பின்தொடர்பவர்கள்

Tuesday, November 5, 2013

புட்டிகளின் உலகம்

ங்கிங்கெனாதபடி எங்கும்
பரவிக் கிடக்கின்றன புட்டிகள்.

சாக்கடைக் கால்வாய்களில்...
குப்பைமேடுகளில்...
முட்டுச்சந்துகளில்...
சாலையோரங்களில்...
இருட்டு மூலைகளில்...
எல்லா இடங்களிலும்
காணக் கிடைக்கின்றன புட்டிகள்.

கரும்பச்சை நிறப் புட்டிகள்...
தங்கநிறம் மின்னும் புட்டிகள்...
கழுத்து நீண்ட புட்டிகள்...
சப்பையான புட்டிகள்...
குடுவை வடிவிலான புட்டிகள்...
எல்லா வடிவங்களிலும்
பொறுக்கக் கிடைக்கின்றன புட்டிகள்.

மப்பில் மல்லாந்து கிடப்பவன் போல,
அதீதக் குடிகாரனின் உடல்
கோணிக் கிடப்பதுபோல,
போதையில் சட்டை கிழிந்து
குப்புறக் கிடப்பவன் போல,
எச்சில் வழிய ஈக்கள் மொய்க்க்
மண்ணில் கிடப்பவன் போல,
சொறிநாய்களின் பக்கத்திலேயே
பரிதாபமாகக் கிடக்கின்றன புட்டிகள்.

மதுக்கடைகளின் புறக்கடையிலும்
ஐந்து நட்சத்திர விடுதித் தாழ்வாரங்களிலும்
மாபெரும் மாளிகைகளின் உப்பரிகைகளிலும்
நதிக்கரையோர ஆக்கிரமிப்புக் குடிசைகளிலும்
தொழிற்சாலைகளின் கழிவறைகளிலும்
பொதுஉடைமை பேசுகின்றன புட்டிகள்.

அடித்த சரக்கின் வீரியத்தில்
அடித்துக் கொண்ட குடிமகன்கள்
குருதிவழிய மடிந்து கிடப்பது போல,
உடைந்தும் கிடக்கின்றன
சில புட்டிகள்.

அருவிகளில் தலைகுப்புற விழுந்து
சிதறிக் கிடக்கும் கண்ணாடிப் புட்டிகள்...
வனப்பகுதியில் வீசப்பட்ட
கிறுக்கர்களின் புட்டிகள்...
மேல்தட்டு இளைஞர்களால்
நடுச்சாலையில் உடைக்கப்பட்ட
உற்சாகப் புட்டிகள்.
கடல் மணலில் புதைக்கப்பட்டு
மாயமான புட்டிகள்.
புட்டிகள் இல்லாத இடமில்லை.

சொர்க்கத்தையும் நரகத்தையும்
மண்ணில் காட்டும் திரவத்தை
காலி செய்து கிடப்பவை
இந்தப் புட்டிகள்.

எந்த இடத்திலும் எல்லா வடிவிலும்
எத்தனை வேண்டுமாயினும்
புட்டிகள் கிடைக்கும்.
தேடுங்கள் தட்டுப்படும்-
இறைவனைப் போல.
சேகரியுங்கள் காசு கிடைக்கும்
இதுவே மறுசுழற்சி முறை.
அதே காசில் நுரைத்துத் தளும்பி
மூர்ச்சையாகுங்கள்-
அரசு உருப்படும்.

இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள்
கழித்து இம்மண்ணில் நடக்கும்
தொல்லியல் ஆய்வுகளில்,
அழிந்துபோன நமது நாகரிகத்தின்
சாட்சியாக விளங்கக் கூடியவையும்
அங்கிங்கெனாதபடி
எங்கும் கிடைக்கும் இதே புட்டிகள் தான்...


-விஜயபாரதம் - தீபாவளி மலர்- 2013 

Saturday, November 2, 2013

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!

அனைத்து மதத்தினருக்கும் ஆனந்தம் அளிக்கும்

பண்டிகைகளின் ராஜா தீபாவளி!


பண்டிகைகள் மக்களுக்கு ஆனந்தம் அளிப்பவை மட்டுமல்ல, இவை தான் மக்களை ஒரு சமுதாயமாகப் பிணைக்கின்றன. அதிலும் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் புழங்கும் இந்தியப் பெருநிலத்தில் பண்டிகைகளின் முக்கியத்துவம் சாதாரணமானதல்ல.
 

குறிப்பாக, தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவம் அளவிட முடியாதது. 'பண்டிகைகளின் ராஜா' என்று தீபாவளியைக் குறிப்பிடலாம். அந்த அளவுக்கு பல்வேறு சமுதாயத்தினரிடமும், பல்வேறு மதத்தினரிடமும் தீபாவளியின் தாக்கம் உள்ளது.

இந்துக்கள் கொண்டாடும் தீபாவளி:

தீபாவளி இந்துப் பண்டிகைகளில் தலையாயது. குறிப்பாக, இந்து சமயத்தின் இரு பெரும் பிரிவுகளான சைவம், வைணவம் இரண்டிலுமே தீபாவளிக்கு முக்கியத்துவம் உள்ளது. சைவர்கள் கேதாரகௌரி விரதம் அனுஷ்டித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர்.
 

