றி: தினமலர் (ஈரோடு)
15 jan 2001

புதுக்கவிதை - 6



கார்கில் கவிதை

நாசி முழுவதும்
இளம் மனைவியின்
மல்லிகை சுகந்தம்.
காலை உதைத்துச் சிணுங்கும்
குழந்தையின் கொஞ்சல்
செவிகளில்.
விரல்கள்
துப்பாக்கி விசை நுனியில்.
மனம் முழுவதும்
தேசம்.

நன்றி: சூரியகாந்தி (கதிரவன் நாளிதழ் இணைப்பு)
15.08.2009

Tuesday, September 8, 2009

உருவக கவிதை - 1



துணுக்கு

பல்லிடுக்கில் சிக்கிய துணுக்கு
படாத பாடு படுத்துகிறது.
பல முயற்சிகளுக் கப்புறமும்
நாவினுக்குத் தோல்வி.
குண்டூசி எடுத்துக் குத்தப் போய்
ஈறுகளில் ரத்தம்.
வாய் கழுவியும் ஒரு வாளி
தண்ணீர் செலவு தான் மிச்சம்.

பல்லிடுக்கில் நுழைந்த எதிரி
பாடாய்ப் படுத்துகிறது.
ஆனால் -
சிந்தனையைத் தூண்டும்
சின்னஞ்சிறு எதிரியை
எப்போது மறந்தேன்
தெரியவில்லை...
எப்போது போனது என்றும்
புரியவில்லை.


நன்றி: தமிழன் எக்ஸ்பிரஸ்
(1999, June 16-23)

வசன கவிதை - 2



தேனீக்களின் நகரம்

தாரக மந்திரம் தரமெனக் கொண்டு
தரணியை ஈர்க்கும் தளரா மனங்கள்.
அந்நியச் செலாவணி ஈட்டிடப் பிறந்த
அற்புதமான தொழில் முனைவோர்கள்.
உழைப்புக்கேற்ற ஊதியம் பெற்று
திருப்தியில் திளைக்கும் தொழில் ஆளுநர்கள்.
புதிய முயற்சியில் துணிந்து இறங்கி
சாதிக்கின்ற புரட்சிக்காரர்கள்.

புதுப்புது வடிவில் பின்னலாடைகளை
உற்பத்தி செய்யும் நவீன பிரம்மாக்கள்.
குறித்த காலத்தில் சரக்கை அனுப்ப
உணவும் உறக்கமும் மறந்த சித்தர்கள்.
ஒரு நாளுக்கு 24மணிநேரம்
போதாமல் உழைக்கும் 'தேனீ' மனிதர்கள்.
கிளைத்தொழில் பலவும் செழித்து வளர்ந்திட
கூட்டணி அமைத்த சுதேசி வீரர்கள்.

அரசு உதவியை எதிர்பார்க்காமல்
தாமே வளர்ந்த தகைமையாளர்கள்.
ஏற்றுமதியில் ஏற்றம் பெறலாம்
என்பதைச் சொன்ன banian மக்கள்.
'வேலைக்கேற்ற ஆட்கள் தேவை'
விளம்பரம் செய்யும் வித்தியாசப் பிறவிகள்.
மாற்றம் எதையும் சுவீகரித்து
மாற்றிக் கொள்ளும் திறமையாளர்கள்.

சரிந்து கிடந்த பொருளாதாரம்
திரும்பிடச் செய்த திருப்பூர்க்காரர்கள்!

நன்றி: சுதேசி செய்தி
ஏப்ரல் 2003

மரபுக் கவிதை - 6



சுவாமி சித்பவானந்தர்

வீரத் துறவியின் விழுதாய்க் கிளைத்து
விளக்காய் இலங்கியவர்
தபோவனத்தைத் துவக்கி ஆன்ம
தானம் வழங்கியவர்

பாக்கியவான்கள் சுயம்சேவகர் என
பாரில் முழங்கியவர்
அந்தர்யோக நிகழ்ச்சிகள் நடத்திய
அறிவின் மேலாளர்

செவ்விய காவி உடையில் மிளிரும்
ஜெகத்தின் அன்பாளர்
மக்கள் தொண்டால் இறைவனைக் கண்ட
மானிடப் பண்பாளர்.

nandri : விஜயபாரதம்
(2000 march 3)

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்





அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.
(அறன் வலியுறுத்தல் -39 )

மரபுக் கவிதை - 5


வல்லது வாழும்


வல்லது வாழும் அல்லது நல்லதாயினும்
பயனென் கொல்? வல்லது வாழும்!

