பின்தொடர்பவர்கள்

Monday, May 31, 2010

புதுக்கவிதை - 97
சமூக ஜடம்விளையாட நேரமில்லை
வீட்டிலும் பாடம்;
தண்ணீரில் தடுமாறும்
குழந்தையின் ஓடம்.
விளையாட யாருமில்லை
ஒற்றையாய் அடம்;
புரியாமல் மிரட்டுகிறது
சமூக ஜடம்.


.

Sunday, May 30, 2010

புதுக்கவிதை - 96


அழுகையின் அழகுகவிஞனின் சீற்றம்

எழுதுகோலின் அழுகை

பிறந்தது கவிதை.


.

Saturday, May 29, 2010

புதுக்கவிதை - 95பள்ளிக் குழந்தைகள்
துள்ளும் வயதில்
பொதி சுமக்கும்
புள்ளிமான்கள்.
.

Friday, May 28, 2010

புதுக்கவிதை - 94ஏக்கம்பறக்கின்றன பட்டாம்பூச்சிகள் ;
ஏக்கமாய்ப் பார்க்கின்றன
எல்.கே.ஜி. குழந்தைகள்.
.

Thursday, May 27, 2010

வசன கவிதை - 57


தீர்வுகளில் திளையுங்கள்!திரைப்படங்களிலும்
பொது இடங்களிலும்
கேவலப்படுத்தப்படும்
அலிகளுக்கு விமோசனம் -
'திருநங்கையர்' என்று
திருத்தியாகி விட்டது.

முச்சந்திகளிலும்
நடைமேடைகளிலும்
தடுமாறும்
ஊனமுற்றோருக்கும்
விமோசனம் -
'மாற்றுத் திறனாளிகள்' என்று
மாற்றியாகி விட்டது.

அண்டை மாநிலம்
நதிநீரை மறுத்தால்
திரையுலகப் பேரணி
விழிநீரைத் துடைக்கும்.

இலங்கை முதல்
மலேசியா வரை
உலகம் முழுவதும்
தமிழர்கள் தவிப்பு;
'செம்மொழி' மாநாட்டில்
கிட்டிவிடும் தீர்வு.

ஒவ்வொரு துறையிலும்
உறிஞ்சப்படும் உழைப்பு;
திக்கற்ற அனைவருக்கும்
வாரியங்கள்
அமைத்தாகி விட்டது.

ஒன்றான குடும்பத்தால்
ஊழல் மறந்தது போல -
எல்லா பிரச்னைகளுக்கும்
என்னிடம் உண்டு
முடிவு.

.

Wednesday, May 26, 2010

புதுக்கவிதை 93
மணல் வீடு

மணலில் வீடு
கட்டுகிறது
நாடோடிக் குழந்தை.

.

Tuesday, May 25, 2010

சிந்தனைக்கு


சான்றோர் அமுதம்


கடவுளை நான் என் கண்ணால் காணவில்லை. வேறு விதத்திலும் நான் கண்டுவிட்டேன் என்று சொல்ல முடியாது. உலகம் எல்லாம் நம்புகிறது, ஈசன் ஒருவன் இருக்கிறான் என்று. அந்த நம்பிக்கையைக் கொண்டு நானும் வாழ்க்கையைச் செலுத்துகிறேன். எனக்கு உண்டாகியிருக்கும் இந்த நம்பிக்கை அழிக்க முடியாத நம்பிக்கை. அழியாத நம்பிக்கை பிரத்யக்ஷ பிரமாணத்துக்கு சமமாகவே ஆகிவிடுகிறது. என்றாலும் எவ்வளவு உறுதியானதாயினும் ஒரு நம்பிக்கையை பிரத்யக்ஷமாக கண்டேன் என்று சொல்லுவது உண்மைக்கு மாறாகும். ஆனபடியால் என்னுடைய கடவுள் நம்பிக்கைக்கு சரியான ஒரு சொல்லை நான் காணவில்லை...
-மகாத்மா காந்தி.
(ரகுபதி ராகவ- பக்: 5)

Monday, May 24, 2010

உருவக கவிதை - 43


இறைமை - 6


ஞானம் - அஞ்ஞானம்
இயற்கை - செயற்கை
வலிமை - எளிமை
பேரழகு - குரூரம்
புயல் - தென்றல்
நன்மை- தீமை
பகுத்தறிவு - பட்டறிவு...
இரட்டைகளின் நடுவே
ஒருகால் தூக்கி
நடமிடுகிறது
இறைமை.
.

