பின்தொடர்பவர்கள்

Sunday, December 30, 2012

அடிவாரக் கற்கள்


அகன்று உயர்ந்த மதிலில் பல இடங்களில் சிதிலங்கள்.
ஆலமரமும் அரச மரமும் வேரோடியிருக்கின்றன.
எருக்கஞ்செடிகள் பூக்களை இறைத்தபடி மதிலோரம் விரவிக் கிடக்கின்றன.
சுண்ணாம்பு பார்த்து பலநூறு வருடம் ஆனதன் அடையாளம்
சுவரெங்கும் பட்டையாக உரிந்து கிடப்பதில் தெரிகிறது.
செங்கல்லும் சுண்ணாம்புச் சாந்தும் பெயர்ந்திருந்தாலும்
கம்பீரம் குலையாமல் காட்சி தருகிறது மதில்.

இரண்டு ஆள் கனத்தில் இவ்வளவு வலிமையாகக் கட்டிய
கொத்தனார் நினைத்தும் பார்த்திருக்க மாட்டார்,
பலநூறு ஆண்டுகள் இந்த மதில் வரலாறு சொல்லும் என்று.
கட்டியவன் யார், கட்டச் சொன்னவன் யார்
என்பதெல்லாம் தேவையில்லாத கதை.
இந்த மதிலை இடித்தால் தான் உள்ளிருக்கும்
அரண்மனையைத் தூர்க்க முடியும் என்பதுதான் விஷயம்.

மதிலுக்கு 15  அடி உயர வாயில்கதவு இருந்திருக்கிறது.
அதன் அடையாளம் கரிய கீலில் தெரிகிறது.
அங்கிருந்து கண்ணை இடுக்கிக்கொண்டு  பார்த்தால்,
பேய்மாளிகை போல அரண்மனை தெரியக்கூடும்.
ஆயிரம் கிராமம் அடக்கியாண்ட மன்னவன் களித்த
அந்தப்புர வரிசையில்  இப்போதும் கொலுசுச் சத்தம்.
எதிரிகளை புறமுதுகிட்டு ஓடச்செய்த தளபதிகளுடன்
புனலாடி மகிழ்ந்த நறுநீர்க் குளத்தின்
படிக்கட்டுக்கள் வெளிறிய பாசிநிறத்தில்.

அரண்மனையின் மலேசிய தேக்கு உத்தரங்கள்
கரையான் அரித்தும் காலமாகாதவை.
அதன் அழகிய தச்சு வேலைப்பாடுகளும்,
களிமண்ணில்  சுட்ட ஜாடிகளும்,
துரு ஏறாத இரும்புக் கிராதிகளும்,
முட்டைக்கருவும் கடுக்காயும் கலந்த சாற்றில்
மெழுகிய நிழலாடும் கண்ணாடித் தளமும்,
விரிசல் விடாத சாளரங்களும்,
சிற்பம் செறிந்த நிலைக்கதவுகளும்,
சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்களும்,
காட்டு விலங்குகளின் பாடமிடப்பட்ட தலைகளும்,
அறைகளில் கிடக்கும் ஆசனங்களும்,
இறுகிய நூலாம்படை படியக் கிடக்கின்றன.

சிசுக்கள் சிறுதேர் உருட்டி விளையாடிய
அரண்மனையைச் சுற்றிலும் பெருகிக் கிடக்கின்றன
கற்றாழைப் புதர்களும் வேலிகாத்தானும்.
நெருஞ்சி படர்ந்த செம்மண்ணில்
ஆங்காங்கே ஆளுயரப் புற்று.
அனாயசமான மதிலை உடைத்தாலும் கூட,
அரண்மனைக்கு காவல் அநேகம்.

அரண்மனை நிலவறையில் பல்லாயிரம் ஆண்டு கால
பாரம்பரிய ஏடுகள் இருப்பதாகத் தகவல்.
ரகசிய அறையில் ரத்தினங்கள் இருக்கலாம்.
அற்புதமான பஞ்சலோகச் சிலைகளும்,
அதிசயிக்கச் செய்யும் ஆபரணக் கருவூலமும் இருக்கலாம்.
அதற்கும் வளாக கோவிலுக்கும் சுரங்க வழி இருக்கலாம்.
அரண்மனை நெற்குதிரில் பெருச்சாளிகளின் வீச்சம்.
மாடங்களில் தலைகீழாகத் தொங்கும்
வௌவால்களின் கடைக்கண் பார்வை.
தளமெங்கும்  பிழுக்கைகளுடன்  ஒருவிரல் கனத்துக்கு
படிந்திருக்கிறது பலநூறு ஆண்டுகாலத் தூசி.

ஒருகாலத்தில் இளவரசிகள் நடமாடிய நந்தவனத்தில்
கருவேல மரங்கள் நெருங்கிக் கிடக்கின்றன.
அரண்மனையின் மடப்பள்ளியில் உடைத்து கிடக்கிறது
கருநிறத்திலான  அரையாள்  உயர ஆட்டாங்கல்.
மதில் பெயர்ந்த அளவுக்கு இல்லாவிடிலும்,
அரண்மனையின் வெளிப்புறம் சில இடங்களில் சிதிலம்.
எல்லாம் கொழுத்த எலிகளின் உபயம்.
சந்துபொந்துகளில் பாம்புகளும் பல்லிகளும் உண்டு.
இரவு நேரங்களில் ஆந்தைகள் இங்கு குழுமும்.
எல்லாமே செவிவழிக் கதைகள்.

பார்ப்பவர்கள் அனைவருக்கும் அரண்மனை ஒரு கருவூலம்.
எளிதில் பிளக்க முடியாத இந்த மதிலைச் சரித்துவிட்டால்
வழிமறிக்கும் புதர்களை அகற்றலாம்.
ஆபத்தான விஷ ஜந்துக்களை துரத்தலாம்.
கற்பனைக்கெட்டாத கருவூலங்களைக் கொள்ளையிடலாம்.
அரண்மனையை இடித்துவிட்டு இதே இடத்தில்
புதிதாக ஒரு அரண்மனை கட்டலாம்.
ஒரு கேளிக்கை விடுதி கூட அமைக்கலாம்.
அரண்மனையைக்  காப்பதாக எல்லோரும் கதைக்கும்
வனதேவதை தெய்வத்தை நாடு கடத்தலாம்.

இப்போதைக்கு மதில் தான் பிரச்னை.
உள்ளிருக்கும் அற்புதங்களுக்கு ஆசைப்பட்டாலும்,
மதில் தாண்டுதல் சாத்தியமில்லை.
அரண்மனை வாரிசுகள்  நித்திரை கலைந்து
சொந்த ஊர் வருவதற்குள் வளைத்தாக வேண்டும்.
அவர்கள் வந்துவிட்டால் அரண்மனை பொலிவாகிவிடும்.
அதன்பிறகு விலைபேச இயலாது.
அரண்மனை மதிலையேனும் உடனே சுரண்டியாக வேண்டும்.
நினைக்குந்தோறும் பேசிய விலையை எண்ணி
தவிர்க்க முடியாத தாபமாக வெளிப்படுகிறது பெருமூச்சு.
அரண்மனை கோவிலில் இருக்கும் ஆலயமணி
காற்றில் ஒலிப்பது நாராசமாக இருக்கிறது.

***

நாக்கைத் தொங்கவிட்டபடி திராட்சைத் தோட்டத்தில்
எம்பித் தவிக்கின்றன நரிகள்.
அரண்மனையின் அரணை உடைக்க இயலாமல்
காத்துக் கிடக்கிறார்கள் வியாபாரிகள்.
அவர்களை எச்சரிப்பது போல இடறி விடுகிறது
மதிலின் அடிவாரக் கல்.

-விஜயபாரதம் – தீபாவளி மலர் – 2012

Wednesday, November 21, 2012

பழனியிலிருந்து ஒரு பாதயாத்திரை- சிறுகதை


தூரத்தில் மலையும் கோயிலும் தெரிந்தபோதே கன்னத்தில் போட்டுக் கொண்டார் மருதாசல கவுண்டர். ரேஷன்கடையில் மண்ணெண்ணெய் வாங்க நிற்கும் கும்பல் போல பயணிகள் பஸ்சுக்குள் பிதுங்கிக் கொண்டிருந்தனர். ஜன்னல் வழியே வந்த மெல்லிய காற்று இல்லாவிட்டால் உள்ளே இருக்க முடியாது.

கவுண்டரின் பேரன் ரங்கநாதன் பக்கவாட்டில் நசுக்கியபடி உராய்ந்து நின்ற குண்டு மனிதரைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான். ஆனால் அவனது கஷ்டம் முகத்தில் தெளிவாகவே தெரிந்தது. இன்னும் கால் மணிநேரம் தான், பழனி வந்துவிடும். எட்டாம் வகுப்பு காலாண்டு பரீட்சை லீவ் நேற்றுத்தான் துவங்கியிருந்தது. லீவில் உருப்படியான காரியமாக, பலநாள் வேண்டுதலை நிறைவேற்ற பேரனை அழைத்துக்கொண்டு பழனி செல்கிறார் கவுண்டர்.

பஸ்சுக்குள் சந்தைக்கடை இரைச்சல். பின்சீட்டில் யாரோ கொய்யாப்பழம் சாப்பிடும் வாசனை. பழனி கொய்யாப்பழத்துக்கு பிரபலம். வீடு திரும்பும்போது பேத்திக்கு வாங்கிப்போக வேண்டும். ஆனால் போனமுறை வந்தபோது ஏமாந்தது போல இம்முறை ஏமாந்துவிடக் கூடாது என்று நினைத்துக்கொண்டார். அப்போது தனது முகத்தில் ஒரு குறுகுறுப்பு ஏற்பட்டதை யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துக் கொண்டார். யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை. அவரவருக்கு அவரவர் கவலை.

கடைசியாக பழனி வந்தது நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய தைப்பூச சமயம். ஏழெட்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வந்ததால் பழனி பஸ்நிலையம் மாறியிருந்தது. கிராமத்து ஆளான கவுண்டர் சற்று தடுமாறித்தான் போனார். பஸ்நிலையத்தின் மறுபுறம் ஒருவழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுவிட்டதால் பஸ் நின்ற இடம் அவருக்குப் புலப்படவில்லை. எனவேதான் கோயிலுக்குச் செல்ல வழிகேட்க பக்கத்தில் நின்றவரை அணுகினார் கவுண்டர். அப்படித்தான் அவனிடம் மாட்டிக்கொண்டார்.

அதை நினைத்தபோதே சிலிர்த்துக்கொண்டது. பழனி வரும் புதிய நபர்களை மொட்டையடிக்கவென்றே ஒரு கும்பல் பஸ்நிலையத்தில் காத்துக் கிடக்கும். புதியவர்களைப் பார்த்தவுடன் அவர்களுக்கு பொறிதட்டிவிடும். முட்டுச்சந்தில் சிக்கிய ஆடுபோல திருதிருவென விழித்த மருதாசல கவுண்டர் புரோக்கர் பொன்னுசாமியிடம் மாட்டியது இப்படித்தான்.

“வாங்க ஐயா. பழனிக்குப் புதுசுங்களா? என்ன முடி காணிக்கையா?” பொன்னுசாமியின் கரிசனமான பேச்சில் தூண்டில் இருந்தது கவுண்டருக்குத் தெரியவில்லை. கிராமத்து வெள்ளைச்சோளம். வானம் பார்த்த பூமியில் சோளம் விதைத்தே காலம் கரைந்து போனவர் அவர். “ஆமாம்ப்பா, ஆச்சு ஏழெட்டு வருஷம் பழனி வந்து. எல்லாம் மாறிப்போச்சா? அதான்…” என்று இழுத்தார்.

“விடுங்க பெரியவரே. வாங்க நான் உங்களைக் கூட்டிட்டுப் போறேன்” கவுண்டரின் பதிலுக்குக் காத்திருக்காமல், அவரது மஞ்சள்பையை கிட்டத்தட்ட பறித்துக்கொண்டு முன்னால் செல்லத் துவங்கினான் பொன்னுசாமி. அவர்களுக்கு எதிரே ஆடு ஒன்றைப் பிடித்திழுத்தபடி கசாப்புக் கடைக்காரன் ஒருவன் வந்து கொண்டிருந்தான். ‘அப்போதாவது சுதாரித்திருக்க வேண்டும்’. பஸ்சுக்குள் மீண்டும் தலையை சிலுப்பிக் கொண்டார் கவுண்டர். ரங்கநாதன் தாத்தாவை வித்யாசமாகப் பார்த்தான்.

கன்னிவாடியைச் சேர்ந்தவனாம். ஊரில் நாற்பது ஏக்கர் பூமி இருக்கிறதாம். பாகத்தகராறில் விதைக்காமல் கிடப்பதாகப் புலம்பினான் பொன்னுசாமி. இன்னும் கல்யாணமாகவில்லை என்றான். பார்த்தால் அப்படித் தெரியவில்லை. முன்வழுக்கை விழுந்து, தொப்பை சரிந்து, காவிப்பற்கள் தெரிய அவன் சொன்ன தகவல்கள் எதுவும் நம்பகமாக இருக்கவில்லை. ஆனாலும், பழனி வரும் பக்தர்களை கோயிலுக்கு அழைத்துச்சென்று வழிகாட்டி, அவர்கள் கொடுக்கும் அஞ்சோ பத்தோ பணத்தைக் கொண்டுதான் ஜீவனம் நடத்துவதாகக் கூறியபோது கவுண்டர் கொஞ்சம் மனமுருகித்தான் போனார்.

கோவில் பாதையின் இருபுறமும் கடைகள். பெரிய அண்டாக்களுடன் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யும் கடைகளில் பிளாஸ்டிக் டப்பாக்கள் அடுக்கி வைக்கப்படிருந்தன.  பிளாஸ்டிக் சாமான்கள், பொம்மைகள், எவர்சில்வர் பாத்திரங்கள், சாமி படங்கள், ஐயப்பசாமி மாலைகள், முருகன் டாலர்கள், பழங்கள், விபூதி, சந்தனம், குங்குமம், பூஜைப்பொருள்கள், உப்பிய பூரிகள், பொரி கடலை, பேரிச்சை, என ஒவ்வொரு கடையிலும் பக்தர்கள் வரவுக்காக பொருட்கள் காத்திருந்தன.

கவுண்டரை இழுத்துக்கொண்டு சென்ற பொன்னுசாமி, கோயில் பாதையில் இருந்து இடதுபுறம் சென்ற சந்துக்குள் நுழைந்தான். சந்தனமும் பன்னீரும் மணந்த அந்தக் கடை முன்பு நின்றபோது, ஏதோ அவனுக்கு வாங்கத்தான் சென்றிருக்கிறான் போல என்று நினைத்துக் கொண்டார் கவுண்டர்.

வேகமாக நடந்து வந்ததில் கவுண்டருக்கு மூச்சிரைத்தது. காலையிலிருந்து விரதம் இருந்ததில் ஏற்பட்ட களைப்பு அசத்தியது. தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்தார். பக்கத்து கலர்க்கடையில் சோடா வாங்கி அப்படியே வாய்க்குள் சரித்துக் கொண்டார்.

