Thursday, September 30, 2010

கருவூலம்



பாரதி அமுதம்





தேடிச் சோறு நிதம் தின்று - பல
.....சின்னஞ்சிறுகதைகள் பேசி - மனம்
வாடத் துன்பம் மிக உழன்று- பிறர்
.....வாடப் பல செயல்கள் புரிந்து- நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடும்
.....கூற்றுக் கிரையெனப் பின்மாயும்- பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
.....வீழ்வேன் என்று நினைத்தாயோ?
-மகாகவி பாரதி
(யோகசித்தி-4)
.

Wednesday, September 29, 2010

உருவக கவிதை - 62


முக்கோணக் கவிதை - 3



.
.

ஒருசார்பு
தலைமை தாங்குபவரிடம் இருக்கக் கூடாதது
எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பது.
பிறரை முட்டாளெனக் கருதுவது.

தலைமைப்பண்பு
யாரையும் அரவணைப்பது
எல்லோரையும் தரமுயர்த்துவது
அன்பால் ஆள்வது

அன்பு
விருப்பு வெறுப்புகள் அற்றது
தன்னிச்சைப்படி இயங்காதது
தலைமைப்பண்பை வாழவைப்பது.
.

Tuesday, September 28, 2010

உருவக கவிதை - 61




முக்கோணக் கவிதை - 2








அகங்காரம்
தனக்கே எல்லாம் தெரியும் என்பது
எதிர்க்கருத்தை உதாசீனம் செய்வது
அதிகாரியாகவே மாறிக்கொள்வது.

உதாசீனம்
அறிவாளிகளும் களங்கப்படுவது
ஆதரவில்லாததால் ஒளிக்கப்படுவது
அதிகாரபலத்தால் ஒழிக்கப்படுவது

பரிதாபம்
ஆணவம் முன்பு மண்டியிடுவது
கண்டுகொள்ளாததைக் கண்டுகொள்ளாதது
அறிவே இல்லை என்று அறிவிப்பது.



.

Monday, September 27, 2010

உருவக கவிதை - 60






முக்கோணக் கவிதை






அதிகாரம்
கீழ்ப்படிபவர்களால் உருவாக்கப்படுவது
மீறுபவர்களால் உடைக்கப்படுவது
பேராசைக்காரர்கள் வசமிருப்பது.

பணிவு
அதிகாரத்தை ஆற்றுப்படுத்துவது
ஆசையற்றவர்கள் வெளிப்படுத்துவது
எல்லைகளை தாங்களே வகுத்துக் கொள்வது.


விருப்பம்
பணிய வேண்டும் என்று எதிர்பார்ப்பது
மீறுபவர்களை வெறுப்பது
அதிகாரத்தின் மூலமாய் இருப்பது.
.

Sunday, September 26, 2010

எண்ணங்கள்




உங்களுக்கும் பிடிக்கும்...



மாமன்னன் ராஜராஜன் சிவனுக்கு எழுப்பிய மாபெரும் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு நிறைந்து விழா கொண்டாடும் தருணம் இது. தஞ்சைப் பெரிய கோயில் குறித்த திருவாளர் தஞ்சை.கோபாலன் தொகுத்தளித்த கட்டுரை தமிழ் ஹிந்து இணையதளத்தில் வந்துள்ளது. கட்டுரையின் காலப்பொருத்தம் கருதி அதனை இங்கு இணைத்துள்ளேன்.
காண்க: தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் அற்புதம்


.

Saturday, September 25, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்




தஞ்சைப் பெரிய கோயில் ஆராய்ச்சிக்காகவே தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அளித்தவர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியம். பெரியகோயில் சிறப்புகள் குறித்து தமிழ் மரபு அறக்கட்டளைக்கு அவர் திருமதி சுபாஷினி ட்ரெம்மலுக்கு அளித்த நேர்காணல் இது. அரிய படங்கள், ஒளி- ஒலி கட்சிகளுடன் உள்ள இக்கட்டுரை, தற்போதைய கொண்டாட்ட காலத்தை ஒட்டி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

.

Friday, September 24, 2010

புதுக்கவிதை - 120



மக்காசோளம்
.
. .

மக்காசோளம் கேட்டாள் அருமை மகள்.
அதை 'மக்குகள்' சாப்பிடக் கூடாது என்றேன்.
நான் உங்களுக்கு கேட்கவில்லை என்றாள் அவள்.
..

