பின்தொடர்பவர்கள்

Friday, January 28, 2011

எண்ணங்கள்உங்களுக்கும் பிடிக்கும்...


எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியுள்ள 'மீனவர் படுகொலை' குறித்த கட்டுரை, நமது அரசின் அக்கறையின்மையையும், நாட்டின் அவல நிலையையும் வெளிப்படுத்துகிறது. மக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது எழுத்தாளர்களின் கடமை என்று செயல்படும் ஜெயமோகனின் கட்டுரை நீங்களும் படிக்க வேண்டியது....

.

Wednesday, January 26, 2011

எண்ணங்கள்காஷ்மீரில் தேசியக்கொடி: சில சிந்தனைகள்

1932- சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலகட்டம். ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில் அணிவகுத்து முன்னேறிய விடுதலைவீரர்களின் ஊர்வலம் காவலர்களால் தாக்கப்பட்டது. மூவண்ணக் கொடியைத் தாங்கி முன்னேறிய குமாரசாமி என்ற இளைஞர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அப்போதும் அவர் கரத்திலிருந்த மூவண்ணக் கொடியை அகற்ற முடியவில்லை. அந்தப் போராட்டத்தில் உயிர்நீத்து, கொடிகாத்து, திருப்பூர் குமரனாக சரித்திரத்தில் இடம் பெற்றார் அந்த இளைஞர்.

திருப்பூர் குமரன் தாங்கிய கொடி, அந்நாளில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியின் கொடி. அதுவே பின்னாளில் நமது மூவண்ண தேசியக்கொடிக்கு ஆதாரமானது. அதே காங்கிரஸ் கட்சி, இன்று ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் தேசியக்கொடி ஏற்றுவதை அரசியல் விளையாட்டு என்று வர்ணிப்பது, காலத்தின் கோலமோ?

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வின் சின்னமாக விளங்கிய காங்கிரஸ் இன்று, அந்த அடையாளத்தை பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.விடம் தத்துக் கொடுத்துவிட்டு தடுமாறுகிறது. பா.ஜ.க.வோ கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் காங்கிரஸின் செயலற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக, புலிவாலைப் பிடிக்கவும் தயாராக இருக்கிறது.

அண்மைக்காலமாக பிரிவினைவாதிகளின் பிடியில் தவிக்கும் காஷ்மீரில், சுதந்திரதினம், குடியரசு தினங்களில் நமது தேசியக்கொடி அவமதிக்கப்படுவது சாதாரண விஷயமாகிவிட்டது. அதைவிடக் கொடுமை, அங்கு தேசிய தினங்களில் பாகிஸ்தான் தேசியக்கொடியை ஏற்றி பிரிவினைவாதிகள் எக்காளமிடுவதுதான்.

கடந்த ஓராண்டாக, ஜம்மு காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு அங்கு பிரிவினைப் பிரசாரம் ஓங்கி இருக்கிறது. முதிர்ச்சியற்ற முதல்வர் ஓமர் அப்துல்லாவின் ஆட்சி பிரிவினைவாதிகளுக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துவிட்டது. இதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் தவிர்த்து, மத்திய அரசும் தன் பங்கிற்கு நிலைமையை சிக்கலாக்கியது.

இந்நிலையில் தான், இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று ஸ்ரீநகர் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றப்போவதாக பா.ஜ. யுவமோர்ச்சா அறிவித்தது. இதற்கென ராஷ்ட்ரீய ஏக்தா யாத்திரையை (தேசிய ஒருமைப்பாட்டு யாத்திரை) அதன் தலைவர் அனுராக் தாகூர் கொல்கத்தாவிலிருந்து துவக்கினார்.
பிரிவினைவாதிகளுக்கு அஞ்சி அங்கு தேசியக்கொடி ஏற்றுவதை அரசு தவிர்ப்பதை அடுத்தே, இந்த அரசியல் போராட்டத்தை பா.ஜ.க. அறிவித்தது. சென்ற குடியரசு தினத்தன்று லால்சவுக்கில் நமது தேசியக்கொடி எரிக்கப்பட்டதை பா.ஜ.க. சுட்டிக்காட்டியது.

