Saturday, March 20, 2010

வசன கவிதை - 52


யாருக்கும் கவலை இல்லை!

விரைவுப் பேருந்தில் இடம் பிடிக்க
அலைமோதுகிறார்கள் மக்கள்.
கைப்பைகளையும் கைக்குட்டைகளையும்
சாளரம் வழியே வீசி
இருக்கைகளை முன்பதிவு செய்கிறார்கள்.
பயணிகள் இறங்கும் முன்னரே
முண்டியடித்து ஏறுகிறார்கள் சிலர்.
பேருந்து நிலையம் போலவே
பேருந்திலும் வழிகிறது பயணிகள் கூட்டம்.
வண்டி புகை கக்குகிறது.

நிற்பவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதமாய்.
தொங்கியபடி, சாய்ந்தபடி,
ஒற்றைக்காலில் நின்றபடி,
முதுகுக்கு முட்டுக் கொடுத்தபடி,
இருக்கைகளில் இருப்பவர்களை
ஏக்கமாய்ப் பார்த்தபடி...

அமர்ந்திருப்பவர்களும் ஒவ்வொரு விதம்.
அவரவர் இருக்கையில்
அடக்கமாய் அமர்ந்துள்ளவர்களும் உண்டு.
சிலர் பேருந்தே தனது போல
காலை அகட்டி, கைகளைக் கட்டிக் கொண்டு
நெஞ்சு நிமிர்த்தி இருக்கிறார்கள்.
மூவர் அமரும் இருக்கையில்
மீதமிருவரும் ஒடுங்கி, முறைக்க,
தொடை தட்டுகிறார் வஸ்தாது.

இன்னொருவர், காலை
முன்னிருக்கையில் ஊன்றி
சுகமான உறக்கம்.
அருகில் இருப்பவர்
இடப்புற சக பயணியின் தோளில்
முகம் புதைந்து உறக்கம்.
இடையில் சிக்கியவரும்
முறைத்தபடி திணறுகிறார்.
நிற்பவர் மகிழ்வுடன் வேடிக்கை பார்க்க,
பரபரப்புடன் இயங்குகிறார்
கடமை தவறாத நடத்துனர்.

பேருந்தின் முன்புறம்
பெண்களின் சலசலப்பு.
கர்ப்பிணிகளுக்கு மட்டும்
சிறப்பு ஒதுக்கீட்டில் இருக்கை.
பொதுவுடைமை, தனியுடைமை,
இரக்கம், ஏக்கம் - எல்லாம் புரிய
பேருந்துப் பயணம் போதும்.


அனைவருக்கும் அவரவர் கவலை.
சிலரது நிணைவுகள்- வீட்டுக் கதவுப் பூட்டில்.
சிலருக்கு அலுவலக கடிகாரத்தில்.
சிலருக்கு தொழிற்சாலையில்.
சிலர் சாளரம் வழியே சட்டெனக் கடக்கும்
அனைத்தையும் வெறிக்கிறார்கள்.
பேருந்தில் இரையும் திரைப்படத்தில்
பலரது கவனம்.

சிலர் தூங்குகிறார்கள்.
சிலர் படிக்கிறார்கள்.
சிலர் நடிக்கிறார்கள்.
சிலர் நோட்டமிடுகிறார்கள்.
யாருக்கும் கவலை இல்லை-
பேருந்தை இயக்கும் ஓட்டுனர்
'மொபைல் போனில்' பேசுவது பற்றி.


.

No comments:

Post a Comment