Wednesday, March 31, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

-திருவள்ளுவர்
(கொடுங்கோன்மை -555)

.

புதுக்கவிதை - 84






ஏனோதானோ





யாரையும்
சுட்டுக் கொல்கிறார்கள்
காவலர்கள்.



எங்கேயும்
கை நீட்டுகிறார்கள்
அதிகாரிகள்.



எதையும்
தீர்ப்பளிக்கிறார்கள்
நீதிபதிகள்.



எப்படியும்
தப்பி விடுகிறார்கள்
மக்கள் பிரதிநிதிகள்.



எதற்கும்
துணிந்துவிட்டார்கள்
பத்திரிகையாளர்கள்.



எப்போதும்
இருக்கிறார்கள்
விபசாரிகள்.



ஏன்தானோ
வாழ்கிறார்கள்
மக்கள்?
நன்றி: விஜயபாரதம் (06.08.10)

.

Tuesday, March 30, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

-திருவள்ளுவர்
(நிலையாமை -336)

.

புதுக்கவிதை - 83


பிம்பம்


கண்ணாடியில் தெரியும்
பிம்பத்தில்
கண்ணுக்குக் கீழே
கருவளையம்.
கூடவே
மீசையில் நரைமுடி.
திடுக்கிறது உடல்.

நரைமுடிக்கு
கருஞ்சாயமும்
கருவளையத்துக்கு
வெண்சாந்தும்
பூசியாகிவிட்டது.
ஆயினும் இளிக்கிறது
சாயம் போன கண்ணாடி-

தேய்ந்து போன
எலிப்பல்லைக் காட்டி!

.

Monday, March 29, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


வேத முடையதிந்த நாடு - நல்ல
வீரர் பிறந்ததிந்த நாடு,
சேத மில்லாதஹிந்துஸ் தானம் - இதை
தெய்வமென்று கும்பிடடி பாப்பா.
-மகாகவி பாரதி.
(பாப்பாப் பாட்டு)

.

மரபுக் கவிதை - 89



நான்மறை


பாரத மண்ணின் பெருமைகள் மிக்குயர்
பண்பினை விளக்கிடு பத்திரம்.

சாரண ராயிரம் போற்றி வளர்த்திய
சக்தியை உரைத்திடு சந்ததி.

வீரம் விளைந்திடு சூரர்கள் காட்டிய
தீரம் திளைத்திடு ஓவியம்.

ஈரம் நெஞ்சினில் இனிது சுரந்திடும்
வளமையை வழ்ங்கிடு வார்ப்படம்.

சீர்பெற நாட்டினை ஆண்டருள் செய்தபல்
வேந்தர்கள் வழிமுறைக் காவியம்.

நீர், நிலம், தீயென, பாரினை ஐந்தெனப்
பகுத்திடும் இந்துவின் பட்டயம்.

பூரணமாயிட, புதுவழி இயம்பிடு
போதனை சாற்றிடும் பொக்கிஷம்.

பாரத மென்றும் பண்புடை நாடென
பாரினுக் குணர்த்திய வேதியம்.
.

Sunday, March 28, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

கீழ்த்தரமான தந்திரங்களால் இந்த உலகில் மகத்தான எதையும் சாதித்துவிட முடியாது. இது என் உறுதியான நம்பிக்கை.
-சுவாமி விவேகானந்தர்

.

புதுக்கவிதை - 82


லஞ்சம் - 3

மூக்குத்திகள் - 2

பிரபலங்களுக்கு விருது
பிரதிநிதிகளுக்கு விருந்து
நீதியரசர்களுக்கு வாழ்த்து
நிர்வாகத்துக்கு சலுகை
ஊழியர்களுக்கு பஞ்சப்படி
அதிகாரிகளுக்கு ஆதரவு
கட்சியினருக்கு ஒப்பந்தம்
எதிர்க்கட்சிஎனில் பதவி
பேச்சாளர்களுக்கு வாரியம்
பெண்கள் எனில் தனிவீடு
மத்திய அரசுக்கு உறுதுணை
மக்களுக்கு இலவச டிவி
கட்சிக்கு கமிஷன்
கலைஞர்களுக்கு பொற்கிழி
பத்திரிகைகளுக்கு விளம்பரம்
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை
வாக்காளர்களுக்கு மூக்குத்தி.
எனக்கு -
முதல்வர் பதவி மட்டும்.
.


Saturday, March 27, 2010

இன்றைய சிந்தனை




சான்றோர் அமுதம்



முன்னேற்றம் என்பது ஒரே அடியாக வந்துவிடாது. பிழைகள் செய்து, அறிவடைந்து, பிழைகளைத் திருத்திக்கொண்டே தான் முன்னேற்றம் அடைய முடியும். முற்றிலும் நன்மையாக ஆண்டவன் நமக்கு எதையும் தர மாட்டான். மீண்டும் மீண்டும் செய்த பிழைகளைத் திருத்திக்கொண்டு தான் பல தோல்விகளுக்குப் பின் வெற்றி அடைய முடியும். இதுவே தனி மனிதனுடைய முன்னேற்றத்தைப் பற்றிய நியதி. அந்த நியதிப் படியே சமூக முன்னேற்றமும் அரசியல் முன்னேற்றமும் நிகழும். பிழை செய்யும் உரிமையும் அதைத் திருத்திக் கொள்ளும் உரிமையும் நமக்கு உண்டு. அதுவே முன்னேற்றத்துக்கு வழி.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:189)
.

மரபுக் கவிதை - 88


மீண்டும் தேர்தல் வருகுது!


மீண்டும் தேர்தல் வருகுது!
மீண்டும் தேர்தல் வருகுது!
வேண்டு மட்டும் கொள்கைகள்
காற்றில் பறக்க நாறுது!

''ஆளுங்கட்சி செய்தவை
அத்தனையும் நல்லவை;
மீளுங்கட்சி தேர்தலில்
எமது கட்சி மட்டுமே!

எதிரிலுள்ள கட்சிகள்
ஆட்சிக்காக ஏங்குது!
சிதறு கூட்டம்! மக்களே,
சிறுமையர்கள் எதிருளோர்!

ஒற்றுமைகள் அற்றவர்
ஒன்றுபட்டு நிற்பது
வெற்றுவேட்டு வேடமே!
வெட்கமற்ற கூட்டமே!''

கூறுகிறார் ஆள்பவர்;
ஆள்பவரை எதிர்ப்பவர்
சீறுகிறார்: - ''பொருட்களின்
விலை உயர்ந்துவிட்டதும்,

பாலையென நாட்டினை
பாழ்படுத்தி விட்டதும்,
வேலை தரா அரசு தான்!
வேண்டுகிறோம் மக்களே!

ஆளுங்கட்சி தீயது!
அடிமையாக மக்களை
நாளும் எண்ணி ஆண்டது-
நாசம் செய்யும் கூட்டமே!

