பின்தொடர்பவர்கள்

Tuesday, November 1, 2011

வசன கவிதை - 90


காற்றாலை கிராமம்

அந்த வண்டிப்பாதையில் அதிகாலையிலேயே 
தூக்குப்போசிகளுடன் சாரிசாரியாக
சென்று கொண்டிருப்பார்கள் 
முண்டாசு கட்டிய ஆண்களும் 
நூல்சேலை கட்டிய பெண்களும்
சிலர் கைகளில் கருக்கு அரிவாள்கள்;  
சிலரிடம்  மண்வெட்டிகள்.
வேலை தருவோரும் வேலை செய்வோரும்
இணைந்த அணிவகுப்பு அது.
திரும்பி வரும்போது பெரும்பாலான பெண்களின்
சும்மாட்டில் விறகுச் சுமை இருக்கும்.

இருள் விலகாத அந்த மசமச வெளிச்சத்தில்,
முந்தைய நாள் ஊர்க் கொட்டகையில் பார்த்த
‘குலேபகாவலி படம் பற்றி சிலாகித்தபடியோ,
‘நல்ல தங்காள் படத்தை திட்டியபடியோ,
உழைப்பாளிகள் படை சென்று கொண்டிருக்கும்.
மரங்களில் பறவைகள் கூவத் தொடங்கி இருக்கும்.

ஆற்றங்கரை வந்தவுடன் சிலருக்கு வேலை இருக்கும்.
கலங்கலின்றி ஓடும் ஆற்றில் ஒரு கையெடுத்து
தலையில் தெளித்தபடி கீழ்வானைப் பார்ப்பார் ஒரு பெரியவர்.
அவருடன் இருக்கும் மாடு "மா'' என்று அழைக்கும்.

வண்டிப்பாதையின் இருபுறமும் வானம் பார்த்த பூமிகள்,
தென்னந்தோப்புகள், சோளக்காடுகள், பச்சை வயல்கள்.
வரப்பின் மீது வரிசையாக காட்சி தரும்
கம்பீரமான பனை மரங்கள்.
தோட்டங்களின் மத்தியிலோ, ஓரத்திலோ,
அமைக்கப்பட்டிருக்கும் ஆட்டுப்பட்டிகள்.
உழைப்பாளிகள் கூட்டம் இருபுறமும் பிரிந்தபடி செல்லும்.
அவர்கள் செல்லும் இடங்களில் யாரும் சொல்லாமலே
அவர்களுக்கென பிரத்யேக வேலைகள் காத்திருக்கும்.

காலை சூரியன் சுள்ளெனச்  சுடும்வரை
களை பறிப்பு, காய் பறிப்பு, வரப்பு அணைப்பு,
நாற்றுநடவு... என வேலைகள் தொடரும்.
உடன்  வேலை செய்வார் தோட்டக்காரர்.
நீராகாரம் முடிந்தபின் சில நிமிடம் ஆசுவாசம்.

அந்தக் கரட்டாங்காடு அப்படித்தான்
விவசாய பூமி ஆனது.
அந்த நிலத்தின் விளைச்சல் திறனுக்கு
காரணம் இல்லாமல் இல்லை.
தண்ணீர் பாய்ச்சிய விவசாயக் கூலிகளின்
செங்குருதியும் வியர்வையும் கலந்தது அந்த மண்.

தோட்டங்களில் இருக்கும் ஓலைச்சாலைகளில்
எருமைகளும் மாடுகளும் கன்றுகளை நக்கியபடி
கால் மாறி நின்றுகொண்டிருக்கும்.
அவற்றுக்கு தண்ணீர் காட்டவும்,  தட்டுப்  போடவும்
சாணி அள்ளவும் சிலருக்கு நேரம் சரியாக இருக்கும்.
பால்காரர் வருவதற்குள் குப்பை அள்ளி,
மாடுகளைத் தடவிக் கொடுப்பதே அலாதி சுகம்.
அருகில் நாட்டுக்கோழிகள் நடமாடும்.

