பின்தொடர்பவர்கள்

Friday, April 30, 2010

ஈழ ஹைக்கூ- 27

11. மரணம்

குண்டு வீச்சில் தப்பி
முகாம் வாழ்வில்
அனுபவிப்பது.

Thursday, April 29, 2010

ஈழ ஹைக்கூ- 27

10. கண்ணீர்

அயலகத் தமிழர்கள்
அல்லல் படுகையில்
அவர்களே சிந்திக்கொள்வது

Wednesday, April 28, 2010

ஈழ ஹைக்கூ- 27

9. ரத்த பந்தம்

ஈழத் தமிழர்கள்
செத்தபோது
வேடிக்கை பார்த்தது.

Tuesday, April 27, 2010

ஈழ ஹைக்கூ- 27

8. நெஞ்சுரம்

வேர்கள் இற்றாலும்
கால் பதிக்க
தோணி ஏறுவது.

Monday, April 26, 2010

ஈழ ஹைக்கூ - 27

7. நப்பாசை

வேரடி மண்
காப்பாற்றும் என
காத்திருந்தது.

Sunday, April 25, 2010

ஈழ ஹைக்கூ - 27

6. ஆசை

ஞானம் தருவார்
புத்தர் என்ற
நம்பிக்கை.

Saturday, April 24, 2010

ஈழ ஹைக்கூ- 27

5. தூக்கம்

ஈழத் தமிழர்கள்
காத்திருக்கும்
கனவு.

Friday, April 23, 2010

ஈழ ஹைக்கூ- 27

4. வாழ்க்கை

ஈழத் தமிழர்களின்
கலைந்து போன
கனவு.

Thursday, April 22, 2010

ஈழ ஹைக்கூ - 27

3. துரோகம்

தமிழில் இருக்கும்
மறக்க முடியாத
ஒரே வார்த்தை.

Wednesday, April 21, 2010

ஈழ ஹைக்கூ - 27

2. தம்பி

தமிழகத்திலும்
சொல்லக் கூடாத
வார்த்தை.

Tuesday, April 20, 2010

ஈழ ஹைக்கூ - 27

1. மன்னிப்பு

ஈழத் தமிழருக்கு
கிட்டாத
ஒரே வார்த்தை.

Monday, April 19, 2010

ஏதேதோ எண்ணங்கள்


ஈழ சகோதரர்களுக்கு எனது அஞ்சலி!

சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில், இலங்கையில் ராணுவத்தின் கொடூரத் தாக்குதல்களுக்கு பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழ் சகோதரர்கள் பலியாகியதை மறக்க முடியாது.

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு நமது தமிழ்ச் சகோதரர்கள் அடைந்த இன்னல் கொஞ்சநஞ்சமல்ல.

ஆயுதம் அற்ற குடிமக்கள் மீது அபாயமான கொத்து குண்டுகளை வீசி ஆர்ப்பரித்த இலங்கை ராணுவத்தைக் கண்டிக்க தமிழக அரசும் தயாரில்லை; மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை. இந்திய அரசியலின் துயரகரமான நாட்களாக அவை சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டன.

பிரபாகரனின் மரணத்துடன் இலங்கை சிங்கள அரசின் ஆவேசம் அடங்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு முகத்தில் கரி பூசிவிட்டது ராஜபட்ச அரசு. தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளில் மீள குடி புக அனுமதியாமல் நாடகம் ஆடுகிறது இலங்கை அரசு. நாமோ, செம்மொழி மாநாடு ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறோம். மொழி பேசும் மக்களைக் காவாமல், மொழிப்பெருமை பேசி என்ன பயனோ?

காலம் ஈழத் தமிழர்களை வஞ்சித்துவிட்டது. உற்றார், உறவினர், இருப்பிடம், உரிமைகள், சுதந்திரம், செல்வம் அனைத்தையும் இழந்து தவிக்கும் அவர்களுக்கு தமிழகம் என்ன செய்யப் போகிறது?

