Friday, December 31, 2010

வசன கவிதை - 84




...
.
.
2010 ஆண்டே வாழி!

விக்கி லீக்சுக்கு இடம் கிடைத்துவிட்டது
ஆங்கிலப் பேரகாதியில்.
நீரா ராடியா தொலைபேசி பேச்சுக்களுக்கும்
கிடைத்துவிட்டது இடம்
இந்திய அரசியலில்.

ரகசியங்களை வெளியிடும் பரபரப்புக்காக
வரும் ஆண்டுகளின் உலகம்
இந்த ஆண்டை எப்போதும் நினைத்திருக்கும்.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தில்
நுழைந்து சேட்டை செய்தவர்களின்
அந்தரங்கமும் சந்திக்கு வந்தது
2010 ன் உபயம்.

ஒருவருக்கு மட்டுமே தெரிவது ரகசியம்
என்ற இலக்கணம் அடிபடலாம் இனி.
ஒருவருக்குத் தெரிந்த எதுவும் ரகசியமல்ல;
எல்லோருக்கும் தெரியாததும் ரகசியமல்ல;
உலகிற்கு நன்மை அளிக்காத எதுவும் ரகசியமல்ல.

2010 க்கு நன்றி.
பலவீனமானவர்களின் சட்டையை உரித்து
பலமென்று கொக்கரித்த வல்லரசிற்கு
பாடம் புகட்டிய 2010 க்கு நன்றி.

'காந்தி' வேடதாரிகளுக்கு சவுக்கடி கொடுத்த
'ஜி' வானவில் ஊழலுக்கும்
ராச கைங்கர்யம் செய்த தரகிக்கும்
வித்திட்ட 2010 க்கு நன்றி.

அதிகார மமதைக்கு குட்டு வைத்த
2010 ஆண்டே வாழி!
வரும் ஆண்டிலேனும்
மக்கள் வாழட்டும்!
.

Thursday, December 30, 2010

எண்ணங்கள்


தேசமே தெய்வம்


மேற்கண்ட தலைப்பில் தேசிய சிந்தனைக் கழகம் என்னும் அமைப்பு வலைப்பூ ஒன்றை நடத்துகிறது. நமது நாட்டின் அரும் புதல்வர்களான விடுதலைப் போராட்ட வீரர்கள், விஞ்ஞானிகள், அருளாளர்கள், மகான்கள், தலைவர்கள், தமிழ் வளர்த்த பெரியோர், சீர்திருத்தவாதிகளின் வாழ்க்கைக் குறிப்புகளுடன், அவர்களது சரிதம் தொடர்பான இணைய இடுகைகளின் சுட்டிகளுடன், இந்த வலைப்பூ வெளியாகி வருகிறது.

இக்கட்டுரைகள், தலைவர்களின் பிறந்தநாள்- மறைந்த நாட்களிலேயே, அவர்களை நினைவுறுத்தும் விதமாக வருவது சிறப்பு. நாட்டு மக்களுக்கு நமது முன்னோரின் அடிச்சுவடுகளை நினைவுபடுத்தும் அற்புதமான முயற்சி இது. இந்த வலைப்பூ எனக்குப் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும்...

இந்த வலைப்பூவின் முகவரி: http://desamaedeivam.blogspot.com/
..

Sunday, December 26, 2010

உருவக கவிதை - 70


திருட்டு ராசாக்கள்
.
திருடன்... திருடன்... திருடன்...
கத்திக்கொண்டு ஓடுகிறான்
திருடும்போது சிக்கிய திருடன்...
.
கூட்டாய்த் திருடி உதை வாங்குபவனை
கைவிடவும் காப்பாற்றவும் ுடியாமல்
தவிக்கிறான் சக திருடன்.
.
சிக்கியவன் வாய் திறக்கும் சமயம்
'பொதுமாத்து' தருகிறான்
தப்ப எத்தனிக்கும் திருடன்.
.
பிடித்துக் கொடுத்தவர்களையே
திருட்டுக்கு உதவியதாக
வாக்குமூலம் கொடுக்கிறான் திருடன்.
.
குற்றவாளிக் கூண்டில் நிற்கும்போது
நீதிபதி மீதும் பாய்கிறான் -
நீங்களும் திருடனென்று.
.
திருடனின் ஜாதியைக் காட்டி
இயன்றவரை நியாயப்படுத்துகிறான்
திருட்டுக் கும்பல் தலைவன்.
.
இத்தனைநாள் வாங்கிய
திருட்டுப்பொருளை மறந்து
கைவிடுகிறான் கூட்டாளிகளின் தலைவன்.
.
திருடன்... திருடன்... திருடன்...
துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்...
பலநாள் கூட்டாளிகளும் 'உடன் பிறந்த' சகாக்களும்...
.
குறிப்பு: ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கும் இக்கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
.