மாநில முதல்வரே அங்கு தேசியக்கொடி ஏற்றுவதாக அறிவித்து, இந்த அரசியல் போராட்டத்தை முளையிலேயே கிள்ளியிருக்க முடியும். இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் அடைவதைத் தடுத்திருக்கலாம். ஆனால், ஜம்மு காஷ்மீர் மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி, இதை கௌரவப் பிரச்னையாக்கி, தேசியக்கொடி ஏற்றுவதையே சவாலான விஷயமாக்கிவிட்டன.

ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள சூழலில் குடியரசு தினத்தை சிக்கலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த முதல்வர் ஓமர், பா.ஜ.க.வினர் லால்சவுக் வர அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்தார். ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதி முழுவதும் சீலிடப்பட்டது.

தேசியக்கொடி ஏற்றுவதன் மூலமாக பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறிய பிரதமர் மன்மோகன் சிங், இதை பா.ஜ.க. அரசியலாக்குவதாகக் குறைப்பட்டார். அவரும் கூட, தேசியக்கொடி ஏற்றுவது எப்படி பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் என்று விளக்கவில்லை. பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதிகளை அடக்குவதாக இல்லாமல், அவர்களது செயல்முறையை ஆதரிப்பதாகவே தோற்றமளிக்கிறது.

இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் ஜம்மு விமான நிலையத்தில் தடுக்கப்பட்டு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதைவிட வியப்பளிப்பது, கர்நாடகாவிலிருந்து ஜம்மு சென்ற பா.ஜ.க. தொண்டர்கள் பயணித்த ரயில் மகாராஷ்டிராவில் மறிக்கப்பட்டு, ரயில்பெட்டி இணைப்பைத் துண்டித்து பெங்களூருக்கு திருப்பி அனுப்பியதுதான். இறுதியில், கடும் அடக்குமுறைகளைக் கையாண்டு, பா.ஜ.க.வின் தேசியக் கொடியேற்றும் முயற்சியை தடுத்திருக்கிறது மாநில அரசு.

ஜம்மு காஷ்மீரை மையமாகக் கொண்ட இந்தப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துவதில் அதிசயமில்லை. ஏனெனில், பா.ஜ.க.வின் முந்தைய வடிவான பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் சியாம பிரசாத் முகர்ஜி, ஜம்மு காஷ்மீர் பாரதத்தின் அங்கம் என்று நிலைநாட்டுவதற்காக 1953-ல் காஷ்மீர் நுழைவுப் போராட்டம் நடத்தி, கைதாகி, சிறையிலேயே உயிரிழந்தவர்.

சுதந்திரம் பெற்றபோது ஏற்பட்ட குழப்பமான சூழலில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ உரிமைகள் அன்றைய பிரதமர் நேருவால் வழங்கப்பட்டன. அதன் பயனாக, ஜம்மு காஷ்மீர் முதல்வர் அம்மாநில பிரதமர் என்றே அழைக்கப்பட்டார். காஷ்மீர் மாநில அரசுக்கு தனிக்கொடியும் இருந்தது. அம்மாநிலத்திற்குள் ஜனாதிபதியே நுழைய வேண்டுமாயினும் காஷ்மீர் பிரதமர் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த இரட்டை நிலைகளை மாற்றியது சியாம பிரசாத் முகர்ஜியின் உயிர்த் தியாகம்தான்.

இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதில் முகர்ஜியின் பங்களிப்பு மறுக்க இயலாதது. எனவேதான், பிரிவினைவாத அமைப்பு ஒன்று லால்செüக்கில் இந்திய தேசியக் கொடி ஏற்றுமாறு சவால் விடுத்தபோது, அன்றைய பா.ஜ.க. தலைவர் முரளி மனோகர் ஜோஷி அதையேற்று, குமரி முதல் ஸ்ரீநகர் வரை ஏக்தா யாத்திரை சென்று 1992 குடியரசு தினத்தில் லால்சவுக்கில் தேசியக்கொடி ஏற்றினார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது ஜம்மு காஷ்மீர் விவகாரம் சுமுகமாக இருக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதேநேரம், பிரிவினைவாதிகள் திட்டமிட்ட ரீதியில் முறியடிக்கப்பட்டனர். அம்மாநிலத்தை வெறும் நிலமாக பாவிக்காமல் உணர்ச்சிபூர்வமாக அணுகுவது பா.ஜ.க.வின் வழிமுறை.