முள்ளி வாய்க்கால் படுகொலையில் உயிர் நீத்த எமது சகோதரர்களின் இறுதிக் கணம் எப்படி இருந்திருக்கும்? அந்தத் துயர் உலகில் யாருக்கும் நேரக் கூடாது. இன்னும் காலம் இருக்கிறது, தமிழகம் தன்னைத் திருத்திக் கொள்ள.

இலங்கையில் பலியான எமது சகோதர சகோதரிகளுக்கு, இன்றைய நிலையில் அஞ்சலி செலுத்துவது தான் என் மனதுக்கு ஆறுதல் அளிக்கும். அந்த வகையில், ஈழ ஹைக்கூ - 27 என்ற கவிதைத் தொடர் நாளை முதல் இந்த வலைப்பூவில் வெளியாகிறது.

கவிதைகளால் சாதிக்கப் போவது ஏதுமில்லை என்றாலும், சரித்திரத்தை பதிவு செய்வது அவசியம் என்பதால், இக்கவிகளை எழுதி இருக்கிறேன். அதிகாரம் படைத்தவர்களை மட்டுமே தமிழ்க் கவிதை பாடும் என்ற தவறான பதிவை மாற்ற இது என்னாலான முயற்சி.

'உலகத்தின் எந்த ஒரு மூலையில் ஹிந்து ஒருவன் பாதிக்கப்பட்டாலும் உன் உள்ளத்தில் வேதனை ஏற்பட வேண்டும்; அப்போதுதான் நீ ஹிந்து ஆவாய்' என்று சொன்ன விவேகானந்தரை மனதில் இருத்தி, பிஜித்தீவு தமிழருக்காக இரங்கிப் பாடிய மகாகவி பாரதியை வணங்கி, இதைத் தொடங்குகிறேன்.
தமிழ் சகோதரர்கள் அடைந்துள்ள இன்னல் தீர இறைவன் நல்வழி காட்டட்டும். அங்கு உயிர் நீத்த நமது சகோதரர்கள் ஆன்மா நற்கதி அடையட்டும்!

Sunday, April 18, 2010

படக் கவிதை - 02

கூடவே புதையட்டும்!

இனிமேலும்
முட்டுக் கொடுக்க முடியாது!

ஒவ்வொரு நாளும்
ஓரடி மண்ணில் புதையும்
இக்கட்டடத்துக்கு
முட்டுக் கொடுக்க முடியாது.

இரும்புக் கிராதிகளும்
மூங்கில் கழிகளும்
இந்த அடுக்கு மாடி
சரிவதைத் தடுக்க முடியாது.

விதிமுறை மீறி,
நீர்நிலை மேவி,
கட்டிய ஊழல்
கட்டுமானத்துக்கு
எதற்கு முட்டு?
யாருக்கு முட்டு?

அரச இயந்திரத்தை
செல்லரித்துக் கொல்லும்
லஞ்ச லாவண்யத்தை மீறி,

குளங்களை மேடுறுத்தும்
சுயநலத்தை மீறி,

மக்களின் நலம் மீதான
அக்கறையின்மையை மீறி,

யாரை ஏமாற்ற
இந்த முட்டு?
இந்தக் கட்டடம்
புதைவதைத் தடுக்க இயலாது.

விரிசல் விழுந்த கட்டடம்
மண்ணில் புதையட்டும்-
விட்டுவிடுங்கள்!

கூடவே-
லஞ்ச ஊழலும்,
அக்கறையின்மையும்,
சுயநலமும்,
நாசமாய்ப் போன
அரசியலும்...

குறிப்பு: கோவை- அம்மன் குளத்தில், வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்புகள், கட்டுமான நிலையிலேயே மண்ணில் புதைந்தன. இதை அடுத்து, இப்பணி நிறுத்தப்பட்டது (05.04.2010; 18.04.2010). தற்போது இக்கட்டடங்கள் இடிக்கப்பட உள்ளன.

Saturday, April 17, 2010

உருவக கவிதை - 42


'ஜாதி'க்கலாம்!