Sunday, May 23, 2010

புதுக்கவிதை - 92


இறைமை - 5


இல்லாதது இல்லையென
மறுப்பதற்கேனும்
இருந்தாக வேண்டும் இறைமை.

Saturday, May 22, 2010

புதுக்கவிதை - 91

இறைமை- 4

நம்பி வணங்கலாம்.
நம்பாமல் மறுக்கலாம்.
பொதுவானது இறைமை.


Friday, May 21, 2010

புதுக்கவிதை - 90இறைமை - 3


நிமிர்ந்து நிற்கும்
நெடுங்குன்றம்;
ஆழ்கடலின்
வேக அலைகள்;
அலைகளில் ஊடுருவும்
எடையற்ற படகு;
ஆவேசமாய் ஆடும்
மரக்கிளைகள்;
கொம்பைப் பிடிக்கத்
தாவும் கொடி;
காலையில் வீசும்
பூவின் சுகந்தம்;
பூக்களில் புரளும்
மகரந்தத் தேனீ;
தத்தி நடக்கும்
சிசுவின் சிரிப்பு...
அனைத்திலும் இருக்கிறது
இறைமை.
இல்லை என்பது மடமை.
.

Thursday, May 20, 2010

புதுக்கவிதை - 89இறைமை - 2கண்ணில்லாப் பிச்சைக்காரன்
காது கேளாத ஊமை
கால் வளைந்த முடவன்
கூன் விழுந்த கிழவி
எல்லோரும் கோயில் வாசலில்.

கைவிடப்பட்ட முதியோரும்
தீரா நோயாளிகளும்
சவரம் செய்யாத முகங்களும்
காத்திருக்கின்றன
மலைக் கோயில் படிகளில்.

சிக்குப் பிடித்த தலையுடன்
உளறியபடிச் செல்லும்
கந்தலாடை பித்தனும்
உச்சிக்கால பூஜை மணிக்காக
பரபரக்கிறான்.

படிகளில் தாவி இறங்குகிறது
குழந்தை-
அம்மா சொன்னபடி
சில்லறைகளைப்
போட்டபடி.

நன்றி: ஓம் சக்தி (ஆகஸ்ட்- 2010)
.
..

Wednesday, May 19, 2010

புதுக்கவிதை - 88


இறைமை-1
மூதாட்டியின்
தோல்சுருக்கம்
காதலியின்
கண்ணிமைகள்
இளஞ்சிசுவின்
பூங்கன்னம்
தந்தையின்
தலை வழுக்கை
இளைஞனின்
புஜவலிமை
எதிலும் உள்ளது
இறைமை.
இல்லை என்பது
மடமை.


Tuesday, May 18, 2010

வசன கவிதை - 56

பரிதாபிகளே, மன்னியுங்கள்!

மன்னிப்பது இறையருட் குணம்;
மன்னியுங்கள் சகோதர சகோதரிகளே!
கொண்டவனும் குலக்கொழுந்தும்
குண்டடிக்கு இரையானது கண்டும்
கண்ணீரின்றி வெறித்திருக்கும்
எம் அன்னையரே மன்னியுங்கள்!

சிங்கள வீரரின் தினவுகளுக்கு
பலியான ஈழ சகோதரிகளே மன்னியுங்கள்!
எம் ஆட்சியாளரின் தவறுகளுக்கு
உடந்தையான எம்மை மன்னியுங்கள்!

வாழப் போராடலாம் யாரும்;
வாழ்க்கையே போராட்டமானால்?
உங்கள் கதைகளைச் சொல்லி
எங்கள் ஊரில் வயிறு வளர்த்தோம்.
உங்கள் கரங்கள் உயர்ந்தபோது
கரவொலி எழுப்பி கள்வெறி ஊட்டினோம்!
உங்கள் இல்லங்கள் உடைபட்ட உடனே
எங்கள் கதவுகளை இருக்க மூடினோம்!

மீள முடியாத சிக்கலில் நீங்கள்
மீண்டும் மீண்டும் தவித்தது போலவே
மீள முடியாத பாவக் கிணற்றில்
தெரிந்தே நாங்கள் வீழ்ந்து கிடந்தோம்!

