பின்தொடர்பவர்கள்

Monday, February 28, 2011

புதுக்கவிதை - 141


முழக்கம்

ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொரு முழக்கம்.

ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார்!
இந்த முழக்கம் ஒருகாலம்.

அமெரிக்காவைப் பார், ஐரோப்பாவைப் பார்!
இந்த முழக்கம் இடைக்காலம்.

எகிப்தைப் பார், லிபியாவைப் பார்!
இந்த முழக்கம் தற்காலம்.

எப்போது நாம்
நம்மைச் சுற்றிப்
பார்க்கப் போகிறோம்?

.

Thursday, February 24, 2011

சிந்தனைக்குகருவூலம்

மாசறு பொன்னே, வலம்புரி முத்தே!
காசறு விரையே, கரும்பே, தேனே!
அரும்பெறல் பாவாய், ஆர்உயிர் மருந்தே!
பெருங்குடி வாணிகன் பெருமட மகளே!

மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ்இருங் கூந்தல் தையால்!...

- கண்ணகியைப் பார்த்து கோவலன் கூறியவை
(சிலப்பதிகாரம்: புகார்க் காண்டம்: மனையறம் படுத்த காதை: 73 -80 )

Tuesday, February 22, 2011

எண்ணங்கள்சாயம் போன தொழில்... சாரமிழக்கும் எதிர்காலம்...

நீலநிறச் சாயத்தொட்டியில் விழுந்த நரி வினோத விலங்காக வனத்தையே அதிரவைத்ததும், மழையில் நனைந்து சாயம் போனவுடன் அதன் சுயரூபம் வெளுத்ததும் பலரும் அறிந்த கதைதான்.

பல்லாயிரம் கோடி அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டித் தரும் பின்னலாடைத் தொழில்நகரான திருப்பூரின் சுயரூபமும் சாயஆலைகளின் சுயநலம் வெளுத்தபோது வெளியானது.

சாயஆலைகளின் சாயத்தை வெளுக்கச் செய்த சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு (ஜன. 28), ஒருவகையில் சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக இருப்பினும், தொழில்துறை வளர்ச்சி மீதான கடுமையான அடி எனில் மிகையில்லை. கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதுபோல, நமது வாழிடத்தின் சூழலை நாசம்செய்து சம்பாதிக்கும் லாபங்களால் இறுதியில் கிடைப்பது பேரழிவாகவே இருக்கும்.

திருப்பூரில் செயல்படும் அனைத்து சாய, சலவை ஆலைகளையும் மூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, இறுதிக்கட்ட நடவடிக்கையே. அதற்கு முன் நீதிமன்றம் வழங்கிய பல வாய்ப்புகளையும் அசட்டையாக தவறவிட்ட தொழில்துறையினர் மட்டுமே, தற்போதைய இக்கட்டான நிலைக்கு பொறுப்பானவர்கள் அல்ல; நதிநீர் மாசுபடாமல் காக்க வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டிய மாசுக் கட்டுப்பாடு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசு நிர்வாகங்களுக்கும் இதில் பொறுப்புண்டு.

நாகரிக சமுதாயத்தில் தொழில்துறை வளர்ச்சி தவிர்க்க இயலாதது. ஆனால், அது வீக்கமாக இருக்கக் கூடாது. பின்னலாடை உற்பத்திக்குப் பெயர் பெற்ற திருப்பூரின் வளர்ச்சி, சுற்றுச்சூழலைப் பலிகொடுத்துப் பெற்ற வளர்ச்சி.

உண்மையில் இது ஒரு வீக்கமே. சாயஆலைகளும் சலவை ஆலைகளும் வெளியேற்றிய கழிவுநீரின் அபாயம் அறியாமல் தொழில்துறையினர் வெளிநாட்டு டாலர்களைக் குவித்துக் கொண்டிருந்த நேரத்தில், நமது அன்னைபூமியும் ஜீவநதி நொய்யலும் களங்கப்பட்டுக் கொண்டிருந்தன. இதைத் தடுத்திருக்க வேண்டிய அரசுத் துறைகள், ஆபத்தை உணர்ந்தும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு அனுமதித்தன.

