பின்தொடர்பவர்கள்

Wednesday, November 11, 2009

வசன கவிதை - 25


ஒரு காலத்தில்...

செதிலென அரித்துக் கிடக்கும்
பாறைகளின் மௌனத்தின்
ஒரு சிறு இடுக்கில்
செவ்வெறும்புப் புற்று.
ஒரு காலத்தில்
வாளை மீன்கள் இவ்விடுக்குகளில்
தவழ்ந்திருக்க வேண்டும்.

சாலையோரம் நசுங்கிக் கிடக்கும்
வாகனத்தைக் கடந்து செல்கின்றன
வேக வாகனங்கள்.
ஒரு காலத்தில்
இவ்வாகனமும் காற்றைச் சாடி
விரைந்திருக்க வேண்டும்.

புகைந்துபோன புதர்களினூடே
குறுமுயலின் அழுகுரல்.
ஒரு காலத்தில்
அவ்விடம் வசந்த வனமாய்
இருந்திருக்க வேண்டும்.

ஏழெடுக்கு மாளிகை
சாரங்களில் கிறீச்சிடல்கள்.
ஒருகாலத்தில்
வானைத் தொட்ட மூங்கிலாய் அவை
விளைந்திருக்க வேண்டும்.

வேலியில் ஒளிந்திருக்கும்
அணிலின் ஏக்கப் பார்வை.
அருகில் நிற்கும் தென்னைமரம்
குருத்தோலை அழுகலால்
மொட்டையாகி இருக்க வேண்டும்.

வட்டப் பரிதியின் மாலைப் பொன்னொளியில்
தன்னை மறந்து மண்ணில் அளையும்
சிசுவின் நாசியில் புழுதி.
ஒருகாலத்தில்
நானும் கூட.
நன்றி: விஜயபாரதம்

No comments:

Post a Comment