ஊழல்களை ஒழித்திட
உதவிடுவீர்- ஆட்சியின்
பேழையிலே அமர்த்துவீர்!
வேலைவாய்ப்பு நல்குவீர்!''

என்று காலில் விழுகிறார்!
எங்கள் ஓட்டு கேட்கிறார்!
என்று காலை வாருவார்?
என்பது தான் புரியலை!

ஆள்பவரும், அவரினை
எதிர்ப்பவரும் கூட்டுடன்
நாள் பலவாய் மக்களைக்
குழப்புகிறார் ஐயஹோ!

தக்க தலைவன் ஒருவனைத்
தேர்ந்தெடுக்க முடியலை!
மக்களினைக் குழப்பவே
தேர்தல் இன்று இருக்குது!

யாருக் கோட்டுப் போடலாம்?
என்பது தான் தெரியலை!
யாருக் கோட்டுப் போடினும்
நாட்டுக்கின்று நாசமே!

மிருகமொன்றும் தேர்தலில்
நிற்கவில்லை- ஆதலால்
பெருமை மிக்க மனிதனைத்
தேர்ந்தெடுப்போம் - கடமையே!
மீண்டும் தேர்தல் வருகுது!
மீள்வதென்று இறைவனே?
* இன்று பென்னாகரத்தில் இடைத்தேர்தல்

.

Friday, March 26, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

நமது வீழ்ச்சிக்கு ஆணிவேர் நமது மனத்திலுள்ள பலவீனம். இதை நாம் முதலில் போக்குவோம்.
-டாக்டர் ஹெட்கேவார்

புதுக்கவிதை- 81


லஞ்சம் - 2

மூக்குத்திகள் - 1

முதல் வாரம்
முன்னூறு கிடைத்தது.
மறுவாரம்
மூவாயிரம் ஆனது.
போனவாரம் குடத்துடன்
காஸ் அடுப்பு வந்தது.
'உற்சாகத்துக்கு'க் குறைவில்லை
ஒரு வாரமாய்...
இறுதிக்கட்டமாய் நேற்றிரவு
தலைக்கு ஐநூறுடன்
வீட்டுக்கு ஒரு மூக்குத்தி
வந்தே விட்டது...
நாளைய ஓட்டுப்பதிவுக்குள்
நகைக்கடையில்
உரைத்துப் பார்த்துவிட வேண்டும்-
மூக்குத்தியை.
.

Thursday, March 25, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்


நன்றி மறப்பது நன்றன்று; நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
-திருவள்ளுவர்
(செய்ந்நன்றி அறிதல் - 108)

மரபுக் கவிதை - 87


நாய்

நன்றிக்குச் சான்றாக ஞாலத்தில் வாழுகிறாய்
என்றிக்கும் அதிர்ந்திடவே ஏற்பாகக் குரைத்திடுவாய்
என்றைக்கும் வீட்டுக்குக் காப்பாக இருந்திடுவாய்
தன்னுயிரும் ஈந்திட்டு உடைமைகளைக் காத்திடுவாய்
நன்றிக்கு நாயகனாய், ஞாலத்தின் காவலனாய்
என்றைக்கும் வாழ்ந்திடுக - என்னன்பு நாய் நீயே.

.

Wednesday, March 24, 2010

இன்றைய சிந்தனை



கருவூலம்

குகனோடும் ஐவரானோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனுடன் அறுவர் ஆனோம்; எம்முழை அன்பின் வந்த
அகன்அமர் காதல் ஐய! நின்னோடும் எழுவர் ஆனோம்;
புகழ்அரும் கானம் தந்து புதல்வரால் பொழிந்தான் உந்தை
-கவியரசர் கம்பர்
(கம்ப ராமாயணம்- யுத்த காண்டம்)

.

மரபுக் கவிதை - 86


ஸ்ரீ ராமன்


பெற்றோரின் சொற்கேட்டு,
பெரியோரை வணங்கிட்டு,
பற்றற்ற முனிவோரின்
பண்பான தாள் பணிந்து,
கற்றதனை, அதன் பயனை
குரு வணங்கி நிலைநாட்டி,
உற்றாரை, உறவினரை
உவப்புடனே உபசரித்து,
சற்றேனும் வெகுளாமல்
சாந்தி மிக முறுவலித்து,
குற்றங்கள் அற்றிடவே
குன்றான விற்பிடித்து,
வெற்றியென ஆர்ப்பரிக்கும்
தோளுயர அம்பெடுத்து,
பொற்றாமரைக் கண்ணால்
புன்னகைப்பான் ஸ்ரீ ராமன்!
நன்றி: விஜயபாரதம் (19.03.1999)
இன்று ஸ்ரீராம நவமி.

.

Tuesday, March 23, 2010

இன்றைய சிந்தனை `


சான்றோர் அமுதம்

நமது நாட்டிடை இதுகாலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடையே இவ்வித வழக்கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான்மையும் மாறிவிட்டது...
லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பாரஸ்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக்களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக் கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு - தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரிமினல் இலாகாக்களில் கூட தலைவிரித்தாடி வருகின்றன. இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர்.... சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந்தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார்கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூலாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள். இவ்விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய்விட்டது.

-பெரியார் ஈ.வே.ராமசாமி
(குடிஅரசு - 1925 ஜூலை )

புதுக்கவிதை - 80


லஞ்சம் - 1

மரணத்தின் விலை

ஆமை வேகக் கோப்பில்
உங்கள் விண்ணப்பம்
இருக்கிறதா?
எடுங்கள் எனக்கு பணம்.

தலைக்கவசம் இல்லாமல்
சவாரி ஏன் செய்தாய்?
கொடுத்திடு எனக்கு மாமூல்.

தேர்வு எழுதாமல்
தேர்வாக வேண்டுமா?
தொடர்பு கொள்ளுங்கள்
என் முகவரி:
லஞ்சம்.

டி.பி.யா வந்துவிட்டது?
மன்னியுங்கள்.
மரணத்தின் விலை
நான் தான்.
.

Monday, March 22, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மனிதனின் அகங்காரமே மாயை. இந்த அகங்காரமே எல்லாவற்றையும் திரையிட்டு வைத்திருக்கிறது. 'நான்' இறந்தால் தொந்தரவு தீர்ந்தது. ''எதையும் செய்பவன் நான் அல்ல'' என்ற உணர்வு இறையருளால் ஏற்படுமாயின், அவன் ஜீவன்முக்தன் ஆகிவிடுவான். பிறகு அவனுக்கு பயமில்லை.
-ஸ்ரீ ராமகிருஷ்ணர்
(அமுதமொழிகள்- பாகம்-1; பக்:189)
.

மரபுக் கவிதை - 85


வாழும் வழி

நைவேத்தியம் செய்திட்ட அமுதின் மீதும்
தெருவோரம் வீற்றிருக்கும் புழுதி மீதும்
கைவைக்கும் ஈப்போல வாழ்ந்திடாதே;
கயவனென இவ்வுலகம் பழித்துச் சொல்லும்.

