பின்தொடர்பவர்கள்

Monday, October 24, 2011

எண்ணங்கள்சரித்திர சாட்சியான தீபாவளி!

நாம் இன்று கொண்டாடும் தீபாவளிக்கு குறைந்தபட்சம் 9,300 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரப் பின்னணி உள்ளது. ஆனால் முந்தைய காலத்தில் கொண்டாடிய விதம் வேறு. இப்போது நாம் கொண்டாடும் தீபாவளியின் கோலாகலம் வேறு. ஆயினும் தீபங்களை வரிசையாக ஏற்றும் வழக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.

முதன்முதலில் தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது என்பதற்கு மிகச் சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆயினும், 14 ஆண்டு வனவாசம் முடிந்து, ராவணவதம் முடித்து ராமன் அயோத்தி திரும்பியபோது, அந்நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றது இதிகாசத்தில் பதிவாகி இருக்கிறது.

ராமாயணத்தைப் படைத்த வால்மீகி, அதில் பல இடங்களில் ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்ந்த காலத்தில் இருந்த வானியல் கிரக நிலைகளை சுலோகங்களில் கூறிச் சென்றிருக்கிறார். ராமன் பிறப்பு, சீதையுடன் மணம், வனவாசம் துவங்கியது, சீதை அபகரிப்பு, அனுமன் விஜயம், சேதுபந்தனம், இலங்கைவேந்தனுடன் யுத்தம், போரில் வெற்றி, நாடு திரும்பியது போன்ற நிகழ்வுகளை வால்மீகி வர்ணிக்கும்போது, அன்றைய கிரகநிலைகளை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய வானியல் விஞ்ஞானிகளும் அதிசயிக்கத் தக்க பல வானியல் நிகழ்வுகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக திரேதாயுகத்தில் ராமாயண கதை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த யுகத்துக்கான கால அளவீடுகள் மிகையாகவே உள்ளதை மறுக்க முடியாது. ராமாயணத்திலுள்ள கிரகநிலைகளைக் குறிப்பிடும் சுலோகங்களை மட்டும் ஆராய்ந்த அறிஞர்கள், ராமன் கற்பனை நாயகன் அல்ல; கி.மு. 7,300ல் வாழ்ந்த ஒரு மன்னனே என்று நிரூபித்திருக்கிறார்கள்.

அதன்படி, கி.மு. 7,292ல் ராமன் அயோத்தி திரும்பியதாகக் கணக்கிட்டிருக்கிறார், மராட்டியில் 'வாஸ்தவ ராமாயணம்' நூலை எழுதிய டாக்டர். பி.வி.வர்த்தக். ராமன் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளியின் துவக்கம் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. எனவே, தற்போதைய நமது தீபாவளிக்கு குறைந்தபட்ச வயது 9,300 என்று தாராளமாகச் சொல்லலாம்.

இதற்கு அடுத்து வருவதே நாம் பொதுவாகக் கூறி வரும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த நரகாசுர வதம். ஏற்கனவே நடைமுறையிலிருந்த இல்லங்களில் தீபமேற்றும் பண்டைய வழக்கத்தை அனுசரித்தே, கிருஷ்ணனிடம் நரகாசுரன் "தீபாவளி வரம்' கேட்டதாகவும் கொள்ளலாம்.

மகாவீரர் மோட்சம் அடைந்த நாள்:

சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்த நன்னாளாக ஐப்பசி மாத அமாவாசை கருதப்படுகிறது. சமண மதத்தின் வழிகாட்டிகளாக தீர்த்தங்கரர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களில் 27வது தீர்த்தங்கரர் மகாவீரர். இவரது பரிநிர்வாண மோட்ச தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவது ஜைனர்களின் மரபு.

கி.மு. 599 முதல் கி.மு. 527 வரை வாழ்ந்தவர், வைஷாலி நாட்டு மன்னராக இருந்து சமணத் துறவியான வர்த்தமான மகாவீரர். இவர் பவபுரி என்ற இடத்தில் கி.மு. 527, அக். 15ல் மோட்சம் அடைந்தார். இதற்கு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்ய பத்ரபாகு எழுதிய 'கல்பசூத்ரா' என்ற நூல் ஆதாரமாகும்.

