பின்தொடர்பவர்கள்

Thursday, December 31, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

புல்நுனிமேல் நீர்போல நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை - இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான் கேள்அலறச்
சென்றான் எனப்படுதலால்.
-நாலடியார்
(யாக்கை நிலையாமை - 29)
பொருள்:
ஒருவன் இப்பொழுது நின்று கொண்டிருந்தான்; உட்கார்ந்தான்; படுத்தான்; உறவினர் அழ இறந்தான் என கூறப்படுவது தான் வாழ்க்கை. புல்நுனி மீதிருக்கும் பனித்துளி போன்றதே இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து, இப்பொழுதே அறவினைகளைச் செய்க!
.

உருவக கவிதை - 18


காலச்சுவடுகள்

காலப்பாதையில்
என் சுவடுகள்.

திரும்பிப் பார்க்கிறேன்
என் சுவடுகளா இவை?
எனக்கே வியப்பாக இருக்கிறதே!
என்னுடையவையா இவை?

ஒவ்வொரு கால்சுவடுகளும்
ஓரொரு வகையாய்.
ஒன்று நீளமாய்;
ஒன்று அகலமாய்;
ஒன்று ஆழமாய்;
ஒன்று கண்ணுக்கே புலப்படாததாய்.
சில சுவடே பதியாமல்!

என் சுவடுகளா இவை?
எனக்கே ஐயம் தான்.
'ஐயம்' என்றால்
சந்தேகம் மட்டுமல்ல-
பயமும் தான்.

என் சுவடுகளுக்குக் கீழே
இன்னும் பல சுவடுகள்.
ஒ, எத்தனையோ பேர்
நடந்திருக்கிறார்கள்-
விதவிதமாய்.
சில அழிந்துவிட்டன;
இன்னும் சில
இருந்துகொண்டிருக்கின்றன.
நான் நடந்து
கொண்டிருக்கிறேன்.

முன்னே திரும்பினேன்-
அதோ, யாரோ
சென்று கொண்டிருக்கிறார்.
அவருடைய சுவடும்
விதவிதமாய்.

பாதை சென்று கொண்டே இருக்கிறதே?
முடியுமா?

ஏன் திடீரென
என் சுவடுகள் தெரியவில்லை?
ஆழமாய் நடக்க வேண்டும்.
பதிக்க வேண்டியது என் கடமை
பாதை முடிவு பெறும்;
நான் முடிப்பேன்.

ஆஹா, என் சுவடுகள்
ஆழப் பதிகின்றன.

முன்னால் செல்பவர்
திரும்பிப் பார்க்கிறார்-
தன் சுவடுகளை மட்டும்.
என்னைப் பார்க்கவில்லை போலிருக்கிறது.
எனக்குப் பின்னாலும்
யாரோ வந்து கொண்டிருக்கிறார்.

என் சுவடுகளை
நானே விமர்சித்துக்கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்.

காலப் பாதையின் இறுதியை
என் சுவடுகள்
எட்டியே தீரும்!
எழுதிய நாள்: 23.11.1989

.
Wednesday, December 30, 2009

இன்றைய சிந்தனைபாரதி அமுதம்


குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;
சொல்லடி, சொல்லடி. சக்தி மாகாளீ!
வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு!

தரித்திரம் போகுது; செல்வம் வளருது;
படிப்பு வளருது; பாவம் தொலையுது;
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்,
போவான், போவான், ஐயோவென்று போவான்!...
-மகாகவி பாரதி
(புதிய கோணங்கி)

.

ஏதேதோ எண்ணங்கள்


வெற்றிகரமான 120வது நாள்!

'குழலும் யாழும்' வலைப்பூ துவங்கி இன்றுடன் 120நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை மரபுக் கவிதைகள் (60), புதுக்கவிதைகள் (59), வசன கவிதைகள் (35), உருவக கவிதைகள் (17), மொழிமாற்றக் கவிதைகள் (6), படக்கவிதைகள் (1) என மொத்தம் 178 கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.

இந்த நான்கு மாதங்களில் வலைப்பூவை செறிவாக்க கொடுத்த கவனத்தை, விளம்பரப்படுத்துவதில் காட்டவில்லை என்பதை, நண்பர்களது கருத்துகள் மூலமாக உணர்கிறேன். வரும் மாதங்களில், உங்கள் ஒத்துழைப்புடன் இந்த வலைப்பூவை பிரபலப்படுத்த முடியும் என நம்புகிறேன்.

120வது நாளின் வெற்றியாக 'பஞ்சபூத வணக்கம்' என்ற (மூன்றாவது) புதிய வலைப்பூவை துவக்குகிறேன். அதையும் படித்து உங்கள் ஆலோசனைகளை தெரியப்படுத்துங்கள்!

புதிய வலைப்பூ முகவரி: http://panjaboothavanakkam.blogspot.com/
-வ.மு.முரளி

மரபுக் கவிதை - 60


நல்ல காலம் பிறக்குது!


நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!

வல்லமை வளருது! வல்லமை வளருது!
அல்லவை அழியுது! அறமே பெருகுது!
நல்லவர் வாழ்ந்திட நவநிதி வளருது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி ஜக்கம்மா, விண்ணவர் ஈஸ்வரி!
அம்மையே, நாயகி, வேதகி, வித்தகி!

வேஷங் கிழியுது! வேதனை மடியுது!
நாசங்கள் நலியுது! நன்மையே பெருகுது!
தேசங்கள் இணையுது! நேசங்கள் பரவுது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி மாகாளி, சிவசக்தி, சூலினி!
பார்வதி, சங்கரி, வேதகி, லட்சுமி!

ஒற்றுமை வளருது! உலகம் சிறக்குது!
கற்றவர் பெருகிட கயமைகள் கழியுது!
வெற்றி மேல் வெற்றியே! வேதியம் மலருது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி மீனாட்சி, காமாட்சி, கண்ணகி!
மாரியே, மங்களி, வேதகி, வைணவி!

இல்லறம் உயர்ந்திடும்! இன்பமே பெருகுது!
நீசர்கள் நடுங்கிட நீதி நிலைக்குது!
உற்றுணையாக ஓர் உதயம் நிகழுது!
நல்ல காலம் பிறக்குது!
சொல்லடி ஜக்கம்மா, பார்வதி, சங்கரி!
அம்மையே, அம்பிகே, ஆதகி, வேதகி!

நல்ல காலம் பிறக்குது! நல்ல காலம் பிறக்குது!
எழுதிய நாள்: 01.03.1991

.

Tuesday, December 29, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

வறுமையின் தத்துவம்
சமயவாதிகளுக்கு
பிரசங்கத் தலைப்பு.

குருவி ஜோசியக்காரனுக்கு
வயிற்றுப்பிழைப்பு.

கலாசிருஷ்டியோடு
எழுதுகிறவனுக்கு
நிலாச்சோறு.

கல்லூரி மாணவனுக்கு - வெறும்
பரீட்சைக் கேள்வி.
-கவிஞர் சிதம்பரநாதன்.
(அரண்மனைத் திராட்சைகள்)
.

புதுக்கவிதை - 59ஹைகூ கவிதைகள் - 2

மருத்துவமனை முன்
ஆவலாய் காத்திருக்கின்றன
அமர ஊர்திகள்.

வாரிசை உருவாக்க
இடம் தேடி அலைகிறது
இலவம்பஞ்சு விதை.

எல்லாத் திசைகளிலும்
பாய்கிறது
கடிவாளமற்ற குதிரை.

தயங்கி ஓடும் கடிகாரத்துக்கு
கொடுக்க வேண்டும்
சாவி.

.