நமது அரசு நிர்வாகத்தில் புரையோடிப்போன லஞ்சமும் ஊழலும் தான் சாயக் கழிவுநீரால் மண்ணும் நீரும் மாசுபடக் காரணம். அரசில் படர்ந்த மாசு தான், இப்போது நொய்யல் நதியில் கருமையும் துர்நாற்றமும் கொண்ட கழிவுநீராக கண்ணுக்குத் தெரிகிறது. இப்போது நீதிமன்றத் தலையீட்டால் தொழில்துறை நிலைகுலைந்திருக்கும்போது, அரசு தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

அதிகமான உப்படர்த்தி கொண்ட சாயக்கழிவுநீரை முழுமையாகச் சுத்திகரிக்காமல் வெளியேற்றக் கூடாது என்பது, நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகே தெரிய வேண்டிய விஷயமல்ல. இது சாத்தியமல்ல என்றால், நீதிமன்றத்தில் இதற்கு தொழில்துறையினர் ஒப்புக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், நமது அரசு நிர்வாகங்களை எப்படியும் சரிக்கட்டி விடலாம் என்ற நம்பிக்கையில்தான் "ஜீரோ டிஸ்சார்ஜ்' எனப்படும் முழுமையான சுத்திகரிப்புக்கு சாய, சலவை ஆலைகள் உத்தரவாதம் அளித்தன. இப்போது நீதிமன்றம் தலையிட்டவுடன் அரசும் சார்புத் துறைகளும் பின்வாங்குகின்றன. தொழில்துறை நடுவில் சிக்கிக்கொண்டு தத்தளிக்கிறது.

உண்மையில் தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமே நதிநீரை மாசுபடுத்துகின்றன என்று கூற முடியாது. சாயஆலைகள் மூடப்பட்ட பிறகும்கூட நொய்யல் நதியில் தொடரும் கழிவுநீரின் நாற்றம், பிரச்னையின் தீவிரத்தை உணர்த்துகிறது.

நமது வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாக்கடைக் கால்வாய்கள் வாயிலாக கடைசியில் ஆறுகளில்தான் சங்கமிக்கிறது. இதனைத் திருப்பூரில் மட்டுமல்ல, நாடு முழுவதிலுமே காண முடியும்.

நதியில் சாக்கடையை இணைப்பதுடன் தங்கள் பணி முடிந்துவிடுவதாக நினைக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் அத்துமீறலும் நதி மாசுபட அடிப்படைக் காரணம். நதியின் தூய்மையைப் பராமரிக்க வேண்டிய பொதுப்பணித் துறையின் அலட்சியத்துக்கும் இதில் பெரும் பங்குண்டு. ஆக மொத்தத்தில், மூடப்பட வேண்டியவை, விபரீதம் அறியாமல் செயல்பட்ட சாயஆலைகள் மட்டுமல்ல, செயல்படாத அரசுத் துறைகளும்தான்.

இதுவரை நடந்தவை நடந்தவைதான். அவற்றை உடனடியாக மாற்ற முடியாது என்பதும் உண்மையே. ஆயினும், ஆறுகளில் கலக்கும் சாக்கடையைத் தடுப்பது, அதனைச் சுத்திகரித்து வெளியேற்றுவது போன்ற பணிகளில் இப்போதாவது அரசு கவனம் செலுத்த வெண்டும். சாய, சலவை ஆலைகள் கோருவதுபோல 80 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை குழாய் மூலமாக கடலில் சேர்க்க முடியுமா என்பதை அரசு விரைந்து பரிசீலித்து செயல்படுத்துவது அவசியம். ஏனெனில், இந்தச் சிக்கலுக்கு வித்திட்டது அரசின் அலட்சிய மனப்பான்மையே.

