பின்தொடர்பவர்கள்

Thursday, December 15, 2016

நமக்கெலாம் காப்பு!திருப்பெரும்புதூரில் அவதரித்த
திருமாலின் இளையவன்.
திருக்கச்சியுறை வரதராசனின்
ஆணைவழி நடந்த அடியவன்.
திருவரங்கம் கோயில் புதுமை செய்த
கைங்கர்ய வல்லுநன்.
திருவேங்கடத்தைப் பேரரசாக்கிய
திண்மை மிக்க மன்னவன். 1

சங்கு, சக்கரம் தோள்களில் பொறித்து
சங்கல்பம் நிறைவேற்றிய சநாதனன்.
தாழ்த்தப்பட்டோரையும் கோயிலில் நுழைத்து
சாதனை செய்த புரட்சியாளன்.
திவ்யப் பிரபந்தங்களை பிரபலப்படுத்த
தெய்வம் அருளிய தமிழ் முனி.
வடமொழியில் கரைகண்ட வேதவித்து.
ஸ்ரீபாஷ்யம் கண்ட வைணவ முத்து. 2
 .
உலகில் பிறந்த அனைவரும் அடியார்.
உடையவன் முன்னால் அனைவரும் சமமே.
மானுட வேற்றுமை மாதவன் அறியான்.
மாய இருளை நீக்கும் கதிரோன்
அனைவருக்கும் பொது உடைமையென
திண்ணமாய் உரைத்த மனிதன்.
திருக்குலத்தோரை அரவணைத்து
சமுதாய ஒருமைப்பாடு கண்ட இனியன். 3
 .
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே,
தீண்டாமைக்கு கொள்ளி வைத்தவன்.
பொருளாதார ஏற்றத் தாழ்வுகள்
பக்திக்கு இல்லையென புள்ளி வைத்தவன்.
திருக்கோயில்கள் திறம்பட இயங்க
வழிமுறைகளைச் சொல்லி வைத்தவன்.
அகங்காரம் என்னும் மாயப்பேயை
தன்னிடமிருந்து தள்ளி வைத்தவன். 4
 .
இல்லறம் தன்னில் சிறுமை கண்டதும்
துறவு பூண்ட தூயவன்.
இல்லறத்தாரை மடாதிபதியாக்கி
இயக்கம் வளர்த்த மாயவன்.
விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை
விளக்க வந்த வேதியன்.
ஜீயர் படையுடன் திக்கெலாம் வென்ற
திருவருள் பெற்ற சோதியன். 5
 .
திருவாய்மொழியைப் பரவலாக்கிய
நம்மாழ்வாரின் ஓதுவன்.
பாவை பாடிய கோதையின் ஆசையை
நிறைவேற்றிய சோதரன்.
அருகில் வருவோர் அனைவரும் உயர
நல்வழி காட்டும் சாதகன்.
சரணாகதியை முதன்மைப்படுத்தி
துறவுக்கு இலக்கணமான யதிராஜன். 6
 .
பலரிடம் கற்ற அந்தப் பரமன்,
குருவை விஞ்சிய சிஷ்யன்.
குருநாதர்களையே சீடனாகப் பெற்ற
அரிதினும் அரிய அவதார புருஷன்.
ஆளவந்தாரின் ஆசைகளை
பூர்த்தி செய்த புன்ணியன்.
ஆச்சார்ய பரம்பரையில் அவரது அடியொற்றி
ஆன்மிகம் புதுப்பித்த சூரியன். 7
 .
அந்த இளைஞன் கோயில் மதிலேறி நின்றபோது
வைணவம் திருப்புமுனை கண்டது.
இறைவனை அடையும் ரகசிய வழியை
உணர்ந்தவுடனே உத்வேகம் பிறந்தது.
குருநாதர் சொல்லை மீறி அவன்
எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்தபோது
அங்கு ஒரு திருக்கோஷ்டி உருவானது.
இறைவனின் அடியார் படைக்குக் கருவானது. 8
 .
தானொருவன் நரகம் புக்கினும்
மானுடர் அனைவரும் வைகுந்தம் ஏக
தன்னை அளித்த தயாபரனை
அப்போது உலகம் கண்டது.
எம்பெருமானாரின் கருணை மழை
எல்லோரையும் நனைத்தது.
சௌமிய நாராயணர் திருத்தலம்
ராமானுஜனால் பேறு பெற்றது! 9
 .
ராமானுஜன் நாமம் நல்லவை அருளும்.
ராமானுஜன் நினைவு நற்கதி அளிக்கும்.
ராமானுஜன் வழியே நாட்டைக் காக்கும்.
ராமானுஜன் வாழ்வே நமக்கெலாம் காப்பு. 10
.