Monday, December 28, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

மானசீக ரீதியாக அந்நியனிடம் அடிமைப்பட்டிருக்கும் நிலையானது இயற்கையான நமது நற்குணங்களை நாசமாக்கி, உலகோர் எள்ளி நகையாடக் கூடிய பொருளாக நம்மை ஆக்கிவிடும்...
-குருஜி கோல்வல்கர்
(ஞான கங்கை - பக்: 176 )

வசன கவிதை - 35எது நமக்கு புத்தாண்டு?

ஜனவரி - 1
புத்தாண்டா?
'நியூ இயரா?'
இரண்டுக்கும் இடையில்
என்ன வித்தியாசம்?

இங்கிலாந்து சென்று
சித்திரை முதல் தேதி
'ஹேப்பி நியூ இயர்'
சொல்லிப் பாருங்கள்-
வித்தியாசம்
புரியவைக்கப்படும்.

காலண்டர் மாற்றுவதாலும்
டைரி மாற்றுவதாலும்
ஜனவரி -1
புதிய ஆண்டு தான்.
விசேஷ நாட்களில் கூட ஒன்று.
விடுமுறை நாட்களில் கூட ஒன்று.
ஜனவரி -1 ஐ
கொண்டாட வேண்டியது தான்.

ஆனால்-
எது நமக்கு புத்தாண்டு?
புத்தாண்டைப் புரியாமல்
பூரித்துப் பயனென்ன?

செப்புமொழி பதினெட்டோடு
பத்தொன்பதாய்
ஆங்கிலமும் பயில்வதில்
பெருமை தான்.

ஜனவரி -1 ஐ
மகிழ்ச்சியாய் வரவேற்போம்.
எனினும்
புத்தாண்டை வரவேற்க
சித்திரைக்கே காத்திருப்போம்!

நன்றி: தினமலர் (ஈரோடு - 01.01.2002)
.

Sunday, December 27, 2009

இன்றைய சிந்தனை
சான்றோர் அமுதம்


உங்கள் தேசத்தின் எல்லா குடிமக்களும் உங்கள் சகோதர சகோதரிகளே. இந்த சகோதரத்துவத்தை உணருங்கள். உடன் வாழும் எல்லாக் குடிமக்களுடனும் அன்பு செலுத்தி ஒற்றுமையாய் வாழுங்கள்.
- சுவாமி சிவானந்தர்
.

புதுக்கவிதை - 58


யாது யான் செய்ய?

யாராவதொருவன்
இருக்க வேண்டும்
அடக்கியாள.
யாராவதொருவன்
இருக்க வேண்டும்
தனக்குக் கீழே.
யாராவதொருவனை விட
தான் பரவாயில்லை-
மனதில் நிம்மதி.
யாராவதொருவன்
முன்னேறிவிடக் கூடாது
தன்னைவிட.
யாராவதொருவன்
அல்லலுறுவது
அற்ப சந்தோசம்.
இதில்
யாதாவதொன்றாகவே
உலகம் இருக்கிறது.
யாது யான் செய்ய?
.

இன்றைய சிந்தனை


கருவூலம்

கங்கா ச யமுனா சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு.

பொருள்: இந்த நீரில் தெய்வீக நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி ஆகியவை எழுந்தருளட்டும்.

குறிப்பு: இது ஸ்நான சுலோகம். நீராடும் சாதாரண நீரில் கூட
தெய்வீக நதிகள் சங்கமமாக வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனை.
ஆனால், நாம் தற்போது தெய்வீக நதிகளையே சாக்கடைகளாக்கிக் கொண்டிருக்கிறோம்.
.

Saturday, December 26, 2009

வசன கவிதை - 34நுரை

நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
நெளிந்து நெளிந்து ஓடும் நதி ஆழமான சுழலில் திக்கித் திணறிக் கடக்கும்போது நுரை பொங்கித் தெறிக்கிறது.
நுரையின் வெண்மையும் மினுமினுப்பும், அதன் சட்டென முடிந்துபோகிற வாழ்க்கையும், நதியின் ஓட்டத்தில் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.
நிறையப் பேருக்குத் தெரிவதில்லை- நதிநீரில் கலந்துள்ள மாசுக்களின் தோற்றம் தான் நுரை என்பது.
தன்னை மாசுபடுத்தும் மானிட குலத்துக்குக் கூட நதி இங்கே ஓர் நிலையான உண்மையைச் சுட்டிக்காட்டவே விரும்புகிறதோ?
பாறைகளிலும் ஆழமான சுழல்களிலும் தன்னை மோதி, தன்னைத் தானே சுத்திகரிக்கும் நதியின் வெளிப்பாடு, மானிடர்க்காகத் தான்.
சென்ற நிமிடம் உருவான நுரைமொட்டு, நதியின் போக்கில் வளைந்த நாணலில் பட்டு வெடிக்கிறது; நாணல் சிலிர்க்கிறது.
நதிநீரில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. அதன் செதில்களில் படிந்த நுரை நமக்கு அழகாகத் தெரிகிறது. மீனுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நதிநீரில் தண்ணீர்ப் பாம்புகள் நீச்சலடித்து அளவளாவுகின்றன. தன் நச்சுத் தன்மையை விட்டு விட்டு வாழும் அதைக் கண்டு மனம் மகிழ்கிறது. ஆனால்-
நதிக்கு வெளியே ஆசை என்னும் நச்சுப்பல் கொண்ட மானிடர்களின் நடமாட்டம் அச்சப்படுத்துகிறது.
கழிவுநீர்க் கால்வாயையும் வேதிச் சாய நீரையும் நதியோடு சேர்த்துவிட்டு நடந்துபோகிறான் மானிடன். நதியின் கதறல், நுரை தள்ளிய அலறல், அவனுக்கு சிறுபிள்ளை விளையாட்டு.
நிர்மலமான நீலவானின் பிரதிபலிப்பைத் தன் நிறம் ஏறிவிட்ட நீரில் காட்டும் நதியின் சோகப் புன்னகை தான் நுரையோ?
எழுதிய நாள்: 26.07.1998

.

Friday, December 25, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்


நெருப்புப் பிழம்பைப் போன்ற சில இளைஞர்கள் வேண்டும். புரிகிறதா? அவர்கள் புத்தியும் துணிச்சலும் உடையவர்களாக இருக்க வேண்டும். எமனின் வாயில் கூடத் துணிவுடன் செல்பவர்களாக இருக்க வேண்டும். நீந்தியே கடலைக் கடக்க வல்லவர்களாக இருக்க வேண்டும். புரிகிறதா? இத்தகையவர்கள் ஏராளமாக வேண்டும்; ஆண்களும் பெண்களும் வேண்டும்.

-சுவாமி விவேகானந்தர்

.

புதுக்கவிதை - 57கார்கில் கவிதை - 3கண்ணீரில் எழுதிய
அம்மாவின் கடிதம்
நேற்று கிடைத்தது.
'பத்திரமாய்த் திரும்பணும்'
தங்கையின் பிரார்த்தனை
மனதின் ஓரத்தில்.
சவமாய்க் கிடக்கும்
சகவீரனின் துப்பாக்கி
என் கைகளில்.

நன்றி: விஜயபாரதம் (05.11.1999)


.

