Sunday, March 27, 2011

புதுக்கவிதை - 142



சாத்தியங்களின் தரிசனம்


.

ஏறவோ எட்டவோ இயலாத நெடுநெடு மரத்தில் தொற்றி பப்பாளியை சுவைக்கிறது அணில். .

வழி புலப்படாத அடர் கானகத்தின் அகன்று விரிந்த மரக்கிளையின் உச்சாணிக் கொம்பில் கூடு கட்டுகிறது குருவி.

கண்ணுக்குப் புலப்படாத மண் புற்றிலிருந்து பொங்கி வருகிறது ஈசல்.

.

Friday, March 25, 2011

எண்ணங்கள்


திருப்பூர் திருப்பம் நிகழ்த்துமா?

திருப்பூர் தொழில்துறையின் பிரச்னைகளுக்கு தீர்வு காணாத அரசைக் கண்டித்து, திருப்பூர்- வடக்கு, தெற்கு தொகுதிகளில் தலா ஆயிரம் வேட்பாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது அரசியல் கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் இந்த அதிரடி முயற்சி சாத்தியமாகுமா என்ற கேள்விக்கு வேட்புமனு தாக்கல் முடியும்போது தான் பதில் கிடைக்கும். அதேசமயம், இந்த நூதனப் போராட்டம், இப்போதே அரசியல் வட்டாரத்தில் தேவையான தாக்கத்தை ஏற்படுத்தத் துவங்கிவிட்டது.

பொதுவாக, ஜனநாயக நாட்டில் தேர்தல் புறக்கணிப்பு என்பது அங்கீகரிக்கப்பட்ட முறையாகவே இருந்துவருகிறது. மக்களின் நீண்டநாள் பிரச்னைகளை அரசாங்கங்கள் கண்டுகொள்ளாதபோது, தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று மக்கள் அறிவிப்பதும், அவர்களை அரசியல் கட்சிகள் சமாதானப்படுத்துவதும் நடைமுறை.
.
ஆனால், தேர்தல் புறக்கணிப்பையே 1996ல் புதிய வடிவத்திற்கு மாற்றியது ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி.
.
விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டுடன் விவசாயிகள் சங்கம் களமிறங்கியதால், 1,033 வேட்பாளர்கள் போட்டியில் குதித்தனர். அதன் விளையாக, மொடக்குறிச்சி தொகுதிக்கு மட்டும் பேரவைத் தேர்தல் தனியே நடத்தப்பட வேண்டியதாயிற்று.

அப்போதைய தேர்தல் ஆணையர் டிஎன்.சேஷன் இந்த நூதனப் போராட்டத்தை சவாலாக ஏற்று, 120 பக்கங்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகளுடன் தேர்தலை நடத்திக் காட்டினார். எனினும், விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நாடு முழுவதும் கவனத்தைக் கவர்ந்ததாக இத்தேர்தல் இருந்தது எனில் மிகையில்லை.

தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணிப்பதும், தேர்தலில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடுவதும், நமது தேர்தல் நடைமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இவை மக்களின் அதிருப்தியை வெளிக்காட்டும் சின்னங்களே. திருப்பூரில் ஆயிரக் கணக்கான வேட்பாளர்கள் தேர்தல் களம் காண்பதையும், அவர்களது ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே கருத வேண்டும்.

திருப்பூர் நகரம், குறுகிய காலத்தில் பிரமாண்டமாக வளர்ந்த தொழில் நகரம். பின்னலாடை உற்பத்தி- ஏற்றுமதி மூலமாக உலக வர்த்தக வரைபடத்தில் இடம்பெற்றுள்ள திருப்பூர், தொழில்முனைவோரின் சுயமுயற்சியால்தான் இந்த அளவுக்கு முன்னேறியுள்ளது. இந்நகரின் தொழில் வளர்ச்சியில் அரசின் பங்களிப்பு மிகவும் குறைவு. அதேசமயம், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் தேர்தல்நிதி அளிக்கும் காமதேனுவாக திருப்பூர் விளங்கி வந்திருக்கிறது.

