Monday, November 29, 2010

புதுக்கவிதை - 137


உயிரபிமானம்


தாவரங்களுக்கும்
உயிருண்டு என்றவர்
பாரதத்தின் ஜெகதீச சந்திரர்.

வாடிய பயிரைக்
கண்டவுடன் வாடியவர்
அருளாளர் வள்ளலார்.

புல்லைப் பூடாய் மரமாகும்
உயிரின் பரிணாமத்தை
பாடியவர் மணிவாசகர்.

எல்லாம் தெரிந்தாலும்
மரத்தை வெட்டுவதில்
யார்க்கும் ஈடில்லை நாம்.

மனிதாபிமானம் பேசியபடி
கழுத்தறுப்பவர்களிடம்
எதிர்பார்க்கலாமா உயிரபிமானம்?
..

Sunday, November 28, 2010

எண்ணங்கள்

உங்களுக்கும் பிடிக்கும்...

கோவையில் செயல்படும் பத்திரிகையாளர் நண்பர்கள் சிலர் இணைந்து 'தமிழ் மலர் நியூஸ்' என்ற இணையதள வார இதழை நடத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. 'நாம் யார்க்கும் குடியல்லோம்... நமனை அஞ்சோம்' என்ற முழக்கத்துடன் வெளிவரும் இந்த இணைய இதழில், அரசியல் விமர்சனங்கள், வலைப்பதிவர்களின் அறிமுகம், ஊடகத் துறையில் நிலவும் முறைகேடுகள், நாட்டு நடப்பு ஆகியவற்றை வெளியிட்டு வருகின்றனர். விழிப்புணர்வுள்ள சமுதாயம் உருவாக்கும் அரும்பணியில் ஈடுபட்டுள்ள நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
௩.
இந்த இணைய வலைப்பூ உங்களுக்கும் பிடிக்கும்.
இதன் இணைப்பு: http://tamilmalarnews.blogspot.com/

.

Saturday, November 27, 2010

புதுக்கவிதை - 136


சுதந்திரப் பிறவிகள்


யாரிடமும் அனுமதி கேட்கவில்லை...
என்னிடமும் ஏதும் சொல்லவில்லை...

வேலியிட்டு நீர் பாய்ச்சி
வளர்த்த என் குடும்பத்தை
கண்டுகொள்ளவே இல்லை...

புதிதாக வளர்ந்த மரத்தில் குடியேறிய
அணிலும் ஓணானும் மரப்பல்லியும்
உச்சியில் கூடு கட்டிய குருவியும்.
.

Friday, November 26, 2010

வசன கவிதை - 83


அந்த 20 நாட்கள்...


கவிதை தான் வாழ்க்கை என்று முழங்கியவன்
ஒரு இருபது நாட்களுக்கு காணாமல் போனால்,
வாழ்க்கை காணாமல் போயிருந்ததா
என்று கேட்கக் கூடாது.

ஒருவேளை அவன் உண்மையிலேயே
வாழ்க்கையை வாழச் சென்றிருக்கலாம்.

அப்படியானால் வெற்று முழக்கம் எதற்கு
என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது.
ஒருவேளை அவன் உண்மையிலேயே
கவிதையும் எழுதச் சென்றிருக்கலாம்.

எதற்கு இந்த மழுப்பல் என்று
ஏளனம் செய்யாதீர்.
மறுபடியும் ஒரு இருபது நாட்களுக்கு
காணாமல் போய்விடவும் வாய்ப்புண்டு.

அப்புறம் தமிழை யார் காப்பதாம்?
.

Saturday, November 6, 2010

வசன கவிதை- 82


தீபாவளி - 7

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்.
பதுங்குகுழி அனுபவத்தால்
வீட்டிற்குள் பதுங்குகிறது,
ஈழத்தமிழ்க் குழந்தை.

வானெங்கும் வண்ணச் சிதறல்கள்.
பரிதாபமாகப் பார்க்கின்றன
சொந்தங்களை இழந்த முகங்கள்.

முகாமில் விநியோகிக்கப்பட்ட
அளவு பொருந்தாத ஆடைகளுக்குள்
திணறுகிறது முகாம் தீபாவளி.
.k.

Friday, November 5, 2010

சிந்தனைக்கு


குறள் அமுதம்

சுடச்சுடரும் பொன்போல ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
-திருவள்ளுவர்
(தவம்- 267)

.

Thursday, November 4, 2010

எண்ணங்கள்


தீபாவளி மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது எப்படி?



'சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தான்' என்ற பொன்மொழியைக் கேட்டிருப்போம். அதற்கான வாய்ப்புகளை வழங்கவே பண்டிகைகள் உருவாக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வண்ணமயமான விழாவான தீபாவளி பண்டிகையின் அடிப்படை நோக்கமே பிறரை மகிழ்விப்பதாக உள்ளது.

பெற்ற அன்னையைத் தவிர வேறு யாராலும் தான் கொல்லப்படக் கூடாது என்று பெற்ற வரத்தால் நரகாசுரன் ஆணவம் அடைந்து உலக மக்களை வாட்டினான். அவனை அழிக்கக் கிளம்பிய கிருஷ்ணனுக்கு உதவியாக, நரகாசுரனின் அன்னையான பூமாதேவியின் அம்சமான சத்தியபாமாவே தேர் ஓட்டினாள்.