முதன்முதலாக இலக்கியத்தில் காணப்படும் 'தீபாவளி' என்ற சொற்பிரயோகமும், சமண இலக்கியமான ஹரிவம்ச புராணத்தில் காணப்படும் 'தீபாளி கயா' என்பதே. இதை எழுதியவர், சக வருடம் 705ல் வாழ்ந்த ஜீனசேனர் என்ற சமணத்துறவி. இந்தச் சொல்லின் பொருள், 'உடலிலிருந்து ஒளி விடைபெறுவது' என்பதாகும். இதையே ஜைனர்கள் 'தீபாலிகா' என்று தீபங்களேற்றிக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியைத் தொடர்ந்து ஜைனர்களின் புத்தாண்டு தொடங்குகிறது. இந்நாளில் புது வர்த்தகக் கணக்குகளை ஜைனர்கள் தொடங்குகின்றனர். 1974ல், மகாவீரர் மோட்சம் அடைந்ததன் 2,500 ஆண்டுவிழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பௌத்தர்கள் போற்றும் நாள்:

மாமன்னர் அசோகர் புத்தமதத்துக்கு மாறிய நாளாக, புத்தமதத்தினரால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திலுள்ள புத்த மதத்தினர் இதை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பெüத்த மதத்தில் இந்நாள் 'அசோக விஜயதசமி' என்று குறிப்பிடப்படுகிறது. அசோகரின் காலம், கி.மு. 274 முதல் கி.மு. 232 வரை என்று சரித்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றும், தீபாவளியன்று புத்த மடாலயங்களில் மகான் புத்தருக்கு விசேஷ ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

சீக்கியரின் வீரம் செறிந்த நாள்:

சீக்கிய மதத்தினரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடும் விழா தீபாவளி. இதற்கு, இந்நாளில் நிகழ்ந்த பல சரித்திர நிகழ்வுகளே காரணம் எனில் மிகையில்லை. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த சிங்கும் 52 இளைஞர்களும் கி.பி. 1619ல் இந்நாளில்தான் குவாலியர் கோட்டையிலிருந்து விடுதலையாகினர். இதையடுத்து அமிர்தசரஸ் பொற்கோவிலில் தீபங்கள் ஏற்றும் வழிபாட்டை அவர் துவக்கினார். இன்றும் அவ்வழக்கம், 'பந்தி சோர் திவஸ்' என்ற பண்டிகையாகத் தொடர்கிறது.

சீக்கியரின் பொற்கோவிலான ஹர்மந்திர் சாகிப்பின் நிர்வாகியாக இருந்த பாயி மணிசிங், அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிபணியாததால், கி.பி. 1737ல் இதேநாளில் தான் லாகூரில் கொல்லப்பட்டார். இதையும் சீக்கியர்கள் தியாகதினமாக அனுசரிக்கின்றனர். இவரது படுகொலையே சீக்கியரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்வானது.

கால்சா இயக்கத்தை நிறுவிய சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த சிங், தீபாவளியை பைசாகி பண்டிகைக்கு அடுத்த முக்கியமான சீக்கியர் திருவிழாவாக கி.பி. 1699ல் அறிவித்தார். அன்றுமுதல் இன்றுவரை சீக்கியர்களின் இன்றியமையாத பண்டிகையாக தீபாவளி மாறிவிட்டது.

இவ்வாறாக, நாம் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளியின் பின்னணியில் சரித்திர நிகழ்வுகளும் புதைந்திருக்கின்றன. அவற்றை அறிந்துகொண்டு பண்டிகையை அர்த்தமுடன் கொண்டாடினால் தீபாவளி மேலும் இனிக்கும் அல்லவா?

- தினமணி (ஒளிப்பிரவாகம் விளம்பரச் சிறப்பிதழ்) - கோவை (18.10.2011)

.

Sunday, October 23, 2011

எண்ணங்கள்

 
எங்கும் நிறையட்டும் ஆனந்தம்!

பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள், நாட்டை  ஒருங்கிணைக்கும் ஆற்றலும், மக்களுக்கு புத்துணர்வளிக்கும் திறனும் கொண்டவையாக விளங்குகின்றன.
பாரத நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு அடிப்படைக் காரணத்துக்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளது. எனினும் நாடு நெடுகிலும் பரவலாகவும், ஒத்த சிந்தனையுடனும் கொண்டாடப்படும் விழாக்கள் சில மட்டுமே. அவற்றுள் தலையாயது தீபாவளி.
 
தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம், என்று தோன்றியது என்று அறிய இயலாத பழமை வாய்ந்தது. நாட்டு மக்களை அச்சுறுத்திய நரகாசூரன் என்ற அரக்கனை இறைவன் சம்ஹரித்த நாளே தீபாவளியாக வழிபடப்படுகிறது என்பது வரை பெரும்பாலோர் அறிந்துள்ளோம். அதிலும்  இறைவனிடம் அரக்கன் கேட்டுப் பெற்ற வரமாகவே தீபாவளி பண்டிகை நமக்குக் கிடைத்திருக்கிறது.
 
இதில் குறிப்பிடத் தக்க விஷயம், நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.

அகழ்வாரைத் தாங்கும் பொறுமை மிக்கவளான நிலமகள், புவிக்கு தனது மகனால் கெடுதி வந்தவுடன், தனது பொறுமையைக் கைவிட்டு அவனையே அழிக்க முற்பட்டாள் என்ற புராணக் கதையில், நாம் கற்க வேண்டிய நியாய தர்மங்கள் நிறைய உண்டு.

எனினும், அந்த அன்னையின் மனம் மகிழவும், சாகும் முன் திருந்திய அரக்கனின் மனம் குளிரவும், அவன் கேட்ட வரத்தின்படி, அதிகாலையில் நரகாசூரனை நினைந்து  எண்ணெய்க் குளியல் நடத்தி, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து, நன்மை எங்கும் ஓங்க பிரார்த்தனை செய்கின்றோம்.

இன்று தீபங்களை இல்லங்களில் வரிசையாக ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். "தீபங்களின் வரிசை'  என்ற பொருள் தரும் "தீப ஆவளி'யே தீபாவளியானது என்று கூறப்படுவதுண்டு. தமிழகத்தில் தீபாவளியன்று இந்தப் பழக்கம் இல்லை. இதனை ஐப்பசிக்கு அடுத்துவரும் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தன்று தீப வழிபாடாக தமிழகத்தில் காண முடிகிறது. எனினும் வடமாநிலங்களில் தீபாவளியன்று தீபங்களின் வரிசைகளால் மக்கள் இறைவனை வழிபடுவது தொடர்கிறது.
 
மற்றபடி, எண்ணெய்க்குளியல் உள்ளிட்ட பிற அம்சங்கள் நாடு முழுவதும் சீராகக் காணப்படுகின்றன. "கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்ற கேள்வி, தீபாவளியன்று காலை பிரசித்தமானது. அதாவது, அன்று ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ள தண்ணீரில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம். கங்கை நதிக்கும் நமது பண்பாட்டு ஒருமைப்பாட்டில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
 
சமண, பெüத்த, சீக்கிய மதங்களிலும் தீபாவளிக்கான வரலாற்றுப் பின்புலமும் பண்பாட்டுக் கதைகளும் உண்டு. நாட்டின் பல பகுதிகளில் ஐந்துநாட்கள் கொண்டாடும் திருவிழாவாக தீபாவளி உள்ளது.

தீபாவளிக்கு பழங்குடி சார்ந்த பண்பாட்டுப் பின்புலமும் உண்டு. நமது முன்னோர், வனங்களில் திரிந்த பழங்குடி மக்கள்தான். அவர்களுக்கு இருள் என்றும் அச்சமூட்டுவதாகவே இருந்தது. அதனை தீயின் மூலம் அவர்கள் வென்றார்கள். கற்களால் மூட்டிய தீக்கங்குகள் தந்த ஒளியால், மனிதன் தனது முதலாவது மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினான். எனவேதான் தீயை, ஒளியை, வெப்பத்தை, இவை அனைத்தையும் தரும் சூரியனை வழிபடுவது நமது மரபாகியிருக்க வேண்டும்.