அப்படிப்பட்ட திருப்பூரின் தொழில்நலத்திற்கு சிக்கல் நேரிட்டிருக்கும் நிலையில், அரசும் பிற அரசியல் கட்சிகளும் தங்களைக் கைவிட்டுவிட்டதாக திருப்பூரில் பொதுவான ஒரு வருத்தம் இருக்கவே செய்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே திருப்பூர் தொழில்துறை சந்தித்துள்ள சோதனைகள் ஏராளம். அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம், டிரைவேட்டிவ் ஒப்பந்த பாதிப்பு, பருத்தி ஏற்றுமதியால் நூல்விலை கிடுகிடுவென உயர்வு, மின்வெட்டால் பின்னலாடை உற்பத்தி சீர்குலைவு, மூலப்பொருள்கள் விலை அதிகரிப்பு, சரக்கு போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வு என பல்வேறு சிக்கல்களில் தவித்து வந்தது பின்னலாடைத் தொழில்துறை.

இவை அனைத்திற்கும் சிகரம் போல, சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம்காட்டி, அனைத்து சாய, சலவை ஆலைகளை மூடுமாறு அண்மையில் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு, பின்னலாடைத் தொழில்துறையை மேலும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயமற்ற எதிர்காலம் காரணமாக, பல்லாயிரக் கணக்கான வெளிமாவட்டத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் துவங்கிவிட்டனர். கடந்த ஒரு மாதத்தில் திருப்பூரின் மிடுக்கு குறைந்திருப்பதை உணர முடிகிறது.

இந்நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல பின்னலாடைகள் மீதான கலால் வரி மத்திய அரசால் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்னைகளை எதிர்க்க வேண்டிய தொழில்துறை சங்கங்கள் பல்வேறு காரணங்களால் அமைதியாக இருப்பதும், கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யாததுமே, திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவின் உதயத்திற்கு வித்திட்டுள்ளது.

இக்குழுவில் சிறு தொழிற்சாலை உரிமையாளர்களும் தொழிலாளர்களும் இணைந்து போராடி வருகின்றனர். பல்லாயிரக் கணக்கில் திரண்ட பின்னலாடை நிறுவன உரிமையாளர்களின் வீட்டுப் பெண்கள் மூன்று நாட்கள் நடத்திய போராட்டம், திருப்பூர் தொழில்துறையினரே எதிர்பாராதது. அதன் அடுத்தகட்டமாகவே, திருப்பூர் தொகுதிகளில் ஆயிரக் கணக்கான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தற்போது அறிவித்துள்ளனர்.

இந்தப் போராட்ட அணுகுமுறையை திருப்பூர் பெரும் தொழிலதிபர்கள் விரும்பவில்லை. அரசுடனும் அரசியல் கட்சிகளுடனும் சுமுக உறவை விரும்பும் அவர்கள், தங்களை இந்தப் போராட்டத்திலிருந்து விலக்கிக் கொள்ளவே விரும்புகின்றனர். இதுவரை சுயேச்சையாக மனு தாக்கல் செய்துள்ள திருப்பூர் தொழில் பாதுகாப்புக் குழுவினர் பலரும் சாதாரணத் தொழிலாளர்களே என்பது குறிப்பிடத் தக்கது.

இக்குழுவினர் எதிர்பார்ப்பது போல ஆயிரக் கணக்கானோர் திருப்பூரின் இரு தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வார்களானால், இத்தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய நிலை உருவாகும். இந்நிலையைத் தவிர்க்க பல்வேறு கட்சிகள் முயன்று வருகின்றன.