போர்க்களத்தில் கிருஷ்ணன் அடிபட்டு மயங்க, தானே போரிட்டு கணவனைக் காத்ததுடன், நரகனையும் வீழ்த்தினாள் சத்தியபாமா. அப்போது தாய்மை உணர்வுடன் கிருஷ்ணனிடம் பாமா பெற்ற வரமே நராசுர சதுர்த்தி.

அசுரன் கொல்லப்பட்ட ஐப்பசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியன்று மக்கள் அனைவரும் அதிகாலையில் நரகாசுரனை நினைந்து எண்ணெய்க்குளியல் செய்ய வேண்டும்; அவர்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்று பாமா வேண்டினாள். இதுவே தீபாவளிக்கான புராணக் கதை.

தனது மகன் இறந்தாலும், உலக மக்கள் நலம் பெற வேண்டும் என்ற தியாகச் சிந்தையுடன், எந்த அன்னையும் செய்யத் தயங்கும் செயலை பாமா செய்தாள். தனது மகன் இறந்த நாள் வருத்தத்திற்குரியதாக இல்லாமல் மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வரமும் பெற்றாள். அதனால்தான் இன்றும் நரகாசுரன் நம் இதயங்களில் வாழ்கிறான்.

தற்போது தீபாவளி நாடு முழுவதும் அற்புதமான வர்த்தக வாய்ப்பாக மாறிவிட்டது. புதிய ஆடை ராகங்கள், அணிகலன்களின் அறிமுகத்துக்கு ஏற்ற காலமாக தீபாவளி மாறிவிட்டது. அனைவரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் சுவைத்து, பட்டாசுகள் வெடித்து மகிழ்கிறோம். உறவுகளுடன் அளவளாவி, தொலைக்காட்சி சிறப்பு நிகழ்சிகளில் லயித்து, பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடுகிறோம். சந்தோஷம்தான்.

ஆனால், உறவுகளை இழந்த முதியவர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் இந்த தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார்கள்? ஊர் முழுவதும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தாலும், ஒதுக்குப்புறமாய் நின்று இயலாமையுடன் வேடிக்கை பார்க்கும் இவர்களும் தீபாவளி கொண்டாட வேண்டாமா? அப்போதுதானே ஊர் முழுவதும் தீபாவளிக் கோலாகலம் முழுமையாகும்?

உலக வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் பிறரைச் சார்ந்தே வாழ்கிறோம். சமுதாயத்திடம் இருந்து நாம் பெரும் பயன்கள் கணக்கற்றவை. உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடை, வசிக்கும் வீடு, வாழும் சுற்றுப்புறம்... அனைத்திலும் சமுதாயத்தின் பங்களிப்பு உள்ளது. அந்த சமுதாயத்திற்கு நாம் என்ன பிரதிபலன் செய்ய முடியும்?

இதற்கான வாய்ப்பே பண்டிகைகள். இவற்றை நாம் மட்டும் கொண்டாடினால் போதாது. பண்டிகை கொண்டாட வாய்ப்பற்றவர்களுக்கும் அதற்கான உரிமை உண்டு. அதற்கான வழிகளை நாம் உருவாக்கலாமே!

நாட்டு மக்களுக்காக அன்னையே போர்க்கோலம் தரித்து, மகன் என்றும் பாராது அசுரனை வீழ்த்திய நாளை 'தீபாவளி' என்று கொண்டாடுகிறோம். இன்னாளில், நம்மால் இயன்ற அளவு செலவிட்டு புத்தாடைகளையும் பலகாரங்களையும் பட்டாசுகளையும் வாங்கி, ஆதரவற்ற அன்புள்ளங்களுக்கு வழங்கலாமே!

கைவிடப்பட்ட முதியோரையும், பெற்றோரை இழந்த குழந்தைகளையும் இன்னாளில் சந்தித்து அளவளாவி மகிழலாமே. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவர்களை சந்தோஷப்படுத்துவது தானே?

நன்றி: தினமணி (02.11.2010)
'தித்திக்கும் தீபாவளி' விளம்பரச் சிறப்பிதழ்- திருப்பூர்.
.

Wednesday, November 3, 2010

புதுக்கவிதை - 135


தீபாவளி - 6

ஊர் முழுவதும் பட்டாசு சத்தம்
இருப்பினும் பணிஅலுப்பில்
உறங்கும் சிவகாசி சிறுவர்கள்.

.

Tuesday, November 2, 2010

புதுக்கவிதை - 134


தீபாவளி - 5


ஒலிமாசு, வளிமாசு தவிர்க்க
பட்டாசு வெடிக்காதீர்.
கூறுவது-
ஊழல் மாசு அரசாங்கம்.

Monday, November 1, 2010

எண்ணங்கள்


உங்களுக்கும் பிடிக்கும்...


'தமிழ் பேப்பர்' இணையதளத்தில் வெளியாகியுள்ள -நண்பர் அரவிந்தன் நீலகண்டனின் தீபாவளி- விடுதலையின் ஒளிநாள் கட்டுரை அருமை.
அதன் சுட்டி இங்கு உங்களுக்காக.

.