அரசின் தவறுகளுக்காக, திருப்பூர் தொழில்துறையை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறி ஆக்கிவிடக் கூடாது. சாய, சலவை ஆலைகளின் மூடலுடன் இப்பிரச்னை நின்றுவிடாது. கூடிய விரைவில் இந்தச் சிக்கலுக்கு இயன்ற தீர்வு காணாவிடில், திருப்பூர் தொழில்துறை சாரமிழப்பது மட்டுமன்றி, பல மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கும், மாநிலத்தின் வருவாயும், நாட்டின் அந்நியச் செலாவணியும் பாதிக்கப்படலாம்.

நசிந்துவிட்ட விவசாயத்தை புனருத்தாரணம் செய்வது எத்தனை அவசியமோ, அதே அளவுக்கு தொழில்துறை வீழ்ச்சியைத் தடுப்பதும் அவசியம். தவறுகளிலிருந்து நாம் கற்கும் படிப்பினைகள் முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக வேண்டும்; தண்டனைகளாகிவிடக் கூடாது.


நன்றி: தினமணி (22.02.2011)
தலையங்கப் பக்க துணைக்கட்டுரை
..

Saturday, February 19, 2011

மரபுக் கவிதை - 110தமிழ்த் தாத்தா பஞ்சகம்


தடியூன்றும் வயதினிலும் தளராமல் தவிப்புடனே
துடிப்பாக சுவடிகளை தொடர்ந்தோடி சேகரித்த
சங்கத் தமிழின் தனிப்பெரும் புரவலனாம்
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.

ஊரூராய்த் திரிந்து உறுபொருள் செலவிட்டு
பாருய்யத் தமிழகத்தின் பழமையான இலக்கியத்தை
பாதுகாத்து அச்சிட்டுப் பாங்காகக் கொடுத்திட்ட
தூதர் தமிழ்த்தாத்தா தான்.

தமிழென்று சொன்னாலே தரணிக்கு நினைவில்வரும்
அமிழ்தான நூல்களினை அரித்தொழித்து தின்றுவந்த
சூழ்ந்த கரையானை சுட்டெரித்துத் தமிழ்காத்த
வாழ்வே தமிழ்த்தாத்தா தான்.

வாய்ச்சொல்லில் வீரரென வாழ்ந்தோரின் மத்தியிலே
ஆய்ச்சியர் குரவையும் அணித்தமிழ் இலக்கணமும்
பரவும் தமிழிசையின் பெருமிதத்தை ஊட்டியநல்
குருவே தமிழ்த்தாத்தா தான்.

ஆரணங்காம் தமிழ்த்தாயின் ஆபரண மானபெரும்
பூரணத்தின் மணித்திரளாம் புத்திளமை பூத்திருக்கும்
மங்காத இலக்கியங்கள் மாயாமல் காத்தவரே
எங்கள் தமிழ்த்தாத்தா தான்.
..
இன்று தமிழ்த் தாத்தா உ.வே.சா. பிறந்த நாள்.
.

Friday, February 18, 2011

எண்ணங்கள்


முதுகெலும்பு உள்ளவர்களா நாம்?

சில தினங்களுக்கு முன் நமது மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் தொலைகாட்சி சானல்களின் ஆசிரியர்களுடன் நிகழ்த்திய நேர்காணல் அனைத்து ஆங்கில செய்தி சானல்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல், கார்கில் குடியிருப்பு ஊழல், இஸ்ரோ ஊழல், வடகிழக்கு மாநிலங்களில் ஊழல், என்று எங்கு திரும்பினாலும் ஊழல் மயமாகக் காட்சியளிக்கும் தற்போதைய மத்திய அரசு மீதான அவநம்பிக்கையைப் போக்க ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நேர்முகம், ஒரு அமெச்சூர் நாடகம் போலவே காட்சி அளித்தது.

பிரதமருக்கு வலிக்கக் கூடாது; அதே சமயம் தங்கள் நம்பகத் தன்மையையும் இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் பத்திரிகையாளர்கள் பட்ட பாட்டை தொலைக்காட்சியில் பார்த்தபோது, கோபம் தான் வந்தது. ஊழல் செய்தவரும் அவர்களைக் காப்பற்றியவருமான ஒரு பிரதமர் முன்னால் இப்படி பத்திரிகையாளர்கள் குழைய வேண்டியது அவசியம் தானா?