எது எப்படியாயினும், திருப்பூர் தொழிலாளர்கள் சுயேச்சையாக தேர்தல் களம் காண்பது ஆக்கப்பூர்வமானதாகவே உள்ளது. தேர்தலைப் புறக்கணிப்பதைவிட தேர்தலை சவாலானதாக மாற்றி நாட்டின் கவனத்தை ஈர்ப்பது தான் இவர்களது இலக்காக உள்ளது. இவர்களது போராட்டம் வெல்லுமா? காலம் தான் பதில் கூற வேண்டும்.

நன்றி: தினமணி (25.03.2011)
தலையங்கப் பக்க துணைக் கட்டுரை

.

Thursday, March 24, 2011

சிந்தனைக்கு


குறள் அமுதம்

உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
-திருவள்ளுவர்
(நாடு- 734)

Wednesday, March 23, 2011

எண்ணங்கள்


முட்டுச்சந்தில் தவிக்கும் தமிழகம்


தமிழகத்தில் தேர்தல் களை கட்டிவிட்டது. ஆனால், கொள்கையை விற்ற கூட்டணிக் குழப்பங்களால் வாக்காளர்கள் திகைப்படைந்திருக்கிறார்கள். அவர்களது வாக்குகளை தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் ஆளும்கட்சியே விலை பேசி இருக்கிறது.
.
மற்றொரு புறம், முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இருமாதகால அரசியல் துறவறம் பூண்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களின் உயிர்பலி கூட இங்கு அரசியல் லாபத்திற்குரிய விஷயமாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது.
.
இந்நிலையில் வாக்காளர்களைத் தெளிய வைக்கும் முயற்சியாக, மூத்த அரசியல் தலைவர் திரு. பழ.நெடுமாறன் எழுதிய கட்டுரை இன்றைய தினமணி நாளிதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரை உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டியது.
.
(தினமணி- 23.03.2011)
.
பத்திரிகையாளர் திரு. சேக்கிழான் தனது வலைப்பூவில் எழுதியுள்ள கட்டுரையும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரத்தை அலசுகிறது. இக்கட்டுரையும் சிறிது தெளிவை அளிக்கிறது.
.
(எழுதுகோல் தெய்வம்- 23.03.2011)
.
குழப்பத்திற்குப் பிறகு தெளிவு பிறக்குமானால், தமிழகத்திற்கு நல்லது. இல்லாவிடில், ஜனநாயக சோதனைச்சாலையில் மேலும் சில ஆண்டுகளுக்கு நாம் சோதனைக்கு ஆட்பட வேண்டியதுதான்.

உருவக கவிதை - 65



அஸ்தியில்

கனவுகள்

கலப்போம்!






உறையாத ரத்தத்தின்

வாசம் எங்கும்.

வெடிக்காத குண்டின்

நெடி இன்னமும்.

வெல்லாத போரின்

வருத்தும் நினைவுகள்

என்றும் எங்கும்.



தூக்குக் கயிற்றை

முத்தமிட்ட இளைஞர்களின்

இறுதி ஆசைகள்

நிறைவேறாத கனவுகள்.

விடுதலை வேள்வியில்

ஆகுதியான வீரர்களின்

சாம்பல் மீது எழுந்த

கட்டடம் சரிகிறது.



சாம்பலின் வீரியம் உணராமல்

கற்களைப் பிணைத்த

அரசியல் கலவையால்...

ரசமட்டம் தவிர்த்த மேதமையால்...

சரியும் கட்டடத்திற்கு

காரணமாயிரம்.


இப்போதும் கட்டடத்தைக் காப்பாற்றலாம்-

அஸ்திவாரத்தில்

அவர்களது கனவுகளைக் கலந்தால்.



இன்று: மாவீரர்கள் பகத் சிங், சுகதேவ், சுகதேவ் ஆகியோர் ஆங்கிலேயனை எதிர்த்து தூக்குமேடை ஏறிய நாள்.

Tuesday, March 22, 2011

எண்ணங்கள்






நாற்றங்காலில் அழுகல் நாட்டிற்கு நல்லதல்ல...




"வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். சமுதாயத்தைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்கள் தடம்புரளும்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் இதே பழமொழியை, சட்டம் காக்கும் கடமையைக் கண்ணாகக் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டி இருப்பது கவலை அளிக்கிறது.


விடுதலைப் போராட்டக் காலத்தில் பல தலைவர்கள் வழக்கறிஞர்களாகவே இருந்தார்கள். மகாதேவ கோவிந்த ரானடே, பாலகங்காதர திலகர், சித்தரஞ்சன் தாஸ், வ.உ.சி, கோபாலகிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, அம்பேத்கர், ராஜாஜி,... என அவர்களின் பட்டியல் நீளும். சட்டத்துறை தேசத்தின் மனசாட்சியாக விளங்கிய காலகட்டம் அது. தனது பிராபல்யமான தொழிலை நாட்டு விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் நமது அரும்பெரும் தலைவர்கள்.


அதே துறையின் நாற்றங்காலில் இப்போது நேரிட்டிருக்கும் அழுகல்நோய், நாட்டிற்கு அபாய எச்சரிக்கையாகவே உள்ளது. எதிர்கால சட்டமேதைகளையும் நீதிபதிகளையும் உருவாக்கும் களமான சட்டக் கல்லூரிகள், சமீபகாலமாக ஜாதிமோதல்களின் நிலைக்களனாகவும், வன்முறையாளர்களின் புகலிடமாகவும் மாறி வருகின்றன. அண்மையில் (மார்ச் 11) கோவை சட்டக் கல்லூரியில் நமது தேசியக்கொடியை எரித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிப்படுத்துவது இதனையே.


கோவை சட்டக் கல்லூரியில் பெண் பேராசிரியர் ஒருவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்களில் ஒரு பிரிவினர் சுமார் 20 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற போராட்டத்தை வேறு எந்தக் கல்லூரியிலும் நடத்துவது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். பொதுவாகவே, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டத்தை மீறும் முன்னுரிமை இருப்பதாக நம்பப்படுகிறது.


சட்ட மாணவர்களால் குற்றம் சாட்டப்படுபவர், மாவட்ட குடும்பநல நீதிபதியாகவும் அரசு வழக்கறிஞராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவர். மாணவர்களின் அதிருப்தியை அவர் எப்படி சம்பாதித்தார், யார் மீது தவறு என்ற கேள்விகள் இப்போது அநாவசியம் ஆகிவிட்டன. பேராசிரியர் மீதான வெறுப்பை தேசியக்கொடி மீது மாணவர்கள் காட்டியபோதே அவர்களது நியாயம் செத்துவிட்டது.


தற்போது தேசியக்கொடியை எரித்த குற்றத்திற்காக 76 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது; ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே குற்றத்தை சாமானியர் யாராவது செய்திருந்தால், பிணையில் வெளிவர இயலாதபடி அவர் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார்.


தேசியக்கொடியை எரித்த மாணவர்கள் அந்தக் குற்றத்தை காவல்துறையினர் முன்னிலையில்தான் அரங்கேற்றினார்கள் என்பதிலிருந்தே, சட்ட மாணவர்களைப் பொருத்த வரை சட்டம் வெறும் பொம்மைதான் என்பது உறுதியாகிறது. இதன்மூலம், தங்கள் போராட்டத்திற்கான அறத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.


கோவை சட்டக் கல்லூரியில் மோதல்கள் நிகழ்வது புதிதல்ல. ஜாதிரீதியான மோதல்கள், பிற கல்லூரி மாணவர்களுடன் மோதல்கள், பொதுமக்களுடன் மோதல்கள் என, பல்வேறு தகராறுகளில் கோவை சட்டக் கல்லூரிக்கு முன்அனுபவம் உண்டு. எப்போதும், சர்ச்சைக்குரிய மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. சட்டம் படிப்பவர்கள் என்பதே, சட்டத்தை மீறுவதற்கான துணிச்சலை அந்த மாணவர்களுக்கு அளிக்கிறது.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2008, நவ. 12 ல் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதும், இதேபோன்ற முன்னுரிமைகளுடன், சட்டத் துணிச்சலுடன் தான் வன்முறை அரங்கேறியது. அந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பிப். 25ல் உத்தரவிட்டிருக்கிறது.


