Monday, October 24, 2011

எண்ணங்கள்



சரித்திர சாட்சியான தீபாவளி!

நாம் இன்று கொண்டாடும் தீபாவளிக்கு குறைந்தபட்சம் 9,300 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரப் பின்னணி உள்ளது. ஆனால் முந்தைய காலத்தில் கொண்டாடிய விதம் வேறு. இப்போது நாம் கொண்டாடும் தீபாவளியின் கோலாகலம் வேறு. ஆயினும் தீபங்களை வரிசையாக ஏற்றும் வழக்கம் மட்டும் அப்படியே நீடிக்கிறது.

முதன்முதலில் தீபாவளி எப்போது கொண்டாடப்பட்டது என்பதற்கு மிகச் சரியான ஆதாரம் கிடைக்கவில்லை. ஆயினும், 14 ஆண்டு வனவாசம் முடிந்து, ராவணவதம் முடித்து ராமன் அயோத்தி திரும்பியபோது, அந்நாட்டு மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு தீபங்களை ஏற்றி அவரை வரவேற்றது இதிகாசத்தில் பதிவாகி இருக்கிறது.

ராமாயணத்தைப் படைத்த வால்மீகி, அதில் பல இடங்களில் ஒவ்வொரு நிகழ்வும் நிகழ்ந்த காலத்தில் இருந்த வானியல் கிரக நிலைகளை சுலோகங்களில் கூறிச் சென்றிருக்கிறார். ராமன் பிறப்பு, சீதையுடன் மணம், வனவாசம் துவங்கியது, சீதை அபகரிப்பு, அனுமன் விஜயம், சேதுபந்தனம், இலங்கைவேந்தனுடன் யுத்தம், போரில் வெற்றி, நாடு திரும்பியது போன்ற நிகழ்வுகளை வால்மீகி வர்ணிக்கும்போது, அன்றைய கிரகநிலைகளை தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதைய வானியல் விஞ்ஞானிகளும் அதிசயிக்கத் தக்க பல வானியல் நிகழ்வுகள் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொதுவாக திரேதாயுகத்தில் ராமாயண கதை நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. அந்த யுகத்துக்கான கால அளவீடுகள் மிகையாகவே உள்ளதை மறுக்க முடியாது. ராமாயணத்திலுள்ள கிரகநிலைகளைக் குறிப்பிடும் சுலோகங்களை மட்டும் ஆராய்ந்த அறிஞர்கள், ராமன் கற்பனை நாயகன் அல்ல; கி.மு. 7,300ல் வாழ்ந்த ஒரு மன்னனே என்று நிரூபித்திருக்கிறார்கள்.

அதன்படி, கி.மு. 7,292ல் ராமன் அயோத்தி திரும்பியதாகக் கணக்கிட்டிருக்கிறார், மராட்டியில் 'வாஸ்தவ ராமாயணம்' நூலை எழுதிய டாக்டர். பி.வி.வர்த்தக். ராமன் அயோத்தி திரும்பிய நாளே தீபாவளியின் துவக்கம் என்ற நம்பிக்கை நம் நாட்டில் உள்ளது. எனவே, தற்போதைய நமது தீபாவளிக்கு குறைந்தபட்ச வயது 9,300 என்று தாராளமாகச் சொல்லலாம்.

இதற்கு அடுத்து வருவதே நாம் பொதுவாகக் கூறி வரும், துவாபர யுகத்தில் நிகழ்ந்த நரகாசுர வதம். ஏற்கனவே நடைமுறையிலிருந்த இல்லங்களில் தீபமேற்றும் பண்டைய வழக்கத்தை அனுசரித்தே, கிருஷ்ணனிடம் நரகாசுரன் "தீபாவளி வரம்' கேட்டதாகவும் கொள்ளலாம்.

மகாவீரர் மோட்சம் அடைந்த நாள்:

சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரர் மோட்சம் அடைந்த நன்னாளாக ஐப்பசி மாத அமாவாசை கருதப்படுகிறது. சமண மதத்தின் வழிகாட்டிகளாக தீர்த்தங்கரர்கள் கருதப்படுகிறார்கள். அவர்களில் 27வது தீர்த்தங்கரர் மகாவீரர். இவரது பரிநிர்வாண மோட்ச தினத்தை தீபாவளியாகக் கொண்டாடுவது ஜைனர்களின் மரபு.

