பின்தொடர்பவர்கள்

Saturday, May 26, 2012

மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...
அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, ஊடங்களின் ஏகபோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கியது, இணையதளம் என்னும் அறிவியலின் அதி அற்புதக் கண்டுபிடிப்பே.

ஒருகாலத்தில் செய்தியை அறிய வேண்டுமானால், பத்திரிகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி வந்தது. அச்சு ஊடகங்களின்   பொற்காலம் அது. அதன் பிறகு வானொலி வந்தது. அது சிறிதுகாலம் செய்திப்பசி தீர்த்தது. இந்தியாவில் தொலைக்காட்சிகளின் வசீகர யுகம் துவங்கிய 1990 களில் இருந்து சுமார் 20 ஆண்டுகள் ஊடக சாம்ராஜ்யமாக நிலைகொண்டது தொலைக்காட்சி. 24 X 7 செய்தி அலைவரிசைகளின் வரவால், அச்சு ஊடகத் துறை சற்றே நிலைகுலைந்தது.

முன்னர் பத்திரிகைகளுக்கு வாசகர் ஒரு துணுக்கு எழுதி அனுப்பிவிட்டு காத்திருப்பார். அது பிரசுரமானால் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பல நேரங்களில்  வாசகர்கள் பத்திரிகைகளால் மதிக்கப்பட்டதில்லை. தங்கள் நுகர்வோர் வாசகர்களே என்ற அடிப்படை உண்மையை மறந்து, தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகைகளை இன்றும் காண முடிகிறது.

பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஏதாவது ஒருபக்கச் சார்புடன் தான் இயங்குகின்றன. 'தினமணி' போன்ற நாட்டுநலன் கருதும் பத்திரிகைகள்  இருக்கும் இடத்திலேயே தான் 'தி ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் இருக்கின்றன என்பது நெருடல் அளிப்பது. நமது நாட்டைவிட எதிரி நாட்டை நேசிக்க,  இது போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

இதே போக்குத்தான் செய்தி அலைவரிசைகளிலும் காணக் கிடைக்கிறது. அரைத்த மாவையே ஒரு மணிநேர இடைவெளியில் தொடர்ந்து அரைக்கும் சாதுரியம் கொண்டவை நமது தொலைக்காட்சிகள். நாட்டின் அரசியலையே தாங்கள் தான் நடத்துவதாக சில சேனல்கள் நம்பித் திரிகின்றன. சுயநல நோக்குடன் வெளியிடும் செய்திகளால் நாட்டுக்கு தீராத பாதிப்பை ஏற்படுத்தும் ஆங்கில செய்தி சேனல்கள் குறித்து தீர ஆராய வேண்டி இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் ஊழல் பெருச்சாளி ஒருவரை சேர்க்க சில பத்திரிகையாளர்கள் பாடுபட்ட விஷயம் அம்பலமானபோது நாடு அதிர்ந்தது.

தமிழ் சேனல்களோ அழுமூஞ்சித் தொடர்களால் நமது வீட்டுப் பெண்களைக் கட்டிப் போட்டிருக்கின்றன. வானொலி இப்போது அருகி வரும் சாதனம் ஆகிவிட்டது. சினிமா, நாடகத் தொடர்கள், வெறுப்பூட்டும் அரட்டைகள், என்று தமிழ் சேனல்கள் நோக அடிக்கின்றன.

இந்நிலையில், தகவல் தொடர்பு யுகத்தின் அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இளைய தலைமுறையினருக்கான மாற்று ஊடகமாக இணையம் உருவாகி இருக்கிறது. இன்று தனது கருத்தை யாரும் தெரியப்படுத்த இணையம் சுதந்திரம் வழங்கி இருக்கிறது. தனது கருத்தை வெளிப்படுத்த பாரம்பரியமான ஊடகங்களை யாரும் சார்ந்திருக்கத் தேவையில்லை.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சுயநலனுடனும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட நிலையில், அதன் செய்திப் பிதற்றல்கள கண்டு நொந்திருந்த வாசகருக்கு ஒரு வாய்ப்பாக சமூக இணையதளங்கள் முளைத்துள்ளன. இன்று உலகம் முழுவதுமே இதே நிலையைக் காண முடிகிறது. அதன் காரணமாக, பாரம்பரிய ஊடகங்களும் இணைய உலகில் நுழைந்துள்ளன. இணையக்   கருத்துக்களை அச்சேற்றுவதும் இப்போது துவங்கி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம்.