இத்தகைய அத்துமீறல்களுக்கு, அரசின் செயலற்ற தன்மையே காரணமாகிறது. இதேபோன்ற காட்சிகளை பல்வேறு சட்டக் கல்லூரிகளிலும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஆனால், அரசு தனது பொறுப்பை உணர்வதில்லை. நாளைய சட்ட வல்லுநர்களும் எதிர்காலத் தலைவர்களும் படிக்க வேண்டிய வயதில் பாழாவது குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு, கடமை தவறா நீதிபதிகள் மீதுதான் சுமையாக விழுந்திருக்கிறது.


விதைகள் நாற்றங்காலிலேயே அழுகிவிடுமானால் விளைச்சல் கிடைக்காது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். வழிதவறித் தடுமாறும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, வ.உ.சி. போன்ற தியாகமயமான வழக்கறிஞரின் சரிதங்களை நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை மட்டுமல்ல, நீதித்துறை முன்னவர்களின் கடமையும் கூட.


படம்: 2008, நவ. 12 ; சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த அராஜகம்.


.

Friday, March 18, 2011

உருவக கவிதை- 64


புள்ளிக் கோலங்கள்

வளைந்தோடும் கோடுகளுக்குள்
கோலங்களை தகவமைக்கும்
சிறைப்பட்ட புள்ளிகள்.
.
தொடக்கமும் முடிவும்
புலப்படாத நெளிகோடுகளை
வழிநடத்தும் அதே புள்ளிகள்.

புள்ளி இல்லாமலும்
கோலம் போடலாம்.
கோடுகளில் இயைந்த புள்ளிகள்
அப்போதும் எக்காளமிடும்.

புள்ளி எனப்படுவது யாது?
கோட்டின் தொடக்கமா? முடிவா?
கோடுகள் முழுவதும்
கோடுகளுக்குள்ளும்
இறைந்துகிடப்பது
புள்ளிகளின் ராஜ்ஜியமா?

கோடுகள் சந்திக்கும் இடங்களில்
புள்ளிகள் கண் சிமிட்டுகின்றன.
புள்ளிகளுக்குள் சிறைப்படாத
கோலங்களிலும் மிளிரும்
புள்ளிகளின் ஜாலங்கள்.
.

Thursday, March 17, 2011

உருவக கவிதை - 63


எழுதப்படாத கவிதை...


நான் எழுதாத எதையும்
நான் எழுதியதாக
நானே சொல்லிக் கொள்வதில்லை.

நான் எழுதாத எதையும்
நான் சொந்தம் கொண்டாடுவதில்
என்ன பயன் இருக்க முடியும்
எனக்கு நானே சொறியும் இன்பம் தவிர?

கலைஞரின் இளைஞனும்
உளியின் ஓசையும்
நான் எழுதியது என்று சொன்னால்
சிரிக்கத்தான் போகிறீர்கள்.

நான் எழுதவில்லை என்றாலும்
சிரிக்காமல் சிரிப்பீர்கள்.
பிறகு எதை எழுதி
என்ன ஆகப் போகிறது?

எங்கு போனாலும்,
எதையாவது கிறுக்கி
எப்படியாவது வெளிப்படுத்தி
எங்கேயாவது பிரசுரமானாலும்
நகலெடுக்கும் நண்பர்கள்
இருக்கவே செய்கிறார்கள் என்னை மாதிரி.

ஒன்று தெரியுமா?
உளியின் ஓசைக்குத் தான்
கல்லின் வலி தெரியும்.
நகல் எடுப்பதும் எடுப்பிப்பதும்
ஒன்றல்ல தெரியுமா?