புல்லை மிதிக்கும் பொல்லா உலகம்
முள்ளை விட்டுத் தள்ளியே நிற்கும்.

நல்லவ னென்பது வல்லவனுக்கு
கள்ள உலகம் காட்டும் வந்தனம்.

கல்லா னாயினும் இல்லா னாயினும்
கள்ளனைத் தானே கள்ளன் மதிப்பான்?

நல்லவன் என்க மல்லவன் என்க
வெல்ல மறந்தால் மெல்லும் உலகம்


கொல்லவும் துணியும் வல்லவனுக்கே

பல்லைக் காட்டும் புல்லிய உலகம்.

மெல்லிய ஆட்டை மென்றிடுவார்கள்

கொல்லும் வேங்கையை எண்ணிடுவாரா ?

வல்லமை அல்லது வாழ்வினில் துக்கம்

நல்லவை நாடின் வல்லமை பெறுக!

நன்றி: விஜயபாரதம் (2000, jan 28)











புதுக்கவிதை - 4



கவிதை

என்ன தலைப்பில் எழுதுவது?
எதை எழுதுவது?
எதையாவது எழுது...
மடக்கி
மடக்கி எழுது...
கிடைத்துவிடும்
புதுக்கவிதை.

நன்றி: விஜயபாரதம்
(௨000, மார்ச்3)

Monday, September 7, 2009

இன்றைய சிந்தனை





பாரதி அமுதம்


அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

ஆங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு - தழல்

வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்று முண்டோ?

தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

- மகாகவி பாரதி

(அக்கினிக் குஞ்சு)


மரபுக்கவிதை - 4



கடவுள் வாழ்த்து

ஈரேழுலகமும் இம்மையும் மறுமையும்
சீராய் அளித்தெம் சித்தத்தில் வாழும்
நீர், நிலம், தீயாய், வளியாய், வானாய்
பாரிடை பரந்த பரம்பொருள் போற்றி!

வசன கவிதை - 1



உதய ரேகையின் உன்னத ஒளி

உதயரேகையின் உன்னத ஒளி அதோ தெரிகிறது, அதோ...
என்று எண்ணியிருப்பதில் எள்ளளவும் பயனில்லை,
எழு உழவனே எழு.

இனிமேலும் வானத்தை அண்ணாந்து
வரப் போவது எதுவுமில்லை.
விஞ்ஞான யுகம் விரிந்து படருகையில்
மூலையில் முடங்கி
முணுமுணுத்துப் பயனில்லை.
எழு உழவனே எழு.


தன்னம்பிக்கை இழந்து தளர்ந்துபோய்-
கலப்பைக்கு முட்டுக் கொடுத்து,
காத்திருந்து பயனில்லை.
எழு உழவனே எழு.

இந்த பாரதம் உன் விரல் நுனியில்.
பார் உன் கைகளினில்.
எழு -
உன் கைகளைப் பார்.

உதய ரேகையின் உன்னத ஒளி
உன்னிடத்தில் தான் ஒளிந்திருக்கிறது -
எழு உழவனே,
உன் கைகளை சிறிது விரி.

உலகமும் அந்த உன்னதத்தை
உணரட்டும்!

நன்றி: கோவை வானொலி நிலையம்
(2001, பொங்கல் அன்று 'இளைய பாரதம்' பகுதியில் ஒளிபரப்பானது).



Sunday, September 6, 2009

இன்றைய சிந்தனை




குறள் அமுதம்


நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


(நீத்தார் பெருமை - 26)