Saturday, December 25, 2010

எண்ணங்கள்

நல்ல முயற்சி...
வலைப்பதிவர்கள் கூடுவது மகிழ்ச்சி!

நாளை (26.12.2010) ஈரோட்டில் வலைப்பதிவர்கள் சந்திப்பு நடத்தப்படுகிறது. ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் ஏற்பாடு செய்துள்ள பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்- 2010' நிகழ்ச்சி, வலைப்பூக்களில் கருத்துமழை பொழியும் அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை.
.
ஈரோடு டைஸ் அண்ட் கெமிகல்ஸ் கட்டடத்தில் (யு.ஆர்.சி.நகர், பரிமளம் மஹால் பஸ் நிறுத்தம், பெருந்துறை சாலை, ஈரோடு) நாளை (26.12.2010) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ள இந்த வலைப்பதிவர் சந்திப்பில் சிந்திப்போம். நமது கருத்துக்களை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து கொள்வோம்!

பத்திரிகைகளும் தொலைகாட்சிகளும் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைப்பாவையாகிவிட்ட சூழலில் இணையமும் வலைப்பூக்களும் மாற்று ஊடகங்களாகி விட்டன. யாரும் தனது கருத்தை சுதந்திரமாக முன்வைக்கும் வாய்ப்பை வலைப்பூக்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து சுதந்திரத்தின் கட்டற்ற வெளியை வலைப்பூக்களும் இணையமும் சாத்தியமாக்கி உள்ளன. ஆயினும், இந்த சுதந்திரம், வலைப்பூக்களில் எழுதுவோருக்கு சுய கட்டுப்பாடு தேவை என்பதையும் நினைவு படுத்துகின்றன.
வலைப்பூ பதிவர்களும் வாசகர்களும் அவ்வப்போது சந்தித்து உரையாடுவது, வலைப்பூக்களின் தரம் உயர வழி வகுக்கும். நாட்டிற்கும் சமூகத்திற்கும் உதவும் வகையில் நமது வலைப்பூக்கள் மெருகேற, பதிவர்கள்- வாசகர்கள் சங்கமம்' உதவட்டும்.
.

Wednesday, December 22, 2010

எண்ணங்கள்




மனமார்ந்த வாழ்த்துக்கள்

நவீனத் தமிழ் எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடனுக்கு இந்த ஆண்டுக்கான சாஹித்ய அகடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2007 ல் வெளியான அவரது 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுதிக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தகுதியுள்ள, தமிழின் தொன்மையான இலக்கியங்களை நவீனத் தமிழுடன் உரையாடச் செய்கிற, ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தாளர் நாஞ்சில் நாடன். அவருக்கு விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

வாழ்த்துக்கள் சொல்ல வேண்டிய வேளை இது...

காண்க:

.

Tuesday, December 21, 2010

எண்ணங்கள்



தன்னெஞ்சறிவது பொய்யற்க!

அதீத தன்னம்பிக்கைக்கும் அகந்தைக்கும் நூலிழை அளவுதான் வித்யாசம் என்பார்கள். எந்த ஒரு செயலையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியம். அதீதமான தன்னம்பிக்கை, அரிய சாகசங்களுக்கு அவசியம். ஆனால், அதை அநாகரிகமாக பொதுஇடத்தில் வெளிப்படுத்தும்போதுதான் அகந்தை ஆகிறது. தில்லியில் நடந்த காங்கிரஸ் தேசிய மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தொண்டர்களை உற்சாகப்படுத்த பேசிய பேச்சு அவரது தகுதிக்கு சற்றும் பொருத்தமாக இல்லை.