இன்று முகநூல்  (FACEBOOK) முகவரி இல்லாத இளைஞரைக் காண்பது அரிது; வலைப்பூ (BLOGS) நடத்தாத இளம் தலைமுறையைக் காண இயலாது. நிரந்தர இணையதள முகவரி, இப்போது வேலைக்காக  விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வின்னப்பங்களிலேயே இடம்பெறத் துவங்கிவிட்டது. மின்னஞ்சல் முகவரி நமது உலகின் முகவரியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. சிறு தகவல் பரிமாற்றம் (TWITTER) நடக்கும் யுகம் இது. இணையத்தின் அனைத்து வசதிகளையும் ஆர்வத்துடன் உள்வாங்குவதில் நமது இளைஞர்களும் இளைஞிகளும் உலகில் யாருக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருந்தவை சமூக இணையதளங்களே.

சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும்போதே, ஒருவரது சமூகப் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. உலகிற்கு தனது கருத்தைத் தெரியப்படுத்தத் துடிக்கும் விழைவே சமூகத் தளங்களில் வெளிப்படுகிறது. இணையத்தில் இவ்வாறு இயங்கும் இளைஞர்கள் ஆங்காங்கே ஓர் அமைப்பாக இணைவதும் இப்போது ஒரு நடைமுறையாக  மாறி வருகிறது.

பல்வேறு  சிந்தனை கொண்டவர்கள், பலவித கொள்கைகளைக் கொண்டவர்கள், மதம், ஜாதி, அரசியல், மொழி என பல விதங்களில் மாறுபட்டவர்கள் - அனைவரும் இணையம் என்ற ஒற்றைத் தொடர்பால் நண்பர்களாகி ஒருங்கிணைவது நல்ல மாற்றம்.  அந்த வகையில் இப்போது கோவையில் இயங்கும் வலைப்பூ பதிவர்கள் அனைவரும் 'கோவை பதிவர்கள்' என்ற குழுமமாக இணைவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜவுளி நகரமாக ஒருகாலத்தில் விளங்கிய கோவை தற்போது தொழில்நகரமாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகராகவும், கல்வி, மருத்துவத்தில் உயர்ந்துவரும் நகராகவும் உள்ள கோவை இலக்கிய உலகிலும் பல பதிவுகளைக் கொடு வளர்ந்து வருகிறது. இத்தகைய பெருமை கொண்ட கோவையை மையமாகக் கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களில் செயல்படும் பதிவர்களை இணைக்கும் பசையாக 'கோவை பதிவர்கள்' அமைப்பு  செயல்பட முடியும். இந்தச் சிந்தனை மனதில் தோன்றிய நண்பர்களுக்கும், அதை நனவாக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்த அமைப்பு, ஓர் மின்னஞ்சல் குழுமமாக மட்டுமல்லாது, வலைப்பூ தொகுப்பாளர்களாகவும் வளர்ச்சி பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துக்களை தத்தமது வலைத் தளங்களில் வெளிப்படுத்தி, மானுட ஞானத்தை மேலும் விரிவாக்குவோம். நாம் ஒருவரை ஒருவர் பாராட்டியும் விமர்சித்தும்,  நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்.

மாறிவரும் உலகின் தேவைகளை விவாதித்து அறியவும், சமூகச் சீரழிவுகளைக் கண்டிக்கவும், மாற்றத்துக்கான விதைகளை தூவவும், நல்ல விஷயங்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவற்றைக் கிரஹிக்கவும், நமது கலாச்சாரம் காக்கவும்,  நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், இணையத்தை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவோம்.

இது தொடர்பாக நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.(கோவை பதிவர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் எழுதியது)
 .
Friday, May 25, 2012

எண்ணங்கள்

 
கேள்விக்குறியாகும் 
பா.ஜ.க.வின் 
வருங்காலம்!
.
 பா.ஜ.க. மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானியின் சுயசரிதையான  'என் தேசம் என் வாழ்க்கை' புத்தகத்தில் இரு அரிய புகைப்படங்கள் உள்ளன. 55 ஆண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் மூன்று நண்பர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவை.

இளம் வயதில் அன்றைய பாரதிய ஜனசங்கத் தலைவர்களாக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பைரோன் சிங் ஷெகாவத், லால் கிருஷ்ண அத்வானி ஆகியோர் எடுத்துக்கொண்ட படம் முதலாவது.

