Monday, November 30, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

-சுவாமி விவேகானந்தர்.

வசன கவிதை - 29


கண் மேல் திரை

கடியர்களின் விமர்சனமும்
கடியாகத் தான் இருக்கும்;
நல்லவன் கண்களுக்கு மட்டுமே
நல்லவன் தட்டுப்படுவது போல.
தன்னம்பிக்கை கொண்டவன் நான்.

நீ கடியன் என்று சொல்லவில்லை;
ரசிக்கத் தான் உனக்கு தெரியவில்லை.

உன் கண்களின் மேல்
'கடித்திரை' விழுந்திருக்கிறது.
பரவாயில்லை-
அதையும் ஊடுருவும்
கவிதை என்னிடம் இருக்கிறது.

'கடி' என விமர்சிப்பது
கடினமல்ல-
கவிதை எழுதுவது கடினம்.
புரிந்துகொள்;
மேலும் புண்படுத்தாதே.

கவிதை செத்துவிடும்.

குறிப்பு: பாலிடெக்னிக்கில் படித்த போது எனது கவிதையை படிக்காமலே இகழ்ந்த
நண்பனுக்கு எழுதிய கவிதை இது. எழுதிய நாள்: 08.02.1989

Sunday, November 29, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே!
-பட்டினத்தார்.

புதுக்கவிதை - 46



சாஸ்வத சமதர்மம்

எரிந்து கொண்டிருந்தது அது.
நேற்றுவரை அது
அவராக இருந்தது.
அவர் - கோடீஸ்வரர்.

அருகிலேயே
அதுவும் எரிந்தது.
இன்று காலை அது
அவனாக இருந்தது.
அவன்- அநாதை.

நாளை
இரு சவச் சாம்பல்களும்
மண்ணில் கலந்திருக்கும்.

வெட்டியான்
காத்திருக்கிறான் -
நாளை வரப் போகும்
பிணங்களுக்காக.
நன்றி: விஜய பாரதம் (06.11.1998)
.

Saturday, November 28, 2009

இன்றைய சிந்தனை



கருவூலம்


....புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...

-மாணிக்கவாசகர்

(திருவாசகம் - சிவ புராணம்)

வசன கவிதை - 28


மரித்த மனங்கள்

அமைதிக்காகப்
பறக்கவிட
அடைக்கப்பட்டிருக்கும்
கூண்டுப் புறாக்கள்.

எதிர்காலத்தை
சீட்டாய் எடுக்கும்
சிறகு முறிந்த
பச்சைக் கிளிகள்.

எடையைக் கூட்டி
விலையை ஏற்ற
ஊட்டம் ஏற்றிய
கறிக் கோழிகள்.

காவு கொடுக்க
காத்துக் கிடக்கும்
மாலையிட்ட
சாமியாடுகள்.

வாசனைத் திரவியம்
சுரப்பதற்காக
வளர்க்கப்படும்
புணுகுப் பூனைகள்.

நடுக்காட்டுக்குள்
புலியைப் பிடிக்கும்
தூண்டில் புழுவாய்
செம்மறியாடுகள்.

ஊக்க மருந்தை
செலுத்திச் செலுத்தி
ரேஸில் வென்ற
நொண்டிக் குதிரைகள்.

வாழ்நாள் முழுவதும்
வண்டியிழுத்தும்
அடிமாடாகும்
அற்பப் பிராணிகள்.

பந்தயம் கட்டி
பரவசம் எய்திட
கத்திக் காலுடன்
சிலிர்க்கும் சேவல்கள்.

பால்வினை நோயை
முறிக்கும் மருந்தின்
சோதனைச் சாலையாய்
ஜோடிக் குரங்குகள்.

வீட்டின் அழகைக்
கூட்டும் வகையில்
கண்ணாடி ஜாடியில்
நீந்தும் மீன்கள்.

மனித நேயத்தை
குத்தகைக்கு எடுத்த
மரித்துப் போன
மனித மனங்கள்.

நன்றி: விஜயபாரதம் (21.02.2003)

Friday, November 27, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதை காண்பதென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டு முரையாயோ - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்...
-மகாகவி பாரதி
(பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்)

புதுக்கவிதை - 45


யாருக்கு மெத்தை?

'கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை'-
குழந்தைப் பிராயத்தில்
நெக்குருகச் செய்த
அதே சரண கோஷம்
துணுக்குறச் செய்கிறது.
மனக்கண்ணில்
நிழலாடுகின்றன
முள்வேலி முகாம்கள்.

விரதமிருந்து நடந்த
அதே பம்பைப் படுகை
முள்ளி வாய்க்காலாய்
தென்படுகிறது.

பெருவழியில் எதிர்ப்படும்
மரங்களில்
வன்னி மரங்களின்
தரிசனம்.

தேக பலமும் ஞான பலமும்
நல்கும்
புலி வாகனனை நோக்கி
புண்ணிய யாத்திரை.

கல்லும் முள்ளும்
யாருக்கு மெத்தை?
ஈழத் தமிழ் அகதியை
எண்ணுந்தோறும்
சங்கடப் படுத்துகிறது
சரண கோஷம்.

Thursday, November 26, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


அடுத்த நபர் அவரது கொள்கையில் நிற்கட்டும். திருத்தவே முடியாத மகா முட்டாள்களும், நியாயத்தைப் பார்க்க வைக்க முடியாத பரம் மூடர்களும் இந்த உலகத்தில் உளர். உங்களது காலத்தையும் பிராணனையும் அவர்கள் விஷயத்தில் வீணாக்காதீர்கள். சோர்வு தான் மிஞ்சும்; பகைமை வளரும்...
இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்று நம்புங்கள். அனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக 'இந்த வியவாரிக உலகம் வெறும் கனவுலகமே' என்று கூறியுள்ளனர். அவர்கள், தாங்களே அனுபவித்து உணர்ந்த பிறகே, 'இந்த உலகம் அநித்யம் தூய உணர்வே நித்யம்' என்று கூறியுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல; அல்லது நீங்கள் கெட்டிக்காரர்களும் அல்ல. கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும்போது கூட, 'இதுவனைத்தும் பொய்யே; நான் தூய உணர்வு சொரூபி. நானே கடவுள்' என்று சொல்லுங்கள்.
- சுவாமி சிவானந்தர்

உருவக கவிதை - 15


நான் அவர் இல்லை

நான்
எழுதினால் வசனம்
மடக்கி மடக்கி
அரைக்கால் புள்ளிகளுடன்
எழுதினால் கவிதை.
பேசினால் மாநாடு
ஏசினால் பொதுக்கூட்டம்.

நான்
நடத்தினால் நல்லாட்சி
செய்தால் ராஜதந்திரம்
தொண்டர்களுக்கு என் பெயரே
மறக்கக் கூடாத மந்திரம்.

நான்
தீட்டினால் திட்டம்
திட்டினால் வேலைநிறுத்தம்
சேர்ந்தால் கூட்டணி
சேர்த்தால் கட்சிநிதி.

நான்
நினைத்தால் செம்மொழி
சொன்னால் பொன்மொழி
இணைத்தால் குடும்பநலம்
இணைந்தால் தேசநலம்.
பெற்றால் பிள்ளை
மற்றதெலாம் நொள்ளை.

நான்
அணிந்தால் மருத்துவம்
கழகம் முழுவதும்
அறிந்த மகத்துவம்.
அரற்றினால் அரசியல்
அளித்தால் பதவி.
தூற்றுவோருக்கும் கிடைக்கும்
என் உதவி.

நான்
முழங்கினால் கொள்கை
தயங்கினால் கட்டுப்பாடு;
சீறினால் தன்மானம்
ஆறினால் கண்ணியம்;
பேசுவதெல்லாம் உண்மை
வாழ்வதே கடமை.

நான்
என்றும்
நான் தான்;
நீங்கள் இல்லை.
காரணம் யாதெனில்,
நான் 'ஸ்டப்ட் நான்'.
அதே சமயம்
நீங்கள் நினைப்பது போல
அவரில்லை நான்.

Wednesday, November 25, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நாப்பிளக்கப் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடி,
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலப்புலென கலகலென புதல்வர்களைப் பெறுவீர்!
காப்பதற்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்;
கவர் பிளந்த மரத் துளையில் கால் வைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப் போல
அகப்பட்டீர், கிடந்துழல அகப்பட்டீர் நீரே!
-பட்டினத்தார்.

உருவக கவிதை - 14



நிகழ்தகவு வாழ்க்கை


இருபுறமும் ஸ்டாலின் தலை கொண்ட
அரிய ரூபிள் நாணயம் ஒன்று
என்னிடம் உண்டு.

அதைக் கொண்டு 'பூவா, தலையா'
விளையாடத் துள்ளுது மனம்.
எதிராளி கோரும் சாத்தியம்
பூவாக மட்டுமே இருந்தாக வேண்டும்.


தீர்மானிக்க முடியாத முச்சந்திகளில்
நாணயம் சுண்டி பாதை காணலாம்.
ஆயின் எனது நாணயத்தை சுண்டுகையில்
நான் கோர வேண்டியது என்ன?

'பூவா, தலையா' விளையாடி மகிழ
எதிராளி அழைக்கையில்
துணுக்குறுகிறது மனம்-
அவனிடமும் ரூபிள் நாணயம் இருக்குமா?

இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
ரூபிள் நாணயம் அல்லாது,
டாலர், யென், யூரோ நாணயங்களேனும்
எதிராளியிடம் என்னது போல
இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

தயங்கி நடுங்குகிறது மனம்.
செல்லுமிடமெல்லாம் முச்சந்திகள்.
விளையாட அழைக்கிறார்கள்
எதிர்ப்படும் வழிப்போக்கர்கள்.

எனது ரூபிள் நாணயம்
எனக்கு லாபமா? எனது பாவமா?
நிகழ்தகவு ஆகிவிட்டது வாழ்க்கை.

Tuesday, November 24, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா! இப்பயிரைக்
கண்ணீரால் காத்தோம்; கருகத் திருவுளமோ?
எண்ணமெல்லா நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த
வண்ண விளக்கிக்து மடியத் திருவுளமோ?
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பினர்
வாராது வந்த மாமணியைத் தோற்போமோ?...
-மகாகவி பாரதி
(சுதந்திரப் பயிர்)

மரபுக் கவிதை -51


இனியவை படைப்போம்!

தேசம் காத்திட வாருங்கள் - நம்
தெய்வம் காத்திட வாருங்கள்!
தேசம் காத்திட வாருங்கள்- நம்
தெய்வம் பாரத தேசமிதே!

எல்லையில் எதிரிகள் நடமாட்டம் - உள்
நாட்டினில் துரோகிகள் கொண்டாட்டம்!
எல்லாம் தெரிந்தும் வீட்டுக்குள்ளே
முடங்கியிருப்பது ஏனய்யா?

பலமரம் சேர்ந்தால் ஒரு தோப்பு- இப்
பழமொழி அனைவரும் அறிந்தது தான்
பலவகைக் கட்சி கூறுகளாலே
பட்ட அவலங்கள் போதுமய்யா!

சுதந்திரக் காற்றை சுவாசித்து- நாம்
சுகமாய் வாழ்ந்திட வீழ்ந்தவரை
மனதில் இருத்தி பூஜிப்போம்!
மடமை அழித்திட வாருமய்யா!

பலமலர் சேர்ந்தால் ஒருமாலை - அது
பரமனை வழிபட உதவிடுமே!
பலப்பல சாதி வேற்றுமை சொல்லி
பைத்தியமானது போதுமய்யா!

வாய்மை, தூய்மை, ஒழுக்கத்தை - தன்
வாழ்வில் பேணிய காந்தியினை
மறந்துவிட்ட தலைவர்களாலே
மானம் கேட்டது போதுமய்யா!

பலதுளி சேர்ந்தால் பெருவெள்ளம் - நாம்
பலரும் சேர்ந்தது பாரதமே!
இதுவரை பெற்ற அனுபவம் போதும்
இனியவை படைப்போம் வாருமய்யா!
நன்றி: விஜயபாரதம் (02.07.1999)

Monday, November 23, 2009

இன்றைய சிந்தனை






சான்றோர் அமுதம்

மன ஒருமைப்பாட்டுடன் இரண்டு நிமிட நேரம் கடவுளைப் பிரார்த்திப்பதும், தியானிப்பதும், மன ஒருமைப்பாடில்லாமல் பலமணி நேரங்கள் அவற்றைச் செய்வதைக் காட்டிலும் சிறந்தது.
-அன்னை சாரதா தேவி

புதுக்கவிதை - 44


இறைமை

நெடிதுயர்ந்த தென்னையின்
மிளிரும் கீற்றசைவில்
இறைமையின் தாண்டவம்.
அதனருகில் பாயென கிடக்கும்
பைம்பொழிலின் நுனிமென் நடனத்தில்
இறைமையின் குதூகலம்.
வரப்பில் நீர் பாய்ச்சும்
வெற்றுடம்பு முண்டாசுக் காரரின்
வியர்வையில் வெளிப்படும்
இறைமையின் உழைப்பு.


Sunday, November 22, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


...சிகிச்சை முறையிலே ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட உறுப்பின் இயக்கத்தை ஒட்டி, அந்த நோயைப் போக்க முயற்சி செய்கிறோம். மருந்தின் மூலமாக அந்த இடத்தில் உள்ள ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம் போன்ற இயக்கங்கள் ஊக்கிவிடப் படுகின்றன. ஆனால், உடல் முழுவதும் - அந்தப் பாகங்கள் நீங்கலாக- மற்ற பாகங்கள் நன்றாக இருக்கின்றனவோ இல்லையோ அவையும் மருந்தாலே ஊக்கப் படுத்தப் படுகின்றன...
விளைவு, தலைவலி போய்த் திருகு வலி வந்த கதையாகலாம். அந்த இடத்தில் ஏற்பட்ட நோய் போகும்; மற்ற இடத்தில் நோய் வரும். எனவே சிகிச்சை என்பதை விட, நோய் வராமல் காப்பதுதான் நல்லது.

-வேதாத்திரி மகரிஷி
(எளிய முறை உடற்பயிற்சி- பக்:58 )

புதுக்கவிதை - 43


சிகிச்சை

தலைவலி போக
மாத்திரையை மட்டுமல்லாது
வயிற்று வலியையும் வாங்கி,
வயிற்று நோவுக்காக
வயிற்றை அறுத்து,
இப்போது
தையலில் வலி.
அலோபதியின்
கடைக்கண் பார்வையை
நினைக்குந்தோறும்
நரம்பில் ஊசி ஏறுகிறது.
நன்றி: விஜயபாரதம் (28.01.2000)

Saturday, November 21, 2009

இன்றைய சிந்தனை



குறள்அமுதம்

உலகத்தோடு ஒட்டஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்.

-திருவள்ளுவர்
(ஒழுக்கம் உடைமை -140 )

உருவக கவிதை - 13


குப்பை - 2

வாழ்வில் அலைமோதும் மனிதர் போல
காற்றில் அலைகின்றன குப்பைகள்.

குப்பைகள் உயரப் பறக்கின்றன.
ஒன்றையொன்று உரசிக் கொண்டு
நாடகம் நடத்துகின்றன.
கல்லுளிமங்கனாய் சில
அசையாமல் கிடக்கின்றன.

குப்பைமேடு ராஜாங்கத்துக்கு
ஒரு குப்பை உரிமை கொண்டாடுகிறது.
மற்றொன்று மறுதலிக்கின்றது.
மூன்றாவதொன்று அணி அமைக்கின்றது.
காற்றில் குப்பைகள் அலைமோதுகின்றன.

தானே குப்பைமேட்டு மாணிக்கம் என்று
ஒரு குப்பை செப்ப,
குப்பைக் கூட்டம் ஆமோதித்து
படபடக்கின்றது.
அருகிலேயே கழிவுநீர் நாற்றம்.

யாரோ சவரம் செய்து வீசிய குப்பை
முடியாட்சி தமதென்று
ஒப்பாரி வைக்கிறது.
குப்பைகளுக்குள் தேர்தல்.
குப்பைமேடு குப்பைமேடாகி விட்டது.

சற்று முன் வரை
ஒற்றுமையாய் இருந்த குப்பைகள்
காற்றின் வீச்சில் இழுபட்டு
ஒன்றையொன்று கிழித்துக் கொள்ள
குப்பைமேடு தேர்தல் களமாகிவிட்டது.

குப்பைகளுக்கு
தானே பறப்பதாய் நினைப்பு.
தானே ராஜாவென்ற சிலிர்ப்பு.
உயரப் பறந்து மாணிக்கமாகும் முயற்சியில்
தெருவெங்கும் முடை நாற்றம்.

உயரப் பறந்த ஒரு குப்பை
மின்சாரக் கம்பியில் தகனமானது கண்டும்
உயரப் பறக்கும் ஆசை தீரவில்லை.
காற்றில் கலந்த கருகிய வாடை
குப்பைகளுக்கு கிளர்ச்சியூட்டுகிறது.

நாள் தோறும் தோட்டி வாரினாலும்
மீண்டும் மேடாகிறது
குப்பைமேடு.

குப்பையிலும் பல சாதி.
பிளாஸ்டிக் குப்பைக்கு மவுசு தனி.
நீண்ட நாள் வாழும் வரம் பெற்றதாயிற்றே?
கரையான்களுக்கும் கழுதைக்கும்
உணவாகும் காகிதக் குப்பைக்கு
ஆயுசு கம்மி.
மக்கிவிடும் இலைக் குப்பைக்கு
மதிப்பில்லை.
இன்றைய தேதியில் பெரும்பான்மை பலம்
பிளாஸ்டிக் குப்பைக்குத் தான்.

குப்பைக்கும் குடும்பம் உண்டு
ஆனால் கந்தர்வ குலம்.
எந்தக் குப்பை
எந்தக் குப்பையோடும் சேரும்.
காற்று வீசும் அனுசரனைக்கேற்றவாறு
குடும்பப் பிணைப்பு மாறும்.

குப்பைக்கு சிந்திக்கத் தெரியாது.
ஆனாலும் காற்றின் வேகத்துக்கு
ஈடுகொடுக்கும்.

குப்பையைக் கிளறக் கிளற
சுகமாக இருக்கிறது.
மண்ணோடு மக்கி மண்ணாகும் வரை
கிளறுவது தானே
குப்பையின் வேலை?

நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர்- 1999
(05.11.1999)

Friday, November 20, 2009

இன்றைய சிந்தனை

பாரதி அமுதம்

பட்டினில் ஆடையும் பஞ்சில் உடையும்

பண்ணி மலைகளென வீதி குவிப்போம்

கட்டித் திரவியங்கள் கொண்டு வருவார்

காசினி வணிகருக்கு அவை கொடுப்போம்!