ஒன்று மட்டும் உறுதி-
இந்தக் கழுதையும்கூட
நான் எழுதியதில்லை.
நான் எழுதவே இல்லை.
.

Tuesday, March 8, 2011

உருவக கவிதை - 62



யாருக்கும் வெட்கமில்லை


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம்
ஒவ்வொரு மனத்திலும் பலநூறு சிந்தனை.
ஒவ்வொரு சிந்தனையும் வெளிப்படுகிறது
முலாம் போசப்பட்ட வார்த்தைகளில்.
எந்த வார்த்தையும் புலப்படுத்தாது
மனம் போகும் திசைகளை.

நேற்று வரை நம்பகமான நண்பன்
இன்று எனக்கு பகைவன்.
நேற்று வரை கரித்துக் கொட்டிய துரோகி
இன்று எனக்கு கூட்டாளி.
எதிரிக்கு எதிரி நண்பனாகலாம்.
துரோகியை கட்டியணைத்து
கண்ணீர் விடலாம்.
எல்லாம் சாத்தியம்- அரசியலில்.

ஒவ்வொரு மனதிலும் ஆயிரம் ஆசைகள்.
ஒவ்வொரு ஆசையும் அடுத்தவரின் வீழ்ச்சியில்.
ஒவ்வொரு வீழ்த்தலிலும் வெற்றியின் ஆரவாரங்கள்.
சதுரங்கத்தில் திடீரென அணிமாறும்
அரசியல் குதிரைகள், ராஜாக்கள், ராணிகள்...
திகைக்கும் சிப்பாய்கள்.

வெற்றி ஒன்றே இலக்கான பின்,
எதிராளியின் படுதோல்வியே விருப்பமானபின்,
போர்க்களத்தில் நியாயம் பேச முடியாது.
தோல்வி முகட்டில் இருக்கும் வெள்ளை ராணி
கருப்பு ராசாவுக்கு சோரம் போகலாம்.
வெள்ளை ராசா கட்டம் கட்டப்படலாம்.
கருப்பு ராணியும் அணி மாறலாம்.

பார்வையாளரின் குழப்பம்
ஆட்டம் முடியும் வரை.
ஆட்டக்காரர்களின் குழப்பம்
ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடரும்.
அரசியல் எனப்படுவது
வாழ்வைத் தீர்மானிக்கும் சதி-
வெறும் சதுரங்க விளையாட்டல்ல.

கழகங்கள் நடத்தும் நிகழ் நாடகங்களில்
தாமறியாமல் பங்கேற்கும் வாக்காளர்கள்.
நடப்பது புரியாமல் தடுமாறும் சேனாபதிகள்.
சமயம் பார்த்து எம்பிக் குதிக்கும் யானைகள்.
வெட்டுண்டு சாகும் சிப்பாய்களுக்கு
மலர்வளையம் வைக்கவும்
யாருக்கும் நேரமில்லை.
கோட்டை நோக்கிய பயணத்தில்
வெட்கத்திற்கு அவசியமும் இல்லை.
.

Saturday, March 5, 2011

எண்ணங்கள்








நம்மை நாம் அறிவோம்!



அண்மையில் நடந்த உலக சரித்திர நிகழ்வுகளில் எகிப்து மக்களின் புரட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. 20 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய எகிப்து அதிபர் முபாரக், மக்கள் நடத்திய தொடர் போராட்டத்துக்குப் பணிந்து பிப். 11-ல் பதவி விலகினார்.

அதன் எதிரொலி டுனீசியா, லிபியா, அல்ஜீரியா, ஜோர்டான் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், ஏமன், ஒமான் போன்ற அரபு நாடுகளிலும் கேட்டுக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரமும் ஊழலும் பெருகியுள்ள வேறு பல நாடுகளிலும் எகிப்து அமைதிப் புரட்சியின் செல்வாக்கு பரவத் தொடங்கியுள்ளது.