அதன் எதிரில், பிரதமர் வாஜ்பாய், குடியரசு துணைத் தலைவர் ஷெகாவத், துணைப் பிரதமர் அத்வானி என அதே மூவரும் 55 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துக்கொண்ட புகைப்படம் இருக்கிறது. அதற்கு  '
அரசியலைத் தாண்டி நீடித்திருக்கும் நட்பு' என்று அத்வானி தலைப்பிட்டிருக்கிறார்.

இன்றைய பா.ஜ.க.வுக்குள் நிகழும் குழப்பங்களையும் மோதல்களையும் காணும்போது, மேலே குறிப்பிட்ட புகைப்படங்கள் நினைவில் வருவதைத் தடுக்க முடியவில்லை. இந்தியாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சியாக வளர்ந்து, கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திய பா.ஜ.க.வுக்கு என்ன ஆயிற்று?

இன்று பா.ஜ.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 9 மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளன. மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பிரதான எதிர்க்கட்சி பா.ஜ.க. தான்.

 அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்தால் பா.ஜ.க கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.

 ஆனால், அதற்கான தகுதியை பா.ஜ.க. சமீபகாலமாக இழந்து வருவதற்கான அறிகுறிகள் தோன்றத் துவங்கி உள்ளன. பல்வேறு ஊழல் புகார்களால் நம்பகத்தன்மையை இழந்து காங்கிரஸ் கட்சி தத்தளித்து வரும் நிலையில் பா.ஜ.க.வுக்கு அது சாதகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உள்கட்சிக் குழப்பங்களாலும், கட்டுப்பாடற்ற தன்மையாலும் நிலைகுலைந்து காணப்படுகிறது பா.ஜ.க. தேசியத் தலைமை. போதாதகுறைக்கு, பாஜக ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தில் காணப்படும் நிலைமை ஊழலை எதிர்த்துக் கேள்விக்குறியாக்குகிறது.

பா.ஜ.க. வலுவாக உள்ள பல மாநிலங்கள் உள்கட்சிப் பூசல்களால் கேலிப்பொருளாகி இருக்கிறது. இதற்கு உச்சகட்ட உதாரணம், கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கலகக்குரல். முதல்வர் சதானந்த கவுடாவுக்கு குடைச்சல் தருவதே எடியூரப்பாவின் அன்றாடப் பணியாகி விட்டது.

கர்நாடக பா.ஜ.க.வில் நிலவும் பூசல்களால், தென்மாநிலத்தில் அக்கட்சி அமைத்த முதல் ஆட்சி கவிழும் நிலையில் இருக்கிறது. இது போதாதென்று, பா.ஜ.க.வின் தேசியத் தலைமை முதுகெலும்பின்றித் தள்ளாடுவதாகக் குற்றம்வேறு சாட்டியிருக்கிறார் எடியூரப்பா.

பா.ஜ.க.வின் நம்பிக்கை நட்சத்திரமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல். அவருக்கு எதிராக, முன்னாள் முதல்வர் கேசுபாய் படேல் வரிந்து கட்டுகிறார். கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் கோர்தன் ஜடாபியா மகா குஜராத் ஜனதா கட்சியைத் துவங்கி பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

 ஒரு காலத்தில் குஜராத்தில் பா.ஜ.க.வை வளர்த்த இன்னொரு தலைவரான சங்கர் சிங் வகேலாவோ காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமாகி நரேந்திர மோடியின் ஜென்ம வைரியாகப் பிரசாரம் செய்கிறார்.

ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் 43 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்வதாக மிரட்டி, கட்சியின் இன்னொரு தலைவரான குலாப் சந்த் கடாரியா நடத்துவதாக இருந்த பிரசார யாத்திரையைத் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்; இப்போதைக்கு அம்மாநிலத்தில் பூசல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரியவில்லை.

80 எம்.பி.க்கள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. தலைவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர கட்சியின் ஆதரவோ, தொண்டர் பலமோ அதிகரித்ததாகத் தெரியவில்லை. தமிழக காங்கிரஸ் போல உ.பி. மாநில பா.ஜ.க. மாறிவிட்டது. உமா பாரதி, ராஜ்நாத் சிங், கல்ராஜ் மிஸ்ரா, வருண் காந்தி, யோகி ஆதித்யநாத் என்று கோஷ்டிகளின் பட்டியல்தான் நீள்கிறது.

முன்னாள் முதல்வரும் அயோத்தி இயக்க நாயகனுமான கல்யாண் சிங் நடத்தும் ஜன கிராந்தி கட்சி, முலாயம் சிங் கட்சியை விடத் தீவிரமாக பா.ஜ.க.வை எதிர்க்கிறது.