நாவிதனாய் இருந்தால்
சவரம் செய்யலாம்.
மருத்துவனாய் இருந்தால்
சிகிச்சை அளிக்கலாம்.
ஷத்திரியனாய் இருந்தால்
வீரனாகலாம்.
செட்டியாய் இருந்தால்
கடை நடத்தலாம்.
பார்ப்பானாய் இருந்தால்
வேதம் ஓதலாம்.
ஆசானாய் இருந்தால்
கற்பிக்கலாம்.
கள்ளனாய் இருந்தால்
கன்னமிடலாம்.
அமைச்சராக இருந்தால்
ஊழல் புரியலாம்.
அவரே-
தலித்தாக இருந்தால்
தப்பிக்கலாம்!

.

Friday, April 16, 2010

வசன கவிதை - 55


ராசாக்களுக்கு விண்ணப்பம்

ஒன்று.. பத்து...
நூறு... ஆயிரம்...
லட்சம்... கோடி...
இந்த வரிசையில்
மாபெரும் இலக்கத்துக்கு
பெயர் காண வேண்டும்.

உடனடித் தேவை -
கோடியை விடப் பெரிய
கேடி இலக்கம்.

பில்லியன், டிரில்லியன்
இலக்கங்களை விட
பெரிய தமிழ் இலக்கம்
அவசர அவசியம்.

மறைந்துபோன
சங்கம், பதுமம்
எண்ணிக்கைகளையேனும்
மறுநிர்மாணம் செய்யுங்கள்.

எவ்வாறேனும்
புதிய மாபெரும்
இலக்கம் வேண்டும்.

ஊழல்களை எழுதுகையில்
கைவிரல் வலிக்கிறது.
இனிமேலும்
ஆயிரம் கோடி,
லட்சம் கோடி
என்று
நீட்டி முழக்க இயலாது.

ஆயிரம் ரூபாய் நோட்டு
அச்சிட்டது போல,
லட்சம் கோடிக்கு
ஒரு வார்த்தை
கிட்டாதா என்ன?

சீக்கிரம்
கண்டுபிடியுங்கள்
ராசாக்களே!
.

நன்றி: விஜயபாரதம் (30.07.2010)

.

Thursday, April 15, 2010

உருவக கவிதை- 41


விபத்து


சாலையில்
சிதறிக் கிடக்கும்
தெருநாயைப்
பார்த்தபடி
கடக்கிறது
சொறிநாய்.
.

Wednesday, April 14, 2010

வசன கவிதை - 54


இரணியன் உத்தரவுஇனிமேல் சித்திரையில் தான் பொங்கல்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் கூட
சித்திரைப் பொங்கல்
பாடப்பட்டிருக்கிறது.
இனி, சித்திரைப் பொங்கல்
ொண்டாடுங்கள்.
கூடவே -
உங்கள் பெற்றோர் வைத்த பெயரை
மாற்றிக் கொள்ளுங்கள்!
முடியாவிட்டால்,
பெற்றோரையே மாற்றி விடுங்கள்!

இனிமேல் ஐப்பசியில்
தீபாவளி கொண்டாடாதீர்கள்.
நரகாசுரன் பிறந்த நாளை
தெரிந்தால் கொண்டாடுங்கள்.
தெரியாவிட்டால்,
என் பிறந்த நாளையே
கோலாகலமாகக் கொண்டாடுங்கள்!
கூடவே -
திரையிசைக் கவிமணிகள் பாடிய
தாளஇசைக் கவிகளை
இனமானத்துடன் பாடுங்கள்!

இனிமேல் புத்தாண்டு
தைத் திங்களில் தான்.
கொண்டாட விருப்பம் இல்லாதவர்கள்,
ஜனவரி முதல் நாளைக்
கொண்டாடுங்கள்.
ஆனால்,
சித்திரை முதல் நாளில்
தவறியும் கோயிலுக்கு
சென்று விடாதீர்கள்.
பொங்கல் வைக்கும் நாளில்
யாரேனும்
புத்தாண்டு கொண்டாடலாமா?
பகுத்தறிவைப் படையலிட
பார்த்திருக்காது கழகம்!