Thursday, September 23, 2010

எண்ணங்கள்



உங்களுக்கும் பிடிக்கும்...



எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'குஷ்பு குளித்த குளம்' கட்டுரை, நமது சரித்திர அறிவை நகைச்சுவையுடன் அம்பலப்படுத்துகிறது. அவரது இணையதளத்தில் இருந்து சுட்ட கட்டுரை இது...


.

Wednesday, September 22, 2010

புதுக்கவிதை - 119



சாளரம்

. .
.
கன்னியர்
வானவில் கண்ட இடம்.
முதியவர்கள்
காற்று வாங்கிய இடம்.
சிசுக்களுக்கு
நிலவு காட்டிய இடம்

மாறிவிட்டது காலம்;
மாற்றிவிட்டது கொசு.


.

Tuesday, September 21, 2010

புதுக்கவிதை - 118


பழி ஓரிடம்...



பித்தமா, நலக்குறைவா?
சாளரத்தை எக்கி
முதியவர் திணறல்.

குமட்டலுடன் வீச்சம்
பரவும் பேருந்தில்
பல முகங்களில் அசூயை.

பயணிகள் எவருக்கும்
மதுக்கடைகள் மட்டுமே
கிடைக்கின்றன சபிக்க.

.

Monday, September 20, 2010

எண்ணங்கள்



உங்களுக்கும் பிடிக்கும்...


நண்பர் சேக்கிழான் தனது வலைப்பூவில் எழுதியுள்ள 'நான் கடவுள்' திரைப்பட விமர்சனம் 'தரித்திர நாராயண நம:' ... நண்பர்களின் பார்வைக்காக...

Sunday, September 19, 2010

புதுக்கவிதை - 117


தீர்த்த யாத்திரை




தொண்டரணி உசுப்ப
ரதமேறிக் கிளம்பினார் தலைவர்
'தீர்த்தம்' ஏற்றிய உற்சாகத்துடன்.

மாநாட்டில் வெள்ளமாய்
குவிந்தனர் தொண்டர்கள்
'தீர்த்தப்' பரவசத்துடன்.

மணல் வற்றிய
'தீர்த்த'நதி மைதானம் எங்கும்
புட்டிகளின் சிதிலங்கள்...
..

Saturday, September 18, 2010

புதுக்கவிதை- 116



ஆண்டவன் பாவம்





ஓங்கி உலகளந்த உத்தமன்
கோயில் உண்டியலை
எண்ணும் அதிகாரிகள்.

சக்கரப்படை கொண்ட
நாயகன் கருவறைமுன்
ஆயுதக் காவலர் பாதுகாவல்.

வெண்ணெய் திருடி உண்டவனின்
ஆலயச் சொத்துக்களை
திருடித் தின்கிறது அரசியல்.

.