தாமரையில் மதுவுண்ணும் வண்டு என்றும்
அதைத் தவிர வேறெதுவும் தீண்டிடாது;
பூமறைக்கும் அவ்வண்டைஉலகம் போற்றும்-
புண்ணியனாய் வாழ்ந்திடுதல் நன்று, நன்று.

-ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசம் ஒன்றைத் தழுவியது.
.

Sunday, March 21, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மதுவினால், உண்மையிலேயே நான் போய்ச் சேர வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர முடியாமல் ரயிலைத் தவற விட்டிருக்கிறேன். வாழ்க்கை ரயிலையும் தவற விட்டிருக்கிறேன்.
-கவிஞர் கண்ணதாசன்.
(அர்த்தமுள்ள இந்து மதம்- பாகம்-3; பக்:89)

மரபுக் கவிதை - 84


மதுவினை விலக்கு

மதுவினை அருந்திடின் மயக்கம் வந்திடும்;
மயக்கத்துடன் மமதை வரும்.
இதமாய்ப் பேசிடும் குணமும் குறைந்திடும்;
இடராய் இருப்பர் அனைவருக்கும்.
சதிகள் பலவும் செய்யத் தூண்டிடும்;
சங்கடங்கள் பலதேடி வரும்.
நிதமும் வீட்டில் சண்டைகள் வந்திடும்;
நினைவும் கூடத் தப்பிவிடும்.
மதுவினை உடனே விலக்கிட வேண்டும்-
மக்கள் மாண்புடன் வாழ்ந்திடவே!
.

Saturday, March 20, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

மற்றவர்களுக்கு நன்மை செய்வது தான் புண்ணியம்; மற்றவர்களுக்கு தீமை செய்வது பாவம்.
-சுவாமி விவேகானந்தர்

வசன கவிதை - 52


யாருக்கும் கவலை இல்லை!

விரைவுப் பேருந்தில் இடம் பிடிக்க
அலைமோதுகிறார்கள் மக்கள்.
கைப்பைகளையும் கைக்குட்டைகளையும்
சாளரம் வழியே வீசி
இருக்கைகளை முன்பதிவு செய்கிறார்கள்.
பயணிகள் இறங்கும் முன்னரே
முண்டியடித்து ஏறுகிறார்கள் சிலர்.
பேருந்து நிலையம் போலவே
பேருந்திலும் வழிகிறது பயணிகள் கூட்டம்.
வண்டி புகை கக்குகிறது.

நிற்பவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய்.
தொங்கியபடி, சாய்ந்தபடி,
ஒற்றைக்காலில் நின்றபடி,
முதுகுக்கு முட்டுக் கொடுத்தபடி,
இருக்கைகளில் இருப்பவர்களை
ஏக்கமாய்ப் பார்த்தபடி...

அமர்ந்திருப்பவர்களும் ஒவ்வொரு விதம்.
அவரவர் இருக்கையில்
அடக்கமாய் அமர்ந்துள்ளவர்களும் உண்டு.
சிலர் பேருந்தே தனது போல
காலை அகட்டி, கைகளைக் கட்டிக் கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி இருக்கிறார்கள்.
மூவர் அமரும் இருக்கையில்
மீதமிருவரும் ஒடுங்கி, முறைக்க,
தொடை தட்டுகிறார் வஸ்தாது.

இன்னொருவர், காலை
முன்னிருக்கையில் ஊன்றி
சுகமான உறக்கம்.
அருகில் இருப்பவர்
இடப்புற சக பயணியின் தோளில்
முகம் புதைந்து உறக்கம்.
இடையில் சிக்கியவரும்
முறைத்தபடி திணறுகிறார்.
நிற்பவர் மகிழ்வுடன் வேடிக்கை பார்க்க,
பரபரப்புடன் இயங்குகிறார்
கடமை தவறாத நடத்துனர்.

பேருந்தின் முன்புறம்
பெண்களின் சலசலப்பு.
கர்ப்பிணிகளுக்கு மட்டும்
சிறப்பு ஒதுக்கீட்டில் இருக்கை.
பொதுவுடைமை, தனியுடைமை,
இரக்கம், ஏக்கம் - எல்லாம் புரிய
பேருந்துப் பயணம் போதும்.


அனைவருக்கும் அவரவர் கவலை.
சிலரது நிணைவுகள்- வீட்டுக் கதவுப் பூட்டில்.
சிலருக்கு அலுவலக கடிகாரத்தில்.
சிலருக்கு தொழிற்சாலையில்.
சிலர் சாளரம் வழியே சட்டெனக் கடக்கும்
அனைத்தையும் வெறிக்கிறார்கள்.
பேருந்தில் இரையும் திரைப்படத்தில்
பலரது கவனம்.

சிலர் தூங்குகிறார்கள்.
சிலர் படிக்கிறார்கள்.
சிலர் நடிக்கிறார்கள்.
சிலர் நோட்டமிடுகிறார்கள்.
யாருக்கும் கவலை இல்லை-
பேருந்தை இயக்கும் ஓட்டுனர்
'மொபைல் போனில்' பேசுவது பற்றி.


.

Friday, March 19, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
-ஔவையார்
(கொன்றை வேந்தன் -87)

வசன கவிதை - 51


என்ன மனிதர்கள்?

பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
இடப்புறம் இருவர் அமரக் கூடிய ஆசனத்தில் சாளரத்தை ஒட்டியவாறு அமர்ந்துகொண்டு, வேகமாய்க் கடந்து மறையும் இயற்கைக் காட்சிகளை ரசித்தவாறு - வசதியாக உட்கார்ந்திருக்கிறேன்.
எனக்கு ஒற்றைநாடி தேகம்.

ஒரு நிறுத்தத்தில் பேருந்து நிற்கிறது.
பத்துப் பதினைந்து பேர் கொண்ட கும்பல் முண்டியடித்து ஏறுகிறது. அவர்களது கண்களில், தங்கப் புதையலைத் தேடுகிற வேட்டைக்காரனின் ஆர்வம்.
அவரவர்கள், தங்களுக்கருகிலோ, இல்லை கண்ணுக்குத் தட்டுப்பட்டதாகவோ இருக்கும் ஆசனங்களை ஆக்கிரமிக்கப் போட்டியிட, சிலருக்குப் புதையல் கிடைக்கிறது. பலர் கண்களில் ஏமாற்றம் நிழலாடுகிறது.

என்னுடைய - அதாவது நான் அமர்ந்திருக்கும் - ஆசனமும் பங்கு போடப்படுகிறது. என் நித்திரைக் கண்களில் பயம் நிகழ்வாகிறது.
பக்கத்தில் அமர்ந்தவருக்கு 'இரட்டை நாடி' தேகம்.

அந்தச் சாலை சற்று கரடு முரடான பாதை. போதாவென்று கொண்டை ஊசி வளைவுகள் வேறு. பேருந்து ஆடி ஆடி நகர்கிறது.