Thursday, December 24, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்


நாமெல்லோரும் திருடர்கள் என்றே சொல்ல வேண்டும். என்னுடைய அவசியத்துக்கு மேல் இந்தச் சமயம் எனக்கு வேண்டாதது ஒன்றை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தேனானால், அதை நான் திருடியவனே ஆவேன். மற்றவர்களின் அவசியத்துக்கு வேண்டியதான ஒன்றை அவர்களுக்குக் கிடைக்காமல் நான் மூடி வைத்தால் அது திருட்டே அல்லவா? மக்கள் சமூகத்துக்கு வேண்டியதை இயற்கை அன்னை தருகிறாள். அவனவனுக்கு வேண்டியதை அவனவன் அந்த அளவில் மட்டுமே எடுத்துக் கொண்டு வாழ்ந்தால் இந்த உலகத்தில் பிச்சை எடுக்கும் ஏழைகள் இருந்தே இருக்க மாட்டார்கள். யாரும் பசியால் சாக மாட்டார்கள்.

-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ- பக்: 39 )

.

வசன கவிதை - 33


விழிப்பு

என்னுடைய பொருளொன்று பறிபோய் விட்டது.
பேருந்தில் செல்கையில் ஜேப்படியாகி விட்டது.

என்ன காரணம்?
என்னுடைய கவனக்குறைவா?
பேருந்தில் இருந்த நெரிசலா?
திருடனின் சாமர்த்தியமா?
என்னுடைய பொருளொன்று பறிபோய் விட்டது.

திருடர்கள் என்னை அணுகக் காரணம் என்ன?
எனது மென்மையான முகமா?
வலுவற்ற உடலா?
ஊருக்குப் புதியவன் என்று ஒட்டியிருக்கிறதா?
பாவம்- வறுமையா?
என்னுடைய பொருள் பறிபோய் விட்டது.

திருட்டு நடந்தது தெரியவே இல்லையே?
நமக்கென்ன என மற்றவர்கள் இருந்துவிட்டார்களா?
வேடிக்கை பார்ப்பதில் என்னை மறந்து விட்டேனா?
நடத்துனருக்கு திருடர்கள் பற்றித் தெரியாதா?
பொருள் பறிபோய் விட்டது.

திருட்டுக் கும்பலில் எத்தனை பேர்?
ஒருவரா?
இருவரா?
ஒரு குழுவா?
'தேமே' என்று நின்றிருந்த நானும் அதில் சேர்த்தியா?
பறிபோய் விட்டது.

தனிமையில் மனம் புலம்புகிறது.
ஐம்பது ஆண்டு ஜனநாயகத்திற்கும்
என்னுடைய இன்றைய நிலைமைக்கும்
எத்தனை ஒற்றுமை?

பறிகொடுத்த பொருளை எண்ணி பெருமூச்சு வருகிறது.
''இனிமேல் விழிப்பாக இருக்க வேண்டும்''
மனம் தீர்மானிக்கிறது.

எழுதிய நாள்: 26.09.1998
(குறிப்பு: அனுபவம் பேசுகிறது)
.

Wednesday, December 23, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்


இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை! இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை! வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை...

முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதன் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங்கனவு எங்களுக்கு அறவே இல்லை! ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்! தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!

-டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

(முன்னாள் ஜனாதிபதி)

மரபுக் கவிதை - 59


வெற்றியின் சின்னம்


தோல்விகள் நமக்கு ஏணிகளாகும்
துயரம் நமக்குப் படிப்பினையாகும்;
வெற்றிக் கனியை எட்டும் பொழுதில்
வேதனை எல்லாம் சாதனையாகும்!

ஜி.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட்
சொல்லும் சேதி சாதனை தானே?
இலக்கை நோக்கிப் பயணம் செய்யும்
இளைஞனுக்கு இது போதனை தானே?

எத்தனை முறைகள் விழுந்திடும் பொழுதும்
எழுந்திட முயன்றால் மனிதம் வெல்லும்!
இதனைத் தானே ஸ்ரீ ஹரிகோட்டா
இனிதாய் நமது காதில் சொல்லும்!

இஸ்ரோ குடும்பம் வெற்றியின் சின்னம்;
இனிய நற்பாங்கின் பெருமித வண்ணம்!
இந்தியன் இனிமேல் வானை அளக்கும்
இயல்பைப் பெற்றவன் என்பது திண்ணம்!

நன்றி: விஜயபாரதம் (27.04.2001)
குறிப்பு: இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, ஜி.எஸ்.எல்.வி-டி1 ராக்கெட்டை விண்ணுக்கு 2001, ஏப்ரல் 18 அன்று வெற்றிகரமாக ஏவியதை அடுத்து எழுதிய கவிதை.

.

Tuesday, December 22, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்

உறக்க நேரத்தைப் பற்றிப் பலதிறக் கருத்து வேற்றுமைகள் உண்டு. சிலர் எட்டு மணிநேரம் என்பர்; சிலர் ஆறு மணி நேரம் என்பர்; சிலர் நான்கு மணி நேரம் என்பர். எட்டு மணிக்கு மேல் போகாமலும், நான்கு மணிக்குக் குறையாமலும் உறங்குவது நலம். ஆறு மணி நேரம் மிகப் பொருத்தம். நேரம் அவரவர் உடல்நிலைக்கு ஏற்றவண்ணம் அமையும். உறக்கம் இடை இடை இடர்ப்படல் ஆகாது. அவ்விடரால் பல கேடுகள் விளையும். இரவு பத்து மணிக்குப் படுத்து, வைகறை எழுவது இனிது.
-திரு.வி.கல்யாணசுந்தரனார்
(பெண்ணின் பெருமை- பக்: 88)
.

வசன கவிதை - 32


தூக்கம்

கொசுவிரட்டிச் சுருளின்
உபாதையின்றி,
முள்ளாய் உறுத்தும்
மெத்தையின்றி,
ஆடை விலகும்
பிரக்ஞை இன்றி,
ஆனந்தமான சயனம்.

விரைந்து செல்லும்
வாகனப் புகையுண்டு.
சுட்டெரிக்கும்
வெயிலுண்டு.
அதிரவைக்கும்
இரைச்சலுண்டு.
காலை நக்கும்
நாயோடு
அமைதியான நித்திரையும்
உண்டு.

மூட்டை தூக்கிய களைப்பு
மூன்று வேளைப் பசி
கட்டைவிரல் நகத்தில்
காய்ந்த ரத்தத்தில்
மொய்க்கும் ஈக்களை
மண்ணில் தேய்த்தபடி
நிம்மதியான உறக்கம்.

சயனம்
நித்திரை
உறக்கம்...
நண்பனே,
வேகமாக நகர்ந்துவிடு.
உன் பெருமூச்சில்
ஏழையின் தூக்கம்
கிழிந்துவிடப் போகிறது.

நன்றி: விஜயபாரதம் (14.07.2000)
.

Monday, December 21, 2009

இன்றைய சிந்தனை

குறள் அமுதம்அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
-திருவள்ளுவர்
(அழுக்காறாமை- 163)
பொருள்: தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே பிறருடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காக பொறாமைப்படுவான்.
....

வசன கவிதை - 31


ஜனனியின் ஜனனம்

இருட்குகையிலிருந்து
விடுபட்ட மகிழ்வில்
வீறிடும்
சிசுவின் அழுகை
அனைவருக்கும் ஆனந்த கீதம்.
ஏனெனில் அது -
வாழ்க்கைத் துடிப்பு;
வாழ்வின் துவக்கம்;
ஞானத்தைத் தேடும் பயணத்தின்
முதற்காலடி.

ஜனனம் -
இயற்கையின் தூண்டுதல்;
முயற்சியின் விளைவு;
தவத்தின் பலன்.
அதனால்தான்
ஜனனியின் ஜனனம்
மற்றெல்லாவற்றையும் விட
மகிழ்வூட்டுகிறது.

