Wednesday, December 1, 2010

உருவக கவிதை - 67


வேர்களின் சாம்ராஜ்யம்


வேர்கள் மரத்தைத் தின்னுமா?
ஒட்டுண்ணி மரங்களின் வேர்கள்
பிற மரங்களில் ஊடி
ஆதார மரத்தை உறிஞ்சுவதை
யாரும் கண்டிருக்கலாம்.
ஆயின்-
சொந்த மரத்தையே
அந்த மரத்தின் வேர்கள்
காயப்படுத்திக் கண்டிருக்கிறீர்களா?

வேர்கள் பகுத்தறிவற்றவை;
அவற்றுக்கு சதிகள் தெரியாது.
வேர்கள் சுயசிந்தனை அற்றவை;
அவற்றுக்கு ஏமாற்றத் தெரியாது.
வேர்கள் வாழ்வதற்கே வாழ்பவை;
அவற்றுக்கு சத்தமின்றி கழுத்தறுத்து
வாழ்வைக் குலைக்கத் தெரியாது.
மரங்களைக் காப்பதே தாங்கள்தான் என்று
நடிக்க வேர்களுக்கு கண்டிப்பாகத் தெரியாது.

தவ வாழ்க்கை வாழ்ந்தாலும்
வேர்கள் யாருக்கும் உபதேசம் செய்வதில்லை;
உலகத்திற்கு நீதி போதிப்பதாகக் கூறி
நீட்டி முழக்கி, பேட்டி கொடுத்து
இருளுக்குள் நேர்மாறாக நடப்பதற்கான
அரசியல் சூத்திரங்கள் தெரியாதவை-
வெளிச்சத்தில் நடப்பதை உண்மையென்று நம்பும்
அப்பாவி மனிதரைப் போன்ற அறிவிலிகள் வேர்கள்.

மரத்தின் வாழ்வைக் காப்பதே
நீர், நிலம், காற்று, சூரிய ஒளிதான்.
இந்த நான்கு தூண்களையும் கண்காணித்து
உறுதிப்படுத்தும் ஐந்தாவது தூண்
கண்ணுக்குத் தெரியாத வேர்கள்.
எந்த ஒன்று அற்றாலும் மரம் தாக்குப் பிடிக்கும்-
வேர்கள் பிற காரணிகளுடன் இணைந்து
கூட்டுக் கொள்ளை நடத்தி
இற்றுப் போகாமல் இருக்கும் வரையில்.

மரங்கள் மரங்கள் தான்;
மனிதர்களல்ல-
வேர்கள் மரங்களின் உறுப்புகள் தான்;
மரங்கள் கவலைப்பட வேண்டியதில்லை-
மனிதர்கள் போல.

வேர்களின் சாம்ராஜ்யமும்
ஊடக சாம்ராஜ்யமும்
ஒன்றாக முடியுமா என்ன?
------------------------------------------
சமர்ப்பணம்:

கவிதை உருவாக கருக் கொடுத்த ஊடகவியலாளர்கள் பர்கா தத், வீர் சாங்க்வி ஆகியோருக்கும், அவர்களை வெளிப்படுத்த உதவிய நீரா ராடியாவுக்கும் நன்றியுடன்.

.

No comments:

Post a Comment