பின்தொடர்பவர்கள்

Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

கணிப்பொறித் துறை மாணவர்களின்  ‘கர்ஸர்’ என்ற கல்லூரி இதழை நான் வெளியிட்டேன். பிறகு சுமார் 15 நிமிடங்கள் சிற்றுரை நிகழ்த்தினேன். நான் அதிகமாக மேடைகளில் பேசுபவன் அல்ல. விழாக்களில் பார்வையாளனாக இருப்பதே எனது வழக்கம். எனினும், இக்கல்லூரியில் பேசியது ஒரு பயிற்சியாக இருந்தது. 

“நாம் அனைவருமே சமுதாயத்தின் பல தரப்பட்டவர்களது உழைப்பால் தான் வாழ்கிறோம். அந்த சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற பணிகளை நாமும் செய்ய வேண்டும். நாம் செய்யும் வேலைகளின் மூலமாகவும் நான் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும்...

நாம் எங்கு சென்றாலும்,  உல்கின் எந்த மூலையில் பணியாற்றினாலும், நமது தேசத்தின் பெருமையை அதிகரிக்கும் விதமாக செயல்பட வேண்டும். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் முத்திரை பதிக்க வேண்டும்.கணிப்பொறித் துறையில் வெறும் பணியாளர்களாக மட்டுமல்லாது, கண்டுபிடிப்பாளர்களாகவும், துறைக்கு வழிகாட்டுபவர்களாகவும் உயர வேண்டும்...

நம்மிடம் உள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதை மனதில் கொண்டு, நாம் பெறும் அறிவை மேம்படுத்தினால் நாடும் உயரும்; நாமும் உயர்வோம்...”

-இதுவே எனது பேச்சின் சாராம்சம். நமது முன்னோரின் வியத்தகு ஞானம், பாரதியின் கவலை, அரவிந்தரின் பொன்மொழி ஆகியவற்றை எடுத்துக் கூறினேன். கல்லூரி செயலர் திரு ரகுராஜன் அவர்கள், நன்றாகப் பேசியதாக சொன்னார். 

கல்லூரி மாணவ மாணவியர் பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் அமர்ந்து விழாவை சிறப்பாக அமைத்தனர். அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், நண்பர்கள் திரு. திருமாறன், ஸ்ரீமதி புவனேஸ்வரி ஆகியோருக்கும் நன்றி. 

இத்தகைய நிகழ்வுகள் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. இறைவனுக்கு நன்றி!
Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வுதிருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.

மாற்றுக்கல்வி, ஊடகங்களின் போக்கு குறித்த இரு ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கல்லூரி மாணவர் கருத்தரங்கமும் திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தது. 

சுதந்திரதினப் பேரணியுடன் துவங்கிய விழாவில் விவேகானந்தர் வாழ்க்கை குறித்த கண்காட்சி பலரையும் கவர்வதாக இருந்தது. 7 பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்  விழாவை கோலாகலமாக்கின. கட்டுரைப்போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர்கள் திரு. திருப்பூர் கிருஷ்ணன், திரு. ஜெயமோகன் ஆகியோரின் சிறப்புரைகள் விழாவுக்கு மகுடமாக அமைந்தன.