இதன் தாக்கம் இந்திய அரசியல்வாதிகளின் பேச்சிலும் வெளிப்படுகிறது. பலரும், எகிப்துபோல தங்கள் பகுதியில் மாற்றம் வரும் என்று ஆரூடம் கூறத் தொடங்கியுள்ளனர்.
எகிப்து அதிபர்போல விரைவில் மாயாவதி தூக்கி எறியப்படுவார் என்று கூறியிருக்கிறார் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ். ஏற்கெனவே முலாயமைத் தூக்கி எறிந்த மக்கள் யாரைப் பார்த்து அவ்வாறு செய்தார்களாம்?

எகிப்தைப்போலவே காஷ்மீரில் மக்கள் எழுச்சி இயக்கம் நடப்பதாக மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா குறிப்பிட்டிருக்கிறார். பிரிவினைவாத இயக்கத் தலைவர் கிலானியும்கூட, காஷ்மீரில் நடப்பது எகிப்து மக்களின் போராட்டம் போன்றதுதான் என்று
கூறியிருக்கிறார். எகிப்துக்குள் மக்கள் புரட்சி வெடிக்க எந்த அண்டைநாடும் தூண்டுகோலாக இருக்கவில்லை என்பது இவர்கள் இருவருமே சொல்லாதது.

அகில இந்திய இடதுசாரித் தலைவர் ஒருவரும் எகிப்து மக்களை முன்னோடிகளாகக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செஞ்சீனாவின் தியானென்மன் சதுக்கத்தில் ஜனநாயகத்தை மீட்கப் போராடி பலியான மாணவர்களை அவர் வசதியாக மறந்துவிட்டார்.

பிரதான எதிர்க்கட்சியான பாஜக.வின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், எகிப்து புரட்சியிலிருந்து மத்திய அரசு பாடம் கற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார். எகிப்தில் அரசு சொத்துகளைக் கபளீகரம் செய்த முபாரக்போலவே கர்நாடகா மாநிலத்தில் தங்கள் கட்சியைச் சார்ந்த முதல்வர் செயல்பட்டதை அவர் நினைவில் கொள்ளாதது "செலக்டிவ் அம்னீஷியா'வாக இருக்கக்கூடும்.


தமிழக மேடைகளிலும்கூட எகிப்து முக்கிய உதாரணப் பொருளாகியிருக்கிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபரானதையே தமிழக அரசியல் மேடைகளில் நெக்குருக முழங்கியவர்கள், எகிப்து விஷயத்தை விடுவார்களா? முபாரக்கையும் தமிழக முதல்வரையும் இணையாக ஒப்பிடும் காட்சிகளுக்குக் குறைவில்லை. .


இவர்களுக்குப் போட்டியாக ஆளும் தரப்பினரும், அதே முபாரக்கின் அடக்குமுறை ஆட்சியை முன்னாள் முதல்வருடன் ஒப்பிட்டு தமிழக அரசியலை கேலிக்கூத்தாக்குகின்றனர். இரு தரப்பினருமே சொல்ல மறந்த விஷயம், ஹோஸ்னி முபாரக்குக்கு தமிழக அரசியல்வாதிகள்போல அந்தர்பல்டி அடிக்கத் தெரியவில்லை என்பது. ...

அரசியல்வாதிகள் போதாதென்று திரைத்தாரகைகளும் எகிப்தைப் 'பார்க்க' ஆரம்பித்திருப்பது புல்லரிக்கச் செய்கிறது. எகிப்தில் புரட்சியால் மக்கள் மாற்றம் கண்டதுபோல மாணவ சமுதாயம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தத் தயாராக வேண்டும் என்று கல்லூரி விழா ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா....


இலங்கைப் பிரச்னையை ஊர்தோறும் முழங்குபவரும், மீனவர்கள் நலனுக்காக திடீரென களத்தில் குதித்திருப்பவரும்கூட, உலக அரசியலுடன் தமிழக அரசியலை ஒப்பிட்டுத் தங்கள் ஞானத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதுவரை ஜாதி அரசியல் பேசியவர்களையும் உலகளாவிய பார்வையுடன் பேசச் செய்திருக்கிறது எகிப்து. அந்நாட்டு மக்களுக்கு நன்றி....