“விபூதி பெரிய பாக்கெட் ஒன்னு, சந்தனம் பத்து ரூபாய்க்கு, நயம் குங்குமம் அஞ்சு ரூபாய்க்கு, மஞ்சள்தூள் அஞ்சு ரூபாய்க்கு, கட்டிக் கற்பூரம், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி ஒரு பாக்கெட், கல்கண்டு, பேரிச்சை, தேங்காய், பழம், பூ, வெற்றிலை, பாக்கு, பன்னீர் பாட்டில் ஒன்னு, சம்பங்கி மாலை ஒன்னு,…” பொன்னுசாமி மடமடவென பட்டியலிடுவதையும் அந்தப் பொருள்கள் தட்டைக்கூடையில் இடம் மாறுவதையும் பார்த்தபடியே கடைக்கு வந்தார்.

“மொத்தம் நூத்தெம்பது ரூபாய்” என்று கடைக்காரன் சொல்லவும், அங்கு கவுண்டர் சென்று சேரவும் சரியாக இருந்தது. “ஐயா, நூத்தெம்பது ரூபா கொடுங்க” உரிமையோடு கேட்ட பொன்னுசாமியைப் பார்த்தபோது திக்கென்று இருந்தது கவுண்டருக்கு. இத்தனை பொருளும் தனக்காகத் தான் பொன்னுசாமி வாங்கினான் என்பதைப் புரிந்துகொள்ள வெகுநேரம் ஆகவில்லை கவுண்டருக்கு. ஆள்தான் வெள்ளைச்சோளமே தவிர, கவுண்டருக்கு கற்பூரபுத்தி.

‘ஏம்ப்பா, இதெல்லாம் எதுக்கு?’ என்று கேட்க வாயெழுந்தாலும், ஆகிருதியான கடைக்காரனைப் பார்த்ததும் ஏனோ குரலே வெளிவரவில்லை. ஊரில் மருதாசல கவுண்டர் வந்தாரென்றால், பஞ்சாயத்து திண்ணையில் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் விடலைகள் கூட தலைதெறிக்க ஓடுவார்கள். அது சொந்த ஊரில். அறுபது மைல் தள்ளி வந்திருக்கும் புது ஊரில் அவரது ஜம்பம் எடுபடுமா என்ன?

இருந்தாலும் பதில் சொன்னான் பொன்னுசாமி. “ஐயா, முடி காணிக்கை கொடுக்கணும்னு சொன்னீங்களே. இப்ப இந்தக் காணிக்கைச் சாமானெல்லாம் கொடுக்கணும்னு கோயில்ல ரூல்ஸ் கொண்டுவந்திருக்காங்க. இதைக் கொடுத்தால் சாமியை சீக்கிரமாப் பார்க்கலாம். ரொம்பநேரம் கும்பிடலாம்…”

இது சரியென்று பட்டது கவுண்டருக்கு. பணம் சாமிக்குத்தானே செலவாகிறது. எப்படியோ புண்ணியம் தான். கவுண்டரின் கை தானாக அண்டர்வேருக்குள் சென்றது. வெள்ளரிக்காய் விற்ற பணம் வியர்வையில் நனைந்து குளிர்ந்தது.

அப்போதுதான் கவனித்தார், பக்கத்திலேயே தனது பூஜை சாமான்களுடன் ஒடிசலான பெண்ணொருத்தி நிற்பதை. 45 வயது இருக்கும். நூல்சேலை. செம்பட்டை முடியைச் சுருட்டி கொண்டை போட்டிருந்தாள். ஸ்டிக்கர் பொட்டு. முகத்திலேயே வறுமை தெரிந்தது. “ஐயா, இவ உங்களை கோயில் மூலஸ்தானம் வரை கொண்டுபோய் விட்டிருவா. கவலைப்படாமப் போய்ட்டு வாங்க. தேவானை பத்திரமாக் கூட்டிட்டுப் போ பெரியவரை” சட்டைப்பையிலிருந்து பீடியை எடுத்தபடி சொன்னான் பொன்னுசாமி.

அப்படியானால், இவன் கூட வரப்போவதில்லையா? பரவாயில்லை, கூடையைச் சுமக்க ஆளாவது அனுப்புகிறானே. “அப்பனே முருகா, சண்முகநாதா” பெருமூச்செறிந்தார் கவுண்டர்.

கோயில் பாதையெங்கும் மொட்டைத்தலைகள் பரவலாகத் தெரிந்தன. சேவக்கட்டுக் கூட்டாளி கோவிந்தனைக் கூட்டிவந்திருக்க வேண்டும். அவன் கொஞ்சம் விவரமான ஆள். அவனுக்கு சுகமில்லாமல் போய்விட்டதால் தானே தனியாக வர வேண்டியதாகிவிட்டது. “ஐயா, இங்கதான் முடி கொடுக்கணும்” தேவானையின் குரல் சிந்தனையைக் கலைத்தது.

டோக்கன் வாங்கி, நாவிதர் கேட்ட பத்து ரூபாயைக் கொடுத்து முடி காணிக்கை கொடுத்த பிறகு, பக்கத்தில் கட்டணக் குளியலறையில் குளித்து ஆடை மாற்றிக் கொள்ளும்வரை, அவரது செருப்பின் அருகிலேயே தட்டைக்கூடையுடன் நின்றிருந்தாள் தேவானை. இளவெயில் அவளது முகத்தில் மின்னியது.

***

பஸ் திடீரென ஒரு குலுக்கலுடன் நின்றது. டயர் பஞ்சர் என்றார் டிரைவர். எப்படியும் அரைமணி நேரமாகிவிடும். இன்னமும் 2 மைல்தான். ஆனால் கொளுத்தும் வெயிலில் நடந்துபோக முடியாது. பஸ்சுக்குள் நெரிசல் குறைந்தது. பஸ்சை விட்டு இறங்கி சிலர் சிகரெட் புகைத்தனர். பேரன் சிறுநீர் கழிக்க கீழிறங்கிச் சென்றான். போகும்போது தாத்தாவை அவன் பார்த்த பார்வையில் ஏதோ குழப்பம் இருப்பதாகத் தோன்றியது.

மலைக்கோயில் இப்போது தெளிவாகவே தெரிந்தது. அரோகரா கோஷத்துடன் பாதயாத்திரை பக்தர்களின் ஓட்டம் கடந்து சென்றது. பக்கத்து மரத்திலிருந்து ஒற்றைக்காகம் கரைந்தது. நினைவுகள் நான்கு ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளுக்குச் செல்ல, கூடையுடன் செல்லும் தேவானையை மொட்டைத்தலையுடன் கவுண்டர் பின்தொடர்ந்தார். தலையில் தடவிய சந்தனவாசம் கலந்த மாவு ரொட்டியாகக் கழன்றுவந்தது. கழுத்தில் வியர்வை வழிய, தலையைத் தடவிக்கொண்டார்.

மலையடிவாரத்தில் பாதவிநாயகரை வலம்வந்து தரிசித்தபிறகு, ஆனைப்பாதையில் ஏறத் துவங்கியதுதான் தெரியும். அரைமணி நேரத்தில் கோயில் வந்துவிட்டது. இடையே இடும்பன் சன்னிதி, சர்ப்ப விநாயகர் சன்னிதிகளில் வழிபட நின்றபோது சற்றே மூச்சு வாங்க முடிந்தது. அப்போதுதான் கவனித்தார், பூஜைச்சாமான்களை சுமந்து வந்தாலும் சிறிதும் களைப்பின்றி தேவானை நிற்பதை. தினசரி மலையேறி ஏறி பழக்கமாகிவிட்டதுபோல. சிறுவயதில் அழகாக இருந்திருப்பாள்.

பொன்னுசாமி சொன்னதுபோலவே, நேராக கருவறைக்கே பக்கவாட்டுக் கதவு வழியாக அழைத்துச் சென்றுவிட்டாள் தேவானை. திவ்ய தரிசனம். அர்ச்சகரின் காதில் அவள் ஏதோ சொல்ல, அவர் நேரே கவுண்டரிடம் வந்தார். கையிலிருந்த பூமாலையை கழுத்தில் சூட்டினார். இருபது ரூபாய் தட்சிணை கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

கோயிலை விட்டு வெளிவந்ததும், தேவானை கேட்காமலே இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் கவுண்டர். இவ்வளவு தூரம் நம்மோடு மலையேறி இருக்கிறாள், இதுகூடக் கொடுக்காவிட்டால் எப்படி? அவள் பெரிய கும்பிடு போட்டுவிட்டு வெற்றுக் கூடையுடன் போனாள்.

அர்ச்சனைப் பொருள்களால் மஞ்சள்பை கனத்தது. கோயில் உண்டியலில் ஐம்பது ரூபாய் போட்டுவிட்டு, தேவஸ்தான அபிஷேகக் கடையில் பஞ்சாமிர்தம் வாங்கினார். அப்போதுதான் தெரிந்தது. பையிலிருந்த பணம் ஊர்போய்ச் சேர போதாது என்பது. “அப்பனே முருகா, சண்முகநாதா”.

***

  பஸ் டயர் மாற்றிப் புறப்பட்டுவிட்டது. மீண்டும் நெரிசல். பழனி பஸ்நிலையத்தில் வழக்கம்போலக் கூட்டம். பஸ்ûஸவிட்டு இறங்கியவுடன் திருத்திருவென விழித்த பேரனை அதட்டினார் மருதாசல கவுண்டர். “ரங்கநாதா வெளியூருக்கு வந்தா பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையைப் பாக்கறது மாதிரி முழிக்கக் கூடாது”.

எப்போதும் வாஞ்சையுடன் பேசும் தாத்தா ஏன் இப்போது எரிந்து விழுகிறார்? ரங்கநாதனுக்கு குழப்பம். அவனுக்குத் தெரியுமா, பழனியிலிருந்து பாத யாத்திரையாகவே தாத்தா ஊர் திரும்பிய கதை?

- தினமணி தீபாவளி மலர்- 2012
.


Sunday, November 18, 2012

தமிழ் இலக்கியங்களில் தீபாவளி!


நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி தேசிய ஒருமைப்பாட்டின் சின்னமாக விளங்கி வருகிறது. எனினும், தமிழகத்தில் தீபாவளிக்கு எதிரான பிரசாரம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு; வடவர் பண்டிகையான தீபாவளிக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற குரல்கள் அபசுரமாக எழுவதுண்டு.

அவ்வாறு கூறுவோர், தமிழ் இலக்கியத்தில் தீபாவளி குறித்த பதிவுகள் இல்லை என்று கூறுகின்றனர். அவர்கள் வசதியாக ஒன்றை மறந்து விடுகின்றனர். தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழா குறித்தும் கூட தமிழ் இலக்கியத்தில் உறுதியான பதிவுகள் இல்லை.

மாறாக, நமது பழந்தமிழ் இலக்கியங்களில் இந்திரவிழா, கார்த்திகை விளக்கு, ஐப்பசி ஓணம் போன்ற பண்டிகைகள் குறித்த பதிவுகள் காணப்படுகின்றன. காலந்தோறும் மாறித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் மானிட சமுதாயத்தின் சிறப்பாகவே பண்டிகை மாற்றங்களைக் கருத வேண்டும் என்பது மானுடவியலாளர்களின் கருத்து.

இந்நிலையில், தமிழ் இலக்கியத்தில் திருமால் வழிபாடு, விளக்கு வழிபாடு தொடர்பாக இடம்பெற்றுள்ள சில பதிவுகளை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

ஒளி வழிபாட்டின் துவக்கம்:

தீப வழிபாடு தமிழருக்குப் புதிதல்ல. கௌமாரத்தில் தீப வழிபாடு பேரிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் முருகனை 'சேயோன்' என்று பாடுகிறது. திருமுருகாற்றுப்படை என்ற தனிநூலே முருகன் பெருமை பேச எழுந்துள்ளது.

சிவனின் நெற்றிக்கண்ணில் உதித்த பாலகனான முருகனை கிருத்திகை நாளில் விளக்கேற்றித் துதிப்பது தமிழர் மரபு. அதன் தொடச்சியாகவே வடலூர் வள்ளலார் சோதி வழிபாட்டை சென்ற நூற்றாண்டில் பிரபலப்படுத்தினார்.

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான நெடுநல்வாடையில், விளக்கு வழிபாட்டைக் குறிப்பிடுகிறார் நக்கீரர்.

இரும்புசெய் விளக்கின் ஈர்த்திரிக் கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது...


(நெடுநல்வாடை: 42-43)

இன்றும் தமிழகத்தில் கார்த்திகை தீப வழிபாடு, கார்த்திகை மாதம் வரும் கிருத்திகை நட்சத்திரமும் முழுமதியும் கூடிய நன்னாளில் நடந்து வருகிறது. சங்கம் மருவிய கால இலக்கியமான கண்ணங்கூத்தனாரின் கார் நாற்பது, கார்த்திகை மாத தீப வழிபாட்டுக்கு ஆதாரமாக உள்ளது.

நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் நாள் விளக்கு

(கார்நாற்பது -26)

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியும் கார்த்திகை விளக்கு குறித்து, 'கார்த்திகை விளக்கு இட்டன்ன கடிகமழ் குவளை பைந்தனர்' என்று பாடுகிறது.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், திருமயிலையில் இறந்த பூம்பாவை என்ற பெண்ணை உயிர்ப்பிக்கப் பாடிய பூம்பாவைப் பதிகமும் கார்த்திகை விளக்கீடு குறித்துப் பேசுகிறது.

கார்த்திகை நாள்... விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்!

(திருஞானசம்பந்தர் பூம்பாவை திருப்பதிகம்- திருமுறை: 2-47)

தீபாவளியாக மாறியதா?

தமிழகத்தில் கொண்டாடப்பட்ட கார்த்திகை தீப வழிபாடே தீபாவளியாக மாற்றம் பெற்றது என்ற கருத்து உள்ளது. மதுரையை நாயக்கர்கள் ஆண்டபோது தற்போதைய தீபாவளியின் வடிவம் உருவானதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆயினும் அதற்கு முன்னரே தமிழகத்தில் தீபாவளியின் வடிவம் இருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன.

பழமையான சங்க இலக்கியங்களுள் ஒன்றான அகநானூறில், அமாவாசை நாளில் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் குறித்து இடம்பெற்றுள்ளது. அக்காலத்தில் இவ்வழிபாட்டுக்கு 'தீபாவளி' என்ற பெயர் இல்லையெனினும், அதையொத்த பண்டிகை கொண்டாடப்பட்டிருப்பது இப்பாடலில் உறுதியாகிறது.

மழைகால் நீங்கிய மகா விசும்பில்
குறுமுயல் மறுநிறம் கிளர்மதி நிறைந்த
அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்
மறுகு விளக்குறுத்து மாயை தூக்கிப்
பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருகத்தில் அம்ம!


(அகநானூறு - 141ம் பாடல்)


என்று நக்கீரர் பாடுகிறார்.

'அறுமீன் சேரும் அகவிருள் நடுநாள்' என்பது அமாவாசை நாளையே குறிக்கிறது. இந்தச் செய்யுளில் வரும் பழவிறல் மூதூர் திருவண்ணாமலையைக் குறிப்பதாகவும் கூறுவர். திருவண்ணாமலை தீப வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்றது. இங்கு ஈசன் சோதி வடிவமாகத் தரிசனம் தருவதாக ஐதீகம்.

கார்த்திகை தீபம் நிகழும் கார்த்திகை மாத பெüர்ணமிக்கும், தீபாவளிப் பண்டிகை வரும் ஐப்பசி மாத அமாவாசைக்கும் இடையே 15 நாட்கள் மட்டுமே வித்யாசம் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்.

