Friday, August 30, 2013

பார்க் கல்லூரி விழாவில் பங்கேற்பு


திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை,  அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு. திருமாறன் எனது நண்பர்; விவேகானந்தம் 150 இணையதளத்தின் தொடர்ந்த வாசகர். அந்தத் தளத்தில் சென்னையைச் சார்ந்த ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார்.  அவர் திரு. திருமாறன் அவர்களுடன் ஒரே கல்லூரியில் ஒரே ஆண்டில் படித்தவர். இது,  திருப்பூரில் அறம் அறக்கட்டளையின் சுதந்திர தினவிழாவில் திரு. திருமாறன் பங்கேற்றபோது, அவரே சொல்லி நான் அறிந்தது.

இந்நிலையில், அண்மையில் இவ்விருவருடனும் இணைந்து பார்க் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு திரு. திருமாறன் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். 

அவரது அழைப்பை ஏற்று கல்லூரியின் கணிப்பொறியியல் துறை பேரவை துவக்க விழாவில் (27.08.2013) பங்கேற்றேன். சிறப்பு விருந்தினர் ஸ்ரீமதி காம்கேர் புவனேஸ்வரி அவர்கள்- கணிப்பொறித் துறையில் 50-க்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர்; காம்கேர் என்ற மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருபவர். அவர் தனது அனுபவங்களால் அத்துறை மாணவர்களுக்கு நல்ல வழி காட்டினார். அன்பான சகோதரி போல இயல்பான பேச்சு. மாணவ மாணவியருக்கு வாழ்க்கை அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் கலந்து அவர் அளித்த உரை நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையில் புதிய  திசைகளைக் காட்டி இருக்கும். 

கணிப்பொறித் துறை மாணவர்களின்  ‘கர்ஸர்’ என்ற கல்லூரி இதழை நான் வெளியிட்டேன். பிறகு சுமார் 15 நிமிடங்கள் சிற்றுரை நிகழ்த்தினேன். நான் அதிகமாக மேடைகளில் பேசுபவன் அல்ல. விழாக்களில் பார்வையாளனாக இருப்பதே எனது வழக்கம். எனினும், இக்கல்லூரியில் பேசியது ஒரு பயிற்சியாக இருந்தது. 

“நாம் அனைவருமே சமுதாயத்தின் பல தரப்பட்டவர்களது உழைப்பால் தான் வாழ்கிறோம். அந்த சமுதாயத்திற்கு நம்மால் இயன்ற பணிகளை நாமும் செய்ய வேண்டும். நாம் செய்யும் வேலைகளின் மூலமாகவும் நான் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்ற முடியும்...

நாம் எங்கு சென்றாலும்,  உல்கின் எந்த மூலையில் பணியாற்றினாலும், நமது தேசத்தின் பெருமையை அதிகரிக்கும் விதமாக செயல்பட வேண்டும். எந்தப் பணியில் ஈடுபட்டாலும் அதில் முத்திரை பதிக்க வேண்டும்.கணிப்பொறித் துறையில் வெறும் பணியாளர்களாக மட்டுமல்லாது, கண்டுபிடிப்பாளர்களாகவும், துறைக்கு வழிகாட்டுபவர்களாகவும் உயர வேண்டும்...

நம்மிடம் உள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதே கல்வி என்கிறார் சுவாமி விவேகானந்தர். அதை மனதில் கொண்டு, நாம் பெறும் அறிவை மேம்படுத்தினால் நாடும் உயரும்; நாமும் உயர்வோம்...”

-இதுவே எனது பேச்சின் சாராம்சம். நமது முன்னோரின் வியத்தகு ஞானம், பாரதியின் கவலை, அரவிந்தரின் பொன்மொழி ஆகியவற்றை எடுத்துக் கூறினேன். கல்லூரி செயலர் திரு ரகுராஜன் அவர்கள், நன்றாகப் பேசியதாக சொன்னார். 

கல்லூரி மாணவ மாணவியர் பொறுமையுடனும் கட்டுப்பாட்டுடனும் அமர்ந்து விழாவை சிறப்பாக அமைத்தனர். அவர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும், நண்பர்கள் திரு. திருமாறன், ஸ்ரீமதி புவனேஸ்வரி ஆகியோருக்கும் நன்றி. 

இத்தகைய நிகழ்வுகள் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றன. இறைவனுக்கு நன்றி!




No comments:

Post a Comment