பின்தொடர்பவர்கள்

Wednesday, February 2, 2011

வசன கவிதை - 86


கானாம்ருதம்


''அண்ணாந்து பார்க்கிற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலைக் குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்
இந்த பூமி சிரிக்கும்.. அந்த சாமி சிரிக்கும்...''

உச்சஸ்தாயியில் பாடுகிறான்,
தெருவோரம் ஒட்டுத்திண்ணையில் சுருண்டிருக்கும்
கந்தலாடை பிச்சைக்காரன்.

இரவு குடித்த சாராயத்தை மீறி
வாய்க்குழறலைப் பொருட்படுத்தாமல்
பொன்னான உலகை சபித்தபடி பாடுகிறான்
விரல்கள் இற்றுப்போன கபோதி.

நள்ளிரவு; உடலை ஊடுருவுகிறது கடும் பனி.
தெருவில் நாய்களைத் தவிர எதுவுமில்லை.
அவனருகில் சுருண்டு கிடக்கிறது அவனைப் போலவே
சிரங்கு பீடித்த நாயொன்று.

''ஆளுக்கொரு வீடு கட்டுவோம்...''
திடீரென பாட்டை மாற்றுகிறான் பிச்சைகாரன்.
சிதம்பரம் ஜெயராமன் குரல் தோற்றது.
அவன் காலடியில் துண்டுப்பீடிகள்.
தலைமேட்டில் குப்பைமூட்டைகள்.

வாழ்க்கையைத் தவறவிட்ட பெண்ணொருத்தி
சேலை நழுவ அன்றைய வாழ்க்கைக்கான பொருளை
தெருவில் தேடிக் கொண்டிருக்கிறாள்.
தெருநாய்கள் நைச்சியமாய்
அவளை முகர்ந்து பார்த்து நகர்கின்றன.
'சூ...' விரட்டுகிறான்
பாடலை சிறிது நிறுத்திய இரவுப் பாடகன்.

''என்ன பெரிசு தூக்கம் வரலையா?''
விசாரித்துவிட்டு நகர்கிறாள்
தலையும் உடலும் கலைந்த பரிதாபி.
''தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு...
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே,
வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதை என்ன?''
அவளைத் தொடர்கிறது இன்னிசை.

வீடுகள் மூடிக் கிடக்கின்றன.
தெருவில் நாய்களையும்
இருவரையும் தவிர யாருமில்லை.
சாக்கடையிலிருந்து குதித்தோடுகின்றன
பெருச்சாளிகள்.

''ஒன்று எங்கள் ஜாதியே..
ஒன்று எங்கள் நீதியே..
உலக மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே...''
.
இரவை விழிக்கச் செய்துகொண்டே இருக்கிறது
திண்ணைப் பாடகனின் கானாம்ருதம்.
.

No comments:

Post a Comment