காங்கிரஸ் மாநாட்டில் மூன்றாம் நாளில் பேசிய ப.சிதம்பரம், "அடுத்த பத்து ஆண்டுகளில், ஏன் அதற்குப் பிறகும்கூட பாரதிய ஜனதாவால் மத்தியில் ஆட்சியைப் பிடிக்க முடியாது'' என்று பேசியிருக்கிறார். பாரதிய ஜனதாவின் எதிரி என்ற முறையில், அக்கட்சியைச் சாட காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது. எனினும், ஜனநாயக ஆட்சிமுறையில் மக்களே அனைவருக்கும் எஜமானர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

நாட்டின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோதே, பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியைப் பிடித்தன. அதனை அவர் தனது பலவீனமாகக் கருதவில்லை; ஜனநாயகத்தின் பலமாகவே கருதினார்.

"இந்திராவே இந்தியா; இந்தியாவே இந்திரா' என்று ஒரு காலத்தில் முழங்கிய கட்சிதான் காங்கிரஸ். அதே இந்திராகாந்தி தனது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியுற்று, 1977ல் ஜனதாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது வரலாறு. நெருக்கடிநிலையை அடுத்து, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் கட்சியை வீட்டுக்கு அனுப்பும் என்று யாரும் கனவில்கூட சிந்தித்திருக்கவில்லை.

காங்கிரஸ் சரித்திரத்திலேயே இல்லாத சாதனையாக, 1984ல் 404 காங்கிரஸ் எம்பி.க்களுடன் பிரதமரான ராஜீவ்காந்தி, அடுத்த தேர்தலில் தனது அமைச்சரவை சகாவாக இருந்தவரிடமே படுமோசமான தோல்வியைத் தழுவி, ஆட்சியைப் பறிகொடுத்தார். அதுவும், வெறும் 65 கோடி கமிஷன் கைமாறிய போபர்ஸ் ஊழலுக்காக. இதை காங்கிரஸ் இன்றும் துர்க்கனவாகவே என்றும் நினைக்கும்.

இதையெல்லாம் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலை இருப்பதே, காங்கிரஸ் கட்சியின் தார்மிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கருத வேண்டியுள்ளது.

1998ல் 13 கட்சிகளை ஒருங்கிணைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாய், அடுத்த ஆறு ஆண்டுகள் காங்கிரஸ் வாடையில்லாத ஆட்சியை நாட்டிற்கு அளித்தார் என்பதையும் சரித்திரம் பதிவு செய்துள்ளது. பாஜக செய்த தவறுகளின் விளைவாகவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி நாட்டில் உதயமானது. இதுவே நமது மக்களாட்சி முறையின் மாண்பு.

"இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடன் அதீத தன்னம்பிக்கையுடன் தேர்தல்களம் கண்ட பாஜக, 2004ல் ஆட்சியை இழந்தது. இன்று அதேபோன்ற நிலையில்தான் காங்கிரஸ் கட்சியும் உள்ளது என்பதை அக்கட்சித் தலைவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம்.

பல லட்சம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளால் மத்திய அரசின் நம்பகத்தன்மை பலத்த அடி வாங்கியுள்ள சூழலில், தனது குறைகளை சரிப்படுத்த முயற்சிக்காமல், பிரதான எதிர்க்கட்சியை கேலி செய்வது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்கு கண்டிப்பாக உதவாது.

மத்திய அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் பிரதான எதிர்க்கட்சி மீது பாய்வதால் மத்திய அரசின் தளகர்த்தர்கள் இப்போதைக்கு சந்தோஷம் அடையலாம். ஆனால், இதன்மூலம் தனது ஒரே எதிரி பாஜக என்பதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டு, அடுத்த தேர்தலில் அத்வானியின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. அரசியலில் இருதுருவ சேர்க்கைக்கே, காங்கிரஸின் தற்போதைய நடவடிக்கைகள் ஊக்கமளிக்கின்றன.

"ஆட்சியை எப்படி நடத்துவது, மீண்டும் எப்படி ஆட்சிக்கு வருவது என்பதையெல்லாம் காங்கிரஸ் கட்சிதான் அறிந்துவைத்திருக்கிறது'' என்றும் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் நடந்த வாக்கு எண்ணிக்கைதான் நமது நினைவில் வந்துபோகிறது. ஊழல் வழக்குகள் தொடர்பாக, உச்சநீதி மன்றம் மத்திய அரசை தொடர்ந்து விமர்சிக்கும்போதே தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் லட்சணம் தெரிகிறது.