உத்தரகண்டில் நூலிழையில் ஆட்சியை இழந்த பா.ஜ.க.வுக்கு, முன்னாள் முதல்வர்கள் பி.சி. கந்தூரி, ரமேஷ் போக்ரியால் ஆகியோரது நிழல் யுத்தம் மேலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

 காங்கிரஸ் முதல்வர் பகுகுணாவுக்கு ஆதரவாக இரு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதாக அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜார்க்கண்டில் பா.ஜ.கவுக்கு எதிரி, அக்கட்சியின் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டிதான். அவரது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா வாக்குகளைப் பிரித்தால் பா.ஜ.க. நிலைமை சிக்கல்தான்.

தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் பல சாதகமான வாய்ப்புகள் இருப்பினும், மதன்லால் குரானா, விஜய்குமார் மல்ஹோத்ரா, விஜய்கோயல், விஜேந்தர் குப்தா என்று நீளும் தலைவர்களிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், காங்கிரஸ் தெம்பாக இருக்கிறது.

இமாச்சலில் முதல்வர் பிரேம்குமார் துமலும், முன்னாள் முதல்வர் சாந்தகுமாரும் எதிரணியாகவே செயல்படுகின்றனர். மகாராஷ்டிரத்தில் முன்னாள் துணை முதல்வர் கோபிநாத் முண்டேவின் அதிருப்திக் குரலை இப்போதைக்கு கட்டுப்படுத்தி இருக்கிறது மத்தியத் தலைமை. ஜம்மு-காஷ்மீரில் பாஜக மாநிலப் பிரிவு முற்றிலும் குலைந்திருப்பது தலைமைக்கு கவலை அளிக்கும் விஷயம்.

 பாஜகவின் மத்திய தலைமையிடம் எடுத்துச்செல்லாமல், இப்போதே பிரதமர் கனவில் வலம் வரத் தொடங்கிவிட்டார் சுஷ்மா சுவராஜ். அவருக்கும் அருண் ஜெட்லிக்கும் இடையேயான 'நீயா, நானா' போராட்டம் தலைநகர அரசியல் வட்டாரங்களில் சிரிப்பாய் சிரிக்கிறது. ஜஸ்வந்த் சிங்கும், யஷ்வந்த் சின்ஹாவும் கட்சியில் இருக்கிறார்களா இல்லையா என்பது எப்போதாவது தான் தெரிகிறது. அவர்களுக்குள்ளும் போட்டியும் பொறாமையும்.

இப்படி, கொள்கைக்காக வாழ்ந்த தலைமுறை மாறி, தனிப்பட்ட பிரமுகர்களிடையிலான போட்டிக்களமாக பா.ஜ.க. மாறி வருவது துரதிருஷ்டம். வேடிக்கை என்னவென்றால், இந்தத் தலைவர்கள் யாருக்குமே வாஜ்பாயிக்கோ, அத்வானிக்கோ இருப்பது போன்ற தனிப்பட்ட மக்கள் செல்வாக்குக் கிடையாது என்பதுதான்.

 கட்சிக்குள் அன்னியோன்யமாக இணைந்து பணி புரிந்த தலைவர்கள் இன்று சுயநலனுடன் மோதிக் கொள்வதைத் தடுக்காவிட்டால், பா.ஜ.க.வின் ஆட்சிக் கனவு நிறைவேறாமலே போய்விடும். 

 .
இப்போதைய பா.ஜ.க. தலைமை முன்னுள்ள கடுமையான சவால், 'என் பதவி, என் குடும்பம்' என்று மாறத் துடிக்கும் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது தான். இச்சவாலில் பா.ஜ.க. வெல்லுமா? நிதின் கட்கரி முன்பு நிகழ்காலம் கேள்வியாக நிற்கிறது. 
.
ஜனதா என்றாலே குழப்பம் என்று பெயர் போலிருக்கிறது. ஒருவேளை, பாரதிய ஜனதா கட்சி  மீண்டும் பாரதிய ஜனசங்கம்  என்று பெயரை மாற்றிக் கொண்டால்  பிரச்னைகள் தீருமோ என்னவோ? 
.
நன்றி:  தினமணி (25.05.2012)

.

Friday, May 18, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் - ஓர் இணைய (இனிய) உதயம்அன்பான நண்பர்களுக்கு,

வணக்கம்.  