-மகாகவி பாரதி

(பாரத தேசம்)

படக் கவிதை - 1



எல்லாம் பழங்கதை


மயான பூமியின் நடுகற்களா இவை?
இல்லை -
மறந்துபோன நெசவுத் தொழிலின்
மிச்ச சொச்ச அடையாளங்கள்.

ஆங்கிலேயனை மிரட்டிய
அகிம்சை ஆயுதம்
இந்த பாவுக் கற்களில் தான்
பட்டை தீட்டப்பட்டது.

நமது தாத்தாக்களும் பாட்டிகளும்
மழலைப் பருவத்தில்
இந்தப் பாவுக் கற்களில் தாவிப் பிடித்து
விளையாடி இருக்கிறார்கள்.

ஆயுத பூஜை நேரங்களில்
இக்கற்களுக்கு கற்பூர ஆரத்தி
காட்டியதும் உண்டு.

சூரியன் சுடத் தொடங்கும் முன்
கஞ்சியுடனும் நூலுடனும்
நெசவாளர்களின் ஒட்டுமொத்தக் குடும்பமும்
இங்கு தவமாய்க் கிடக்கும்.

எத்தனை கோடி துணிகளின்
உற்பத்திக்கு உதவியவை
இந்த பாவுக் கற்கள்?

பல்லாயிரம் பேருக்கு
கஞ்சி வார்த்தவை -
கிராமப் பொருளாதாரத்தின்
கிளையாய்த் திகழ்ந்தவை -
மானம் காக்க ஆடை தந்தவை-
எல்லாம் பழங்கதை.

இன்று-
தொழில்புரட்சியின் இயந்திர மயமாதலில்
நசிந்துபோன அரிய தொழிலின்
சிதிலமான நினைவுச் சின்னங்கள்.

நாய்கள் இயற்கை உபாதைக்கு
கால்களைத் தூக்குவது
இந்தக் கற்களின் மீது தான்.
எருமைகளும் கழுதைகளும்
நமைச்சலுக்கு நாடும் இக்கற்களின்
பூர்வீகம் அவற்றுக்குத்
தெரிய நியாயமில்லை தான்.

முக்காடிட்டு தலை குனிந்திருக்கும்
பாவுக் கற்களை,
பாரதம் 'இந்தியா' ஆனதன்
பரிதாப விளைவு எனலாமா?

நன்றி: சுதேசி செய்தி (ஜூன்- ஜூலை 2002 )
& விஜயபாரதம் (23.08.2002)
படம் பிடித்த இடம்: பவானி, ஈரோடு மாவட்டம்.

Thursday, November 19, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


நாமனைவரும் சங்கத்தின் பல்வேறு உறுப்புகள், அதாவது நம்மைக் கொண்டுதான் சங்கத்தின் முழு வடிவும் அமைகிறது. உடலுக்கும் அதன் உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு தான், சங்கத்திற்கும் நமக்கும் உள்ள உறவு. உடலின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் ஒரே சீராகவும் ஒரே நேரத்திலும் ஏற்பட வேண்டும். அப்போது தான் உடல் உறுதிப்படும்.

-ப.பூ. டாக்டர் கேசவ ஹெட்கேவார்
(வழிக்குத் துணை ; பக்:64 )

ஏதேதோ எண்ணங்கள்


உத்தம்ஜிக்கு இறுதி வணக்கம்!


மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களே சமுதாயத்தின் திசையை உணர்ந்துகொண்டு அதை நல்லபடி மாற்ற முயற்சிக்கிறார்கள். அத்தகையவர்களில் முன்னணி வகிப்பவர், ஸ்ரீ உத்தமராஜ் ஜி. ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுத்தர குடும்பத்தில் பிறந்த உத்தம்ஜி தேசிய மறுமலர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முழுநேர ஊழியராக 1968இல் இணைந்தார். சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், ரத்த தான இயக்கத்தை தமிழகத்தில் பரவலாக்க தீவிரமாகப் பாடுபட்டார்; பலநூறு ரத்த தான முகாம்களை அவர் நடத்தி இருக்கிறார்.
1975நெருக்கடி நிலையை எதிர்த்து போராடி, மிசா சட்டத்தின் கீழ் பதினாறு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையை தவச்சாலையாக்கிய அவரது திறமையும் அர்ப்பண மனப்பான்மையும் கண்டு, எதிரணி அரசியல்வாதிகள் கூட அவரது அபிமானிகள் ஆனார்கள்.
சங்கத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தில் பாடுபட்ட தத்தாஜி, ஹன்றட்ஜி, சுதாகர்ஜி உள்ளிட்ட மூத்த ஸ்வயம்சேவகர்களைப் பற்றிய பதிவை வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளில் தனது வாழ்வின் இறுதிக் கணத்தில் கூட முயன்றுவந்தார். காலத்தின் கோலத்தால், அவரும் அப்பட்டியலில் தற்போது இணைந்துவிட்டார்.
சிரித்த முகமும், மென்மையான பேச்சும், அதிராத நடையுமாக, அவரது உருவம் மனக்கண் முன் நிழலாடுகிறது. நான் சென்னையில் விஜயபாரதம் பத்திரிகையில் பணிபுரிந்தபோது, தினசரி அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். விஜயபாரதம் வளர்ச்சியில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அதில் நான் புதிய முயற்சியாக, 'கேளுங்கள்; சொல்கிறோம்' என்ற பகுதியை ஆரம்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தார்; தானும் பங்கெடுத்தார். அடிக்கடி எனது உடலைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியிருக்கிறார்.
கடந்த நவம்பர் 7 இம் தேதி, தனது 73வயதில், அவர் மண்ணுலகில் இருந்து மறைந்தார். அவரது கண்களும், தேகமும் தானம் செய்யப்பட்டன. வாழ்வின் இறுதி வரை, கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த மகத்தான மகான் அவர். அவரது நினைவுகள் என்றும் நமக்கு வழி காட்டும்.
(கீழே அஞ்சலி கவிதை உள்ளது).
-வ.மு.முரளி.

வசன கவிதை - 27









உத்தமர் எங்கள் மன்னவர்





பெயரில் மட்டுமல்ல
இயல்பிலும் செயலிலும்
நீங்கள் உத்தமர்.

பள்ளி மாணவர்களுக்கு
ஆசானாய் இருப்பதைவிட
பட்டறிவு குன்றிய
சமுதாயத்தின் ஆசானாக
இருப்பதையே நீங்கள்
எப்போதும் விரும்பினீர்கள்.

ஒடிசலான தேகம்;
ஓயாத வேகம்.
முகத்தில் மலர்ச்சி;
ஒட்டிப் பிறந்த புன்னகை.
அதிராத பேச்சு;
இவையே உங்கள் வீச்சு.

எதிர்த் தரப்பையும்
நெக்குருகச் செய்யும்
சங்க தத்துவம்
ஒளி வீசியது உங்களிடம்.
சிவராம்ஜியை நேரில்
அறியாதவர்கள் கூட
உணர்ந்து கொண்டார்கள்
தங்களிடம்.

எது வரினும் கலங்காத
'ஸ்திதபிரக்ஞ' நிலை கண்டு
உங்கள் அபிமானிகளான
அரசியல்மணிகள் பலர்.
பிரபலங்களின் நட்பும்
தொண்டர்களின் அன்பும்
சரிநிகராய்க் கருதிய
சகமானுடர் நீங்கள்!

ரத்தம் உறிஞ்சும்
அட்டைகள் மலிந்த
அரசியல்களத்தில் -
ரத்ததானிகளால்
மாற்றம் கண்டீர்கள்.
'ஸ்வயம்சேவகர்' என்ற
சொல்லின் நுண்பொருளை
அனுபவிக்க வைத்தீர்கள்.

வாழ்வின் இறுதியிலும்
ததீசியாய் தானம் செய்து
எங்களுக்குள்
புது ரத்தம் பாய்ச்சினீர்கள்.

தொண்டர்களே சங்கமென்று
குடும்பங்களுடன் குலாவினீர்கள்;
சங்கமே குடும்பமென்று
அவர்களும் உலாவினார்கள்.

தொண்டர்கள்
செயல்வீரர்களாகிறார்கள்;
தலைவர்களாகிறார்கள்;
இணைவதால்
இயக்கமாகிறார்கள்.
அதுபோலவே இயக்கமும் -
தொண்டர்களை உருவாக்குகிறது;
செயல்வீரர்களை வளர்த்தெடுக்கிறது;
தலைவர்களை தரம் உயர்த்துகிறது.
இது வாழையடி வாழை மரபு.

இந்த மரபை
எளிதாகக் காட்டினீர்கள்.
தொண்டனுக்குத் தொண்டனாய் வாழ்ந்து,
தலைவனின் இலக்கணத்தை
தளும்பாமல் காட்டி,
இயக்கமே பெரிதென்று
எல்லோருக்கும் சொன்னீர்கள்.

சென்ற இடமெங்கும்
நறுமணமாய்க் கமழ்ந்தீர்கள்.
அன்பு என்ற ஆயுதத்தால்
அனைவரையும் வென்றீர்கள்.

டாக்டர்ஜியின் மகத்துவமும்
குருஜியின் தத்துவமும்
குவியும் புள்ளியே
பரிபூரண ஸ்வயம்சேவகர்.
இந்தப் பட்டியலில் நீங்கள் -
என்றும் முன்னவர்;
எங்கள் மன்னவர்!