'இரட்டை நாடி'யை பார்க்கிறேன். 'ஆ'வென வாய் பிளந்திருக்க, தலை தள்ளாட, தோளில் அணிந்திருந்த துண்டு தழைந்து கீழே நழுவிக் கொண்டிருக்க, உறக்கத்தில் அவர் உறைந்திருக்கிறார்.


சிலர் பேருந்து நகர ஆரம்பித்தவுடன் தூங்கி விடுகிறார்கள். பேருந்து 'தடதட'வென உருண்டாலும் சரி, 'கடகட'வென இரைந்தாலும் சரி, சிலர் பயணசீட்டு வாங்கக்கூட மறந்து - கும்பகர்ணனை மாறிப் போகிறார்கள்.


திடீரெனக் கவனிக்கிறேன்-
தன் இரு தொடைகளையும் அகட்டி வைத்து, என் ஆசனத்தின் பெரும்பகுதியை அவர் கைப்பற்றி இருக்கிறார்.
நான் குறுகி, சாளரத்துடன் ஒன்றி அமர்ந்திருக்கிறேன். என் இயலாமை குரோதமாய்ப் புகைகிறது.


அதற்கு ஏற்றாற்போல- பேருந்து குலுங்கும் ஒவ்வொருமுறையும் 'இரட்டை நாடி'யின் அதிரடித் தாக்குதல் என்னை மேலும் குறுக்க,
நான் 'இரட்டை நாடி'யை சபிக்கிறேன்.


பேருந்து இடப்புறம் திரும்பும் போதெல்லாம், நான் மேலும் நசுங்க, என்னுள் குரோதம் கொப்புளிக்கிறது. என்ன செய்யலாம்?
இதோ ஒரு வாய்ப்பு.
பேருந்து வலப்புறம் திரும்புகிறது.


என் மூளை மின்னல் வேகமாய் ஆணைகளைப் பிறப்பிக்க, என் சக்தி முழுவதையும் திரட்டி, என்னை நெம்புகோலாய் உருவகித்து, சாளரத்தையே சார்ந்து வலது புறம் நகர்கிறேன்.


தனது சமநிலை குலைந்து 'இரட்டை நாடி' ஆசனத்தின் ஓரத்துக்குச் சென்று ஆடிப்போகிறது. உடனே- கீழே விழுந்த குழந்தை எழும் முன் சுற்று முற்றும் பார்ப்பது போல- அசடு வழிய சுற்றுப்புறத்தை கவனித்து, என்னைப் பார்த்து இளித்து, மீண்டும் தூங்க ஆரம்பிக்கிறது.


என்ன திருப்தி! அடுத்தவன் அசடு வழிந்தால் எத்தனை ஆனந்தம்? எப்படிப்பட்ட பரவசம்?
ஆனால் சோதனைகள் தீரவில்லை. மீண்டும் இடப்புற வளைவுகள் வர, பேருந்து குலுங்க, என் நிலை பரிதாபமாகிப் போகிறது.


பாலைவனக் காற்றாய் அனல் பெருமூச்சு என்னுள்ளிருந்து வெளிப்பட, எப்படி இந்த 'இரட்டை நாடி'யை வீழ்த்துவது என்ற சிந்தனையிலேயே, சிந்தனையிலேயே, சிந்தனையிலேயே... என் கவனம் ஆழ்கிறது.

இவ்வுலகிலேயே நானும் 'இரட்டைநாடி'யும் மட்டுமே இருப்பது போல ஒரு மயான அமைதி நிலவ, என்னைத் தவிர எல்லோரும் நித்திரையில் லயித்திருக்க, என் கண்கள் வெஞ்சினத்துடன் செருக ஆரம்பிக்கின்றன. ஒரு கனவு நிகழ்கிறது...


என் முஷ்டி உயரும் போதெல்லாம் 'இரட்டை நாடி' அலற, இறுதியில் என் காலில் வீழ, போரில் வென்றுவிட்ட அசோகன் போல, ''என்ன மனிதர்கள்?'' என்று பெருமூச்செறிந்து விழிக்கின்றேன்.


திடீரென ஒரு தடுமாற்றம்:
'' அட, நானும் ஒரு மனிதன் தானே?''


திடுக்கிட்டு விழிக்கிறேன்; சுற்றிலும் பார்க்கிறேன்- இது என் வீடு.
ஓஹோ, இது கனவுக்குள் கனவு!
வாய் மட்டும் முணுமுணுக்கிறது:
'ச்சே, என்ன மனிதர்கள்?'

எழுதிய நாள்: 26 .12 .1991 .
(தங்கை உமா பெயரில் கல்லூரி மலரில் வெளியானது).
.

Thursday, March 18, 2010

இன்றைய சிந்தனைகள்







கருவூலம் - 1

1 . அறம் செய விரும்பு
2 . ஆறுவது சினம்
3 . இயல்வது கரவேல்
4 . ஈவது விலக்கேல்
5 . உடையது விளம்பேல்
6 . ஊக்கமது கைவிடேல்
7 . எண்ணெழுத்து இகழேல்
8 . ஏற்பது இகழ்ச்சி
9 . ஐயமிட்டு உன்
10 . ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12 . ஔவியம் பேசேல்
13 . அஃ கம் சுருக்கேல்...

- ஔவையார் (ஆத்திசூடி)
**********************
கருவூலம் - 2

1 . அச்சம் தவிர்
2 . ஆண்மை தவறேல்
3 . இளைத்தல் இகழ்ச்சி
4 . ஈகை திறன்
5 . உடலினை உறுதி செய்
6 . ஊண்மிக விரும்பு
7 . எண்ணுவது உயர்வு
8 . ஏறு போல் நட
9 . ஐம்பொறி ஆட்சி கொள்
10 . ஒற்றுமை வலிமையாம்
11 . ஓய்தல் ஒழி
12 . ஔடதம் குறை...
-மகாகவி பாரதி (புதிய ஆத்திசூடி)
.

மரபுக் கவிதை - 83


இளைய ஆத்திசூடி - 1

01. அன்னையே தெய்வம்
02. ஆணவம் அகற்று
03. இனிமையைப் பேசு
04. ஈந்திடு உதவி
05. உழவே உலகம்
06. ஊழினை மறவேல்
07. எழுப்பிடு உறக்கம்
08. ஏக்கம் வேண்டா
09. ஐயம் அகற்று
10. ஒருமுகப்படுத்து
11. ஓதிடு வேதம்
12. ஔவை சொல் நில்
13. கசடினைப் போக்கு
14. காவியமாய் வாழ்
15. கிழமென இகழேல்
16. கீதையை கற்றிடு
17. குலப்புகழ் மறவேல்
18. கூழினைக் குடி
19. கெஞ்சுதல் தவறு
20. கேளிரை மதி
21. கைத்தொழில் பழகு
22. கொட்டம் அடக்கு
23. கோவென உயர்
24. கெளரவம் காத்து வாழ்.
.