கோவை வட்டாரத்தில் இயங்கும் வலைப்பதிவர்கள் இணையும் வகையில், 'கோவை பதிவர்கள்' என்ற இணைப்பகமும், ஓர் குழுமமும் துவங்கி  உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இந்தக் குழுமத்திலும் இணைப்பகத்திலும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி  கொள்கிறேன். 

சில பத்திரிகைகளைத் தவிர, பெரும்பாலான ஊடகத் துறை ஆதிக்க சக்திகளின்  வசமாகி உள்ள நிலையில், சமூக வலைத்தளங்களின் பொறுப்பு கூடுகிறது. நாட்டைக் காக்க ஐந்தாவது தூணாக உள்ள ஊடகம் வழிதவறும் நிலையில், தன்னிச்சையான ஆர்வலர்களின் ஊக்கமூட்டும் எழுத்தாக்கங்களே  நாட்டைக் காக்க முடியும். அந்த வகையில்,  'கோவை பதிவர்கள்' இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.

வலைப்பூக்களை வெட்டி அரட்டைகளுக்குப் பயன்படுத்தாமல், சுய முன்னேற்றத்துக்கும் நாட்டு வளர்ச்சிக்கும் உதவுவதாக  கட்டமைப்போம்.

இந்தப் பணியில் ஈடுபடும் நண்பர்களுக்கு என்னால் இயன்ற உதவிகள் என்றும் உண்டு. இதனை எனக்கு அறிமுகப் படுத்திய நண்பர் திரு. சங்கவிக்கு நன்றி. 

தொடர்புக்கு: http://www.kovaibloggers.in/ 


Thursday, May 17, 2012

எண்ணங்கள்


பண்பாட்டின் அச்சாணிகளைப் பாதுகாப்போம்!

அண்மையில் கோவில் திருவிழாக்களில் நடந்த சில அசம்பாவிதங்கள், விழா முன்னேற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி உள்ளன. குறிப்பாக, ஒரு வார காலத்துக்குள் ஐந்து வெவ்வேறு இடங்களில் நடந்த தேரோட்ட நிகழ்வுகளில் விபத்துக்கள் நேரிட்டு, பக்தர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளன.

குடியாத்தம் சிவகாமசுந்தரி- பாலசாதுலீஸ்வரர் கோவில் தேரோட்டம் மே 2ல் நடைபெற்றது. அப்போது தேரின் கலசம் மின்கம்பியில் உராய்ந்ததில் ஏற்பட்ட மின்சார விபத்தில் 4 பக்தர்கள் பலியாகினர்.

அதேநாளில் நாகூரில் நடந்த சந்தனக்குட ஊர்வலத்தில் அலங்கார வாகனத்தில் மின்சார விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகினர். இவ்விரு விபத்துகளிலும் மின்இணைப்புகளைப் பாதுகாப்பாகக் கையாள்வதில் இருந்த கவனக்குறைவு விழாவை அமங்கலமாக்கிவிட்டது.

ஆரணி, கோட்டை கைலாசநாதர் கோவில் தேரோட்டம் மே 3ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சக்கரம் உடைந்து தேர் கவிழ்ந்ததில் 5 பக்தர்கள் பலியாகினர்; பலர் படுகாயம் அடைந்தனர்.

ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில் தேரோட்டம் மே 4ல் நடந்தது. இதில் தேர் கட்டுப்பாடிழந்து பக்கவாட்டில் சுவர் மீது மோதியதை அடுத்து தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆண்டிப்பட்டி கதலி நரசிங்கப்பெருமாள் கோவில் தேரோட்டம் மே 6ல் நடந்தது. அப்போது தேரின் அச்சாணி முறிந்ததால் தேர் கவிழும் நிலை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. எனவே இத்தேரோட்டம் துவக்கத்திலேயே நிறுத்தப்பட்டது.

கோவை அருகிலுள்ள பாலமலை மீது மே 5ல் நடந்த தேரோட்டம், சாலையில் இருந்த பள்ளத்தால் விபத்தைச் சந்தித்தது. இதில் தேர் கவிழ்ந்து பக்தர் ஒருவரது உயிரைக் காவு கொண்டது; மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேற்கண்ட விபத்துக்கள், ஆயிரக் கணக்கில் மக்கள் கூடும் கோவில் திருவிழாக்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மறுசிந்தனைக்குள்ளாக்கி உள்ளன. ÷ஊர் கூடித் தேர் இழுப்பது என்பது தமிழகப் பண்பாட்டின் சிறப்பான அங்கம். தேரோட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்பு கட்டாயமாக உள்ளது. அனைவரும் இணைந்து தேரோட்டம் நடத்தும்போது சமூக ஒற்றுமை உறுதிப்படுகிறது.