இத்தனைக்கும் பிறகும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று மனப்பால் குடிக்க காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உண்டு. தனது தொண்டர்களை உசுப்பேற்ற சில அரசியல் வசனங்களை அக்கட்சித் தலைவர்கள் பேசுவதிலும் தவறில்லை. பேசட்டும்.
அதேசமயம், தனது பேச்சுக்கு கரவொலி எழுப்பும் தொண்டர்கள் போல நாட்டு மக்களும் முட்டாள்களல்ல என்பதையும் உள்துறை அமைச்சருக்கு யாரேனும் சொன்னால் நல்லது.

.

Monday, December 20, 2010

புதுக்கவிதை - 139


தேடலின்
அருகில்...


கள்ள நோட்டு கிருஷ்ணன்கள்...
ஹரிதாஸ் முந்திராக்கள்...
ருஸ்தம் நகர்வாலாக்கள்...
கோபால கிருஷ்ணன்கள்...
ஒட்டாவியோ குவாட்ரோச்சிகள்...
கேதன் பரேக்குகள்...
அப்துல் கரீம் தேல்கிகள்...
சத்யம் ராஜுக்கள்...
நீரா ராடியாக்கள்...
ஆண்டிமுத்து ராசாக்கள்...

பட்டியல் தொடரும்...
கைதுகள் தொடரும்...
பங்கிட்டவர்கள் மட்டும்
சிக்குவதில்லை என்றும்.

எப்போதும்
தேடிக் கொண்டிருக்கிறது
மத்தியப் புலனாய்வு அமைப்பு...
அடி, முடி தெரியாத ஊழலின் பிறப்பிடத்தை...
அருகில் வைத்துக்கொண்டே.
.

Friday, December 17, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்....


ஆங்கில ஊடகங்களாலும் பிரிவினைவாதிகளாலும் புரட்சியாளராக முன்னிறுத்தப்படும் 'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ராய் குறித்து, தமிழின் முன்னணி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள கட்டுரை அருமை. வித்தியாசமான கண்ணோட்டத்துடன், சுய சிந்தனையைக் கிளரும் இக்கட்டுரை எனக்கு பிடித்தது. உங்களுக்கும்...

.

Wednesday, December 15, 2010

புதுக்கவிதை- 138


கவிதையின் நியாயம்


கைகளில் ஏந்தி இருக்கையில்
இளஞ்சூடாக மூத்திரம் கழிக்கும்
சிசுவை விடவா கவிதை பெரிது?

யாரேனும் எடுப்பதற்காக சிணுங்கும்
சிசுவின் அழுகையை விடவா
எழுதப்படும் கவிதை அழகு?

எங்கோ பார்த்தபடி இதழில் விரியும்
புன்னகையை மறுநிமிடமே மறைக்கும்
சிசுவின் நினைவல்லவா கவிதை?

வலைப்பூவில் எழுத மறந்த
கவிதைகளை விட,
சிசுவின் நறுமணம் பெரிது.

கவிதையை எப்போதும் எழுதலாம்.
சிசுவை இப்போதே கொஞ்ச வேண்டும்...
இப்போதே ரசிக்க வேண்டும்.

தாலாட்ட வேண்டியவன் சில நாட்களுக்கு
வலைப்பூவை மறந்துவிட
வேண்டியது தான்.
.

Saturday, December 11, 2010

எண்ணங்கள்


உள்ளத்தில்
உண்மைஒளி
உண்டாகட்டும்!

"பொதுஜன நன்மையே நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டுவரும் நமது பத்திரிகைக்கு அனுப்பப்படும் நிருபங்கள், இதரவிதமான பத்திரிகைகளுக்கு அனுப்புகிற மாதிரியாய் இருக்கக் கூடாது. நிருபம் எழுதுவோர் ஒவ்வொரு விஷயத்தையும் சிரமப்பட்டு ஆராய்ந்தறிந்து எழுத வேண்டும். அது பொது நன்மைக்கேற்றதாயும், சாதாரண ஜனங்களின் அறிவை விருத்தி செய்வதாகவும் இருக்க வேண்டும்...''


“ இந்தியா (7.11.1908) நாளிதழில் "நிருபர்களுக்கு முக்கியமான அறிக்கை' என்ற தலைப்பில் மகாகவி பாரதி எழுதியுள்ள விதிமுறைகள் இவை.