விழாவின் மிக முக்கியமான நிகழ்வு, சமூகசேவை ஆற்றும் ஆறு பேருக்கு ‘அறச்செம்மல்’ விருது அளிக்கப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வே. மது விலக்கை வலியுறுத்திப் போராடிவரும் சேலம் காந்தியவாதி சசிபெருமாள்,  மலைவாழ் மக்களிடையே ஓராசிரியர் பள்ளிகளை நடத்திவரும் கோவை மருத்துவர் திரு சதீஷ்குமார், அவரது மனைவி ஹேமா சதீஷ்குமார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்திவரும் திருமுருகன்பூண்டி விவேகானந்த சேவாலயம் திரு செந்தில்நாதன், காந்தி இன்று இணையதளத்தி நடத்திவரும் காரைகூடி மருத்துவர் திரு சுனில்கிருஷ்ணன், தெருவில் திரியும் மனநோயாளிகளை மீட்டு  அரும்சேவை செய்யும் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் திரு. மகேந்திரன், பாரம்பரியச் சின்னங்களை மீட்கும் அமைப்பை நடத்திவரும் சென்னை ஐ.டி.துறை இளைஞர் திரு சசிதரன் ஆகியோருக்கு அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் செயற்கரும் பணியாற்றுவொர் இன்னமும் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டி நம்பிக்கை வளர்க்கவே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விழா நிகழ்வுக்ளில் திருப்பூர் மக்கள் திரளாக நாள் முழுவதும் (காலை 8.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை!) பங்கேற்றதும் நம்பிக்கை அளிக்கும் விஷயம். மொத்தத்தில், சுதந்திர தினத்தை ஒரு முழுநாள் கொண்டாட்டமாக மாற்றிய அறம் அறக்கட்டளையில் நானும் இணைந்து பணியாற்றியது ஆனந்தமான அனுபவம். இதேபோல அனைத்துப் பகுதிகளிலும் விழா கொண்டாடினால், சுதந்திரத்தின் மகிமையை இளைய தலைமுறையினர் உணர வாய்ப்பு ஏறபடும். .

Monday, August 5, 2013

எழுத்தாளர் ஜெயமோகனின் அற்புத முயற்சி


தமிழின் முன்னணி எழுத்தாளரும் முன்னுதாரணமான திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து வருபவருமான திரு. ஜெயமோகன், தனது இணையதளத்தில்  புதிய எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டு வருகிறார்.

அவரது சொல்புதிது இணைய குழுமத்தில் நண்பர்களான, அவரது வழிகாட்டுதலில் பட்டை தீட்டப்பட்ட பலரது சிறுகதைகள் அதில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. மிகவும் தன்னம்பிக்கையும் பெருந்தன்மையும் இல்லாமல், இவ்வாறு இளம் எழுத்தாளர்களின் கதைகளை தனது சொந்தத் தளத்தில்  வெளியிட முடியாது. ஜெயமோகனால் கண்டுகொள்ளப்பட்ட இந்த புதிய எழுத்தாளர்கள் அனைவரும் பாக்கியவான்கள்.

தமிழில் மணிக்கொடிக்காலம்,  வானம்பாடிக்காலம், சரஸ்வதி காலம், எழுத்து காலம், என்று பல இலக்கிய இயக்கங்கள் குறிப்பிடப்படுவதுண்டு. அந்த வகையில் இது ஜெயமோகனின் காலம். அவரது தாக்கத்தால் உருவான புதிய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இவர்கள்.

ஜெயமோகனின் அறம் சிறுகதைகளின் தொடருக்குப் பிறகு மிகுந்த நெகிழ்ச்சியூட்டும் கதைகளாகவும், நம்பிக்கை அளிக்கும் வாரிசுகளைக் காட்டுவதாகவும் இக்கதைகள் அமைந்துள்ளன. ஒரு புதிய குருகுலம் உருவாகி வந்திருக்கிறது- ஆர்ப்பாட்டமின்றி, அற்புதமான ஒளிக்கீற்றுடன். ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி!

இக்கதைகள் ஒவ்வொன்றும் ஒரு ரகம். இதுகுறித்து பின்னர் விரிவாக எழுதத் திட்டம். இப்போதைக்கு, புதிய கதைகளின் இணைப்புகள் கீழே...

12. பயணம் சிவேந்திரன் 
11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் 
10. வேஷம் பிரகாஷ் சங்கரன் 
9. கன்னிப்படையல் ராஜகோபாலன் 
8. சோபானம் ராம்
7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்
6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் 
4. தொலைதல் ஹரன் பிரசன்னா 
3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார்
2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி 
1. உறவு தனசேகர்