Tuesday, March 22, 2011

எண்ணங்கள்






நாற்றங்காலில் அழுகல் நாட்டிற்கு நல்லதல்ல...




"வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி?' என்ற பழமொழியைக் கேட்டிருப்போம். சமுதாயத்தைக் காக்க வேண்டிய ஆட்சியாளர்கள் தடம்புரளும்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் இதே பழமொழியை, சட்டம் காக்கும் கடமையைக் கண்ணாகக் கொண்ட கல்லூரி மாணவர்களுக்கும் அடிக்கடி நினைவுபடுத்த வேண்டி இருப்பது கவலை அளிக்கிறது.


விடுதலைப் போராட்டக் காலத்தில் பல தலைவர்கள் வழக்கறிஞர்களாகவே இருந்தார்கள். மகாதேவ கோவிந்த ரானடே, பாலகங்காதர திலகர், சித்தரஞ்சன் தாஸ், வ.உ.சி, கோபாலகிருஷ்ண கோகலே, மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, அம்பேத்கர், ராஜாஜி,... என அவர்களின் பட்டியல் நீளும். சட்டத்துறை தேசத்தின் மனசாட்சியாக விளங்கிய காலகட்டம் அது. தனது பிராபல்யமான தொழிலை நாட்டு விடுதலைப் போராட்டத்திற்காக அர்ப்பணித்தவர்கள் நமது அரும்பெரும் தலைவர்கள்.


அதே துறையின் நாற்றங்காலில் இப்போது நேரிட்டிருக்கும் அழுகல்நோய், நாட்டிற்கு அபாய எச்சரிக்கையாகவே உள்ளது. எதிர்கால சட்டமேதைகளையும் நீதிபதிகளையும் உருவாக்கும் களமான சட்டக் கல்லூரிகள், சமீபகாலமாக ஜாதிமோதல்களின் நிலைக்களனாகவும், வன்முறையாளர்களின் புகலிடமாகவும் மாறி வருகின்றன. அண்மையில் (மார்ச் 11) கோவை சட்டக் கல்லூரியில் நமது தேசியக்கொடியை எரித்த சட்டக் கல்லூரி மாணவர்கள் வெளிப்படுத்துவது இதனையே.


கோவை சட்டக் கல்லூரியில் பெண் பேராசிரியர் ஒருவரை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்களில் ஒரு பிரிவினர் சுமார் 20 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோன்ற போராட்டத்தை வேறு எந்தக் கல்லூரியிலும் நடத்துவது சாத்தியமில்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். பொதுவாகவே, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு சட்டத்தை மீறும் முன்னுரிமை இருப்பதாக நம்பப்படுகிறது.


சட்ட மாணவர்களால் குற்றம் சாட்டப்படுபவர், மாவட்ட குடும்பநல நீதிபதியாகவும் அரசு வழக்கறிஞராகவும் பல்லாண்டுகள் பணியாற்றியவர். மாணவர்களின் அதிருப்தியை அவர் எப்படி சம்பாதித்தார், யார் மீது தவறு என்ற கேள்விகள் இப்போது அநாவசியம் ஆகிவிட்டன. பேராசிரியர் மீதான வெறுப்பை தேசியக்கொடி மீது மாணவர்கள் காட்டியபோதே அவர்களது நியாயம் செத்துவிட்டது.


தற்போது தேசியக்கொடியை எரித்த குற்றத்திற்காக 76 மாணவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது; ஆயினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே குற்றத்தை சாமானியர் யாராவது செய்திருந்தால், பிணையில் வெளிவர இயலாதபடி அவர் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்பார்.


தேசியக்கொடியை எரித்த மாணவர்கள் அந்தக் குற்றத்தை காவல்துறையினர் முன்னிலையில்தான் அரங்கேற்றினார்கள் என்பதிலிருந்தே, சட்ட மாணவர்களைப் பொருத்த வரை சட்டம் வெறும் பொம்மைதான் என்பது உறுதியாகிறது. இதன்மூலம், தங்கள் போராட்டத்திற்கான அறத்தையும் அவர்கள் இழந்திருக்கிறார்கள்.


கோவை சட்டக் கல்லூரியில் மோதல்கள் நிகழ்வது புதிதல்ல. ஜாதிரீதியான மோதல்கள், பிற கல்லூரி மாணவர்களுடன் மோதல்கள், பொதுமக்களுடன் மோதல்கள் என, பல்வேறு தகராறுகளில் கோவை சட்டக் கல்லூரிக்கு முன்அனுபவம் உண்டு. எப்போதும், சர்ச்சைக்குரிய மாணவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. சட்டம் படிப்பவர்கள் என்பதே, சட்டத்தை மீறுவதற்கான துணிச்சலை அந்த மாணவர்களுக்கு அளிக்கிறது.


சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் 2008, நவ. 12 ல் நிகழ்ந்த வன்முறை வெறியாட்டம் அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதும், இதேபோன்ற முன்னுரிமைகளுடன், சட்டத் துணிச்சலுடன் தான் வன்முறை அரங்கேறியது. அந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த பிப். 25ல் உத்தரவிட்டிருக்கிறது.


இத்தகைய அத்துமீறல்களுக்கு, அரசின் செயலற்ற தன்மையே காரணமாகிறது. இதேபோன்ற காட்சிகளை பல்வேறு சட்டக் கல்லூரிகளிலும் நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். ஆனால், அரசு தனது பொறுப்பை உணர்வதில்லை. நாளைய சட்ட வல்லுநர்களும் எதிர்காலத் தலைவர்களும் படிக்க வேண்டிய வயதில் பாழாவது குறித்துச் சிந்திக்க வேண்டிய பொறுப்பு, கடமை தவறா நீதிபதிகள் மீதுதான் சுமையாக விழுந்திருக்கிறது.


விதைகள் நாற்றங்காலிலேயே அழுகிவிடுமானால் விளைச்சல் கிடைக்காது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். வழிதவறித் தடுமாறும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு, வ.உ.சி. போன்ற தியாகமயமான வழக்கறிஞரின் சரிதங்களை நினைவுபடுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை உறுதிப்படுத்துவதும் அரசின் கடமை மட்டுமல்ல, நீதித்துறை முன்னவர்களின் கடமையும் கூட.


படம்: 2008, நவ. 12 ; சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த அராஜகம்.


.

No comments:

Post a Comment