Friday, September 17, 2010

எண்ணங்கள்

எல்லோர்க்கும் எளியவர் பிள்ளையார்
.
கொஞ்சம் மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணத்தில் நீரைக் குழைத்துப் பிடித்துவைத்தால் பிள்ளையார் தயாராகி விடுவார் அருள்பாலிக்க. எதுவும் கிடைக்கவில்லையா? களிமண் போதும். சிறிது வெல்லமும் அருகம்புல்லும் படைத்தால் போதும், இந்த யானைமுகக் கடவுளுக்கு. இது தான் விநாயகரின் பெருமை.
.
இவருக்கு மாபெரும் கோயில் கட்ட வேண்டியதில்லை. ஆற்றங்கரையோரமும் அரச மர நிழலிலும் வீற்றிருக்கும் தூயவர், குழந்தைமனம் கொண்ட பிள்ளையார். வெள்ளெருக்கு மாலை போதும், இவரை மகிழ்விக்க. காட்சிக்கு எளியவராகவும், பூசிக்க இனியவராகவும் இருப்பதால் தான், பாரதம் முழுவதும் முழுமுதற்கடவுளாக இவர் வணங்கப்படுகிறார்.
.
கணபதி வழிபாடு பாரதத்தில் பன்னெடுங்காலம் தொட்டே இருந்துவருகிறது. இதனை 'கணாபத்தியம்' என்ற வழிபாட்டுமுறையாக முறைப்படுத்தியவர், கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர். அதற்கு முன்னரே கணபதி வழிபாடு இருந்தமைக்கு பழமையான கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் கட்டியம் கூறுகின்றன.
.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு எழுந்த கந்தபுராணத்தில், குன்றக் குமரனின் காதல் கைகூட அவரது தமையனான கணேசன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
.
தமிழின் முதல் இலக்கண நூலான 'பேரகத்தியம்' நூலை எழுதிய குறுமுனி அகத்தியருடன் சிறுகுழந்தையாக கணேசன் நிகழ்த்திய தீராத விளையாட்டு, காவிரி நதியின் மூலத்துக்கு காரணமானது.
.
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் முப்புரம் எரிக்கக் கிளம்பியபோது, அவரது தேரச்சு முறித்து விளையாட்டு காட்டியவர் கணபதி. சிவன் கோயில்களில் என்றும் விக்னேஸ்வரனுக்கே முதல் மரியாதை அன்று முதல் இன்று வரை வழங்கப் படுகிறது. அதுபோலவே, மால்மருகனாக இருப்பதால், வைணவக் கோயில்களிலும் தும்பிக்கை ஆழ்வாராக கஜமுகக் கடவுள் வீற்றிருக்கிறார்.
.
மீனவ குலத்தில் தோன்றிய வியாச மகரிஷி சொல்லச் சொல்ல, தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி கணநாதர் எழுதியது தான், பல லட்சம் கவிதைகளைக் கொண்ட மகாபாரதம். இது பாரதம் முழுவதும் நிலவிவரும் நம்பிக்கை. எந்த ஒரு அரிய செயலானாலும், கணபதியை வணங்கிய பிறகே துவங்குவது என்ற மரபுக்கு இதுவும் காரணம்.
.
மனித வாழ்க்கை போராட்டம் நிரம்பியது; இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது. இன்பம் வரும்போது இறைவன் அருள் என்றும், துன்பத்தை இறைவன் அளிக்கும் சோதனை என்றும் ஏற்கும் பக்குவத்தை ஆன்மிகமே நமக்கு வழங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலில் மனிதஓடம் தறிகெடாமல் நிலைநிறுத்தும் நங்கூரமாகத் திகழ்வது இறைபக்தி. இதற்காகவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.
.
கடவுளர்களின் உருவகங்கள் அனைத்திலும் அடிப்படையான அம்சம் மானிட மேம்பாடாகவே திகழ்கிறது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் யானையின் முகத்துடன் அருளுவதால் அனைவருக்கும் அவரைப் பிடித்துப் போகிறது.
.
துயரத்தில் உழலும்போது மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது. தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுது முறையிட ஒரு தாயுள்ளம் தேவைப்படுகிறது. நீரில் மூழ்கியவனுக்கு தற்காப்புக்கு உதவும் மரக்கட்டை கிடைத்தாலே முழுபலத்துடன் போராடி உயிர் தப்புகிறான். அவனுக்கு மகிழ்ச்சி தருபவரே ஆறுதலைத் தர முடியும். அந்த வகையில் தான், வினைகள் நீக்கும் விநாயக வழிபாடு, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறது.
.
விடுதலைப் போராட்டக் காலத்தில், மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், மகாராஷ்டிரத் தலைவர் பால கங்காதர திலகர். அவர்தான், வீட்டு வழிபாடாக இருந்த கணபதி உற்சவத்தை நாட்டு உற்சவமாக்கியவர்.
.
'சர்வஜனிக் கணேஷோத்சவம்' என்ற பெயரில் களிமண் பிள்ளையார்களை தெருக்களில் பிரதிஷ்டை செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார் திலகர். இன்று விநாயக சதுர்த்தி மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட திலகர் தான் ஆதர்ஷமாகத் திகழ்கிறார்.
.
அந்நாளில் இறைபக்தியும் கூட, நாட்டுவிடுதலைக்கு உரமூட்டும் கருவியாகவே திகழ்ந்தது. ''விடுதலை கூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம்'' என்று தமிழகத்தின் மகாகவி பாரதி பாடியது அதனால்தான். நாமும் அந்தத் தும்பிக்கையானைத் தொழுதேத்தி, நமது துயர் களைவோம். நாடு நலம் பெற, அந்த ஐந்துகரத்தனை வணங்குவோம்; கவலைகள் நீங்க, கரியமுகத்தவனின் கழல் பணிவோம்!
.
நன்றி: தினமணி (கோவை-11.09.2010)
அருள்புரிவாய் கணநாதா- விநாயகர் சதுர்த்தி விளம்பரச் சிறப்பிதழ்
.