சலசலக்கும் ஊழல்களால் நாடு முழுவதும் பரவலாக மக்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில், மத்திய அரசின் ஊழல்கள் குறித்து நெஞ்சத் துணிவுடன் கேள்வி கேட்கவும் அங்கு ஒருவர் கூட இல்லையா? ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்களின் வீழ்ச்சி மன்மோகன் சிங்கின் வீழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல.

இந்த சந்திப்பு குறித்து 2 எதிர்ப் பதிவுகளைக் கண்டேன். அவை, ஆங்கில ஊடக பத்திரிகையாளர்களுக்கு முதுகெலும்பு வளைந்தாலும், நாட்டு மக்களுக்கு இன்னும் முதுகெலும்பு உறுதியாகவே உள்ளன என்பதைக் காட்டின.

ஒன்று, தமிழ் ஹிந்து இணைய தளத்தில் திரு விஸ்வாமித்ரா எழுதிய கட்டுரை. அடுத்தது, தினமணி தலையங்கம். இவை அனைவராலும் படிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் எந்த மாதிரியான காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பதை உணர முடியும். அவற்றின் இணைப்பு சுட்டிகள் கீழே...

மன்மோகன் சிங்கின் வட்டமேஜை நேர்காணலில் கேட்கப்படாத கேள்விகள்
- விஸ்வாமித்ரா - தமிழ் ஹிந்து (17.02.2011)

தலையங்கம்:%20பிரதமரின்%20சப்பைக்கட்டு!'>பிரதமரின் சப்பைக்கட்டு தலையங்கம்:%20பிரதமரின்%20சப்பைக்கட்டு!'>
- தினமணி தலையங்கம் (18.02.2011)
.

Friday, February 11, 2011

வசன கவிதை - 87
யாருடைய
குற்றம்?


குடும்பம் கேட்டுப் போச்சுங்க...
பொண்டாட்டி போயிட்டா..
பெத்த புள்ளையும் போயிருச்சு..
பேரனும் செத்திட்டான்..
அப்பறம் நமக்கு நடுத்தெருதானே போக்கிடம்?

பலமாத தாடியை சொறிந்தபடி
கண்களில் ஒளியுடன் விவரிக்கிறான்
கந்தலாடைப் பிச்சைக்காரன்.

நான் நல்லா நடிப்பேனுங்க..
ஊருல நாடகம் போட்டா
நான் தானுங்க மேடையில டான்சு
எம்ஜியார், சிவாஜி, எம்மார்ராதா
யாரு மாதிரி வேணாலும் நடிப்பேனுங்க.

இப்பக் கூட ரத்தக் கண்ணீர் படப் பாடலை
அற்புதமாப் பாடுவேங்க...
''குற்றம் புரிந்தவன் வாழ்வினில் நிம்மதி கொள்வதென்பதேது?''
உச்சஸ்தாயியில் அவன் பாட,
தெருவில் சென்ற நாயொன்று திரும்பி நின்று பார்த்துவிட்டு
நடையைக் கட்டுகிறது.

அவனது தலைமாட்டில் பிளாஸ்டிக் குப்பை மூட்டை.
எப்படியும் ஒருநாளுக்கு ஐம்பது ரூபாய் தேறிவிடுகிறது.
அது 'கட்டிங்' போடவே போதாமல் போகிறது.
ஒரு கட்டு பீடி ஒரு ரூபாய் இருந்தது இப்போது ஐந்து ரூபாய் ஆகிவிட்டது.
விலைவாசி ஏற்றம் பிச்சைக்காரனையும் பாதிக்கிறது.