அனைவருக்கும் இனிய 'விக்ருதி'
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Tuesday, April 13, 2010

மரபுக் கவிதை - 98


புத்தாண்டை நோக்கி... 1

தாரண வருக!

ஒவ்வொரு நாளும் புது வாழ்நாளே!
ஒவ்வோர் ஆண்டும் புத்துயிர் ஆண்டே!
இதுவே நமது இந்து தத்துவம்!
இறைவன் படைப்பின் இனிய விளக்கம்!
சுபானு வருஷம் சுகமாய்க் கழிந்தது!
சுதேசி சிந்தனை சுடரென ஒளிர்ந்தது!
தர்மம் ஓங்கிட, தரணி சிறந்திட,
தாரண வருஷம் தழைத்து வருகுது!
கடந்த நொடியில் கடைந்த அனுபவம்
வருங்காலத்தின் வழி காட்டட்டும்!
நிகழ்காலத்தில் நிஜமாய் வாழ்வோம்!
நித்தியமான நிலைபேறடைவோம்!
(நாள்: 01.04.2004)
.

Monday, April 12, 2010

மரபுக் கவிதை - 97


புத்தாண்டை நோக்கி...2

விதி புதிதாய்ச் செய்திடுவோம்!


இயற்கையெனும் அருட்கொடையின் இனிய வரம் இவ்வுலகம்!

தன் கடமை மறவாமல் தளராமல் உருள்கிறது!

உலகிதனின் கடும் உழைப்பால் உருவாகும் இரவு பகல்!

பயன் கருதா படும் பாட்டால் பருவநிலை மாற்றங்கள்!

கதிரவனை புவி சுற்றும் காலம் தான் ஒரு வருடம்!

புத்தாண்டு பிறப்பதனால் பூரித்து மகிழ்கின்றோம்!

புத்தாண்டாம் இன்றேனும் புதுமையுறச் சிந்திப்போம்!

நாட்களெல்லாம் தினத்தாளாய் நகர்வதுவா புத்தாண்டு?

மானிடரின் வாழ்வுக்கு மதிப்பளிக்கும் செயலென்ன?

சிந்தித்து முடிவெடுப்போம்! சீக்கிரமாய்ச் செயல்படுவோம்!

தனக்காக வாழாமல் தன் கடமை ஆற்றுகிற

புவித்தாயைப் போற்றிடுவோம்! புதல்வர்களாய் நடை பயில்வோம்!

கணமேனும் துஞ்சாமல் கருத்தாக உருளுகிற

நிலமகளின் செயல்பாட்டை நியமமெனக் கொண்டிடுவோம்!

சளைக்காத உழைப்பாலே, சமர்ப்பண நல்நோக்காலே

விளையாத புதுமை எது? விதி புதிதாய்ச் செய்திடுவோம்!

இல்லாமை ஒழியட்டும்! இனிதெங்கும் பரவட்டும்!

பொல்லாங்கு அழியட்டும்! பொது உலகம் மலரட்டும்!

நல்லோர்தம் சிந்தனைகள் நாடெங்கும் சூழட்டும்!

வல்லமையும் பெருகட்டும்! வளமெங்கும் ஓங்கட்டும்!

சித்திரையை வரவேற்கச் செய்திடுவீர் இச்சபதம்!

நித்திரையைப் போக்கிடுவோம்! நியமத்தைக் காத்திடுவோம்!

(நாள்:12.04.2002)

நன்றி: தினமலர் (ஈரோடு - 14.04.2002)

.


Sunday, April 11, 2010

மரபுக் கவிதை - 96


புத்தாண்டை நோக்கி... 3

சித்திரபானு வருகிறாள்...


சித்திரபானுவாய் புதுவடிவெடுத்து
சித்திரைப் பெண்ணாள் வருகிறாள்!
இத்தரை மாந்தர் இன்புற வாழ
இனியவை சொல்லித் தருகிறாள்!