ஜனனத்தின் பொருள்
வாழ்வின் பெருமை.
இந்த ஜனனியின் பெருமையும்
காலத்தால் அறியப்படட்டும்.
கடவுள் அதற்கு
துணையாக நிற்கட்டும்!
வெளியான நாள்: 19.11.1999; ஜனனி சிற்றிதழ்.
குறிப்பு: மங்கலம்பேட்டையில் இருந்து, நண்பர் செந்தில் குமார் வெளியிட்ட 'ஜனனி' மாத சிற்றிதழுக்கு எழுதிய வாழ்த்துப்பா இது.
.

Sunday, December 20, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்.
-இடைக்காடர்
(திருவள்ளுவ மாலை)
.

மரபுக் கவிதை - 58


குறட்பாக்கள்

குறட்பாவை எழுதாத குறையொன்று நீங்கிற்று
அரற்றாதே மனமே அறி.

அழித்தாலும் காத்தாலும் அடித்தாலு மணைத்தாலும்
பழிக்காதே பவமே துணை.

புவிஎனது கையிலென புலம்பாதே - அவனன்றி
ஓரணுவும் அசையாது காண்.

.

Saturday, December 19, 2009


சான்றோர் அமுதம்


வெற்றி தோல்வி இரண்டுமே மனதின் விகாரங்கள்.
இன்னொரு வகையில் சொல்லப்போனால்,
வெற்றி, தோல்வி இரண்டுமே
ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள்.
இரண்டும் ஒன்றுக்கொன்று உள்ளுறவு கொண்டவை.
தோல்வியின் முடிவுதான் வெற்றி. வெற்றியின் முடிவுதான் தோல்வி.

-கவிஞர் வைரமுத்து
(தண்ணீர் தேசம் )


.

புதுக்கவிதை - 56


எல்லாமே

எல்லாம்
நன்றாக நடக்கும்.
எல்லாம்
நன்மைக்கே.
எல்லோரும்
நல்லவரே.
எல்லாம்
உண்மை தான்.
எல்லாம் ஒழுங்காக
நடக்கும் வரை.
நன்றி: விஜயபாரதம் (31.12.1999)
.

Friday, December 18, 2009

இன்றைய சிந்தனைகருவூலம்


கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நான் அறியேன்
ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாது என் வயிற்றின் அகம் படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானத் துறை அம்மானே.

- திருநாவுக்கரசர்
(திருவதிகைப் பதிகம் - தேவாரம் )

புதுக்கவிதை - 55


வாழ்க்கை - 2

நாவின் ருசி மயக்கத்தில்
வயிற்றுவலியை
மறந்த வாழ்வு.
நாப்புண்ணை சபிக்கும்
பசி படர்ந்த வயிறு.
இரண்டினூடே
ஊசலாடுகிறது
வாழ்க்கை.
நன்றி: விஜயபாரதம் (28.01.2000)
.

Thursday, December 17, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

உலகில் பற்றுதல் குறையுமளவிற்கு மனத்தில் அமைதி வளரும்.
-அன்னை சாரதா தேவி

புதுக்கவிதை - 54


பவனி

ஓபெல் அஸ்திரா
மாருதி ஜென்
கான்டசா கிளாசிக்
அம்பாசிடர்
பிரீமியர் பத்மினி
ஹூண்டாய் சான்ட்ரோ...
பலநிற கார்கள்
பவனி போகின்றன-
நடைபாதையில் உறங்கும்
நாடோடியைக் கடந்து.
நன்றி: விஜயபாரதம் (24.09.1999)
.

Wednesday, December 16, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

அஞ்சிலே ஒன்று பெற்றான்,
அஞ்சிலே ஒன்றைத் தாவி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
ஆரியர்க்காக ஏகி,
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டயலாரூரில்,
அஞ்சிலே ஒன்றை வைத்தான்,
அவன் நம்மை அளித்துக் காப்பான்.
-கவிச்சக்கரவர்த்தி கம்பர்
(ராமாயணம்)
இன்று அனுமன் ஜெயந்தி
.

உருவக கவிதை - 31அனுமன் எழுகின்றான்


''சிவப்புப் பழமென
கதிரவனைச் சிறுவயதில்
பறிக்கப் பாய்ந்த
பாலகன் நீ!
படைக்கும் கடவுளின்
பாசத்தைப் பெற்றவன் நீ!

வால்வலிவும் தோள்வலிவும்
வரமாகப் பெற்றவன் நீ!
வாயு புத்திரன் நீ!
வாசி யோகம் உணர்ந்தவன் நீ!

கலைகள் அனைத்தையும்
கரைத்துக் குடித்தவன் நீ!
குறும்பால்,
முனிவர் இட்ட சாபத்தால்
மறந்தவன் நீ!

தேவர்களின் அதிபதியின்
அரவணைப்பை
அடைந்தவன் நீ!
சிவனின் அம்சம் நீ!
சிரஞ்சீவி ஆனவன் நீ!

ராமனை இதயம் ஏத்திய
கவின் மிகு தூதுவன் நீ!

ஆற்றலின் விருட்சங்கள்
வித்தாய்
அமிழ்ந்திருக்கும்
வீரியன் நீ!

சீதை தவிக்கின்றாள்.
ஸ்ரீ ராமன் வாடுகிறான்
அஞ்சனை மைந்தா
உன் ஆற்றலை மறந்தாயா?

மொத்தத்தில் பலத்தின்
முழு உருவம் நீயன்றோ?
உன் ஆற்றல் நீயுணர்ந்தால்
உலகேழும் உன் கீழே!
அலைகடலும் உன்னுடைய
ஆற்றலுக்கு நிகரில்லை...''

ஜாம்பவான் சொல்லுகிறான் -
ஜாதகம் புரிகிறது.
சாம்பல் பறந்தோடி
தணலும் ஒளிர்கிறது...

''ஸ்ரீ ராமா என்று சொல்லி
தேகத்தை உருக்காக்கு!
சிவசிவனே என்று சொல்லி
சீற்றத்தை உருவாக்கு!
உடலைப் பெருக்கிவிடு!
உள்ளாற்றல் வெளிப்படுத்து
சத்தியம் வெல்லுமடா -
சாதனம் ஆகிவிடு!''

அனுமன் எழுகின்றான்.
அற்புதமாய் மிளிர்கின்றான்.
ஹூங்காரம் இடுகின்றான்.
குன்றாக வளர்கின்றான்.

வானரர்கள் ஆர்ப்பரிக்க,
வானவர்கள் பூத்தூவ,
கடவுளர்கள் கண்சிமிட்ட,
கண்மணியான் எழுகின்றான்.

இனியென்றும் இருளில்லை;
இடரில்லை, துயரில்லை.
பாரதத் தாய் தலைப்பிள்ளை
அனுமன் இருக்க
அச்சமில்லை!
நன்றி: விஜயபாரதம் (19.12.2003)

Tuesday, December 15, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

எங்கள் தலைவர்
எட்டி உதைத்தார்
வறுமை
வேகமாய் வெளியேறிற்று
பரட்டைத் தலையும்
எலும்பும் தோலும்
கிழிந்த கந்தையுமாக...
-கவிஞர் மீரா.
.

புதுக்கவிதை - 53


இயல்பு

கவலையற்ற எருமை மீது
மோதிவிடக் கூடாது.
கால் பின்னி நடை பயிலும்
நாய் ஜாக்கிரதை.
துடுக்கென நுழையும்
பன்றியிடம் பத்திரம்.
அறிவுரை நல்கிய
அண்ணனிடம் திரும்பி
விழுந்து
அடிபட்டது தான்
மிச்சம்.
.