அடிமைப்பட்டிருந்த காலத்தில் நாட்டு விடுதலைக்காகவும், மக்களின் நன்மைக்காகவும் எழுதுகோல் உதவியுடன் போராடிய ஒரு பத்திரிகையாளராக பாரதி ஆற்றிய பணிகள் எண்ணற்றவை. நமது துரதிர்ஷ்டம், அவரது கவிதைகள் பெற்ற கவனத்தை அவரது பத்திரிகையுலகப் பணிகள் பெறாமலே உள்ளன. அவற்றை நாட்டிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய கட்டாயச் சூழல் தற்போது மிக அதிகமாகவே இருக்கிறது.

பாரதியின் பத்திரிகையுலகப் பணி 1904 நவம்பரில் "சுதேசமித்திரன்' பத்திரிகை வாயிலாகத் துவங்கியது. ஆரம்பத்தில் ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகளை தமிழில் மொழி பெயர்க்கும் பணி பாரதிக்கு கொடுக்கப்பட்டது. வெளிநாட்டுச் செய்திகளை தமிழில் தரும்போதும், நமது நாட்டின் நிலையை ஒப்பிட்டு செய்திகளை வழங்கினார் பாரதி.

இதனிடையே மகளிருக்கென்று துவங்கப்பட்ட "சக்கரவர்த்தினி' மாத இதழின் ஆசிரியராகவும் பாரதி பொறுப்பேற்றார். அதில் பெண்கள் முன்னேற்றம் குறித்த முன்னோடிக் கருத்துக்களை அவர் எழுதினார். தனது பத்திரிகைப் பணி காரணமாக, நாட்டு விடுதலைப் போராட்டத்தில் அவர் ஈர்க்கப்பட்டார்.

தனது விடுதலை வேட்கையின் வேகத்திற்கு "சுதேசமித்திரன்' ஈடுகொடுக்காத காரணத்தால், நிரந்தர மாத சம்பளத்தைப் பொருட்படுத்தாமல் அதிலிருந்து விலகி, 1906ல் "இந்தியா' பத்திரிகையில் சேர்ந்தார் பாரதி. அதில் அவரது எழுத்தாவேசம் கரைபுரண்டது. சுதேசியக் கல்வி, அந்நியப்பொருள் பகிஷ்கரிப்பு, காங்கிரஸ் கட்சியின் நிலை, வெளிநாடுகளில் இந்தியர் நிலை, சமய மறுமலர்ச்சி, சமூக சீர்த்திருத்தம் உள்ளிட்ட பல முனைகளில் பாரதியின் எழுத்துக்கள் புதுவீறுடன் வெளிவந்தன.

இந்தியா பத்திரிகையில், வாசகர்களின் வசதிக்கேற்ப சந்தா நிர்ணயம், முதன்முதலாக கார்ட்டூன் வெளியீடு, பத்திரிகையுடன் இணைப்பாக சிறு புத்தக வெளியீடு, விவாதங்களில் வாசகர் பங்கேற்பு, தமிழ்த்தேதி குறிப்பிடுதல் உள்ளிட்ட பல புதுமைகளை நிகழ்த்திய பாரதி, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இதனால் அரசின் கெடுபிடிகளுக்கு ஆளாகி, பத்திரிகையை சென்னையில் நிறுத்த வேண்டியதாயிற்று.

அரசின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பி புதுவை சென்ற பாரதி, அங்கிருந்து மீண்டும் இந்தியா பத்திரிகையை புதிய வேகத்துடன் நடத்தினார். அங்கு "விஜயா' என்ற மாலை இதழையும் "பாலபாரதா' என்ற ஆங்கில இதழையும் பாரதி நடத்தினார். தவிர, கர்மயோகி, தர்மம், சூர்யோதயம், ஞானபானு ஆகிய பத்திரிகைகளிலும் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன.

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, புதுவையிலும் இந்தியா பத்திரிகையை நடத்த முடியாமல் போனது. அப்போதும், காளிதாசன், நித்யதீரர், உத்தம தேசாபிமானி என்ற புனைப்பெயர்களில் காமன்வீல், நியூஇண்டியா, விவேகபானு போன்ற பத்திரிகைகளில் தனது எழுத்து தவத்தைத் தொடர்ந்தார் பாரதி.