தாய்மொழித் தமிழின் தரத்தை உயர்த்த
தனயரை வருந்தி அழைக்கிறாள்!
ஆயகலைகள் அனைத்திலும் தமிழின்
ஆட்சி நடத்திட விழைகிறாள்!

மண்ணின் மனத்துடன் கூடிய இந்து
மதத்தைக் காத்திடத் துடிக்கிறாள்!
எண்ணிய தெல்லாம் நனவாய் ஆக
ஏற்றிக் கூந்தலை முடிக்கிறாள்!

பாரதநாடு உலகின் ஒளியாய்ப்
பரவிட ஆணை விடுக்கிறாள்!
காரிருள் கழிந்து கதிரொளி மிளிரும்
கனவை உவந்து கொடுக்கிறாள்!

தேசமும் தெய்வமும் ஒன்றென நிறுவி
தேவியவள் வரம் அளிக்கிறாள்!
வேஷம் ஒழிந்திட, நேசம் மலர்ந்திட
வெற்றி மந்திரம் இசைக்கிறாள்!

ஏழ்மை, வறுமை, பசிப்பிணி அகற்றி
ஏற்றம் கண்டிட நினைக்கிறாள்!
தாழ்வுகள் அகற்றி சமத்துவம் காண
தன்னம்பிக்கையை விதைக்கிறாள்!
(நாள்:26.03.2002)
நன்றி: விஜயபாரதம் (26.04.2002)
புத்தாண்டு வாழ்த்தாக அனுப்பப்பட்டது.

Saturday, April 10, 2010

மரபுக் கவிதை - 95


புத்தாண்டை நோக்கி...4

இறைவனிடம் பிரார்த்திப்போம்!

விக்கிரம செல்கிறது
விஷு வருடம் வருகிறது.
வருடங்கள் மாறுவதால்
வாழ்க்கைக்குப் பயனென்ன?
வயதொன்று கூடுவதால்
வரப்போகும் பலனென்ன?

ஆண்டுகள் கழிகையிலே
அனுபவமும் பெருகட்டும்!
அனுபவமும் படிப்பினையும்
அடிப்படையாய் அமைந்தால் தான்
வாழ்வினிலே உயர்வு வரும்!
வையகமும் மகிழ்வு பெறும்!

பொருந்தாத கூட்டணிகள்,
புயல் காற்று, பூகம்பம்,
கலவரங்கள், இழப்புக்கள்,
கவலை தரும் ஊழல்கள்,
பயம் காட்டும் போர்ச்சூழல்,
பரிதவிக்கும் மனித இனம்!

இத்தனையும் இருந்தாலும்
இனிப்புக்கும் பஞ்சமில்லை!
விண்வெளியில் முன்னேற்றம்,
விளையாட்டில் சாதனைகள்,
பெருக்கெடுத்த தேசபக்தி,
பெருமிதமும் நமக்குண்டு!

நல்லவர்கள் முன்னணிக்கு
நாட்டினிலே வரும்போது
வல்லமை தான் கூடாதா?
வாட்டம் தான் நீங்காதா?
எதிர்காலம் இனிதாக
இறைவனிடம் பிரார்த்திப்போம்!
(நாள்: 11.04.2001)

Friday, April 9, 2010

மரபுக் கவிதை - 94


புத்தாண்டை நோக்கி... 5
52வது நூற்றாண்டே வருக!