Monday, December 14, 2009

இன்றைய சிந்தனை


குறள்அமுதம்

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வாரைப் பொறுத்தல் தலை
-திருவள்ளுவர்
(பொறைஉடைமை - 151)

மரபுக் கவிதை - 57


மத்திமன்

காலையில் எழுந்து கடன்களை ஆற்றி
அலுவலகத்துக்கு ஆலாய்ப் பறந்து
மேலதிகாரி முன் நெளிந்து நின்று
துவளா மனத்துடன் சுடுசொல் வாங்கி
கடமையாற்றி, மிகுபணி செய்து
அரை வயிற்றுணவு மதியம் உண்டு
மாதம் முழுவது தட்டுத் தடுமாறி
மாதம் முடிந்த சம்பள நாளில்
கஜவட்டிக்காரனுக்கு காணாமல் ஒளிந்து
பைக்கள்ளர்களுக்கு பயந்து பயந்து
சிறு நடையிட்டு வீட்டை ஏகி
ஒருமுழப் பூச்சரம் முகர்ந்து வாங்கி
மனைவியை நினைத்து மரத்தில் மோதி
விதியை நினைத்து வீக்கம் தடவி
சிறு குழந்தைக்கு மிட்டாய் வாங்கி
வீட்டை ஏகி
மனைவியின் கரத்தில் சம்பளம் தருவது
மத்திமனுக்கு மாதவம் அன்றோ?
.

Sunday, December 13, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

கருணையும் இரக்கமும் இல்லாத ஒருவனை எவ்வாறு மனிதன் என்று அழைக்க முடியும்?
-அன்னை சாரதா தேவி

புதுக்கவிதை - 52


ஹைகூ கவிதைகள் -1

காயப்படுத்தியவனுக்கும்
பால் வார்த்தது
ரப்பர் மரம்.

நாளை பறிக்கவிருந்த
கொய்யாக்கனியை
இன்றே கடித்தது அணில்.

அநாதையாய்க்
கிடக்கிறது
அறுந்துவிட்ட செருப்பு.

சிறுநீரகம்
தானம் செய்தார்
இருகண்ணும் இல்லாதவர்.

முதலில் திகைப்பு
இடையில் இணைப்பு
கடைசியில் ஹைக்கூ.
நன்றி: விஜயபாரதம் (18.09.1998)

Saturday, December 12, 2009

புதுக்கவிதை - 51


அரிதாரமும் அவஸ்தையும்

சாலை கூட
அரிதாரம் பூசிக் கொள்கிறது-
இரு புறமும் செம்மண்ணால்.
கூடவே, வட்ட வட்டமாய்
சுகாதாரப் பொட்டு.

ஆயினும்-
கட்சிக் கொடி நட,
வரவேற்பு விளம்பரம் கட்ட,
தோரண வாயில் அமைக்க,
சாலையின் இருபுறமும்
ஆங்காங்கே நோண்டிய
காயங்கள்.

அமைச்சர் வந்து
போன பின் தான்
அவஸ்தை தெரியும்.
.

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஒவ்வொரு தொண்டனும், தலைவர்களோடு நான்கு நாள் இரவும் பகலும் தங்கிப் பார்த்தானானால் அரசியலை விட்டு அவன் காதங் கடந்து ஓடுவான்.
-கவிஞர் கண்ணதாசன்
(வனவாசம் - பக்: 146 )

Friday, December 11, 2009

இன்றைய சிந்தனைகருவூலம்


எழுத்துக்கும்
வாழ்க்கைக்கும் மத்தியில்
சுவர் எழுப்பிக் கொள்ளாத
சுத்தக் கவிஞன் அவன்.

அந்த ராஜகுயில்
தனது சுதந்திர கீதம்
சுவரில் மோதி
இறந்துவிடுவதை
என்றும் விரும்பவில்லை.

அது காற்றில் கலந்து
மக்கள்
காதில் கலக்கவே
காதல் கொண்டது.

தனது சுதந்திர அவஸ்தைகளை
ஒவ்வோர் நெஞ்சிலும்
பரிமாறத் தானே
பாட்டெழுதினான்?...

அவன் எழுப்பிய போதுதானே
நம்மவர் பலர்
உறங்கிவிட்டதை
உணர்ந்தார்கள்?...
-கவிஞர் வைரமுத்து
(கவிராஜன் கதை - பக்: 50 )
(இன்று பாரதி பிறந்த நாள்)
.

மரபுக் கவிதை - 56


பாரதியைப் பார்

எத்தனை புலவர்! எத்தனை கவிஞர்!
எத்தனையோ பேர் இத்தரணியிலே!
அத்தனை பேர்க்கும் ஆதவனாக,
அவதரித்தவனே பாரதியாவான்!

வாழ்ந்தது சிலநாள் - வறுமையின் பிடியில்!
வருந்திடவில்லை தேசியக் கவிஞன்!
தன்னது கடமை மறந்தானில்லை!
தவமென வாழ்ந்தே கவிதை செய்தான்!

'உலகினில் அனைவரும் மனிதர்கள் தானே!
உற்றவர், அற்றவர் என்றிடல் வேண்டா!
எல்லாம் சமமே எண்குணன் முன்னே!'
என்றிடும் பாவில் எத்துணை உண்மை!

வித்தக ஞானி விளைநிலம் நமது!
வித்தைகள் பலசெய் சித்தர்கள் தேசம்!
அத்தனை பேர்க்குள் முத்தென வந்தான் -
அன்னவனவனே பாரதியாவான்!

தாழ்ந்திடு நாட்டைத் தட்டியெழுப்ப
போர்க்கவி பாடும் பேரிகையாக,
பற்பல கவிதை ஆக்கிய அவனின்
பதமலர் பணிந்தால் பயமது தீரும்!

விலக்கிட வேண்டிய தீதினைச் சுட்டி,
விதியதன் வலிவை விளங்கிட வைத்து,
காளியின் நடமும் கண்ணனின் குழைவும்
கானமிழைத்திடு கவிஎனத் தந்தான்!

நித்திய தெய்வ நிலையறிந்தோர்கள்
நித்தில மீதில் சுடரொளி மிளிரும்!
மாபெரும் உலகில் மாதவர் சிலரே!
மாதவர் மணியே பாரதி ஆவான்!

பாழ்படு மதத்தின் தூசுகள் நீக்கி,
பார்புகழ் வரைசெய் தூரிகையாக,
மூச்சுள்ளளவும் முனைந்திருந்ததனை
மூடர்கள் காணில் திருந்திடு முள்ளம்!

திலகரை அரசியல் குருவாய்க் கொண்டான்,
திருவள்ளுவரை கர்த்தா என்பான்!
காந்தியை மிக்க பணிவுடன் கண்டான்,
காவியமாய் இதைக் கவியினில் சொன்னான்!

சித்தர்கள் பலரில் கடைசியும் இவனே!
சிறப்புறு தேசபக்தனும் இவனே!
காழ்ப்புகள் மிகுந்த அரசியலினிலே
காரியம் ஒன்றே உயிரெனக் கொண்டான்!

பலபேர் பிறந்து, இறந்து, மறைந்தும்
பலனெதுமில்லை! பாரதியைப் பார்!
பாரதியைக் கேள்! பாரதியாய் வாழ்!
பாரதியைச் சொல்! பாருள வரையில்
பாரதி போலே நிலைத்திட நிற்பாய்!
பாரதி ஆவாய்! பாரதன் ஆவாய்!
நன்றி: மாணவர் சக்தி (டிசம்பர் - 1998)
.

Thursday, December 10, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்


பக்தியோடு தெய்வம் பணிந்திடுவோம், பாரதத்தாய்
சித்தங் களிப்படையச் செய்திடுவோம் - ஒத்துழைத்துப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணிடுவோம், பேருலகில்
நற்றவம் ஈதால் நமக்கு.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
(மலரும் மாலையும் - பக்: 189 )

மரபுக் கவிதை - 55சுதந்திரச் சங்கு - 2

விடுதலை இல்லா மனிதன் - உலகில்
விழைந்திடும் செயல்களில் வெற்றிகளில்லை.
படிகுழி வீழ்ப்படு புலியின் - பலத்தில்
பலனெதும் இல்லை கண்டீர்!
நன்றி: விஜயபாரதம் (05.03.1999)
.