எல்லாக் கதையையும் கேட்டுவிட்டு
பத்து ரூபாய் எடுத்து நீட்டுகிறேன்.
''நான் பிச்சைக்காரன் இல்லைங்க சார்,
தெருப்பொறுக்கி.
ஊர்க்குப்பையில் வாழ்பவன் நான்.
பரவாயில்லை கொடுங்க.. ரெண்டு கட்டு பீடிக்கு ஆகும்...''

என்கிறார் தெருவோர அநாதை.
குடும்பம் கெட்டவர்களை இனிமேலும்
எப்படி வேண்டுமானாலும் அழைக்கக் கூடாது.

சுற்றிலும் மொய்க்கும் ஈக்களை விரட்டியபடி,
அடுத்த பாடலைத் துவக்குகிறார் -
''எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன், நான் வாழ யார் பாடுவார்?''
வண்டியை விரட்டி வீடு சேர்ந்த பின்னும்
பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

.

Saturday, February 5, 2011

எண்ணங்கள்வாடிக்கையாளர்களை வங்கிகள் வாட்டலாமா?


''வாடிக்கையாளர் என்பவர் நமது வளாகத்துக்கு வரும் மிக முக்கியமான நபர். அவர் நம்மைச் சார்ந்திருக்கவில்லை; நாம்தான் அவரைச் சார்ந்திருக்கிறோம். நமது வேலையில் தொந்தரவு செய்பவர் அல்ல அவர்; நமது வேலையின் ஆதாரமே அவர்தான்...''

- மகாத்மா காந்தியின் இந்தப் பொன்மொழிகள் பெரும்பாலான வங்கிகளில் அலங்காரமாக வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதற்கு நேர்மாறான அணுகுமுறையுடன் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் பணிபுரிவதையும் காண்கிறோம். அதைவிடக் கொடுமை, வாடிக்கையாளரின் சொந்தப் பணத்தை அவரே திரும்பப் பெற வங்கியில் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது.

வாடிக்கையாளர்கள் வங்கியில் தாங்கள் முதலீடு செய்துள்ள நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுக்காலத்துக்கு முன் திரும்பப் பெற்றால், அவர்களது முதலீட்டுத்தொகை மீது ஒரு சதவிகித அபராதம் விதிக்கும் நடைமுறை சமீபகாலமாக பல வங்கிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இது வாடிக்கையாளர்களின்மீது சுமத்தப்படும் அநியாயம். சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது இதுதான்.

இதைத் தடுக்க வேண்டிய ரிசர்வ் வங்கியே, இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை அந்தந்த வங்கிகளுக்கே வழங்கிவிட்டது. இதன்பயனாக, பல தனியார் வங்கிகள் தங்கள் முதலீட்டாளர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றன. இது வங்கியில் பணத்தை முதலீடு செய்வதன் அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.

சேமிப்பு, பாதுகாப்பு ஆகிய இரு காரணங்களுக்காகவே வாடிக்கையாளர்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். அதிலும் அடிக்கடி பணத்தை சில்லரையாக எடுக்கவும் போடவும் விரும்புபவர்கள் சிறுசேமிப்புக் கணக்கையே பயன்படுத்துகின்றனர். அவர்களிடம் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை முன்வைத்து நிரந்தர வைப்புத்தொகைகளை வங்கிகள் பெறுகின்றன.

அதிகமான வைப்புத்தொகைகளைத் திரட்டுவது வங்கி நிர்வாகங்களின் இலக்காக உள்ளது. இந்த வைப்புத்தொகைகளே வங்கிகளின் இருப்பிலும் பிறதுறை முதலீட்டிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அதேசமயம், வைப்புத்தொகையை முதலீடு செய்த வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் வட்டிவிகிதம் ஒப்பீட்டுநோக்கில் குறைவே.

குறைந்தபட்சம் ஐந்தாண்டுக் காலஅளவுக்கு வங்கியில் முதலீடு செய்யப்படும் வைப்புத்தொகைக்கு மாறாக தங்கத்திலோ நிலத்திலோ முதலீடு செய்தால், வங்கியில் கிடைக்கும் லாபத்தைவிட அதிக லாபம் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும், பாதுகாப்பு, அவசரத் தேவைக்குக் கிடைக்கும் அனுகூலம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே, வங்கியில் வைப்புத்தொகையில் சேமிக்க மக்கள் முன்வருகிறார்கள்.