மானிட வயது ஒருநூறு மட்டும்.
மானிடர் அறியார் பூமியின் வயதை!
உலகம் தோன்றிய காலம் முதலாய்
உள்ள சரித்திரம் யாரறிவாரோ?
பரிதியிலிருந்து வெடித்துக் கிளம்பி
பந்தாய் உருண்ட பூமியின் காலம்
பாரதர் அன்றி வேறெவர் அறிவார்?
பார்புகழ் கணிதம் நம்முடைத் தன்றோ?
கிறித்துவின் பிறப்பை முதலாய்க் கொண்டு
கிழிக்கும் கோட்டால் கிழிபடும் காலம்!
முகமது நபியை முதலாய்க் கொண்டு
முடித்திடும் காலக் கணிதமும் தவறே!
பற்பல அரசர் பெயர்களினாலே
பலவித ஆண்டுக் கணக்குகள் உண்டு.
ஆயினும் எதிலும் தெளிவுகள் இல்லை!
அதனால் காலக் கணக்கினில் தொல்லை!
பாரத காலக் கணிதம் மட்டும்
பாரின் வயதைத் தெளிவுடன் சொல்லும்!
எத்தனை ஆண்டு! எத்தனை யுகங்கள்!
எத்தனை கல்பம்! துல்லியக் கணிதம்!
இன்றைய வருடம் கலி யுகத்தினிலே
ஐம்பத் திருநூற்றாண்டின் துவக்கம்!
காலடியாலே மூவுல களந்த
வாமனன் வாழ்ந்த சத்திய யுகமும்,
அரக்கனை வென்று அறத்தினைக் காத்த
அனந்த ராமனின் திரேதா யுகமும்,
அல்லவை நீங்கி- நல்லவை ஓங்க
அறம் பல கூறிய துவாபர யுகமும்,
முடிந்தன; ஆயினும் உலகம் உருளும்-
முதலும் முடிவும் அற்ற வெளியினில்!
நடப்பது கலி யுகம்; நாம் ஓர் அணுவே!
நடக்கும் உலகம்- பற்பல கல்பம்!
இதுவே பாரத காலக் கணிதம்!
இதமாய்க் கூறும் மானிட சரிதம்!
ஐம்பத்திரு நூற்றாண்டினில் நுழையும்
கலியுக உலகைக் களிப்புடன் ஏற்போம்!
வரவேற்றிடுவோம்- புது நூற்றாண்டை!
வல்லவன் இறைவன்! வாழிய உலகம்!
(நாள்: 09.04.1999)
நன்றி: விஜயபாரதம் (16.04.1999)

.

Thursday, April 8, 2010

மரபுக் கவிதை - 93


புத்தாண்டை நோக்கி... 6
சித்திரையே வருக!

சித்திரையே வருக!
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்க வருக!
(சித்திரை)
போனதெல்லாம் போகட்டும்!
புதுவாழ்வு பிறக்கட்டும்!
எத்திசையும் நலமாக
எந்நாளும் சிறக்கட்டும்!

அவலங்கள் அழியட்டும்!
அன்பெங்கும் செழிக்கட்டும்!
அவனியிலே வாழுகிற
அனைவருமே மகிழட்டும்!

தோஷங்கள் ஒழியட்டும்!
தேசங்கள் இணையட்டும்!
தொன்றுதொட்ட இந்நாட்டு
மக்களெல்லாம் பிணையட்டும்

அழுக்காறு மடியட்டும்!
அமைதிப்பூ பூக்கட்டும்!
அன்பாலே ஆளுகிற
அருள்வெள்ளம் சுரக்கட்டும்!

சேதங்கள் குறையட்டும்!
தீண்டாமை மறையட்டும்!
எல்லார்க்கும் பொதுவாக
வேதங்கள் பறையட்டும்!
(சித்திரை)
எதிர்காலம் நமதென்று
எக்காளம் கூட்டட்டும்!
என்றென்றும் இனிதிளமை
திக்கெட்டும் நாட்டட்டும்!

சேறான அரசியலும்
தெளிவாகத் திருந்தட்டும்!
வேறான எண்ணங்கள்
வெளியாகா திருக்கட்டும்!

தோளுயர்த்தி, விடியலென
பூபாளம் பாடட்டும்!
தொன்மைக்கும் புதுமைக்கும்
புதுப்பாலம் கூடட்டும்!

வீரமனம் விளைய
விதிகள் பல தளிரட்டும்!
பாரதத்தின் பண்பாடு
பாங்குடனே மிளிரட்டும்!

இன்பத்தால், துன்பத்தால்
மனம் தளரா திருக்கட்டும்!
இனிமேலும் வருகின்ற
எதிர்காலம் எண்ணட்டும்!
(சித்திரை)
சித்திரையே வருக! எம்
நித்திரைக் கனவுகளை
நினைவாக்கி வருக!
(பவ ஆண்டு- நாள்: 14.04.1994)

நன்றி: ஓம்சக்தி (ஏப்ரல் -1999)

.

