சந்தர்ப்பவாதம் = அரசியல் |
அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளரைத் தீர்மானிப்பதற்கு முன் நடந்த அரசியல் கூத்துக்கள் அனைவருக்கும் தெரியும். பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் அறிவிப்பதற்கு முன்னதாக, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கும் திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியும் ஓர் அரசியல் அதிரடியை நிகழ்த்தினர்.
காங்கிரஸ் கட்சி முன்வைத்த உத்தேச வேட்பாளர்களின் பெயர்களை நிராகரித்த இவ்விருவரும் முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம், முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத்தினர். இது குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பரபரப்பு திருப்பத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே, பிரணாப் முகர்ஜியின் பெயரை காங்கிரஸ் அவசரமாக அறிவித்தது.
அதன் பிறகு நடந்ததை நாடு அறியும். மம்தாவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த முலாயம் சிங், ஒரேநாள் இரவில் அந்தர்பல்டி அடித்து மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அதற்கு அவர் கூறிய காரணம் தான் நகைச்சுவை.
பிரணாப் முகர்ஜியின் திறமைக்காகவும், பாஜக வென்றுவிடக் கூடாது என்பதற்காகவும் தான் அவரை ஆதரிப்பதாக முலாயம் சிங் கூறினார். அதாவது, குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் தோற்றுவிடக் கூடாது என்பதே அவரது தொலைநோக்குப் பார்வை.
இந்த ஞானோதயம், மம்தாவுடன் இணைந்து மிரட்டல் விடுத்தபோது எங்கே போயிருந்தது? இடையில் என்ன நடந்தது? பேரங்கள் ஆட்சி செய்யும் அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். இப்போது, முலாயமை நம்பி காங்கிரûஸ எதிர்த்த மம்தா தனிமைப்பட்டு நிற்கிறார்.
நமது ஊடகங்கள் முலாயமின் புத்திசாலித்தனத்தையும் மம்தாவின் முட்டாள்தனத்தையும் விவரித்து செய்திகளை அள்ளி வழங்குகின்றன. அதாவது நம்பகத் தன்மையற்றவராக இருப்பதே புத்திசாலித்தனம் ஆகிவிட்டது.
முலாயம் சிங்கின் புத்திசாலித்தனம் இப்போது தான் வெளிப்பட்டுள்ளதாகக் கூற முடியாது. அவரது கட்சியின் குட்டிக்கரணங்கள் பிரசித்தமானவை. 2004ல் அயோத்தி நாயகன் கல்யாண் சிங்குடன் குலாவியபோதுதான் அவரது சுயரூபம் வெளிப்பட்டது. பிறகு அவரையும் நட்டாற்றில் விட்டார் முலாயம்.
1999ல் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தபோது சோனியா காந்தி பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் அதற்கு சம்மதித்த முலாயம், திடீரென போர்க்கொடி உயர்த்தி, சோனியாவின் ஆசையில் மண்ணைப் போட்டார். அதன் விளைவாகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வர முடிந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் செயல்படுகிறது. இங்கு பிரதான எதிர்க்கட்சி பகுஜன் சமாஜ். அக்கட்சிக்கும் காங்கிரஸ் அரசியல் எதிரி தான். ஆனால், நாடாளுமன்றத்தில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை சிக்கலான தருணங்களில் காத்து வருகின்றன.
மக்களவையில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றவும், நம்பிக்கைத் தீர்மானங்களில் வெல்லவும் காங்கிரஸ் கட்சியை இக்கட்சிகள் என்ன காரணத்துக்காக ஆதரித்தன என்பது சாமானியர்கள் அறியாத புதிர். இவ்விரு கட்சிகளும் கடைசியில் சொல்லும் காரணமோ வேடிக்கையானது. மதவாத பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதாம். இதைக் கூறியே இக்கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன.
இக்கட்சிகள் மட்டுமல்ல, லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், பஸ்வானின் லோக் ஜனசக்தி, மு.கருணாநிதியின் திமுக, ராமதாஸின் பாமக போன்ற கட்சிகளும் அடிக்கடி கூறும் அரசியல் பூச்சாண்டி பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதே.
நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டுள்ளன. முலாயமும், லாலுவும் கூட 1989 தேர்தலில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டவர்கள் தான். பஸ்வானும், கருணாநிதியும், ராம்தாசும், மம்தாவும், நவீன் பட்நாயக்கும், பரூக் அப்துல்லாவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான். மாயாவதியோ பாஜகவுடன் இணைந்து உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அரசையே நடத்தி இருக்கிறார்.
அவர்களே இன்று பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி முழக்கமிடுவது முரண். நாட்டிலுள்ள 20 சதவீதத்துக்கு மேற்பட்ட சிறுபான்மையினரின் வாக்குகளைக் கவரவே இக்கட்சிகள் நாடகமாடுகின்றன. உடனடி லாபத்துக்காக பாஜகவுடன் கைகோர்க்கத் தயங்காத நமது 'மதச்சார்பற்ற' கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக பாஜகவை விமர்சிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன.
'பாஜக' என்ற வார்த்தையைப் பூச்சாண்டியாகக் காட்டியே தேர்தல் களங்களில் வாக்குகளை பல கட்சிகள் அறுவடை செய்கின்றன. அரசியல் களத்தில் தாங்கள் நிகழ்த்தும் கூத்துக்களை நியாயப்படுத்தவும் இக்கட்சிகளுக்கு உதவுவது 'பாஜக' பூச்சாண்டி தான். ஊழலில் திளைக்கும் மத்திய அமைச்சர்கள் தப்பிப் பிழைத்திருப்பதற்கும் இதே பூச்சாண்டி தான் உதவி வருகிறது.
இன்றைய அரசியல் சூழலில் பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால் பாஜகவை தனிமைப்படுத்த அரசியல் தீண்டாமையைக் கடைப்பிடிப்போர் அனைவரும் வேறு கையில் நாட்டிற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
இந்தப் பூச்சாண்டி இன்னும் எத்தனை நாளுக்கு? ஒன்று பாஜக தன் மீதான மதவாதக் கறையைப் போக்கிக்கொள்ள வேண்டும். அல்லது, இந்தப் பூச்சாண்டி அச்சத்தைவிட ஆபத்தான அரசியல் கோமாளித்தனங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
இல்லாவிடில் ஊழல் அரக்கன் சத்தமின்றி நாட்டை கபளீகரம் செய்துவிடுவான். பூச்சாண்டியா? அரக்கனா? எது ஆபத்தானது? காலத்தின் கரங்களில் பதில் காத்திருக்கிறது.
.
No comments:
Post a Comment