Thursday, December 19, 2013

சாகித்ய அகாதெமி விருதுக்கு 'கொற்கை' நாவல் தேர்வு




திருநெல்வேலி, டிச. 18: திருநெல்வேலி மாவட்டம், உவரியைச் சேர்ந்த எழுத்தாளரும் தனியார் சரக்குப் போக்குவரத்து நிறுவன அதிகாரியுமான ஜோ டி குரூஸ் (51) எழுதிய 'கொற்கை' நாவல் நிகழாண்டு (2013) இலக்கியத்துக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட கடலோரக் கிராமங்களில் ஒன்று உவரி. இந்தக் கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், பள்ளிக் கல்வியை திருநெல்வேலி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், உயர்கல்வியை சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., பொருளாதாரமாகப் பயின்றவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் எம்.பிஃல். பயின்றார்.

இவர் ஏற்கெனவே 'ஆழிசூழ் உலகு' எனும் நாவலை எழுதியுள்ளார். அந்த நாவலுக்கே சாகித்ய அகாதெமி விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, இவரது 'கொற்கை' நாவலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கடல்வாழ் மக்களின் கதையை எடுத்துக்கூறும் வகையில் இந்த நாவலை அவர் எழுதியுள்ளார். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்தபோது முத்துக்குப் பெயர்பெற்ற இப்போதைய தூத்துக்குடி கொற்கை துறைமுகத்தில் 1914-ல் தொடங்கும் கதை, 2000-ம் ஆண்டில் நிறைவுபெறுவதைப்போல எழுதியுள்ளார். முழுவதும் கடல் சார்ந்தும் கடல்நீர், உப்புக் காற்று, மீன் வாசனை, முத்து வணிகம், கப்பல் வணிகம், கொற்கையில் பிரசித்திபெற்று விளங்கிய தொழில்கள் ஆகியவை இந்த நாவலில் அழகுற இடம் பெற்றுள்ளன.

இதுமட்டுமன்றி, நாவலில் இடம்பெறும் காலத்தில் கொற்கையிலிருந்த ஆங்கிலேயர்கள், கத்தோலிக்கப் பிரதிநிதிகள், அரசியல் சூழல்கள் ஆகியவற்றை உள்ளடக்கி எண்ணற்றக் கதா பாத்திரங்களுடன் கொற்கையை நமது கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில் இந்த நாவல் படைக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாதெமி விருதுக்கு தனது நாவல் தேர்வானது குறித்து ஜோ டி குரூஸ் 'தினமணி' செய்தியாளரிடம் கூறியது:

விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை. பணி நிமித்தம் காரணமாக இலக்கிய வட்டத்துடன் பெரிதாக எனக்குத் தொடர்பில்லை. இருப்பினும், நான் வாழ்ந்த சூழலை, அங்கு நிலவியவற்றை பதிவு செய்வதற்காக இரு நாவல்களை எழுதியுள்ளேன். 2004-ல் 'ஆழிசூழ் உலகு' வெளியானது. 2009 டிசம்பரில்' கொற்கை' நாவலை வெளியிட்டேன். மூன்றாவதாக கப்பல் சார்ந்த மற்றொரு நாவலை எழுதவுள்ளேன்.

எனது 'கொற்கை' நாவல் சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு பெற்றிருப்பதை, கடற்கரைச் சமுதாயத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கிறேன். இதன் மூலம், சமவெளி சமுதாய மக்களின் பார்வை (மேல்தட்டு சமூகம்) கடற்கரை சமுதாயத்தின் மீதும், நீர்த்தேவதையின் மக்கள் மீதும் திரும்பும் என நினைக்கிறேன் என்றார் அவர்.

இவருக்கு மனைவி சசிகலா, 6-ம் வகுப்பு படிக்கும் மகன் அந்தோனி டி குரூஸ், 5-ம் வகுப்பு படிக்கும் மகள் ஹேமா டி குரூஸ் ஆகியோர் உள்ளனர். குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார்.
சென்னையில் வணிகக் கப்பல் மற்றும் சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் என்டிசி லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் உள்ளார்.
தகவல்: தினமணி (19.12.2013)

***

கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்:

சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ டி குருஸ் பேட்டி

-வி தேவதாசன்
 
கௌரவம் மிக்க சாகித்ய அகாடமி விருதை கொற்கை நாவல் வென்றுள்ள சூழலில் தி இந்து நாளேட்டுக்காக ஜோ டி குருஸ் அளித்த பிரத்தியேகப் பேட்டி: 

இந்த நாவலை எழுத 5 ஆண்டு காலத்தை செலவிட்டுள்ளீர்கள். இந்த பெரும் உழைப்புக்கு இவ்வளவு உயர்ந்த தேசிய விருதை எதிர்பார்த்தீர்களா
 
நிச்சயமாக இல்லை. ஆனால் எனது பணியை என் சமூகத்தின் தம்பிமார்கள் ஒருநாள் புரிந்து கொள்வார்கள் என எதிர்பார்த்தேன். தமிழ்ச் சமூகம் ஒரு நாள் என்னை அங்கீகரிக்கும் என நம்பினேன். ஆனால் அது எப்படிப்பட்ட அங்கீகாரம் என்பதை என்னால் ஊகிக்க இயலவில்லை. 