Thursday, September 16, 2010

புதுக்கவிதை - 115


எதற்கு வம்பு?



மல்லாந்து கிடக்கிறார் முதியவர் ...
பசி வாட்டமோ,
ரத்த அழுத்தக் குறைபாடோ,
வெயில் பாதிப்போ,
மனநிலை பிறழ்வோ,
என்று
பரிதாபப்பட முடியவில்லை.
மது மயக்கமாகவும்
இருக்கக் கூடும்.
எதற்கு வீண் வம்பு?
.

Wednesday, September 15, 2010

சிந்தனைக்கு


கருவூலம்




நெடு மதில், நிரை ஞாயில்,
அம்பு உயில், ஆயில், அருப்பம்,
தாண்டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப
,
வெற்றமோடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர்தம் கொண் ஆகுவை...
-மாங்குடி மருதனார்
(மதுரைக் காஞ்சி:66-74)
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டியனின் புகழைப் பாடியது.
.

Tuesday, September 14, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
-திருவள்ளுவர்
(கள்ளாமை- 282)
.

Monday, September 13, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

-திருவள்ளுவர்
(தவம்-269)
.

Sunday, September 12, 2010

சிந்தனைக்கு



குறள் அமுதம்



அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று .

-திருவள்ளுவர்
(புலால் மறுத்தல் -259 )
.

Saturday, September 11, 2010

மரபுக் கவிதை - 108



கணநாதா!




கணநாதா, கணநாதா
ஓம் கணநாதா, கணநாதா!
கணநாதா, கணநாதா
ஸ்ரீ கணநாதா, கணநாதா!

சங்கரன் மைந்தா கணநாதா!
சங்கடம் தீர்ப்பாய் கணநாதா!
அம்பிகை பாலா கணநாதா!
அபயம் அளிப்பாய் கணநாதா!
(கணநாதா)

வினைகள் நீக்கும் விநாயகா!
வெற்றியளிக்கும் வேழமுகா!
தேவர்கள் தலைவா கணநாதா!
தேசம் காத்திட அருள்புரிவாய்!
(கணநாதா)

வேதம் எழுதிய முதல்வோனே!
வேதனை ஓட்டும் வேதியனே!
சந்திரசூடா கணநாதா!
சரணமளித்தே அருள்புரிவாய்!
(கணநாதா)

ஆறுமுகன் அண்ணா கணநாதா!
அறிவுச்சுடரே கணநாதா!
துயரம் துடைக்கும் தூமணியே!
தும்பிக்கையால் அருள்புரிவாய்!
(கணநாதா)

சங்கரன் மைந்தா கணநாதா!
சங்கடம் தீர்ப்பாய் கணநாதா!
அம்பிகைபாலா கணநாதா!
அபயம் அளிப்பாய் கணநாதா!
(கணநாதா)
.
இன்று: ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
.

Friday, September 10, 2010

மரபுக் கவிதை - 107


விநாயக சதுர்த்தி




சங்கரன் மைந்தன்
சதுர்கரத்தானை
சதுர்த்தியில் வணங்க
சங்கடம் தொலையும்.

அகத்தியருக்கு
அருளொளி தந்த
அற்புத தெய்வம்
அபயம் தருவார்.

கணபதிசாமி
கழல்களைப் பற்ற
கவலைகள் தீரும்
களிப்புருவாகும்.

தேசிய ஒற்றுமைத்
தேவை உணர்ந்து
தேடிய திலகர்
தேவனைச் சொன்னார்.

தேவர்கள் போற்றும்
தேவியின் புதல்வன்
தேசம் காத்திட
தேர்களில் பவனி.

தெருக்களிலெல்லாம்
தெய்விகக் காட்சி
தெம்பினை வழங்கும்
தெளிவுறு சாட்சி.

பற்பல சதி
பலவித மொழிகள்
பரவிய நாட்டில்
பரவச ஒருமை.

இந்திய நாட்டை
இந்து மதத்தை
இந்துவின் குமரன்
இனிதுறக் காப்பான்.

ஆனைமுகத்தான்
ஆதரவுண்டு
ஆவணி சதுர்த்தி
ஆசிகளுண்டு.
குறிப்பு: நாளை ஸ்ரீ விநாயக சதுர்த்தி
நன்றி: விஜயபாரதம் (20.09.1996)
.

Thursday, September 9, 2010

சிந்தனைக்கு


பாரதி அமுதம்




ஓம்சக்தி ஓம்சக்தி சக்தி ஓம் - பராசக்தி
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்!

