வாழவைக்கும் செம்மொழி
இலங்கைப் பிரசினை உச்சத்தில் இருந்தபோது, மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, தமிழக முதல்வர் கருணாநிதியின் மூளையில் தோன்றிய ஐடியாதான், உலகத் தமிழ் மாநாடு. நல்ல வேளையாக, இதற்கு பொறுப்பான உலகத் தமிழ் ஆய்வு மன்றம் இந்த சதிக்கு உடன்படவில்லை. அதன் தலைவர் ஜப்பான் காரராக இருந்ததால் தப்பித்தது. அவர் நம்மூராக இருந்திருந்தால், கலைஞர் புராணம் பாடிய படியே, கல்லாப்பெட்டியை நிரப்பியபடி, உலகத் தமிழ் மாநாடு என்ற பெயரில் கழிசடை மாநாடு நடத்தப் பட்டிருக்கும்.
வேறு வழியின்றி, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப் பட இருக்கிறது. தமிழுக்கு இதனால் லாபம் இல்லாவிட்டாலும், தமிழைக் காக்கவே, தமிழரைக் காக்கவே (ஈழத் தமிழரை அல்ல) பிறப்பெடுத்த கருணாநிதிக்கு லாபம் தான். மாநாடு என்றால் கவியரங்கம் இல்லாமலா? அதுவும் கலைஞரைப் புகழும் நாமாவளி இல்லாமலா? இலங்கைப் பிரசினை இல்லாமல் ஒழித்த இரும்புத் தலைவர் பற்றிய பட்டிமன்றம் இல்லாமலா? ஆக மொத்தம், கலைஞருக்கும் லாபம்; கலைஞரைப் பாராட்டும் கலைஞர்களுக்கும் லாபம்.
இலங்கையில் முள்வேலி சிறைக்குள் லட்சம் தமிழர்கள் நொந்து செத்தால் என்ன? கலைஞர்களுக்கு எப்போதும் கூத்தும் கும்மாளமும் தான். வாழவைக்கும் செம்மொழி, வாழும் செம்மொழி, உலகிலேயே தமிழ் ஒன்று தான்.
வாழிய செந்தமிழ்!
வாழ்க நற்றமிழர்!
வாழிய டாக்டர் தமிழின தலைவரே!
.
.
No comments:
Post a Comment