Wednesday, April 7, 2010

மரபுக் கவிதை - 92


புத்தாண்டை நோக்கி... 7

சித்திரை வருகுது!

சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது...
சக்தி பெருகிட, சாதனை வளர்ந்திட,
பக்தி பரவிட, பண்புகள் ஓங்கிட,
யுக்தி சிறந்திட, யுவக்களை பரவிட,
வக்கிரம் அழிந்திட, வல்லமை வென்றிட,
சுக்கில வருஷம் சுபமாய்க் கழிந்தது.
***
பிரமனின் தூதென புதியது வருகுது...
கரமது குவித்திடு - கடவுளை வேண்டிட!
எப்பொழுதும் பகை எதிரினில் சிதறிட,
இப்பொழுதை விட மேன்மைகள் ஓங்கிட,
வான்மழை வைத்திட, வாய்மை வளர்ந்திட,
ஈன்றவர் மகிழ்ந்திட- இளைஞர்கள் உயர்ந்திட,
நட்பு பெருகிட- நன்மைகள் நாடிட,
லட்சியம் உயர்ந்திட , நாடு சிறந்திட,
கரமது குவித்திடு! கடவுளை வேண்டிடு!
பிரமனின் தூதென புதியது வருகுது!
(நாள்: 14.04.1990)

Tuesday, April 6, 2010

மரபுக் கவிதை - 91


புத்தாண்டை நோக்கி... 8

சுக்கில வருஷ!

மடை திறக்க, வெள்ளம் வர, மாரியெனப் பொழிந்திடு நீ!
படை சிறக்க, பண்புடனே, பவனியென வந்திடு நீ!
தடை இறக்க, தன்மானத் தெளிவுடனே எழுந்திடு நீ!
சடை பறக்க ஆடுகிற சக்திபதி காத்திடவே!

இடையினிலே வந்திட்ட இழிப்பெயரைப் போக்கிடு நீ!
விடை கொடுத்த 'விபவ'வுடை வீதியிலே நடையிடு நீ!
நடை பயிலும் தீமைகளை விடை கொடுத்து விரட்டிடு நீ!
குடைஎனவே கிரிபிடித்த குழலரசன் காத்திடவே!

கொடை சிறக்க, கோ உயர, கோயிலென வெளிப்படு நீ!
உடைப்பெடுத்த ஒற்றுமையை ஒன்றாக இணைத்திடு நீ!
முடை குறைத்து, முழுமை பெற முனைப்புடனே செயல்படு நீ!
கடைக் கண்ணால் எரித்திடும் நங்காளியவள் காத்திடவே!

(நாள்: 14.04.1989)

Monday, April 5, 2010

மரபுக் கவிதை - 90


புத்தாண்டை நோக்கி... 9

விபவ வாழ்க!

'விபவ' பிறந்தது - விளைந்தன நன்மைகள்.
மழை பொழிந்தது- மண்ணும குளிர்ந்தது.
கலைகள் சிறக்கும்- கயமைகள் ஒழிந்திடும்.
திருமகள் அருளால் திளைத்திடுவோம் நாம்.
நயம் மிக்க 'விபவ'வின் நன்மைகள் ஓங்கிட
பாரதத் தாயைப் பணிந்து வணங்குவோம்!
(நாள்: 22.04.1988)

Sunday, April 4, 2010

வசன கவிதை - 53


புத்தாண்டை நோக்கி...10

அவலச்சுமை

இன்னும்
104 நாட்கள் இருக்கிறது*
புத்தாண்டு பிறக்க.

ஒரு நாளுக்கு
24 மணி நேரம்.
ஆக மொத்தம்
2596 மணி நேரம்
கழிந்தாக வேண்டும்.

