நித்யானந்தம் - 4துரியன் சபதம்பளிங்குத்தரை என்று இடறி
பொய்கையில் வீழ்கிறான் துரியன்.
இன்னோரிடத்தில் -
தடாகமென்று கால் நனைத்து
தடுமாறுகிறான்.
மீண்டும் நகைக்கிறாள் பாஞ்சாலி.
அந்தப்புரமெங்கும்
அம்பலமாகிறது
மாயமாளிகையில்
துரியனின் துயரம்.
குறுஞ்சிரிப்புடன் கடக்கும்
சேடிகளால் பரவுகிறது சேதி.
துரியன் செவிகளில்
எதிரொலிக்கிறது
பாஞ்சாலியின் கெக்கலி.
தொடை தட்டிச் சிரிக்கிறாள் கலியுகப் பாஞ்சாலி.மனதில் கறுவுகிறான் துரியன்.எப்படியும் மாறும்
கலிகாலத்தில்
துரியனின் சபையில்
நியாயம் கேட்பாள் பாஞ்சாலி.
தன்னை இழந்த
அரசன் தருமன்,
தளபதி பீமன்,
நிர்வாகி விஜயன்,
சாத்திரன் நகுலன்,
நீதிமான் சகதேவன் -
ஐவரும் தரை பார்க்க
நடந்தேறும் துகிலுரிப்பு.
ஆடை பற்றுவான் துச்சன்.
பொய்கை வன்மத்துடன்
தொடை தட்டுவான் துரியன்.
ஐவரை மணந்தவளுக்கு
ஆபத்துதவியாய்
கண்ணன் வருவானா?
கரத்தில் அம்புடன்
காத்திருக்கிறான் கர்ணன்.
கண்கட்டிய காந்தாரியும்
மூலையில் முடங்கிய குந்தியும்
கண் கட்டாத துரோணரும் பீஷ்மரும்
முடங்க இயலாத திருதனும் விதுரனும்
மௌனமாய் அரற்றுவார்கள்.
எண்ணிக்கை வலிமையையும்
எள்ளலின் வன்மமும்
கூத்தாடும்.
மீண்டும் நிகழும் மகாபாரதம்.
நிறைவேறும்
துரியன் சபதம்.
வேடிக்கை பார்ப்பார்கள்
மக்கள்.
காண்க: என்றும் இன்பம் (06.03.2010)- http://kuzhalumyazhum.blogspot.com/2010/03/38.html
No comments:
Post a Comment