குப்பை - 2
வாழ்வில் அலைமோதும் மனிதர் போல
காற்றில் அலைகின்றன குப்பைகள்.
குப்பைகள் உயரப் பறக்கின்றன.
ஒன்றையொன்று உரசிக் கொண்டு
நாடகம் நடத்துகின்றன.
கல்லுளிமங்கனாய் சில
அசையாமல் கிடக்கின்றன.
குப்பைமேடு ராஜாங்கத்துக்கு
ஒரு குப்பை உரிமை கொண்டாடுகிறது.
மற்றொன்று மறுதலிக்கின்றது.
மூன்றாவதொன்று அணி அமைக்கின்றது.
காற்றில் குப்பைகள் அலைமோதுகின்றன.
தானே குப்பைமேட்டு மாணிக்கம் என்று
ஒரு குப்பை செப்ப,
குப்பைக் கூட்டம் ஆமோதித்து
படபடக்கின்றது.
அருகிலேயே கழிவுநீர் நாற்றம்.
யாரோ சவரம் செய்து வீசிய குப்பை
முடியாட்சி தமதென்று
ஒப்பாரி வைக்கிறது.
குப்பைகளுக்குள் தேர்தல்.
குப்பைமேடு குப்பைமேடாகி விட்டது.
சற்று முன் வரை
ஒற்றுமையாய் இருந்த குப்பைகள்
காற்றின் வீச்சில் இழுபட்டு
ஒன்றையொன்று கிழித்துக் கொள்ள
குப்பைமேடு தேர்தல் களமாகிவிட்டது.
குப்பைகளுக்கு
தானே பறப்பதாய் நினைப்பு.
தானே ராஜாவென்ற சிலிர்ப்பு.
உயரப் பறந்து மாணிக்கமாகும் முயற்சியில்
தெருவெங்கும் முடை நாற்றம்.
உயரப் பறந்த ஒரு குப்பை
மின்சாரக் கம்பியில் தகனமானது கண்டும்
உயரப் பறக்கும் ஆசை தீரவில்லை.
காற்றில் கலந்த கருகிய வாடை
குப்பைகளுக்கு கிளர்ச்சியூட்டுகிறது.
நாள் தோறும் தோட்டி வாரினாலும்
மீண்டும் மேடாகிறது
குப்பைமேடு.
குப்பையிலும் பல சாதி.
பிளாஸ்டிக் குப்பைக்கு மவுசு தனி.
நீண்ட நாள் வாழும் வரம் பெற்றதாயிற்றே?
கரையான்களுக்கும் கழுதைக்கும்
உணவாகும் காகிதக் குப்பைக்கு
ஆயுசு கம்மி.
மக்கிவிடும் இலைக் குப்பைக்கு
மதிப்பில்லை.
இன்றைய தேதியில் பெரும்பான்மை பலம்
பிளாஸ்டிக் குப்பைக்குத் தான்.
குப்பைக்கும் குடும்பம் உண்டு
ஆனால் கந்தர்வ குலம்.
எந்தக் குப்பை
எந்தக் குப்பையோடும் சேரும்.
காற்று வீசும் அனுசரனைக்கேற்றவாறு
குடும்பப் பிணைப்பு மாறும்.
குப்பைக்கு சிந்திக்கத் தெரியாது.
ஆனாலும் காற்றின் வேகத்துக்கு
ஈடுகொடுக்கும்.
குப்பையைக் கிளறக் கிளற
சுகமாக இருக்கிறது.
மண்ணோடு மக்கி மண்ணாகும் வரை
கிளறுவது தானே
குப்பையின் வேலை?
நன்றி: விஜயபாரதம் - தீபாவளி மலர்- 1999
(05.11.1999)
No comments:
Post a Comment