    காண்க: இராமானுஜம்1000


Tuesday, June 14, 2016

அன்பர்களுக்கோர் அறிவிப்பு....

உங்களுக்காகக் காத்திருக்கிறது மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ..


குழலும் யாழும் வலைப்பூவின் தொடர்ச்சியாக,

 

வேர்ட்பிரஸ் தளத்தில் 

 

மேம்படுத்தப்பட்ட புதிய வலைப்பூ

 

அன்பர்களின் கவனத்துக்காகக் காத்திருக்கிறது...

 

 அதன் முகவரி:

 

https://writervamumurali.wordpress.com/


இனிமேல் அதில் தொடர்ந்து எனது ஆக்கங்கள் இடம் பெறும். 

 

 

.

Thursday, October 16, 2014

புத்தரின் புன்னகைகுயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது.
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.
ஓங்கி உயர்ந்த அரசமர நிழலில்
மோன நிலையில் இருக்கிறார் புத்தர்.
மயில் ஆடிக்கொண்டிருக்கிறது;
அமைதி எங்கும் விரிந்திருக்கிறது.

ஊர்க்கோடியில் வீற்றிருக்கும்
காவியுடைத் துறவியைக் காண
கூட்டம் குழுமுகிறது; நோட்டமிடுகிறது.
வணங்கிய மக்களை வணங்கி,
அமுத மொழிகளைப் பகர்கிறார் புத்தர்:

ஆசையை விட்டொழியுங்கள்; அகிலத்தை ஆளுங்கள்.
தர்மம் செய்யுங்கள்; தர்மப் பாதையில் செல்லுங்கள்.
சங்கம் ஆகுங்கள்; சங்கமம் ஆக்குங்கள்.
புத்தன் ஆகுங்கள்; புது உலகைக் காணுங்கள்.

கூறிய புத்தனை பணிகிறது கூட்டம்.
மலர்களைத் தூவுகின்றனர் மக்கள்.
தூவிய மலர்களை திருப்பி வழங்கி
ஆசி அளிக்கும் புத்தனைக் கண்டு
ஒருவன் மனதில் குமுறும் கோபம்.

இத்தனை நாட்கள் கட்டிக் காத்த
ஆசைகள் பொய்யா? பூசைகள் பொய்யா?
சீறும் கோபம் சொல்லினில் தெறிக்க
நிந்தனை மொழிகளால் அர்ச்சனை செய்தான்.
கோபத்தாலே நரம்பு புடைக்க
கத்திய அவனை கருணை தவழ
புத்தர் பார்த்தார்; புன்னகை புரிந்தார்.

பலமணி நேரம் வசைமொழி கூறியும்
புன்னகை மாறா புத்தனைப் பார்த்து,
ஓய்ந்தான் எளியவன்; புத்தர் சிரித்தார்.
மெல்லிய குரலில் உறுதியாய் ஒலித்தார்:

பக்தர்கள் தூவிய நறுமண மலர் போலவே
உனது குறுமொழி மலர்களை
புன்னகையாலே திருப்பித் தந்தேன்;
ஆசை இல்லா உள்ளம் இருந்தால்
புகழால் போதையும், இகழால் வாதையும்
நிகழ்வது இல்லை; நித்திய உண்மை.

என்றார் புத்தர்.
எளியவன் உணர்ந்தான்.
கண்ணீர் வழிய
கரங்கள் குவித்தான்.

புத்தரின் புன்னகை எங்கும் பரவுகிறது.
உலகில் அமைதி தவழ்கிறது.
மாலைச் சூரியனின் பொற்கிரணங்கள் வருட
மான்கள் மருண்டோடுகின்றன.
உடன் புலிகள் விளையாடுகின்றன.