சமண இலக்கியத்தில் தீபாவளி:

பழமையான சமண இலக்கியமான 'கல்பசூத்திரம்' என்ற பிராகிருத மொழியில் எழுதப்பட்ட நூலில் தீப வழிபாடு குறித்த செய்தி வருகிறது. இதை எழுதியவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்யார் பத்ரபாகு என்ற சமண முனிவர்.

'மகாவீரர் என்ற தீப ஒளி மறைந்துவிட்டதால் தீப விளக்கை ஏற்றி வைப்போம் என்று, காசி, கோசல மக்களும், பதினாறு கண அரச மக்களும் தங்கள் வீடுகளின் முன்பு தீபம் ஏற்றி வைத்தனர்' என்று எழுதி இருக்கிறார் பத்ரபாகு.

இலக்கியத்தில் 'தீபாவளி' என்ற சொல் முதல்முதலாகப் பிரயோகிக்கப்படுவது, கி.பி. ஆறாம் நூற்றாண்டில் ஆச்சார்ய ஜினசேன முனிவரால் இயற்றப்பட்ட 'ஹரிவம்ச புராணம்' என்ற சமண இலக்கியத்தில் தான். அதில் வரும் 'தீபாவளி காயா' என்ற வார்த்தையின் பொருள் "ஞான ஒளி உடலைவிட்டு நீங்குகிறது'' என்பதே. இதிலிருந்து உருவானதே தீபாவளி என்ற வார்த்தை என்பது சமண இலக்கிய ஆய்வாளர்களின் கருத்து.

பழந்தமிழகத்தில் சமண மதத்தின் செல்வாக்கு பரவியிருந்ததற்கு ஆதாரப்பூர்வமான பல சான்றுகள் உள்ளன. சிலப்பதிகார நாயகன் கோவலன் கூட சமண சமயத்தவன் தான். எனினும், அக்காலத்தில் மதவேற்றுமையால் மக்கள் பிளவுபட்டிருக்கவில்லை என்பதற்கு சிலப்பதிகாரமே சாட்சியாகத் திகழ்கிறது. சமணர் இல்லங்களில் அனுசரிக்கப்பட்ட வழிபாடு பிற சைவ, வைணவர் இல்லங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.

பழந்தமிழகத்தில் மால் வழிபாடு:

பழந்தமிழகத்தில் மாலவன் வழிபாடு இருந்தமைக்கு பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. 'மாயோன் மேய காடுறை உலகமும்' என்பது தொல்காப்பிய நூற்பா (தொல்- அகம்-5).

திருமால் வழிபடப்படும் நிலப்பகுதியாக 'முல்லை'யை தொல்காப்பியர் காட்டுகிறார்.

முதற்பெருங் காப்பியமான சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவையில் மாயவனின் அவதார மகிமையைப் பாடி மகிழும் மக்களைக் காண்கிறோம்.

மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்கேளாத செவியென்ன செவியே
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!...


(சிலப்பதிகாரம்- 17- ஆய்ச்சியர் குரவை- படர்க்கைப் பரவல்)

என்று குரவையிட்டுப் பாடும் ஆய்ச்சியர் மூலம் அக்காலத்தில் நிலவிய மாலவன் வழிபாட்டை அறிகிறோம். திருமால் வழிபாடு வடக்கிலிருந்து வந்து பரவியதல்ல என்பதை பரிபாடலும் நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.

ஆகவே, பழந்தமிழகத்திலேயே மாலவன் வழிபாடும் விளக்கு வழிபாடும் இருந்தமைக்கு இலக்கியங்கள் சான்று பகர்கின்றன. சைவ, வைணவத்தில் மட்டுமல்லாது சமணத்திலும் தீப வழிபாடு இருந்துள்ளது உறுதியாகத் தெரிகிறது.

சமண மதத்தினர் அனுசரித்த மகாவீரர் மோட்ச தினமும் பழந்தமிழர் அனுசரித்த கார்த்திகை தீபமும் இணைந்து இன்று நாம் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு அடிகோலியிருக்க வாய்ப்புள்ளது. காரணம் எதுவாயினும், சமுதாயத்தைப் பிணைக்கும் சக்தியாக தீபாவளி பண்டிகை விளங்குவது நமக்கெல்லாம் பெருமை அளிப்பது தானே?


Monday, November 5, 2012

வடசித்தூரில் கொண்டாடப்படும் மயிலந்தீபாவளி!


 நாடு முழுவதும் தீபாவளிக் கொண்டாட்டம் இருந்தாலும், ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் பல  நாள் கொண்டாட்டமாக தீபாவளி மகிழ்ச்சியை அள்ளி வழங்குகிறது. தமிழகத்திலோ தீபாவளி கொண்டாட்டம் ஒருநாள் மட்டுமே.

அதேசமயம், கோவை மாவட்டத்திலுள்ள வடசித்தூர் கிராமத்தில் மட்டும் தீபாவளி இரண்டுநாள் கொண்டாடப்படுகிறது. இரண்டாவது நாளை இவ்வூர் மக்கள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். அன்று இக்கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கிடாவெட்டு உண்டு.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கிணத்துக்கடவு ஒன்றியத்திலுள்ள வடசித்தூர் கிராமம் சிற்றூராட்சியாகும். குரும்பபாளையம், செல்லப்ப கவுண்டன்புதூர் ஆகிய குக்கிராமங்களையும் உள்ளடக்கிய வடசித்தூர், சுற்றுவட்டாரக் கிராமங்களின் மையமாக உள்ளது. இங்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். விவசாயமே இங்கு முக்கியத் தொழில். சமீபகாலமாக இப்பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.

இங்கு பல தலைமுறைகளாக, தீபாவளிக்கு மறுநாள் "மயிலந்தீபாவளி' என்ற பெயரில் பண்டிகை கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த வழக்கம் எப்போது துவங்கியது என்று தெரியவில்லை என்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். எப்படியும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இப்பண்டிகை அனுசரிக்கப்பட்டு வருகிறது என்கிறார், இந்த ஊரைச் சேர்ந்த எஸ்.நஞ்சுக்குட்டி.

சிறிய தீபாவளி என்ற அர்த்தத்தில் மயிலந்தீபாவளியைக் கொண்டாடுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இவர். அருகிலுள்ள நகரமான பொள்ளாச்சியில் வியாழக்கிழமை கூடும் பெரிய சந்தையை அடுத்து, மறுநாள் வெள்ளிக்கிழமை சிறிய சந்தையான 'மயிலஞ்சந்தை' கூடுவதை அவர் உதாரணமாகச் சுட்டிக் காட்டுகிறார்.

எல்லா ஊர்களையும் போலவே வழக்கமான உற்சாகத்துடன் வடசித்தூரிலும் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதிகாலை எண்ணெய்க் குளியல், பட்டாசு வெடிப்பு, ஊரின் பிரதானமான கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் வழிபாடு ஆகியவை வடசித்தூரில் தீபாவளியின் வழக்கமான அம்சங்கள். அத்துடன் ஊரின் மையத்தில் ஊராட்சித் திடலில் அமைக்கப்படும் ராட்டினங்கள், கேளிக்கை விளையாட்டுக்கள் ஆகியவை வித்யாசமான அனுபவத்தை இவ்வூர் மக்களுக்கு ஆண்டுதோறும் வழங்குகின்றன.

இதற்குக் காரணமாக அமைந்தது தான், மறுநாள் வரும் மயிலந்தீபாவளி. இதுவே  வடசித்தூர் நோக்கி சுற்றுவட்டார மக்களை திரளச் செய்கிறது. அன்று வடசித்தூரில் வாழும் பெரும்பாலோர் இல்லங்களில் அசைவ விருந்து பரிமாறப்படுகிறது. மாறாக தீபாவளியன்று இம்மக்கள் அசைவ உணவைத் தவிர்க்கின்றனர்.

வடசித்தூரில் பெரும்பான்மையாக வாழும் கொங்கு வேளாள கவுண்டர் மக்கள் 'செம்பங்குலம்' என்ற உட்பிரிவைச் சார்ந்தவர்கள். இவர்கள் அமாவாசை நாளில் அசைவ உணவைத் தவிர்ப்பது குடும்ப வழக்கம். இவர்களுக்காகவே அமாவாசைக்கு மறுநாள் மயிலந்தீபாவளி கொண்டாடப்படுவது துவங்கியிருக்க வேண்டும் என்கிறார் இங்கு டீக்கடை வைத்திருக்கும் பொன். இளங்கோ.

''வடசித்தூரைச் சேர்ந்த பெண்கள் வேறு ஊர்களுக்குத் திருமணமாகிச் சென்றுவிட்டாலும், தீபாவளிக்கு மறுநாள் கணவர் வீட்டினர் மற்றும் குழந்தை குட்டிகளுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்து விருந்தில் கலந்துகொள்வது வழக்கமாக உள்ளது. புகுந்த வீட்டிற்குச் சென்ற தங்கள் பெண்களுக்கு தீபாவளியன்று அசைவ விருந்து தர முடியாததால், அதற்கு மறுநாள் 'மயிலந்தீபாவளி' என்ற பெயரில் புதிய பண்டிகையையே வடசித்தூர் மக்கள் உருவாக்கி இருக்கிறார்கள்'' என்கிறார், இந்த ஊராட்சியின் தலைவர் கே.தேவராஜ்.

மயிலந்தீபாவளியின் மற்றொரு சிறப்பு, இவ்வூரில் வாழும் இஸ்லாமியர்களும் இப்பண்டிகையில் பங்கேற்பது என்கிறார் இவர். மயிலந்தீபாவளியன்று இந்துக்களின் வீடுகளுக்கு விருந்தினராகச் செல்வதை இங்குள்ள முஸ்லிம் மக்கள் பெருமையாக நினைக்கிறார்கள். அன்று இந்துக்களும் முஸ்லிம்களும் பாசத்துடன் உறவுமுறை கூறி அழைத்துக் கொள்வதைக் காண முடியும்.

இரு நாட்கள் தீபாவளி கொண்டாடப்படுவதால், வடசித்தூரின் மையத்தில் பஞ்சாயத்து மைதானத்தில் கேளிக்கை விளையாட்டுகள் களைகட்டுகின்றன. இதற்காக பலவிதமான ராட்டினங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் விளையாட வரும் சிறுவர் சிறுமியரின் உற்சாக ஆரவாரம் ஊர் எல்லை வரை கேட்கும்.

நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு வாரச்சந்தை நடந்ததாகத் தகவல். பிற்காலத்தில் ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்காக, ஊரின் தெற்கே சந்தை இடம் மாற்றப்பட்டுவிட்டது. எனினும், மயிலந்தீபாவளிக் கொண்டாட்டங்கள் அதே இடத்தில் தொடர்கின்றன என்கிறார் இதே ஊரைச் சேர்ந்த கண்டியப்பன்.

சுற்றுவட்டார கிராமங்களின் மையமாக இருப்பதால், அருகிலுள்ள குருநல்லிபாளையம், மன்றாம்பாளையம், கொண்டம்பட்டி, மெட்டுவாவி, பனப்பட்டி, ஆண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வடசித்தூரிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டிற்கு பண்டிகை கொண்டாட மக்கள் வருகின்றனர்.

வெளியூர்களில் வசிக்கும் வடசித்தூர் கிராம மக்களும் இவர்களது உறவினரும் ஆண்டுக்கு ஒருமுறை கூடும் திருநாளாகவும் மயிலந்தீபாவளி விளங்குகிறது. இளைஞர்களும் கன்னியரும் கண்ணால் பேசி மகிழவும் இப்பண்டிகை வாய்ப்பளிக்கிறது.

பண்டிகையின் நோக்கம் மகிழ்ச்சி மட்டுமல்ல, அன்பையும் உறவுகளையும் வளர்ப்பது. அதைச் சிறப்பாக நிறைவேற்றுவதால் தான், தமிழகத்திலேயே புதுமையாக, ஆண்டுதோறும் இங்கு இரண்டுநாள் தீபாவளி கோலாகலமாக நடக்கிறது. வரப்போகும் மயிலந்தீபாவளிக்காக, சென்ற ஆண்டு நினைவுகளுடன் வடசித்தூர் காத்திருக்கிறது.

- தினமணி - கோவை (28.10.2012 )
ஒளி விழா கொண்டாட்டம் விளம்பரச் சிறப்பிதழ்
.

Monday, October 29, 2012

சீக்கியர்கள் கொண்டாடும் தீபாவளி….


வண்ணமயமான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் உற்சாக வெள்ளத்தைக் கரைபுரளச் செய்யும் முதன்மையான பண்டிகை தீபாவளி தான். இப்பண்டிகை இந்துக்களால் மட்டும் கொண்டாடப்படுவதல்ல என்பது பலரும் அறியாத தகவல்.

சமண மத்தின் கடைசி (24வது) தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் மோட்சம் அடைந்த நாள் தீபாவளி (கி.மு. 567) என்பதால், இந்நாளை சமணர்கள் பக்தியுடன் கொண்டாடுகின்றனர்.

மாமன்னர் அசோகர் புத்த மதத்தைத் தழுவிய நாள் என்பதால், புத்த மதத்தினரும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். பஞ்சநதி பாயும் பஞ்சாபைச் சேர்ந்த சீக்கியர்களுக்கோ, தீபாவளி தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் சங்கமத் திருநாள்.

“சீக்கியர்கள் தங்கள் குருவிடம் வந்து உபதேசம் பெற உகந்த நாள் தீபாவளி” என்று மூன்றாவது சீக்கிய குருவான குரு அமர்தாஸ் (1552- 1574) அறிவித்தார். அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

சீக்கியர்கள் தங்கள் உயிரினும் மேலாகக் கருதும் ஹர்மந்திர் சாஹிப் எனப்படும் பொற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் ஒரு தீபாவளி நன்னாளில் தான். அமிர்தசரஸ் குளத்தையும் அதையொட்டிய நகரையும் நிர்மாணித்த நான்காம் சீக்கிய குரு ராம்தாஸ் 1577ம் ஆண்டு தீபாவளியன்று இப்பணியைத் துவக்கினார். இப்பணியை முழுமையாக்கி அமிர்தசரஸ் நகரை உருவாக்கினார் அடுத்துவந்த ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜூன் தேவ்.

சீக்கியர்களின் எழுச்சிக் காலமாகக் கருதப்படும் காலம் ஆறாவது குரு ஹர்கோவிந்த சிங்கின் காலம் (1595 – 1644). இவர் அப்போதைய முகலாய மன்னர் ஜஹாங்கீரால் கைது செய்யப்பட்டார். அவருடன் 52 இந்து அரசர்களும் கைது செய்யப்பட்டு குவாலியர் கோட்டையிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டனர்.

மதமாற்றத்தை வலியுறுத்தி சிறைக்குள் இவருக்கு கொடிய சித்ரவதைகள் இழைக்கப்பட்டன. அவை அனைத்தையும் தனது ஆன்ம வலிமையால் தாண்டிய குரு ஹர்கோவிந்த சிங்கின் பெருமையை மன்னர் ஜஹாங்கீர் உணர்ந்தார். இறுதியில் சிறையில் இருந்து குருவை விடுவிக்க மன்னர் முன்வந்தார். ஆனால், தன்னுடன் சிறையிலுள்ள 52 இந்து மன்னர்களையும் விடுவித்தால் மட்டுமே தானும் வெளிவருவேன் என்றார் குரு ஹர்கோவிந்த் சிங்.

