Tuesday, June 28, 2011

சிந்தனைக்கு

குறள் அமுதம்

புறத்தூய்மை நீரான் அமையும் அகத்தூய்மை
வாய்மையாற் காணப் படும்

- திருவள்ளுவர்

(வாய்மை- 298)

Thursday, June 23, 2011

எண்ணங்கள்




தீயில் கருகிய பயணிகளின் கதறல் காதில் விழுகிறதா?



கடந்த ஜூன் 7ம் தேதி இரவு வேலூர், காவேரிப்பாக்கம் அருகே நடந்த பயங்கர சாலைவிபத்தில், சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கிவந்த தனியார் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் 21 பேர் கருகி பலியாகி இருக்கின்றனர். இந்த விபத்தில் சிக்கிய அபலைகள் தப்பவே வழியின்றி கூண்டில் அடைபட்டவர்களாக எரிந்து சாம்பலாகி இருக்கின்றனர்.


மிகுந்த மனவேதனை அளிக்கும் இந்தக் கொடிய விபத்திற்கு தனியார் பேருந்து காரணமாக இருந்தாலும், விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்தாத அரசுத் துறைகளுக்கும் இதில் பொறுப்புண்டு.


விபத்துக்குள்ளான தனியார் சொகுசுப்பேருந்தை வாங்கி ஒரு மாதம்தான் ஆகியிருக்கிறது. குளிர்சாதன வசதி கொண்டது என்பதால் இதன் முப்புறமும் கண்ணாடிச் சாளரங்கள் திறக்க முடியாதவையாக இருந்துள்ளன. முன்புற வாயிலும் மூடப்பட்ட நிலையில், விபத்தில் சிக்கிய பயணிகளால் பேருந்திலிருந்து வெளியேற முடியவில்லை. சாகும் தறுவாயில் அவர்கள் எழுப்பிய மரண ஓலத்தை நினைத்தாலே நெஞ்சம் பதைக்கிறது.


இந்த விபத்திற்குக் காரணம் பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே என்பது முதல்கட்ட விசாரணையில் தெளிவாகி இருக்கிறது. முன்செல்லும் வாகனங்களை வலதுபுறமாகவே முந்திச் செல்ல வேண்டும் என்ற சாலைவிதியை மீறி, முன்னால் சென்ற இரு லாரிகளை இடதுபுறமாக முந்த முயன்றுள்ளார், தனியார் பேருந்தின் ஓட்டுநர். அதேசமயம், முன்னால் சென்ற லாரி ஒன்றும் இடதுபுறமாகத் திரும்பவே, பேருந்து விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. பேருந்தின் டீசல் டேங்க் வெடித்ததில் சாலைவிபத்து தீவிபத்தாக மாறிவிட்டது.


பொதுவாகவே, தனியார் பேருந்துகள் எந்த சாலை விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இயக்கப்படுவதைக் காணலாம். இவற்றை போக்குவரத்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் தனியார் பேருந்து நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் மரியாதையைக் கண்டால் பல சூட்சுமங்கள் புரியவரும்.


அரசுப் பேருந்துகளைவிட அதிவேகமாக இயக்கப்படுவதால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே, செல்ல வேண்டிய இடத்தை இவை அடைந்துவிடுகின்றன. இதுவே தனியார் சொகுசுப் பேருந்துகளின் வியாபார வளர்ச்சிக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. சாலைகளில் வாகனங்களை இயக்க உச்சபட்ச வேகம் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. அவற்றை தனியார் பேருந்துகள் மதிப்பதே இல்லை. போக்குவரத்து காவல்துறையினரும் நெடுஞ்சாலை ரோந்து போலீஸôரும் இந்த விதிமீறலைக் கண்டுகொள்வதும் இல்லை.


