Thursday, November 19, 2009

ஏதேதோ எண்ணங்கள்


உத்தம்ஜிக்கு இறுதி வணக்கம்!


மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களே சமுதாயத்தின் திசையை உணர்ந்துகொண்டு அதை நல்லபடி மாற்ற முயற்சிக்கிறார்கள். அத்தகையவர்களில் முன்னணி வகிப்பவர், ஸ்ரீ உத்தமராஜ் ஜி. ஸ்ரீபெரும்புதூர் அருகே நடுத்தர குடும்பத்தில் பிறந்த உத்தம்ஜி தேசிய மறுமலர்ச்சி பணியில் ஈடுபட்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் முழுநேர ஊழியராக 1968இல் இணைந்தார். சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், ரத்த தான இயக்கத்தை தமிழகத்தில் பரவலாக்க தீவிரமாகப் பாடுபட்டார்; பலநூறு ரத்த தான முகாம்களை அவர் நடத்தி இருக்கிறார்.
1975நெருக்கடி நிலையை எதிர்த்து போராடி, மிசா சட்டத்தின் கீழ் பதினாறு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையை தவச்சாலையாக்கிய அவரது திறமையும் அர்ப்பண மனப்பான்மையும் கண்டு, எதிரணி அரசியல்வாதிகள் கூட அவரது அபிமானிகள் ஆனார்கள்.
சங்கத்தின் வளர்ச்சிக்காக தமிழகத்தில் பாடுபட்ட தத்தாஜி, ஹன்றட்ஜி, சுதாகர்ஜி உள்ளிட்ட மூத்த ஸ்வயம்சேவகர்களைப் பற்றிய பதிவை வருங்காலத் தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் அதற்கான ஏற்பாடுகளில் தனது வாழ்வின் இறுதிக் கணத்தில் கூட முயன்றுவந்தார். காலத்தின் கோலத்தால், அவரும் அப்பட்டியலில் தற்போது இணைந்துவிட்டார்.
சிரித்த முகமும், மென்மையான பேச்சும், அதிராத நடையுமாக, அவரது உருவம் மனக்கண் முன் நிழலாடுகிறது. நான் சென்னையில் விஜயபாரதம் பத்திரிகையில் பணிபுரிந்தபோது, தினசரி அவரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். விஜயபாரதம் வளர்ச்சியில் அவருக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்திருக்கிறேன்.
அதில் நான் புதிய முயற்சியாக, 'கேளுங்கள்; சொல்கிறோம்' என்ற பகுதியை ஆரம்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தார்; தானும் பங்கெடுத்தார். அடிக்கடி எனது உடலைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறியிருக்கிறார்.
கடந்த நவம்பர் 7 இம் தேதி, தனது 73வயதில், அவர் மண்ணுலகில் இருந்து மறைந்தார். அவரது கண்களும், தேகமும் தானம் செய்யப்பட்டன. வாழ்வின் இறுதி வரை, கொண்ட கொள்கைக்காக வாழ்ந்த மகத்தான மகான் அவர். அவரது நினைவுகள் என்றும் நமக்கு வழி காட்டும்.
(கீழே அஞ்சலி கவிதை உள்ளது).
-வ.மு.முரளி.

No comments:

Post a Comment