குறிப்பு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகரும் சங்க ரத்த வங்கியின் பொறுப்பாளருமான ஸ்ரீ உத்தமராஜ் ஜி கடந்த ஏழாம் தேதி காலமானார். அவருக்கு இது கவிதாஞ்சலி.
நன்றி: விஜயபாரதம் (04.12.2009)
*

Wednesday, November 18, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


பெண்பிள்ளை, பெற்றதும் தாயாகிறாள். தாய், பிள்ளையை வளர்க்கப் புகுங்கால், அவள் உள்ளத்தில் இறைமைக்குரிய நீர்மைகளெல்லாம் பதிகின்றன. தொண்டு, தியாகம், தன்னல மறுப்பு முதலியன அவள் மாட்டுஅரும்புகின்றன. தாய் கைம்மாறு கருதி குழந்தைக்கு தொண்டு செய்வதில்லை. தனக்குள்ள எல்லாவற்றையும்- சமயம் நேரின் உயிரையும் - பிள்ளை நலத்துக்கு கொடுக்க தாய் விரைந்து நிற்கிறாள்.

-திரு.வி.கல்யாண சுந்தரனார்.
(பெண்ணின் பெருமை - பக்:299 )

புதுக்கவிதை - 42


தாய்மை

பெட்டை நாயின்
வாலைக் கௌவியபடி
குட்டிநாய்கள்
குலாவுகின்றன.
புட்டிப்பாலைக்
குடித்தபடி
வேடிக்கை பார்க்கிறது
குழந்தை.

.

Tuesday, November 17, 2009

மரபுக் கவிதை - 50



பூனை


பஞ்சென ஸ்பரிஸ மென்மை
பாலெனத் தூய வெண்மை.
துஞ்சுதல் அற்ற கண்கள்
தூய்மையை நாடும் உள்ளம்.
அஞ்சிடுமாறு கீறும்
ஆணியே நகங்களாகும்.
வஞ்சகம் அற்ற வாழ்வு
வாலிலே நடனமாடும்.
நஞ்சையும் ஜீரணித்து
நாவினால் அருகு மெல்லும்.
கொஞ்சிடு விறைத்த காது
கோபமோ உறுமும்போது.
சஞ்சலமின்றி வேட்டை
சாகசங் காட்டி ஓடும்.
வெஞ்சினம் வந்துவிட்டால்
வேங்கையாய்க் கூரும் பற்கள்.
ரஞ்சகமான தோற்றம்
ராகமாய்ப் பாடிக் கூவும்.
நெஞ்சிலே கொண்ட அன்பு
நேசமே பூனை ஆகும்.

.

இன்றைய சிந்தனை



கருவூலம்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு- அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி.
அம்மா என்குது வெள்ளைப் பசு - உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.
நாவால் நக்குது வெள்ளைப் பசு - பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி.
முத்தம் கொடுக்குது வெள்ளைப் பசு - மடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும்/ பசுவும் கன்றும்/பக்:66 )

Monday, November 16, 2009

ஏதேதோ எண்ணங்கள்


வாழவைக்கும் செம்மொழி

இலங்கைப் பிரசினை உச்சத்தில் இருந்தபோது, மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, தமிழக முதல்வர் கருணாநிதியின் மூளையில் தோன்றிய ஐடியாதான், உலகத் தமிழ் மாநாடு. நல்ல வேளையாக, இதற்கு பொறுப்பான உலகத் தமிழ் ஆய்வு மன்றம் இந்த சதிக்கு உடன்படவில்லை. அதன் தலைவர் ஜப்பான் காரராக இருந்ததால் தப்பித்தது. அவர் நம்மூராக இருந்திருந்தால், கலைஞர் புராணம் பாடிய படியே, கல்லாப்பெட்டியை நிரப்பியபடி, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் கழிசடை மாநாடு நடத்தப் பட்டிருக்கும்.
வேறு வழியின்றி, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப் பட இருக்கிறது. தமிழுக்கு இதனால் லாபம் இல்லாவிட்டாலும், தமிழைக் காக்கவே, தமிழரைக் காக்கவே (ஈழத் தமிழரை அல்ல) பிறப்பெடுத்த கருணாநிதிக்கு லாபம் தான். மாநாடு என்றால் கவியரங்கம் இல்லாமலா? அதுவும் கலைஞரைப் புகழும் நாமாவளி இல்லாமலா? இலங்கைப் பிரசினை இல்லாமல் ஒழித்த இரும்புத் தலைவர் பற்றிய பட்டிமன்றம் இல்லாமலா? ஆக மொத்தம், கலைஞருக்கும் லாபம்; கலைஞரைப் பாராட்டும் கலைஞர்களுக்கும் லாபம்.
இலங்கையில் முள்வேலி சிறைக்குள் லட்சம் தமிழர்கள் நொந்து செத்தால் என்ன? கலைஞர்களுக்கு எப்போதும் கூத்தும் கும்மாளமும் தான். வாழவைக்கும் செம்மொழி, வாழும் செம்மொழி, உலகிலேயே தமிழ் ஒன்று தான்.
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய டாக்டர் தமிழின தலைவரே!
.

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


பெற்றோரைப் போற்றாது பெருநிலைக்கு வந்தவர் யாரும் இதுவரையில் உலகில் இருந்ததில்லை. பெற்றோரைப் போற்றி கீழ்மை அடைந்தவரும் இதுவரையில் உலகில் இருந்தது கிடையாது. பெற்றோரைப் போற்றும் செயலில் தீவிர நிலைக்குப் போகுமளவு, சிறுவன் ஒருவன் நல்ல மாணாக்கனாக மாறி அமைகிறான்.

-சுவாமி சித்பவானந்தர்

மரபுக் கவிதை - 49


வேண்டுவன

மாதா,பிதா:

அடிமரம் இற்றபின் அதனுடைய விழுதுகள்
ஆலத்தைத் தாங்குதல் போல
வடிவினை உந்தனுக்கு ஈந்திட்ட பெற்றோரின்
முதுமையில் உதவிடல் வேண்டும்!

குரு:

நல்லவர் மிக்குயர் நிலையினை அடையினும்
நன்றியைக் காட்டுதல் போல
பல்கலை கற்றிட கல்வியை உதவிய
குருவினை மதித்திடல் வேண்டும்!

தெய்வம்:

அண்டங்கள் யாவையும் அவனுடைய பார்வையில்
ஆட்பட்டிருக்கின்றதன்றோ?
வண்டிலும் வள்ளிக் கிழங்கிலும் வாழ்ந்திடும்
வள்ளலை வணங்கிடல் வேண்டும்!
(எழுதிய நாள்: 04.06.1989)

Sunday, November 15, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையு முடையேம் எங்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெங்
குன்றுங் கொண்டார் யாம்எந்தையு மிலமே.
-பாரி மகளிர்
(புற நானூறு)

புதுக்கவிதை - 41


பகுத்தறிவு

செத்துப் போன தலைவனுக்கு
செம்புச்சிலை;
மாலை, மரியாதை.
செத்துப் போன அவரது இல்லம்
நினைவாலயம்.
சடலம் புதைக்கப்பட்ட இடம்
புனித பூமி.
யாரும் முணுமுணுக்கக் கூடாதது
பகுத்தறிவு.

மொழிமாற்றக் கவிதை - 6


இளமையின் கர்வம்

ஒரு நாள்:

தோட்டத்திலே, காலையிலே ரோஜா மலர்ந்தது
வாட்டமான இளமைக்காக கர்வம் அடைந்தது.

சுக்குப் போல வறண்டிருந்த தோட்டக்காரரோ
பக்கத்திலே நின்றிருக்க, ரோஜா பார்த்தது.

''அதிக வயது ஆகிப் போன தோட்டக்காரரே
விதி உனக்கு முடிந்த தின்று'' என்று சிரித்தது.

நண்பகலில் வெப்பத்தினால் மேலும் விரிந்தது
மென்மையான சுகந்தத்தினை வீசி வந்தது.

மீண்டும் அவன் காலடியைக் கேட்ட போதிலே
வேண்டு மட்டும் கிண்டலாகச் சிரித்துக் கொண்டது.

மறுநாள்:

பாவமென்று பரிகசித்த ரோஜா மண்ணிலே
ஆவியற்று, அற்பமாக வாடிக் கிடந்தது.

முதியவராம் தோட்டக்காரர் பகலில் வந்தனர்;
விதி முடிந்த மலர்களினை வீசி எறிந்தனர்.

இளமை, அழகு நிலைத்திருந்து கண்டதுமில்லை.
இளமையினால் முதுமையினை எள்ளல் மடமையே!

குறிப்பு: இக்கவிதை 'ஆஸ்டின் டாப்சன்' எழுதிய 'தி ரோஸ் அண்ட் தி கார்டனர்'
என்ற ஆங்கிலக் கவிதையை தழுவி எழுதப் பட்டது.

Saturday, November 14, 2009

வசன கவிதை - 26


பொன்விழாச் செய்தி

சுதந்திரத்தை, உரிமைகளை
சுகமாக அனுபவிக்கும்
பொன்விழா ஆண்டென்ற
பூரிப்பு அனைவருக்கும்!
நல்லதிந்தத் தருணத்தில்
நமை நன்கு சோதிப்போம்!
நடக்கின்ற அத்தனையும்
நல்லவையா, சிந்திப்போம்!

