Showing posts with label ஹாஸ்யம். Show all posts
Showing posts with label ஹாஸ்யம். Show all posts

Friday, December 3, 2010

உருவக கவிதை - 68


லஞ்சம்,
ஊழலுக்கு
நான் என்றும் நெருப்பு

நீ என்ன பருப்பா என்று கேட்பவர்கள்
எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக வாழ்வதே எனது விருப்பு.

நான் பருப்பு இல்லையென்றாலும்
லஞ்சம், ஊழலுக்கு என்றும் நெருப்பு.
ஆணவ அரசியலை எதிர்க்கும் துருப்பு.
எழுத்தே தான் என்றும் எனது இருப்பு.

நான் வெறும் பருப்பு தான் என்றாலும்
ஆணவ அரசியலுக்கு என்றும் நெருப்பு.
தேய்ந்தாலும் பாதம் காக்கும் செருப்பு.
என் உள்ளத்தில் இல்லை கருப்பு.

நான் பருப்பு என்றாலும் இல்லையென்றாலும்
அறிந்திருக்கிறேன் என் பொறுப்பு.
நாசக்காரர்களுக்கு காட்டுவேன் வெறுப்பு.
கபடதாரிகளுக்கு என்றும் கூறுவேன் மறுப்பு.

நானே கேள்வி கேட்டு நானே எழுதிய பதில்
நன்றாக இருக்கிறதா?
இது தானய்யா கவிதையின் பிறப்பு!
இதை வெளியிடுவது ஊடகங்களுக்கு சிறப்பு!
.

Friday, November 26, 2010

வசன கவிதை - 83


அந்த 20 நாட்கள்...


கவிதை தான் வாழ்க்கை என்று முழங்கியவன்
ஒரு இருபது நாட்களுக்கு காணாமல் போனால்,
வாழ்க்கை காணாமல் போயிருந்ததா
என்று கேட்கக் கூடாது.

ஒருவேளை அவன் உண்மையிலேயே
வாழ்க்கையை வாழச் சென்றிருக்கலாம்.

அப்படியானால் வெற்று முழக்கம் எதற்கு
என்று கேட்டு சங்கடப்படுத்தக் கூடாது.
ஒருவேளை அவன் உண்மையிலேயே
கவிதையும் எழுதச் சென்றிருக்கலாம்.

எதற்கு இந்த மழுப்பல் என்று
ஏளனம் செய்யாதீர்.
மறுபடியும் ஒரு இருபது நாட்களுக்கு
காணாமல் போய்விடவும் வாய்ப்புண்டு.

அப்புறம் தமிழை யார் காப்பதாம்?
.

Friday, September 24, 2010

புதுக்கவிதை - 120



மக்காசோளம்
.
. .

மக்காசோளம் கேட்டாள் அருமை மகள்.
அதை 'மக்குகள்' சாப்பிடக் கூடாது என்றேன்.
நான் உங்களுக்கு கேட்கவில்லை என்றாள் அவள்.
..

Sunday, August 22, 2010

வசன கவிதை - 75




பாமர மனிதர்கள்...





பாலக்காடு -பிளிச்சிமடாவில்
நிலத்தில் புதைத்த
கோலா கழிவுகள்;


கோவை -காரமடையில்
கப்பலில் வந்த
அமெரிக்க குப்பைகள்;


பொள்ளாச்சி அருகே
சாலையில் கொட்டிய
தோல் கழிவுகள்;


பல்லடம் அருகே
வாய்க்காலில் வீசிய
செத்த கோழிகள்;


நொய்யல் நதியில்
வண்ணமாய்ச் சேரும்
சாயக்கழிவுகள்;


ஈரோடு அருகே
இரவில் திறந்துவிடப்படும்
தொழிற்சாலையின் நெடி;


நீர், நிலம், காற்றில்
விஷத்தை விதைத்து
விளையாடும் 'புள்ளிகள்';


சாயம் கலந்த தேநீர்க்கடையில்
போபால் செய்தியை
படிக்கும் மக்கள்;


அமெரிக்க கனவுடன்
கோழிக்கறி தின்று கோலா குடிக்கும்
வண்ணஆடை அணிந்த பாமர மனிதர்கள்...
.

Monday, August 16, 2010

மரபுக் கவிதை - 104




அறிஞரை அறிதல்



புரிதல், புரிந்தது போல் நடித்தல், பிற்பாடு
தெரிதல், தெரியாததையும் தெரிந்தது போல்
திரிதல், திரிந்தபடி அறிதல், அறியாத தெனினும்
சொரிதல் அறிஞர் தொழில்.
.

Wednesday, July 14, 2010

புதுக்கவிதை - 102




ஏமாற்றும் விதம்...


திருப்பதியில் எங்கும்
மொட்டைத்தலைகள் போல,
மகப்பேறு மருத்துவமனையில்
கர்ப்பிணிப் பெண்கள்.
ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதம்.

செம்மண்ணில்
கரையான் புற்றுப் போல,
நாடெங்கும் ஊழல்கள்.
எல்லாமே ஒரே விதம்!

.

.

Tuesday, February 23, 2010

புதுக்கவிதை - 76


ஆத்திரம்

சுற்றிலும் மனிதர்
எத்தனையோ பேர்!
அப்படி இருக்கையில்
'ஆத்திரக்காரனுக்கு
புத்தி மட்டு'
என்று
என்னைப் பார்த்து
எப்படிச் சொன்னார்?
என்னிடம் வரட்டும்-
இடுப்பை ஒடிக்கிறேன்...
.

Monday, February 22, 2010

உருவக கவிதை - 32

இருமல்

''லொக்... லொக்... லொக்...
உங்களுக்கு சாதாரண...
லொக்... லொக்... லொக்...
ஜுரம் தான்...
ஒரு ஊசி போடறேன்... லொக்...
சரியாயிடும்...''
சொல்லிவிட்டு
மருத்துவர்
உள்ளே போனார்.
நோயாளி வெளியே
ஓட்டம் பிடித்தார்!