இதை உணராமல் கண்டதேவி கோவிலில் தேரோட்டத்தில் நடந்த குளறுபடிகளால் சமூக ஒற்றுமை பாதிக்கப்பட்டதை அறிவோம். இப்போது தேரோட்டமே ஆபத்தானதாக மாறி வருவது, அறநிலையத் துறையிலுள்ள குளறுபடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளது.

நமது மரச்சிற்பிகளின் அற்புதக் கலையாற்றலுக்குக் கட்டியம் கூறுபவை கோவில் தேர்கள். நுண்ணிய, அழகிய சிற்பங்கள் நிறைந்த திருவாரூர் ஆழித்தேரும், அவிநாசித் தேரும் பிரபலமானவை. ஆனால் தேர்களை நமது கோவில் நிர்வாகங்கள் பராமரிப்பது எப்படி என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.

மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பனியில் உறைந்து, சாலையோரம் தகரத் தடுப்புகளுக்குள் தத்தளிக்கின்றன நமது கோவில் தேர்கள். தேரோட்டத்தின்போது மட்டுமே இவற்றுக்கு மரியாதை.

இந்தத் தகரத் தடுப்புகளும் கூட 1989ல் அவிநாசி கோவில் தேர் எரிந்த பிறகு ஏற்பட்ட ஞானோதயத்தால் தான் அறநிலையத் துறையால் அமைக்கப்பட்டன. மற்றபடி தேரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பதற்கு எந்த வழிகாட்டிக் குறிப்புகளும் கோவில்களில் இல்லை.

இயற்கையாகவே உளுத்துப் போகும் தன்மை கொண்ட மரத்தேர்களைப் பாதுகாப்பது குறித்து அறநிலையத் துறை கவலைப்படுவதும் இல்லை. தேரோட்டத்துக்கு ஒரு வாரம் முன்னதாக வார்னிஷ் பூசுவதும், சக்கரங்களைச் செப்பனிட்டு உயவு எண்ணெய் பூசுவதும், தோரணங்களால் அலங்கரிப்பதும் மட்டுமே பராமரிப்பு என்று கருதப்படுகிறது.

இதே நிலை நீடித்தால், நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழகத் தேர்கள் பலவும் விபத்தில் சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. கோவில் கோபுரம் போலவே பூஜைக்குரியதான கோவில் தேர்களின் அவல நிலை குறித்து அரசு ஆய்வு நடத்த வேண்டிய வேளை வந்துவிட்டது.

ரதவீதிகளின் பராமரிப்பு, விழாக்காலங்களில் மின்இணைப்பு பராமரிப்பு, திருவிழாக் கூட்டத்தைக் கையாள்வது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இவ்விஷயத்திலும் அரசு தெளிவான விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டுதான் அதிகமான தேரோட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. கோவில் கொடிக்கம்பம் சாய்வதும் கோவில் தேர் கவிழ்வதும் அரசுக்கு ஆபத்தான அறிகுறிகளாகவே சொல்லப்பட்டு வந்துள்ளன. இவற்றின் பின்னணியில் வேறு சதிச்செயல்கள் ஏதேனும் இருக்குமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுவது நல்லது.

கோவில் திருவிழாக்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து ஒரு நெகிழ்ச்சியான மாறுதலை அளித்து, ஆண்டு முழுமைக்குமான உந்துசக்தியைத் தர வல்லவை. அவ்விழாக்களில் நேரிடும் விபத்துக்கள் நமது சிறப்பான பாரம்பரியம் மீது அவநம்பிக்கை கொள்ளச் செய்வதாக மாறிவிடும்.

எனவே ஆன்மிகத்தில் நாட்டமுள்ள அன்பர்கள், தேர்களைப் பராமரிக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முன்வர வேண்டும்.

கோவில் தேர்கள் நமது பண்பாட்டின் சின்னங்கள்; நமது ஒற்றுமையின் அச்சாணிகள். அவை முறிந்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.

.