எத்தனையோ தியாகியரின்
எலும்பினையும் சதையினையும்
எருவாக இட்டுத்தான்
எட்டியுள்ளோம் விடுதலையை!
என்றாலும் அதன் பொருளை
எளிதாக மறந்துள்ளோம்!
எத்தர்களும் திருடர்களும்
ஏமாற்ற வழி வகுத்தோம்!

அந்நியரை, வெள்ளையரை
அகற்றிவிட்டோம்- ஆனாலும்
அடிமை விலங்கொடித்தாலும்
அரசாங்கம் மாறவில்லை!
நாட்டிலுள்ள குடிமக்கள்
நலம் பேணத் தான் அரசு!
நயமற்ற அரசியலில்
நலம் பேண வழியெங்கே?

ஊர்கூடி, வரிசெலுத்தி
ஒன்றாகச் சேர்த்த பணம்
நமை நாமே அரசாள
நமக்கான மூலதனம்!
இச்செல்வம் சிவன் சொத்து!
இதை உறிஞ்சும் அட்டைகளின்
பலகோடி ஊழல்களை
பாரதம் தான் தாங்கிடுமா?

ஆண்டவனின் முன்னாலே
அனைவருமே ஒன்றன்றோ?
அதை மறந்து சாதியினால்
அல்லல் பல படலாமா?
ஒரு தாயின் பிள்ளைகளே
ஒட்டாமல் இருப்பதுவா?
ஒற்றுமையை, வல்லமையை
ஓநாய்கள் அழிப்பதுவா?

மதத்துக்கு ஒரு சட்டம்!
மதம் மாற்ற வெளியுதவி!
சிதறியுள்ள ஆடுகளை
சிறைஎடுக்கும் சிறுநரிகள்!
சிறுபான்மைக்குச் சலுகை
சிதிலத்தில் பெரும்பான்மை!
மதியற்ற இச்செயல்கள்
மலிவாகப் போவதுவா?

சாதிக்குப் பலசங்கம்!
சமயத்துக் கொரு நீதி!
சட்டத்தில் பல ஓட்டை!
சச்சரவில் பஞ்சமில்லை!
இளைஞர்களின் எதிர்காலம்
இருள் படர்ந்த திரையரங்கில்!
இவையெல்லாம் போதாது,
இசங்கள் மேல் மோகங்கள்!

விளக்குக்குப் பின்னாலே
இருட்டான நிழலைப் போல்
விடுதலைக்குப் பின்னாலும்
விடிவற்ற துயரங்கள்!
விதிவசமோ எனச் சொல்லி
விம்மிஎழும் கூக்குரல்கள்!
விழலுக்கு நீர் பாய்ச்சி
விசனித்தால் என்ன பயன்?

விடுதலையின் விலை தெரியா
விளையாட்டுப் பிள்ளைகளின்
அறியாமை உள்ளவரை
அல்லல்களும் பின்தொடரும்!
நடந்துள்ள நிகழ்ச்சிகளில்
நல்லதொரு பாடத்தை
அறிந்திடுவோம்- அதைக் கொண்டு
அன்னையினைக் காத்திடுவோம்!

சுதந்திரத்தை, உரிமைகளை
சுகமாக அனுபவிக்க-
தேசபக்தி நறுமணத்தை
தெருவெங்கும் பரப்பிடுவோம்!
தெய்வமான தியாகியரின்
திருவாழ்வை நினைந்திடுவோம்!
பொன்விழாக் செய்தி இது!
பொழுதெங்கும் புலரட்டும்!


நன்றி: விஜயபாரதம் - சுதந்திரப் பொன்விழா மலர் (15.08.1997)
கவிதைப் போட்டியில் முதல் பரிசு (ரூ.100 ) பெற்ற கவிதை.

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


தியாகம் செய்தேயாக வேண்டும். மகிமையுடனிரு. தியாகமின்றி எந்தப் பெரிய செயலையும் செய்ய முடியாது. இந்த உலகைப் படிக்கத் தன்னையே தியாகம் செய்தான் இறைவன். உங்கள் வசதிகள், இன்பங்கள், பெயர், புகழ், பதவி, ஏன், உங்கள் உயிரையே துச்சமென தள்ளி, மனித சங்கிலிகளால் பாலம் ஒன்று அமையுங்கள். அதன்மூலம் கோடிக் கணக்கான மக்கள் வாழ்க்கை என்னும் கடலைக் கடப்பார்கள்...

நான் எதிர்காலத்தைப் பார்க்கவில்லை, பார்க்க விரும்பவும் இல்லை. ஆனால் இதோ என் கண்முன் காணும் வாழ்க்கையைப் போல் தெளிவாக ஒரு காட்சியை என் முன் காண்கிறேன்- புராதனமான நமது அன்னை விழித்துவிட்டாள்; புத்திளமையுடன், என்றுமில்லா மகிமையுடன் அவளது அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். சமாதான வாழ்த்தொலியுடன் அவளை உலகெங்கிலும் பிரகடனம் செய்யுங்கள்.

-சுவாமி விவேகானந்தர்
(தமிழ்ப் பெருமக்களுக்கு/ ஞான தீபம்/ பக்:85)

Friday, November 13, 2009

இன்றைய சிந்தனை



பாரதி அமுதம்


வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன,
நின்னருள் வதன நானேருறக்கண்டே,
அந்த நாள் நீஎனை யடிமையாக் கொள்ள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்
தேன்நிலா வின்பத் திருங்கடற்றிளைத்தோம்;...
நீருடைத் தறிகிலேன்; நின்னொடு தமியனாய்
நீயே உயிரென தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன்....
-மகாகவி பாரதி
(கவிதா தேவி அருள் வேண்டல்)

புதுக்கவிதை - 40


கவிதா ஜனனம்

திக்கித் திணறி,
முக்கி முனகி,
இறுதியில் பிரசவமானது
கவிதை.

எத்தனை நாட்கள்
மனக் கருவறையில்
அடை காத்து
இன்று பொரிந்திருக்கிறது
கவிதை.

ஆணும் பெண்ணும்
இணைந்தால்
இனவிருத்தி.
ஆனால் கவிதை மட்டும்
தானாய் பிரசவமாகும்
பிரபஞ்சம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும்
கலவி இன்பம் தரும்.
அதைவிட-
கவிதை ஜனனம்
கவிஞனுக்கு
ஜன்ம சாபல்யம்.

அந்திம நேரத்தில்
அனாதையாய்
கைவிட்டுப் போவான் பிள்ளை.
ஆனால்-
உள்ளுயிர் அற்றாலும்,
என் கவியால்
என் சிசுவால்
என் ஆன்மா
உயிர்த்து வாழும்.

கவிதை என் சிசு.
கவிதை என் ஆன்மா.

காதோர முடியைக்
கையாலே புறந்தள்ளும்
காதலி;
கண்ணிரண்டும் விற்று
சித்திரம் வாங்கும்
இந்தியன்;
தன்மான உணர்வினைத்
தனலாக உரைத்திடும்
காவியம்;
அன்றாடச் சோற்றுக்கு
எச்சிலைத் தேடிடும்
எளியவன்;
ஆன்மாவின் தேடலில்
அலைந்தாடும் படகென
கீர்த்தனை...

எல்லாம் என் சிசு;
சிசுக்கள்.
பிரசவம் வேதனை தான்.
ஆனால்-
சிசு இன்பமானது.

Thursday, November 12, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


பலவீனத்திற்கான பரிகாரம், பலவீனத்தைக் குறித்து ஓயாது சிந்திப்பது அல்ல; மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மிகவும் பெரிய உண்மை இது: பலமே வாழ்வு; பலவீனமே மரணம்.
-சுவாமி விவேகானந்தர்

மரபுக் கவிதை - 48


மனதிற்குள்ளொரு மிருகம்

மனதிற்குள்ளொரு மிருகம்- அது
மரமரமரவென உறுமும் தினமும்!
மனதிற்குள்ளொரு மிருகம்!

திரண்ட வெண்ணெய் கூழில் - புழு
செழித்து வளர்வது போல!
வறண்ட வேலா முற்கள்- பைங்
கழனியில் செறிவது போல!
மனதிற்குள்ளொரு மிருகம்
வஞ்சம் என்பது தீயாம் - அது
வருந்த வைக்கும் பேயாம்
நஞ்சும் உயிரைக் காக்கும்- மன
வஞ்சம் போலோ நஞ்சு?
மனதிற்குள்ளொரு மிருகம்
கோபம் உயிரைக் குடிக்கும் - அது
கொடியவர் களிலோர் அசுரன்!
தாபம் மிக்கிடல் வேண்டா - பின்
தடுத்தல் முள்மரம் களைதல்!
மனதிற்குள்ளொரு மிருகம்
அவசரம் ஆபத்தாகும்- தட
தடக் காரியம் தீது!
கவலை உடலைக் கரைக்கும் - கண்
கருவளை வீழ்ந்திட வைக்கும்!
மனதிற்குள்ளொரு மிருகம்
காமம் பெருகுது புனலாய் - மனக்
கற்பும் கெட்டிடலாக!
தாமம் உயர்வைத் தடுக்கும்- எனச்
சாத்திரம் சொல்லிடும் கேளாய்!
மனதிற்குள்ளொரு மிருகம்
வஞ்சம், கோபம், அச்சம், என
வதைப் பாடலாகும் பிறவி!
நெஞ்சம் முழுவதும் அவதி- முக
மதனில் கவலைக் கோடு!
மனதிற்குள்ளொரு மிருகம்
அஞ்சிட வேண்டாம் தம்பி - இவை
அனைத்தும் தூசென மாற்றிட லாகும்!
தஞ்சம் அடைந்திடு இறையை - நம்
தாபம் தீர்த்திட முடியும்!
மனதிற்குள்ளொரு மிருகம்...