கணபதி ராயன் - அவனிரு
...காலைப் பிடித்திடுவோம்
குணமு யர்ந்திடவே - விடுதலை
...கூடி மகிழ்ந்திடவே!...
-மகாகவி பாரதி
(ஆறு துணை)
.

Wednesday, September 8, 2010

உருவக கவிதை - 59


பயன்மர இலக்கணம்




மராமரம் காவியம் தந்தது.
மாமரம் கனி தருகிறது.
மரம் எல்லாம் தரும்.
பயன்மரம் வினைத்தொகை;
மனிதர்கள் மரங்களின்
எச்சங்கள்.

உலகம் என்ற ஆகுபெயரில்
மானிடர்கள் வெட்டும்
மரங்களின் வேர்களில் கசியும்
தாய்மையின் ஈரம்.
நிலம் அறியும் உருவகம்:
கோடரிகளுக்கு காம்பு
மரமல்ல.

நுனிக்கிளையில் அமர்ந்து
அடிமரம் வெட்டும்
உவமைத்திறன்
ஓரறிவு மரத்திற்கு
கிடையாது.

மரங்களை இனியும்
மக்கட்பண்புக்கு
உவமை கூறாமல் இருக்கலாம்.
அரம் போலும் கூர்மை
நமக்கு நாமே அறுத்துக்கொள்ள அல்ல.
.

Tuesday, September 7, 2010

புதுக்கவிதை - 114


பிச்சைக்காரர்கள்


நகரம் முழுவதும் விரட்டிப் பிடித்த
யாசகர்களிடம் கெஞ்சுகிறார்கள
அதிகாரிகள்.

எங்கள் தொழிலில்
கை வைக்காதீர்கள் என
கெஞ்சுகிறார்கள் யாசகர்கள்.

ஆதரவற்றோர் இல்லத்திற்கு
யாசகரைப் போஷிக்கவென
ஒதுக்கிய நிதிக்கு
புகைப்படம் எடுத்தாயிற்று;
நிருபர்கள் சென்றாயிற்று.

இனி துரத்திவிடலாம்
பிச்சைக்காரர்களை...

.

Monday, September 6, 2010

எண்ணங்கள்

அத்தனைக்கும் ஆசைப்படும் காங்கிரஸ்

கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற பழமொழி, தமிழக காங்கிரஸ் கட்சிக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. கோவையில் கடந்த சனிக்கிழமை நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டம், அக்கட்சியினரின் காமராஜர் ஆட்சிக் கனவுகளுக்கு தூபம்போட்டது. அதேசமயம், திமுக.வுடனான கூட்டணியை சுகமான சுமையாகத் தாங்க வேண்டிய கட்டாயம் இருப்பது, தலைவர்களின் அடக்கமான பேச்சில் வெளிப்பட்டது.

முன்னாள் நிதியமைச்சரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சி.சுப்பிரமணியத்தின் நூற்றாண்டை ஒட்டி,கோவையில் பிரத்யேகமாக நடந்த விழாவில் சி.எஸ். நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. இதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, காங்கிரஸ் கட்சியின் 125-வது ஆண்டுவிழா, சி.எஸ். நூற்றாண்டுவிழா பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இதற்காக, கோவை நகரின் பல பகுதிகளில் பெரிய அளவிலான கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.வீ.தங்கபாலு, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல்வேறு கோஷ்டியினரின் வரவேற்பு விளம்பரங்கள், திராவிடக் கட்சிகளுக்கு போட்டியாக வைக்கப்பட்டிருந்தன. இந்த விளம்பரங்களில் மரியாதைக்குரிய பெரியவர் சி.சுப்பிரமணியத்தைத் தேட வேண்டியிருந்தது.

"விரலுக்கேற்ற வீக்கம்' போல, காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் திரண்டிருந்தது. இதையே பல்லாயிரக் கணக்கான தொண்டர்கள் குழுமிவிட்டதாக, மேடையில் முழங்கியவர்கள் குறிப்பிட்டனர். பல கோஷ்டியினர் இந்தப் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தும் கூட, நிகழ்ச்சி நடந்த சிறு மைதானம் நிறைந்தது அவர்களுக்கு பூரிப்பை அளித்தது. ஆனால், வராத காங்கிரஸ் கோஷ்டியினர் குறித்த கவலையே எங்கும் தென்படவில்லை.