அதில்தான் இப்போது அடி விழுந்திருக்கிறது. ஏற்கெனவே பல தனியார் வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகையை முதிர்வுகாலத்துக்கு முன் திரும்பப் பெற அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கிவிட்டது. இன்னும் சில வங்கிகளில் ரூ. 5 லட்சத்துக்கு மேற்பட்ட வைப்புத்தொகையைத் திரும்பப் பெற மட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு விதிக்கப்படும் அபராதத்தின் அளவு முதலீட்டுத்தொகையில் ஒரு சதவிகிதம் முதல் 3 சதவிகிதம் வரை இருக்கிறது. சில வங்கிகள், முதிர்வுகாலத்துக்கு முன் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெற பல கால அளவு நிபந்தனைகளையும் வைத்துள்ளன. இது வட்டி கிடைக்கும் என்று ஆசைப்பட்டு முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது மட்டுமல்ல; அவர்களைக் கொள்ளையடிப்பதும் ஆகும்.

எந்த ஒரு வாடிக்கையாளரும் நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடு செய்ய முனையும்போது முதிர்வுகாலத்துக்குள் திரும்பப் பெற வேண்டும் என்று எண்ணுவதில்லை. அதேசமயம், வாழ்க்கையில் நிகழும் கட்டாயச்சூழல்களால் அவசரமாக வைப்புத்தொகையைத் திருப்ப வேண்டி நேரலாம்.
அத்தகைய நிலையில், வாடிக்கையாளர் வங்கியில் பணத்தைச் சேமித்த ஒரே காரணத்துக்காக, அவரது பணத்தைத் திருப்பித் தர அபராதம் வசூலிப்பது எந்தவகையிலும் நியாயமானதல்ல. இதற்காகவா வங்கியில் பணத்தை முதலீடு செய்தோம் என்று புலம்பும் நிலையை வாடிக்கையாளருக்கு வங்கிகள் ஏற்படுத்தக் கூடாது.

வைப்புத்தொகைகளை திடீரென திரும்பப் பெறுவதால் வங்கிகளின் நிதிஇருப்பில் சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கவே, இந்த அபராத முறை அமல்படுத்தப்படுவதாக வங்கி நிர்வாகங்கள் கூறுகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும் ஒரேநேரத்தில் வைப்புத்தொகைகளைத் திரும்பப் பெறப்போவதில்லை என்ற உண்மையை ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை.

இந்த நடைமுறை, வங்கிகளில் பணத்தைச் சேமிக்கும் எண்ணத்தையே மறுசிந்தனைக்குள்ளாக்குகிறது. இதன்காரணமாக, வங்கிகள் தவிர்த்த தனியார் நிதி நிறுவனங்களை நாட வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு ஏற்படுகிறது. வாடிக்கையாளர் சேவை என்ற வங்கிகளின் அடிப்படை அம்சமே இம்முறையால் காலாவதி ஆகிவிட்டது. இப்போதைய புதிய நடைமுறையை ரிசர்வ் வங்கி மறுபரிசீலனை செய்வது அவசியம்.

"...வாடிக்கையாளர் நமது வியாபாரத்தில் வெளியாள் அல்ல; அதன் ஒரு பகுதி. அவருக்குச் சேவை செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கு எந்தச் சலுகையும் தருவதில்லை; மாறாக, அவருக்குச் சேவை செய்ய வாய்ப்பளித்ததன் மூலமாக அவர்தான் நமக்குச் சலுகை காட்டுகிறார்'' என்று தனது பொன்மொழியின் இறுதியில் கூறுகிறார் மகாத்மா காந்தி. இதை வங்கிகள் மறந்துவிடக் கூடாது.