இன்று மிக உயர்ந்த விருது கிடைத்துள்ளதை எப்படி உணர்கிறீர்கள்?
 
கடற்கரை சமூகங்களுக்கு கிடைத்த முதல் அங்கீகாரமாகக் கருதுகிறேன். அதுவும் தேசிய அளவிலான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் மிரட்சியாகவும் உள்ளது. 

பெரும் கொண்டாட்டம் தரும் விருது என இதனைக் கருதலாமா?
 
நிச்சயமாக இல்லை. கொண்டாட இதில் எதுவும் இல்லை. குறிப்பாக கொண்டாடுவதற்கான மனநிலை என்னிடம் இல்லை. மாறாக நான் பிறந்த சமூகத்தின் மீதான எனது பொறுப்புகளையும் கடமை களையும் அதிகப்படுத்தியுள்ளதாக கருது கிறேன். எனக்கு முன்னால் இறைந்து கிடக்கும் மிகப்பெரும் களப்பணியை நினைவூட்டுவதாக எண்ணுகிறேன்.

நீங்கள் எப்படி எழுத்துலகுக்கு வந்தீர்கள்?
 
பொதுவாகவே அனுபவங்களையும், தகவல் களையும் சேகரித்து சிறு சிறு குறிப்புகளாக பதிவு செய்யும் வழக்கம் என்னிடம் உண்டு. ஆனால் அதனை ஒரு இலக்கியமாக பதிவு செய்வேன் என்று ஒரு நாளும் எண்ணியதில்லை. தமிழினி பதிப்பகத்தின் வசந்தகுமாருடன் எனது கடல் சார் வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காலத்தில் அவர்தான் என்னை எழுதுங்களேன் என்று முதலில் கூறினார். அதனைத் தொடர்ந்து நான் எழுதிய நாவல்தான் 'ஆழி சூழ் உலகு' என்ற பெயரில் அவர் பதிப்பகத்திலிருந்து வெளிவந்தது. ஆக, வசந்தகுமாருடன் நான் நிகழ்த்திய உரையாடல்களின் நீட்சி தான் எனது எழுத்து. 

மிகப்பெரும் வணிக நிறுவன த்தில் தலைமைப் பொறுப்பில் உள்ள உங்களால் எப்படி நேரம் ஒதுக்கி எழுத முடிகிறது?
 
நான் அலுவலகத்தில் எதுவும் எழுதுவதில்லை. வீட்டுக்கு திரும்பிய பிறகுதான் எழுதுவேன். நான் மிகவும் தனிமை விரும்பி. இதனை புரிந்து கொண்ட மையால் வீட்டில் நான் தனிமையில் இருக்கும் நேரத்தில் என் மனைவி அதில் குறுக்கீடு செய்ய மாட்டார். அவரது இந்த ஒத்துழைப்புதான் நான் படிப்பதற்கும், எழுதுவதற்கும் பெரும் உதவியாக உள்ளது. 

உங்களைப் பற்றிய உங்கள் மனைவியின் ஆசை...?
 
"ஏன் இப்படியே இருக்கீங்க, ஒரு நாளைக்காவது சிரிங்களேன்" என்று எனது மனைவி அடிக்கடி கூறுவார். நான் சிரிக்க வேண்டும், அதுவும் மனம் விட்டு சிரிக்க வேண்டும் என்பது எனது மனைவியின் ஆசை. ஆனால் அப்படி சிரிப்பதற்கான சூழல் இதுவரை எனக்கு அமைய வில்லை. 

உங்களுடைய அடுத்த நாவல் பற்றி….?
 
முதல் நாவல் கட்டுமரத்தை மையப்படுத்தியது. இரண்டாவது நாவல் பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. அடுத்து நான் பெரிய கப்பலில் பயணிக்க விரும்பு கிறேன். குறிப்பாக என் தொழில் சார்ந்த வணிகக் கப்பல்கள் மற்றும் அவைகளுடன் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியதாக அது இருக்கும். 

தகவல்: தி இந்து (19.12.2013)

பி.கு:
நண்பர் திரு. ஜோ.டி.குருஸ் சாஹித்ய அகாடமி விருது பெறுதில் நானும் மகிழ்கிறேன்.

No comments:

Post a Comment