Wednesday, March 17, 2010

மரபுக் கவிதை - 82


இளைய ஆத்திசூடி - 2

25 . சரித்திரம் அறிக
26 . சாதிகள் இல்லை
27 . சிற்றினம் வேண்டா
28 . சீலம் பழகு
29 . சுதந்திரம் பேணு
30 . சூரனாய் மாறு
31 . செப்பம் செய்
32 . சேவையை நாடு
33 . சைனியமாக்கு
34 . சொப்பனம் நீக்கு
35 . சோதிடம் பயில்க
36 . சௌமியம் மிளிர்க
37 . ஞமனுக்கஞ்சு
38 . ஞானம் தேடு
39 . ஞிமிறென சேமி
40 . ஞொள்குதல் வேண்டா
41 . தகர்த்திடு தடைகள்
42 . தானம் நன்று
43 . திருப்பணி பல செய்
44 . தீயென ஒளிர்க
45 . துரத்திடு துயரம்
46 . தூஷணம் பாவம்
47 . தெளிவே தேவை
48 . தேசம் நாமே
49 . தைவதம் போற்று
50 . தொன்மையை நினை
51 . தோஷம் போக்கு.
.

Tuesday, March 16, 2010

மரபுக் கவிதை - 81


இளைய ஆத்திசூடி - 3

52. நம்பிடு தெய்வம்
53. நாத்திகம் நறுக்கு
54. நியமம் தவறேல்
55. நீதி நிலைக்கும்
56. நுழைபுலம் வழங்கு
57. நூல்கள் இயற்று
58 நெடுமொழி பேசேல்
59. நேர்மை தவறேல்
60. நைச்சியம் ஒதுக்கு
61. நோய் வலுவழிக்கும்
62. பகர்ந்திடு உண்மை
63. பாவம் கொடிது
64. பிரணவம் ஓது
65. பீடு உயர்த்து
66. புதுமைகள் நிகழ்த்து
67. பூஷிதம் போதும்
68. பெயரினை நாட்டு
69. பேதமை ஓட்டு
70. பொறுத்தவர் வெல்வர்
71. போதனை செய்க
72. பௌதிகம் அறிக
.

Monday, March 15, 2010

மரபுக் கவிதை - 80


இளைய ஆத்திசூடி - 4

73. மமதை அடக்கு
74. மாதவனாய் வாழ்
75. மிஞ்சுதல் வேண்டா
76. மீட்டிடு மாட்சி
77. முதுமையை மதி
78. மூதுரை மறவேல்
79. மெத்தவும் விரும்பேல்
80. மேனியைக் கருது
81. மையலை விலக்கு
82. மொழியினைப் பற்று
83. மோகத்தைக் கொல்
84. மௌனம் ஞானம்
85. யவனரைத் துரத்து
86. யாகம் பல செய்
87. யுவனை எழுக
88 . யூகம் விரும்பு
89. யோகம் வேண்டு
90. யௌவனம் மாறும்.

Sunday, March 14, 2010

மரபுக் கவிதை - 79


இளைய ஆத்திசூடி - 5

91.வடமொழி பயில்க
92.வாகைகள் சூடு
93.விரயம் அழிக்கும்
94.வீறுடன் கிளம்பு
95.வெப்பினை நீக்கு
96.வேகம் குறை
97.வைதிகம் பரப்பு
98.வௌவுதல் வேண்டா
99. எஃகென ஒளிர்க
100.வக்கிரம் ஒடுக்கு
101.சங்கீதம் பாடு
102.இச்சை அடக்கு
103.அஞ்சுதல் இழிவு
104.பண்பினை மாற்றேல்
105.தத்துவம் பேசு
106.தொய்ந்திடல் தோல்வி
107.கள்ளினை விலக்கு
108.சற்குரு வணங்கு
109.வென்றிடு உலகம்.


***


ஏதேதோ எண்ணங்கள்


இளைய ஆத்திசூடி -
அருஞ்சொற் பொருள்:
(கடினமான சொற்களுக்கு மட்டும் )

ஊழ்: விதி
ஐயம்: சந்தேகம், பயம்
கசடு: குற்றம்
கோ: அரசன்
கெளரவம்: மானம்
சிற்றினம்: தீயோர் சேர்க்கை
சீலம்: ஒழுக்கம்
சைனியம்: படை
சௌமியம்: அமைதி
ஞமன்: யமன்
ஞிமிறு: தேனீ
ஞொள்குதல்: சோம்புதல்
தூஷணம்: நிந்தித்தல்
தைவதம்: தெய்வம்
நுழைபுலம்: நுண்ணறிவு
நைச்சியம்: தாழ்மை
பீடு: பெருமை
பூஷிதம்: அலங்காரம்
மேனி: உடல்நலம்
மையல்: மயக்கம்
யவனர்: அயலார்
விரயம்: வீண்செலவு
வெப்பு: உடற்சூடு
சற்குரு: ஞானாசிரியன்.

Saturday, March 13, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

அரசியல் என்பது ஷேமநலத்தைப் பற்றிய விவகாரம். மக்களுடைய ஷேம நலத்துக்காக பணி செய்யும் தகுதி யார் உடையவர்கள்? தெய்வத்தையும் மெய்ப்பொருளையும் நாடும் மனிதர்களே அந்தப் பணியில் ஈடுபட வேண்டும். தெய்வ பக்தியில்லாதவர்கள் அப்பணியில் சேராமல் இருப்பதே நலம்.
-மகாத்மா காந்தி

.

மரபுக் கவிதை - 78

எங்க ஊரு எம்.எல்.ஏ.

எங்க ஊரு எம்.எல்.ஏ. எங்களுக்கு உதவலை.
எங்க கதை கேளுங்க- எப்படியோ வாழறோம்!

தேர்ந்தெடுத்த மக்களை ஏறெடுத்தும் பார்க்கலை.
காரினிலே போகிறார்- கால்நடையாய்த் தேயறோம்!

கும்பிடுகள் போட்டதால் குளிர்ந்துவிட்ட மனத்தினால்
நம்பி ஓட்டு போட்டபின் நடுத்தெருவில் நிற்கிறோம்!

அறிவிலியாய் ஓட்டினை அண்டப்புரட்டன் கையிலே
பறிகொடுத்துத் தவிக்கிறோம்- பாவம் எங்கள் தொகுதியே!

''தொகுதிக்கே வாழுவோம், தொண்டனாக உதவுவோம்,
வகுத்திடுவீர் எம்விதி, வள்ளல்களே வந்தனம்!

நாயைப் போல நன்றியாய் நற்பணிகள் செய்திட
நேயனுக்கு உதவுவீர்- நேற்றையதை மாற்றுவேன்!''

என்று சொல்லிச் சென்றபின், எங்களது ஓட்டினால்
வென்று சென்னை சென்றவர் வெறுத்துப் போக வைக்கிறார்!

'சொன்னதையே செய்கிறோம், சோகமதைத் துரத்துறோம்'
என்றறிக்கை சொல்லுறார் - எம்மிதயம் வேகுது!