ஒரு மணி நேரத்துக்கு
3600 வினாடிகள்.
104 நாட்களுக்கு
நீங்களே
கணக்கு போட்டுக்
கொள்ளுங்கள்.

அதற்குள் இப்படி
அவசரப்பட்டால்
எப்படி?

காலண்டரை
மாற்றிவிடுவதால்
புத்தாண்டு பிறந்து விடுமா?

கிழிந்துபோன
தாள்களில்
கழிந்துபோன
நாள்கள்
இருந்தன.
நாளுக்கு
அவ்வளவு தானா
மரியாதை?

இறந்தகாலத்தை
போகியிட்டு
புத்தாண்டில்
பொங்கலிட முடியாது.

இறந்த காலம் தான்
அனுபவம்.
காலச்சக்கரத்தின்
சரித்திரம்.

அடிமைத் தளையை
அறுப்பதற்காக
ஆருயிர்த் தியாகியர்
ஆகுதியானது
நமது சரித்திரம்.

யினும் அழுத்துகிறது-
அவலச்சுமையாய்
ஆங்கிலப் புத்தாண்டு.

பழைய தாள்களை
பறக்க விட்டதால்
வந்த வினை இது.
பஞ்சாங்கம் போல்
பாதுகாத்திருந்தால்
பரிதாபச்சூழல்
நேர்ந்திருக்காது.

வீட்டுப்பரணில்
தாத்தா காலப் பெட்டியில்
செல்லரித்துக் கிடக்கிறது -
60 வருடப்
பஞ்சாங்கம்.

அதனைக் கொஞ்சம்
தூசு தட்டுங்கள்.
பாதுகாப்பாக
பத்திரப் படுத்துங்கள்.

இன்னும்*
104 நாட்கள் இருக்கிறது
புத்தாண்டு பிறக்க.
அதற்கு இப்போதே
தயாராகுங்கள்!

(நாள்: 17.12.03)
நன்றி: விஜயபாரதம் (26.12.2003)
*குறிப்பு: ஜனவரியில் துவங்கும் ஆங்கிலப் புத்தாண்டைக் கண்டித்து (104 நாட்களுக்கு முன் பிரசுரம் ஆகும் வகையில் எழுதிய கவிதை இது.
.

Saturday, April 3, 2010

புதுக்கவிதை - 87


அணில்


இடிக்கும் இயந்திரம்
வந்தவுடன்
பக்தர்கள் மாயம்.
சாலையோர சிசுவாய்
மாறிவிட்டது
அரச மரத்தடி
பிள்ளையார் கோயில்.
வெட்டப்பட்ட கிளையை
சுற்றி வருகிறது
அணில்.

.

Friday, April 2, 2010

புதுக்கவிதை - 86


ஈன்ற வலி

தொலைதூர தேசத்தில்
பெற்ற மகன்.
முதியோர் இல்லத்தில்
பெற்ற வயிறு.
ஈன்ற பொழுதினும்
வலி வேறெது?
.

Thursday, April 1, 2010

புதுக்கவிதை - 85


குரோமசோம்


'உங்களுக்கு
ஒன்றும் தெரியாது'
சொல்கிறாள் மகள்.
எப்போதோ
என் தந்தையிடம்
நான் சொன்ன
அதே ஏற்ற இறக்கத்துடன்
சொல்கிறாள்
மகள்.
.

ஏதேதோ எண்ணங்கள்அன்புள்ள நண்பர்களுக்கு...

இன்றுடன், குழலும் யாழும் வலைப்பூ துவங்கி ஏழு மாதங்கள் நிறைவடைந்து விட்டன. இது வரையிலும் தினசரி கவிதைகளுடன் 'இன்றைய சிந்தனை' இடம் பெற்று வந்தது. இனி வரும் நாட்களில், இன்றைய சிந்தனைக்கு பதிலாக 'சிந்தனைக்கு' பகுதி, தேவையான இடங்களில் மட்டும் இடம் பெறும்.
உங்கள் கருத்துப் பரிமாற்றங்கள் என் கவிதைக்கு வலுவூட்டும்.
நன்றி.
-வ.மு.முரளி.