Friday, November 27, 2009

புதுக்கவிதை - 45


யாருக்கு மெத்தை?

'கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை'-
குழந்தைப் பிராயத்தில்
நெக்குருகச் செய்த
அதே சரண கோஷம்
துணுக்குறச் செய்கிறது.
மனக்கண்ணில்
நிழலாடுகின்றன
முள்வேலி முகாம்கள்.

விரதமிருந்து நடந்த
அதே பம்பைப் படுகை
முள்ளி வாய்க்காலாய்
தென்படுகிறது.

பெருவழியில் எதிர்ப்படும்
மரங்களில்
வன்னி மரங்களின்
தரிசனம்.

தேக பலமும் ஞான பலமும்
நல்கும்
புலி வாகனனை நோக்கி
புண்ணிய யாத்திரை.

கல்லும் முள்ளும்
யாருக்கு மெத்தை?
ஈழத் தமிழ் அகதியை
எண்ணுந்தோறும்
சங்கடப் படுத்துகிறது
சரண கோஷம்.

No comments:

Post a Comment