Friday, March 18, 2011

உருவக கவிதை- 64


புள்ளிக் கோலங்கள்

வளைந்தோடும் கோடுகளுக்குள்
கோலங்களை தகவமைக்கும்
சிறைப்பட்ட புள்ளிகள்.
.
தொடக்கமும் முடிவும்
புலப்படாத நெளிகோடுகளை
வழிநடத்தும் அதே புள்ளிகள்.

புள்ளி இல்லாமலும்
கோலம் போடலாம்.
கோடுகளில் இயைந்த புள்ளிகள்
அப்போதும் எக்காளமிடும்.

புள்ளி எனப்படுவது யாது?
கோட்டின் தொடக்கமா? முடிவா?
கோடுகள் முழுவதும்
கோடுகளுக்குள்ளும்
இறைந்துகிடப்பது
புள்ளிகளின் ராஜ்ஜியமா?

கோடுகள் சந்திக்கும் இடங்களில்
புள்ளிகள் கண் சிமிட்டுகின்றன.
புள்ளிகளுக்குள் சிறைப்படாத
கோலங்களிலும் மிளிரும்
புள்ளிகளின் ஜாலங்கள்.
.

No comments:

Post a Comment