Friday, May 4, 2012

எண்ணங்கள்நமது தார்மிக வீழ்ச்சி 

பாலியல் சர்ச்சைகளுக்கும் இந்திய அரசியலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. அண்மையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து அபிஷேக் சிங்வி விலகக் காரணமானது கூட பாலியல் சர்ச்சை தான். தன்னுடன் பணிபுரியும் பெண் வழக்குரைஞருடன் தகாத செயலில் அவர் ஈடுபட்டபோது விடியோ பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோ பதிவுகள் தொலைக்காட்சிகளில் வெளிவராமல் தடையாணை பெற்ற சிங்வியால் சமூக வலைத்தளங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு ஒரு வார காலத்துக்கு சிங்விதான் மிகவும் தேடப்பட்ட நபராக இருந்தார். ஆரம்பத்தில் இந்தச் சர்ச்சைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று மறுத்து வந்த சிங்வி, இறுதியில் கட்சியின் பெயரைக் காப்பாற்ற பதவி விலகி இருக்கிறார்.

இப்போதும்கூட சிங்விக்கு காங்கிரஸ் கட்சி வக்காலத்து வாங்குகிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் முடிச்சுப் போடக் கூடாது என்று அக்கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு இத்தகைய சர்ச்சைகள் புதியவை அல்ல. 1995-இல் தனது மனைவி நைனா சஹானியைக் கொலை செய்த தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏ.வுமான சுஷீல்குமார், அந்தச் சடலத்தை தந்தூரி அடுப்பில் எரித்தார். இந்தக் கொலைக்குக் காரணம்கூட முறையற்ற உறவுதான். 2003-இல் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களின் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரி ஆந்திரப் பிரதேச மாநில ஆளுநராக இருந்தபோது நிகழ்ந்த வெட்கக்கேடான சம்பவத்தை மறக்க முடியாது. ஆளுநர் மாளிகையிலேயே மூன்று பெண்களுடன் கும்மாளமிட்டதாக திவாரி மீது விடியோ ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்டது. அதையடுத்து அவர் 2009 டிசம்பரில் பதவி விலக வேண்டிவந்தது.

இதைவிட வேதனையான நிகழ்வு, திவாரிதான் தனது உண்மையான தந்தை என்று நிரூபிக்க நீதிமன்றத்தில் போராடிவரும் ரோஹித் சேகரின் வாழ்க்கை. தனது தாய் உஜ்ஜாலா சர்மாவுக்கும் திவாரிக்கும் இடையிலான கள்ள உறவில் பிறந்தவன்தான் என்று நிரூபிக்க அவர் போராடுகிறார். இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க மரபணு சோதனைக்கு ஆட்படுமாறு திவாரிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

நாட்டின் ஆளும் கட்சி மட்டுமல்ல, பிரதான எதிர்க்கட்சியும் இவ்விஷயத்தில் சளைத்ததல்ல. பாஜக முழுநேர ஊழியரும் தேசிய பொதுச்செயலாளருமான சஞ்சய் ஜோஷி, ஒரு பெண்ணுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காக 2005-இல் கட்சியிலிருந்தே விலகினார். அண்மையில் தான் கட்சிக்குள் அவர் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநில சட்டப்பேரவையில் செல்போனில் ஆபாசப்படம் பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்எல்ஏ.க்கள் சி.சி.பாட்டீல், லட்சுமண சவதி, கிருஷ்ண பலேமர் ஆகியோர் பேரவையிலிருந்து தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீதான விசாரணை தற்போதும் நடக்கிறது.

விசாரணையில், மேலும் 15 எம்எல்ஏ.க்கள், கட்சி வித்தியாசமின்றி இக்காட்சியை ரசித்தது தெரிய வந்தது. மக்களாட்சியின் கோவிலான சட்டப் பேரவைக்கு நேரிட்டிருக்கும் நிலை பரிதாபமானது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் அக்கட்சியின் அமைச்சரான ஷோபா கரந்தலேவை தொடர்புப்படுத்தி பலவிதமான பிரசாரங்கள் செய்யப்பட்டுவிட்டன; வித்தியாசமான கட்சி என்ற தனது முத்திரை வாக்கியத்தை இழந்து நிற்கிறது பாஜக.

1990-களில் கேரளத்தில் பிரசித்தி பெற்ற ஐஸ்கிரீம் பார்லர் வழக்கு நமது அரசியல்வாதிகளின் அசிங்கமான பக்கத்தைத் தோலுரித்தது. கோழிக்கோட்டில் ஒரு ஐஸ்கிரீம் பார்லரில் விபசாரத் தொழில் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம் லீக் தலைவர் குன்னாலிக்குட்டி மீது வழக்கு நடக்கிறது. இன்றும் அவர் கேரளத்தில் முக்கியமான அமைச்சராக நீடிக்கிறார்.