கடைசியில் குருவின் மனவலிமையே வென்றது. ஒரு தீபாவளி நன்னாளில் குரு ஹர்கோவிந்தருடன் 52 இந்து மன்னர்களையும் விடுவித்தார் மொகலாய மன்னர் ஜஹாங்கீர். 1619, அக்டோபர் 26ம் நாள் இந்த சரித்திரப்புகழ் பெற்ற நிகழ்வு நடைபெற்றது.

அதனை ஆண்டுதோறும் நினைவுகூரும் விதமாக, “பந்தி சோர் திவஸ்’ என்ற விழா சீக்கிய மக்களால் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சீக்கியக் குழந்தைகள் வண்ண விளக்குகளை மிதக்கவிட்டு, பட்டாசு வெடித்து மகிழ்கின்றனர்.

சீக்கியர்களின் பத்தாவது மற்றும் கடைசி குரு கோவிந்த் சிங், 1699ம் ஆண்டு, சீக்கியர்களின் பண்டிகைகளில் பைசாகிக்கு அடுத்ததாக, முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாக தீபாவளியை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் வாழும் சீக்கியர்கள் தீபாவளியை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அமிர்தசரஸ் பொற்கோவிலின் நிர்வாகியும் குரு கோவிந்தரின் பால்ய நண்பருமான குரு பாயி மணிசிங் மொகலாய அரசுக்கு செலுத்த வேண்டிய கப்பத்தைக் கட்ட மறுத்ததால், 1737, டிசம்பரில் கைது செய்யப்பட்டு லாகூர் கோட்டை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு லாகூர் ஆளுநர் சஹாரியா கானால் கடும் சித்ரவதைக்கு ஆளாகி பாயி மணிசிங் தீபாவளியன்று பலியானார்.

அவரது மரணம் சீக்கியர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது. ஏற்கனவே பத்தாவது குருவான குரு கோவிந்தரால் அமைக்கப்பட்ட கால்சா படை மொகலாயருக்கு எதிராக தீவிரமாகப் போராட இவரது படுகொலை காரணமாக அமைந்தது.

இவ்வாறாக, தியாகமயமான சரித்திர நிகழ்வுகளின் பதிவுகளுடன், முந்தைய குருமார்களின் புனிதமான நினைவுகளுடன் தீபாவளியை சீக்கியர்களும் கொண்டாடுகின்றனர். இந்நாளில் சிறப்பு மிகுந்த நமது பாரம்பரியத்தை நாமும் நினைவில் கொள்வோம்.

- தினமணி- கோவை (21.10.2012 )
ஒளி விழா கொண்டாட்டம் – விளம்பரச் சிறப்பிதழ்


Friday, October 19, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதம்


சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக எழுத்தாளர் திரு. ஜெயமோகன் தனது தளத்தில் எழுதிய கட்டுரை - சிறுவணிகத்தில் வெளிமுதலீடு  - குறித்த எனது விமர்சனம் இது.


ஜெ.மோ.

நீங்கள் சொல்வது அனைத்தும் – விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை என்பதைப் பொறுத்த வரை, உண்மைதான். பாடுபடும் விவசாயிக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அனைத்தும் வியாபாரிகளுக்கு – அதிலும் இடைத்தரகர்களுக்கே செல்கிறது. இதற்கு நமது விநியோகச் சங்கிலி அறுபட்டதே காரணம். முந்தைய காலத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் செயல்பட்ட வாராந்திர சந்தை அமைப்பு அற்புதமான பொருளாதார ஏற்பாடு. அதன் நவீன வடிவமே கருணாநிதி கொண்டுவந்த உழவர் சந்தை. ஆனால், அரசின் கட்டுப்பாடின்மை காரணமாகவே சந்தை ஏற்பாடு நலிகிறது. இதற்கு வால்மார்ட் வந்தால் சரியாகிவிடும் என்று கூறுவது ஒருவித நம்பிக்கையே ஒழிய தீர்வாகத் தெரியவில்லை. எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?

நமது அரசையே வழி நடத்தும் அளவுக்கு பொருளாதார பலம் வாய்ந்தவர்கள் கையில் சில்லறை வணிகம் சிக்கினால், மேலும் மோசமான நிலைக்கு விவசாயிகள் ஆட்படக்கூடும். ரிலையன்ஸ் நிறுவனத்தின் தோல்விக்கு அவர்கள் கையாண்ட விவசாயிகளுக்கு எதிரான அணுகுமுறை காரணமானது போலவே, பன்னாட்டுப் பகாசுர நிறுவனங்களும் செயல்படக்கூடும். இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. இதற்காக இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் ஒரே நேரத்தில் கடுமையாக விமர்சித்திருப்பது சரியல்ல. இன்றைய நிலையில் ஊழல் மிகுந்த மத்திய அரசுக்கு எதிரான குரலாக ஒலிப்பவர்கள் அவர்கள்தான். யாரையும் சந்தேகப்பட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆயினும், விமர்சிக்கும்போது இந்தஅளவுக்குக் கடுமை காட்டுவது ஜெயமோகனின் நடைமுறையாகத் தெரியவில்லை.

உழவன் காப்பாற்றப்பட வேண்டும். அவனை ஏமாற்றும் வர்த்தக வட்டத்தை சரிப்படுத்த வேண்டும். அதற்கு அரசு முறையான நடைமுறைகளை வகுக்க வேண்டும். விவசாயிகளும் ஒருங்கிணைந்து சாகுபடி திட்டங்களை வகுக்க வேண்டும். உண்மையில் இதற்காகப் பல வேளாண் வணிக முறைகள் நம்மிடம் உள்ளன. வழக்கம் போல அதையும் நாசமாக்கி வைத்திருக்கிறோம். இதை விடுத்து, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதால், விவசாயிக்கு லாபம் கிடைத்துவிடும் என்று நம்பினால், மீண்டும் நாம் ஏமாற்றப்படவே வாய்ப்புகள் அதிகம். அதை ஜெயமோகன் தனது கட்டுரையில் (வால்மார்ட் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு) குறிப்பிட்டிருக்கிறார். ஊழல் மிகுந்த நமது நாட்டில் அது நடக்கவே சாத்தியங்கள் அதிகம்.

இவ்விஷயத்தில், அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டுவிடக் கூடாது என்று சொல்வது தவறல்ல என்றே நான் நினைக்கிறேன்.

-வமுமுரளி.

நன்றி: ஜெயமோகன் இணையதளம். 
.

Sunday, October 7, 2012

புதுக்கவிதை - 148
கருவாடு

 

ஒரு கவிதை
நிராகரிக்கப்பட்டுவிட்டது-
படிக்கப்படாமலேயே-
வாழாமலே முடிந்துபோன
வாழ்க்கை போல.

அந்தக் கவிதையின்
ஒவ்வொரு வரியிலும்
துடிப்பு இருந்தது-
நிலத்திலும் வாழத் துடிக்கும்
மீன் போல.

காய்ந்த மீன் கூட
கருவாடாகும்-
இந்தப் புலம்பல் போல.
.

Thursday, October 4, 2012

எண்ணங்கள்

திருப்பூரில் போலீசால் கொல்லப்பட்ட  மோகன்ராஜின் மனைவி கீதாவும் குழந்தை ரேணுகாவும்

 குழந்தை ரேணுகாவின் அப்பா வருவாரா?

குழந்தை ரேணுகாவுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் பிறந்தநாள். அன்று மகிழ்ச்சிகரமாக இருந்திருக்க வேண்டிய அந்தக் குடும்பம், ஒப்பாரி வைத்தபடி  நடுத்தெருவில் நின்றது. காரணம் அந்தக் குழந்தையின் தந்தை முதல்நாள் தான் போலீசாரால் கொல்லப்பட்டிருந்தார். அதுவும் நான்கு நாட்கள் லாக்அப்பில் வைத்து போலீசார் நடத்திய கொடூர விசாரணையின் முடிவில். அந்த ஒரு வயதுக் குழந்தையின் அப்பா இப்போது இல்லை. அவரைத் திருமணம் செய்து மூன்று ஆண்டுகளே ஆன மனைவி கீதாவுக்கு ஆறுதல் சொல்லும் துணிவும் யாருக்கும் இல்லை.

இச்சம்பவம் நடந்தது திருப்பூரில். ஆயினும் நாம் ஜனநாயக நாடு என்று நம்மைப் பற்றிப் பெருமிதமாகச் சொல்லிக் கொள்கிறோம். 'ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது' என்ற தத்துவத்தைப் பேசிக்கொண்டே இதுபோன்ற லாக்அப் மரணங்களைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறோம்.

போலீசாரால் லாக்அப்பில் கொல்லப்பட்ட இளைஞர் மோகன்ராஜின் வயது 31. அவர் செய்த பாவம் ஏழையாகப் பிறந்தது; பைனான்ஸ் தொழில் நடத்தும் ஆளும்கட்சிப் பிரமுகர் வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தது. அவர் வேறு வீட்டிற்கு மாறிய மறுநாள் வீட்டின் உரிமையாளர் கொல்லப்பட, சந்தேக வட்டம் மோகன்ராஜ் மீது விழுந்தது.

இவர் மட்டுமல்ல, 30க்கு மேற்பட்டவர்கள் போலீசால் கடுமையாக விசாரிக்கப்பட்டனர். 4 நாள் லாக்அப் சித்திரவதையின் முடிவில் களப்பலியானார் மோகன்ராஜ். தனது சாவால், போலீஸôரால் சித்திரவதை செய்யப்பட்ட மேலும் பலரைக் காப்பாற்றி இருக்கிறார் மோகன்ராஜ்.

மோகன்ராஜின் மரணம் திருப்பூரை உலுக்கி இருக்கிறது. அதன் விளைவாக, நெடுஞ்சாலையில் 9 மணிநேரம் மறியல் செய்த மக்கள் போலீஸ் அராஜகத்துக்கு எதிராகக் கோஷமிட்டனர். வேறு வழியின்றி ஒரு இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீசாரும் உடனடியாக தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இதற்குக் காரணமான  ஏ.எஸ்.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், போலீசால் அழைத்துச் செல்லப்பட்ட அண்ணனின் நிலையை அறிந்துவர காவல் நிலையம் சென்ற தம்பி ரமேஷும் போலீசால் இரண்டுநாட்கள் 'விசாரிக்கப்பட்டார்'. அவரது உடல் முழுவதும் ரணம். இந்த ரணம் காலப்போக்கில் ஆறக்கூடும். போலீசால் அநீதி இழைக்கப்பட்ட இவர்களது குடும்பத்தின் மனப்புண் ஆறுமா? குழந்தை ரேணுகாவுக்கு அன்பான தந்தை மீண்டும் கிடைப்பாரா? அரசு அளிக்கும் நிதியுதவிகள் கீதாவுக்கு அன்பான கணவனை மீட்டுத் தருமா? பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மறைமுகமாக நிதியுதவி அளித்து அவர்கள் வாயை மூட பேரம் நடப்பதாகவும் தகவல். ஆனால் போன அப்பா திரும்ப வருவாரா?

லாக்அப் மரணங்கள் நமது நாட்டிற்குப் புதியவை அல்ல. குற்றவாளிகளை விசாரிக்க மூன்றாம்தர விசாரணை முறைகளைக் கையாள்வதும் புதிய விஷயமல்ல. லாக்அப் மரணங்கள் நிகழாத பகுதி நமது நாட்டில் இல்லை. ஆனால், எல்லா நேரங்களிலும் மக்கள் போலீசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவதில்லை.

கோவையில் குழந்தைகள் ரித்திக், முஸ்கான் ஆகியோரைக் கொன்ற கொலையாளி மோகன்ராஜை (அவன் பெயரும் மோகன்ராஜ் தான்) போலீசார் போலிமோதலில் கொன்றபோது அதை மக்கள் ஆதரித்தனர். அதே மக்கள்தான், திருப்பூரில் பனியன் வியாபாரி மோகன்ராஜ் கொல்லப்பட்டதை எதிர்த்து சாலையை மறித்தார்கள். திருப்பூரில் போலீசாரின் அத்துமீறல்கள் தொடர்கதையாக இருந்ததால் தான் மக்கள் தார்மிக ஆவேசத்துடன் போராடத் துணிந்தார்கள். தடியடி நடத்தி அவர்களைக் கலைத்ததை போலீசார் பெருமையாகக் கருதிவிடக் கூடாது.

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட சுப்பிரமணியம் என்ற இளைஞர் திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் 5 மாதங்களுக்கு முன்னர் இறந்தார். அந்த நிகழ்வை நஷ்டஈடு நாடகம் நடத்தி எப்படியோ மூடி மறைத்தனர் போலீஸôர். 2010ல் போலீஸ் இன்ஸ்பெக்டரே லஞ்சம் வாங்கியதை விடியோ பதிவு செய்த சுப்பிரமணியம் என்பவர் இதே காவல்நிலையத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்டார். மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அவர் அன்று உயிர் தப்பினார்.

அதே ஆண்டு திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் அடிதடி தகராறுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர் சக்திவேலின் காலினை 'விசாரணை' என்ற பெயரில் உடைத்தனர் போலீசார். இன்றும் அந்த இளைஞர் நடைபிணமாகத் தான் இருக்கிறார். ÷உயர் நீதிமன்ற உத்தரவால், அவ்வழக்கில் தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டர் தாற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், சித்திரவதைக்கென்றே கட்டப்பட்டது போல, திருப்பூர் ஊரக காவல்நிலையம் நல்லூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அங்குதான் சக்திவேலின் கால் உடைக்கப்பட்டது; மோகன்ராஜும் கொல்லப்பட்டிருக்கிறார்.

சட்டத்தின் காவலர்களான போலீசாருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை யார் தந்தது? போலீசார் குறித்த மக்களின் அச்ச உணர்வே அவர்களுக்கு இந்த விபரீதத் துணிச்சலை அளிக்கிறது. அவர்களது பணிப்பளுவும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும், லாக்அப்பில் கதறிய மோகன்ராஜின் பரிதாபமான குரலும் கூடவா போலீசாரை சிந்திக்கச் செய்யாது? பணி முடிந்து வீடு திரும்பும் போலீசாரின் வீடுகளிலும் மனைவி, குழந்தைகள் தானே காத்திருப்பார்கள்?

இன்னொரு விஷயம், மக்களின் அறியாமை. குற்றவியல் விசாரணை சட்டப்படி, கைது செய்யப்பட்ட எவரையும் 24 மணிநேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்ப வேண்டும். இது தெரியாததால் தான், போலீஸôர் மோகன்ராஜை இழுத்துச் சென்று விசாரித்த காவல்நிலையங்களுக்கெல்லாம் அவரது குடும்பம் தொடர்ந்து சென்றிருக்கிறது- எப்படியும் விடுவித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில். ஒரு லட்சாதிபதியாகவோ, அரசியல்வாதியாகவோ மோகன்ராஜ் இருந்திருந்தால் இந்நிலை அக் குடும்பத்துக்கு நேரிட்டிருக்குமா?

இதுபோன்ற லாக்அப் மரணங்களுக்கு கடிவாளமாக 1996ல் உச்சநீதிமன்றம் டி.கே.பாசு (எதிர்) மேற்கு வங்க அரசு வழக்கில் 11 கட்டளைகளைப் பிறப்பித்தது. கைது செய்யப்பட்டவரின் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்குரைஞரை உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்பவை அவற்றில் முக்கியமானவை. ஆனால் லாக்அப் மரணங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கின்றன.

