Thursday, June 21, 2012

எண்ணங்கள்

இடுக்கி மாவட்ட சிபிஎம் தலைவர் மணி

'வாக்குமூலம்' ஏற்படுத்திய சிக்கல்!

''நீ சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், அதைச் சொல்வதற்கு உனக்குள்ள உரிமையைக் காக்க இறுதி வரை போராடுவேன்'' என்றார், பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட வால்டேர். இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை. கருத்துச் சுதந்திரம் இல்லாத தேசங்களில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதையே காண்கிறோம்.

நமது நாடு ஜனநாயக நாடு; தேர்தல்கள் மூலம் அமைதியான முறையில் ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தும் நாடு. அதற்காக வாக்காளரிடம் பிரசாரம் செய்யவும், வாக்குச் சேகரிக்கவும், தேர்தலில் போட்டியிடவும் அனைவருக்கும் உரிமை உண்டு. பேச்சுரிமை, எழுத்துரிமை, வழிபாட்டு உரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமை ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படை அலகுகளாகக் கருதப்படுகின்றன. இவற்றில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மீதான நம்பிக்கை பாதிப்புக்கு உள்ளாகும்.

இந்நிலையில், ஜனநாயக முறையில் நம்பிக்கை வைத்திருப்பதாக பிரமாணப் பத்திரம் அளித்து தேசிய அரசியல் கட்சியாகப் பதிவு செய்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர் ஒருவர் கேரளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பலத்த சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டத் தலைவர் எம்.எம்.மணி, கேரள மாநிலச் செயலாளர் பினராயி விஜயனின் நம்பிக்கைக்குரியவர். இவர் கடந்த மே 27-ஆம் தேதி தொடுபுழாவில் நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் எல்லை மீறிப் பேசி இருக்கிறார்.

2008-ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைத் துவங்கியவர், டி.பி.சந்திரசேகரன். இவர் கடந்த மே 4-ஆம் தேதி, கோழிக்கோடு அருகே கொல்லப்பட்டார். இவரது படுகொலையில் தொடர்பு இருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இதற்கு விளக்கம் அளிக்கவே தொடுபுழாவில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால், இதில் கட்சியின் மாவட்டத் தலைவர் பேசிய அனைத்தும், நோக்கத்துக்கு மாறாகவும், மார்க்சிஸ்ட் கட்சி அளிக்கும் சுய வாக்குமூலமாகவும் அமைத்துவிட்டது விந்தைதான்.

"ஆமாம். எங்கள் அரசியல் எதிரிகளை நாங்கள் கொலை செய்துள்ளோம். இதற்காகப் பட்டியல் தயாரித்து வரிசைக்கிரமமாகக் கொன்றோம். இனிமேலும் கொல்வோம்'' என்று தன்னிலை மறந்து கொட்டித் தீர்த்துவிட்டார், இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் எம்.எம்.மணி.

அதுமட்டுமல்ல, தங்களை எதிர்த்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்றும் விளக்கமாக எடுத்துரைத்தார் மணி. எதிர்பார்த்தது போலவே இவரது பேச்சுக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் சுயரூபம் வெளிப்பட்டிருப்பதாக காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. மணியின் பேச்சு முழுவதும் விடியோ பதிவாகி தொலைக்காட்சிகளில் வெளியாகிவிட்டது. இவரது பேச்சின் அடிப்படையில், பழைய கொலை வழக்குகளைத் தூசி தட்டி, எம்.எம்.மணி மீது கொலைச் சதி வழக்கை கேரள மாநில காவல்துறை தொடர்ந்துள்ளது.

மணியின் பேச்சை அவரது அரசியல் குருவான பினராயி விஜயனே ரசிக்கவில்லை. கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக மணி பேசி இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இவரது பேச்சுக்கு ஒரு வாரம் முன்னதாகத்தான், "மார்க்சிஸ்ட் கட்சி கொலைகாரர்களின் கூடாரமாகிவிட்டது' என்று, முன்னாள் முதல்வரும் பழுத்த மார்க்சிஸ்டுமான வி.எஸ்.அச்சுதானந்தன் குற்றம் சாட்டி இருந்தார். டி.பி.சந்திரசேகரன் கொலையில் தங்கள் கட்சியினர் தொடர்பு கொண்டிருப்பதை அவர் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டினார்.

கேரளத்தில் அரசியல் எதிரிகளை மார்க்சிஸ்ட் கட்சியினர் பந்தாடுவது புதிதல்ல. மார்க்சிஸ்ட் கட்சியினரின் கொலைவெறித் தாக்குதலுக்கு காங்கிரஸ், பா.ஜ.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் எனப் பல கட்சிகளும் இலக்காகி உள்ளன. ÷

1999-இல் பள்ளி வகுப்பறையிலேயே புகுந்து ஆசிரியர் ஜெயகிருஷ்ணன் என்பவரை, அவர் பா.ஜ.க.வைச் சார்ந்தவர் என்பதற்காக, மாணவர்கள் கண்ணெதிரில் மார்க்சிஸ்டுகள் கொலை செய்தனர். இவ்வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

குறிப்பாக, முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் சொந்த மாவட்டமான கண்ணூரில் இதுவரை நூற்றுக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் - ஆர்.எஸ்.எஸ். மோதல் கேரளத்தில் அன்றாட நிகழ்வாகவே மாறிவிட்டது.

இவ்வாறாக, வன்முறையை மட்டுமே நம்பி அரசியல் நடத்தும் நிலையை கேரள மார்க்சிஸ்ட் கட்சியினர் மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போதெல்லாம் கண்டும் காணாமல் இருந்த தேசியத் தலைமை, இப்போது வெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர், தர்ம சங்கடத்துடன் தவிக்கிறது.

மார்க்சிஸ்டுகள் ஆண்ட கேரளத்திலும் மேற்கு வங்கத்திலும், அக்கட்சி மீது இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்கின்றன. இது, அக்கட்சியின் சித்தாந்தத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.

ஒருபுறம் எங்கும் தனியார் மயம் எதிலும் தனியார் மயம் என்கிற போக்கு. தொழிலாளிகளின் நலனைப் பாதுகாக்க அரசே தயாராக இல்லாத நிலைமை. ஏழை எளியவர்களுக்காகவும், அல்லல்படும் விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், பாட்டாளி வர்க்கத்தினருக்காகவும் குரலெழுப்ப இடதுசாரி இயக்கங்களும் இல்லாமல் போனால், இந்தியாவின் நிலைமைதான் என்ன? வன்முறை மூலம் அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவது என்று தொடங்கினால், அதற்கு முடிவுதான் என்ன?

மக்களாட்சியில் நம்பிக்கை இருப்பதாக மார்க்சிஸ்டுகள் வாய்கிழியப் பேசியதெல்லாம் பொய்யா? பசுந்தோல் போர்த்திய புலிகளாகவா இருந்திருக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள் என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள்.

சோவியத் ரஷியாவில் ஸ்டாலின் அதிபராக இருந்தபோது லட்சக் கணக்கான அரசியல் எதிரிகள் கொல்லப்பட்டது வரலாறு. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்களும்கூட ஸ்டாலினிடமிருந்து தப்பவில்லை. அங்கு கம்யூனிஸம் காலாவதியாகிப் போனதற்கு ஸ்டாலினும் ஒரு காரணம். அதேபோன்ற நிலையை நோக்கி இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செல்கிறார்களோ என்கிற சந்தேகம் மேலெழுகிறது.


நன்றி: தினமணி (21.06.2012)
.


No comments:

Post a Comment