இதற்கு மாறாக தற்போதைய மத்திய, மாநில அரசுகள் இயங்குவதே பிரச்னைகளுக்கு காரணம். இதன்மூலமாக, பிரிவினைவாதிகளை எதிர்கொள்வதில் துணிவின்மையை மட்டும் காங்கிரஸ் கட்சி காட்டவில்லை. தேசிய உணர்வு என்னும் அடையாளத்தையும் பா.ஜ.க. பறித்துச் செல்ல அனுமதித்துவிட்டது.

பிரிவினைவாதிகள் உச்சபலத்துடன் இயங்குகையில் அவர்களுக்கு மேலும் வாய்ப்பு ஏற்படுத்துவதாக பா.ஜ.க.வின் இந்த யாத்திரை இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால், தேசிய விழிப்புணர்வில் காங்கிரஸ் பின்தங்கி இருப்பதை வெளிப்படுத்த கிடைத்த அரிய வாய்ப்பாகவே தேசியக்கொடி ஏற்றுவதை அக்கட்சி முன்னெடுத்துள்ளது.

மொத்தத்தில் சொந்த நாட்டிற்குள்ளேயே தேசியக் கொடி ஏற்றுவதை கௌரவப் போராட்டமாகவும், அதைத் தடுக்க முனையும் அரசுகளின் அத்துமீறல்களாகவும் காணும் பாக்கியத்தை, வைரவிழா காணும் குடியரசு நமக்கு வழங்கி இருக்கிறது.

நல்லவேளை, திருப்பூர் குமரன் இன்று உயிருடன் இல்லை. இருந்திருந்தால், இதற்காகவா நாம் தடியடி பட்டோம் என்று நொந்து, நம்மை சபித்திருப்பார். இதற்காகத் தான் அன்றே ஆங்கில அரசால் அடிபட்டுச் செத்தாயா திருப்பூர் குமரா?

Sunday, January 23, 2011

உருவக கவிதை - 71அவரவர் அரசியல்

புகார் கூறப்பட்டவர் எவரும் குற்றவாளி அல்ல.
ஊழல் புகார் கூறப்பட்டதற்காகவே எவரும்
பதவி விலகியதாக சரித்திரம் இல்லை.
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை
யாரும் குற்றவாளி இல்லை.

பொதுஇடத்தை மானிய விலைக்கு
சொந்தக்கிரயம் செய்துகொள்வது
அரசியலில் புதிதில்லை.
பெற்றவர்களுக்கு அரசு நிலத்தை தாரை வார்ப்பதிலும்
முன்னுதாரணங்கள் இல்லாமலில்லை.

மறைத்து வாங்கியதைத் திருப்பி அளித்துவிட்டதால்
குற்றம் சாட்ட முடியாது.
குற்றம் சாட்டுபவரின் ஊழலை அமபலப்படுத்தினால்
யாரும் குற்றம் கூற முடியாது.

மறைமுக விற்பனை மோசடி அல்ல.
வாங்கியவர்களிடம் கூடுதல் தொகை வசூலித்துவிட்டால்
குறைகூற முடியாது.
தலைமைக்குத் தெரிந்தே செய்த எதுவும்
மோசடியாகிவிடாது.

எனக்கு முன் பதவி வகித்தவர்கள்
காட்டிய வழியில்தான் என் பயணம்.
அவர்கள் செய்தது ஊழல் இல்லை என்றால்
நானும் ஊழல் செய்திருக்க முடியாது.

ஆளுநர் மாளிகைகளும் நீதிமன்ற மாடங்களும்
ஆட்சியைக் கவிழ்க்கத் துடிப்பவர்களின்
ஏவலர்களாகிவிட்ட நிலையில்,
ஊழல் புகாரை யார் மீதும் கூற முடியும்.
அதற்காகவெல்லாம் பதவி விலகிக் கொண்டிருக்க முடியாது.

