பின்தொடர்பவர்கள்

Tuesday, March 8, 2011

உருவக கவிதை - 62யாருக்கும் வெட்கமில்லை


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மனம்
ஒவ்வொரு மனத்திலும் பலநூறு சிந்தனை.
ஒவ்வொரு சிந்தனையும் வெளிப்படுகிறது
முலாம் போசப்பட்ட வார்த்தைகளில்.
எந்த வார்த்தையும் புலப்படுத்தாது
மனம் போகும் திசைகளை.

நேற்று வரை நம்பகமான நண்பன்
இன்று எனக்கு பகைவன்.
நேற்று வரை கரித்துக் கொட்டிய துரோகி
இன்று எனக்கு கூட்டாளி.
எதிரிக்கு எதிரி நண்பனாகலாம்.
துரோகியை கட்டியணைத்து
கண்ணீர் விடலாம்.
எல்லாம் சாத்தியம்- அரசியலில்.

ஒவ்வொரு மனதிலும் ஆயிரம் ஆசைகள்.
ஒவ்வொரு ஆசையும் அடுத்தவரின் வீழ்ச்சியில்.
ஒவ்வொரு வீழ்த்தலிலும் வெற்றியின் ஆரவாரங்கள்.
சதுரங்கத்தில் திடீரென அணிமாறும்
அரசியல் குதிரைகள், ராஜாக்கள், ராணிகள்...
திகைக்கும் சிப்பாய்கள்.

வெற்றி ஒன்றே இலக்கான பின்,
எதிராளியின் படுதோல்வியே விருப்பமானபின்,
போர்க்களத்தில் நியாயம் பேச முடியாது.
தோல்வி முகட்டில் இருக்கும் வெள்ளை ராணி
கருப்பு ராசாவுக்கு சோரம் போகலாம்.
வெள்ளை ராசா கட்டம் கட்டப்படலாம்.
கருப்பு ராணியும் அணி மாறலாம்.

பார்வையாளரின் குழப்பம்
ஆட்டம் முடியும் வரை.
ஆட்டக்காரர்களின் குழப்பம்
ஒவ்வொரு ஆட்டத்திலும் தொடரும்.
அரசியல் எனப்படுவது
வாழ்வைத் தீர்மானிக்கும் சதி-
வெறும் சதுரங்க விளையாட்டல்ல.

கழகங்கள் நடத்தும் நிகழ் நாடகங்களில்
தாமறியாமல் பங்கேற்கும் வாக்காளர்கள்.
நடப்பது புரியாமல் தடுமாறும் சேனாபதிகள்.
சமயம் பார்த்து எம்பிக் குதிக்கும் யானைகள்.
வெட்டுண்டு சாகும் சிப்பாய்களுக்கு
மலர்வளையம் வைக்கவும்
யாருக்கும் நேரமில்லை.
கோட்டை நோக்கிய பயணத்தில்
வெட்கத்திற்கு அவசியமும் இல்லை.
.

No comments:

Post a Comment