Sunday, October 23, 2011

எண்ணங்கள்

 
எங்கும் நிறையட்டும் ஆனந்தம்!

பண்டிகைகள் ஒவ்வொரு நாட்டுக்கும் அடையாளமாக மிளிர்பவை. நாட்டின் கலாசாரம், மதம், நாகரிகத்தின் சின்னமாகக் கருதப்படும் பண்டிகைகள், நாட்டை  ஒருங்கிணைக்கும் ஆற்றலும், மக்களுக்கு புத்துணர்வளிக்கும் திறனும் கொண்டவையாக விளங்குகின்றன.
பாரத நாட்டில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு அடிப்படைக் காரணத்துக்காக திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கமாகவே உள்ளது. எனினும் நாடு நெடுகிலும் பரவலாகவும், ஒத்த சிந்தனையுடனும் கொண்டாடப்படும் விழாக்கள் சில மட்டுமே. அவற்றுள் தலையாயது தீபாவளி.
 
தீபாவளி பண்டிகைக் கொண்டாட்டம், என்று தோன்றியது என்று அறிய இயலாத பழமை வாய்ந்தது. நாட்டு மக்களை அச்சுறுத்திய நரகாசூரன் என்ற அரக்கனை இறைவன் சம்ஹரித்த நாளே தீபாவளியாக வழிபடப்படுகிறது என்பது வரை பெரும்பாலோர் அறிந்துள்ளோம். அதிலும்  இறைவனிடம் அரக்கன் கேட்டுப் பெற்ற வரமாகவே தீபாவளி பண்டிகை நமக்குக் கிடைத்திருக்கிறது.
 
இதில் குறிப்பிடத் தக்க விஷயம், நரகாசூரன் பூமித்தாயின் மைந்தன் என்பதும், அவனது அக்கிரமங்கள் தறிகெட்டபோது, இறைவனின் சாரதியாக பூமாதேவியே தேரைச் செலுத்தி, தனது மகன் என்றும் பாராமல் அவனது அழிவுக்கு வித்திட்டாள் என்பதும் தான்.

அகழ்வாரைத் தாங்கும் பொறுமை மிக்கவளான நிலமகள், புவிக்கு தனது மகனால் கெடுதி வந்தவுடன், தனது பொறுமையைக் கைவிட்டு அவனையே அழிக்க முற்பட்டாள் என்ற புராணக் கதையில், நாம் கற்க வேண்டிய நியாய தர்மங்கள் நிறைய உண்டு.

எனினும், அந்த அன்னையின் மனம் மகிழவும், சாகும் முன் திருந்திய அரக்கனின் மனம் குளிரவும், அவன் கேட்ட வரத்தின்படி, அதிகாலையில் நரகாசூரனை நினைந்து  எண்ணெய்க் குளியல் நடத்தி, இல்லங்களில் தீபங்களை ஏற்றி, புத்தாடை அணிந்து, நன்மை எங்கும் ஓங்க பிரார்த்தனை செய்கின்றோம்.

இன்று தீபங்களை இல்லங்களில் வரிசையாக ஏற்றி தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். "தீபங்களின் வரிசை'  என்ற பொருள் தரும் "தீப ஆவளி'யே தீபாவளியானது என்று கூறப்படுவதுண்டு. தமிழகத்தில் தீபாவளியன்று இந்தப் பழக்கம் இல்லை. இதனை ஐப்பசிக்கு அடுத்துவரும் கார்த்திகை மாதம், கிருத்திகை நட்சத்திரத்தன்று தீப வழிபாடாக தமிழகத்தில் காண முடிகிறது. எனினும் வடமாநிலங்களில் தீபாவளியன்று தீபங்களின் வரிசைகளால் மக்கள் இறைவனை வழிபடுவது தொடர்கிறது.
 
மற்றபடி, எண்ணெய்க்குளியல் உள்ளிட்ட பிற அம்சங்கள் நாடு முழுவதும் சீராகக் காணப்படுகின்றன. "கங்கா ஸ்நானம் ஆச்சா?' என்ற கேள்வி, தீபாவளியன்று காலை பிரசித்தமானது. அதாவது, அன்று ஒவ்வொருவர் இல்லத்திலும் உள்ள தண்ணீரில் கங்கை வந்து கலப்பதாக ஐதீகம். கங்கை நதிக்கும் நமது பண்பாட்டு ஒருமைப்பாட்டில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
 
சமண, பெüத்த, சீக்கிய மதங்களிலும் தீபாவளிக்கான வரலாற்றுப் பின்புலமும் பண்பாட்டுக் கதைகளும் உண்டு. நாட்டின் பல பகுதிகளில் ஐந்துநாட்கள் கொண்டாடும் திருவிழாவாக தீபாவளி உள்ளது.