கி.மு. 599 முதல் கி.மு. 527 வரை வாழ்ந்தவர், வைஷாலி நாட்டு மன்னராக இருந்து சமணத் துறவியான வர்த்தமான மகாவீரர். இவர் பவபுரி என்ற இடத்தில் கி.மு. 527, அக். 15ல் மோட்சம் அடைந்தார். இதற்கு, கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆச்சார்ய பத்ரபாகு எழுதிய 'கல்பசூத்ரா' என்ற நூல் ஆதாரமாகும்.

முதன்முதலாக இலக்கியத்தில் காணப்படும் 'தீபாவளி' என்ற சொற்பிரயோகமும், சமண இலக்கியமான ஹரிவம்ச புராணத்தில் காணப்படும் 'தீபாளி கயா' என்பதே. இதை எழுதியவர், சக வருடம் 705ல் வாழ்ந்த ஜீனசேனர் என்ற சமணத்துறவி. இந்தச் சொல்லின் பொருள், 'உடலிலிருந்து ஒளி விடைபெறுவது' என்பதாகும். இதையே ஜைனர்கள் 'தீபாலிகா' என்று தீபங்களேற்றிக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியைத் தொடர்ந்து ஜைனர்களின் புத்தாண்டு தொடங்குகிறது. இந்நாளில் புது வர்த்தகக் கணக்குகளை ஜைனர்கள் தொடங்குகின்றனர். 1974ல், மகாவீரர் மோட்சம் அடைந்ததன் 2,500 ஆண்டுவிழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

பௌத்தர்கள் போற்றும் நாள்:

மாமன்னர் அசோகர் புத்தமதத்துக்கு மாறிய நாளாக, புத்தமதத்தினரால் தீபாவளி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திலுள்ள புத்த மதத்தினர் இதை விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பெüத்த மதத்தில் இந்நாள் 'அசோக விஜயதசமி' என்று குறிப்பிடப்படுகிறது. அசோகரின் காலம், கி.மு. 274 முதல் கி.மு. 232 வரை என்று சரித்திர நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்றும், தீபாவளியன்று புத்த மடாலயங்களில் மகான் புத்தருக்கு விசேஷ ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன.

சீக்கியரின் வீரம் செறிந்த நாள்:

சீக்கிய மதத்தினரும் பக்திப் பரவசத்துடன் கொண்டாடும் விழா தீபாவளி. இதற்கு, இந்நாளில் நிகழ்ந்த பல சரித்திர நிகழ்வுகளே காரணம் எனில் மிகையில்லை. சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த சிங்கும் 52 இளைஞர்களும் கி.பி. 1619ல் இந்நாளில்தான் குவாலியர் கோட்டையிலிருந்து விடுதலையாகினர். இதையடுத்து அமிர்தசரஸ் பொற்கோவிலில் தீபங்கள் ஏற்றும் வழிபாட்டை அவர் துவக்கினார். இன்றும் அவ்வழக்கம், 'பந்தி சோர் திவஸ்' என்ற பண்டிகையாகத் தொடர்கிறது.

சீக்கியரின் பொற்கோவிலான ஹர்மந்திர் சாகிப்பின் நிர்வாகியாக இருந்த பாயி மணிசிங், அந்நிய ஆட்சியாளர்களுக்கு அடிபணியாததால், கி.பி. 1737ல் இதேநாளில் தான் லாகூரில் கொல்லப்பட்டார். இதையும் சீக்கியர்கள் தியாகதினமாக அனுசரிக்கின்றனர். இவரது படுகொலையே சீக்கியரிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிகழ்வானது.

கால்சா இயக்கத்தை நிறுவிய சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோவிந்த சிங், தீபாவளியை பைசாகி பண்டிகைக்கு அடுத்த முக்கியமான சீக்கியர் திருவிழாவாக கி.பி. 1699ல் அறிவித்தார். அன்றுமுதல் இன்றுவரை சீக்கியர்களின் இன்றியமையாத பண்டிகையாக தீபாவளி மாறிவிட்டது.

இவ்வாறாக, நாம் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளியின் பின்னணியில் சரித்திர நிகழ்வுகளும் புதைந்திருக்கின்றன. அவற்றை அறிந்துகொண்டு பண்டிகையை அர்த்தமுடன் கொண்டாடினால் தீபாவளி மேலும் இனிக்கும் அல்லவா?

- தினமணி (ஒளிப்பிரவாகம் விளம்பரச் சிறப்பிதழ்) - கோவை (18.10.2011)

.

No comments:

Post a Comment