உச்சநீதிமன்றம் அளித்த அந்த உத்தரவு, 'சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாகரிக சமுதாயத்தில் மிக மோசமான குற்றம் லாக்அப் சாவு' என்று வர்ணித்தது. நமது நாட்டில் சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறதா? அல்லது நாம் நாகரிகமான சமுதாயம் இல்லையா? குழந்தை ரேணுகா அழுதுகொண்டிருக்கிறாள். அவளது அப்பா கொல்லப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. அவளது அழுகையை நிறுத்த நமது அரசால் முடியுமா? வேடிக்கை பார்க்கும் நாம் என்ன செய்யப்போகிறோம்?

.

Tuesday, September 4, 2012

எண்ணங்கள்

பண்பாட்டை விளக்கும் உன்னதத் திருவிழா


நமது நாட்டின் பண்பாட்டுச் சிறப்புக்கு அடையாளமாகத் திகழ்பவை பண்டிகைகள். ஒவ்வொரு பண்டிகைக்கும் தோற்றக் காரணம் உண்டு. மக்களை ஒன்றிணைப்பதும், மகிழ்ச்சியூட்டுவதுமே பண்டிகைகளின் அடிப்படை நோக்கம். அந்த வகையில் கேரள மக்களால் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை தனிச் சிறப்பு மிக்கதாகும்.

‘பரசுராம க்ஷேத்திரம்’ என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்த கேரளத்தை முன்னொரு காலத்தில் மகாபலி சக்கரவர்த்தி ஆண்டு வந்தார். இவர் பிரகலாதனின் பேரன். நல்லாட்சி நடத்தியதால் மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். தான தர்மம் செய்வதில் நிகரற்றவராக விளங்கிய இவரது மனத்திலும் மாசு புகுந்தது. தானத்தில் தன்னை விஞ்ச ஆளில்லை என்ற ஆணவமும், தேவர்களை அடிமைப்படுத்திய அசுர குணமும் மகாபலிக்கு வினையாக அமைந்தன.

மகாபலி மன்னனின் ஆணவம் போக்கி தேவர்களைக் காக்க வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, மூன்றடி நிலம் தானம் கேட்டுப் பெற்றார். மகாபலியை சம்ஹரித்தார் என்பது புராணக் கதை. ஓரடிக்கு மண்ணையும் மற்றோர் அடிக்கு விண்ணையும் அளந்த வாமனனின் விஸ்வரூப தரிசனம் கண்ட மகாபலி சக்கரவர்த்தி, மூன்றாம் அடிக்கு தனது தலையையே அளித்தார். அதன் மூலம் இறையருள் பெற்றார்.

எனினும் நல்லாட்சி நடத்திய நாயகனான மகாபலி, ஆண்டுதோறும் மலையாள சிங்கம் மாதம், திருவோண நட்சத்திரத்தன்று தனது நாட்டைக் காண வந்து செல்ல வரம் கேட்டுப் பெற்றார் என்பது மக்களின் நம்பிக்கை.

அதன்படி தங்களது சுபிக்ஷம் காண வரும் மன்னன் மகாபலியை வரவேற்க, அந்நாட்டு மக்கள் புத்தாடை புனைந்து, ஒன்பது சுவை உணவுடன், வாசலில் மலர்க் கோலமிட்டு, சாகச விளையாட்டுகளுடன் விழா கொண்டாடுகின்றனர். இதுவே ஓணம் பண்டிகையின் தாத்பரியம்.

மலையாள மக்கள் அனுசரிக்கும் ‘கொல்ல வருஷம்’ என்ற நாள்காட்டியின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் ஹஸ்த நட்சத்திரம் துவங்கி திருவோணம் நட்சத்திரம் வரையிலான பத்து நாட்களும் கொண்டாடப்படுவதே ஓணம் பண்டிகை. மாநிலம் முழுவதும் அறுவடை முடிந்து வீடுதோறும் செல்வம் குவிந்திருக்கும் சூழலில் இப்பண்டிகை வருகிறது. மக்களுக்கு ஆனந்தம் தருகிறது.ஸ

ஒரு நாட்டின் பண்பாட்டின் சின்னமாக விளங்குபவை ஆடைகளும் உணவு வகைகளும் தான். அதன்படி, மலையாளிகளுக்கே உரித்தான ‘கசவு’ வெண் பட்டாடைகள் தனிச்சிறப்பு பெற்றவை. இந்த ஆடைகளை அணிந்து, 64 வகையான பதார்த்தங்களுடன் கூடிய ‘ஓண சத்யா’ விருந்தளித்து உறவினர்களையும் நண்பர்களையும் உபசரிப்பது கேரள மக்களின் பண்டிகை மாண்பு.

அடுத்து, பண்பாட்டின் அடையாளங்களாக சாகசக் கலைகளும் நாட்டியங்களும் இசைப் பாடல்களும் விளங்குகின்றன. ஓணம் விழாவில் பெண்கள் ஆடும் ‘கைகொட்டுக் களி’யும், ஆண்கள் ஆடும் ‘புலிக்களி’யும் சிறப்பானவை. தவிர, பாரம்பரியமான கயிறு இழுத்தல் போட்டி, களரி, படகுப் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

கேரளத்துக்கே உரித்த யானைத் திருவிழா ஓணம் பண்டிகையின் சிகரமாகும். பண்டிகையின் பத்தாம் நாளான திருவோணம் அன்று, யானைகளை அலங்கரித்து ஊர்வலம் நடத்தி மகிழ்வர்.

‘அத்தப்பூக் களம்’ எனப்படும் பூக்கோலம், மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கேரளத்தவரின் இல்லத்தின் முகப்பிலும் காணப்படுவது ஓணம் பண்டிகையின் முத்திரையாகும். ஜாதி, மத வித்தியாசமில்லாமல் கேரளத்தைச் சார்ந்த அனைவரும் கொண்டாடும் ஓணம் பெருவிழா, சத்தமின்றி மலையாள மக்களை ஒருங்கிணைத்து, அவர்களது பண்பாட்டுப் பெருமிதத்தை நினைவூட்டி வருகிறது.

கேரள மக்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பண்பாட்டை மறவாமல் கொண்டாடும் திருவோணம் திருவிழா, பாரதத்தின் பெருமையையும் பார் முழுவதும் பரப்பி வருகிறது. இவ்விழாவை நாமும் கொண்டாடி மகாபலி சக்கரவர்த்தியின் அருளைப் பெறுவோமே!

—————————————

நீதி தவழும் நாடு…

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரள மக்கள் பாடும் பாடல், மகாபலி சக்கரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. மகாபலி ஆண்ட நாட்டின் சிறப்பை நினைவுகூர்ந்து, அதேபோன்ற நாடு அமைய பண்டிகையின்போது பிரார்த்திக்கிறார்கள் மக்கள். இதோ அந்தப் பாடலின் வரிகள்:

மாவலி மன்னன் ஆண்ட நாட்டில்
மனிதர்களெல்லாம் சரிநிகரே!
ஆனந்தம் எங்கும் தாண்டவமாடும்.
அவதியென்பதே எங்குமில்லை.

நோய்கள் நெருங்கா நாடு அது
சிசுக்களை சாவு அண்டாது.
பொய்யை அறியா பண்புறு மக்கள்!
கொள்ளையும் திருட்டும் அங்கில்லை.

வாய்மை எங்கும் பேச்சில் மிளிரும்
அளவைகள் தரத்தை வெளிப்படுத்தும்.
யாரும் யாரையும் ஏமாற்றாத
நேர்மை ஒளிரும் வீரிய தேசம்.

மாவலி ஆண்ட மண்ணில் என்றும்
அனைவரும் ஒரு குலம்! சரிநிகரே!


- தினமணி (கோவை) 28.08.2012

பொன் ஓணத் திருநாள் -விளம்பரச் சிறப்பிதழ் 

.Tuesday, August 7, 2012

எண்ணங்கள்


மிரட்டும் பிளக்ஸ் விளம்பர பேனர்கள்


எந்த ஒரு நவீனக் கண்டுபிடிப்பும் அதன் பயன்பாட்டில்தான் மதிப்பு பெறுகிறது. பாறைகளை உடைக்கக் கண்டுபிடிக்கப்பட்ட 'டைனமைட்' இன்று உலகம் முழுவதும் பயங்கரவாதிகளின் கொடூர ஆயுதம் ஆகியிருப்பது இதற்கு உதாரணம்.

இதேநிலையில்தான் 'பிளக்ஸ் பேனர்' எனப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அச்சிடப்படும் விளம்பரங்களும் உள்ளன என்று சொன்னால் மிகையில்லை.

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்களை உள்ளது உள்ளபடி அச்சிடும் வசதி இருப்பதால், சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் அரசியல்வாதிகளின் எளிய சாதனமாக பிளக்ஸ் விளம்பரங்கள் மாறி இருக்கின்றன.

வர்த்தக நிறுவனங்களும் கூட நீண்ட நாள் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு பிளக்ஸ் விளம்பரங்களையே நாடுகின்றன. இதன் காரணமாக புற்றீசல்போல எங்கு பார்க்கினும் பிளக்ஸ் விளம்பரங்களே கோலோச்சுகின்றன. இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலையில்லை.

பிளக்ஸ் விளம்பரம் அச்சிடப்படும் துணி போன்ற பொருள், பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.) எனப்படும் ரசாயனப் பொருளால் தயாரிக்கப்படுவது. இது மக்காத தன்மை கொண்டது. இதில் அச்சிடப் பயன்படுத்தும் மையும் மிகுந்த நெடியுடைய ரசாயனத் திரவமே. இவை இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை.

அடிப்படையிலேயே ஆபத்தைச் சுமந்துகொண்டுள்ள பிளக்ஸ் விளம்பரங்களை வரைமுறையின்றி வைப்பதாலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. முச்சந்திகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்களை மறைக்கும் வகையிலும் வைக்கப்படும் பிளக்ஸ் விளம்பரங்களால் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் கவனங்களையும் இவை சிதறச் செய்கின்றன.

வர்த்தக நிறுவனங்களை மறைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பரங்களால் ஆங்காங்கே சச்சரவுகளும் நிகழ்கின்றன. பிளக்ஸ் விளம்பரங்களைக் கிழிக்கும் அரசியல் கலாசாரமும் பல இடங்களில் மோதலை ஏற்படுத்துகிறது.

சாலையோரம் வைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் பேனர்களின் கம்புகள் நீட்டிக்கொண்டு, போவோர் வருவோரைப் பதம் பார்க்கின்றன. தவிர இவற்றை நடுவதற்காக, ஏற்கெனவே மோசமான நிலையிலுள்ள தார்ச் சாலையைத் தோண்டுகின்றனர்.

இதுவும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவற்றைத் தரையில் ஊன்றி நிறுத்தும்போது ஏற்படும் விபத்துகள் விபரீதமானவை. பேனர் நடுவதற்கு வைத்த இரும்புக் கம்பம் உயரத்தில் சென்ற மின்கம்பியில் பட்டதால் மின்சாரம் பாய்ந்து சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடக்கின்றன.

மின்பாதை, மின்கம்பம், மின்மாற்றிகள் அருகே பிளக்ஸ் விளம்பரங்கள் வைக்கக் கூடாது என்ற விதியைக் கடைப்பிடித்திருந்தாலோ, விளம்பர அளவுக் கட்டுப்பாட்டை மீறாமல் இருந்திருந்தாலோ, பேனர் வைத்தவர்கள் இப்படி மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்க மாட்டார்கள்.

வேகமாக காற்று வீசும்போது பேனர் சரிந்து விழுந்து பாதசாரிகளும் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், பிளக்ஸ் விளம்பர மோகம் நம்மிடையே அதிகரித்தபடியே இருக்கிறது. இதற்கு நவீன அச்சு இயந்திரங்களின் வருகையும் எளிதில் மங்கிவிடாத வண்ண அச்சும்தான் காரணம்.

தொழில் போட்டி காரணமாக இதற்கான அச்சுச் செலவு வெகுவாகக் குறைந்ததும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த பிளக்ஸ் பேனர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் காவல்துறைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. பேனர் எண்ணிக்கைக்கும், அளவுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட சில நாட்கள் முன்னதாக மட்டுமே விளம்பரம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்பது முக்கியமான விதியாகும். அதேபோல, நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றை வைத்தவர்களே உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்றும் விதி இருக்கிறது.

ஆனால், விதிகள் இருப்பதே மீறத்தானே? அளவு வரையறை, எண்ணிக்கைக் கட்டுப்பாடு, கால அவகாசம், சாலை விதிகள் ஆகியவற்றை மீறும் வகையில் பேனர்கள் அமைப்பதே இப்போது நடைமுறையாக இருக்கிறது. இதில் ஆளும் கட்சியினருக்கு என்றுமே சிறப்புரிமை உண்டு.

ஆளும் கட்சியினரே விதிகளை மீறும்போது, பிறரும் அவர்களைத் தொடர்கின்றனர். விளைவாக, விபத்துகளும் பாதிப்புகளும் தொடர்கதையாகின்றன.

தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் அச்சுத் தொழில் வளர்ச்சியையும் யாரும் தவிர்க்க இயலாது. எனினும், கடுமையான விதிகளை உருவாக்குவதும், மீறுவோருக்கான தண்டனைகளை உறுதிப்படுத்துவதும் விபரீதங்களைத் தடுக்கத் தேவையே. பிளக்ஸ் பேனர்களை நிறுவ கண்டிப்பான விதிமுறைகளை உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. இதைச் சரியான நேரத்தில் செய்வதே பொறுப்புள்ள அரசின் கடமையாகும்.

-தினமணி (06.08.2012)
.

Saturday, August 4, 2012

ஜெயமோகனுக்கு ஒரு கடிதமும் பதில் கடிதமும்ஜெ. இணையதளத்தில் சங்கீதா ஸ்ரீராம் புத்தகம் குறித்துப் படித்தேன். அதில் கூறப்பட்டுள்ள பல சம்பவங்கள் உண்மை. ஜெயமோகனின் மனைவி எடுத்த உறுதிமொழி அற்புதம். அதுதொடர்பாக எனக்கு தெரிந்த சில உண்மைகளை குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே குறிக்கோளைத் தவறவிட்டுப் பன்னாட்டு உரம், பூச்சிமருந்து, விதை கம்பெனிகளின் தரகர்களாக மாறிப் பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. கோவையிலுள்ள வேளாண் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ரூ. 4 கோடி பணம் தரப்பட்டதாக தகவல் உண்டு. இந்தப்பணம் அநேகமாகப் பன்னாட்டு நிறுவனத்தின் பணமாகத் தான் இருக்கும். இப்போது பதவியில் இருந்து விலகிய ஒரு துணைவேந்தர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இப்போதும் இந்தக் காலியிடத்துக்கு பலத்த அடிதடி நடக்கிறது.

வேளாண் பல்கலையில் பல செய்தி சேகரிப்பு நிகழ்வுகளுக்கு ஒரு நிருபராக நான் சென்றிருக்கிறேன். அந்த நிகழ்வுகள் சில நிறுவனங்களால் ‘ஸ்பான்சர்’ செய்யப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அந்த நிறுவனங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் உள்ளூர் முகவர்கள். பலகோடி செலவில் இயங்கும் பலகலைக்கழகம் இதுபோன்ற கருத்தரங்குகளை சொந்த செலவில் செய்ய முடியாதா?