"லண்டன் டைம்ஸ்' முதல் கொல்கத்தாவிலிருந்து வெளியான "அமிர்தபஜார்' பத்திரிகை வரை 50க்கு மேற்பட்ட பிற பத்திரிகைகள் குறித்தும், பிற பத்திரிகையாளர்கள் குறித்தும் 100 ஆண்டுகளுக்கு முன்னரே அவர் தனது கட்டுரைகளில் எழுதியிருக்கிறார். இவை அனைத்தும், ஆங்கிலேய அரசு கொடுத்த தொல்லைகளுக்கு மத்தியில், பெரும் பொருளாதாரச் சிக்கல்களிடையே, உடல்நலிவுற்றபோதும், பாரதி நிகழ்த்திய சாதனைகள்.

வாழ்வின் இறுதிக்கட்டத்தில் (1921) மீண்டும் சுதேசமித்திரன் பத்திரிகையில் பணிபுரிந்த பாரதி, சிறந்த மொழிபெயர்ப்பாளர், கவிஞர், எழுத்தாளர், முற்போக்குச் சிந்தனையாளர் என பலமுகங்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சாவதற்கு சில நாட்கள் முன்னரும், "சித்திராவளி' என்ற கார்ட்டூன் பத்திரிகையையும், "அமிர்தம்' என்ற வாரமிருமுறை இதழையும் வெளியிட அவர் முயன்றார். பத்திரிகைத்தொழில் மீதான பாரதியின் காதலையும், பத்திரிகை மூலம் சமூகத்தை மாற்ற அவர் துடித்த துடிப்பையும் இதன்மூலம் அறியமுடிகிறது.

பாரதி நினைத்திருந்தால், ஆங்கிலேய அரசுடன் சமரசம் செய்துகொண்டு பிரபல "பத்தி' எழுத்தாளராகப் பரிமளித்திருக்க முடியும். அரசுடன் குலாவியிருந்தால், 39 வயதிலேயே குடும்பத்தை நிர்கதியாக்கி, மருந்திற்கு காசின்றி இறந்திருக்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்காது.

உயரிய விருதுகளுடன் வாழ்வதைவிட, நாட்டு மக்களுக்காக வாழ்வதே பத்திரிகையாளனின் கடமை என்று, அவர் இறுதிவரை உறுதியுடன் வாழ்ந்தார்.
இந்நாளில் பத்திரிகையாளர்களுக்கு சமூகத்தில் தனி கெüரவம் உள்ளது. அரசு அஞ்சி மரியாதை செலுத்தும் பணியாக ஊடகத்துறை மாறிவிட்டது; ஊதியமும்கூட ஊக்கமளிப்பதாகவே இருக்கிறது. ஆனால், பத்திரிகைத்துறையின் தேசியப் பங்களிப்பு உற்சாகம் அளிப்பதாக இல்லை.

நாட்டைக் காக்க வேண்டிய பத்திரிகைத் துறையிலும் முறைகேடுகள் பெருகிவிட்டன. அதிகாரத் தரகர்களுடனும், பதவிப் பித்தர்களுடனும் கூடிக் குலாவும் பத்திரிகையாளர்களால், ஊடகத்துறையின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதைக் காண்கிறோம். சுயபொருளாதார முன்னேற்றத்திற்காக தங்களை விற்கும் ஊடக அறிஞர்களைக் காணும்போது வேதனை மிகுகிறது.

இதற்கெல்லாம் ஒரே மருந்து, பாரதியின் பத்திரிகைப் பணிகளை இளம் தலைமுறையினருக்கு கொண்டுசேர்ப்பதுதான். இதழியல் பட்டப் படிப்பில் பாரதியின் பத்திரிகைப் பணிகள் பாடமாக வைக்கப்பட வேண்டும். பாரதியின் எழுத்துக்கள் அனைத்தும் ஆங்கிலம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் கொண்டுசெல்லப்பட வேண்டும். தற்போதைய தறிகெட்ட பத்திரிகை உலகிற்கு மருந்து பாரதி மட்டுமே.

நிறைவாக, இந்தியா பத்திரிகையில் "நமது விஞ்ஞாபனம்' எந்ற தலைப்பில் பாரதி எழுதிய மகத்தான வரிகள் இதோ...