கொத்துக் கொத்தாய் நீங்கள்
செத்து விழுந்த நேரத்தில்
தேர்தல் பிரசாரத்தில் நாங்கள்
தீவிரமாய் இருந்தோம்!
பதுங்கு குழிகளில் நீங்கள்
நடுங்கிக் கிடக்கையில்
ஆடுபுலியாட்டங்களில் நாங்கள்
மிதந்து திரிந்தோம்!

உங்களைக் காக்க ஒருசில நாடுகள்
தொலைவில் இருந்தும் குரல்கொடுத்தன;
ஆயினும் எங்கள் ஆட்சியைக் காக்க,
அரசியல் காக்க, அமைதி காத்தோம்!

முல்லைத் தீவும் வன்னிக்காடும்
எறிகுண்டுகளால் எரிந்தபோதும்,
ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி
சேற்றை இறைத்தோம்! செயல்பட மறுத்தோம்!

என்றோ நடந்த தலைவன் கொலைக்கு
இன்று இயற்கையின் பதிலடி என்று
மத்திய அரசு மௌனம் காக்க,
குலத்தை ஒழித்த கோடரி ஆனோம்!

எங்கள் எதிரிகள் சிங்களனுடனே
குலவுதல் கண்டு குழப்பம் அடைந்தோம்;
அவர்களை விடவும் அதிகமாகவே
கை குலுக்கினோம்; கட்டியணைத்தோம்!
ஆயுத உதவி உவந்து கொடுத்தோம்;
திட்டங்களையும் தீட்டிக் கொடுத்தோம்!

தெரிந்தே செய்த அரசின் தவறை
தெரிந்தே நாங்கள் வேடிக்கை பார்த்தோம்!
வழி தெரியாமல் வருந்திய உங்களை
தொலையுணர்வுக் கருவியால் காட்டிக் கொடுத்தோம்!

அருகு வேர்களும் ஆலம் விழுதும்
கருகுவது கண்டும் கலங்காது இருந்தோம்!
குருதிப்புனலில் குலமே அழிகையில்
திரைவிழா நடத்தி திருப்தி அடைந்தோம்!
இலவசங்களை அள்ளி வழங்கி
திருவிழா போல தேர்தல் நடத்தினோம்!

ரணங்களில் நீங்கள் நைந்திருக்கையில்
மதுவிடுதிகளில் மயங்கிக் கிடந்தோம்!
வனங்களில் நீங்கள் வாடித் திரிகையில்
வாரிசுகளுக்கு மகுடம் சூட்டினோம்!

அரக்க வேந்தனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த
ராமன் வென்ற ஈழ மண்ணில்
அரக்கரின் ராணுவம் ஆணவ நடமிட
ஊமைகளாக அரற்றிக் கிடந்தோம்!
கோரப் படுகொலை நிகழ்வது கண்டு
கோபம் வந்தும், காட்ட பயந்தோம்!

எல்லாக் கொடுமையும் கண்ட பின்னரும்
கட்சிக்காகவும் காசுக்காகவும்
சாதிக்காகவும் வாக்கு அளித்து,
உண்மையை மறந்தோம்! உங்களைத் துறந்தோம்!

எல்லாம் முடிந்து ஓய்ந்த பின்னரும்
எந்த உதவியும் செய்ய மறந்தோம்!
முள்வேலி முகாம் துயரம் அறிந்தும்
முகத்தைத் திருப்பி மூடி மறைத்தோம்!
படுகொலை நிகழ்த்திய பாதகன் வழங்கிய
பரிசுடன் புன்னகைக் காட்சி கொடுத்தோம்!

ரத்த சொந்தமும் வேரடி மண்ணும்
எவ்வாறேனும் காக்கும் என்ற
உங்கள் கனவை உருக்கி அழித்தோம்;
எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம்!

இத்தனை நடந்தும் எங்களை நோக்கி
கைகளை நீட்டும் பரிதாபிகளே!
செம்மொழி மாநாட்டில் உங்களுக்கென்று
இரங்கல் கூட்டம் நிச்சயம் உண்டு!
முதல்வர் தலைமையில் உங்களைப் பற்றி
கவி பாடிடுவோம்! கவலை வேண்டாம்!

உலகம் தழுவிய மாநாடு வெல்ல
உங்கள் ஆசிகள் வேண்டும் என்றும்;
பாவக் கிணற்றில் மூழ்கித் தவிக்கும்
எங்களை நீங்கள் மன்னித்திடுவீர்!