திட்டம் போட்டுத் திருடர்கள் திருடுவதைப் போலவே
சட்டம் போட்டு மக்களை சகதியிலே தள்ளுறார்!

அடுத்த தேர்தல் வந்திடின் அனைவருமே ஓட்டினை
நடுத்தெருவின் காவலன் நாயினுக்குப் போடுவோம்!

எழுதிய நாள்: 13.05.1989

Friday, March 12, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.
-சுவாமி விவேகானந்தர்

.

புதுக்கவிதை - 79


இதுவும் கடந்து போகும்...

வீட்டைப் பெருக்கி
வீதியில் தள்ளியாயிற்று.
வீடு சுத்தமாயிற்று.
வீதி குப்பையாயிற்று.
தெருமுனைக் குப்பையை
வாகனத்தில் கடக்கலாம்;
நதியின் வீச்சம் தான்
குமட்டுகிறது.

வீட்டுக் கழிவுநீரே
சாக்கடை வாயிலாய்
நதியென நடமாடுவதால்
மூக்கைப் பொத்தியபடி
கடந்து விடலாம்.
ஆனாலும்,
நதிப்படுகையில்
ஆழ்குழாய்க் கிணறு
அமைத்த உள்ளாட்சிக்கு
சுயபுத்தியும் இல்லை.
சொந்த புத்தியும் இல்லை.
.

Thursday, March 11, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

அனைத்தும் மனத்தில் தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை இரண்டும் மனத்தில் தான் உள்ளது. தூய்மையான மனம் உள்ளவர்கள் அனைத்தையும் தூய்மையாகவே காண்கிறார்கள்.
-அன்னை சாரதா தேவி.

.

வசன கவிதை - 50


தொல்லைக்காட்சி - 3

எதற்கு வீண் செலவு?

வன்முறை,
பாலியல் கட்சிகள்,
வக்கிரம்
மிகுந்துவிட்டது
திரைப்படம்.
அதனால் குடும்பத்துடன்
திரையரங்கு செல்வதே இல்லை
நாங்கள்-
அது தான் வீட்டிலேயே
இருக்கிறதே தொலைகாட்சி.


.

Wednesday, March 10, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

குடும்பத்தின் ஒவ்வொருவரிடமும் நல்ல பண்புகளை பதியச் செய்திட பாரதீய மேதைகள் கண்ட சரியான, ஆழ்ந்த கருத்துள்ள, பரவலான ஏற்பாடு இணையற்றது. இது உலகிற்கு பாரதம் தரும் விலை மதிப்பிட முடியாத வரப்பிரசாதம். குடும்பங்கள் சிதைந்து அதனால் அவலத்தில் உழலும் உலகிற்கு அபயக்கரம் காட்டுவது ஹிந்து குடும்ப அமைப்பு தான்.
மறுபடியும் மேனிலை அடைந்து இன்பமும் அமைதியும் ஏற்பட வழி திறக்க வேண்டுமானால் உலகம் பாரதத்தின் குடும்ப அமைப்பை ஆதாரமாக ஏற்பது நல்லது.
-சுவாமி விவேகானந்தர்.
.

வசன கவிதை - 49


தொல்லைக்காட்சி -2

அழையா விருந்தாளிகள்

கொடுமைக்காரி மாமியார்,
சபலிஸ்ட் மாமனார்,
சின்னப்புத்தி மைத்துனர்,
சின்னவீடு மைனர் அத்தான்,
கல்லூரியில் காதலிக்கும் தங்கை,
அழுமூஞ்சி அக்கா,
சாடிஸ்ட் சகலை,
வஞ்சம் தீர்க்கும் மருமகள்,
மனதில் கருவும் ஓரகத்தி,
சைக்கோ மருமகன்,
பழி வாங்கும் அண்ணி,
பல்லைக் கடிக்கும் மாமா,
சாபம் விடும் சம்பந்தி,
போதையேற்றும் தம்பி,
கோபக்கார அத்தை,
பரிதாப தாத்தா,
வாயாடி பாட்டி,
கள்ளக்காதலி அம்சா,
திருட்டு நண்பன் கம்சா...

எல்லோரும்
எல்லோர் வீட்டுக்கும்
அனுமதியின்றி வருகிறார்கள்-
தொலைக்காட்சி
நெடுந்தொடர்களில்...
.

Tuesday, March 9, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
-திருவள்ளுவர்
(விருந்தோம்பல் - 84)
பொருள்: விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
.



வசன கவிதை - 48


தொல்லைக்காட்சி - 1

விருந்து

தாத்தா, பாட்டிக்கு
சீரியல்கள்...
அம்மா, அப்பாவுக்கு
மூவி சானல்கள்...
தம்பி, தங்கைகளுக்கு
பதிவிறக்கம் செய்யப்பட்ட
பாடலகள்...
குழந்தைகளுக்கு
கார்ட்டூன் சானல்கள்..
அவரவர் அறைகளில்
அவரவர் விருப்பங்கள்...
வீட்டுக்கு வந்த விருந்தினர்
வரவேற்பறையில்
தூர்தர்சன் செய்தி
பார்த்தபடி...
.

Monday, March 8, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

‘உத்திஷ்டதா! ஜாக்ரதா! பிராப்யவரான் நிபோதிதா!’ [எழுமின் விழிமின் குறிக்கோளடையும் வரை செல்மின்] என்ற உபநிடத வரியில் உள்ள ஜாக்ரதை என்பது சலியாத கவனத்துடன் செல்லும் பாதையை தேர்ந்தெடுப்பதையே சுட்டுகிறது. ஒவ்வொரு ஆன்மீகப் பயணமும் காலடி படாத மானுடக் காட்டுக்குள் தனித்துச் செல்லும் முதல்பயணம் போன்றதே. ஏற்கனவே வெட்டப்பட்ட வழிகளோ விளக்குகள் வழிகாட்டும் ராஜபாதைகளோ அதில் இல்லை. வழித்துணையாக ஆவது தங்கள் பாதையில் தாங்களே சென்றவர்களின் சொற்கள் மட்டுமே. ஆகவே ஒருகணமும் சிதையாத கவனம் அதற்கு தேவையாகிறது. அதைத்தான் உபநிடதம் சொல்கிறது : ‘ஜாக்ரதை!’

நம்முடைய தாழ்வுணர்ச்சியால், மூளைச்சோம்பேறித்தனத்தால், அச்சங்களால், சபலங்களால் நாம் தவறான நம்பிக்கைகளை நோக்கிச் செல்கிறோம். தவறான நம்பிக்கையில் முதல்காலடி எடுத்து வைக்கும்பொதே ஒவ்வொருவருக்கும் அந்தரங்கத்தின் ஆழத்தில் அந்த விஷயம் தெரிந்திருக்கும்... நம்மை நாமேதான் பெரும்பாலும் ஏமாற்றிக்கொள்கிறோம்.