Wednesday, December 9, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்

வாழ்க்கை என்னும் போர்க்களத்திலே அஞ்சாது எதிர்த்து நிற்கும் வீரன் ஒருவனுடைய மனநிலை நமக்கு இப்போது தேவை.
-சுவாமி விவேகானந்தர்.
.

புதுக்கவிதை - 50


கார்கில் கவிதை - 2

எதிரியின் குண்டு
திடீரென விழும்.
பனியின் ஜில்லிப்பு
உடலை ஊடுருவும்.
கரடுமுரடான பாதையில்
கண்ணிவெடி வேறு.
ஆயினும்
கடமை வீரனுக்கு
கல்லும் முள்ளும் தானே
பஞ்சு மெத்தை?
நன்றி: விஜயபாரதம் (05.11.1999)
.

Tuesday, December 8, 2009

இன்றைய சிந்தனை
சான்றோர் அமுதம்

உடம்பிலே தெம்பும் உள்ளத்திலே உற்சாகமும் நிரம்பி இருக்கும்போது, எழுத எழுத எழுத்து வளரும்...
-கவிஞர் கண்ணதாசன்.
(வனவாசம்- பக்: 246 )
.

மரபுக் கவிதை - 54


கடை விரிப்பேன்

கடையினை விரித்தேன் கொள்வாரில்லை,
கவிதை மழையைப் பொழிந்தேன்;
விடைகளை நாடித் தவித்திடுகின்றேன்,
வினாக்களால் தான் வாழ்ந்தேன்!

அடைமழை பொழியும், அற்புதம் நிகழும்,
அமோகமாய்ப் பயிர் விளையும்;
தடைகளனைத்தும் தவிடென மாறும்
தருணம் ஒருநாள் வாய்க்கும்!

நடைபயில் குழவி நகைக்கிறபோதில்
நானிலம் மயங்குதல் போல,
குடையதன் பயனை மழையினில் அறிவீர்;
குவலயம் என்னை அறியும்!

இடையிடை யிடையே வந்தெனை மாய்க்கும்
இன்னல்களை நான் சாய்ப்பேன்;
மடையினை உடைத்த வெள்ளம் போல
மகாசக்தியாய் எழுவேன்!

முடையென வருவோர் உள்ளம் மகிழும்,
முகமலர் தானம் பெற்றால்;
கொடையதன் பெருமை கொண்டவிடத்து;
கோவென உயர்வேன் ஒருநாள்!

உடையினில் உடலென, உடலில் உயிரை
உணர்ந்தேன்- உறுவது வாழ்க்கை;
கடை விரிப்பேன், காண்போர் வரினும்
கடமை இதுவெனக் களிப்பேன்!

படையினில் வெற்றி, தோல்விகள் உண்டு,
பயந்தால் பலனெதும் இல்லை;
கடைசியில் பெறுவது காயோ, பழமோ,
கவனம் சிதறிட மாட்டேன்!

கடையினை விரித்தேன் கொள்வாரில்லை;
கவிதை மழையினைப் பொழிந்தேன்;
கடை விரிப்பேன் - காண்போர் வரினும்
கடமை இதுவெனக் காப்பேன்!
எழுதிய நாள்: 23.12.1995
.

Monday, December 7, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்


முதலாளித்துவம், கம்யூனிசம் ஆகிய இரு முறைகளுமே, பரிபூரண மனிதன், அவனது முழுமையான தன்மை, அவனது அபிலாஷைகள் ஆகியவற்றை கருத்தில் கொள்ளத் தவறிவிட்டன. அவனை பணத்திற்காக பறக்கும் சுயநலவாதியாக கருதுகிறது ஒன்று; மற்றொன்றோ, கடுமையான விதிகளால் கட்டுப்படுத்தினால் ஒழிய எந்த நல்லதும் செய்ய தகுதியற்றவனாக அவனை நோக்குகிறது. பொருளாதார, அரசியல் அதிகாரக் குவிப்பு, இரண்டிலுமே பொதிந்துள்ளது. எனவே, இரண்டுமே மனிதனை மனிதத் தன்மை இழக்கும்படிச் செய்கிறது.
-பண்டித தீனதயாள் உபாத்யாய.
(ஏகாத்ம மானவ வாதம்- பக்: 91)

புதுக்கவிதை - 49


அபின்

'மதம் ஒரு அபின்'

''ஓஹோ?''

'இந்தா வச்சுக்க
கம்யூனிச கஞ்சா!'
.

Sunday, December 6, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்பசுக்கொலைக்கும் மனிதன் கொலைக்கும் எவ்விதமான வேறுபாடும் இல்லை.
-மகாத்மா காந்தி

புதுக்கவிதை - 48சாதா 'ரண' தொடர்பு


ஒவ்வொரு நாளும் உங்களால்
ரத்த தானம் செய்ய முடியுமா?
பசுவால் முடியும் -
பாலின் வடிவில்.

எல்லாம் கறந்துவிட்டு
அடிமாடாக்க
மனிதனால் மட்டுமே
முடியும்.

தாய் வறண்டாலும்
பால் கொடுக்கும்
காராம் பசு
கசாப்புக் கடையில்.

பெற்றவர்களையே
முச்சந்தியில் நிறுத்தும்
நாகரிகர்களுக்கு
இது சாதா 'ரணம்'.

நன்றியை மறந்த
மானிடனுக்கு
நாய் என்ன?
தாய் என்ன?

நஞ்சு மரங்களில்
நற்கனிகள் கிட்டாது;
விதைப்பது தான்
அறுவடை ஆகும்.

பசுக்களைக்
கொல்லக் கொல்ல
காப்பகங்கள்
பெருகும்.

பாலுக்கு பசு;
பாலூற்ற பிள்ளை.
இரண்டுக்கும் உண்டு -
தொடர்பு.
நன்றி: விஜயபாரதம் (18.12.2009)
.
.

Saturday, December 5, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்


... கொள்கையற்ற சந்தர்ப்பவாதிகள் நமது நாட்டின் அரசியலை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். கட்சிகளிடமும் அரசியல்வாதிகளிடமும், கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லை. ஒரு கட்சியை விட்டு மற்றொரு கட்சியில் சேர்பவர் அதைத் தவறென்று கருதவில்லை. கட்சிகளிடையே கூட்டணியோ இணைப்போ அன்றி, அவை பிரிவதோ, ஒப்புதல் காரணமாகவோ, அன்றி கொள்கை வேறுபாடு காரணமாகவோ ஏற்படுவதில்லை. அதற்குப் பதில், தேர்தலில் லாப நோக்கோடும் அதிகாரத்தில் இடம் பெற வேண்டும் என்பதாலுமே ஏற்படுகின்றன...

