பின்தொடர்பவர்கள்

Sunday, November 15, 2009

மொழிமாற்றக் கவிதை - 6


இளமையின் கர்வம்

ஒரு நாள்:

தோட்டத்திலே, காலையிலே ரோஜா மலர்ந்தது
வாட்டமான இளமைக்காக கர்வம் அடைந்தது.

சுக்குப் போல வறண்டிருந்த தோட்டக்காரரோ
பக்கத்திலே நின்றிருக்க, ரோஜா பார்த்தது.

''அதிக வயது ஆகிப் போன தோட்டக்காரரே
விதி உனக்கு முடிந்த தின்று'' என்று சிரித்தது.

நண்பகலில் வெப்பத்தினால் மேலும் விரிந்தது
மென்மையான சுகந்தத்தினை வீசி வந்தது.

மீண்டும் அவன் காலடியைக் கேட்ட போதிலே
வேண்டு மட்டும் கிண்டலாகச் சிரித்துக் கொண்டது.

மறுநாள்:

பாவமென்று பரிகசித்த ரோஜா மண்ணிலே
ஆவியற்று, அற்பமாக வாடிக் கிடந்தது.

முதியவராம் தோட்டக்காரர் பகலில் வந்தனர்;
விதி முடிந்த மலர்களினை வீசி எறிந்தனர்.

இளமை, அழகு நிலைத்திருந்து கண்டதுமில்லை.
இளமையினால் முதுமையினை எள்ளல் மடமையே!

குறிப்பு: இக்கவிதை 'ஆஸ்டின் டாப்சன்' எழுதிய 'தி ரோஸ் அண்ட் தி கார்டனர்'
என்ற ஆங்கிலக் கவிதையை தழுவி எழுதப் பட்டது.

No comments:

Post a Comment