பாவம் என்பது மானிட குணமே;
மன்னித்திடுதல் இறையருட் குணமே!
எங்களை நம்பி ஏமாந்த போதும்
இன்றும் நம்பும் பரிதாபிகளே!
மன்னித்திடுவீர்! மன்னித்திடுவீர்!!

குறிப்பு: ஈழ விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்தது. ஈழத் தமிழரின் படுதோல்வியில் நமது பங்கு மானக்கேடானது. அதை நினைத்து வருந்துவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

.

Monday, May 17, 2010

சிந்தனைக்கு

பாரதி அமுதம்

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே- எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே- எங்கள்
(செந்தமிழ்)...
சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும்நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு....
-மகாகவி பாரதி.
***
தமிழ்த் தாய்

ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்திய னென்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்பொடுநித்தம் வளர்த்தார்;
ஆன்ற மொழிகளி னுள்ளே -உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்....

தந்தை அருள்வழி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவவலி யாலும்
இந்தக் கனமட்டுங் காலன் - என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.
இன்றொரு சொல்லினைக் கேட்டேன்! - இனி
ஏதுசெய் வேன்?என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்! ...
-மகாகவி பாரதி.

Sunday, May 16, 2010

ஈழ ஹைக்கூ - 27

27. ஈழம்

தமிழகத்தை
நம்பி
நாசமாய்ப் போனது.

Saturday, May 15, 2010

ஈழ ஹைக்கூ - 27

26. தமிழகம்

ஈழத்தைக் காட்டி
வாக்குப் பெற
முயற்சிப்பது.

Friday, May 14, 2010

ஈழ ஹைக்கூ - 27

25. தேர்தல்

ஜாதியில் ஜெயித்தது.
இடையில் கள்ள ஓட்டு.
இப்போது காசே கடவுள்.

Thursday, May 13, 2010

ஈழ ஹைக்கூ - 27

24. அரசியல்

தன்னலம்
அல்லது சுயநலம்;
வேறதுவும் இல்லை.

Wednesday, May 12, 2010

ஈழ ஹைக்கூ - 27

23. கட்டுப்பாடு

கூட்டணி பேண
கண்மூடி
வசனம் பேசுவது.

Tuesday, May 11, 2010

ஈழ ஹைக்கூ - 27

22. கண்ணியம்

மூதாட்டி
என்றும் பாராமல்
திருப்பி அனுப்புவது.

Monday, May 10, 2010

ஈழ ஹைக்கூ - 27

21. கடமை

வாரிசை வாகாக
ஆசனத்தில்
அமர்த்துவது.

Sunday, May 9, 2010

ஈழ ஹைக்கூ - 27

20. வளையல்

ஈழப் பெண்கள் மறந்தது;
தமிழக ஆண்கள்
அணிய வேண்டியது.

Saturday, May 8, 2010

ஈழ ஹைக்கூ - 27

19. புதையல்

எங்கு தோண்டிடினும்
கிடைக்கும் எம்
மண்டைக் குவியல்.

Friday, May 7, 2010

ஈழ ஹைக்கூ- 27

18. உதயம்

இருண்ட அறைக்குள்
துவாரம் வழியே
வரலாம் ஒருநாள்.

Thursday, May 6, 2010

ஈழ ஹைக்கூ- 27

17. இதயம்

கவிதைகளில்
மட்டும்
காணப்படுவது.

Wednesday, May 5, 2010

ஈழ ஹைக்கூ- 27

16. நடிப்பு

பிரதமருக்கு
எழுதும்
முதல்வரின் கடிதம்.

Tuesday, May 4, 2010

ஈழ ஹைக்கூ- 27

15. துடிப்பு

அதிபர் வீட்டு
நாய்க்குட்டிக்கு
காய்ச்சல்.

Monday, May 3, 2010

ஈழ ஹைக்கூ - 27

14. உப்பரிகை

பொழுதுபோக்காக
ஆட்சியாளர்கள்
திரைவசனம் எழுதுமிடம்.

Sunday, May 2, 2010

ஈழ ஹைக்கூ- 27

13. அசோக வனம்

அன்று சீதை.
இன்று சீதைகள்.
தொடரும் வனவாசம்.

Saturday, May 1, 2010

ஈழ ஹைக்கூ- 27

12. ஜனனம்

கையறு நிலையிலும்
முகாம்களில்
சிசுக்களின் சிணுங்கல்.