Wednesday, November 11, 2009

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

- திருவள்ளுவர்
(அடக்கம் உடைமை -121 )

வசன கவிதை - 25


ஒரு காலத்தில்...

செதிலென அரித்துக் கிடக்கும்
பாறைகளின் மௌனத்தின்
ஒரு சிறு இடுக்கில்
செவ்வெறும்புப் புற்று.
ஒரு காலத்தில்
வாளை மீன்கள் இவ்விடுக்குகளில்
தவழ்ந்திருக்க வேண்டும்.

சாலையோரம் நசுங்கிக் கிடக்கும்
வாகனத்தைக் கடந்து செல்கின்றன
வேக வாகனங்கள்.
ஒரு காலத்தில்
இவ்வாகனமும் காற்றைச் சாடி
விரைந்திருக்க வேண்டும்.

புகைந்துபோன புதர்களினூடே
குறுமுயலின் அழுகுரல்.
ஒரு காலத்தில்
அவ்விடம் வசந்த வனமாய்
இருந்திருக்க வேண்டும்.

ஏழெடுக்கு மாளிகை
சாரங்களில் கிறீச்சிடல்கள்.
ஒருகாலத்தில்
வானைத் தொட்ட மூங்கிலாய் அவை
விளைந்திருக்க வேண்டும்.

வேலியில் ஒளிந்திருக்கும்
அணிலின் ஏக்கப் பார்வை.
அருகில் நிற்கும் தென்னைமரம்
குருத்தோலை அழுகலால்
மொட்டையாகி இருக்க வேண்டும்.

வட்டப் பரிதியின் மாலைப் பொன்னொளியில்
தன்னை மறந்து மண்ணில் அளையும்
சிசுவின் நாசியில் புழுதி.
ஒருகாலத்தில்
நானும் கூட.
நன்றி: விஜயபாரதம்

Tuesday, November 10, 2009

இன்றைய சிந்தனை



சான்றோர் அமுதம்


குத்திய பிறகு தான் முள் தெரிகிறது; தடுக்கிய பிறகு தான் கல் தெரிகிறது; வழுக்கிய பிறகு தான் நிலம் தெரிகிறது; உண்டு முடித்த பிறகு தான் நஞ்சென்று தெரிகிறது; மகிழ்ச்சியாக ஆரம்பிப்பது மரண வாதையாகமுடிகிறது; சொர்க்கத்துக்குள் நுழைவது போல மனிதன் நரகத்துக்குள் காலடி எடுத்து வைக்கிறான். பிறகே, பளபளப்பாகத் தெரிவதெல்லாம் பாம்பு என்று முடிவு கட்டுகிறான்...
பட்டும் கேட்டும் புரிந்து கொள்வதே மனித இனம். ஓலமிட்டு என்ன பயன்?
-கவிஞர் கண்ணதாசன்
(கடைசிப்பக்கம் - பக்: 24)

புதுக்கவிதை - 39


குடி

குடித்துவிட்டு வாகனம்
ஓட்டுகிறார்களா?
என்று சோதிக்கும்
சாலையோரக் காவலரின்
வாயில்
சாராய வீச்சம்.
நன்றி: விஜயபாரதம்
(22.10.1999)

புதுக்கவிதை - 38


முரண் - 2

'உயர்ந்த கல்வித் தரம்
வெளிநாட்டில் வேலைவாய்ப்பு
உங்கள் திறமைக்கு சவால்
எல்லாம் கிடைக்கும்,
எங்கள்
கம்ப்யூட்டர் கல்வியகத்தில்'
சிறுவன் கொடுத்துச் சென்ற
விளம்பர நோட்டீசை
படித்துக்கொண்டே பார்த்தேன்-
இடுப்பில் டிராயர்
நழுவும் சிறுவனை.

Monday, November 9, 2009

இன்றைய சிந்தனை





பாரதி அமுதம்

''எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்''
என்றுரைத் தான்கண்ண பெருமான்;
எல்லாரும் அமரநிலை எய்துநன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்- ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்- ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்- வாழ்க!
(பாரத சமுதாயம் வாழ்கவே)
-மகாகவி பாரதி
(பாரத சமுதாயம்)

மரபுக் கவிதை - 47



நீயும் நானே!

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!

ஆண்டவனின் படைப்பினிலே அனைவரும் ஒன்று!
அதையுணர்த்த அவதரித்தார் சங்கரர் அன்று!
தூண்டுவதால் சுடராகும் ஜோதியைப் போலே
தூயோனே சங்கரரை மூண்டுஎழுப்பினான்!
(ஜய)
அன்றொரு நாள் பாலகனார் விடியற்காலையில்
அவசரமாய் நீராடித் திரும்பி வந்தனர்!
அன்றலர்ந்த தாமரை போல் தேகம் ஒளிவிட
ஆதவனை வணங்கிக்கொண்டு நடந்து வந்தனர்!
என்றாலும் மனம் குழம்பி, மதி மயங்கியே
அமைதியற்று, நடை தயங்கி வந்த போதிலே,
'சண்டாளன்' என்றொருவன் எதிரில் வந்தனன்;
சங்கரரின் பாதம் தொட்டுப் பணிந்து நின்றனன்!
(ஆண்டவனின்)
சங்கரரோ மனம் குலைந்து வெறுப்பு கொண்டனர்!
'சண்டாளன்' எனக் கூசித் தள்ளி நின்றனர்!
அங்கம் உடன் ஒளி குறைந்து மாசுபட்டது
பாலகனோ பதைபதைத்து பரிதவித்தனர்!
அப்போதே சண்டாளன் காட்சி கொடுத்தான்;
அவன் வேறு யாருமில்லை- ஈசன்! ஈசன்!
அப்போதே சங்கரரும் சபதம் எடுத்தார்;
அது வேறு எதுவுமில்லை- 'நீயும் நானே'!
(ஆண்டவனின்)
சரித்திரமாய் நம் முன்னே சங்கரர் உள்ளார்!
சற்குருவாய், ஞானத்தை வழங்கிய வல்லார்!
ஹரிஹரனை சண்மதமாய் வணங்கிடச் சொன்னார்!
சங்கமென ஒற்றுமையாய் வாழ்ந்திடச் சொன்னார்!
பிறப்பினிலே ஜாதி இல்லை! தாழ்வும் இல்லை!
சண்டாளன், மாமுனிவன் என்பதும் இல்லை!
மறப்பது ஏன், மானிடனே? மதியுள்ளோனே!
மனிதர்கள் நாம்- ஆத்மாவின் ராகம் தானே?
(ஆண்டவனின்)
(ஜய)
குறிப்பு: 1991இம் ஆண்டு காஞ்சி சங்கர மடம் நடத்திய கவிதைப் போட்டியில் பங்கேற்று
ஆறுதல் பரிசாக 'வெள்ளிக்காசு' பெற்ற கவிதை இது.

Sunday, November 8, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

என் வாழ்க்கை நாடகத்தில்
எத்தனையோ காட்சிகள்
எத்தனையோ காட்சிகளில்
எழ முடியா வீழ்ச்சிகள்!...

அற்பர்களின் சந்தையிலே
அன்புமலர் விற்றவன்
அன்புமலர் விற்றதனால்
துன்பவிலை பெற்றவன்!

முட்புதரில் நட்புமலர்
முளைக்குமென்று நம்பினேன்
முளைத்துவந்த பாம்புகளே
வளைத்தபோது வெம்பினேன்!

நெஞ்சுவக்கும் மலர் பறிக்க
நெருப்பினில் கைவிட்டவன்
நெருப்பினில் கைவிட்டதனால்
நினைவுகளைச் சுட்டவன்!...
-கவிஞர் மு.மேத்தா
(கண்ணீர்ப் பூக்கள் -பக்: 51, 54)

வசன கவிதை - 24


பிரிவின் துயரம்

பிரிவின்போது தான் தெரிகிறது
பிரிவின் துயரம்.
பிரிவோம் என்று தெரிந்திருந்தால்
இணையாமலாவது இருந்திருக்கலாம்;
இணைக்கப் பட்டோம்-
பிரிக்கப் படுகிறோம்.

இணக்கமும் பிணக்கமும்
இணை பிரியாதவை.
இணைந்திருந்தபோது
இரண்டையும் கண்டோம்.
பிரிகிறோம்-
பிணக்கும் இல்லை; இணக்கமும் இல்லை;
இது தான் விதியின் சதி.

கானல் நீரைக் கண்டவுடன்
ஓடும் பாலைவன நடப்பு
அல்ல நம் நட்பு.
அன்பினால் தான்
கட்டுண்டோம்-
அன்பை அழிக்க முடியாது.

தவறுகள் மனிதனுக்கு சகஜம்-
திருந்தாமல் வாழ்வது தான் தவறு.
நாம் திருந்தினோம்;
திருத்தினோம்; ஆனால்-
'திருத்துவோம்' என
சொல்லவிடாமல்
விதியே தவறு செய்தால்?