முடியும். ஆனால், பல்கலையில் உள்ள தாசர்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதன் பின்விளைவாகவே, மரபணு மாற்றப்பட்ட நெல் எந்த அனுமதியும் இன்றிப் பரிசோதனை முறையில் கோவை வேளாண் பல்கலை வயலில் விளைவிக்கப்பட்டது. அதை எதிர்த்துப் பெரும் போராட்டம் விவசாயிகளால் நடத்தப்பட்டது.

கோவை வேளாண் பல்கலையில் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட பலநூறு பயிர் ரகங்களில் இன்றும் உபயோகத்தில் உள்ளவை எவை என்று கேட்டால் அங்குள்ளவர்களுக்கே தெரியுமா என்பது சந்தேகமே. மொத்தத்தில் ஆராய்ச்சி என்ற பெயரில் அரசு நிதியை விழுங்கவும், ஐ.ஏ.எஸ். படிப்பவர்களுக்கான விவசாயப் பட்டம் வழங்கவும், பன்னாட்டு நிறுவனங்களின் கைப்பாவையாகச் செயல்படவுமே வேளாண் பல்கலைக்கழகங்களால் இயலும்.

பசுமைப் புரட்சி மட்டுமல்ல, இனிவரும் எந்த விவசாய முன்னேற்ற திட்டமும் இத்தகைய முதுகெலும்பற்ற நிறுவனங்களால் நடத்தப்படுமானால் எந்த நற்பயனும் விளைவது சந்தேகமே.

வமுமுரளி

---------------------------------------

அன்புள்ள முரளி

நம்மாழ்வார் அடிக்கடி ஒரு நிகழ்ச்சியைச் சொல்வார்

ஒரு விருந்தில் பரிமாறப்பட்ட திராட்சைப்பழங்களை வேளாண் பல்கலைத் துணைவேந்தர் ஜெயராஜ் உண்ண மறுத்துவிட்டார். அவை ஒரு பூச்சிக்கொல்லிக்குள் ஊறப்போடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்றார். அவற்றுக்குள் பூச்சிக்கொல்லி ஊடுருவியிருக்கும், ஆஸ்துமா உருவாக்கும் என்றார்

ஏன், அந்த மருந்து தீங்கற்றது என்றுதானே பல்கலைக்கழகம் பிரச்சாரம் செய்கிறது என்று நம்மாழ்வார் கேட்டார். அதற்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தாராம்

ஜெ

---------------------------------------

காண்க: ஜெயமோகன் இணையதளம்  (30.07.2012)
.

Monday, July 23, 2012

படக் கவிதை - 04நம்பிக்கை விழுதுகள்

இந்தக் கட்டை வண்டியும்
காரில் ஏறும்
காலம் வராமலா போகும்?
இன்றைய உழைப்பின்
விழுதுகள்
நாளைய நம்பிக்கையில்
வேர்விடும் தருணம்
கட்டைவண்டியின்
கனவுகள் நிறைவேறும்.
இந்தக் கட்டைவண்டியும்
ஒருநாள்
காரில் ஏறும்.Saturday, June 30, 2012

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு?

சந்தர்ப்பவாதம் = அரசியல் 

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.

காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.

அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.

பிரணாப் முகர்ஜியின் திறமைக்காகவும், பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் தான் அவரை ஆதரிப்பதாக முலாயம் சிங் கூறினார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடக் கூடாது என்பதே அவரது தொலைநோக்குப் பார்வை.

இந்த ஞானோதயம், மம்தாவுடன் இணைந்து மிரட்டல் விடுத்தபோது எங்கே போயிருந்தது? இடையில் என்ன நடந்தது? பேரங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இப்போது, முலாயமை நம்பி காங்கிரûஸ எதிர்த்த மம்தா தனிமைப்பட்டு நிற்கிறார்.

நமது ஊடகங்கள் முலாயமின் புத்திசாலித்தனத்தையும் மம்தாவின் முட்டாள்தனத்தையும் விவரித்து செய்திகளை அள்ளி வழங்குகின்றன. அதாவது நம்பகத் தன்மையற்றவராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகிவிட்டது.

முலாயம் சிங்கின் புத்திசாலித்தனம் இப்போது தான் வெளிப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவரது கட்சியின் குட்டிக்கரணங்கள் பிரசித்தமானவை. 2004ல் அயோத்தி நாயகன் கல்யாண் சிங்குடன் குலாவியபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பிறகு அவரையும் நட்டாற்றில் விட்டார் முலாயம்.

1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த முலாயம், திடீரென போர்க்கொடி உயர்த்தி, சோனியாவின் ஆசையில் மண்ணைப் போட்டார். அதன் விளைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சி பகுஜன் சமாஜ். அக்கட்சிக்கும் காங்கிரஸ் அரசியல் எதிரி தான். ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை சிக்கலான தருணங்களில் காத்து வருகின்றன.

மக்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும், நம்பிக்கைத் தீர்மானங்களில் வெல்லவும் காங்கிரஸ் கட்சியை இக்கட்சிகள் என்ன காரணத்துக்காக ஆதரித்தன என்பது சாமானியர்கள் அறியாத புதிர். இவ்விரு கட்சிகளும் கடைசியில் சொல்லும் காரணமோ வேடிக்கையானது. மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதாம். இதைக் கூறியே இக்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன.

இக்கட்சிகள் மட்டுமல்ல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி, மு.கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக போன்ற கட்சிகளும் அடிக்கடி கூறும் அரசியல் பூச்சாண்டி பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே.

நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. முலாயமும், லாலுவும் கூட 1989 தேர்தலில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் தான். பஸ்வானும், கருணாநிதியும், ராம்தாசும், மம்தாவும், நவீன் பட்நாயக்கும், பரூக் அப்துல்லாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். மாயாவதியோ பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசையே நடத்தி இருக்கிறார்.

அவர்களே இன்று பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி முழக்கமிடுவது முரண். நாட்டிலுள்ள 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவே இக்கட்சிகள் நாடகமாடுகின்றன. உடனடி லாபத்துக்காக பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத நமது 'மதச்சார்பற்ற' கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.

'பாஜக' என்ற வார்த்தையைப் பூச்சாண்டியாகக் காட்டியே தேர்தல் களங்களில் வாக்குகளை பல கட்சிகள் அறுவடை செய்கின்றன. அரசியல் களத்தில் தாங்கள் நிகழ்த்தும் கூத்துக்களை நியாயப்படுத்தவும் இக்கட்சிகளுக்கு உதவுவது 'பாஜக' பூச்சாண்டி தான். ஊழலில் திளைக்கும் மத்திய அமைச்சர்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் இதே பூச்சாண்டி தான் உதவி வருகிறது.

இன்றைய அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வேறு கையில் நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு? ஒன்று பாஜக தன் மீதான மதவாதக் கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும். அல்லது, இந்தப் பூச்சாண்டி அச்சத்தைவிட ஆபத்தான அரசியல் கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிடில் ஊழல் அரக்கன் சத்தமின்றி நாட்டை கபளீகரம் செய்துவிடுவான். பூச்சாண்டியா? அரக்கனா? எது ஆபத்தானது? காலத்தின் கரங்களில் பதில் காத்திருக்கிறது.

.
Monday, June 25, 2012

பிராந்தியக் கட்சிகளின் கூட்டணிக்கு அச்சாரம்?

அருண் நேரு
 கூட்டணிக் குழப்பங்கள், கொள்கைத் தடுமாற்றங்கள், கிரேக்கப் பொருளாதார நெருக்கடி, பிரிட்டனில் நிலவும் தொழில் மந்தநிலை போன்ற எதிர்மறையான நிகழ்வுகளிடையே நமது பொருளாதாரமும் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல்கள் வருகின்றன.

இந்த மோசமான நிலையிலும்கூட, நாட்டின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நம்மால் பிரணாப் முகர்ஜியைத் தேர்வு செய்ய முடிந்திருக்கிறது; விரைவில் அவர் தேர்ந்தெடுக்கப்படவும் இருக்கிறார்.

ஓர் அதிசயமான உண்மை என்னவென்றால், பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் கட்சியின் முதல் தேர்வாக இருக்கவில்லை என்பதுதான். எந்த ஒருவரது தகுதியையும் வாய்ப்பையும் வழக்கமான சதிக் கோட்பாடுகள் குலைத்துவிடும். இந்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் பிரணாப் முகர்ஜி அனைவரிடமும் நம்பிக்கை ஏற்படுத்துபவராகவும், எதிர்க்கட்சிகளிடமும் நடுநிலையாகச் செயல்படுபவராகவும் ஒரு நிலையான சக்தியாக விளங்கி வந்திருக்கிறார்.

 சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆரம்பத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் களத்தைப் பற்றி சரிவரப் புரிந்துகொள்ளாமல் தான் இருந்தார். எனினும் ஐக்கிய ஜனதாதளம், அகாலிதளம், சிவசேனா போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலையை சட்டென்று புரிந்துகொண்டார்.

சோனியா காந்தி சரியான நேரத்தில் மிகச் சரியான முடிவெடுத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்போது பிரணாப் முகர்ஜியை அனைவரும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் நல்ல முன்னுதாரணமாக இருக்கும். அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் அனைவரும் கவனம் செலுத்தலாம்.

நமது மக்களாட்சி முறையில் அரசியல் பிரதான அங்கம் வகிக்கிறது. எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் போன்ற வாய்ப்புகளை ஒவ்வொருவரும் தங்கள் தேர்தல் களத்துக்கு சாதகமான வாய்ப்பாகப் பயன்படுத்தவே முயல்வர்.

குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமை முன்னிறுத்திய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, அம்மாநிலத்திலுள்ள சிறுபான்மையினர் வாக்கு தான் குறி. முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மாவை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிறுத்துவதற்கு அம்மாநிலத்திலுள்ள பெருமளவிலான பழங்குடியினரின் வாக்குகள் தான் காரணம். இதில் தமிழ்நாடு முதல்வர் புதிய கூட்டாளியாகச் சேர்ந்திருக்கிறார்.

பா.ஜ.க.வில் நிலவும் குழப்பங்களிலிருந்து தள்ளி நிற்க ஐக்கிய ஜனதாதளம் முயற்சிக்கிறது. சிவசேனாவும் அகாலிதளமும் கூட இதே சேதியைத் தான் கூறி இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நடைமுறைத் தேவை குறைந்திருப்பதையே இவை காட்டுகின்றன.

லோக் ஜனசக்தியும் ராஷ்ட்ரீய ஜனதாதளமும் காங்கிரஸýக்கு துணையாக நிற்கின்றன. இரு கட்சிகளுக்கும் மத்திய அமைச்சரவை மீது நோட்டம். பிகாரில் தனித்து விடப்பட்ட காங்கிரஸýடன் கூட்டணியைப் புதுப்பிக்கவும் இக்கட்சிகள் ஆவலாக இருக்கின்றன. பகுஜன் சமாஜ் கட்சியோ பொறுத்திருந்து முடிவெடுக்கத் தீர்மானித்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி தடுமாறினால் அதன் பலன் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுக்குத் தான் செல்லும்.

தற்போது பெரும்பாலானோர் சுறுசுறுப்பாகிவிட்டனர். விரைவில் நடைபெற உள்ள ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல்களை நோக்கி அனைவர் கவனமும் திரும்ப இருக்கிறது.

1980- 85 காலகட்ட அரசியல் நிகழ்வுகளை என் மனம் அசைபோடுகிறது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவை ஆலோசிக்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். அக்குழுவில் இருந்த மூத்த உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் குடியரசு துணைத் தலைவராகவும் பிற்பாடு குடியரசுத் தலைவராகவும் உயர்ந்தார். அதேபோல அக்குழுவில் இருந்த பி.வி.நரசிம்ம ராவ் பின்னாளில் பிரதமர் ஆனார்.

அக்குழுவின் உறுப்பினராக இருந்த பிரணாப் முகர்ஜி தற்போது குடியரசுத் தலைவர் ஆக இருக்கிறார். இதுவரை, முகர்ஜியை நாடி நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பல பதவிகள் வந்திருக்கின்றன; அனைத்தையும் திறம்பட அவர் நிறைவேற்றி இருக்கிறார். இந்திரா காந்தி இப்போது உயிருடன் இருந்திருந்தால், இவற்றைக் கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பார்.

*****


ஓவ்வொரு அரசியல் நிகழ்வும் ஒரு சேதியைக் கூறுகின்றன. தற்போதைய நிகழ்வைப் பொருத்தவரை, சரியான அரசியல் முடிவு எடுத்ததன் நற்பலனை காங்கிரஸýம் சோனியா காந்தியும் பெறுகின்றனர். அதேசமயம், பா.ஜ.க.வோ குழப்பத்தில் தத்தளிக்கிறது. இதையே, மத்தியில் காங்கிரஸும், மாநிலங்களில் பா.ஜ.க.வும் வலுவாக உள்ளன என்று ஏற்கெனவே நான் குறிப்பிட்டேன். இவ்விரு கட்சிகளில் காங்கிரஸýக்குத் தான் எதிர்காலத்தைக் கையாள்வதற்கான சாதகமான சூழல் காணப்படுகிறது.

பிராந்தியக் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. இதில், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி மட்டுமே சிரம திசையில் தென்படுகிறார். இப்போதும் அவர் நிலவரத்தைப் புரிந்துகொள்ளாவிடில் நஷ்டம் அவருக்குத்தான். அவர் போராளியாக இருக்கலாம். ஆயினும் அவருக்கு இன்னமும் வாய்ப்புகள் உள்ளன.

காங்கிரஸ் இந்த மோதலைத் தவிர்க்கவே விரும்பும். ஏனெனில், சட்டிக்குப் பயந்து அடுப்பில் குதிப்பதை அக்கட்சி விரும்பாது அல்லவா?

இப்போதும் கூட, அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 130 -140 இடங்களில் வெல்லும் என்றும் பா.ஜ.க. 110- 120 இடங்களில் வெல்லும் என்றும் மதிப்பிடுகிறேன். இந்த எண்ணிக்கை, பிராந்தியக் கட்சிகளின் சேர்க்கையைப் பொருத்து மாறுபடலாம். காங்கிரஸ் தனது எண்ணிக்கையை 140 -150 ஆக உயர்த்தவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வுக்கு பிரகாசமான வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

*****

ந்திரப் பிரதேசத்தில் என்ன நடந்திருக்கிறது என்று பாருங்கள். தற்போதைய சூழலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் இந்த வெற்றிக்கு சி.பி.ஐ.யும், ஜெகன்மோகன் கைது, சிறை உள்ளிட்ட நாடகங்களும் தான் காரணம் என்றே நான் நினைக்கிறேன்.

விஷயம் தெரிந்தவர்கள் ஜெகன்மோகன் ரெட்டி எம்.பி.யின் சொத்துக்கள் கண்டு மலைக்கின்றனர். ஆனால், எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவரிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே பொதுவான அபிப்பிராயமாக இருக்கிறது. நானும், அரசியல் போட்டிகளை அரசியல் ரீதியாகத் தான் அணுக வேண்டும்; சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ஆகியவற்றைக் கொண்டல்ல என்று நான் பலமுறை எழுதிச் சலித்துவிட்டேன்.

குலாம் நபி ஆசாத்தும் வயலார் ரவியும் மந்திரவாதிகளல்ல. தவிர, ஆந்திர மாநில காங்கிரஸ் குழுவுக்கு என்ன ஆனது? மாநிலத்தில் வெல்ல முடியாதபோது, அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?