அரசுப் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவது கட்டாயமாக உள்ளது. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் ஓட்டுநர் நினைத்தாலும் அரசுப் பேருந்தை விரட்ட முடியாது. இது பேருந்துப் பயணிகளின் அச்சமற்ற பயணத்தை உறுதிப்படுத்துகிறது; தவிர எரிபொருள் செலவையும் குறைக்கிறது. தனியார் பேருந்துகளில் வேகக் கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தப்படுவதில்லை.


தவிர வாகனங்களில் பொருத்தப்படும் முகப்பு விளக்குகளின் திறனுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளன. எதிர்வரும் வாகன ஒட்டுனர்களின் கண்களைக் கூசச் செய்யாததாக அவை இருக்க வேண்டும். இந்த விதியும் தனியார் பேருந்துகளில் அப்பட்டமாக மீறப்படுகிறது.


வாகனப் பதிவின்போதும், அவ்வப்போது செய்யப்படும் ஆய்வின்போதும் இவற்றை உறுதிப்படுத்த வேண்டியது போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் கடமை. அவர்கள் கடமை தவறுவதால், தனியார் பேருந்துகளைக் கண்டாலே எமனைக் கண்டதுபோல எதிர்வரும் வாகனங்கள் விலக நேரிடுகிறது.


தனியார் பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்புக்கும், ஆபத்தான காலகட்டங்களில் தப்புவதற்கும் ஏற்றதாக உள்ளதையும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள்தான் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்திருந்தால், வேலூர் அருகே நடந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை குறைந்திருக்கக் கூடும்.


நெடுஞ்சாலைகளில் அமைக்கப்படும் சிறுபாலங்கள் இருக்கும் இடங்களில் சாலையின் அகலம் குறைவது "பாட்டில் நெக்' எனப்படுகிறது. விபத்து நடந்த பகுதியில் அத்தகைய பாலம் இருந்ததும் விபத்துக்கு காரணமாகிவிட்டது. இத்தகைய பாலங்கள் மாநிலம் முழுவதும் பல இடங்களில் விபத்தை ஏற்படுத்தியபடியே உள்ளன. சாலைப் பாதுகாப்பு பிரசாரம் செய்யும் நெடுஞ்சாலைத் துறை, இந்த சாலைக் குறைபாட்டைக் கவனிப்பதே இல்லை.


எந்த ஒரு விபத்தும் பல படிப்பினைகளை அளிக்கவே செய்கிறது. ஏர்வாடியில் மனநலக் காப்பகத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2001) 27 மனநோயாளிகள் தப்ப வழியின்றி பலியானதும், கும்பகோணம் பள்ளியில் நேரிட்ட தீவிபத்தில் (2004) ஏதுமறியாத 83 மழலைகள் கருகி பலியானதும், ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் நேரிட்ட தீவிபத்தில் (2004) 57 பேர் பரிதாபமாக பலியானதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.


காவேரிப்பாக்கம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தும், 21 பேரை உயிரோடு எரித்துக் கொன்று துக்ககரமான சம்பவங்களில் இடம்பிடித்துவிட்டது. இந்தச் சம்பவம் அளித்துள்ள படிப்பினைகளை நாம் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோமா? கடமையாற்ற வேண்டிய அரசுத் துறைகளின் அலட்சியப்போக்கை அரசு சரிப்படுத்துமா?


.

Wednesday, June 15, 2011

உருவக கவிதை - 68



சுழியம்



தொடக்கமும் முடிவும் ஒன்றெனக்கொண்ட

புள்ளியும் சுழியமும் முடிவில்லாதவை.


.

Friday, June 10, 2011

உருவக கவிதை - 67



நிலவின் களங்கம்


வட்ட முழு நிலவில்

கருந்திட்டுக்கள்,

வண்ணக்கலவையின்

அற்புத ஜாலம்.



நிலவை உரசும்

கருமேகங்கள்,

வண்ணக்கலவையின்

இயற்கைக்கோலம்.



நிலவின் களங்கம்

கருந்திட்டுக்களுமல்ல;

கருமேகங்களுமல்ல.

நமது மனதின்

தோற்றப்பிழைகள்.

.