ஆடு, மாடுகளை விடுவித்து
கழுவிக் குளிப்பாட்டி, கொழுவில் கட்டி
மேய்ச்சலுக்கு விட்டபின்
கிணற்றடியில் வேலை இருக்கும்
பண்ணையத் தொழிலாளிக்கு.
தோப்பில் பறிக்கப்பட்ட தேங்காய்களை
ரகம் பிரித்து எண்ணி வைப்பதற்குள்
வந்துவிடுவார் நகர வியாபாரி.
அருகிலேயே சந்தைக்குக் காத்திருக்கும்
காய்கறிக் கூடைகள்.

மதியவேளை சுட்டெரிக்கும்போது
அருகிலுள்ள மாமர நிழலிலோ, வேப்ப மர நிழலிலோ
தலை சாய்க்கும்  உழைப்பாளிகள் கூட்டம்.
தோட்டக்காரர் மனைவி காய்ச்சிக் கொடுத்த
காபித்தண்ணி குடித்தபின்
மீண்டும் சிலமணிகள் நிலத்தில் தவம்.
அவர்கள் வீடு திரும்பும்போது
மணிக்கு வரும் .என்.ஆர் பஸ்சின்
ஹாரன் ஒலி  கேட்கும்.

மாலை ஒவ்வொருவரது  வீடுகளிலும் 
வாழ்க்கை வாழப்படும்.
ஊர்மேடை நோக்கி பெரிசுகள் செல்ல,
கோவில் செல்லும் பெண்களுடன் 
தொற்றியபடி குழந்தைகள் செல்லும்.  
கள்ளுண்ட மயக்கத்தில் உழைப்பாளிகள் சிலர் உருள,
அந்திசாய ஆரம்பிக்கும்.
ஊர்க் கொட்டகையிலிருந்து
"மருதமலை மாமணியே முருகையா''
பாடல் எங்கும் எதிரொலிக்கும்.

டீக்கடைகளில் ரெண்டு ரூபாய்க்கு
வறுக்கியும் ஜிலேபியும்  வாங்கிக்கொண்டு
தெருமுனையில் பூவும் கட்டிக்கொண்டு  
வைரம் பாய்ந்த உடலுடன் செல்லும்
குடும்பஸ்தர்களுக்கு வீடு காத்திருக்கும்.

மறுநாள் ஆகாரத்துக்கு வேண்டிய
உப்பு, புளி வாங்கிக்கொண்டு,
அரிசி பொறுக்கும் பெண்களின் முகங்களில்
உழைப்பின் பொன்னிறம் கூடி இருக்கும்.
தோட்டங்களில் இருந்து திரும்பிய விவசாயிகளின்
வீடுகளிலும் இதே காட்சி காணக் கிடைக்கும்.

பகலில் ஒருவரை ஒருவர் அனைவரும் காண்பது
ஊரில் திருவிழா நடக்கும்போதுதான் சாத்தியம்.
அதற்காகவே மாரியம்மன்  நோன்பு சாட்டுதலும்
பெருமாள் கோவில் புரட்டாசி மெரமனையும்
வழிமேல் விழி வைத்துப் பார்க்கப்படும்.
இளசுகள் பார்வையில் பேச,
மழலைகள் தூரி விளையாடும்.
இடையே வரும் பட்டிப்பொங்கலில்
தோட்டங்கள் விழாக்கோலம் பூணும்.
"அசனம் பட்டியாரே அசனம்'' என்ற கோஷத்தில்
ஆடு, மாடுகள் அதிரும்

                  ***

எனது பால்யம் இனிமையானது.
கிராமியத்தின் வாசம் வீசும்
அந்த நினைவுகளைக் கலைக்க
நான் என்றும் விரும்புவதில்லை.
பள்ளியில் சாதி வேறுபாடின்றிப் படித்த
இளம் பருவத் தோழர்களின்
முகங்கள் மறவாதது போலவே,
கிராமிய சூழலின் வீரியம்
மனதில் புகைப்படம் போலவே
பதிவாகி இருக்கிறது.
அனைத்தும் பழங்கதையென  
மாறுவதுதான் உலகியல் வழக்கமோ?

                  ***

முப்பது  ஆண்டுகள் இடைவெளியில்,
நகரத்தின் சாயல் படியத் துவங்கியதாக  
எனது கிராமம் வளர்ந்திருக்கிறது.
அரசமர மேடை இருந்த இடத்தில்
கான்கிரீட்டிலான விநாயகர் கோயில் வீற்றிருக்கிறது.