திருந்திக்கொள்ளும் என
எதிர்பார்ப்போம்;
காலம் வரும்-
காத்திருப்போம்.
குறிப்பு: பல்தொழில் பயிலகத்தில் படித்தபோது இறுதியாண்டில் எழுதியது (ஆட்டோகிராப்)
எழுதிய நாள்: 21.06.1988

Saturday, November 7, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

...நாட்டின் அரசியல் சாசனம் ஆதார தஸ்தாவேஜு ஆகும். நாட்டின் அனைத்து சட்டங்களையும் அது தான் கண்காணிக்கிறது... அரசியல் சாசனமும் கூட எதனினும் ஆதாரமாகத் திகழும் சில கொள்கைகளுக்கு உட்பட்டதில்லையா? அல்லது அது அரசியல் நிர்ணய சபையின் தன்னிச்சையான முடிவுகளின் விளைபொருளா? ஆழ்ந்து ஆராய்ந்திடின், அரசியல் சாசனமும் கூட சில ஆதார கொள்கைகளை பின்பற்றியாக வேண்டும் என்பது தெளிவாகும். அரசியல் சாசனமானது சமுதாயத்தைக் காத்து நிற்பதாக உள்ளது. இதைவிடுத்து அதனின் சரிவிற்கு காரணமாக இருப்பின் அது தகுதியற்றது என அறிவித்தாக வேண்டும். அது திருத்தப்பட வேண்டும்...
-பண்டித தீனதயாள் உபாத்யாய
(ஏகாத்ம மானவவாதம் - பக்: 57, 58)

வசன கவிதை - 23


எதிர்காலம்?

இறந்தகாலம் இறந்துபோய் விட்டது;
நிகழ்காலம் நின்றுகொண்டு சிரிக்கிறது.

அறுவடையான நெல்லில்
கல் பொறுக்கி விற்றது போய்
ஆற்றங்கரைக் கல்லை
அரைத்துக் கலக்கும்
கல்நெஞ்சக் காரார்கள்.

விக்கிரகத்தை வணங்கி
வினைகளைத் தீர்த்தவர்கள்
விக்கிரகங்களையே இன்று
விலை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்த்த சாஸ்திரத்தை
அழகாய் விமர்சிப்பவர்கள்
தேர்தலில் மட்டும்
தேறாமல் போய்விடுகிறார்கள்.

நிகழ்காலம்
நின்றுகொண்டு சிரிக்கிறது;
எதிர்காலம்?
எழுதிய நாள்: 27.12.1987

மரபுக் கவிதை - 46

நாம் பிறந்த மண்

நாம் பிறந்த மண் ஹிந்துஸ்தானம்
நாதியற்றுக் கிடந்திடல் தீமை!
நானிலம் மீதில் வேறொரு நாடு
நாட்டில் நமக்கிணை உண்டோ சொல்வாய்!

வேழம் உடலில் செருகிய வேலை
வேட்டையர் மேலே எறிந்த செந்நாடு
வேத மணங்கமழ் வேதியர் நாடு
வேறொன்றுண்டோ உலகம் தனிலே?

காதிலே கிடந்த கம்மலைக் கழற்றி
காகம் ஓட்டிய கன்னியர் நாடு!
காமனை எரித்த தேவனே கடவுள்!
காளையர் விரும்பும் கடமையோ வீரம்!

முறத்தால் புலியை துரத்திய பெண்டிர்
முகிலெனக் குளிர்ந்த முகங்களினாலே
முறைத்தால் போதும் எடுப்பார் ஓட்டம்
முட்டாள் கயவர் முன்னூறு காதம்!

வானியல் அறிவில் சோதிடர் வாழ்ந்த
வானைப் பழித்திடும் கோபுர தேசம்!
'வாய்மையே வெல்லும்' என்றன்று சொன்ன
வாமியை வணங்கும் வானவர் பூமி!

அன்பைப் போதித்த அவதார புத்தன்
அறிவுக்கு வியாசனென அளவற்ற முனிவர்
அருளுக்கு இறைவனின் அழகாலயங்கள்
அனைத்துமே செறிந்துள்ள அன்னையே பூமி!

நாம் பிறந்த மண் ஹிந்துஸ்தானம்
நாதியற்றுக் கிடந்திடல் தீமை!
நன்றி: நாளை நமது நாள்- 5

Friday, November 6, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

தேடிக் காண்பது

பெரிய தோட்டத்திலே ஒரே ஒரு
பூ தான் பூத்திருக்கிறது. ஆயிரக் கணக்கான
பட்டுப்பூச்சிகள் அந்த ஒரு பூவை
கண்டுகொள்கின்றன. தேடிக் காண்பதே
கவிதை. தேடாமல் காண இயலாது.
-க.நா.சுப்ரமணியம்
(புதுக்கவிதைகள் - பக்:127 )

வசன கவிதை - 22


சம்மட்டி

கண்ணை உறுத்தும் இரும்புக் குவியல்
தோலைவாட்டும் அனல்;
புகை, ஒரே புழுக்கம்.

அந்த 45 வயது பெரியவர்
வெற்றுடம்பாய்-
ஓங்குகிறார் சம்மட்டியை.

சம்மட்டி கீழே விழும்போது
அந்த சிவந்த இரும்பு
துவண்டு போகிறது.
இரும்பு மட்டுமல்ல-
அவரும் தான்.

சம்மட்டி அடித்ததால்
காயத்துப்போன தோள்கள்;
கந்திப்போன தசை;
முகத்தில் ஆறாய் வியர்வை.

ஒரு கையால் இடுக்கியைப் பிடித்து
மறுகையால் ஓங்கி அடி.
மீண்டும் மீண்டும் வெப்பம்;
மீண்டும் மீண்டும் அடி.
இரும்பு
வழிந்துகொண்டே இருக்கிறது-
அவரும் தான்.

மொத்தம் முப்பது
வளைத்துக் கொடுத்தால் தான்
அவர் வயிறு அரையாவது நிறையும்;
இன்னும் முப்பது
வளைத்துக் கொடுத்தால்
அவர் குடும்பம் கையை நனைக்கும்.

பாவம்
பெரியவருக்கு நல்ல தாகம்;
பசி;
பற்றாக்குறைக்கு சாராய போதை.
இரும்புத் துண்டுகள் வளையமாகி
இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றன-
அவரும் தான்.

Thursday, November 5, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோள் இருத்தல் வேண்டும். இந்தப் பிறவியை ஏன் எடுத்தோம்? இதில் செய்து முடிக்க வேண்டிய கடமைகள் யாவை? இப்பிறவி முடிந்த பின் என்ன ஆகப் போகிறோம்? என்ற வினாக்கள் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் தவறாமல் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். இவற்றுள் இடைநின்ற கேள்வி தான் இன்றியமையாதது...
தனிப்பட்ட மனிதர்கள் இவ்வாறு குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்தால் ஒழிந்து போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் ஒரு சமுதாயமே இவ்வாறு மாறிவிட்டால் என்ன ஆகும்? விரைவில் அந்த சமுதாயம் அழிவது தவிர வேறு யாது?...
-பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்
(தேசிய இலக்கியம்- பக்: 51,52)

மரபுக் கவிதை - 45


பிரயத்தன கீதம்


ஒரு கரத்தினிலே அங்குசம் - வே
றொரு கரத்தினிலே தாமரை- மற்
றொரு கரத்தினிலே மாம்பழம் - இன்
னொரு கரத்தினிலே முத்திரை.

விழிகளில் அறிவதன் தரிசனம் - மறம்
அழிந்திடும் சான்றென மூஞ்சுறு- அற
வழியினை எழுதிடத் தந்த முள்- தீப்
பழியினை நீக்கிடு அருள்மழை.

வளைகரத்தினிலே கமண்டலம் -சிறு
வளைபிறை நெற்றியின் மீதினில் - நாள்
வளைகுண்டலங்கள் காதினில்- முன்
வளைந்தது வயிறொரு பானையாய்

ஆதியும் அந்தமும் அற்றவர் -சம
நீதியில் உலகதன் ரட்சகர்- திரு
வேதிய நாயகன் கணபதி - பெயர்
ஓதிட ஓதிட இன்பமே!
நன்றி: விஜயபாரதம்
(05.09.1997)


புதுக்கவிதை - 37


அஞ்சலி

அவர் ஒரு மகான்;
சிறந்த தீர்க்கதரிசி;
இணையில்லாப்
பெருந்தலைவர்;
அவரது எண்ணங்கள்
எக்காலத்துக்கும்
ஏற்புடையவை;
முக்காலமும் உணர்ந்த
முனிவர் அவர்.
பிறந்த நாளிலேயே
இறந்துபோன
பெருந்தகை அவர்.

அவரது
இனிய நாளும்
நினைவு நாளும்
இணைந்த நாள்
விரைவில் வருகிறது.
உடனே அவருக்கு
சிலை எடுங்கள்;
மலர் வளையம் வையுங்கள்;
அஞ்சலி செலுத்துங்கள்.

கூடவே அவரது
கருத்துக்கள் அத்தனையும்
சிலைக்குக் கீழே
சமாதி ஆக்குங்கள்.
அவரை அப்போதே
மறந்துவிடுங்கள்!

Wednesday, November 4, 2009

இன்றைய சிந்தனை




கருவூலம்




சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

-ஒளவையார்

(நல்வழி -2)

மரபுக் கவிதை - 44

சகோதரா!

