Wednesday, November 25, 2009

உருவக கவிதை - 14



நிகழ்தகவு வாழ்க்கை


இருபுறமும் ஸ்டாலின் தலை கொண்ட
அரிய ரூபிள் நாணயம் ஒன்று
என்னிடம் உண்டு.

அதைக் கொண்டு 'பூவா, தலையா'
விளையாடத் துள்ளுது மனம்.
எதிராளி கோரும் சாத்தியம்
பூவாக மட்டுமே இருந்தாக வேண்டும்.


தீர்மானிக்க முடியாத முச்சந்திகளில்
நாணயம் சுண்டி பாதை காணலாம்.
ஆயின் எனது நாணயத்தை சுண்டுகையில்
நான் கோர வேண்டியது என்ன?

'பூவா, தலையா' விளையாடி மகிழ
எதிராளி அழைக்கையில்
துணுக்குறுகிறது மனம்-
அவனிடமும் ரூபிள் நாணயம் இருக்குமா?

இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.
ரூபிள் நாணயம் அல்லாது,
டாலர், யென், யூரோ நாணயங்களேனும்
எதிராளியிடம் என்னது போல
இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம்.

தயங்கி நடுங்குகிறது மனம்.
செல்லுமிடமெல்லாம் முச்சந்திகள்.
விளையாட அழைக்கிறார்கள்
எதிர்ப்படும் வழிப்போக்கர்கள்.

எனது ரூபிள் நாணயம்
எனக்கு லாபமா? எனது பாவமா?
நிகழ்தகவு ஆகிவிட்டது வாழ்க்கை.

No comments:

Post a Comment