Friday, September 17, 2010

எண்ணங்கள்

எல்லோர்க்கும் எளியவர் பிள்ளையார்
.
கொஞ்சம் மஞ்சள்பொடி அல்லது பசுஞ்சாணத்தில் நீரைக் குழைத்துப் பிடித்துவைத்தால் பிள்ளையார் தயாராகி விடுவார் அருள்பாலிக்க. எதுவும் கிடைக்கவில்லையா? களிமண் போதும். சிறிது வெல்லமும் அருகம்புல்லும் படைத்தால் போதும், இந்த யானைமுகக் கடவுளுக்கு. இது தான் விநாயகரின் பெருமை.
.
இவருக்கு மாபெரும் கோயில் கட்ட வேண்டியதில்லை. ஆற்றங்கரையோரமும் அரச மர நிழலிலும் வீற்றிருக்கும் தூயவர், குழந்தைமனம் கொண்ட பிள்ளையார். வெள்ளெருக்கு மாலை போதும், இவரை மகிழ்விக்க. காட்சிக்கு எளியவராகவும், பூசிக்க இனியவராகவும் இருப்பதால் தான், பாரதம் முழுவதும் முழுமுதற்கடவுளாக இவர் வணங்கப்படுகிறார்.
.
கணபதி வழிபாடு பாரதத்தில் பன்னெடுங்காலம் தொட்டே இருந்துவருகிறது. இதனை 'கணாபத்தியம்' என்ற வழிபாட்டுமுறையாக முறைப்படுத்தியவர், கி.மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர். அதற்கு முன்னரே கணபதி வழிபாடு இருந்தமைக்கு பழமையான கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் கட்டியம் கூறுகின்றன.
.
தமிழ்க் கடவுளான முருகனுக்கு எழுந்த கந்தபுராணத்தில், குன்றக் குமரனின் காதல் கைகூட அவரது தமையனான கணேசன் நிகழ்த்தும் திருவிளையாடல்கள் அழகாக வர்ணிக்கப்படுகின்றன.
.
தமிழின் முதல் இலக்கண நூலான 'பேரகத்தியம்' நூலை எழுதிய குறுமுனி அகத்தியருடன் சிறுகுழந்தையாக கணேசன் நிகழ்த்திய தீராத விளையாட்டு, காவிரி நதியின் மூலத்துக்கு காரணமானது.
.
சைவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் முப்புரம் எரிக்கக் கிளம்பியபோது, அவரது தேரச்சு முறித்து விளையாட்டு காட்டியவர் கணபதி. சிவன் கோயில்களில் என்றும் விக்னேஸ்வரனுக்கே முதல் மரியாதை அன்று முதல் இன்று வரை வழங்கப் படுகிறது. அதுபோலவே, மால்மருகனாக இருப்பதால், வைணவக் கோயில்களிலும் தும்பிக்கை ஆழ்வாராக கஜமுகக் கடவுள் வீற்றிருக்கிறார்.
.
மீனவ குலத்தில் தோன்றிய வியாச மகரிஷி சொல்லச் சொல்ல, தனது தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி கணநாதர் எழுதியது தான், பல லட்சம் கவிதைகளைக் கொண்ட மகாபாரதம். இது பாரதம் முழுவதும் நிலவிவரும் நம்பிக்கை. எந்த ஒரு அரிய செயலானாலும், கணபதியை வணங்கிய பிறகே துவங்குவது என்ற மரபுக்கு இதுவும் காரணம்.
.
மனித வாழ்க்கை போராட்டம் நிரம்பியது; இன்பமும் துன்பமும் மாறி மாறி வருவது. இன்பம் வரும்போது இறைவன் அருள் என்றும், துன்பத்தை இறைவன் அளிக்கும் சோதனை என்றும் ஏற்கும் பக்குவத்தை ஆன்மிகமே நமக்கு வழங்குகிறது. வாழ்க்கை என்னும் கடலில் மனிதஓடம் தறிகெடாமல் நிலைநிறுத்தும் நங்கூரமாகத் திகழ்வது இறைபக்தி. இதற்காகவே புராணங்கள் உருவாக்கப்பட்டன.
.
கடவுளர்களின் உருவகங்கள் அனைத்திலும் அடிப்படையான அம்சம் மானிட மேம்பாடாகவே திகழ்கிறது. குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் யானையின் முகத்துடன் அருளுவதால் அனைவருக்கும் அவரைப் பிடித்துப் போகிறது.
.
துயரத்தில் உழலும்போது மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது. தங்கள் கஷ்டத்தைச் சொல்லி அழுது முறையிட ஒரு தாயுள்ளம் தேவைப்படுகிறது. நீரில் மூழ்கியவனுக்கு தற்காப்புக்கு உதவும் மரக்கட்டை கிடைத்தாலே முழுபலத்துடன் போராடி உயிர் தப்புகிறான். அவனுக்கு மகிழ்ச்சி தருபவரே ஆறுதலைத் தர முடியும். அந்த வகையில் தான், வினைகள் நீக்கும் விநாயக வழிபாடு, அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து வருகிறது.
.
விடுதலைப் போராட்டக் காலத்தில், மக்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைத்தவர் மகாத்மா காந்தி. அவருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர், மகாராஷ்டிரத் தலைவர் பால கங்காதர திலகர். அவர்தான், வீட்டு வழிபாடாக இருந்த கணபதி உற்சவத்தை நாட்டு உற்சவமாக்கியவர்.
.
'சர்வஜனிக் கணேஷோத்சவம்' என்ற பெயரில் களிமண் பிள்ளையார்களை தெருக்களில் பிரதிஷ்டை செய்து, ஆங்கிலேயருக்கு எதிராக மக்களை ஒருங்கிணைத்தார் திலகர். இன்று விநாயக சதுர்த்தி மக்கள் விழாவாகக் கொண்டாடப்பட திலகர் தான் ஆதர்ஷமாகத் திகழ்கிறார்.
.
அந்நாளில் இறைபக்தியும் கூட, நாட்டுவிடுதலைக்கு உரமூட்டும் கருவியாகவே திகழ்ந்தது. ''விடுதலை கூடி மகிழ்ந்திடவே கணபதிராயன் காலைப் பிடித்திடுவோம்'' என்று தமிழகத்தின் மகாகவி பாரதி பாடியது அதனால்தான். நாமும் அந்தத் தும்பிக்கையானைத் தொழுதேத்தி, நமது துயர் களைவோம். நாடு நலம் பெற, அந்த ஐந்துகரத்தனை வணங்குவோம்; கவலைகள் நீங்க, கரியமுகத்தவனின் கழல் பணிவோம்!
.
நன்றி: தினமணி (கோவை-11.09.2010)
அருள்புரிவாய் கணநாதா- விநாயகர் சதுர்த்தி விளம்பரச் சிறப்பிதழ்
.

No comments:

Post a Comment