இத்தகைய தருணங்களில் நாம் உணரவேண்டிய ஒன்றுண்டு. எது இந்து ஞான மரபின் சாரமோ அதை முன்வைப்பதே சரியான வழியாக இருக்க முடியும். எது உண்மையோ அது முன்வைக்கப்பட வேண்டும். அது உண்மை என்றால் அதற்கு தன்னை நிறுவிக்கொள்ளும் வல்லமை இருக்கும். போலிகளை, மோசடிகளைச் சார்ந்து உண்மை நிலைகொள்ள முடியாது. அது அவர்களை பிளந்துகொண்டுதான் தன் வழியைக் கண்டுபிடிக்கும்.

- ஜெயமோகன்
காண்க: ஜாக்ரதை

உருவக கவிதை - 40


நித்யானந்தம் - 5

தராதரம்

ஆடு நனைகிறதென்று
ஓநாய் அழுகிறது.
விழுங்கிய குட்டியை எண்ணி
கண்ணீர் விடுகிறது முதலை.
பயிரை மேய்ந்த வேலி
தராதரம் பேசுகிறது.
முதுகில் குத்திய கட்டாரி
ஞானோபதேசம் செய்கிறது.
சிக்கியவனை எச்சரிக்கிறது
ஆடி முடித்த தேகம்.

ஊரை விழுங்கிய பெருச்சாளி
மூஞ்சுறுக்களை மிரட்டுகிறது.
ஆபாசக் களஞ்சியம்
நாகரிகம் பேசுகிறது.
மொத்தத்தில்
வேதம் ஓதுகிறது சாத்தான்.

எது எப்படியோ
செய்தியிடை காட்டப்பட்ட
நீலப்படம் நின்றுவிட்டது.

காண்க: துரியன் சபதம் (07.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/39.html

Sunday, March 7, 2010

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்

துறவு அமைப்புகளில் நான் பெரிய நம்பிக்கை கொண்டவன் அல்ல என்பதையும் உங்களுக்குச் சொல்ல வேண்டும். அவற்றில் நன்மைகள் உள்ளன; பெரும் குறைகளும் உள்ளன. துறவிகளுக்கும் இல்லறத்தார்களுக்கும் இடையில் சமநிலை ஏற்பட வேண்டும்...
துறவி அரசனை விட உயர்ந்தவன். காவி உடுத்த துறவியின் முன்னர் உட்காரத் துணிகின்ற மன்னன் இந்தியாவில் இல்லை. அவன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கிறான். ஆனால் அது நல்லதல்ல. நல்லவர்களானாலும், மக்களுக்கு அரணாக இருந்து வருபவர்களேயானாலும், அவர்கள் கையில் இவ்வளவு அதிகாரம் இருப்பது சரியல்ல....
நீங்கள் ஓர் இல்லறத்தானாக இந்தியாவுக்கு சென்று மதத்தை போதியுங்கள். இந்துக்கள் அதைப் புறக்கணித்துவிட்டு அப்பால் போய்விடுவார்கள். நீங்கள் துறவியாக இருந்தால் அவர்கள், 'அவர் நல்லவர்; அவர் உலகத்தைத் துறந்தவர்; ; நேர்மையானவர்; சொல்வதைச் செய்ய முயற்சிப்பவர்' என்பார்கள். நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், அங்கே துறவு என்பது ஒரு மாபெரும் சக்தியைக் குறிக்கிறது. நாம் செய்யக் கூடியது, அதனை மாற்றுவது மட்டுமே; அதற்கு வேறொரு வடிவம் கொடுப்பதே. இந்தியாவில் திரியும் துறவிகளிடம் உள்ள இவ்வளவு பெரும் சக்தி மாற்றப்பட வேண்டும். அது மக்களை உயர்த்தும்.
-சுவாமி விவேகானந்தர்.
(ஞானதீபம்- முதல் சுடர்- பக்: 22).

உருவக கவிதை - 39


நித்யானந்தம் - 4

துரியன் சபதம்

பளிங்குத்தரை என்று இடறி
பொய்கையில் வீழ்கிறான் துரியன்.
இன்னோரிடத்தில் -
தடாகமென்று கால் நனைத்து
தடுமாறுகிறான்.
மீண்டும் நகைக்கிறாள் பாஞ்சாலி.

அந்தப்புரமெங்கும்
அம்பலமாகிறது
மாயமாளிகையில்
துரியனின் துயரம்.
குறுஞ்சிரிப்புடன் கடக்கும்
சேடிகளால் பரவுகிறது சேதி.
துரியன் செவிகளில்
எதிரொலிக்கிறது
பாஞ்சாலியின் கெக்கலி.

தொடை தட்டிச் சிரிக்கிறாள்
கலியுகப் பாஞ்சாலி.
மனதில் கறுவுகிறான் துரியன்.

எப்படியும் மாறும்
கலிகாலத்தில்
துரியனின் சபையில்
நியாயம் கேட்பாள் பாஞ்சாலி.

தன்னை இழந்த
அரசன் தருமன்,
தளபதி பீமன்,
நிர்வாகி விஜயன்,
சாத்திரன் நகுலன்,
நீதிமான் சகதேவன் -
ஐவரும் தரை பார்க்க
நடந்தேறும் துகிலுரிப்பு.

ஆடை பற்றுவான் துச்சன்.
பொய்கை வன்மத்துடன்
தொடை தட்டுவான் துரியன்.
ஐவரை மணந்தவளுக்கு
ஆபத்துதவியாய்
கண்ணன் வருவானா?
கரத்தில் அம்புடன்
காத்திருக்கிறான் கர்ணன்.

கண்கட்டிய காந்தாரியும்
மூலையில் முடங்கிய குந்தியும்
கண் கட்டாத துரோணரும் பீஷ்மரும்
முடங்க இயலாத திருதனும் விதுரனும்
மௌனமாய் அரற்றுவார்கள்.

எண்ணிக்கை வலிமையையும்
எள்ளலின் வன்மமும்
கூத்தாடும்.
மீண்டும் நிகழும் மகாபாரதம்.
நிறைவேறும்
துரியன் சபதம்.

வேடிக்கை பார்ப்பார்கள்
மக்கள்.

காண்க: என்றும் இன்பம் (06.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/38.html

Saturday, March 6, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

மோகத்தைக் கொன்று விடு - அல்லால் என்றன்
மூச்சை நிறுத்திவிடு.
தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லால் அதில்
சிந்தனை மாய்த்துவிடு.
யோகத் திருத்திவிடு - அல்லால் என்றன்
ஊனைச் சிதைத்துவிடு.
ஏகத் திருந்துலகம் - இங்குள்ளன
யாவையும் செய்பவளே!
-மகாகவி பாரதி
(மஹாசக்திக்கு விண்ணப்பம்)

உருவக கவிதை - 38


நித்யானந்தம் - 3

என்றும் இன்பம்

உங்கள் பெயரை உடனே மாற்றுவது
உத்தேசமாக நல்லது.
கோஷமிட்டு கொடி பிடிக்க
பக்தகோடிகள் தயார்!

