Monday, November 7, 2011

எண்ணங்கள்

சட்டத்தின் காவலர்கள் 
அடித்துக் கொள்ளலாமா?

'சட்டம் ஓர் இருட்டறை; அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு' என்பார் அறிஞர் அண்ணா. சட்டம் கூறும் விதிமுறைகள் அனைவருக்கும் புரியாது என்பதால்தான், நீதிமன்றங்களில் வழக்குரைஞர்கள் வாதிகள் சார்பாக வாதாடுகிறார்கள். வாதிகளை அவர்களே சட்ட நுணுக்கங்களைக் கூறி நெறிப்படுத்துகிறார்கள்.

சட்டம் என்பது நம்மைக் காக்க நாமே வகுத்துக் கொண்டது. சமூகக் கட்டுப்பாடுகளுக்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் சட்டங்கள் இன்றியமையாதவை. அதேசமயம், சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரு நிர்வாக நடைமுறை தேவையாக இருக்கிறது. அதற்காகவே காவல்துறை உருவாக்கப்பட்டுள்ளது.

சட்டத்தை யார் மீறினாலும் அதைக் கட்டுப்படுத்துவது காவல்துறையின் கடமை. சமூக ஒழுங்கிற்குச் சவால்விடும் குற்றங்களைத் தடுப்பதும், குற்றம் நிகழும் தருணங்களில் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து தண்டனை பெற்றுத் தருவதும் காவல்துறையின் பணிகள்.

ஆக, வழக்குரைஞர்களும் காவல்துறையும் சட்டம் என்ற நாணயத்தின் இரு பக்கங்களாகவே உள்ளனர் எனில் மிகையில்லை. இந்த நாணயத்தின் எந்த ஒரு பக்கம் அரிக்கப்பட்டாலும் நாணயம் செல்லாது போய்விடும்.

இந்த இரு தரப்பினரும் சுமுகமாக இணைந்து பணியாற்றினால்தான் சட்டத்தின் ஆட்சி நடைமுறைக்கு வரும். ஆனால், சமீபகாலமாக நடைபெறும் இந்த இரு தரப்பினரிடையிலான மோதல்கள், சட்டத்தின் மாட்சிமைக்கே சவால் விடுபவையாக மாறி வருகின்றன.

கடந்த 2011, அக். 7-ல், கோவை அருகே உள்ள துடியலூர் காவல்நிலையத்தில் தனது வாதிக்காக விசாரிக்கச் சென்ற வழக்குரைஞர் ஆனந்தீஸ்வரன் காவல்துறையினரால் கை முறியும் அளவுக்கு கடுமையாகத் தாக்கப்பட்டார். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டிய நிலஉரிமை தொடர்பான வழக்கை "கட்டப் பஞ்சாயத்து' செய்ய காவல்துறையினர் முயன்றதே இப்பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.

எனினும், இந்த மோதலுக்கு வழக்குரைஞரின் ஆத்திரமூட்டும் செயல்பாடும் காரணமாக இருந்ததாக, காவல்துறையினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, காவல்நிலையத்தில் வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளரும் காவலர்கள் நால்வரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மேற்படி காவல்துறையினர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை மாவட்ட வழக்குரைஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இவ்வாறு கோர வழக்குரைஞர்களுக்கு உரிமை உள்ளது எவ்வளவு உண்மையோ, அதேபோல, தங்கள் போராட்டத்தை நாகரிகமாக நடத்த வேண்டிய கடமையும் அவர்களுக்கு உள்ளது.

ஆனால், கோவையில் நடந்துள்ள நிகழ்வுகள் வருத்தம் அளிப்பதாக உள்ளன. தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை இரு வாரகாலம் தொடர் முற்றுகையிட்டு வழக்கறிஞர்கள் போராடினர். தவிர தங்கள் நீதிமன்றப் பணிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். இதனால் வழக்குகளில் தொடர்புடையவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு போராட்ட நாளில் காவல் கண்காணிப்பாளர் அறைக்குள் வழக்குரைஞர்கள் அத்துமீறி நுழைய முயன்றதும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதும், கண்டிப்பாகத் தவிர்த்திருக்கப்பட வேண்டும். இந்த களேபரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறையை ஒருநாள் பூட்டிவைக்க நேர்ந்தது.

இதைவிட மோசமான நிகழ்வு, எதிர்கால வழக்குரைஞர்களான சட்டக் கல்லூரி மாணவர்களின் நடத்தை. துடியலூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாங்கள் கைது செய்யப்பட்டபோது, காவல்துறையினரின் வாகனத்தை உடைத்து நொறுக்கினர். இதுதான் சட்டத்தை இவர்கள் காப்பாற்றப் போகும் லட்சணமா?

இதுபோன்ற சம்பவங்கள் பல பகுதிகளில் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. 2008, செப். 12-ல் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டதையும், தங்களுக்குள் கொலைவெறித் தாக்குதல் நடத்திக் கொண்டதையும் யாரும் மறக்க முடியாது. அப்போது, நீதிமன்ற வளாகத்திற்குள் நுழையத் தயங்கி, காவல்துறையினர் வேடிக்கை பார்த்த அவலமும் நடந்தேறியது.

அதே காவல்துறையினர், அதே சென்னை உயர்நீதி மன்றத்தில், 2009 பிப். 19-ல் வழக்குரைஞர்களுடன் மோதியபோது, துரத்தித் துரத்தி தாக்குதல் நடத்தியதும், வழக்குரைஞர்களால் நீதிமன்ற வளாக காவல்நிலையம் எரிக்கப்பட்டதும், தமிழக வரலாற்றில் கறை படிந்த பக்கமாக பதிவாகி இருக்கின்றன.

ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் இவ்வாறு மோதிக் கொள்ளலாமா? சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே, அதை மதிக்காவிட்டால், பிறகு சட்டத்தை யார் மதிப்பார்கள்? இதைத் தடுக்க வேண்டிய நீதிபதிகளும் அரசும் வேடிக்கை பார்க்கலாமா?

இந்த இரு தரப்பிடையிலான மோதலுக்கு, பரஸ்பர நல்லுணர்வு இல்லாததே காரணமாக உள்ளது. இருவரில் யார் பெரியவர் என்ற 'ஈகோ' மோதலும் பிரச்னையை வளர்க்கிறது. இதற்கு என்னதான் தீர்வு? இரு தரப்பிலும் நடுநிலையானவர்கள் ஒருங்கே அமர்ந்து விவாதிக்க வேண்டிய தருணம் இது.

காவல்துறையினரும் நீதித்துறையினரும் உரசிக்கொள்ளும் நேரங்களில் சமரசப்படுத்தத் தேவையான ஒரு வியூகத்தை அரசு வகுக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. சட்ட விதிமுறைகளை காவல்துறையினருக்கு தெளிவாகச் சொல்லித் தர வேண்டிய கடமையும் அரசுக்கு உண்டு.

அமைதியை நிலைநாட்டுவதில் அரசுக்கு உள்ள பங்கைவிட காவலர்களுக்கும் வழக்குரைஞர்களுக்குமே அதிகமான பொறுப்பு உள்ளது. ஏனெனில், வீண் பிடிவாதமும் அகந்தையால் மோதிக் கொள்வதும் இரு தரப்புக்கும் என்றுமே பெருமை சேர்க்காது.





 

No comments:

Post a Comment