சகோதர பாசம் வளர்த்திடுவோம்!
சாதித்தீயை அனைத்திடுவோம்!

அண்ணன், தம்பிகள் அடித்துக்கொண்டு
அல்லல் படுவது இழிவய்யா!
அன்பை எங்கும் காட்டுங்கள்-
அனைவரும் ஒரு குலம் தானய்யா!

இறைவனின் பிள்ளைகள் நாமெல்லோரும்
இதிலே உயர்வு, தாழ்வென்ன?
குகனை அணைத்த ராமன் கதையை
குவலயம் முழுவதும் பரப்பிடுவோம்!

ஔவை முதலாய் பாரதி வரையில்
அனைவரும் சொன்னது ஒற்றுமையே!
நல்லவர், தீயவர் இரண்டே சாதி
நமக்குள் வேண்டாம் வீண் சண்டை!

குறிப்பு: தென் மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரத்தின்போது எழுதியது.
நன்றி: விஜயபாரதம்
(23.01.1998)

Tuesday, November 3, 2009

இன்றைய சிந்தனை

கருவூலம்

உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பதுகோடி நினைந்துஎண்ணுவன - கண் புதைந்த
மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போல
சாந்தனையும் சஞ்சலமே தான்.
-ஒளவையார்
(நல்வழி -28 )

உருவக கவிதை - 12


ஒழுங்கு படுத்து

ஒன்று:
நிலையற்ற மனம்
குறைகுடமாய்க்
கூத்தாடும் உடல்,
காற்றுவெளியில்
அலைக்கழியும்
காகிதப் பட்டமாய்
வாழ்க்கை.

மூன்று:
ஒப்பனை மனம்,
ஒளித்தாக வேண்டிய
திருமேனி,
ஓய்ந்து போகும் வாழ்க்கை.
நான்கு:
வசந்தக் கனவுகள்
வாட்டிய கங்கினில்
சிதைந்தது தேகம்,
சிதறிவிட்டது
உலகம்.

இரண்டு:
மருகி மருகி
குமைந்து
மலைத்து நிற்கும்
தேகம்,
மாய்ந்து மாய்ந்து
எழுதும்
எழுத்தில் மட்டும்
வேகம்.

ஆறு:
இருண்ட வானில்
ஒளிக் கீற்றைப் பிடித்தபடி
நடக்க நடக்க,
பாதை தெளியும்.
பாவம் குறையும்.
பாரம் தொலையும்.

ஐந்து:
இருப்பினும்
அசரீரி ஒலிக்கிறது:
நட, நட, நட!

ஒன்பது:
நாளை விடியும்;
நம்பிக்கையில்
இன்றிரவு தூக்கம்.

ஏழு:
குரங்கு மனம்,
கூடாத தேகம்,
கூக்குரலிட்டு ஒப்பாரி-
போதுமினி.

எட்டு:
இரக்கம்
தருவதற்கே;
பெறுவதற்கு அல்ல.
இறக்கம் கூட
ஏறுவதற்கே!
பத்து:
எல்லாம் சொன்னாலும்
'முடியும்' எனக்
கூறாமல் தொக்கும்
கவிதை.

Monday, November 2, 2009

இன்றைய சிந்தனை



குறள் அமுதம்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்.

- திருவள்ளுவர்
(நடுவுநிலைமை -114 )

மரபுக் கவிதை - 43


அரசியல்வாதி

அவன் தான் அரசியல்வாதி- அட
அவனது நெஞ்சம் முழுவதும் வஞ்சம்!

கொள்கைகள் பற்பல சொல்வான்- பின்
கொள்ளையடித்திட நோட்டம் விடுப்பான்!
பில்லிய சூனியம் இன்றி - தன்
பின்னே மக்களை பொய்யினில் வெல்வான்!

சாதியில் வேற்றுமை சொல்லி - பெருஞ்
சண்டைகள் மூண்டிட கண்டு களிப்பான்!
வீதியில் சென்றிடக் கூட - கீழ்
விரித்திட மலர்களை வாரி இறைப்பான்!

பல நிறமாய் ஒரு துண்டு - அது
பலமுறை பற்பல வகையினில் மாறும்!
ஊழலதே அவன் மூச்சு - வெறும்
ஊகமதே அவன் பேச்சென நாறும்!

துரோகம் செய்திட விழைவான் - அவன்
துணையாய் சென்றிட துயரம் சேரும்!
பாகம் பிரித்திடுவானே- லஞ்சப்
பணத்திலும் பங்குக்கு மோசடி செய்வான்!

ஊர்தொறும் முழங்கிடுவானே- பல
ஊரிலும் கூத்திகள் கொண்டிருப்பானே!
காரியம் ஆகிற வரையில் - நம்
காலைப் பிடித்துடன் வாரியம் விடுவான்!

கொலைகளும் மறைவாய்ச் செய்வான்- நற்
கொற்றவனென்று பேசித் திரிவான்!
அலைகிற நெஞ்சம் கொண்டான் - பெரும்
ஆசையினாலே சொத்துகள் சேர்ப்பான்!

பாடையில் போகிற வரைக்கும் -அவன்
பாவம் செய்திட விழைகிற பாவி!
மேடையில் ஊர்ந்திடும் ஜந்து -மிக
மேன்மைகள் கண்டிட காரணம் யாரோ?

குறிப்பு: சொந்த அனுபவமே கவிதை ஆகிறது என்பதற்கு இக்கவிதை நல்ல எ.டு.
எழுதிய நாள்: 07.05.1994

Sunday, November 1, 2009

இன்றைய சிந்தனை



விவேக அமுதம்


இந்தியா எழுச்சி பெறும் - உடல் பலத்தால் அல்ல, ஆன்மிக பலத்தால்; அழிவின் சின்னத்தால் அல்ல, அமைதியென்னும் கொடியால். இளைஞர்களே, என் நம்பிக்கை உங்களிடம் தான் இருக்கிறது. உங்கள் நாட்டின் அழைப்பிற்கு செவி சாய்ப்பீர்களா?
... முழு வேலையும் உங்கள் தோள்மீது இருப்பதாக எண்ணுங்கள். எனது தாய்நாட்டு இளைஞர்களே, இதை சாதிப்பதற்காக பிறந்தவர்கள் என்று நினையுங்கள். களத்தில் இறங்குங்கள்!

-சுவாமி விவேகானந்தர்

மரபுக் கவிதை - 42


சுதந்திரச் சங்கு - 1

சுதந்திரம் என்பது பிறப்புரிமை - அதை
அடைந்திட யாசகம் தேவையில்லை!
சுதந்திரம் என்னது உயிராகும் - அதை
இடறிட அனுமதி எவர்க்குமில்லை!
நன்றி: விஜயபாரதம்
(09.07.1999)

வசன கவிதை - 21

எனது நோக்கில் சுவாமி விவேகானந்தர்

ஓங்கி உயர்ந்த பலிபீடம்
கையில் கத்தியுடன்
அருகிலேயே நரி.
கீழே
கழுத்தைச் சிலிர்த்துக்கொண்டு
செம்மறி ஆட்டு மந்தையாய்
இந்தியர்கள்.

எல்லோரும் பலிபீடத்தை
புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தாங்கள் தான் வெட்டப் படுவோம்
என அறியாமலேயே
பலிபீடத்தை
வணங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைவர் கண்ணிலும்
ஓர் ஒப்பற்ற பரவசம்.
ஒ! அடிமையாய் இருப்பதில் தான்
எத்தனை ஆனந்தம்!

செம்மறி ஆடுகள்
குழுக் குழுவாய் கூடிக் குலாவி
ஆடிக் கொண்டிருக்கின்றன.
திடீரென
இருளைக் கிழித்துக் கொண்டு
ஒரு பேரொலி:

'ஏ, அடிமைகளே!
கொஞ்சம் சிந்தியுங்கள்!
சிங்கமென சீறுங்கள்!'

செம்மறி ஆடுகள்
நிமிர்ந்து பார்க்கின்றன-
யாருக்கோ, யாரோ, சொல்வதோ?

'ஏ, சிங்கங்களே
உங்கள் மூதாதையரை
சற்றே நினைந்து பாருங்கள்!'

மந்தை மனிதர்களின்
மனம் சிறிது
சிந்திக்க ஆரம்பிக்கிறது-
நம்மிடம் தான் சொல்கிறார்கள்-
யார் சொல்கிறார்கள்?

'ஏ, இந்தியர்களே!
நீங்கள்
கடவுளின் குழந்தைகள்!
அழியாத ஆன்மாவின்
அன்பு வடிவங்கள்!
நீங்கள் ஏன்
அந்நியரை அடி பணிகிறீர்கள்?'
பேரொலி உறுமுகிறது.

ஒரு தேசபக்திச் சுழற்காற்று
எண்திசைகளிலும் விரிகிறது-
அக்னிக் குஞ்சுகள்
தம் சிறகுகளை அசைக்க,
ஒரு புதிய ஒலி எங்கும் பாய,
அந்நிய மேலாண்மை
அரண்டு போகிறது.

பேரொலியும் புரட்சி வேகமும்
பின்னிப் பிணைந்தாட
சுவாமி விவேகானந்தரின்
அசரீரி முடிந்து போகிறது;
அது முடிகிற போது,
ஒரு தேசம் ஆரம்பமாகிறது.
நன்றி: மாணவர் சக்தி
(ஜனவரி 1999 )