உங்களுக்கென கட்சி துவங்குவது
உறுதியாய் நல்லது.
கூட்டணி அமைத்தால்
குற்றங்கள் மறையும்.

என்றும் இன்பத்துக்கு இன்றே மாறுங்கள்.
'என்றும் இன்பன்' ஆகுங்கள்!
கூடவே இருக்கிறார் கொ.ப.செ.

கட்சியின் பெயரில் 'கழகம்' இருக்கட்டும்.
சொத்துக்கள் கூடும்; சோகம் தொடராது.

'பகுத்தறிவை விட
பட்டறிவு மேலானது' -
அடுத்த புத்தகத்துக்கு
தலைப்பும் தயார்!

காண்க: பொது மாத்து (05.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/37.html

Friday, March 5, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்

மழித்தலும் நீட்டலும் வேண்டா; உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
-திருவள்ளுவர்
(கூடா ஒழுக்கம் - 280)

உருவக கவிதை - 37


நித்யானந்தம் - 2

பொதுமாத்து

'பொது மாத்து' தெரியுமா?
கையாடல் செய்த
நிதிநிறுவன அதிபர்
வாங்குவது.
பேருந்தில் சிக்கிய
ஜேப்படித் திருடன்
வாங்குவது.
வகை தெரியாமல்
பேசிய தொண்டன்
வாங்குவது.
ஆவேசத் தொழிலாளர்களிடம்
அகப்பட்ட அதிகாரி
வாங்குவது.
முகத்திரை கிழிந்த
மோசடித் துறவி
வாங்குவது.

தனித்து இன்றி
பொதுவில் விழுவது;
பொது இலக்கில்
தனிநபர் குவிவது.

என்ன, ஏது என்று
கேட்பதற்குள்
விழுந்த மாத்து
விழுந்தது தான்-
திரும்பப் பெற இயலாது.

அப்பாவிகள் சிலநேரம்
அடிவாங்கலாம்
பொது மாத்தில்.
பாவிகள் தப்பியதில்லை -
விபசாரிகளையும்
அரசியல்வாதிகளையும் தவிர.

காரணகர்த்தர்கள்
காயம் படுவதில்லை;
காரியவாதிகளும்
காயம் படுவதில்லை.
காரணத்துக்கும்
காரியத்துக்கும் இடையே
காத்திருக்கிறது
'பொது மாத்து'.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/36.html
.

Thursday, March 4, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

பிரமச்சரியம் என்கிற விரதம் மற்ற விரதங்களைப் போலவே மனம், வாக்கு, காயம் மூன்றிலுமே காக்கப்பட வேண்டும். கீதையில் எடுத்துக் காட்டியிருப்பது போல், உடலில் மாத்திரம் பிரமச்சரியத்தைக் காத்து, மனத்தில் காமத்தை வளர்த்தால் அது பயனற்ற முயற்சியாகும். உடலுக்கு அது நல்லதுமாகாது. மனம் சென்ற வழியில் உடலும் இன்றோ நாளையோ கட்டாயம் செல்லும். அசுத்தமான எண்ணங்களில் மனத்தைச் செல்லவிடுவது குற்றமாகும். நாம் எவ்வளவு முயன்றாலும் மனமானது தவறிச் செல்லப் பார்க்கும். அதை நாம் தடுத்துக் கொண்டே வர வேண்டும். முடிவில் வெற்றி அடைவோம்...

-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்:166)

உருவக கவிதை - 36


நித்யானந்தம் -1

நிதமும் ஆனந்தம்

கதவைத் திறந்து வையுங்கள் -
காற்று வரட்டும்!
சாளரங்களை மூடிய
திரைகளையும் நீக்குங்கள்!
விளக்கொளியும் நறுமணமும்
அறைக்குள் நிறையட்டும்!
அறைக்குள் இருப்பது
அனைவருக்கும் தெரியட்டும்!

கதவைத் திறந்திடுங்கள் -
காற்று வரட்டும்!
ரகசிய விருந்தாளிகளுக்கு
திறந்த அறைகளில் இடமில்லை!
ஒளிப்படக் கருவிகளை
ஒளித்துவைக்கத் தேவையில்லை!
ஆனந்தமாக இருங்கள்!
நிதமும்
ஆனந்தமாக இருப்பீர்கள்!

காண்க: கொசுறு/ (06.02.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/02/29.html
.

Wednesday, March 3, 2010

இன்றைய சிந்தனை




சான்றோர் அமுதம்



வாழ்க்கைக்கு மந்திரம் அன்பு அல்லது அஹிம்சை. இல்லாவிடில் கட்டாயமாக யுத்தங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒரு யுத்தத்துக்கு மேல் அடுத்த யுத்தத்தின் கோரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதிராகவ - பக்:27)
.

மரபுக் கவிதை - 77


வெண்புறாக்கள் பறக்கட்டும்!


வெண்புறாக்கள் விண்ணில் பறக்கட்டும்!
வெந்திட வேண்டாம் இனியிந்த பூமி!

பிரம்மாஸ்திரமாம் அணுகுண்டிதனைப்
பிறந்திடச் செய்தோர் பிறகு வருந்த
கண்ணீர் கடலெனப் பொழிந்திட வேண்டாம்-
கவலைகள் தரும் இக்கடியது தீது!

ஜப்பான் தேசம் சாட்சியாய் நிற்க,
எப்போதிதனை அழித்திடுவோம் நாம்?
சிறகினை விரித்துச் சிட்டெனப் பறக்கும்
வெண்புறா கூறும்: வெந்திட வேண்டாம்!

அருளால் இறைவன் அளித்த உலகினை
அணுவால் நாமும் அழித்திடலாமா?
அஹிம்சை உடனே அடிப்படைத் தேவை!
அன்பால் உலகம் அமைத்திடுவோமே!

அணுவினை நல்ல ஆற்றலாய்க் கொள்வோம்!
அதனினைக் கொண்டே அதிசயம் புரிவோம்!
வெண்புறாக்கள் விண்ணில் பறக்கட்டும்!
வெந்திட வேண்டாம் இனியிந்த பூமி!
..

Tuesday, March 2, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்
மனமே எல்லாம். மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையையும் விளையாது.
-அன்னை சாரதா தேவி.

.

உருவக கவிதை - 35


சுயம்

எனக்கு முன் சென்றவர்
திரும்பிப் பார்த்தார்.
நானும் திரும்பினேன் -
ஒருவரும் இல்லை.
.

Monday, March 1, 2010

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம்வளர்ந் திடுக! மறமடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
-மகாகவி பாரதி
(வாழிய செந்தமிழ்)
.

புதுக்கவிதை - 78


வாழிய செம்மொழி!

செம்மொழிப் பூங்கா, சாலைகள் தயார்.
பாழடைந்த நூலகங்கள் மட்டும்
பரிதாப நிலையில்.
.