இவ்வாறாக இந்திய அரசியலில் பாலியல் சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்து அடங்குகின்றன. இந்தியாவில் பாலியல் கருத்துகள் வெளிப்படையாக விவாதிக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை. அதேசமயம் அதிகார பலத்தால் பாலியல் வரைமுறைகளை மீறவும் அரசியல்வாதிகள் தயங்குவதில்லை. இவ்விஷயத்தில் ஒரு விசித்திரமான அலட்சிய மனப்பான்மை நமது மக்களிடையே நிலவுவதுதான் புரியாத புதிர்.

துறவறத்தை உயர்ந்ததாகப் போற்றும் பண்பாடு இந்தியப் பண்பாடு. இல்லறத்திலும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த கலாசாரம் உள்ள நாடு இந்தியா. நமது வீட்டில் இந்த உயர்ந்த கோட்பாடுகளைக் கடைப்பிடிக்கும் நாம், பொதுவாழ்க்கையில் இவை மீறப்படும்போது புலம்புவதுடன் நிறுத்திக் கொள்கிறோம். அதுதான் விசித்திரம்.

போகபூமி என்று விவேகானந்தரால் வர்ணிக்கப்பட்ட அமெரிக்காவில், அதிபர் கிளிண்டன் ஒரு பெண்ணுடன் நெருக்கமான உறவு வைத்திருந்தார் என்பதற்காக அவரது ஆட்சிக்கு அந்நாட்டு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். பாலியல் சுதந்திரம் உள்ள அமெரிக்காவிலேயே தமது ஆட்சியாளர்களும் தலைவர்களும் தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்று அம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாமோ, தனிப்பட்ட வாழ்க்கையில் தூயவர்கள். அதேசமயம், நமது தலைவர்கள் உதிர்க்கும்  ‘பொது வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு’ என்ற தத்துவங்களை ஜீரணித்தபடி வாழ்கிறோம். நமது தார்மிக வீழ்ச்சி வருத்தம் அளிக்கிறது.

- தினமணி (04.05.2012).
நன்றி: மதி (தினமணி- 28.04.2012 )
.
.

எண்ணங்கள்

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்

.அன்புள்ள ஜெ.மோ,

வணக்கம்.

உங்கள் யானைப்பலி கட்டுரை கண்டேன். மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். அடிக்கடி ‘யானைகள் அட்டகாசம்’ செய்தி வெளியாகும் கோவை மாவட்டத்தில் இருக்கும் எனக்கு, யானைகள் படும் பாடு உங்களைப் போலவே துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.

யானைகள் நடமாடும் வழித்தடங்களை ஆக்கிரமித்து கான்கிரீட் கட்டடங்களையும் வேலிகளையும் அமைத்துவிட்ட நிலையில், யானைகள் தடுமாறுகின்றன. அவை தடம் மாறிக் குடியிருப்புப் பகுதிக்குள் நுழையும்போது, “யானைகள் அட்டகாசம்” என்று செய்தி வெளியிட்டு அதுகுறித்து சட்டசபையிலும் நாம் பேசுகிறோம். உண்மையில் அட்டகாசம் செய்வது யார்? யானைகளைக் கண்காணிக்க கருவி மாட்டுவதற்காக மயக்க ஊசி செலுத்தியதில் உயிரிழந்த யானைக்கு பதில் சொல்ல யாருமில்லை. கேட்கவும் நாதியில்லை.

இது குறித்த எனது ‘வென்றவனின் பிரகடனம்’ என்ற கவிதை எனது வலைப்பூவில் 12.07.2011 -ல் எழுதினேன் (http://kuzhalumyazhum.blogspot.in/2011/07/88.html).

யானைகள் நமக்குப் பிரியமானவை. அதே சமயம் நம்மால் அதிகமாகக் கொடுமைப்படுத்தப்படுபவை. அரை வயிறு கூட நிறையாமல், கோவில் வாசலில் நாம் போடும் ஒரு ரூபாய்க் காசுக்காக நமது தலையை வருடப் பயிற்சி அளிக்கப்பட்ட பரிதாப ஜீவன்களாக அவை காட்சி அளிக்கின்றன.

நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ஒவ்வொரு தகவலும் உண்மை. இந்த அடிமைத் தளையை உடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. உங்கள் தார்மீக ஆவேசம் அனைவரிடத்திலும் பரவ வேண்டும். சூழல் இயக்கங்கள் இதனை ஒரு போராட்டமாகவே முன்னெடுக்க வேண்டும்.

உங்கள் கட்டுரைக்கு மனமார்ந்த நன்றி.

-வ.மு.முரளி

.