“..இப்பத்திரிகை தமிழ்நாட்டு பொதுஜனங்களுக்கு சொந்தமானது. யாரேனும் தனிமனிதனுடைய உடைமையன்று. தமிழர்களில் ஒவ்வொருவரும் தத்தம் சொந்த உடைமையாகக் கருதி, இதைக் கூடிய விதங்களிலெல்லாம் விருத்தி செய்து ஆதரிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய பொருள் அவர்கள் நன்மையின் பொருட்டு செலவிடப்பட்டு வருகிறது. நமக்கு இதுவிஷயத்தில் ஊழியத்திற்குள்ள உரிமையே அன்றி, உடைமைக்குள்ள உரிமை கிடையாது...''
----------------------------------------
இன்று மகாகவி பிறந்த நாள்

Thursday, December 9, 2010

உருவக கவிதை - 69



நினைவுச் சார்பின்மை




வெட்டப்படும் வரை
வெள்ளாடு நம்புவது
கசாப்புக்காரனை.
வெளிநாட்டில் இருந்துவந்த
கசாப்புக்காரி என்றால்
உள்ளூர் வெள்ளாடுகளுக்கு
சொல்லவே வேண்டாம்.

வெளியூர் கசாப்புக்காரி
தலையை உடனே வெட்டுவதில்லை;
முடிந்தவரை குருதியை உறிஞ்சிவிட்டு,
கொல்லாமல் விடக்கூடும் என்ற
நம்பிக்கையில் நம்பி 'கை' நனைக்கலாம்.

அவ்வப்போது போடும் புல்லும்
மேய்ச்சலுக்கு தனியே விடும் சுதந்திரமும்
வெள்ளாடுகளுக்குப் போதும்-
ஆட்டு மந்தையை கட்டிக் காக்க வந்த
தியாக அன்னை பட்டம் வழங்குபவருக்கு
கூடுதலாக கிடைக்கலாம்,
மந்தை நாட்டாண்மை பதவி.

வெளிநாட்டு கசப்புக்காரியுடன்
கூட்டணி அமைக்க
உள்ளூர் கசாப்புக்காரர்களில்
நன்றாக குருதி உறிஞ்சுபவருக்கே முன்னுரிமை.
குறிப்பாக,
நினைவுச்சார்பின்மை வியாதி இருப்பவருக்கு
எப்போதும் முதலிடம்.

ஆடுகளின் நினைவுகளைத் தட்டி எழுப்பவர்களுக்கு
கசாப்புக் கூட்டணி என்றுமே கொள்கை விரோதி.
நினைவுச் சார்பின்மை பேசிக்கொண்டே
ஆடுகளைக் காயடிப்பதிலும்
கொள்ளையடிப்பதிலும்
கசாப்பு முனைவோர் திறமைசாலிகள்.

கடைசியில் கழுத்தில் கத்தி இறங்கும்போது
வெள்ளாடுகளின் கண்களில் விரக்தி வெளிப்படலாம்.
காலம் கடந்த ஞானோதயங்களால்
பட்டிகளில் பரவும் குருதியின் ஈரம்.
அதைக் கண்டும்கூட,
வெட்டப்படாத வெள்ளாடுகள்
கெக்கலி கொட்டலாம்-
அதன் முறை வரும்வரை.

கசாப்புக்காரர்களின் பாவம்
தின்றால் போகும்.
சுய விளம்பரம் கொடுத்து சரிக்கட்டினால்
சிறப்புமலர் வெளியிட்டு
பாராட்ட வெட்டியான்கள் எப்போதும் தயார்.

வெட்டப்பட்ட அப்பாவி ஆடுகளும்
குருதி இழக்கும் வெள்ளாடுகளும்
எப்போது மாறின செம்மறி ஆடுகளாய்?
சிந்தித்தால் சித்தம் கலங்குகிறது-
நினைவுச் சார்பின்மை வேலையைக் காட்டிவிட்டது.
..

Monday, December 6, 2010

சிந்தனைக்கு


பாரதி அமுதம்

.
தெய்வம் பலப்பல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்;
உய்வதனைத்திலும் ஒன்றாய்- எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்.

தீயினைக் கும்பிடும் பார்ப்பார், -நித்தம்
திக்கை வணங்குந் துலுக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் யேசு மதத்தார்-

யாரும் பணிந்திடும் தெய்வம், -பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்,
பாருக்குளே தெய்வம் ஒன்று; -இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்....

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்
குண்மை தெரிந்தது சொல்வேன்;
சீருக்கெல்லாம் முதலாகும் - ஒரு
தெய்வம் துணை செய்ய வேண்டும்.
-மகாகவி பாரதி
(முரசு)
.