குயில்களின் இன்னிசை எங்கும் நிறைந்திருக்கிறது
நறுமண மலர்களின் சுகந்தத்தை சுமந்தபடி
மெல்லிய தென்றல் எங்கும் தவழ்கிறது.

Thursday, June 26, 2014

பசுமை நிறைந்த நினைவுகள்.. பாடிப் பறந்த பறவைகள்...


நாச்சிமுத்து பாலிடெக்னிக் - பிரதான கட்டடம்

25 ஆண்டுகள் என்பது மானுட வாழ்வில் பெரும்பகுதி. அப்படிப்பட்ட 25 ஆண்டுகளைக் கடந்து, முன்னர் தன்னுடன் பயின்ற நண்பர்களைக் காண்பது ஒரு பேறு.

1986- 89-இல் பொள்ளாச்சியில் உள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக்கில் நான் பட்டயப்படிப்பு (DME) படித்தேன். அப்போது என்னுடன் படித்த சக மாணவ நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தால் (NAPAA) வாய்த்தது.

கடந்த 15.06.2014, ஞாயிற்றுக்கிழமை, நாச்சிமுத்து பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கத்தில் இந்தக் கூடுதல் நடைபெற்றது. அங்கு பயின்று பொன்விழா காணும் முன்னாள் மாணவர்களும் (1964 பேட்ச்) வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களும் (1989 பேட்ச்) அதில் சந்தித்து மலரும் நினைவுகளுடன் கட்டியணைத்துக் கொண்டோம்.

நாங்கள் படித்தபோது பாலிடெக்னிக் வளாகத்தில் மரங்கள் தான் அதிகம்;  காடுபோலக் காட்சி அளிக்கும். இப்போது எல்லா இடங்களிலும் கட்டடங்கள். டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும் அதே வளாகத்தில் இயங்குவதால், கல்வி நிறுவன வளாகமே முற்றிலும் தோற்றம் மாறி இருந்தது.

பாலிடெக்னிக் வளாகம் மட்டுமல்ல, நாங்களும் தான். 25 ஆண்டுகள் அல்லவா? பலரும் இளமைப் பருவத்தைக் கடந்த அனுபவ நிலையை தோற்றத்தில் காட்டினோம். ஆயினும், ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு, பெயரை மறக்காமல் அழைத்து, நலம் விசாரித்து, குதூகலித்தோம்.

நாங்கள் கல்லூரியிலிருந்து பிரிந்தபோது எங்கள் வயது 18 ஆக இருந்தது. இப்போது மீண்டும் சந்திக்கும் போது, வாழ்வின் முக்கியமான வளர்ச்சிக்கட்டத்தில் பெரும்பகுதியைக் கடந்து 43 வயதில் இருக்கிறோம்.

மூன்று ஆண்டுகள் ஒன்றாக கல்வி வளாகத்தில் திரிந்த நாட்கள்... ஒருவருடன் ஒருவர் முரண்பட்டு ஊடிய நாட்கள்... கொண்டாட்டமாகக் கழிந்த, இனி வரவே இயலாத இனிய நாட்கள்... எல்லோரும் நினைவுகளில் மூழ்கித் தத்தளித்தோம்.

நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்புறமுள்ள கல்தேர் (கல்வி நிறுவன சின்னம்)


சிலர் குடும்பத்துடன் வந்திருந்தனர்; சிலர் கோடீஸ்வரர்களாக வளர்ந்திருந்தனர்; சிலர் துறை மாறி வேறு துறைகளில் வெற்றிக்கொடி நாட்டியிருந்தனர். சிலர் வெளிநாட்டிலிருந்தும் வந்திருந்தனர். வயதின் முதிர்ச்சியும் அனுபவத் தெளிவும் பலரிடமும் வெளிப்பட்டது. ஆனாலும், படித்தபோது இருந்த அதே உரிமை உணர்வுடன் அனைவரும் ‘டா’ போட்டுப் பேசிக் கொண்டோம்.