உண்மையில் எகிப்து மக்களின் அரசியல் புரட்சிக்கு அடிப்படைக் காரணம், அது கடும் வன்முறைகள் இன்றி அமைந்திருந்ததுதான். நூறு ஆண்டுகளுக்கு முன், எகிப்து இடம்பெற்றுள்ள அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்கோடியில் தென்ஆப்பிரிக்காவில் இந்தியர் ஒருவர் நிகழ்த்திக்காட்டிய போராட்ட முறை அது. அதே வழிமுறையால்தான் இந்தியாவும் விடுதலை பெற்றது. பல நாடுகளின் தளைகளை அறுக்க உத்வேகம் அளித்த அதே அஹிம்சை முறை, இன்று எகிப்தில் மீண்டும் வென்றிருக்கிறது; மக்களின் சத்திய ஆவேசம் வென்றிருக்கிறது.


கொடுங்கோலாட்சி நடத்திய முபாரக்கின் அதிகாரத்துக்கு இணங்க மறுத்து, சர்வாதிகார அரசுக்கு ஒத்துழைக்க மறுத்து, ராணுவ பலத்துக்கு அஞ்சாமல் நெஞ்சு நிமிர்த்திp, எகிப்தில் ஆண்களும் பெண்களும் 18 நாள்கள் தொடர் போராட்டம் நடத்தியது வீர வரலாறு; சந்தேகமில்லை. இதற்கான கருவை அவர்கள் பெற்றது மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிமுறைகளிலிருந்துதான்.

நமது சரக்கையே எகிப்து புதுப்பித்திருக்கிறது. அது புரியாமல், நமது கருவூலத்தை அறியாமல், நாம் யாரைப் பின்தொடர்கிறோம்? எப்போது நம்மை நாமே பார்க்கப் போகிறோம்?

நன்றி: தினமணி (05.03.2011)
தலையங்கப் பக்க துணைக்கட்டுரை

Friday, March 4, 2011


Thursday, March 3, 2011

மரபுக் கவிதை - 111



சிந்தைக்கினிய ஈசனானவன்


அறமுமானவன் பொருளுமானவன்
ஆர்க்கும் இன்ப அருவமானவன்.
புறமுமானவன் அகமுமானவன்
பூவினும் மெல்லிய வாசமானவன்.
மறமுமானவன் அருளுமானவன்
மாயமகற்றும் ஞானமானவன்.
நிறமுமானவன் நிர்மலமானவன்
நீதிநாட்டிடும் நியாயமானவன்.
திறமுமானவன் குணமுமானவன்
தீட்சையளிக்கும் குருவுமானவன்.

உறவுமானவன் உண்மையானவன்
ஊழ்வினை எரிக்கும் சோதியானவன்.
துறவுமானவன் துரியமானவன்
தூய்மையின் எளிய உருவமானவன்
பிறவுமானவன் உலகுமானவன்
பீடுயர்த்திடும் வாழ்வுமானவன்.
திறவுமானவன் தின்மையானவன்
தீமையகற்றும் கருவுமானவன்.
கறவுமானவன் கன்றுமானவன்
காரணமான ஈசனானவன்.

வரமுமானவன் வழியுமானவன்
வானவர் போற்றும் வள்ளலானவன்.
மரமுமானவன் மண்ணுமானவன்
மாதரின் தாய்மை உணர்வுமானவன்.
பரமுமானவன் உருவுமானவன்
பாதியைக் கொடுத்த நாதனானவன்.
இரவுமானவன் பகலுமானவன்
ஈடிணையற்ற லிங்கமானவன்.
சிரமுமானவன் அடியுமானவன்
சீர்மிகு வாழ்வின் சிந்தையானவன்.
.

.