-பண்டித தீனதயாள் உபாத்யாய
(ஏகாத்ம மானவவாதம்- பக்: 6)

புதுக்கவிதை - 47பேட்டியும் போட்டியும்


-ஒன்று -

'எமெர்ஜென்சி,
இருபது அம்சத் திட்டம்,
நகர்வாலா,
போபோர்ஸ், பேர்பாக்ஸ்,
விடுதலைப்புலி,
அயோத்தி,
ஹர்ஷத் மேத்தா, சேஷன்,
அரசியல், ஊழல்...
ஏதேதோ பேசுகிறார்கள்;
எனக்கொன்றும் புரியவில்லை.
எனக்குத் தெரிவதெல்லாம்
என் தாயின் நோயும்
என் பிள்ளையின் அழுகையும்
என் வயிற்றுப் பசியும் தான்'
-ஒரு சாமானிய இந்தியனை பேட்டி கண்டபோது.
(தேர்தல் தினத்திய தினசரியில்).
-இரண்டு-
காந்தியா,
காரல்மார்க்சா,
எது ஜெயிக்கும்?
எலெக்ஷன் தினத்தன்று
ஆபீசில் பந்தயம்.
இரண்டுமில்லை
காவியம் தான் என்று
நான்கைந்து குரல்கள்.
சுயேச்சை பேரில் கூட
பந்தயம்.
ஆனால் -
யாருக்கும் கண்ணில் படவில்லை -
ஆபீசில் கிடக்கும்
தினசரியில் வெளியாகி இருக்கும்
சாமானியனின் பேட்டி.
(எழுதிய நாள்: 23.06.1994)
*

Friday, December 4, 2009

இன்றைய சிந்தனைபாரதி அமுதம்


வாழ்க திலகன் நாமம்! வாழ்க! வாழ்கவே!
வீழ்க கொடுங் கோன்மை ! வீழ்க! வீழ்கவே!...

துன்பமென்னும் கடலைக் கடக்குந் தோணி யவன்பெயர்
சோர்வென்னும் பேயை யோட்டுஞ் சூழ்ச்சி யவன்பெயர்
அன்பென்னும் தேனூறித் ததும்பும் புதுமலர் அவன்பேர்
ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி யவன்பேர்!
-மகாகவி பாரதி
(வாழ்க திலகன் நாமம்)

மரபுக் கவிதை - 53வாழ்க திலகர் நாமம்!


பாலன் என்றிட பறங்கியர் பதறுவர்!
கங்கா தரனென கயவரும் கலங்குவர்!
திலகர் என்றிட தீயவர் ஒதுங்குவர்!
அவரே அன்னையின் விலங்கை வளைத்தவர்!

கீதையின் ரகசியம் கீழ்மையை எதிர்ப்பது;
அடிமைத்தனமே கீழ்மையின் மறுபெயர்!
என்பது இவரது தத்துவ தரிசனம்!
அஞ்சா நெஞ்சம் திலகரின் தனிக்குணம்!

'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என
சுள்ளென உறைக்கும் வகையினில் உரைத்தவர்!
உரிமையைப் பேணிட யாசகமா வழி?
உதையே நல்வழி என கர்ஜித்தவர்!

வீட்டினில் வசித்த விக்னேஸ்வரர்களும்
வீதியில் வலம் வர வித்தினை இட்டவர்!
தமிழ்க்கவி பாரதி குருவாய் ஏற்றவர்!
தாய் பாரதியின் தவத்தால் உதித்தவர்!
நன்றி: சுதேசி செய்தி (ஜூலை - 2009 )

Thursday, December 3, 2009

இன்றைய சிந்தனை


கருவூலம்

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்து
ஒன்றின ஒன்றின வல்லே செயின்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.
-நாலடியார்
(பாடல்: 4 - செல்வம் நிலையாமை)
பொருள்: நிலையானது என்று நம்பியிருந்த அனைத்தும் காணாமல் அழியும் என்பதை உணர்ந்து, இயன்ற அறச் செயல்களை செய்ய வேண்டும். ஏனெனில், வாழ்நாள் கழிந்துகொண்டே போகிறது; யமன் வந்து கொண்டே இருக்கிறான்.
-

வசன கவிதை - 30


பயணங்கள் முடிவதில்லை

ஓட்டுனர் மீதான நம்பிக்கையில்
பேருந்தில் நிம்மதியான தூக்கம்;
தண்டவாளம் மீதான உறுதிப்பாட்டில்
சுகமான ரயில் பயணம்;
விமானம் குறித்த விதிகளின் வழியே
வானில் சாகச சிறகடிப்பு;
அலைகளையும் காற்றையும் நம்பி
கடலில், கப்பலில் யாத்திரை.

நம்பிக்கைகள் மட்டுமல்ல -
பயணங்களும் பலவிதம்.
எல்லாவற்றையும் மீறி
எப்போதாவது
நடந்துவிடுகிறது விபத்து.

ஓட்டுனரின் தூக்கமும்
பெயர்ந்த தண்டவாளமும்
செயலிழக்கச் செய்த மின்னலும்
கவிழ்த்துப் போட்ட பனிப்பாறையும்
எப்போதாவது
விதிவசமாகி விடுகிறது.
அதையும் மீறி -
அதே வாகனங்களில் பயணிக்காமல்
தவிர்க்கும் வாய்ப்புண்டு.

ஆயினும் மிதிவண்டி மோதலால்
மருத்துவமனை ஏகலாம்.
எதுவும் யாரிடமும் இல்லை;
இப்போதைக்கு உறங்கு.
விழித்தால் நாளை விவாதிக்கலாம்.
-

Wednesday, December 2, 2009

இன்றைய சிந்தனைகுறள்அமுதம்


பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
-திருவள்ளுவர்
(பிறன் இல் விழையாமை - 148)

உருவக கவிதை - 16


மௌனம் பேசுகிறதுவிருட்சத்தின் கீழே
மூர்த்தி;
மூர்த்தியின் முன்னே
முனிவர்கள்;
மௌனம்
பேசிக்கொண்டிருந்தது.
.

மரபுக் கவிதை - 52முருகா!

சரவண முருகா சண்முகனே - என்
சங்கடம் தீர்க்கும் திரு முருகா!
பரமேஸ்வரனின் மைந்தா - பக்தர்
பல்குறை நீக்கும் பழநியப்பா!
பிரம்மனின் செருக்கினை அழித்தவரே - என்
சிந்தைத் தெளிவை அளித்தவரே!
தரணியில் தீமை களைந்திடவே - நீ
சூரனை அழித்து மகிழ்வித்தாய்!
கரங்கள் பனிரெண்டுடையவரே -சிவ
அம்பிகை பாலா, ஆறுமுகா!
சரணம் சரணம் உன்பாதம் - நீ
அருள் கூர்ந்தென்னை ஆட்கொள்வாய்!

எழுதிய நாள்: 28.06.1987

Tuesday, December 1, 2009


கருவூலம்

பத்தியால் யான்உனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற்(கு) அருள்வாயே
உத்தமா தானசற் குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞானசத் தினிபாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே!


-அருணகிரிநாதர்
(திருப்புகழ் - ரத்தினகிரி பாடல்)

Monday, November 30, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்


உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

-சுவாமி விவேகானந்தர்.

வசன கவிதை - 29


கண் மேல் திரை

கடியர்களின் விமர்சனமும்
கடியாகத் தான் இருக்கும்;
நல்லவன் கண்களுக்கு மட்டுமே
நல்லவன் தட்டுப்படுவது போல.
தன்னம்பிக்கை கொண்டவன் நான்.

நீ கடியன் என்று சொல்லவில்லை;
ரசிக்கத் தான் உனக்கு தெரியவில்லை.

உன் கண்களின் மேல்
'கடித்திரை' விழுந்திருக்கிறது.
பரவாயில்லை-
அதையும் ஊடுருவும்
கவிதை என்னிடம் இருக்கிறது.

'கடி' என விமர்சிப்பது
கடினமல்ல-
கவிதை எழுதுவது கடினம்.
புரிந்துகொள்;
மேலும் புண்படுத்தாதே.

கவிதை செத்துவிடும்.