மத்தியில் ஆளுங்கட்சியை எதிர்க்கும் அதே கட்சியின்
மாநில அரசிலும் இதே வசனம்...
மாநிலத்தில் நேர்மை பேசும் அதே கட்சியின்
மத்திய அரசிலும் இதே வசனம்...

ஊழல் குற்றவாளி வெளிநாடு தப்ப
உதவியவருக்கு கிடைத்த உயர்மட்டப் பதவியால்
ஆளுநர் மாளிகையிலும் இதே வசனம்.
அழகிகளுடன் சல்லாபத்தால் ஊரே நாறிய
நீதிமன்ற வளாகத்திலும் அதே வசனம்.

ஆட்சியைக் கவிழ்க்கவே ஊழல் புகார்கள்
எதிரிகளால் குப்பையாகக் கொட்டப்படுகின்றன.
ஆட்சியைப் பிடிக்கவே ஊழல் புகார்கள்
ஆதாரமின்றி அலசப்படுகின்றன....

- மாநிலங்களிலும், மத்தியிலும்,
ஏன் உள்ளாட்சிகளிலும் கூட,
இந்த வசனங்கள் பொதுவாகிவிட்டன.

அரசியல் சினிமா ஆகிவிட்டது.
வசனங்கள் பொதுவாகி விட்டன.
நடிகர்கள் மாறலாம்; காட்சிகள் மாறுவதில்லை.
மேடைகள் மாறலாம்; ஒப்பனைகள் மாறுவதில்லை.
இடங்கள் மாறலாம்; வசனங்கள் மாறுவதில்லை.

அவரவர் அரசியல்... அவரவர் விருப்பம்.
பார்வையாளர்களாக மக்கள்...
அவர்களும் மாறுவதாகத் தெரியவில்லை.
...

Thursday, January 20, 2011

எண்ணங்கள்படிக்க வேண்டிய கட்டுரை மட்டுமல்ல...


ஆடு யாரை நம்புகிறது? கசாப்புக்காரரை... என்ற சொலவடை உண்டு. நமது நாட்டின் அரசியல், இத்தாலியப் பெண்மணியான சோனியாவை மையமாகக் கொண்டு இயங்குவது அதையே நினைவு படுத்துகிறது.
பிரபல தணிக்கையாளரும் பத்திரிகையாளருமான திரு. எஸ்.குருமூர்த்தி தினமணி நாளிதழில் (19.01.2011) எழுதியுள்ள 'இந்திரா அப்படி.. சோனியா இப்படி!' கட்டுரை, நமது அறியாமையை வெளிப்படுத்துகிறது. இக்கட்டுரை படிக்க வேண்டிய கட்டுரை மட்டுமல்ல, தெரிந்த ஒவ்வொருவரையும் படிக்குமாறு கூற வேண்டிய கட்டுரை.

.

Sunday, January 9, 2011

எண்ணங்கள்


உங்களுக்கும் மனம் கனக்கும்...


பத்திரிகையாளர் திரு. பாண்டியராஜன் எழுதிய 'ஒரு தியாகி இனி உருவாக மாட்டான்' என்ற கட்டுரை தினமணி (09.01.2011) நாளிதழில் வெளிவந்துள்ளது. மனதை கனக்கச் செய்த அக்கட்டுரையின் சுட்டி இணைப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது... உங்களுக்காக..

Thursday, January 6, 2011

எண்ணங்கள்
கூழுக்கும் ஆசை...

மீசைக்கும் ஆசை....


அண்மையில் தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் ராகுல் காந்திக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இஸட் பிளஸ் பிரிவில் இருக்கும் அவர், தமிழகத்தில் இருந்த இரு நாள்களும் தமிழகக் காவல்துறை பலத்த முன்னேற்பாட்டுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. ஆனால், பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் பல இடங்களில் ராகுல் காந்தியே நடந்துகொண்டதால், காவல்துறையினர் சிரமத்துக்கு உள்ளாயினர்.

