Thursday, November 26, 2009

உருவக கவிதை - 15


நான் அவர் இல்லை

நான்
எழுதினால் வசனம்
மடக்கி மடக்கி
அரைக்கால் புள்ளிகளுடன்
எழுதினால் கவிதை.
பேசினால் மாநாடு
ஏசினால் பொதுக்கூட்டம்.

நான்
நடத்தினால் நல்லாட்சி
செய்தால் ராஜதந்திரம்
தொண்டர்களுக்கு என் பெயரே
மறக்கக் கூடாத மந்திரம்.

நான்
தீட்டினால் திட்டம்
திட்டினால் வேலைநிறுத்தம்
சேர்ந்தால் கூட்டணி
சேர்த்தால் கட்சிநிதி.

நான்
நினைத்தால் செம்மொழி
சொன்னால் பொன்மொழி
இணைத்தால் குடும்பநலம்
இணைந்தால் தேசநலம்.
பெற்றால் பிள்ளை
மற்றதெலாம் நொள்ளை.

நான்
அணிந்தால் மருத்துவம்
கழகம் முழுவதும்
அறிந்த மகத்துவம்.
அரற்றினால் அரசியல்
அளித்தால் பதவி.
தூற்றுவோருக்கும் கிடைக்கும்
என் உதவி.

நான்
முழங்கினால் கொள்கை
தயங்கினால் கட்டுப்பாடு;
சீறினால் தன்மானம்
ஆறினால் கண்ணியம்;
பேசுவதெல்லாம் உண்மை
வாழ்வதே கடமை.

நான்
என்றும்
நான் தான்;
நீங்கள் இல்லை.
காரணம் யாதெனில்,
நான் 'ஸ்டப்ட் நான்'.
அதே சமயம்
நீங்கள் நினைப்பது போல
அவரில்லை நான்.

No comments:

Post a Comment