புனிதத்தலமான கேதாரத்தில் (தற்போதைய கேதார்நாத்) சுயம்புவாகத் தோன்றிய சிவனை அடைய விரும்பி பராசக்தி 21 நாள் விரதம் இருந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அதன் இறுதியில் சிவன் சக்திக்கு காட்சியளித்து தன்னில் ஒருபாதியாக சக்தியை ஏற்று அர்த்தநாரீஸ்வரராக மாறினார் என்பது புராணம் கூறும் கதை. அந்த நன்னாள் தான் தீபாவளித் திருநாள்.
 

இதையொட்டி, புரட்டாசி மாதம் தசமி வளர்பிறை திதியில் துவங்கி ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசி திதி வரை 21 நாள்கள் விரதம் இருந்து சிவனை வழிபட மணவாழ்க்கை சிறப்புறும் என்பது நம்பிக்கை. இதுவே கேதாரகெüரி விரதமாகும்.
 

வனவாசம் முடிந்து ராமன் அயோத்தி திரும்பிய நாள் என்பதாலும், நரகாசுரனை கிருஷ்ணர் வதைத்த நாள் என்பதாலும் வைணவர்களுக்கு இந்நாள் முக்கியமான பண்டிகை நாளாகிறது. மாலவனிடம் நரகாசுரன் கேட்ட வரத்திற்காகவே தீபாவளி நன்னாளில் எண்ணெய்க் குளியலுடன் வழிபடுவது பொதுவான பண்பாட்டுப் பழக்கமாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது.
 

பாண்டவர்கள் பன்னிரு ஆண்டு வனவாசமும், ஓராண்டு அஞ்ஞாதவாசமும் முடிந்து நாடு திரும்பிய நாளும் தீபாவளி நாளே. இதுதவிர, தீபாவளியை பலநாள் திருவிழாவாகக் கொண்டாடுவது வடமாநிலங்களில் விசேஷமாக உள்ளது.
 

கோவத்ச துவாதசி, தனத் திரயோதசி, லட்சுமி பூஜை, கோவர்த்தன பூஜை, காளி பூஜை, யம துவிதியை, மார்வாரிப் புத்தாண்டு, பஹு பீஜ் என தீபாவளியை ஒட்டிய ஒருவார காலமும் பண்டிகைக் கொண்டாட்டம் பல் மாநிலங்களில் பலவிதங்களில் தொடர்வது இப்பண்டிகையின் கோலாகலச் சிறப்பு.

சமணர்கள் கொண்டாடும் தீபாவளி:

தீபாவளிப் பண்டிகை சமணர்களுக்கும் உரித்தானது. சமண மதத்தின் கடைசி (24-ஆவது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.
 

பழமையான சமண இலக்கியமான 'கல்பசூத்திரம்' என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.
 

'மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்' என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.
 

இலக்கியத்தில் 'தீபாவளி' என்ற சொல் முதன்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட 'ஹரிவம்ச புராணம்' என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் 'தீபாவளி காயா' என்ற வார்த்தையின் பொருள் "ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது'' என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்று சமண இலக்கிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், பெüத்த மதத்தினரும் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி:

பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் திருநாளாக தீபாவளி மிளிர்கிறது.
 

'சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி' என்று மூன்றாவது சீக்கிய குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார்.
 

சீக்கியர்களின் ஆலயமான 'ஹர்மந்திர் சாஹிப்' எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577-ஆம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்து வந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.
 

சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங் (1595 - 1644), அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன.
 

அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் வென்ற குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.
 

கடைசியில் ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26-ஆம் நாள் இந்தச் சரித்திர நிகழ்வு நடைபெற்றது. அதனை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் 'பந்தி சோர் திவஸ்' என்ற விழா சீக்கியர்களால் கொண்டாடப்படுகிறது.
 

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699-ஆம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார்.
 

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகி குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737-இல் லாகூர் கோட்டை சிறையில் சித்ரவதைக்கு ஆளாகி தீபாவளியன்று பலியானார். சீக்கியர்களின் கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலையே காரணமாக அமைந்தது.
 

இத்தகைய தியாகமயமான சரித்திரப் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனித நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர்.

பிற மதத்தினரும் கொண்டாடும் தீபாவளி:

இந்துக்கள், சமணர்கள், பெüத்தர்கள், சீக்கியர்கள் மட்டுமல்லாது இந் நாட்டிலுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களும் கொண்டாடும் விழாவாக தீபாவளி உள்ளது. பொதுவான பண்டிகை வழிபாடுகளில் இவர்கள் பங்கேற்காவிடிலுமó, தீபாவளிக்கே உரித்தான பட்டாசு வெடிப்பதிலும் பட்சணங்கள் பறிமாறுவதிலும் இவர்களும் பங்கேற்கின்றனர்.
 

பட்டாசுகள் ஒலிக்க, மத்தாப்புகள் ஒளிவீச, எங்கும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்படும்போது, நம்மைப் பிரிக்கும் வேற்றுமைகளை விட நம்மை இணைக்கும் பண்டிகைகள் வலிமையானவை என்பதை நாம் உணர்கிறோம்.
 

இவ்வாறாக, நாடு முழுவதும் உள்ள மக்களைப் பிணைக்கும் பசையாக, சமுதாயத்தை இணைக்கும் விசையாக தீபாவளிப் பண்டிகை விளங்கி வருகிறது. நமது பண்பாட்டுப் பாலமாக, நாட்டின் ஒருமைப்பாட்டின் ராகமாக தீபாவளி விளங்குகிறது எனில் மிகையில்லை.
 
-தினமணி- கோவை (தீபாவளி கொண்டாட்டம்- 31.102013)