Friday, December 3, 2010

உருவக கவிதை - 68


லஞ்சம்,
ஊழலுக்கு
நான் என்றும் நெருப்பு

நீ என்ன பருப்பா என்று கேட்பவர்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாழ்வதே எனது விருப்பு.

நான் பருப்பு இல்லையென்றாலும்
லஞ்சம், ஊழலுக்கு என்றும் நெருப்பு.
ஆணவ அரசியலை எதிர்க்கும் துருப்பு.
எழுத்தே தான் என்றும் எனது இருப்பு.

நான் வெறும் பருப்பு தான் என்றாலும்
ஆணவ அரசியலுக்கு என்றும் நெருப்பு.
தேய்ந்தாலும் பாதம் காக்கும் செருப்பு.
என் உள்ளத்தில் இல்லை கருப்பு.

நான் பருப்பு என்றாலும் இல்லையென்றாலும்
அறிந்திருக்கிறேன் என் பொறுப்பு.
நாசக்காரர்களுக்கு காட்டுவேன் வெறுப்பு.
கபடதாரிகளுக்கு என்றும் கூறுவேன் மறுப்பு.

நானே கேள்வி கேட்டு நானே எழுதிய பதில்
நன்றாக இருக்கிறதா?
இது தானய்யா கவிதையின் பிறப்பு!
இதை வெளியிடுவது ஊடகங்களுக்கு சிறப்பு!
.

Wednesday, December 1, 2010

உருவக கவிதை - 67


வேர்களின் சாம்ராஜ்யம்


வேர்கள் மரத்தைத் தின்னுமா?
ஒட்டுண்ணி மரங்களின் வேர்கள்
பிற மரங்களில் ஊடி
ஆதார மரத்தை உறிஞ்சுவதை
யாரும் கண்டிருக்கலாம்.
ஆயின்-
சொந்த மரத்தையே
அந்த மரத்தின் வேர்கள்
காயப்படுத்திக் கண்டிருக்கிறீர்களா?

வேர்கள் பகுத்தறிவற்றவை;
அவற்றுக்கு சதிகள் தெரியாது.
வேர்கள் சுயசிந்தனை அற்றவை;
அவற்றுக்கு ஏமாற்றத் தெரியாது.
வேர்கள் வாழ்வதற்கே வாழ்பவை;
அவற்றுக்கு சத்தமின்றி கழுத்தறுத்து
வாழ்வைக் குலைக்கத் தெரியாது.
மரங்களைக் காப்பதே தாங்கள்தான் என்று
நடிக்க வேர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது.

தவ வாழ்க்கை வாழ்ந்தாலும்
வேர்கள் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை;
உலகத்திற்கு நீதி போதிப்பதாகக் கூறி
நீட்டி முழக்கி, பேட்டி கொடுத்து
இருளுக்குள் நேர்மாறாக நடப்பதற்கான
அரசியல் சூத்திரங்கள் தெரியாதவை-
வெளிச்சத்தில் நடப்பதை உண்மையென்று நம்பும்
அப்பாவி மனிதரைப் போன்ற அறிவிலிகள் வேர்கள்.

மரத்தின் வாழ்வைக் காப்பதே
நீர், நிலம், காற்று, சூரிய ஒளிதான்.
இந்த நான்கு தூண்களையும் கண்காணித்து
உறுதிப்படுத்தும் ஐந்தாவது தூண்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்.
எந்த ஒன்று அற்றாலும் மரம் தாக்குப் பிடிக்கும்-
வேர்கள் பிற காரணிகளுடன் இணைந்து
கூட்டுக் கொள்ளை நடத்தி
இற்றுப் போகாமல் இருக்கும் வரையில்.

மரங்கள் மரங்கள் தான்;
மனிதர்களல்ல-
வேர்கள் மரங்களின் உறுப்புகள் தான்;
மரங்கள் கவலைப்பட வேண்டியதில்லை-
மனிதர்கள் போல.

வேர்களின் சாம்ராஜ்யமும்
ஊடக சாம்ராஜ்யமும்
ஒன்றாக முடியுமா என்ன?
------------------------------------------
சமர்ப்பணம்:

கவிதை உருவாக கருக் கொடுத்த ஊடகவியலாளர்கள் பர்கா தத், வீர் சாங்க்வி ஆகியோருக்கும், அவர்களை வெளிப்படுத்த உதவிய நீரா ராடியாவுக்கும் நன்றியுடன்.

.