Tuesday, August 20, 2013

திருப்தி அளிக்கும் நிகழ்வு



திருப்பூர் அறம் அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தினத் திருவிழாவில் இணைந்து பணி புரிந்தது மிகுந்த மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கும் நிகழ்வாக அமைந்தது.

சுதந்திர தினத்தன்று வீட்டில் டி.வி. முன் அமர்ந்துகொண்டு சினிமா நடிகைகளின் பேட்டியைக் கண்டு ரசித்து  நேரத்தை வீணாக்காமல், சமூகத்திற்குப் பயனளிக்கும் விதமாக நாள் முழுவதும் கொண்டாட்டமாக, சுதந்திர தின விழா கொண்டாட வேண்டும் என்று திருப்பூர் அறம் அறக்கட்டளை திட்டமிட்டது. அதன் உறுப்பினர் என்ற முறையில் நானும் அதில் இணைந்து பணியாற்றினேன். அதன் தலைவர் ஆடிட்டர் திரு. சிவசுப்பிரமணியன் தலைமையிலான குழு உற்சாகமாகவும் ஒருங்கிணைந்தும் நடத்திக் காட்டியுள்ள இவ்விழா, பல அற்புதமான முன்னுதாரணங்களை உருவாக்கி உள்ளது.

மாற்றுக்கல்வி, ஊடகங்களின் போக்கு குறித்த இரு ஆக்கப்பூர்வமான கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. அதில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கல்லூரி மாணவர் கருத்தரங்கமும் திருப்பூர் மாவட்ட வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதித்தது. 

சுதந்திரதினப் பேரணியுடன் துவங்கிய விழாவில் விவேகானந்தர் வாழ்க்கை குறித்த கண்காட்சி பலரையும் கவர்வதாக இருந்தது. 7 பள்ளிகளைச் சார்ந்த மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்  விழாவை கோலாகலமாக்கின. கட்டுரைப்போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எழுத்தாளர்கள் திரு. திருப்பூர் கிருஷ்ணன், திரு. ஜெயமோகன் ஆகியோரின் சிறப்புரைகள் விழாவுக்கு மகுடமாக அமைந்தன.

விழாவின் மிக முக்கியமான நிகழ்வு, சமூகசேவை ஆற்றும் ஆறு பேருக்கு ‘அறச்செம்மல்’ விருது அளிக்கப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வே. மது விலக்கை வலியுறுத்திப் போராடிவரும் சேலம் காந்தியவாதி சசிபெருமாள்,  மலைவாழ் மக்களிடையே ஓராசிரியர் பள்ளிகளை நடத்திவரும் கோவை மருத்துவர் திரு சதீஷ்குமார், அவரது மனைவி ஹேமா சதீஷ்குமார், ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் நடத்திவரும் திருமுருகன்பூண்டி விவேகானந்த சேவாலயம் திரு செந்தில்நாதன், காந்தி இன்று இணையதளத்தி நடத்திவரும் காரைகூடி மருத்துவர் திரு சுனில்கிருஷ்ணன், தெருவில் திரியும் மனநோயாளிகளை மீட்டு  அரும்சேவை செய்யும் கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளையின் திரு. மகேந்திரன், பாரம்பரியச் சின்னங்களை மீட்கும் அமைப்பை நடத்திவரும் சென்னை ஐ.டி.துறை இளைஞர் திரு சசிதரன் ஆகியோருக்கு அறச்செம்மல் விருது வழங்கப்பட்டது. சமுதாயத்தில் தன்னலம் கருதாமல் செயற்கரும் பணியாற்றுவொர் இன்னமும் உள்ளனர் என்பதை எடுத்துக்காட்டி நம்பிக்கை வளர்க்கவே இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விழா நிகழ்வுக்ளில் திருப்பூர் மக்கள் திரளாக நாள் முழுவதும் (காலை 8.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை!) பங்கேற்றதும் நம்பிக்கை அளிக்கும் விஷயம். மொத்தத்தில், சுதந்திர தினத்தை ஒரு முழுநாள் கொண்டாட்டமாக மாற்றிய அறம் அறக்கட்டளையில் நானும் இணைந்து பணியாற்றியது ஆனந்தமான அனுபவம். இதேபோல அனைத்துப் பகுதிகளிலும் விழா கொண்டாடினால், சுதந்திரத்தின் மகிமையை இளைய தலைமுறையினர் உணர வாய்ப்பு ஏறபடும். 



.

No comments:

Post a Comment