கட்சி பொதுக்கூட்ட அழைப்பிதழில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் பெயர் விடுபட்டது அவரது ஆதரவாளர்களுக்கு அதிருப்தி அளித்தது. அதன்விளைவாக, விழாவில் மாநிலத்தலைவர் கே.வீ.தங்கபாலுவுக்கு கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்ததால், இளங்கோவன் ஆதரவாளர்கள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் காரணமாக, ஈவிகேஎஸ்.இளங்கோவனும் அவரது ஆதரவாளர்களும் இந்த விழாவைப் புறக்கணித்தனர்.

கோவை மாநகர மேயராக இருப்பவர் ஆர்.வெங்கடாசலம்; முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுவின் தீவிர ஆதரவாளர். பிரபுவுக்கு தகுந்த முக்கியத்துவம் தராததால், இவரும், பிரபு ஆதரவாளர்களும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தைப் புறக்கணித்தனர். விமானநிலையம் சென்று பிரணாப் முகர்ஜியை வரவேற்ற கோவை மேயர், நாணய வெளியீட்டு விழாவிலும் கலந்துகொள்ளவில்லை; பொதுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. மாநகரின் முதல்குடிமகன் தங்கள் கட்சிக்காரராக இருந்தும், அவர் வராதது குறித்து யாரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை.

மற்றொரு மத்திய அமைச்சரான ஜி.கே.வாசன் தரப்பினரும், தங்கள் தலைவருக்கு உரிய கெüரவம் தரப்படாததால், இந்நிகழ்ச்சிகளைப் புறக்கணித்தனர். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கோவை தங்கம் (வால்பாறை), விடியல் சேகர் (காங்கயம்), ஆர்.எம்.பழனிசாமி (மொடக்குறிச்சி) ஆகியோரது புறக்கணிப்பு காரணமாக, மக்கள் பிரதிநிதிகள் பலர் இருந்தும் பயனின்றி விழா நடந்தது. சிதம்பரம் ஆதரவாளரான எம்என்.கந்தசாமி (தொண்டாமுத்தூர்) மட்டுமே விழாவில் பங்கேற்றார்.

மகாத்மா காந்தியின் ஓர் அறைகூவலுக்காக, வீடு,வாசல், குடும்பம் அனைத்தையும் விட்டுவிட்டு ராட்டைக்கொடி ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நிறைந்த காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலை, அழைப்பிதழில் பெயரில்லை என்பதற்காக கோஷ்டிகானம் இசைக்கும் அளவுக்கு தாழ்ந்துவிட்டது வேதனைதான்.

இத்தனைக்கும் காரணம், அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்லாத மாநிலத் தலைமையே என்றாலும், சி.சுப்பிரமணியம் என்ற மகத்தான மனிதருக்காகவேனும், காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கோஷ்டி மனப்பான்மையைக் கைவிட்டு இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும்.

பொதுக்கூட்டத்தில் பேசிய பலரும், காங்கிரஸ் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று முழங்கினர்; காமராஜர் ஆட்சியை மீண்டும் அமைக்க பலர் சூளுரைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தமிழகத்தில் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான கடும் முயற்சியை தமிழக காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டும்' என்று உருவேற்றினார்.

இறுதியாகப் பேசிய ப.சிதம்பரமும், "தமிழகத்தில் அடுத்த தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு இடம்தரும் அரசு அமையும்' என்று பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டு என்பதை அவர் சொல்லவில்லை.

திமுக கூட்டணி ஆட்சியை "வலி'ப்படுத்தியதாலேயே ஈவிகேஎஸ்.இளங்கோவன் இந்நிகழ்ச்சிகளில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதேசமயம், பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள், அதிமுக.வை விமர்சிப்பதைத் தவிர்த்தனர். மாநில அரசின் நலத்திட்டங்கள் பல மத்திய நிதியால் நடப்பதை சிலர் குறிப்பிட்டனர்.

எது எப்படியோ, காங்கிரஸ் கட்சியினருக்கு மிகுந்த உத்வேகம் அளித்திருக்க வேண்டிய கோவை பொதுக்கூட்டம், வெறும் சம்பிரதாய நிகழ்வாக மாறிவிட்டது. ஆயினும், காமராஜர் ஆட்சி, மாநில அரசில் பங்கு, கூட்டணி அரசு உள்ளிட்ட முழக்கங்களுக்கு காங்கிரஸ் தலைவர்கள் குறை வைக்கவில்லை.