நமது மிகத் தொன்மையான வேத இலக்கியங்களில், ஒளியை வழிபடும் பாடல்கள் நிறைய உண்டு. இன்றும் வேத மந்திரங்களில் தலைமை மந்திரமாகக் கருதப்படுவது, ஒளியை வழிபடும் 'காயத்ரி' மந்திரமே. "கவிதைகளில் நான் காயத்ரியாக இருக்கிறேன்'' என்று பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். இந்த மந்திரத்தை தமிழகத்தின் மகாகவி பாரதி அழகிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

''செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியை நாம் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!'' என்பதே அந்த மந்திரத்தின் உட்பொருள். தீபாவளியன்று இல்லங்களில் நாம் ஏற்றும் தீபங்களிலும் அந்த தூய ஒளி பிரவகிக்கிறது. அந்த ஒளி நமது அறிவைப் பெருக்கி, அறியாமை இருளகற்றி, வற்றாத இறையருளை இல்லமெங்கும் பாய்ச்சட்டும்!

இன்று தீபாவளி, முக்கியமான வர்த்தக காரணியாகவும் மாறியிருக்கிறது. புத்தாடைகள், இனிப்பு வகைகள், அணிகலன்கள், பட்டாசு வகைகள், இல்லத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க, தீபாவளிக் காலம் அற்புத வாய்ப்பாக உள்ளது. பண்டிகைகளின் நோக்கமே மக்களை மகிழ்விப்பதும், அவர்களின் வாழ்வுக்கு புதிய திசைகளைக் காட்டுவதும் தானே?

அந்த அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துவிசையாகவே தீபாவளிப் பண்டிகைக் காலம் திகழ்கிறது எனில் மிகையில்லை. ஆண்டு முழுவதும் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பது, தீபாவளியை ஒட்டித் துவங்கும் பண்டிகைக்காலமே என்பது வர்த்தகர்களின் கருத்து.

தீபாவளிக்கு தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடையும் பட்டாசும் வாங்கத் துடிக்காத பெற்றோர் அரிது. இதுவே வாழ்க்கையின் மீதான அபிமானத்தையும் பிடிமானத்தையும் நல்குகிறது. ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் மனிதரின் வாழ்வில் தீபாவளி அளிக்கும் புதிய நம்பிக்கை ஆழமானது.

இருப்பினும் அனைவராலும் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட முடிவதில்லை. ஏழ்மைநிலையில் துயருறுவோரும், ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்டோரும் தீபாவளியின் மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி? இந்தக் கண்ணோட்டத்துடன் ஆதரவற்றோரையும் பரம ஏழைகளையும் தீபாவளியில் பங்கேற்கச் செய்யும் நல்லுள்ளங்கள் அண்மைக்காலமாகப் பெருகி வருகின்றன.

இதுவே உண்மையான பண்பாட்டின் வெற்றி. ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடையும் பலகாரமும் பட்டாசும் வாங்கிக் கொடுத்து நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால் நமது ஆனந்தம் இரட்டிப்பாகும். நாமும் இந்தக் கண்ணோட்டத்துடன் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடினால் இறையருள் பூரணமாகக் கிட்டும்.

இருளை விரட்டும் தீபஒளியுடன், மனமகிழ்வூட்டும் பட்டாசுகளின் பேரோசையுடன், ஒளிமயமான வண்ணச்சிதறல்களுடன், தீபாவளியைக் கொண்டாடும்போது, நாமும் குழந்தையாகிறோம். தீபாவளிப் பண்டிகை நாட்டை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக்கிறது; நம்மையோ ஆனந்தத்தின் எல்லையால் அன்புடன் பிணைக்கிறது.

இந்த மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும்! இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கட்டும்! இந்த மகிழ்ச்சி அடுத்த தீபாவளி வரை நமக்கு வழிகாட்டட்டும்!
 
- தினமணி (ஒளிப்பிரவாகம் விளம்பரச் சிறப்பிதழ்) - கோவை (09.10.2011)
.

