முல்லைப் பெரியாறு அணை |
பாசம் தழைக்குமா? பிரச்னை தீருமா?
பேருந்துப் பயணத்தில், அருகில் அமர்ந்திருப்பவர் தூங்கித் தூங்கி விழுந்தால் யாருக்கும் இடையூறாகவே இருக்கும். மிகவும் சாதுவான குணம் கொண்டவர்கூட, இப்படிப்பட்ட தருணங்களில் கோபப்படுவதை பேருந்துப் பயணங்களில் காண முடியும். அந்தப் பயணி உழைப்பின் களைப்பாலோ, உடல் உபாதையாலோ அவ்வாறு தூங்கி விழக் கூடும். அதுபற்றி அருகில் அமர்ந்திருப்பவருக்கு பரிதாப உணர்ச்சி ஏற்படுவதில்லை.
இதே சம்பவம் வேறுவிதமாக நடந்தால் நமது எதிர்வினை எப்படி இருக்கிறது? அதாவது, நமது பிரியத்துக்குரிய மனைவியோ, மகனோ, நண்பனோ, அன்புக்குரிய காதலரோ உடன் பயணிக்கும்போது தூங்கி தன்மீது விழுந்தால் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. சிலசமயம் அவ்வாறு தன்மீது தூங்கிச் சரிய மாட்டாரா என்று ஏங்கும் நிலைகூட ஏற்படுவதுண்டு.
ஒரே சம்பவம் தான். அதில் இடம்பெறும் நபர்கள் தான் வேறு. முதல் நிகழ்வில் தன்மீது தூங்கிச் சரிந்த நபரைக் கடிந்துகொள்ளும் ஒருவர், இரண்டாவது நிகழ்வில் தன்மீது சகபயணி தூங்கி விழுவதை அனுமதிக்கிறார். ஏனெனில் அவர் சக பயணி மட்டுமல்ல, அவரது அன்பிற்குரியவர்.
இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது. அன்புக்குரியவர்களின் கஷ்டங்களை ஏற்க எல்லோரும் தயார். இவர் நம்மவர் என்ற எண்ணமே அங்கு பாசஉணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால், அறிமுகமற்ற ஒருவரது கஷ்டத்தைப் பங்கிட யாரும் தயாரில்லை. அவரும் சக மனிதர்தான் என்பது மறந்துபோகிறது.
இது வெறும் பேருந்துப் பயணத்துக்கு மட்டும் பொருந்துவதல்ல. அண்டை மாநிலங்களுடனான நதிநீர்த் தாவாக்களிலும் இந்த மனநிலையைப் பொருத்திப் பார்க்கலாம்.
சிந்தித்துப் பாருங்கள். கர்நாடக மாநிலத்திலுள்ள மக்கள், இதே பாசஉணர்வுடன் தமிழக மக்களை சகபயணிக்கு மேலாக, அன்பிற்குரியவர்களாகக் கருதினால் எப்படி இருக்கும்? காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னை உருவாகுமா?
முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக அணிதிரளும் கேரள மக்கள், இதே பாசஉணர்வுடன் இருந்தால், பிரச்னை முற்றி இருக்குமா? தமிழகத்திலுள்ள மக்களும் நம்மைப் போன்ற மக்கள்தான்; அவர்களது அடிப்படைத் தேவைக்கு எதிராகப் போராடலாமா என்ற கேள்வியை அவர்களது மனசாட்சி எழுப்பி இருக்காதா?
நதிநீர் என்பது இயற்கை அளித்துள்ள வரம். அதை வீணாகக் கடலில் கலப்பதைவிட அணை கட்டித் தேக்கினால் வறட்சிக் காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது மானுட நன்மையைக் கருதி எடுக்கும் முடிவு. இரு மாநிலங்களிடையே பாயும் நதியில் அணைகட்டி நீரைத் தக்க வகையில் பயன்படுத்துவதைப் பொருத்த வரை, இருததரப்பிலும் பெருந்தன்மையான அணுகுமுறை தேவைப்படுகிறது.
முதலாவதாக, இரு தரப்பிலும் ஒருவரை ஒருவர் பரிபூரணமாக நம்ப வேண்டும். இரண்டாவதாக, இயற்கை வளத்தை வீணடிக்கக் கூடாது என்ற அறிவார்ந்த உணர்வுடன் இருதரப்பும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். மூன்றாவதாக, ஒரு காலகட்டத்தில் எடுக்கப்படும் முடிவு பிற்கால சந்ததியினருக்கும் நன்மை விளைவிப்பதாக இருக்க வேண்டும்.
முந்தைய தலைமுறையினரிடம் காணப்பட்ட அத்தகைய தொலைநோக்குப் பார்வையும், பரந்த மனப்பான்மையும் இப்போது அருகிவிட்டதையே, தற்போதைய நதிநீர்ப் பிரச்னைகள் காட்டுகின்றன. மொத்தத்தில் தமிழகமோ, கர்நாடகமோ, கேரளமோ, எல்லாமே பாரத நாட்டின் அங்கங்கள்தான்; அங்கு வாழ்பவர்களும் நமது சகோதரர்கள்தான் என்ற நேச உணர்வு குறைந்துவிட்டது.
இதனால்தான் ஒரே அரசியல் கட்சியின் இரு மாநிலத் தலைவர்கள் மாறுபாடான கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். தேசியக் கட்சி, பிராந்தியக் கட்சி என்ற பாகுபாடே அங்கு மறைந்துபோகிறது. நாட்டைப் பிணைக்க வேண்டிய அரசியலே மக்களைப் பிளவுபடுத்தும் விதிவசத்தை அனுபவிக்கிறோம்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழக அரசியலில் இப்போது நிலைகொண்டிருக்கிறது. கர்நாடகத்தை எதிர்த்து முழங்கிய அதே அரசியல் தலைவர்கள் இப்போது கேரளத்தை எதிர்த்து கோஷமிடுகிறார்கள். கேரளத்திலும் இதே நிலை.
இருதரப்பிலும் வெறுப்பை உமிழும் பிரசாரம் நடக்கிறது. நடுநிலை வகிக்க வேண்டிய மத்திய அரசோ, கடமை மறந்து தடுமாறுகிறது; நீதிமன்ற உத்தரவுகளை முறைப்படி அமல்படுத்தத் தயங்குவதை அரசியல் ராஜதந்திரமாகக் கருதுவதே, பிரச்னையைப் பெரிதுபடுத்துகிறது.
இதற்கு என்னதான் தீர்வு? இரு மாநில மக்களையும் சமமாகக் கருதும், அரசியல் லாபத்தைவிட நாட்டு நன்மையை முக்கியமாகக் கருதிச் செயல்படும் தலைமையே இப்போதைய தேவை. நாட்டு மக்கள் அனைவரையும் சகோதரர்கள் என்ற உணர்வுகொள்ளச் செய்யும் கல்விமுறையும் தேவை.
இவை இப்போது பற்றாக்குறையாக இருக்கலாம். இந்தப் பற்றாக்குறை சரியாகாமல், நதிநீர்ப் பற்றாக்குறை தீராது. முதல் பற்றாக்குறை நிவர்த்தியாக, இப்போதைக்கு இறைவனைப் பிரார்த்திப்போம். அதுவரை, பேருந்தில் நம்மீது தூங்கி விழும் சக பயணியை சகித்துக் கொள்ளவாவது முயற்சிப்போம்.
.
No comments:
Post a Comment