அரசியல் என்பது யதார்த்தத்தை அனுசரித்து நடந்துகொள்வதில்தான் உள்ளது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýக்கும் காங்கிரஸுக்கும் இடையே ஏன் கூட்டணி அமையக் கூடாது? 'மறப்போம், மன்னிப்போம்' பாணியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸýடன் சமரசமாகப் போவதுதான் காங்கிரஸýக்கு நல்லது.

தெலுங்கானா ராஷ்ட்ர சமிதிக்கு தெலங்கானா பகுதியில் நல்ல வரவேற்பு தெரிகிறது. அதேசமயம், தெலுங்குதேசம் கட்சியின் பிடி நழுவி வருகிறது. ஒரு காலத்தில் மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த சந்திரபாபு நாயுடு, இன்று ஜெகன்மோகன் ரெட்டியிடம் களத்தை இழந்து நிற்கிறார். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள 42 மக்களவை இடங்களில் 2009ல் 30க்கு மேற்பட்ட இடங்களை வென்ற காங்கிரஸ், அடுத்த தேர்தலில் 20- 25 இடங்களை இழக்க நேரிடலாம்.

*****

அடுத்து, மத்திய அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்களை நோக்கி உடனடியாக கவனம் திரும்பும். இது தேவையா? தற்போதைய அமைச்சரவைக் குழுவின் பலம், பலவீனங்களை ஆராய்ந்து சரிப்படுத்தினாலே போதும். எஸ்.எம்.கிருஷ்ணா, வீரப்ப மொய்லி, ஏ.கே.அந்தோணி, சரத் பவார், சுஷீல்குமார் ஷிண்டே, விலாஸ்ராவ் தேஷ்முக், குலாம் நபி ஆசாத், வீர்பத்ர சிங் ஆகியோர் மாநில முதல்வர்களாக இருந்து மத்திய அமைச்சர் ஆனவர்கள்; மூத்த அமைச்சர்களாகவும் இருப்பவர்கள். இவர்களை விடத் திறமையானவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டுமா என்ன?

2009க்குப் பின் வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வது ஆட்சி உச்சபட்சத் தன்னிறைவில் திளைத்தது. 2ஜி ஊழல் விவகாரமோ அரசியல் தலைமையில் உச்சகட்டக் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவிர, அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, வெளி விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ஆகியவற்றின் முடிவெடுக்கும் அதிகாரம் குறைக்கப்பட்டு, புதிய அமைச்சர் குழுக்கள் உருவாக்கப்பட்டு சமரசம் செய்துகொள்ளப்பட்டது. இக்குழுக்களில் நிபுணர்களும் வல்லுநர்களும் சேர்க்கப்பட்டனர். அவர்கள் அறிவாளிகளாக இருக்கலாம்; ஆனால், அவர்களால் குழப்பமும், கொள்கை உருவாக்கத்தில் தாமதம் ஏற்பட்டதும் தான் மிச்சம்.

*****

தப்போதைக்கு பிராந்தியக் கட்சிகளின் முனைப்பால், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. அல்லாத முன்னணி உருவாவதற்கான வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிகார் முதல்வர் நிதீஷ்குமார் நரேந்திர மோடியைக் குறிவைத்து வீசியுள்ள குண்டு இதில் முதல் நடவடிக்கையாக உள்ளது. பிராந்தியக் கட்சிகள் ஒருங்கிணைவதில் குழப்பம் இருக்கலாம். ஆனால், அவர்களே எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறுவர்.

அடுத்த தேர்தலில் காங்கிரஸும் பா.ஜ.க.வும் சேர்ந்து 250 இடங்களைப் பிடித்து, பிற கட்சிகள் 280 இடங்களைப் பெறுமானால், பிராந்தியக் கட்சிகளின் கரமே ஓங்கும்.

எதிர்காலத்துக்கான அரசியல் விளையாட்டு முன்கூட்டியே துவங்கிவிட்டது. இதன் காரணமாக பிரணாப் முகர்ஜிக்கு கூடுதல் ஆதரவு கிட்டும் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி: தினமணி (25.06.2012)
.

Thursday, June 21, 2012

எண்ணங்கள்

கோவை பதிவர்கள் சந்திப்பில் நான்


கோவை பதிவர்கள் குழு படத்தில் நானும்  (கண்டுபிடியுங்கள்)

கடந்த ஜூன் 10 ம் தேதி  கோவையில் (ஓரியன் ஓட்டல், கிராஸ் கட் சாலை) நடந்த 'கோவை பதிவர்கள்' சந்திப்பில் கடைசி நேரத்தில் சென்று கலந்துகொண்டேன். நண்பர்கள் சங்கவி, சம்பத், ஜீவா, சுரேஷ், கோவை சக்தி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். 40 க்கு மேற்பட்ட பதிவர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஒரு பதிவர் என்ற முறையில் நானும் பங்கேற்றது  மகிழ்ச்சி.

நிகழ்ச்சியில் நான் பேசியபோது...

''எந்த ஒரு மரமும் ஒரு சிறு விதைக்குள் தான் உறங்குகிறது. மாபெரும் மரம் ஒரு சிறு விதையில் இருந்து தான் துவங்குகிறது. அதுபோல நமது கோவை பதிவர்கள் அமைப்பும் இன்று சிறு சந்திப்பாகத் துவங்கி உள்ளது. நாமும் மாநில அளவில் அனைவருக்கும் வழிகாட்டக் கூடிய விதமாக வளர்வோம்; இணையத்தை வெட்டி அரட்டைக்கான மேடையாக்காமல் நாம் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவோம்'' என்று இக்கூட்டத்தில் நான் பேசினேன்.

கூட்டத்தில் பங்கேற்ற இதர நண்பர்களுக்கும், கூட்டத்தை நடத்திய நண்பர்களுக்கும் நன்றி.

காண்க:

கோவை பதிவர்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு.
கோவை பதிவர்கள் சந்திப்பு - பகுதி 1
கோவை பதிவர்கள் சந்திப்பு - பகுதி 2

எண்ணங்கள்

இடுக்கி மாவட்ட சிபிஎம் தலைவர் மணி

'வாக்குமூலம்' ஏற்படுத்திய சிக்கல்!

''நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்'' என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் எம்.எம்.மணி, கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரியவர். இவர் கடந்த மே 27-ஆம் தேதி தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் எல்லை மீறிப் பேசி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவங்கியவர், டி.பி.சந்திரசேகரன். இவர் கடந்த மே 4-ஆம் தேதி, கோழிக்கோடு அருகே கொல்லப்பட்டார். இவரது படுகொலையில் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கவே தொடுபுழாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் பேசிய அனைத்தும், நோக்கத்துக்கு மாறாகவும், மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கும் சுய வாக்குமூலமாகவும் அமைத்துவிட்டது விந்தைதான்.

"ஆமாம். எங்கள் அரசியல் எதிரிகளை நாங்கள் கொலை செய்துள்ளோம். இதற்காகப் பட்டியல் தயாரித்து வரிசைக்கிரமமாகக் கொன்றோம். இனிமேலும் கொல்வோம்'' என்று தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்துவிட்டார், இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் எம்.எம்.மணி.

அதுமட்டுமல்ல, தங்களை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார் மணி. எதிர்பார்த்தது போலவே இவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. மணியின் பேச்சு முழுவதும் விடியோ பதிவாகி தொலைக்காட்சிகளில் வெளியாகிவிட்டது. இவரது பேச்சின் அடிப்படையில், பழைய கொலை வழக்குகளைத் தூசி தட்டி, எம்.எம்.மணி மீது கொலைச் சதி வழக்கை கேரள மாநில காவல்துறை தொடர்ந்துள்ளது.

மணியின் பேச்சை அவரது அரசியல் குருவான பினராயி விஜயனே ரசிக்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக மணி பேசி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இவரது பேச்சுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான், "மார்க்சிஸ்ட் கட்சி கொலைகாரர்களின் கூடாரமாகிவிட்டது' என்று, முன்னாள் முதல்வரும் பழுத்த மார்க்சிஸ்டுமான வி.எஸ்.அச்சுதானந்தன் குற்றம் சாட்டி இருந்தார். டி.பி.சந்திரசேகரன் கொலையில் தங்கள் கட்சியினர் தொடர்பு கொண்டிருப்பதை அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.

கேரளத்தில் அரசியல் எதிரிகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் பந்தாடுவது புதிதல்ல. மார்க்சிஸ்ட் கட்சியினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் எனப் பல கட்சிகளும் இலக்காகி உள்ளன. ÷

1999-இல் பள்ளி வகுப்பறையிலேயே புகுந்து ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் என்பவரை, அவர் பா.ஜ.க.வைச் சார்ந்தவர் என்பதற்காக, மாணவர்கள் கண்ணெதிரில் மார்க்சிஸ்டுகள் கொலை செய்தனர். இவ்வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் இதுவரை நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் - ஆர்.எஸ்.எஸ். மோதல் கேரளத்தில் அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது.

இவ்வாறாக, வன்முறையை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் நிலையை கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்த தேசியத் தலைமை, இப்போது வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர், தர்ம சங்கடத்துடன் தவிக்கிறது.

மார்க்சிஸ்டுகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், அக்கட்சி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இது, அக்கட்சியின் சித்தாந்தத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒருபுறம் எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்கிற போக்கு. தொழிலாளிகளின் நலனைப் பாதுகாக்க அரசே தயாராக இல்லாத நிலைமை. ஏழை எளியவர்களுக்காகவும், அல்லல்படும் விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினருக்காகவும் குரலெழுப்ப இடதுசாரி இயக்கங்களும் இல்லாமல் போனால், இந்தியாவின் நிலைமைதான் என்ன? வன்முறை மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவது என்று தொடங்கினால், அதற்கு முடிவுதான் என்ன?

மக்களாட்சியில் நம்பிக்கை இருப்பதாக மார்க்சிஸ்டுகள் வாய்கிழியப் பேசியதெல்லாம் பொய்யா? பசுந்தோல் போர்த்திய புலிகளாகவா இருந்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள்.

சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தபோது லட்சக் கணக்கான அரசியல் எதிரிகள் கொல்லப்பட்டது வரலாறு. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும்கூட ஸ்டாலினிடமிருந்து தப்பவில்லை. அங்கு கம்யூனிஸம் காலாவதியாகிப் போனதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அதேபோன்ற நிலையை நோக்கி இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்கிறார்களோ என்கிற சந்தேகம் மேலெழுகிறது.


நன்றி: தினமணி (21.06.2012)
.


Tuesday, June 19, 2012

குழம்பிய குட்டையும் அரசியல் நிர்பந்தங்களும்

அருண் நேரு

கூட்டணி நாடகம் மீண்டும் அரங்கேறிவிட்டது. இதில் தவறொன்றும் கூற முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் சமாஜ்வாதிக்கும் அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட விஷயங்களில் கருத்து வேறுபாடு இருப்பது கூட்டணியில் சகஜம்தான். காங்கிரஸ் கட்சிக்குச் சொந்த அபிலாஷைகள் இருக்கத்தான் செய்யும். அதை நிறைவேற்றவே அக்கட்சி போராடும். அதுபோல திரிணமூல் காங்கிரஸýக்கும் சமாஜ்வாதிக்கும் சொந்தத் திட்டங்கள் இருக்கும். இப்போது ஐ.மு.கூட்டணி- 2 ஆட்சியிலும் காங்கிரஸிலும் நிலவும் குழப்பங்களுக்குத் தீர்வு காணும் பொறுப்பு சோனியா காந்திக்குத்தான் இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயர் அடிபடுவதில் அதிசயமில்லை. எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட யதார்த்தமான அரசியல் களத்தில் இது இப்போது பேசும் பொருளாகி இருக்கிறது. எண்ணிக்கையை எட்ட பிராந்தியக் கட்சிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிராந்தியக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தினால் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு இப்பிரச்னையிலிருந்து மீள முடியும். ஆனால் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சிக்கு இது அறிவுப்பூர்வமான செயலாக இருக்காது.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் அடுத்து காத்திருக்கிறது. அதைவிட முக்கியமானது, நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது என்பதே.

எல்லாவற்றையும் எதிர்மறையாகப் பார்த்துக்கொண்டு வாழ முடியாது. உலகம் மாறிவரும் சூழலில், சூழ்ந்திருக்கும் நிர்பந்தங்களிடையே நாம் மட்டும் தனித்து நிற்க முடியாது. நமது பிரச்னைகள் அனைத்திற்கும் "வெளியிலிருந்து' திணிக்கப்பட்ட சதிக் கோட்பாடுகளை குறை கூறித் தப்ப முடியாது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நல்ல நிர்வாகத்திறன் கொண்ட அரசை நாம் காணவில்லை; பல திசைகளிலிருந்தும் நம்மைக் காயப்படுத்தும் தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தபோதும், பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் எதுவும் நடக்காததுபோல காட்சி அளித்தனர். தற்போது பிரச்னை காலடியில் வந்து நிற்கிறது.

 கருத்து வேறுபாடுகளை அவதூறு பேசுவதன் மூலமாகவோ, பரிகாசம் செய்வதன் மூலமாகவோ, தலைமையைக் குஷிப்படுத்தலாம்; பிரச்னையைக் கட்டுப்படுத்த முடியாது. கூட்டணிக் கட்சிகளிடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததை பாபா ராம்தேவ் விவகாரத்திலேயே பார்த்துவிட்டோம். உண்ணாவிரதம் இருக்க தில்லி வந்திறங்கிய அவரைச் சமாதானப்படுத்த விமான நிலையத்துக்கே அமைச்சர்களும் அமைச்சரவைச் செயலரும் ஓடியதை மறக்க முடியாது.

 இப்போதும் பொருளாதாரம் முழுவதுமாகக் கட்டுக்கடங்காத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடவில்லை. ஐ.மு.கூட்டணி-2க்கு இப்போதும் சிறிது நம்பிக்கை வெளிச்சம் இருக்கிறது. பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் அரசின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க முடியும். பிரதமர் நிதியமைச்சகப் பொறுப்பை ஏற்பாரானால், நல்ல விளைவுகள் ஏற்படும். ஒருவரை ஒருவர் வசை பாடிக்கொண்டிருக்க இது நேரமல்ல; இந்த நெருக்கடியை அனைவரும் சமாளிக்கட்டும்.

 * * * *

 இந்த வாரத்தின் பிரதான செய்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் பாபா ராம்தேவைச் சந்தித்ததுதான். எனினும், செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசைக் குறைகூற ராம்தேவ் துவங்கியவுடன் முலாயம் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டார். இது மிகச் சரியான நடவடிக்கை. இதில் பிற எதிர்க்கட்சித் தலைவர்கள் அறிய வேண்டிய சேதி இருக்கிறது.

யோகா குரு ராம்தேவ் தனது நிறுவனங்களின் நிதிப் பரிமாற்ற நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். அவர் கூறுவதுபோல பழிவாங்கும் நடவடிக்கை ஏதுமில்லை என்றே நான் நினைக்கிறேன். அவருக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் பேசினாலும் ஆச்சரியம்தான். அவருடன் சகவாசம் கொண்டிருப்பது எதிர்காலத்தில் அரசியல் தற்கொலையாகவே முடியும்.

அண்ணா ஹஸôரேவும் பல்வேறு குரல்களில் பேசி வருகிறார். அவரது தார்மிகப் பேச்சுகளைக் கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. நமது இப்போதைய தேவை ஆன்மிகவாதியோ ஒழுக்கத்தைப் போதிக்கும் சர்வாதிகாரியோ அல்ல. சிந்தனையிலும் செயலிலும் தாக்கம் ஏற்படுத்தும் வல்லமை கொண்ட அரசியல் தலைமையே நமது தேவை.