இவ்வாறு பேசிக்கொள்ள நண்பர்களை விட்டால் வேறு ஆளில்லை. எங்கள் யாரிடமும் படாடோபம் இல்லை;  கடந்த 25 ஆண்டுகளில் பல இடங்களில் பயணித்திருந்தாலும், இத்தகைய சகோதரத்துவ உணர்வுடன் கூடிய நட்புறவை, பாலிடெக்னிக்கிற்குப் பிந்தைய காலத்தில் எங்கும் பெற முடியவில்லை என்பது சட்டென உறைத்தது.

ஒவ்வொருவரும் தங்களை மேடையில் அறிமுகப்படுத்திக்கொண்டபோது, அவர்களின் வளர்ச்சி கண்டு ஒவ்வொருவரும் பெருமிதம் கொண்டோம். மொத்தத்தில் நாங்கள் அனைவரும் எங்களை நாங்களே அன்று புதுப்பித்துக் கொண்டோம்.

இதற்கு மிக முக்கிய காரணியாக அமைந்தவர், சக மாணவரும், இபோது கோவையில் சிறுதொழிற்கூடம் நடத்துபவரும், கோவை  ‘காட்மா’ பொருளாளருமான ஜே.மகேஸ்வரன். அவர்தான் கடந்த 2 மாதங்களாக பெரும் பாடுபட்டு 100-க்கு மேற்பட்ட முகவரிகளைச் சேகரித்து, அனைவரையும் ஒரே நாளில் சந்திக்க ஏற்பாடு செய்தவர்.

பலவகைகளில் முயன்றும் ஐந்து துறைகளிலிருந்து 300 பேர் வர வேண்டிய நிகழ்ச்சிக்கு நூற்றுக்கு மேற்பட்டோரே வந்திருந்தனர். பலர் உலகின் பல மூலைகளில் இருப்பதால், வர இயலவில்லை. அதிலும் இயந்திரவியல் (DME) பிரிவில் சுமார் 60 பேர் மட்டுமே வந்திருந்தனர்.  வந்தவர்களிலும் பலர் குழுக் குழுவாகப் பிரிந்ததால் புகைப்படம் எடுக்கும்போது பலர் விடுபட்டனர்.

இத்தகைய சந்திப்பை அரை நாளில் நடத்திவிட முடியாது என்பது உணரப்பட்டது. இனி ஆண்டுதோறும் ஒருநாளில் நண்பர்கள் ஏதாவது ஒரு இடத்தில் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

இப்போதைக்கு அன்று நிகழ்ந்த சந்திப்பின் இரு புகைப்படங்கள் இங்கே... மலரும் நினைவுகள் தொடர்கின்றன...

படம் 1

படம் 2


மேற்படி படங்களில் இருப்போர் விவரம்:


முதல் படம்:

மேல் வரிசையில் நிற்பவர்கள்:
 • 1. பாலசந்தர்
 • 2. உமர் ஃபாரூக்
 • 3 கே.செல்வகுமார் (எம்மேகவுண்டம்பாளையம்)
 • 4. அருணகிரி
 • 5. வ.மு.முரளி (நான்)
 • 6. ரவிகுமார்
 • 7. எம்.செல்வகுமார் (அய்யம்பாளையம்)
 • 8. செந்தில்குமார் (கணபதி)
 • 9. ஆர்.பி.செந்தில்
 • 10. பழனிசாமி
 • 11. சக்திவேல்
 • 12. காளிராஜ்
கீழ்வரிசையில் நிற்போர்:
 • 1. ரகுநாத்
 • 2. ஞானமுருகேசன்
அமர்ந்திருப்போர்:
 • 1. ஜே.மகேஸ்வரன்
 • 2. லட்சுமி வெங்கட்ரமணன்
 • 3. ஆனந்தகுமார்
 • 4. கே.சுரேஷ்
 • 5. ராபர்ட்
 • 6. ஏ.சோமசுந்தரம் 

இரண்டாம் படத்தில் இருப்போர்:

நிற்பவர்கள்:
 • 1. சக்திவேல்
 • 2. ஞானமுருகேசன்
 • 3. ஏ.சோமசுந்தரம் 
 • 4. ரகுநாத்
 • 5 செல்வகுமார் (எம்மேகவுண்டம்பாளையம்)
 • 6. எஸ்.தீபன் பிரபு (ஏரிப்பட்டி செல்வகுமாரின் மகன்)
 • 7. அருணகிரி
 • 8. அருண்குமார் பாலாஜி
 • 9. செந்தில் ராஜ்குமார்
 • 10. செந்தில்குமார் (கணபதி)
 • 11. டி.கே.வெங்கடேஷ்
 • 12. ஆனந்தகுமார்
 • 13. மோகன்ராஜ்
 • 14. காளிராஜ்
 • 15. பழனிசாமி
 • 16. ஆர்.பி.செந்தில்
 • 17. பாலசந்தர்
 • 18. வ.மு.முரளி
 • 19. கே.சுரேஷ்
 • 20. வி.செந்தில்குமார் (உடுமலை)
அமர்ந்திருப்போர்:
 • 1. ரவிகுமார்
 • 2. முருகையன்
 • 3. தெய்வசிகாமணி
 • 4. எஸ்.செல்வகுமார் (ஏரிப்பட்டி)
 • 5. உமர் ஃபாரூக்
 • 6. கே.வாசு
 • 7. ராபர்ட்
 • 8. ஜே.மகேஸ்வரன்

குறிப்பு:  
படத்தில் இருக்கும் நண்பர்களைப் பற்றிய விளக்கங்கள் அடுத்த பதிவில் தொடரும்...

 .

Tuesday, June 17, 2014

25 ஆண்டுகளுக்கு முன் இங்கு தான் நான் படித்தேன்...

.

பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக்
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

.


பொள்ளாச்சி, ஜூன் 15: பொள்ளாச்சியிலுள்ள நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டும் 1989ஆம் ஆண்டும் படிப்பு முடித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) மிகவும் உணர்ச்சிகரமாக நடைபெற்றது.

பாலிடெக்னிக் வளாகத்தில் உள்ள சி.சுப்பிரமணியம் அரங்கில் காலை 10.00 மணிக்கு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு துவங்கியது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சங்கத்தின் (என்ஏபிஏஏ- நாபா) கெüரவத் தலைவர் கே.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.

முன்னிலை வகித்த  ‘நாபா' தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம், முன்னாள் மாணவர் சங்கத்தின் சேவைப்பணிகளைப் பட்டியலிட்டார். அலும்னி சங்கத்தின் நன்கொடையால் ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.

‘நாபா'வின் செயலாளர் ஆர்.கலைமணி, பொருளாளர் பெரியசாமி, பாலிடெக்னிக் முதல்வர் ஆர்.மணிவண்ணன் ஆகியோரும் பேசினர். முன்னாள் மாணவர் சங்கத்தின் வருடாந்திர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் சி.ராமசாமி, கல்வி நிறுவன வளர்ச்சியை விளக்கி, முன்னாள் மாணவர்கள் இந்த வளர்ச்சியில் இணைந்து பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்தார். தானும் 1964ஆம் வருடத்திய முன்னாள் மாணவர் என்று பெருமையுடன் அவர் குறிப்பிட்டார்.

அதன்பிறகு 1964இல் இங்கு படிப்பு முடித்து பொன்விழா காணும் முன்னாள் மாணவர்கள் கெüரவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.

அடுத்து 1989இல் இங்கு படிப்பு முடித்து வெள்ளிவிழா காணும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு துவங்கியது. சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் படித்த முன்னாள் மாணவர் டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். முன்னாள் மாணவர்களின் பிரதிநிதிகளான ஏ.கே.லட்சுமி வெங்கட்ரமணன் (சிவில்), ஜே.மகேஸ்வரன் (மெக்கானிக்கல்), ஏ.பி.சுரேஷ்குமார் (இஇஇ), கே.பி.சிவானந்தம் (சிஎஸ்இ) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநிலம் முழுவதிலுமிருந்து நூற்றுக்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் பழைய நினைவுகளை அசைபோட்டபடி தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். முன்னாள் மாணவி ஆர்.ஜெயலட்சுமி (இசிஇ) நன்றி கூறினார்.

தங்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய பாலிடெக்னிக்கிற்கு முன்னாள் மாணவர்கள் அனைவரும் உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்தனர். மதிய விருந்துடன் விழா நிறைவுபெற்றது.