குறிப்பு: பாலிடெக்னிக்கில் படித்த போது எனது கவிதையை படிக்காமலே இகழ்ந்த
நண்பனுக்கு எழுதிய கவிதை இது. எழுதிய நாள்: 08.02.1989

Sunday, November 29, 2009

இன்றைய சிந்தனைகருவூலம்


முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூழ்க மூழ்கவே!
-பட்டினத்தார்.

புதுக்கவிதை - 46சாஸ்வத சமதர்மம்

எரிந்து கொண்டிருந்தது அது.
நேற்றுவரை அது
அவராக இருந்தது.
அவர் - கோடீஸ்வரர்.

அருகிலேயே
அதுவும் எரிந்தது.
இன்று காலை அது
அவனாக இருந்தது.
அவன்- அநாதை.

நாளை
இரு சவச் சாம்பல்களும்
மண்ணில் கலந்திருக்கும்.

வெட்டியான்
காத்திருக்கிறான் -
நாளை வரப் போகும்
பிணங்களுக்காக.
நன்றி: விஜய பாரதம் (06.11.1998)
.

Saturday, November 28, 2009

இன்றைய சிந்தனைகருவூலம்


....புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்...

-மாணிக்கவாசகர்

(திருவாசகம் - சிவ புராணம்)

வசன கவிதை - 28


மரித்த மனங்கள்

அமைதிக்காகப்
பறக்கவிட
அடைக்கப்பட்டிருக்கும்
கூண்டுப் புறாக்கள்.

எதிர்காலத்தை
சீட்டாய் எடுக்கும்
சிறகு முறிந்த
பச்சைக் கிளிகள்.

எடையைக் கூட்டி
விலையை ஏற்ற
ஊட்டம் ஏற்றிய
கறிக் கோழிகள்.

காவு கொடுக்க
காத்துக் கிடக்கும்
மாலையிட்ட
சாமியாடுகள்.

வாசனைத் திரவியம்
சுரப்பதற்காக
வளர்க்கப்படும்
புணுகுப் பூனைகள்.

நடுக்காட்டுக்குள்
புலியைப் பிடிக்கும்
தூண்டில் புழுவாய்
செம்மறியாடுகள்.

ஊக்க மருந்தை
செலுத்திச் செலுத்தி
ரேஸில் வென்ற
நொண்டிக் குதிரைகள்.

வாழ்நாள் முழுவதும்
வண்டியிழுத்தும்
அடிமாடாகும்
அற்பப் பிராணிகள்.

பந்தயம் கட்டி
பரவசம் எய்திட
கத்திக் காலுடன்
சிலிர்க்கும் சேவல்கள்.

பால்வினை நோயை
முறிக்கும் மருந்தின்
சோதனைச் சாலையாய்
ஜோடிக் குரங்குகள்.

வீட்டின் அழகைக்
கூட்டும் வகையில்
கண்ணாடி ஜாடியில்
நீந்தும் மீன்கள்.

மனித நேயத்தை
குத்தகைக்கு எடுத்த
மரித்துப் போன
மனித மனங்கள்.

நன்றி: விஜயபாரதம் (21.02.2003)

Friday, November 27, 2009

இன்றைய சிந்தனைபாரதி அமுதம்


நாட்டை நினைப்பாரோ - எந்த
நாளினிப் போயதை காண்பதென்றே யன்னை
வீட்டை நினைப்பாரோ - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மி யழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே - துன்பக்
கேணியிலே எங்கள் பெண்க ளழுதசொல்
மீட்டு முரையாயோ - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டுப் போயினர்...
-மகாகவி பாரதி
(பிஜித் தீவிலே ஹிந்து ஸ்திரீகள்)

புதுக்கவிதை - 45


யாருக்கு மெத்தை?

'கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை'-
குழந்தைப் பிராயத்தில்
நெக்குருகச் செய்த
அதே சரண கோஷம்
துணுக்குறச் செய்கிறது.
மனக்கண்ணில்
நிழலாடுகின்றன
முள்வேலி முகாம்கள்.

விரதமிருந்து நடந்த
அதே பம்பைப் படுகை
முள்ளி வாய்க்காலாய்
தென்படுகிறது.

பெருவழியில் எதிர்ப்படும்
மரங்களில்
வன்னி மரங்களின்
தரிசனம்.

தேக பலமும் ஞான பலமும்
நல்கும்
புலி வாகனனை நோக்கி
புண்ணிய யாத்திரை.

கல்லும் முள்ளும்
யாருக்கு மெத்தை?
ஈழத் தமிழ் அகதியை
எண்ணுந்தோறும்
சங்கடப் படுத்துகிறது
சரண கோஷம்.

Thursday, November 26, 2009

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்


அடுத்த நபர் அவரது கொள்கையில் நிற்கட்டும். திருத்தவே முடியாத மகா முட்டாள்களும், நியாயத்தைப் பார்க்க வைக்க முடியாத பரம் மூடர்களும் இந்த உலகத்தில் உளர். உங்களது காலத்தையும் பிராணனையும் அவர்கள் விஷயத்தில் வீணாக்காதீர்கள். சோர்வு தான் மிஞ்சும்; பகைமை வளரும்...
இந்த உலகம் முழுவதும் பொய்யானது என்று நம்புங்கள். அனைத்து மகான்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக 'இந்த வியவாரிக உலகம் வெறும் கனவுலகமே' என்று கூறியுள்ளனர். அவர்கள், தாங்களே அனுபவித்து உணர்ந்த பிறகே, 'இந்த உலகம் அநித்யம் தூய உணர்வே நித்யம்' என்று கூறியுள்ளனர். அவர்கள் முட்டாள்கள் அல்ல; அல்லது நீங்கள் கெட்டிக்காரர்களும் அல்ல. கசப்பான அனுபவங்களை நீங்கள் அனுபவிக்கும்போது கூட, 'இதுவனைத்தும் பொய்யே; நான் தூய உணர்வு சொரூபி. நானே கடவுள்' என்று சொல்லுங்கள்.
- சுவாமி சிவானந்தர்

உருவக கவிதை - 15


நான் அவர் இல்லை

நான்
எழுதினால் வசனம்
மடக்கி மடக்கி
அரைக்கால் புள்ளிகளுடன்
எழுதினால் கவிதை.
பேசினால் மாநாடு
ஏசினால் பொதுக்கூட்டம்.

நான்
நடத்தினால் நல்லாட்சி
செய்தால் ராஜதந்திரம்
தொண்டர்களுக்கு என் பெயரே
மறக்கக் கூடாத மந்திரம்.

நான்
தீட்டினால் திட்டம்
திட்டினால் வேலைநிறுத்தம்
சேர்ந்தால் கூட்டணி
சேர்த்தால் கட்சிநிதி.

நான்
நினைத்தால் செம்மொழி
சொன்னால் பொன்மொழி
இணைத்தால் குடும்பநலம்
இணைந்தால் தேசநலம்.
பெற்றால் பிள்ளை
மற்றதெலாம் நொள்ளை.

நான்
அணிந்தால் மருத்துவம்
கழகம் முழுவதும்
அறிந்த மகத்துவம்.
அரற்றினால் அரசியல்
அளித்தால் பதவி.
தூற்றுவோருக்கும் கிடைக்கும்
என் உதவி.

நான்
முழங்கினால் கொள்கை
தயங்கினால் கட்டுப்பாடு;
சீறினால் தன்மானம்
ஆறினால் கண்ணியம்;
பேசுவதெல்லாம் உண்மை
வாழ்வதே கடமை.

நான்
என்றும்
நான் தான்;
நீங்கள் இல்லை.
காரணம் யாதெனில்,
நான் 'ஸ்டப்ட் நான்'.
அதே சமயம்
நீங்கள் நினைப்பது போல
அவரில்லை நான்.