உத்தமர் எங்கள் மன்னவர்
பெயரில் மட்டுமல்ல
இயல்பிலும் செயலிலும்
நீங்கள் உத்தமர்.
பள்ளி மாணவர்களுக்கு
ஆசானாய் இருப்பதைவிட
பட்டறிவு குன்றிய
சமுதாயத்தின் ஆசானாக
இருப்பதையே நீங்கள்
எப்போதும் விரும்பினீர்கள்.
ஒடிசலான தேகம்;
ஓயாத வேகம்.
முகத்தில் மலர்ச்சி;
ஒட்டிப் பிறந்த புன்னகை.
அதிராத பேச்சு;
இவையே உங்கள் வீச்சு.
எதிர்த் தரப்பையும்
நெக்குருகச் செய்யும்
சங்க தத்துவம்
ஒளி வீசியது உங்களிடம்.
சிவராம்ஜியை நேரில்
அறியாதவர்கள் கூட
உணர்ந்து கொண்டார்கள்
தங்களிடம்.
எது வரினும் கலங்காத
'ஸ்திதபிரக்ஞ' நிலை கண்டு
உங்கள் அபிமானிகளான
அரசியல்மணிகள் பலர்.
பிரபலங்களின் நட்பும்
தொண்டர்களின் அன்பும்
சரிநிகராய்க் கருதிய
சகமானுடர் நீங்கள்!
ரத்தம் உறிஞ்சும்
அட்டைகள் மலிந்த
அரசியல்களத்தில் -
ரத்ததானிகளால்
மாற்றம் கண்டீர்கள்.
'ஸ்வயம்சேவகர்' என்ற
சொல்லின் நுண்பொருளை
அனுபவிக்க வைத்தீர்கள்.
வாழ்வின் இறுதியிலும்
ததீசியாய் தானம் செய்து
எங்களுக்குள்
புது ரத்தம் பாய்ச்சினீர்கள்.
தொண்டர்களே சங்கமென்று
குடும்பங்களுடன் குலாவினீர்கள்;
சங்கமே குடும்பமென்று
அவர்களும் உலாவினார்கள்.
தொண்டர்கள்
செயல்வீரர்களாகிறார்கள்;
தலைவர்களாகிறார்கள்;
இணைவதால்
இயக்கமாகிறார்கள்.
அதுபோலவே இயக்கமும் -
தொண்டர்களை உருவாக்குகிறது;
செயல்வீரர்களை வளர்த்தெடுக்கிறது;
தலைவர்களை தரம் உயர்த்துகிறது.
இது வாழையடி வாழை மரபு.
இந்த மரபை
எளிதாகக் காட்டினீர்கள்.
தொண்டனுக்குத் தொண்டனாய் வாழ்ந்து,
தலைவனின் இலக்கணத்தை
தளும்பாமல் காட்டி,
இயக்கமே பெரிதென்று
எல்லோருக்கும் சொன்னீர்கள்.
சென்ற இடமெங்கும்
நறுமணமாய்க் கமழ்ந்தீர்கள்.
அன்பு என்ற ஆயுதத்தால்
அனைவரையும் வென்றீர்கள்.
டாக்டர்ஜியின் மகத்துவமும்
குருஜியின் தத்துவமும்
குவியும் புள்ளியே
பரிபூரண ஸ்வயம்சேவகர்.
இந்தப் பட்டியலில் நீங்கள் -
என்றும் முன்னவர்;
எங்கள் மன்னவர்!
குறிப்பு: ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரசாரகரும் சங்க ரத்த வங்கியின் பொறுப்பாளருமான ஸ்ரீ உத்தமராஜ் ஜி கடந்த ஏழாம் தேதி காலமானார். அவருக்கு இது கவிதாஞ்சலி.
நன்றி: விஜயபாரதம் (04.12.2009)
*
*
No comments:
Post a Comment