Saturday, October 22, 2011

எண்ணங்கள்

சுவாமி நிகமானந்தா

உயிர்ப்புடன் விளங்கும்
பாரதத்தின் மகத்தான ஆயுதம்

பாரத நாட்டுக்கே உரித்தான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் ஒருமுறை வென்றிருக்கிறது. கூடங்குளத்தில் அணு மின்நிலையத்துக்கு எதிராக ஆயிரக் கணக்கானோர் இருந்த தொடர் உண்ணாவிரதம், கேளாச் செவிகளுடன் இருந்த மத்திய, மாநில அரசுகளை கீழிறங்கிவரச் செய்திருக்கிறது. அறவழிப் போராட்டத்தின் சிறப்பு மீண்டும் உலக அரங்கில் பதிவாகி இருக்கிறது.
  .
உண்ணாவிரதம் என்பது பாரதத்தில் தொன்றுதொட்ட வாழ்க்கைமுறையாகவே இருந்துள்ளது. குடும்ப நலனுக்காகவும் கணவர் நலனுக்காகவும் விரதம் இருப்பது இந்தியப் பெண்களுக்கு மட்டுமே உரித்தான சிறப்பு.

அஹிம்சையை போதிக்கும் பாரதத்தில் தோன்றிய மதங்களான பெüத்தமும் சமணமும் உண்ணாநோன்பை வலியுறுத்துவன. அந்தப் பாரம்பரியத்தில் வந்ததால்தான், மகாத்மா காந்தியால் ஆங்கிலேயருக்கு எதிரான வலிமையான ஆயுதமாக உண்ணாவிரதத்தை மாற்ற முடிந்தது.

தன்னல மறுப்பே உண்ணாவிரதத்தின் அடிப்படை. உயிர் வாழ இன்றியமையாத உணவையும்கூட மறுப்பதென்பது மனவலிமையின் அடையாளம். பிறர் நலனுக்காகவோ, ஒரு பொதுநோக்கத்துக்காகவோ உண்ணாவிரதம் இருக்கும்போது, அது மகத்தான வழிமுறை ஆகிறது.

இந்த வழிமுறையால்தான், நெல்லிக்காய் மூட்டையாகச் சிதறிக் கிடந்த விடுதலைப் போராளிகளை ஒரே இலக்குடன் ஒருங்கிணைத்தார் மகாத்மா காந்தி; நாடும் விடுதலை அடைந்தது.

இன்று உலக நாடுகள் பலவற்றில் அஹிம்சைப் போராட்டம் அரசியல் ஆயுதமாக மாறி வருகிறது. கொடுங்கோல் ஆட்சியாளர்கள், மக்கள்நலனுக்கு ஊறு விளைவிக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களை ஆயுதமின்றியும் வன்முறையுமின்றியும் போராடச் செய்ய முடியும் என்பதற்கு தென்ஆப்பிரிக்கா, டுனீசியா, எகிப்து நாடுகள் சாட்சியமாகி இருக்கின்றன.

ஆயினும், அஹிம்சைப் போராட்டத்துக்கு உடனடி பலனை எதிர்பார்க்க முடிவதில்லை. செருக்கு மிகுந்த ஆட்சியாளர்களுக்கு இப்போராட்டங்கள் உடனடியாகப் புரிவதில்லை. இதனால் உண்ணாவிரதப் போராட்டம் சில சமயங்களில் வீணாவதும் உண்டு. ஆயினும், அந்தப் போராட்டம் களத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகள் தொடர்ந்து ரீங்காரமிடும்.

சுதந்திர இந்தியாவில், மகாத்மாவின் வழிமுறையில் பலர் இதுவரை உண்ணாவிரதப் போராட்டங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் தனி ஆந்திர மாநிலத்துக்காகக் குரல் கொடுத்த பொட்டி ஸ்ரீராமுலு. தெலுங்கு பேசும் மக்களுக்காக தனி மாநிலம் அமைக்கக் கோரி 1952ல் 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன்னை மாய்த்துக் கொண்ட ஸ்ரீராமுலுவால்தான் மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.

அவரது அடியொற்றி 2009ல் தனி தெலுங்கானாவுக்காக 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், அரசால் மருத்துவமனையில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். தெலுங்கானா கோரிக்கை இன்னும் நிறைவேறாவிட்டாலும், கொள்கை அடிப்படையில் அது ஏற்கப்பட்டு விட்டது.

உண்ணாவிரதம் குறித்த நினைவுகள் எழும்போது தமிழீழப் போராளி திலீபனின் தியாகத்தை மறக்க முடியாது. இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை தனது இலக்கை மாற்றிப் பயணப்பட்டபோது அதை எதிர்த்து இலங்கையில் 1987ம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார் திலீபன். அவரது கோரிக்கை அன்று ஏற்கப்படாததன் பலனை இன்றும் நாம் அனுபவிக்கிறோம்.