தமிழகத்தில் 1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை யாரும் மறந்துவிட முடியாது. அந்தச் சம்பவத்தில் ராஜீவ் காந்தி மட்டுமல்லாது காவல்துறையினர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பிறகே முக்கிய அரசியல் தலைவர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதிலும் பல்வேறு பிரிவுகளில் தலைவர்களை வகைப்படுத்தி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்கென ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் மத்திய அரசால் செலவிடப்படுகிறது.

இந்தப் பாதுகாப்பு, தலைவர்களின் உயிரைப் பாதுகாப்பது மட்டுமல்லாது, மக்களுக்கு ஏற்படும் தொடர் விளைவுகளையும் தடுக்கிறது. எனினும், தங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாவலை உறுதிப்படுத்தும் பொறுப்பு, பாதுகாக்கப்படும் தலைவருக்கும் உண்டு. இதனை ராகுல் காந்தி அடிக்கடி மறந்துவிடுகிறார்.

தமிழகத்தின் பல இடங்களில் பாதுகாப்பு வளையத்தை மீறிய ராகுல் காந்தி, மக்களிடமும் தொண்டர்களிடமும் அளவளாவினார். இதனை, ராகுலின் பெருந்தன்மையை வியந்தோதும் செய்திகளாக ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், இந்த வழக்கம் கண்டிக்கத்தக்கது என்பதை இதுவரை எந்த ஊடகமும் சுட்டிக் காட்டவில்லை.

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தியை பலிகொண்ட வெடிகுண்டுப் பெண் தனு காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரது உதவியுடன்தான் அங்கு வர முடிந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. எனவே, முக்கிய தலைவர்களின் பாதுகாப்பைப் பொறுத்த மட்டிலும், எந்தவித சமரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது.

சொந்தக் கட்சியினரே ஆனாலும், இஸட் பிளஸ் பிரிவில் பாதுகாக்கப்படும் தலைவர்களை நெருங்க பல சோதனைகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. பாதுகாக்கப்படும் தலைவரே அதை மீறுவதைவிட வேறு அபாயம் இருக்க முடியாது.

உதாரணமாக, திருப்பூரில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு நடை பெற்ற தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வுகளைச் சொல்லலாம். அங்கு வந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அணிந்திருந்த பெல்டுகள் கூட பறிமுதல் செய்யப்பட்டன. யாரும் கைப்பேசி கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.

ராகுலுக்கு பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்திருந்ததால், கருப்புநிற ஆடை அணிந்து வந்த இளைஞர் காங்கிரஸாரும்கூட அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை. இளைஞர் காங்கிரஸாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட, அரங்கினுள் அனுமதிக்கப்படாத பொருள்கள், பள்ளி வளாகத்துக்கு வெளியே கேட்பாரற்றுக் கிடந்தன. அந்த அளவுக்குக் காவல்துறையினர் கெடுபிடி செய்திருந்தனர். பத்திரிகையாளர்களுக்கும் நிகழ்ச்சியில் அனுமதி மறுக்கப்பட்டது.

பள்ளிக்கு எதிர்ப்புறம் உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்ட ஹெலிபேடில் இருந்து காரில் ராகுல் வந்துசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்து திரும்புகையில் காரிலிருந்து திடீரென இறங்கிய ராகுல் காந்தி, அங்கு சாலையில் நின்றிருந்த மக்களிடம் கைகுலுக்கினார். இந்த திடீர் நடவடிக்கையை எதிர்பாராமல் காவல்துறை அதிகாரிகள் திகைத்தனர்.

பாதுகாப்புக் கெடுபிடிகளை மீறி ராகுல் காந்தி மக்களிடம் அளவளாவியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது உண்மைதான்.
எனினும், அதிருப்தியாளர் யாரேனும் ஒருவர் சிறு கல் வீசியிருந்தாலும், அன்று தமிழகத்தின் மானம் நாடு முழுவதும் கப்பலேறி இருக்கும்.

திருப்பூரில் மட்டுமல்ல, விழுப்புரம், திருநெல்வேலி ஆகிய இடங்களிலும் ராகுல் காந்தி இவ்வாறே பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளிவந்து தொண்டர்களிடம் அளவளாவியதாகச் செய்திகள் கூறுகின்றன.