படவிளக்கம்: நாச்சிமுத்து பாலிடெக்னிக் முன்னாள் மாணவர் சந்திப்புக் கூட்டத்தில் பேசுகிறார் என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் சி.ராமசாமி. உடன் அலும்னி அமைப்பின் நிர்வாகிகள் பெரியசாமி, எம்.மீனாட்சிசுந்தரம், கே.பாலசுப்பிரமணியம், ஆர்.கலைமணி, ஜே.மகேஸ்வரன், ஆர்.ஜெயலட்சுமி ஆகியோர்.


நன்றி: தினமணி (16.06.2014)

Thursday, December 19, 2013

சாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு
திருநெல்வேலி, டிச. 18: திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியுமான ஜோ டி குரூஸ் (51) எழுதிய 'கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரமாகப் பயின்றவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பிஃல். பயின்றார்.

இவர் ஏற்கெனவே 'ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலுக்கே சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது 'கொற்கை' நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கடல்வாழ் மக்களின் கதையை எடுத்துக்கூறும் வகையில் இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது முத்துக்குப் பெயர்பெற்ற இப்போதைய தூத்துக்குடி கொற்கை துறைமுகத்தில் 1914-ல் தொடங்கும் கதை, 2000-ம் ஆண்டில் நிறைவுபெறுவதைப்போல எழுதியுள்ளார். முழுவதும் கடல் சார்ந்தும் கடல்நீர், உப்புக் காற்று, மீன் வாசனை, முத்து வணிகம், கப்பல் வணிகம், கொற்கையில் பிரசித்திபெற்று விளங்கிய தொழில்கள் ஆகியவை இந்த நாவலில் அழகுற இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமன்றி, நாவலில் இடம்பெறும் காலத்தில் கொற்கையிலிருந்த ஆங்கிலேயர்கள், கத்தோலிக்கப் பிரதிநிதிகள், அரசியல் சூழல்கள் ஆகியவற்றை உள்ளடக்கி எண்ணற்றக் கதா பாத்திரங்களுடன் கொற்கையை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாதெமி விருதுக்கு தனது நாவல் தேர்வானது குறித்து ஜோ டி குரூஸ் 'தினமணி' செய்தியாளரிடம் கூறியது:

விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. பணி நிமித்தம் காரணமாக இலக்கிய வட்டத்துடன் பெரிதாக எனக்குத் தொடர்பில்லை. இருப்பினும், நான் வாழ்ந்த சூழலை, அங்கு நிலவியவற்றை பதிவு செய்வதற்காக இரு நாவல்களை எழுதியுள்ளேன். 2004-ல் 'ஆழிசூழ் உலகு' வெளியானது. 2009 டிசம்பரில்' கொற்கை' நாவலை வெளியிட்டேன். மூன்றாவதாக கப்பல் சார்ந்த மற்றொரு நாவலை எழுதவுள்ளேன்.

எனது 'கொற்கை' நாவல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு பெற்றிருப்பதை, கடற்கரைச் சமுதாயத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன். இதன் மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை (மேல்தட்டு சமூகம்) கடற்கரை சமுதாயத்தின் மீதும், நீர்த்தேவதையின் மக்கள் மீதும் திரும்பும் என நினைக்கிறேன் என்றார் அவர்.

இவருக்கு மனைவி சசிகலா, 6-ம் வகுப்பு படிக்கும் மகன் அந்தோனி டி குரூஸ், 5-ம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமா டி குரூஸ் ஆகியோர் உள்ளனர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.
சென்னையில் வணிகக் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் என்டிசி லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
தகவல்: தினமணி (19.12.2013)

***

கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்:

சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி

-வி தேவதாசன்
 
கௌரவம் மிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி: 

இந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் உழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா
 
நிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை. 

இன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?
 
கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது. 

பெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா?
 
நிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.

நீங்கள் எப்படி எழுத்துலகுக்கு வந்தீர்கள்?
 
பொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து. 

மிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது?
 
நான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது. 

உங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...?
 
"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை. 

உங்களுடைய அடுத்த நாவல் பற்றி….?
 
முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும். 

தகவல்: தி இந்து (19.12.2013)

பி.கு:
நண்பர் திரு. ஜோ.டி.குருஸ் சாஹித்ய அகாடமி விருது பெறுதில் நானும் மகிழ்கிறேன்.