 * * * *

தனிப்பட்ட தலைவர்கள் கசியவிடும் தலைப்புச்செய்திகளுக்காக மின்னணு ஊடகங்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நிதர்சனம் என்னவென்றால், முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் உச்சபட்சக் குழப்பத்தில் உள்ளார்கள் என்பதுதான். சரத் பவார், முலாயம் சிங், ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக், மாயாவதி, நிதீஷ்குமார் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகளும், எண்ணிக்கை விளையாட்டும் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மறுபுறத்தில் காங்கிரஸýம் பாஜகவும் பகடைகளுடன் காத்திருக்கின்றன.

குடியரசுத் தலைவர் யார் என்பதை பிராந்தியக் கட்சிகள் தீர்மானித்துவிட்டால் அதை காங்கிரஸýம் பாஜகவும் வழிமொழிய வேண்டியதுதான். எதிர்காலத்தில் இது பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும் முன்னோடியாக அமையக்கூடும்.

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவுக்குப் பெருமை அளித்த பலரை நாம் பெற்றிருக்கிறோம். பிரணாப் முகர்ஜி, சோம்நாத் சட்டர்ஜி, டாக்டர் கரண் சிங், மீரா குமார், ஹமீத் அன்சாரி, கோபாலகிருஷ்ண காந்தி, பி.ஏ. சங்மா ஆகியோரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்களாக ஊடகங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இவர்கள் அனைவருமே மரியாதைக்குரியவர்கள் மட்டுமல்ல, கவனத்தில் கொள்ள வேண்டியவர்கள்தான்.

இந்தத் தேர்தல் பல எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே காட்டுகிறது எனலாம். "தேர்ந்தெடுக்கப்பட்ட' தலைவர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சிகள் காங்கிரஸ் மற்றும் பாஜகவைவிட அதிக இடங்களில் வருங்காலத்தில் வெல்லக் கூடும். இதையே நான் பல காலமாகக் கூறியும் வருகிறேன்.

எண்ணிக்கையே அரசியல் முடிவுகளைத் தீர்மானிக்கிறது. எனது கணிப்பின்படி அடுத்த தேர்தலில் காங்கிரஸ் 130- 140 இடங்களில் வெல்லலாம்; பாஜகவுக்கு 110- 120 இடங்கள் கிடைக்கலாம். இந்த கணிப்பு காங்கிரûஸப் பொருத்தவரை மேலும் குறையக் கூடும். மகாராஷ்டிரத்திலும் ஆந்திரத்திலும் காங்கிரஸ் கட்சி பலத்த அடி வாங்க வாய்ப்பிருக்கிறது.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலைத் தொடர்ந்து நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் வர வாய்ப்பிருப்பதாகவே நான் நினைக்கிறேன். எனினும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உதவியுடன் பிராந்தியக் கட்சிகள் வெற்றி பெற்றுவிட்டால், இடைத்தேர்தலை மிக விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.

எண்ணிக்கை பலமும் தொடர் நிகழ்வுகளும் பல முடிவுகளைத் தீர்மானித்தால் வியக்க ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் நடந்தேறும் நிகழ்வுகள் குறித்தும், மக்களிடையே அதிருப்தி உணர்வு பெருகிவருவது குறித்தும் நான் ஆச்சரியப்படவில்லை.

இப்போதைக்கு காங்கிரஸ் பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. அடுத்துவரும் நாள்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியமானவை. எதிர்காலத் திட்டமிடல்களும் குழப்பங்களும் சில நேரங்களில் சோர்வும் அரசியல் கட்சிகளை ஆட்கொள்ளலாம். இதுபோன்ற சூழலில்தான், பல தரப்பிடையே சுமுக முடிவுகளை ஏற்படுத்தும் தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் போன்ற நிபுணர்களின் தேவையை உணர்கிறேன்.

சரத் பவார், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா, முலாயம் சிங் ஆகியோரைக் கவனிக்கும்போது, சத்தமின்றி இருக்கும் நிதீஷ்குமாரை மறந்துவிடக் கூடாது. கூட்டணி நிர்பந்தங்கள் மாறும் நிலையில், தோல்வியை எட்டும் நிலையும் வெற்றிக்கான சந்தர்ப்பமாக மாற்ற ஒவ்வொருவருக்கும் வாய்ப்புள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்வு கூட்டணிக் கட்சிகளையும் "நண்பர்'களையும் திருப்திப்படுத்துமானால் சூழல் மாறிவிடும்.

தொலைக்காட்சி சேனல்கள் அரசியல் கணக்குகளுடன் பரபரப்பாக இயங்கும். எனினும் கூட்டல், கழித்தல் கணக்குகளைவிட சூழல் சிக்கலாகவே இருக்கும். ஏனெனில், பலரும் பல திசைகளில் செல்லும்போது, அவர்களது இறுதி ஆதரவு யாருக்கு என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இப்போதைய குழப்பமான அரசியல் நிலவரத்தைக் காணும்போது நல்ல ஹிந்தி திரைப்படம் பார்க்கச் செல்வதே நல்லது என்று தோன்றுகிறது.


நன்றிதினமணி  (18.06.2012)

Tuesday, June 12, 2012

புரிந்தும் புரியாமலும்...

பக்கத்து நாட்டில் குண்டு வெடித்தால்
அது சேதி.
பக்கத்து ஊரில் குண்டு வெடித்தால்
அது பீதி.
பக்கத்திலேயே குண்டு வெடித்தாலேனும்
கிடைக்குமா  நீதி?

கடல் கடந்த சகோதரன் கதறினால்
நமக்கு வேடிக்கை.
அண்டை மாநில சகோதரன் அலறினால்
நமக்கு வாடிக்கை.
மாநாடு கூட்டினால் தீர்ந்தது- 
முழங்குவோம் கோரிக்கை.

வசனங்களில் வாழும் தலைமுறையாக
சபிக்கப்பட்டவர்களுக்கு
விசனங்களில் வீழும் சொந்தங்களைப் பற்றி
சிந்திக்க இல்லை நேரம்.
பிறகு எங்கிருந்து வரும் வீரம்?
எல்லாம் போய்விட்டது தூரம்.

.

Saturday, May 26, 2012

மாற்று ஊடக வாய்ப்புக்களும் நாமும்...
அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு, ஊடங்களின் ஏகபோகம் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனை சாத்தியமாக்கியது, இணையதளம் என்னும் அறிவியலின் அதி அற்புதக் கண்டுபிடிப்பே.

ஒருகாலத்தில் செய்தியை அறிய வேண்டுமானால், பத்திரிகைகளை மட்டுமே சார்ந்திருக்க வேண்டி வந்தது. அச்சு ஊடகங்களின்   பொற்காலம் அது. அதன் பிறகு வானொலி வந்தது. அது சிறிதுகாலம் செய்திப்பசி தீர்த்தது. இந்தியாவில் தொலைக்காட்சிகளின் வசீகர யுகம் துவங்கிய 1990 களில் இருந்து சுமார் 20 ஆண்டுகள் ஊடக சாம்ராஜ்யமாக நிலைகொண்டது தொலைக்காட்சி. 24 X 7 செய்தி அலைவரிசைகளின் வரவால், அச்சு ஊடகத் துறை சற்றே நிலைகுலைந்தது.

முன்னர் பத்திரிகைகளுக்கு வாசகர் ஒரு துணுக்கு எழுதி அனுப்பிவிட்டு காத்திருப்பார். அது பிரசுரமானால் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பல நேரங்களில்  வாசகர்கள் பத்திரிகைகளால் மதிக்கப்பட்டதில்லை. தங்கள் நுகர்வோர் வாசகர்களே என்ற அடிப்படை உண்மையை மறந்து, தன்னிச்சையாக செயல்படும் பத்திரிகைகளை இன்றும் காண முடிகிறது.

பெரும்பாலான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஏதாவது ஒருபக்கச் சார்புடன் தான் இயங்குகின்றன. 'தினமணி' போன்ற நாட்டுநலன் கருதும் பத்திரிகைகள்  இருக்கும் இடத்திலேயே தான் 'தி ஹிந்து' போன்ற பத்திரிகைகளும் இருக்கின்றன என்பது நெருடல் அளிப்பது. நமது நாட்டைவிட எதிரி நாட்டை நேசிக்க,  இது போன்ற பத்திரிகைகளைப் படிப்பவர்கள் நிர்பந்தப்படுத்தப் படுகிறார்கள்.

இதே போக்குத்தான் செய்தி அலைவரிசைகளிலும் காணக் கிடைக்கிறது. அரைத்த மாவையே ஒரு மணிநேர இடைவெளியில் தொடர்ந்து அரைக்கும் சாதுரியம் கொண்டவை நமது தொலைக்காட்சிகள். நாட்டின் அரசியலையே தாங்கள் தான் நடத்துவதாக சில சேனல்கள் நம்பித் திரிகின்றன. சுயநல நோக்குடன் வெளியிடும் செய்திகளால் நாட்டுக்கு தீராத பாதிப்பை ஏற்படுத்தும் ஆங்கில செய்தி சேனல்கள் குறித்து தீர ஆராய வேண்டி இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அமைச்சரவையில் ஊழல் பெருச்சாளி ஒருவரை சேர்க்க சில பத்திரிகையாளர்கள் பாடுபட்ட விஷயம் அம்பலமானபோது நாடு அதிர்ந்தது.

தமிழ் சேனல்களோ அழுமூஞ்சித் தொடர்களால் நமது வீட்டுப் பெண்களைக் கட்டிப் போட்டிருக்கின்றன. வானொலி இப்போது அருகி வரும் சாதனம் ஆகிவிட்டது. சினிமா, நாடகத் தொடர்கள், வெறுப்பூட்டும் அரட்டைகள், என்று தமிழ் சேனல்கள் நோக அடிக்கின்றன.

இந்நிலையில், தகவல் தொடர்பு யுகத்தின் அனைத்து வசதிகளையும் பெற்றுள்ள இளைய தலைமுறையினருக்கான மாற்று ஊடகமாக இணையம் உருவாகி இருக்கிறது. இன்று தனது கருத்தை யாரும் தெரியப்படுத்த இணையம் சுதந்திரம் வழங்கி இருக்கிறது. தனது கருத்தை வெளிப்படுத்த பாரம்பரியமான ஊடகங்களை யாரும் சார்ந்திருக்கத் தேவையில்லை.

பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் சுயநலனுடனும், தன்னிச்சையாகவும் செயல்பட்ட நிலையில், அதன் செய்திப் பிதற்றல்கள கண்டு நொந்திருந்த வாசகருக்கு ஒரு வாய்ப்பாக சமூக இணையதளங்கள் முளைத்துள்ளன. இன்று உலகம் முழுவதுமே இதே நிலையைக் காண முடிகிறது. அதன் காரணமாக, பாரம்பரிய ஊடகங்களும் இணைய உலகில் நுழைந்துள்ளன. இணையக்   கருத்துக்களை அச்சேற்றுவதும் இப்போது துவங்கி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம்.

இன்று முகநூல்  (FACEBOOK) முகவரி இல்லாத இளைஞரைக் காண்பது அரிது; வலைப்பூ (BLOGS) நடத்தாத இளம் தலைமுறையைக் காண இயலாது. நிரந்தர இணையதள முகவரி, இப்போது வேலைக்காக  விண்ணப்பிக்கும் இளைஞர்களின் வின்னப்பங்களிலேயே இடம்பெறத் துவங்கிவிட்டது. மின்னஞ்சல் முகவரி நமது உலகின் முகவரியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது. சிறு தகவல் பரிமாற்றம் (TWITTER) நடக்கும் யுகம் இது. இணையத்தின் அனைத்து வசதிகளையும் ஆர்வத்துடன் உள்வாங்குவதில் நமது இளைஞர்களும் இளைஞிகளும் உலகில் யாருக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல. சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஊழலுக்கு எதிராக டில்லியில் உண்ணாவிரதம் இருந்தபோது நாடு முழுவதும் ஏற்பட்ட விழிப்புணர்வுக்கு அடித்தளமாக இருந்தவை சமூக இணையதளங்களே.

சமூக வலைத்தளங்களில் பங்கேற்கும்போதே, ஒருவரது சமூகப் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது. உலகிற்கு தனது கருத்தைத் தெரியப்படுத்தத் துடிக்கும் விழைவே சமூகத் தளங்களில் வெளிப்படுகிறது. இணையத்தில் இவ்வாறு இயங்கும் இளைஞர்கள் ஆங்காங்கே ஓர் அமைப்பாக இணைவதும் இப்போது ஒரு நடைமுறையாக  மாறி வருகிறது.

பல்வேறு  சிந்தனை கொண்டவர்கள், பலவித கொள்கைகளைக் கொண்டவர்கள், மதம், ஜாதி, அரசியல், மொழி என பல விதங்களில் மாறுபட்டவர்கள் - அனைவரும் இணையம் என்ற ஒற்றைத் தொடர்பால் நண்பர்களாகி ஒருங்கிணைவது நல்ல மாற்றம்.  அந்த வகையில் இப்போது கோவையில் இயங்கும் வலைப்பூ பதிவர்கள் அனைவரும் 'கோவை பதிவர்கள்' என்ற குழுமமாக இணைவது  மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜவுளி நகரமாக ஒருகாலத்தில் விளங்கிய கோவை தற்போது தொழில்நகரமாக உருவெடுத்திருக்கிறது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகராகவும், கல்வி, மருத்துவத்தில் உயர்ந்துவரும் நகராகவும் உள்ள கோவை இலக்கிய உலகிலும் பல பதிவுகளைக் கொடு வளர்ந்து வருகிறது. இத்தகைய பெருமை கொண்ட கோவையை மையமாகக் கொண்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, உதகை மாவட்டங்களில் செயல்படும் பதிவர்களை இணைக்கும் பசையாக 'கோவை பதிவர்கள்' அமைப்பு  செயல்பட முடியும். இந்தச் சிந்தனை மனதில் தோன்றிய நண்பர்களுக்கும், அதை நனவாக்கும் நண்பர்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

இந்த அமைப்பு, ஓர் மின்னஞ்சல் குழுமமாக மட்டுமல்லாது, வலைப்பூ தொகுப்பாளர்களாகவும் வளர்ச்சி பெற வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நமது கருத்துக்களை தத்தமது வலைத் தளங்களில் வெளிப்படுத்தி, மானுட ஞானத்தை மேலும் விரிவாக்குவோம். நாம் ஒருவரை ஒருவர் பாராட்டியும் விமர்சித்தும்,  நம்மை நாமே பட்டை தீட்டிக் கொள்வோம்.

மாறிவரும் உலகின் தேவைகளை விவாதித்து அறியவும், சமூகச் சீரழிவுகளைக் கண்டிக்கவும், மாற்றத்துக்கான விதைகளை தூவவும், நல்ல விஷயங்கள் எத்திசையில் இருந்து வந்தாலும் அவற்றைக் கிரஹிக்கவும், நமது கலாச்சாரம் காக்கவும்,  நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், இணையத்தை ஆக்கப்பூர்வமான சக்தியாகப் பயன்படுத்துவோம்.

இது தொடர்பாக நண்பர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். நன்றி.(கோவை பதிவர்கள் மின்னஞ்சல் குழுமத்தில் எழுதியது)
 .