நன்றி: தினமணி (05.02.2011)
தலையங்கப் பக்க துணைக் கட்டுரை
..

Thursday, February 3, 2011

எண்ணங்கள்அறம் கூற்றாகும்... சிறுகதையும் ஆகும்


எழுத்தாளர் ஜெயமோகன் தனது இணையதளத்தில் எழுதியுள்ள "அறம்'' சிறுகதை, அற்புதம். வாழ்வின் அனர்த்தத்தையும் அர்த்தத்தையும் ஒருசேரச் சொல்லும் அரிய கதை.

அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல, தவறு செய்யும் அனைவருக்குமே அறம் கூற்றாகும். அந்த பயம் தான் குடும்பத்தைக் காக்கிறது; நாட்டையும் காக்கிறது என்பதை முகத்தில் அறைந்ததுபோலச் சொல்கிறது ''அறம்'' சிறுகதை. ஜெயமோகனின் இலக்கிய உலகில் இக்கதை முத்திரைக்கதை எனலாம்.

இக்கதையை அனைவரும் படிக்க வேண்டும். அப்போதுதான் அறத்தின் பயனையும் துணையையும் உணர முடியும். படியுங்கள்... உங்கள் கண்களிலும் கண்ணீர் வரும்.
.
கதையின் இணைப்பு: அறம்
கதை குறித்த எனது கருத்து: அறம், மேலும் கடிதங்கள்
..

Wednesday, February 2, 2011

வசன கவிதை - 86


கானாம்ருதம்


''அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும்.. அந்த சாமி சிரிக்கும்...''

உச்சஸ்தாயியில் பாடுகிறான்,
தெருவோரம் ஒட்டுத்திண்ணையில் சுருண்டிருக்கும்
கந்தலாடை பிச்சைக்காரன்.

இரவு குடித்த சாராயத்தை மீறி
வாய்க்குழறலைப் பொருட்படுத்தாமல்
பொன்னான உலகை சபித்தபடி பாடுகிறான்
விரல்கள் இற்றுப்போன கபோதி.

நள்ளிரவு; உடலை ஊடுருவுகிறது கடும் பனி.
தெருவில் நாய்களைத் தவிர எதுவுமில்லை.
அவனருகில் சுருண்டு கிடக்கிறது அவனைப் போலவே
சிரங்கு பீடித்த நாயொன்று.

''ஆளுக்கொரு வீடு கட்டுவோம்...''
திடீரென பாட்டை மாற்றுகிறான் பிச்சைகாரன்.
சிதம்பரம் ஜெயராமன் குரல் தோற்றது.
அவன் காலடியில் துண்டுப்பீடிகள்.
தலைமேட்டில் குப்பைமூட்டைகள்.

வாழ்க்கையைத் தவறவிட்ட பெண்ணொருத்தி
சேலை நழுவ அன்றைய வாழ்க்கைக்கான பொருளை
தெருவில் தேடிக் கொண்டிருக்கிறாள்.
தெருநாய்கள் நைச்சியமாய்
அவளை முகர்ந்து பார்த்து நகர்கின்றன.
'சூ...' விரட்டுகிறான்
பாடலை சிறிது நிறுத்திய இரவுப் பாடகன்.

''என்ன பெரிசு தூக்கம் வரலையா?''
விசாரித்துவிட்டு நகர்கிறாள்
தலையும் உடலும் கலைந்த பரிதாபி.
''தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே,
வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?''
அவளைத் தொடர்கிறது இன்னிசை.

வீடுகள் மூடிக் கிடக்கின்றன.
தெருவில் நாய்களையும்
இருவரையும் தவிர யாருமில்லை.
சாக்கடையிலிருந்து குதித்தோடுகின்றன
பெருச்சாளிகள்.

''ஒன்று எங்கள் ஜாதியே..
ஒன்று எங்கள் நீதியே..
உலக மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...''
.
இரவை விழிக்கச் செய்துகொண்டே இருக்கிறது
திண்ணைப் பாடகனின் கானாம்ருதம்.
.