கிராமத்தின் மையத்திலிருந்து பார்க்கும்போதே தெரிகிறது
ஊரை வேலியிட்டது போலக் காட்சி தரும்
ராட்சத மின்சாரக் காற்றாலைகள்.
ஊர்க் கொட்டகை இருந்த இடத்தில்
'அவளோட ராவுகள்' படம் ஓடும் தியேட்டர்.
ஊர்க்கோடியில் இருந்த எல்லையம்மன் கோயில் அருகே
நிமிர்ந்து நிற்கின்றன செல் கோபுரங்கள்.
ஆற்றங்கரை செல்லும் வண்டிப்பாதையில்
வாழைத்தோட்ட அய்யன் கோவில் மண்மூடிக் கிடக்கிறது.
ஆற்றில் பெரும்குழிகள்-
மணல் வற்றியதன் அடையாளங்கள்.

விவசாய நிலங்களில் காற்றாடிகள்.
ஊரை ஒட்டிய நிலங்களில் மனைப்பிரிவுகள்.
ஊருக்குள் மச்சுவீடுகள் எழுந்திருக்கின்றன.
ஊரைத் தாண்டினால் நடமாட்டம் குறைந்திருக்கிறது.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை
கிராமத்தில் திறந்திருக்கிறது.
நகைக்கடன் விளம்பரம் அங்கே வரவேற்கிறது.

ஓடாத ஆற்றின் குறுக்கே தடுப்பணையை 
ஊரின் வடகோடியில்  கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
வேலைக்கு  உணவுத் திட்டத் தொழிலாளர்கள்.
நிலத்துக்கு வலிக்குமோ என்பது போல
கொத்திய இடத்திலேயே கொத்திக் கொண்டிருக்கும் பெண்கள்.  
காலையில் ஏற்றிய டாஸ்மாக் சரக்கு போதையில்,
புகையாத பீடியை முறைத்தபடி விட்டெறிகிறார் மேஸ்திரி.
அமர மரமின்றி அல்லாடும் அண்டங்காக்கை
ஓரக்கண்ணால் பார்த்தபடி தத்தித் தத்தி அமர்கிறது.

ஒருகாலத்தில் காய்ச்சலுக்கு கஷாயம் கொடுத்த 
சுப்புன்னி வைத்தியர் வீடு இருந்த இடத்தில்
எம்.பி.பி.எஸ். டாக்டரின் கிளினிக் இருக்கிறது.
அங்கு திருவிழாக்கூட்டம்.
பஞ்சாயத்து திடலில் திரும்பி நிற்கின்றன இரு பேருந்துகள்.
சுற்றிலும் கோலா விளம்பரங்களுடன் பெட்டிக்கடைகள்.
பிரதானத் தெருமுனையில் பல கட்சிகளின் கொடிக்கம்பங்கள்.
தெருக்களில் சொறிநாய்கள்.

பவுடர் பூசிய ஒப்பனைக்காரி போல
பொலிவுடன் மினுக்குகிறது எனது கிராமம்.
ஆயினும் மனம் ஒட்டவில்லை.
காற்றாலைகளில் இருந்து கிளம்பி வருகிறது
ஊரின் அழிவை கட்டியம் கூறும் கிறீச்சிடும் சத்தம்.
கண்ணை மூடி மேடையில் சாய்கிறேன்.

யாரோ தோளைத் தட்டி உசுப்பியபோதுதான்,
18 வது மாடியில் குளிரூட்டப்பட்ட அறையில்
கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்திருப்பது தெரிகிறது.
வெளியே தேவலோகமாக மிளிரும்  
நியூயார்க்  மன்ஹாட்டன் சர்க்கிளின்  இரைச்சலற்ற
நள்ளிரவு அமைதி என் நெஞ்சை அறைகிறது.  

--------------------------------
விஜயபாரதம் (தீபாவளி மலர் - 2011)

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
தண்ணீர் பாய்ச்சிய விவசாயக் கூலிகளின்
செங்குருதியும் வியர்வையும் கலந்தது அந்த மண்.
////////

வியர்வை சிந்தாமல் விவசாய நிலம் உறுவாவதில்லை...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகிய வசன கவிதை..
வாழ்த்துக்கள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையான எழுத்து நடை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1

Post a Comment