அரசியல்கட்சி என்றால் ஆட்சிக்கனவு இருப்பதில் தவறில்லை. ஆனால் என்ன செய்ய? ஆளுக்கொரு கோஷ்டி, நாளுக்கொரு சண்டை என்று தொடரும்போது, கனவு நனவாவது எப்படி?
ஆசை இருக்கிறது ஆட்சியைப் பிடிக்க. ஆனால் அதிர்ஷ்டம் இருப்பதோ கோஷ்டியாய் பிரிய...
.
நன்றி: தினமணி (சென்னை பதிப்பு; அரசியல் அரங்கம் - 04.09.2010)
.

Sunday, September 5, 2010

சிந்தனைக்கு

கருவூலம்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
...திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை, அணி புதுவைப்
...பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
...இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
...எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.
-ஆண்டாள்
(திருப்பாவை-30)
.

Saturday, September 4, 2010

வசன கவிதை - 78




புன்னகைப் பூக்கள்



சிலரது புன்னகை
மல்லிகைப் பூக்கள் போல...
அன்பிற்குரியவர்களின் புன்னகை
நம்முடனும் கூடவே வரும்
இனிய நறுமணம் போல.

சிலரது புன்னகை
ரோஜாப் பூக்கள் போல...
தூரத்தில் முள்ளாய்த் தெரிந்தவர்கள்
நெருங்கிப் புன்னகைக்கையில்
பூக்கள் ஆகிவிடுகிறார்கள்.

சிலரது புன்னகை
ஊமத்தைப் பூக்கள் போல...
வாழ்வின் வெறுமையை
சிறு புன்னகையால்
ஒதுக்கும் லாவகம்
கொண்டவர்கள் இவர்கள்.

சிலரது புன்னகை
முல்லைப் பூக்கள் போல...
அரும்புகளைத் தொடுத்தெடுத்து
தூவுவது போல-
பள்ளிப்பருவத்தில்
யாரும் பார்த்திருக்கலாம்.

சிலரது புன்னகை
செம்பருத்திப் பூக்கள் போல...
வாழ்வின் கட்டங்களை
அனுபவித்து முடித்த
முதியவர்களிடம் குசலம்
விசாரித்தவர்களுக்குத் தெரியும்.

சிலரது புன்னகை
தாமரை மொட்டுக்கள் போல...
கன்னத்தில் குழிவிழ
கள்ளமின்றி சிரிக்கும்
மழலைகள் போல...

சிலரது புன்னகை
தாழம்பூ மடல் போல...
எப்போதாவது அரிதாக
இருந்தாலும்
எங்கும் மணக்கும்.

எந்தப் புன்னகையும் அழகானது...
சூழலை மணமாக்குவது...
மனதை குணமாக்குவது...
வாழ்வை மாலை ஆக்குவது...
மனிதரை சோலை ஆக்குவது...
அதிகாலைப் பனி படர்ந்த
தும்பைப் பூக்கள் போல...
..

Friday, September 3, 2010

எண்ணங்கள்



உங்களுக்கும் பிடிக்கும்...


எழுத்தாளர் ஜெயமோகன் உதகையில் நடத்திய இலக்கிய சந்திப்பு குறித்த நண்பர் திரு. ஜடாயுவின் கட்டுரை, தமிழ் ஹிந்து இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரை எனது வலைப்பூ நண்பர்களுக்காக..
------------------------------------------------------------------------

Thursday, September 2, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை; பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
-திருவள்ளுவர்
(அருள் உடைமை- 247)

Wednesday, September 1, 2010

மரபுக் கவிதை - 106


கண்ணனின் புன்னகை




கன்னம் குழிந்திடு கவின்மிகு காட்சி
கன்னலை உருவகப்படுத்தும்;
இன்பம், துன்பம் இரண்டும் நிகரென
இனியவன் புன்னகை நிறுவும்!

அண்டம் முழுவதும் விரவியவன் யான்
அனைத்தும் நானெனக் குழியும்;
'நீயும் நான்' எனும் நித்திய உண்மை
நிர்மலமாகவே தெரியும்!

தென்றல் தழுவிடு மெல்லிய உணர்வை
தெளிவுடன் எளிதாய் நல்கும்;
புரிபவையும் நான்; அரியவையும் நான்;
புன்னகையும் நான் - என்கும்!

குறிப்பு: இன்று கோகுலாஷ்டமி.
.