உண்ணாவிரதம் உயிர்த்தியாகத்துடன் முடிவடைவதற்கு, கடந்த ஜூனில் உயிர்நீத்த சுவாமி நிகமானந்தா மற்றோர் உதாரணம். கங்கை மாசுபடுவதற்கு எதிராக தனியொருவராகப் போராடிய நிகமானந்தா உத்தரகாண்ட் மாநிலத்தில் 115 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மடிந்தார். நதிநீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அவரது தியாக மரணம் உருவாக்கி இருக்கிறது.

நமது அரசியல் தலைவர்களாலும் உண்ணாவிரப் போராட்டம் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 2006ல், மேற்கு வங்க மாநிலம், சிங்குரில் டாடா கார்த் தொழிற்சாலைக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 22 நாட்கள் இருந்த உண்ணாவிரதம், தொழிற்சாலையை இடம் மாற்றியதுடன் 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்பியது.

காவிரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமை காக்க அதிமுக தலைவி ஜெயலலிதா 1991ல் முதல்வராக இருந்தபோது 4 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

திமுக தலைவர் கருணாநிதியும் பலமுறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். ஆனால், 2009ல் முதல்வராக இருந்தபோது அவர் நடத்திய உண்ணாவிரத நாடகம் இலங்கைத் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.

இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தலையிடக் கோரியும், இலங்கை ராணுவத்தின் போரை நிறுத்தக் கோரியுமó ஒருநாள் காலை 7 மணிக்குத் துவங்கி 9 மணிக்கு உண்ணாவிரதத்தை முடித்து புரட்சி செய்த கருணாநிதியால் உண்ணாவிரதம் கேலிப்பொருளானது. உண்ணாவிரதத்துக்கு எதிரான உண்ணும் விரதம் என்ற கிறுக்குத்தனமான முறையை அறிமுகப்படுத்திய பெருமையும் தமிழகத்துக்கு உண்டு.

மணிப்பூரில் பாதுகாப்புப் படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி 2000த்திலிருந்து 11 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஐரோம் ஷர்மிளா, கறுப்புப் பணத்துக்கு எதிராக சென்ற ஜூன் மாதம் 9 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த யோகா குரு பாபா ராம்தேவ், ஜன லோக்பால் சட்டத்தை வலியுறுத்தி சென்ற மாதம் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரே ஆகியோரும் உண்ணாவிரதத்தின் பெருமையை உயர்த்தியவர்கள்.

நர்மதை அணைத் திட்டத்துக்கு எதிராக 2006ல் 20 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த சமூகப் போராளி மேதா பட்கர் அப்போராட்டத்தில் வெல்லாத போதும், மும்பை குடிசைவாசிகளுக்கு ஆதரவாக 2011ல் 9 நாட்கள் இருந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றது. இதிலிருந்து போராட்டத்தின் நோக்கமும் முழு நன்மை அளிப்பதாக இருக்க வேண்டியதன் தேவை தெரிகிறது.

இந்த உண்ணாவிரதக் களத்தில் அண்மையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் குதித்தார். சமூக நல்லிணக்கத்துக்கான அவரது மூன்று நாள் உண்ணாவிரதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சமூக சேவகர்களும் அரசியல்வாதிகளும் போராளிகளும் விரும்பும் ஆயுதமான உண்ணாவிரதம், இப்போது கூடங்குளத்தில் வெற்றிவாகை சூடியிருக்கிறது. பொதுநலனுக்காக தன்னை வருத்திக்கொண்டு பாடுபடும் எவரும் மானிட குலத்துக்கு நலன் விளைவிப்பவர்களே.

பாரதத்தின் மகத்தான ஆயுதம் மீண்டும் புத்துணர்வு பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, ஆயுதம் ஏந்திப் போராடும் குழுக்களின் மனங்களிலும் மாற்றம் நிகழ்த்தட்டும்!

 - தினமணி (தலையங்கப் பக்க துணைக் கட்டுரை) - 22.10.2011
 .