ராகுல் காந்தி நாடு முழுவதிலும் இவ்வாறுதான் நடந்து வருகிறார். இதுபற்றி அடிக்கடி பத்திரிகைகளிலும் பெருமிதத்துடன் செய்திகள் வெளியாகின்றன.
பாதுகாப்பு வளையத்தை மீறி மக்களிடம் புழங்குவது, தனது எளிமையையும், இனிய அணுகுமுறையையும் காட்டுவதாக அவர் நம்புவதாகத் தெரிகிறது. அவரது எண்ணம் அதுவானால், தனக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று அவர் மறுத்துவிட வேண்டியதுதானே?

இஸட் பிளஸ் பாதுகாப்பு முறை அளிக்கும் படாடோபமும் வேண்டும்; மக்கள் எளிதாக அணுகக்கூடிய எளிமையின் திருவுருவம் என்ற பாராட்டும் வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. இது "கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை' என்ற பழமொழியையே நினைவுபடுத்துகிறது.

உச்சபட்ச பாதுகாப்பில் உள்ள ஒருவர் பாதுகாப்பு வளையத்தை உடைப்பது, அவருக்கு மட்டுமல்லாது பலருக்கும் நாசத்தை ஏற்படுத்தும். இதை ராகுல் காந்தி உணர வேண்டும்.

திருப்பூரில் காரில் ஏறிய ராகுல் காந்தியைப் பார்க்க ஆர்வக்கோளாறால் ஓடிவந்த இளைஞர் ஒருவரை மடக்கிய போலீஸா ர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதையும் காண முடிந்தது. அதேசமயம், ஆர்வக்கோளாறு காரணமாக காரிலிருந்து இறங்கி பலரிடம் கைகுலுக்கிய ராகுல் காந்தியிடம் எதுவும் சொல்ல முடியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்தனர்.

வருங்காலத்திலாவது, இத்தகைய தர்மசங்கடங்கள் நிகழ்வதை, பாதுகாக்கப்படும் தலைவர்களே தவிர்க்க வேண்டும். அல்லது, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிகளாவது, சம்பந்தப்பட்டவர்களிடம் இதுகுறித்து விளக்கி, "ஆர்வக்கோளாறு'களைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அசம்பாவிதங்கள் நிகழும்போது அரற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

---------------------------------------------------------------------

நன்றி: தினமணி (06.01.2011) தலையங்கப் பக்க துணைக் கட்டுரை

காண்க: தினமணி

..

Sunday, January 2, 2011

புதுக்கவிதை - 140

கொள்ளையர் தர்மம்


கன்னமிட்டு கொள்ளையிடுவதை
தடுக்க அவசரச் சட்டம் தயார்.
கொக்கரிக்கிறார் கன்னக்கோல் திலகம்.

சங்கிலிப் பறிப்பைத் தடுக்கவும்
அவசரச் சட்டம் வரும்.
சொல்பவர் பிளேடு பக்கிரி.

கொலை, கொள்ளையைத் தடுக்கவும்
புதிய சட்டம் உருவாகிறது.
கொள்ளைக்கூட்டத் தலைவி பிரகடனம்.


நிதிமோசடிகளைக் கட்டுப்படுத்த
கடுமையாக்கப்படும் விதிகள்.
விதிமீறல் மந்திரி முழக்கம்.

எவன் என்ன சொன்னாலும்
அப்படியே நம்புகிறது
'பத்திரிகை தர்மம்'.

கட்டுச்சோற்றுக்கு பெருச்சாளி காவல்...
பாலுக்கு திருட்டுப் பூனைகளே காவல்...
நாட்டுக்கு ஊழல் ராசாக்களும் ராணிகளும்.


குறிப்பு:
ஊழலை ஒழிக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்போவதாக முழங்கி இருக்கிறது 'ஸ்பெக்ட்ரம் புகழ்' மத்திய அரசு -
ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் மேடையில் முழங்கிய தலைவி சோனியாவைப் பின்பற்றி.
.