Thursday, December 31, 2009

உருவக கவிதை - 18


காலச்சுவடுகள்

காலப்பாதையில்
என் சுவடுகள்.

திரும்பிப் பார்க்கிறேன்
என் சுவடுகளா இவை?
எனக்கே வியப்பாக இருக்கிறதே!
என்னுடையவையா இவை?

ஒவ்வொரு கால்சுவடுகளும்
ஓரொரு வகையாய்.
ஒன்று நீளமாய்;
ஒன்று அகலமாய்;
ஒன்று ஆழமாய்;
ஒன்று கண்ணுக்கே புலப்படாததாய்.
சில சுவடே பதியாமல்!

என் சுவடுகளா இவை?
எனக்கே ஐயம் தான்.
'ஐயம்' என்றால்
சந்தேகம் மட்டுமல்ல-
பயமும் தான்.

என் சுவடுகளுக்குக் கீழே
இன்னும் பல சுவடுகள்.
ஒ, எத்தனையோ பேர்
நடந்திருக்கிறார்கள்-
விதவிதமாய்.
சில அழிந்துவிட்டன;
இன்னும் சில
இருந்துகொண்டிருக்கின்றன.
நான் நடந்து
கொண்டிருக்கிறேன்.

முன்னே திரும்பினேன்-
அதோ, யாரோ
சென்று கொண்டிருக்கிறார்.
அவருடைய சுவடும்
விதவிதமாய்.

பாதை சென்று கொண்டே இருக்கிறதே?
முடியுமா?

ஏன் திடீரென
என் சுவடுகள் தெரியவில்லை?
ஆழமாய் நடக்க வேண்டும்.
பதிக்க வேண்டியது என் கடமை
பாதை முடிவு பெறும்;
நான் முடிப்பேன்.

ஆஹா, என் சுவடுகள்
ஆழப் பதிகின்றன.

முன்னால் செல்பவர்
திரும்பிப் பார்க்கிறார்-
தன் சுவடுகளை மட்டும்.
என்னைப் பார்க்கவில்லை போலிருக்கிறது.
எனக்குப் பின்னாலும்
யாரோ வந்து கொண்டிருக்கிறார்.

என் சுவடுகளை
நானே விமர்சித்துக்கொண்டு
நடந்து கொண்டிருக்கிறேன்.

காலப் பாதையின் இறுதியை
என் சுவடுகள்
எட்டியே தீரும்!
எழுதிய நாள்: 23.11.1989

.




No comments:

Post a Comment