தீபாவளிக்கு பழங்குடி சார்ந்த பண்பாட்டுப் பின்புலமும் உண்டு. நமது முன்னோர், வனங்களில் திரிந்த பழங்குடி மக்கள்தான். அவர்களுக்கு இருள் என்றும் அச்சமூட்டுவதாகவே இருந்தது. அதனை தீயின் மூலம் அவர்கள் வென்றார்கள். கற்களால் மூட்டிய தீக்கங்குகள் தந்த ஒளியால், மனிதன் தனது முதலாவது மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தினான். எனவேதான் தீயை, ஒளியை, வெப்பத்தை, இவை அனைத்தையும் தரும் சூரியனை வழிபடுவது நமது மரபாகியிருக்க வேண்டும்.

நமது மிகத் தொன்மையான வேத இலக்கியங்களில், ஒளியை வழிபடும் பாடல்கள் நிறைய உண்டு. இன்றும் வேத மந்திரங்களில் தலைமை மந்திரமாகக் கருதப்படுவது, ஒளியை வழிபடும் 'காயத்ரி' மந்திரமே. "கவிதைகளில் நான் காயத்ரியாக இருக்கிறேன்'' என்று பகவத்கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். இந்த மந்திரத்தை தமிழகத்தின் மகாகவி பாரதி அழகிய தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

''செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியை நாம் தேர்கின்றோம். அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக!'' என்பதே அந்த மந்திரத்தின் உட்பொருள். தீபாவளியன்று இல்லங்களில் நாம் ஏற்றும் தீபங்களிலும் அந்த தூய ஒளி பிரவகிக்கிறது. அந்த ஒளி நமது அறிவைப் பெருக்கி, அறியாமை இருளகற்றி, வற்றாத இறையருளை இல்லமெங்கும் பாய்ச்சட்டும்!

இன்று தீபாவளி, முக்கியமான வர்த்தக காரணியாகவும் மாறியிருக்கிறது. புத்தாடைகள், இனிப்பு வகைகள், அணிகலன்கள், பட்டாசு வகைகள், இல்லத்துக்குத் தேவையான பொருட்களை வாங்க, தீபாவளிக் காலம் அற்புத வாய்ப்பாக உள்ளது. பண்டிகைகளின் நோக்கமே மக்களை மகிழ்விப்பதும், அவர்களின் வாழ்வுக்கு புதிய திசைகளைக் காட்டுவதும் தானே?

அந்த அடிப்படையில் நாட்டின் பொருளாதாரத்துக்கு உந்துவிசையாகவே தீபாவளிப் பண்டிகைக் காலம் திகழ்கிறது எனில் மிகையில்லை. ஆண்டு முழுவதும் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் பெரும்பங்கு வகிப்பது, தீபாவளியை ஒட்டித் துவங்கும் பண்டிகைக்காலமே என்பது வர்த்தகர்களின் கருத்து.

தீபாவளிக்கு தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடையும் பட்டாசும் வாங்கத் துடிக்காத பெற்றோர் அரிது. இதுவே வாழ்க்கையின் மீதான அபிமானத்தையும் பிடிமானத்தையும் நல்குகிறது. ஏற்ற இறக்கத்துடன் பயணிக்கும் மனிதரின் வாழ்வில் தீபாவளி அளிக்கும் புதிய நம்பிக்கை ஆழமானது.

இருப்பினும் அனைவராலும் தீபாவளியை இனிமையாகக் கொண்டாட முடிவதில்லை. ஏழ்மைநிலையில் துயருறுவோரும், ஆதரவற்றவர்களாகக் கைவிடப்பட்டோரும் தீபாவளியின் மகிழ்ச்சியைப் பெறுவது எப்படி? இந்தக் கண்ணோட்டத்துடன் ஆதரவற்றோரையும் பரம ஏழைகளையும் தீபாவளியில் பங்கேற்கச் செய்யும் நல்லுள்ளங்கள் அண்மைக்காலமாகப் பெருகி வருகின்றன.

இதுவே உண்மையான பண்பாட்டின் வெற்றி. ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடையும் பலகாரமும் பட்டாசும் வாங்கிக் கொடுத்து நமது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டால் நமது ஆனந்தம் இரட்டிப்பாகும். நாமும் இந்தக் கண்ணோட்டத்துடன் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடினால் இறையருள் பூரணமாகக் கிட்டும்.

இருளை விரட்டும் தீபஒளியுடன், மனமகிழ்வூட்டும் பட்டாசுகளின் பேரோசையுடன், ஒளிமயமான வண்ணச்சிதறல்களுடன், தீபாவளியைக் கொண்டாடும்போது, நாமும் குழந்தையாகிறோம். தீபாவளிப் பண்டிகை நாட்டை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக்கிறது; நம்மையோ ஆனந்தத்தின் எல்லையால் அன்புடன் பிணைக்கிறது.

இந்த மகிழ்ச்சி என்றும் நிரந்தரமாகட்டும்! இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்கட்டும்! இந்த மகிழ்ச்சி அடுத்த தீபாவளி வரை நமக்கு வழிகாட்டட்டும்!
 
- தினமணி (ஒளிப்பிரவாகம் விளம்பரச் சிறப்பிதழ்) - கோவை (09.10.2011)
.

No comments:

Post a Comment