ஒழுங்கு படுத்து
ஒன்று:
நிலையற்ற மனம்
குறைகுடமாய்க்
கூத்தாடும் உடல்,
காற்றுவெளியில்
அலைக்கழியும்
காகிதப் பட்டமாய்
வாழ்க்கை.
மூன்று:
ஒப்பனை மனம்,
ஒளித்தாக வேண்டிய
திருமேனி,
ஓய்ந்து போகும் வாழ்க்கை.
நான்கு:
வசந்தக் கனவுகள்
வாட்டிய கங்கினில்
சிதைந்தது தேகம்,
சிதறிவிட்டது
உலகம்.
இரண்டு:
மருகி மருகி
குமைந்து
மலைத்து நிற்கும்
தேகம்,
மாய்ந்து மாய்ந்து
எழுதும்
எழுத்தில் மட்டும்
வேகம்.
ஆறு:
இருண்ட வானில்
ஒளிக் கீற்றைப் பிடித்தபடி
நடக்க நடக்க,
பாதை தெளியும்.
பாவம் குறையும்.
பாரம் தொலையும்.
ஐந்து:
இருப்பினும்
அசரீரி ஒலிக்கிறது:
நட, நட, நட!
ஒன்பது:
நாளை விடியும்;
நம்பிக்கையில்
இன்றிரவு தூக்கம்.
ஏழு:
குரங்கு மனம்,
கூடாத தேகம்,
கூக்குரலிட்டு ஒப்பாரி-
போதுமினி.
எட்டு:
இரக்கம்
தருவதற்கே;
பெறுவதற்கு அல்ல.
இறக்கம் கூட
ஏறுவதற்கே!
பத்து:
எல்லாம் சொன்னாலும்
'முடியும்' எனக்
கூறாமல் தொக்கும்
கவிதை.
No comments:
Post a Comment