Tuesday, May 18, 2010

வசன கவிதை - 56

பரிதாபிகளே, மன்னியுங்கள்!

மன்னிப்பது இறையருட் குணம்;
மன்னியுங்கள் சகோதர சகோதரிகளே!
கொண்டவனும் குலக்கொழுந்தும்
குண்டடிக்கு இரையானது கண்டும்
கண்ணீரின்றி வெறித்திருக்கும்
எம் அன்னையரே மன்னியுங்கள்!

சிங்கள வீரரின் தினவுகளுக்கு
பலியான ஈழ சகோதரிகளே மன்னியுங்கள்!
எம் ஆட்சியாளரின் தவறுகளுக்கு
உடந்தையான எம்மை மன்னியுங்கள்!

வாழப் போராடலாம் யாரும்;
வாழ்க்கையே போராட்டமானால்?
உங்கள் கதைகளைச் சொல்லி
எங்கள் ஊரில் வயிறு வளர்த்தோம்.
உங்கள் கரங்கள் உயர்ந்தபோது
கரவொலி எழுப்பி கள்வெறி ஊட்டினோம்!
உங்கள் இல்லங்கள் உடைபட்ட உடனே
எங்கள் கதவுகளை இருக்க மூடினோம்!

மீள முடியாத சிக்கலில் நீங்கள்
மீண்டும் மீண்டும் தவித்தது போலவே
மீள முடியாத பாவக் கிணற்றில்
தெரிந்தே நாங்கள் வீழ்ந்து கிடந்தோம்!

கொத்துக் கொத்தாய் நீங்கள்
செத்து விழுந்த நேரத்தில்
தேர்தல் பிரசாரத்தில் நாங்கள்
தீவிரமாய் இருந்தோம்!
பதுங்கு குழிகளில் நீங்கள்
நடுங்கிக் கிடக்கையில்
ஆடுபுலியாட்டங்களில் நாங்கள்
மிதந்து திரிந்தோம்!

உங்களைக் காக்க ஒருசில நாடுகள்
தொலைவில் இருந்தும் குரல்கொடுத்தன;
ஆயினும் எங்கள் ஆட்சியைக் காக்க,
அரசியல் காக்க, அமைதி காத்தோம்!

முல்லைத் தீவும் வன்னிக்காடும்
எறிகுண்டுகளால் எரிந்தபோதும்,
ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி
சேற்றை இறைத்தோம்! செயல்பட மறுத்தோம்!

என்றோ நடந்த தலைவன் கொலைக்கு
இன்று இயற்கையின் பதிலடி என்று
மத்திய அரசு மௌனம் காக்க,
குலத்தை ஒழித்த கோடரி ஆனோம்!

எங்கள் எதிரிகள் சிங்களனுடனே
குலவுதல் கண்டு குழப்பம் அடைந்தோம்;
அவர்களை விடவும் அதிகமாகவே
கை குலுக்கினோம்; கட்டியணைத்தோம்!
ஆயுத உதவி உவந்து கொடுத்தோம்;
திட்டங்களையும் தீட்டிக் கொடுத்தோம்!

தெரிந்தே செய்த அரசின் தவறை
தெரிந்தே நாங்கள் வேடிக்கை பார்த்தோம்!
வழி தெரியாமல் வருந்திய உங்களை
தொலையுணர்வுக் கருவியால் காட்டிக் கொடுத்தோம்!

அருகு வேர்களும் ஆலம் விழுதும்
கருகுவது கண்டும் கலங்காது இருந்தோம்!
குருதிப்புனலில் குலமே அழிகையில்
திரைவிழா நடத்தி திருப்தி அடைந்தோம்!
இலவசங்களை அள்ளி வழங்கி
திருவிழா போல தேர்தல் நடத்தினோம்!

ரணங்களில் நீங்கள் நைந்திருக்கையில்
மதுவிடுதிகளில் மயங்கிக் கிடந்தோம்!
வனங்களில் நீங்கள் வாடித் திரிகையில்
வாரிசுகளுக்கு மகுடம் சூட்டினோம்!

அரக்க வேந்தனுக்கு உயிர்ப்பிச்சை அளித்த
ராமன் வென்ற ஈழ மண்ணில்
அரக்கரின் ராணுவம் ஆணவ நடமிட
ஊமைகளாக அரற்றிக் கிடந்தோம்!
கோரப் படுகொலை நிகழ்வது கண்டு
கோபம் வந்தும், காட்ட பயந்தோம்!

எல்லாக் கொடுமையும் கண்ட பின்னரும்
கட்சிக்காகவும் காசுக்காகவும்
சாதிக்காகவும் வாக்கு அளித்து,
உண்மையை மறந்தோம்! உங்களைத் துறந்தோம்!

எல்லாம் முடிந்து ஓய்ந்த பின்னரும்
எந்த உதவியும் செய்ய மறந்தோம்!
முள்வேலி முகாம் துயரம் அறிந்தும்
முகத்தைத் திருப்பி மூடி மறைத்தோம்!
படுகொலை நிகழ்த்திய பாதகன் வழங்கிய
பரிசுடன் புன்னகைக் காட்சி கொடுத்தோம்!

ரத்த சொந்தமும் வேரடி மண்ணும்
எவ்வாறேனும் காக்கும் என்ற
உங்கள் கனவை உருக்கி அழித்தோம்;
எங்களை நாங்களே ஏமாற்றிக் கொண்டோம்!

இத்தனை நடந்தும் எங்களை நோக்கி
கைகளை நீட்டும் பரிதாபிகளே!
செம்மொழி மாநாட்டில் உங்களுக்கென்று
இரங்கல் கூட்டம் நிச்சயம் உண்டு!
முதல்வர் தலைமையில் உங்களைப் பற்றி
கவி பாடிடுவோம்! கவலை வேண்டாம்!

உலகம் தழுவிய மாநாடு வெல்ல
உங்கள் ஆசிகள் வேண்டும் என்றும்;
பாவக் கிணற்றில் மூழ்கித் தவிக்கும்
எங்களை நீங்கள் மன்னித்திடுவீர்!

பாவம் என்பது மானிட குணமே;
மன்னித்திடுதல் இறையருட் குணமே!
எங்களை நம்பி ஏமாந்த போதும்
இன்றும் நம்பும் பரிதாபிகளே!
மன்னித்திடுவீர்! மன்னித்திடுவீர்!!

குறிப்பு: ஈழ விடுதலைப் போராட்டம் கொடூரமாக நசுக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு முடிந்தது. ஈழத் தமிழரின் படுதோல்வியில் நமது பங்கு மானக்கேடானது. அதை நினைத்து வருந்துவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்?

.

1 comment:

VELU.G said...

//ஈழத் தமிழரின் படுதோல்வியில் நமது பங்கு மானக்கேடானது. அதை நினைத்து வருந்துவதைத் தவிர நம்மால் வேறென்ன செய்ய முடியும்
//

உண்மைதான் நன்பரே

Post a Comment